Advertisement

தீண்டல் – 21

           அந்த அறைக்குள் நுழைந்தவன் அவளிடம் குறைந்தபட்சம் முகத்திருப்புதலையோ அவளிடமிருந்து விலகலையோ தான் எதிர்பார்த்திருந்தான்.

இந்த அளவிற்கு கோபத்தில் சிவந்த முகத்துடன் தன்னை குற்றம் சாட்டும் பார்வையை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“நிதி…” தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் அழைக்க,

“நான் தான். சொல்லுங்க…” என்று அவனை நன்றாக பார்த்து நின்றாள்.

“பார்ரா என்கிட்டையேவா?” என்னும் பார்வையை கொடுத்தவன்,

“உனக்கு காது கேட்குதான்னு தான் கூப்பிட்டு பார்த்தேன். கேட்குதே…” கிண்டலாக பேச,

“கொஞ்சம் கூட மனசாட்சியோ ஒரு வருத்தமோ இல்லாம இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வருது? ஏன் இப்படி பண்ணுனீங்க?…” சந்நிதி அவனின் கேலியில் பொறுமை இழந்து கேட்க,

“கல்யாணம் ஆனா ஏன் வருத்தப்படனும்? இதை விட இன்னும் நல்லா பேசலாமே. ஹ்ம்ம், இப்போதான் உள்ளயே வந்திருக்கேன். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. என்ன பண்ணுனீங்கன்னு கேட்டா?..” அவளின் எண்ணவோட்டம் புரியாமல் இவனும் வார்த்தைகளை விட்டுக்கொண்டிருந்தான். சந்நிதியின் கோபம் என்னவென ஓரளவிற்கு யூகித்திருந்தாலும்,

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு நிதி? விஷயம் என்னன்னு எனக்கு இப்போ சொல்லு…” வசீகரனின் பேச்சிலும் பொறுமை கரைந்துகொண்டிருந்தது.

காலையில் இருந்து அவளின் பார்வைக்காக காத்திருந்தவன் அவளின் பாராமுகம் கொடுத்த மனவுளைச்சலில் இருந்து இப்போதுதான் கொஞ்சம் சமாதானம் ஆனான்.

இதுவரை நடந்த அனைத்தும் மறந்து இந்த நிமிடம் அவள் அவனின் மனைவி இன்றைய இரவு அவர்களுக்கான முதல் இரவு. இந்த நாளின் உன்னதமும் முக்கியத்துவமும் வாய்ந்தது.

இந்த அறைக்கே உரித்தான வாசனையும் மயக்கமும் அவனின் மனதை அசைத்துக்கொண்டிருக்க அதன் தாக்கம் சிறிதும் முகத்தில் இல்லாமல் குறைந்தபட்ச புதுப்பெண்ணுக்கு உரிய  எந்தவித அறிகுறியும் இன்றி கல்லாய் நின்றவளை பார்த்து கடுப்பானது இவனுக்கு.

காத்திருந்து காத்திருந்து இத்தனை வேலைகள் பார்த்து அவளுக்காக உருகி, அவளுக்காக வருந்தி அவளையே நித்தமும் நினைத்து கரைந்துகொண்டிருக்க இவளேன்றால் இப்படி பேசிவைக்க அவனுக்கும் கோபம் முளைவிட்டது.

“உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லயான்னு நான் கேட்க மாட்டேன். எனக்கே தெரியுது உனக்கு ஏதோ மனவருத்தம் இருக்குன்னு. அதுக்காக ஏன் இப்படி இருக்கனும்?…”

“இவ்வளோ பண்ணிட்டு எத்தனை சுயநலம் உங்களுக்கு?…”

“இப்ப என்ன சுயநலத்தை கண்டுட்ட? நிதி ப்ளீஸ், இந்த நேரம் இந்த சண்டை வேண்டாம். நாளைக்கு பேசுவோம்…”

சந்நிதி இப்படி பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஏனோ இந்த நேரத்தை இப்படி சண்டையில் கழிக்க அவனுக்கு விருப்பம் இல்லை.

காத்திருப்பின் பலனாய் கைகூடிய காதல், அதை அனுபவிக்கமுடியாது ஆசை மனைவியே அதற்கு தடையாக.

“முனீஸ்க்கு குடுத்த டார்ச்சரோட எபெக்ட் போல. அந்த கடவுள் முனீஸ் புலம்பலுக்கு எல்லாம் நமக்கு ரிவெஞ்சா கை குடுப்பார் போலயே?” என நினைத்து நொந்துகொண்டான்.

