Advertisement

தீண்டல் – 23

               ரிசப்ஷன் எதிர்பார்த்ததை விட வெகு சிறப்பாகவே நடந்து முடிந்தது. இரவு உறங்குவதற்கு வசீகரன் சந்நிதியை தவிர அவளின் குடும்பத்தினர் அனைவரும் ராதாவின் வீட்டிற்கு சென்றுவிட சந்தியா, விஷ்வாவை மட்டும் கிட்டத்தட்ட மிரட்டி தன்னுடன் தன் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டான் வசீகரன்.

மற்றவர்கள் படுக்க சென்றுவிட சந்நிதியுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் அவளின் முகத்தை வைத்தே,

“ஏதாவது ஏடாகூடமா பேசிடாத நிதி. போய் தூங்கு…” என்று சொல்லவும் ஒரு காட்டன் சுடிதாரை மாற்றிவிட்டு வந்து படுத்துக்கொண்டாள்.

“ஏன் நைட் ட்ரெஸ் மாத்தலை?…” என்றவனை பார்த்து சங்கடமாய் நெளிய அதற்கும் அவன் முறைத்தான்.

சந்நிதியால் சட்டென அந்த சூழலுக்கு மாற முடியவில்லை. கணவன் என்றான போதும் முழுமையாக அந்த உறவை இன்னமும் அவளால் ஏற்கமுடியவில்லை. ஒரு வேளை இரு குடும்பத்திற்கான முதல் சந்திப்பு நல்ள்ளவிதமாக இருந்திருந்தால் வசீகரனை கொண்டாடியிருப்பாளோ என்னவோ?

ஆரம்பம் முதல் சஞ்சலமும், பிரச்சனையும், கண்ணீரும். அவர்கள் திருமணத்தின் அஸ்திவாரமே பிரச்சனையினால் அடித்தளமிட்டு ஆரம்பித்திருக்கிறதே. வேர்விட்டு இன்று மரமென வளர்ந்து வியாப்பித்திருக்கும் இந்த உணர்வை இன்னமும் புறம் தள்ள முடியவில்லை.

இப்படி இருக்க அவனின் முன்னே அந்த மாதிரியான உடைகளில் வர அத்தனை தயக்கம் காட்டினாள் சந்நிதி.

“ப்ளீஸ்…” என்ற வார்த்தையை அவள் சொல்லியதும் ஒரு பெருமூச்சுடன் தானும் வேறுடை மாறிவிட்டு அவள் அசந்த நேரத்தில் பொத்தென்று அவளருகில் கட்டிலில் விழ அதன் அதிர்வில் எழுந்து அமர்ந்துகொண்டாள்.

“இப்பதான் கண்ணை மூடினேன். என்னை பயம்காட்டிட்டே இருக்கீங்க…” என்றதும் அவளை பார்த்தவன்,

“இதுல என்ன பயம் உனக்கு? நான் தானே?…”

“நீங்க தான். அதுதான் பயமே…” என்ற முணுமுணுப்போடு அவனுக்கு முதுகு காட்டி படுத்தவள் உறங்க முற்பட்டாள்.

அவனுடைய அறையில் சந்நிதியால் தூங்கவே முடியவில்லை. வசீகரன் ஏற்கனவே சொல்லியிருந்தபடியாலும் அறைக்குள் வந்ததும் சோபா இருந்தும் அதனை நாடாமல் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அவள் புரண்டு புரண்டு படுக்க அவனோ தன் வீட்டில் தன்னறையில் தன்னருகில் அவள் வந்துவிட்ட நிம்மதியில் வசீகரனின் மனம் மகிழ்ச்சியில் நிறைவுடன் துயில்கொண்டது.

விடியற்காலை அவளுக்கு முன்பே எழுந்திருப்பான் என்று பார்க்க இன்னமும் நல்ல உறக்கத்தில் வசீகரன். எழுந்து குளித்து கீழே வந்தாள்.

அங்கு டைனிங் டேபிளில் சந்தியாவும் அம்பிகாவும் பேசிக்கொண்டிருக்க குகனும், விஷ்வாவும் மொட்டை மாடியில் இருந்தனர்.

காலையும், மதியமும் விருந்திற்கு உணவு சமைக்க ஏற்கனவே ஆட்களை சொல்லிவிட்டதால் மாடியில் சமையல் வேலை நடந்துகொண்டிருந்தது.

“வா நிதி…” சந்தியா தான் முதலில் பார்த்தாள் தங்கையை. அம்பிகா திரும்பி பார்த்துவிட்டு,

“வா வா, உன்கிட்ட பேச நேரமே கிடைக்கலை. வந்து உட்கார்…” என்றவர் ப்ளாஸ்கில் இருந்த டீயை ஊற்றி அவளுக்கு தந்தார். தனக்கும் இன்னம் கொஞ்சம் ஊற்றிகொண்டவர் சந்தியாவிற்கு வேண்டுமா என கேட்க,

“போதும் அத்தை. டீ கொஞ்சம் தானே இருக்கு. நான் வேணும்னா போடறேன். இப்ப உங்க மகன் வந்திருவாங்கள்ள…” சந்தியா கேட்க,

“அவன் வந்தா தான் தெரியும் டீயா, காபியான்னு. எப்ப என்ன குடிப்பான்னு நமக்கு தெரியாது. வரட்டும். வரவும் மெதுவா போட்டுப்போம். ஓடியா போய்டுவான்?…” என்று சொல்லவும் சந்தியா கலகலத்து சிரித்தாள்.

“உன் தங்கச்சி சிரிப்பு கூட அளவு தானா? கொஞ்சமா சிரிக்கா…” என்றவரிடம் சந்நிதி பதில் சொல்ல தெரியாமல் விழிக்க,

“அவ என்னை விட கலகலப்பு தான். இப்ப கொஞ்சம் நாளா சைலன்ட். தங்கச்சி வளர்ந்துட்டான்னு நினைக்கேன்…”

“யார் வளர்ந்தாங்க?…” என கேட்டுக்கொண்டே வசீகரன் தலையை துவட்டியபடி வந்துவிட சந்நிதியின் சிரிப்பு அப்படியே உறைந்துவிட்டது.

அம்பிகாவும், சந்தியாவும் அதை கண்டுகொள்ள மனைவியின் அருகில் அமர்ந்தவன் ப்ளாஸ்கில் டீ இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கொஞ்சம் இருக்கவும் சந்நிதி குடித்துக்கொண்டிருந்த கப்பை வாங்கி அதில் ஊற்றி குடிக்க ஆரம்பித்துவிட்டான்.

“ஏன்டா வேணும்னா போட போறேன். ஏன் அவக்கிட்ட இருந்து பறிக்கிற?…” என மகனின் தலையில் கொட்டியவர்,

“இருடாம்மா உனக்கு நான் புதுசா ப்ரெஷா போட்டு கொண்டு வரேன்…” என எழ,

“இல்லை வேண்டாம் அத்தை. போதும்…” சந்நிதி மறுக்க,

“ஆமாம்மா டீ நிறைய குடிச்சா தூக்கம் வேற வராது நிதிக்கு. இந்த டீ போதும்…” அவளை பார்த்துக்கொண்டே சொல்ல அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சந்நிதி எழுந்துகொள்ள,

“அட இரும்மா, தனியா குடிக்கனும்னு பீல் பண்ணாத. நான் இருக்கேன்ல. எனக்கும் சேர்த்து போடறேன் ஸ்பெஷல் டீ. உனக்கு கம்பெனி குடுக்கேன். நாம குடிக்கலாம்…” என்று அவளை கூட்டிக்கொண்டு அம்பிகா கிட்சனிற்குள் செல்ல,

“இன்னைக்கு இது எத்தனாவது டீ ம்மா?…” வசீகரனின் குரல் கேட்டாலும் கண்டுகொள்ளாதவர் சந்நிதியுடன் பேசிக்கொண்டே டீயை போட்டார். அவளையும் பேசவைத்தார்.