“அன்னைக்கு சொன்னீங்களே, நான் தான் உங்க அப்பாவோட சின்ன மருமகன்னு. சாதிச்சிட்டீங்கள்ள?…” என்று இகழ்ச்சியாக கேட்க வசீகரனுக்கு ஆயாசமாக இருந்தது.

“ஆர் யூ மேட்?…” என்ன பேசுகிறாய் நீ? என்ற பார்வையுடன் கேட்க,

“மேட், தான். இதோ இப்போ இப்படி வந்து நிக்க வச்சுட்டீங்கள்ல. நான் மேட் தான். இதை எதுவும் தெரியாத எங்க குடும்பமும் மேட் தான். உங்க மேல எத்தனை மரியாதை வச்சிருந்தேன்…”

“ஒஹ் நோ, கமான் நிதி, இப்போ மட்டும் அந்த மரியாதைக்கு என்ன வந்தது? இதையே சொல்லாத. குடும்பத்தையும்…” அவளை சமாதானம் செய்யும் விதமாக அணைக்க முயல,

“யூ சீட், தள்ளி போங்க. உங்க ஆபீஸ்ல வச்சு அத்தனை கேட்டேனே. கொஞ்சமும் மனசு இறங்கலை இல்லை. நீங்க நினைச்சதை சாதிக்க எந்த மாதிரி வேணும்னாலும் நடந்துப்பேங்க. அப்படித்தானே?…”

“நான் என்ன உன்னை சீட் பண்ணினேன்?…”

“இல்லயா பின்ன? திருச்செந்தூர் கோவில்ல வச்சு நான் உங்ககிட்ட பேச வந்தப்போ நல்லவராட்டம் எங்க பின்னால வரலை. வேலையா தான் வந்தேன். அப்படி இப்படின்னு எத்தனை பொய் சொன்னீங்க?…”

“நான் உண்மையாகவும் தான் சொன்னேன். என் வேலையா தான் வந்தேன். இதுல என்ன சீட்டிங்கை கண்டுட்ட?..” அவளின் கோபம் வசீகரனுக்கு எரிச்சல் மூட்ட அவனும் சரிக்கு சரி ஆரம்பித்தான்.

“சீட்டிங் தான். அன்னைக்கு உங்கப்பாவை வெறுப்பேத்த தான் அப்படி பேசினேன்னு என்கிட்ட சொல்லிட்டு இரக்கமே இல்லாம தியா பட்ட கஷ்டத்தை கல் மனசோட வேடிக்கை பார்த்துட்டு நின்னீங்க…” கண்ணீருடன் அவள் கேட்க,

“வேற என்ன பண்ணியிருக்கணும் நிதி? நான் உன்னைத்தான் விரும்பினேன்னு அப்போ வந்து சொல்லியிருக்கனுமா? சொல்லியிருந்தா தியாவை கஷ்ட்டபடுத்தாம விட்டுடுவாரா உங்கப்பா?…”

“இதை தான் சொல்றேன் உங்களை சுயநலவாதின்னு. அப்போ உங்களுக்கு நான் கிடைக்கனும்னு தானே இத்தனை அழகா மூவ் பண்ணியிருக்கீங்க?. இதுக்கு தான் சொன்னேன் உங்களுக்கு மனசாட்சி இல்லைன்னு…”

“உன் அக்காவை கேட்டப்போ இல்லை நான் தான் பார்த்தேன்னு சொல்லாம கவனமா தப்பிச்ச நீ கூட தான் சுயநலமா அந்த நேரம் நினைச்ச. அப்போ நான் நினைச்சதுல தப்பில்லையே. உன்னை காப்பாத்திக்க உண்மையை சொல்லாத நீ சுயநலவாதின்னா உன்னை கட்டிக்க நான் பண்ணினதும் சுயநலம் தான். எனக்கு உன்னை பிடிச்சது. உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டேன். இதுல எனக்கு தெரிஞ்சதை நான் பண்ணினேன். இது தவறா எனக்கு படலை…”

“எனக்கு பிடிக்கலையே. நான் ஆசைப்படவும் இல்லை. அப்போ நான் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்? எனக்கும் வேற ஆசைகள் இருக்காதா? எனக்கு பிடிச்சதை நான் செய்யனும்னு நினைக்க கூடாதா? ஆனா நான் என்னால எதுவுமே முடியாத அந்த சூழ்நிலையில கொண்டுவந்து நிறுத்திட்டீங்க…”