பார்கவி எப்பொழுதுமே அமைதி என்பதால் பெரிதாய் எதுவும் பேசிவிடமாட்டார். எண்ணி எண்ணி பேசும் அம்மாவை நினைத்து பார்த்த நிதி அம்பிகாவை ஆச்சர்யமாக பார்த்தாள்.

“என்னை என்னவோ மியூஸியம் பீஸ் மாதிரி பார்க்கறையே MM, என்ன விஷயம்?…”

“ஐயோ அப்படியெல்லாம் இல்லை அத்தை. நல்லா பேசறீங்க, சும்மா தான் பார்த்தேன்…”

“சும்மா எஃப்எம் ன்னு கூட சொல்லு. கோச்சுக்க மாட்டேன்…” என்று கண் சிமிட்ட அதில் அதற்கு மேலும் வாயை பூட்டிவைக்க முடியாமல் சந்நிதியின் முகமூடி கழன்று அவருடன் சேர்ந்து வாய்விட்டு சிரித்தவள்,

“நீங்க ஸ்வீட் அத்தை…” என்று சில்லாகிக்க,

“மதியம் பாயாசத்துக்கு வெல்லம் பத்தலைன்னு சொல்லிட்டுருந்தாங்க. உன் மாமா கேட்டா எதுக்குன்னு என்னையே சுருட்டி டேக்ஸால போட்டு கிண்டிருவார். இந்த ரகசியம் நமக்குள்ளயே இருக்கட்டும்…” என ரகசியம் பேச அதற்கும் அப்படி சிரித்தவள்,

“அதென்ன அத்தை MM?…” என,

“மருமகள், அதான் MM. யூ க்நோ, எனக்கு ரொம்ப ஷார்ட்டா பேசித்தான் பழக்கம்…” என்றபடி டீயை ஊற்றி அவளுக்கும் கொடுத்து தானும் எடுத்துக்கொள்ள சந்நிதிக்கு அதை குடிக்கவே மனம் வரவில்லை.

“தியாவுக்கு இப்படி டீ போட்டா ரொம்ப பிடிக்கும் அத்தை. ஷேர் பண்ணிக்கட்டுமா?…”

“பண்ணிக்கோயேன். ஆனா அவனுக்கு பண்ணாத. உன்கிட்ட இருந்து பறிச்சான்ல…” சந்நிதி என்ன சொல்வாள் என்ற்று பார்க்கவே அம்பிகா இப்படி பேச,

“மூணுபேர் குடிக்க அவங்க மட்டும் குடிக்காம…” தலையை குனிந்தபடி சந்நிதி சொல்ல அம்பிகாவின் முகத்தி குறும்பு புன்னகை.

“அவன் கிடக்கறான், விடு ஒரேதா டிபன் சாப்பிட்டுக்கட்டும்…” என்று சொல்லிவிட்டு மூன்று கப்பில் டீயை மாற்றியவர்,

“இந்தா இதை தியாவுக்கு குடு…” என சொல்லிவிட்டு டீ பாத்திரத்தை கழுவ போட்டுவிட்டு சந்நிதியுடன் வர அங்கே சந்தியாவும் வசீகரனும் என்னவோ பேசிக்கொண்டிருந்தனர்.

சந்தியாவின் முகம் கவலையாய் இருக்க வசீகரன் எப்பொழுதும் போலதான் இருந்தான்.

“இந்தா தியா…” என்று அவளிடம் கொடுத்த சந்நிதி வசீகரன் அருகில் அமரலாமா வேண்டாமா என யோசித்து நிற்க அவளை பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவளே சென்று அமரவும் குளிர்ந்துபோனது வசீகரனுக்கு.

சற்று முன் அம்பிகாவிடம் பேசிக்கொண்டிருந்ததில் மனதே லேசானது போல இருக்க சந்நிதி பழையவற்றை மறக்க முயன்றாள். அந்த நிமிடம் வேறெதையும் அவள் நினைத்து குழம்பவில்லை.

“ஷேரிங் நல்லதுன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க…” சந்நிதியின் புறம் தலைசாய்த்து சிறு புன்னகையுடன் அவன் கேட்க,

“அது அப்போ. இது இப்போ. தனக்கு போகத்தான் எதுவும். நீ குடி நிதி…” என அம்பிகா சொல்ல சந்நிதியின் பாடுதான் திண்டாட்டமானது.  

“அத்தை மாடியில போய் பார்ப்போமா?…” சந்தியா அம்பிகாவை அழைக்க,

“நாம போனா பின்னாடியே இவளை கூட்டிட்டு அங்க தான் வர போறான். இவங்களுக்கு நீ ப்ரைவேசி பண்ணி குடுக்கயாக்கும்?…” என போட்டுடைத்துவிட்டு சந்தியாவுடன் பேசியபடி மாடியேறிவிட்டார்.

அவர்கள் சென்றதும் நிதியின் புறம் இவன் திரும்பி அமர அவளிடம் பேச வாய் திறக்கும் முன் வந்து சேர்ந்தனர் அனுபமாவும்,சூர்யாவும், ரவியும்.

அவர்களை பார்த்ததும் எழுந்துவிட்டவள் அவர்களுக்கு இடமளித்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டாள் அம்பிகாவிடம் சொல்ல.

அதன் பின் உறவினர்கள் என்று ஒவ்வொருவராக வர ஆரம்பித்துவிட்டனர். ராதா குடும்பத்துடன் முனீஸ், நீதி குடும்பமும் வந்துவிட வீடே கலகலப்பில் அதிர்ந்தது.

அதிலும் அம்பிகா, குகன் சொந்தங்கள் ஆட்டம் பாட்டமென அமர்க்களப்படுத்த முனீஸ்வரன் அத்தனையையும் மௌனமாக பார்த்து நின்றார். இவை எல்லாம் புதிது அவருக்கு.

அவரின் குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் அமைதியாகவே நடந்திருக்கின்றது. சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை என்றாலும் இந்த ஆர்ப்பரிப்பும் குதூகலமும் இல்லவே இல்லை.

புகழுக்கும், புவனேஷ்வரனுக்கும் சொல்லவே வேண்டாம். அத்தனை பிடித்தது அந்த உற்சாகத்தையும் கலகலப்பையும். அன்று மாலை அனைவரும் கிளம்பும் வரை அனைத்தும் நன்றாக தான் சென்றுகொண்டிருந்தது.

மற்றவர்கள் கிளம்பிவிட பெற்றோர்கள் கிளம்பும் நேரம், சந்நிதியின் கண்கள் எல்லாம் பர்கவியின் மீதே. இனி எப்படி தனியாக அப்பாவை சமாளிப்பார் என்று.  

லட்சம் முறை பெரியப்பா குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டாள் அம்மாவை விட்டுவிடாதீர்கள் என்று.

ஒரே ஊர் என்றாலும் தனி தனி வீடல்லவா? எப்பொழுதும் யாராவது கூடவே இருக்க முடியாதல்லவா? அதை எண்ணி எண்ணி அழுகை பொங்கிக்கொண்டு வந்தது சந்நிதிக்கு.

சந்தியா திருமணம் முடிந்து சென்ற நேரம் தானும், தாயும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தார்கள். இப்பொழுதோ அவளால் நினைக்கவும் முடியவில்லை.

பார்கவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட வாயை திறந்து எதுவும் சொல்லிவிடமாட்டார். அவர் செய்யும் வேலைகளை மகள்கள் செய்யும் பொழுது தான் பார்கவிக்கு முடியவில்லை என்பதே முனீஸ்வரனுக்கு தெரியவரும்.

அப்பொழுது அனுமானித்துக்கொள்வாரே தவிர ஆறுதல் பேச மாட்டார். மீண்டும் மனைவியின் சேவை தொடரும் போது ஒரு பார்வை பார்த்துச்செல்வார் அவ்வளவே அவரின் அக்கறையின் எல்லை.

எல்லாம் நினைக்க நினைக்க கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அழுதால் அனைவரின் முன்பும் திட்டிவிடுவாரோ என்று பயந்து உதட்டை கடித்துக்கொண்டு அடக்கினாள்.

அனைவரும் ஹாலில் பேசிக்கொண்டிருக்க பார்கவியின் கையை பிடித்தபடி அவரின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தாள் சந்நிதி. அவளருகே சந்தியா. இதோ இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பிவிடுவார்கள். நெஞ்சை பிசைந்தது பெண்ணிற்கு.

“ம்மா, ம்மா…” என்பதை தவிர வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது.

“எதுக்குடா அழற? கடவுள் என் பொண்ணுங்க விஷயத்துல கண்ணை துறந்துட்டாருன்னு நானே அவ்வளோ சந்தோஷமா இருக்கேன். இங்க பாரு நிதி பொண்டாட்டியை விரும்பற புருஷன் கிடைக்கிறது புண்ணியம். அது உங்க ரெண்டு பேருக்கும் வரமா கிடைச்சிருக்கு. வாழ்ந்துடுங்கடா கண்ணுங்களா. இந்த ஒரு சந்தோஷம் போதும் எனக்கு…” குரல் நெகிழ அவர் கூறினார்.

தான் அழுதால் மகளும் உடைந்துவிடுவாள் என்று பார்கவியும் பெரும் பிரயத்தனப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டார்.

“பாரு சம்பந்தி அம்மா கூப்பிடறாங்க வா…” என கோமதி வந்து அழைக்கவும் அவர் எழுந்து செல்லவும் சந்நிதியை பார்த்த சந்தியா,

“நிதி என்ன பண்ணிட்டிருக்க நீ?…” என்றாள்.

“எல்லாரும் கிளம்பிடுவீங்க. நான் மட்டும் இங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு தியா…” என்று அடக்கப்பட்ட கண்ணீரை கொட்ட,

“ஏய் அழாத நிதி. நான் அதை கேட்கலை. நான் பேசறதை முதல்ல கவனி…”

“சொல்லு…” விசும்பிக்கொண்டே நிதி கேட்க,

“நீயும் வசீகரனும் சந்தோஷமா தானே இருக்கீங்க?…” என்று கேட்கவும் திடுக்கிட்டு பார்த்த நிதியின் பார்வையில் சரியில்லை என்பதை புரிந்துகொண்ட தியா,

“முட்டாள்த்தனம் பன்ற நிதி, என்ன இதெல்லாம்?…”  என்றதற்கு வாய் திறவாமல் அவள் அமர்ந்திருக்க இப்ப்ழுது அழுகை முற்றிலும் நின்றுபோய் இருந்தது.

“உன்னை விரும்பி காத்திருந்து கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சவருக்கு இப்படி ஒரு பனிஷ்மென்ட் குடுக்கற? நியாயமே இல்லை. உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை…” சந்தியா குற்றம் சாட்டவும்.

“உனக்கு தெரியாது தியா, அவர் என்னலாம் பேசினார்ன்னு. அப்பாவை வச்சே இந்த கல்யாணத்தை நடத்துவேன் அது இதுன்னு சவால்விட்டு இன்னைக்கு நடத்திட்டார். அப்படி இருக்க என்னால எப்படி?…”

“முட்டாளே தான் நிதி நீ. என்ன தெரியும் உன் புருஷனை பத்தி. உன் மேல எத்தனை காதல் தெரியுமா அவருக்கு? உன்னை கட்டிக்க என்னவெல்லாம் கஷ்ட்டப்பட்டார் தெரியுமா உனக்கு?…” என்ற சந்தியா வசீகரனுக்கு நல்லது செய்கிறேன் பெயரில் நடந்த அத்தனையையும் சொல்லிமுடிக்க பிரம்மை பிடித்ததை போல அமர்ந்திருந்தாள் சந்நிதி.

“இப்போவாச்சும் அவரை நீ புரிஞ்சுக்க நிதி. தேவையில்லாம எதையாச்சும் நினைச்சு அவரையும் நோகடிச்சு உன்னோட வாழ்க்கையையும் பாழட்டிச்சுடாத. அம்மாவுக்கு தெரிஞ்சா வேதனைப்படுவாங்க. அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளோ தான். இதை நான் உனக்கு சொல்லவே வேண்டாம்…”

“உன் மேல உயிரையே வச்சிருக்கற புருஷன், நம்ம குடும்பத்தால அவமானப்பட்டாலும் உன்னை தாங்குற மாமியார், மாமனார் இதெல்லாம் கிடைக்க நீ குடுத்து வைனுக்கனும் நிதி…” என்றவள் அவளின் அமைதியில் திருப்தியானவளாக,

“நான் கிளம்பறேன் நிதி. சந்தோஷமா இருக்கனும் நீ. அதுதான் எங்க எல்லாருக்கும் வேணும்…”  என சொல்லி தங்கையை கட்டியணைத்தவள்,

“வா, கிளம்பறாங்கள. ஆசிர்வாதம் வாங்கிக்க…” என்று அழைத்துவர அம்பிகாவும் வந்துவிட்டார்.

“வா நிதி, நானே கூப்பிட தான் வந்தேன். வந்து பூஜை ரூம்ல சாமி கும்பிட்டுட்டு எல்லார்க்கிட்டையும் ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க…” என அழைத்துவர சந்நிதியின் பார்வை வசீகரனை தேடியது.

நீதிமாணிக்கம் கம்பன் இருவருக்கும் நடுவில் நின்று பேசிக்கொண்டிருந்தவன் சந்நிதி வந்ததும் அவளை பார்த்துக்கொண்டே அவர்களிடம் பதில் கூறினான்.

பார்த்தவனுக்கு புரிந்துபோனது அவளின் முகம் சரியில்லை என்பது. பெண்களுக்கு இது எத்தனை வலிமிகுந்த தருணம் என்பதை உணர்ந்தவன் விழிகளால் ஆறுதல் கூறினான்.

“வசீ வா, சாமிகும்பிட…” என்ற குகனின் அழைப்பில் மனைவியின் அருகே நின்றவன் அவளின் கையை பிடிக்க அவனிடமிருந்து உருவிக்கொண்டாள்.

சற்றுமுன் வரை இருந்த இணக்கநிலை இப்பொழுது இல்லாமல் போக பிரிவாற்றாமையில் இப்படி இருக்கிறாள் என்று விட்டுவிட்டான்.

அனைவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்கள் கடைசியில் முனீஸ்வரனிடம் வர அவரை பார்த்த சந்நிதி திகைத்து போனாள்.

தந்தையின் கண்கள் கலக்கத்துடன் சிவந்து போய் இருக்க சந்தியாவின் பிரிவின் பொழுது கூட இப்படி ஒரு தளர்வை அவரிடம் பார்த்திராதவள்,

“அப்பா…” என்றதும் அவளின் தலையில் கைவைத்து அழுத்தியவர் சுதாரிப்புடன் முகத்தை கைகளால் துடைத்துவிட்டு தலையசைத்துவிட்டு வாசலுக்கு சென்றுவிட்டார்.

அவர் செல்லவும் மற்றவர்களும் உடன் செல்ல வேன் தயாராக நின்றுகொண்டிருந்தது வெளியே. அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப சந்நிதி தாயையும் தந்தையையும் மாறி மாறி பார்த்தபடி நிற்க,

“நாங்க பார்த்துக்கமாட்டோமா நிதி?…” என நீதிமாணிக்கம் அவளின் கன்னம் தட்டி சொல்லி செல்ல புவனேஷ்வரன், அபிராமி என்று ஒவ்வொருவராய்தநிதநியாக வந்து அவளிடம் விடைபெற்றனர். கடைசியாக புகழ் வர அவனை அழுத்தமாய் பார்த்தவள்,

“உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை அண்ணா. நீ ஏன் இப்படி பண்ணின?…” என்றதும் திகைத்த புகழ்,

“என்னனு புரியலை. ஆனா நான் எது செஞ்சிருந்தாலும் உன் நல்லதுக்கு தான்டா…” அவளை போல அழுத்தமாகவே அவன் சொல்ல மற்றவர்கள் மத்தியில் பேசமுடியாது மௌனமாக அனைவரையும் சுமந்துகொண்ட வேன் புறப்பட்டது.

ஜன்னலோரம் இருந்த முனீஸ்வரனின் பார்வை மொத்தமும் வசீகரனையும், மகளையுமே நிறைத்தது.

அனைவரும் சென்றதும் உதவிப்பெண்ணை வைத்து வீட்டை ஒழுங்குபடுத்திய அம்பிகா இரவு உணவிற்கு மதியம் செய்தவைகளையே வைத்துக்கொண்டார்.

சந்நிதியின் முகத்தில் இருந்த வாட்டத்தினால் அதிகமாய் பேச்சுக்கொடுக்காமல் அவளை அவள் போக்கில் விட்டனர்.

குடிப்பதற்கு பால் காய்ச்ச குகன் செல்ல பதறிப்போன சந்நிதி அவரின் பின்னாலேயே வந்து,

“நான் செய்யறேன் மாமா, நீங்க போங்க…”

“எதுக்கும்மா இத்தனை பதட்டம். இங்க எல்லாருமே எல்லா வேலையும் பார்ப்போம். முக்கியமா நைட் டின்னருக்கு உன் அத்தையோட சேர்ந்து நானும் சமைப்பேன். உன் புருஷன் எல்லாருக்கும் பால் காய்ச்சி கொண்டுவருவான். இது நம்ம வீட்டுல வழக்கம் தான்…” என்று அவளிடம் பேசிக்கொண்டே காய்ச்சி நான்கு தம்ளர்களில் ஊற்ற அவள் அதை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

போனில் பேசிக்கொண்டே வசீகரன் பாலை குடித்துவிட்டு அறைக்கு சென்றுவிட அம்பிகாவுடன் பேசிக்கொண்டிருந்த சந்நிதி ஊருக்கு சென்றுவிட்டோம் என்று வீட்டிலிருந்து போன் வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள்.

பார்கவியிடமிருந்து அழைப்பு வந்ததும் பேசிவிட்டு மாடிக்கு சென்றவள் வசீகரனை பார்க்க அவன் இவளை பார்த்ததும் புன்னகையுடன் தலையசைக்க அவளுக்கு சந்தியா சொன்ன அத்தனையும் ஞாபகம் வந்து அடங்கியிருந்த கோபத்தை தூக்கி நிறுத்தியது.

“நல்ல ப்ளான் பன்றீங்க இல்லை…” குதர்க்கமான குரலில் அவள் கேட்கவும் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தவனின் கைகள் அப்படியே நிற்க புருவம் உயர்த்தி என்னவென்று பார்த்தான்.

“சந்தியா எல்லாமே சொல்லிட்டா. நீங்க பண்ணின மாஸ்டர் ப்ளான் எல்லாம். ஏதோ செஞ்சிருக்கீங்கன்னு கெஸ் பண்ணிருந்தேன். அது மான்ஸ்டர் ப்ளான்னு எனக்கு இப்போ தானே தெரியும்…”

“நிதி…”

“எங்க குடும்பத்துல நடக்கவேண்டிய விஷயங்களை பத்தி முடிவெடுக்க நீங்க யார்? உங்களுக்கு அந்த உரிமையை யார் குடுத்தா?…” கனலை கக்கும் விழிகளுடன் அவள் கேட்க,

“ஓஹ் நோ, திரும்பவும் மினியேச்சர் முனீஸ்” என்று ஆயாசத்துடன் பார்த்தான் சந்நிதியின் வசீகரன்.

Advertisement