“நீ ஆசைப்பட்ட படலை இல்லை, ஓகே இதுக்கு நான் ரெண்டாவது வரேன். என்னோட காதலுக்கு நான் போராடினதை தப்புன்னு நீ எப்படி சொல்லலாம்? எனக்கு புரியலை நிதி…”

“இதுக்கு பேர் போராட்டம்னு சொன்னீங்க கொலைவெறி வந்துடும் எனக்கு. போராடினது நீங்க இல்லை. ரொம்ப கூலா இருந்து வெடியை கொளுத்தி போட்டீங்க. சேதாரம் எல்லாம் தியாவுக்கும் எங்களுக்கும் தான். உங்களால அவ எத்தனை கஷ்ட்டபட்டா. இதையெல்லாம் நினைச்சு பார்த்தீங்களா?…”

“என்னால கஷ்டபடலை. உன் அப்பாவால கஷ்ட்டபட்டா. பெத்த பொண்ணை நம்பாம சாமி நல்ல புத்தி குடுக்கும்னு கோவில் கோவிலா அலைஞ்சது அவர். அவரை தப்புன்னு பேச உங்களுக்கு தைரியமில்லை. உங்க கோழைத்தனத்துக்கு நான் காரணகர்த்தாவா? வெல்…”

வசீகரன் உண்மையை பிட்டு பிட்டு வைக்க சந்நிதியின் முகத்தின் கனல் குறைந்து அவன் சொன்ன உண்மையில் கன்ற ஆரம்பித்தது. கண்ணீர் கலங்க ஆரம்பிக்க அவனை பார்க்க அவன் முறைப்புடன் தான் நின்றிருந்தான்.

“என் அம்மாப்பாவை அத்தனை பேசி அனுப்பி வச்சா உங்கப்பாவை நான் வந்து கேட்க மாட்டேனா? அதுவும் ஒண்ணுமே இல்லாத ஒரு காரணத்துக்கு எத்தனை பேச்சு. இன்னைக்கு என்ன உன் அப்பா அபிராமியோட பேசாம, பார்க்காம அங்க போகாம இருக்காரா? சொல்லு…”

அவளிடம் அவன் எகிறியத்தில் வாயடைத்துப்போனவள் கண்களில் கண்ணீர் வேகமாய் இறங்க தன்னையே நிந்தித்துக்கொண்டான் வசீகரன்.

“உண்மை தான். அதுக்கு நீங்க பேச்சை மாத்தாதீங்க. நான் தான் அன்னைக்கே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்ல. பாருங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் தாண்டலை. அதுக்குள்ளே என் அப்பா பண்ணினதை சொல்லி காண்பிச்சுட்டீங்க. இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன். இது மாறாதுன்னு..”

சந்நிதி சொல்லவும் தலையில் கை வைத்தவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான். பேசிவிட கூடாது என்று தான் நினைத்திருந்தான். ஆனால் அவளே அதை ஆரம்பித்துவைக்க அவனால் பொறுமையாக செல்ல முடியவில்லை.

“நிதி….  நிதி….. நிதி…. உனக்கு நான் எப்படி புரியவைக்க…” என்று தலையை உலுக்கி பின் கோதிக்கொண்டவன் மீண்டும் எழுந்துவந்து அவளருகே நின்றான்.

“இங்க பார், நான் உன்னை விரும்பறேன். என்னால உன்னை விட முடியாம தான் உங்கப்பா அத்தனை பேசியும் நான் உன்னை கல்யாணம் செஞ்சிருக்கேன். இதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு…” அவளின் கை பற்றி அவன் சொல்ல மறுப்பாய் தலையசைத்தவள்,

“என்னால முடியலை. நீங்க சொல்ற உங்க காதலை விட, சவாலுக்காக தான் இந்த என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. என்னால மாத்திக்க முடியலை. அத்தனை கோபமும் ரோஷமுமா எங்கப்பாக்கிட்ட சொடக்கு போட்டு சொல்லிட்டு போனீங்க. இப்ப இந்த நிமிஷம் எனக்கு அந்த முகம் தான் ஞாபகம் வருது…”

சந்நிதி பிடிவாதமாக சொல்ல வசீகரனின் முகம் இறுகியது. இன்னும் இவளுக்கு என்னதான் வேண்டும் என்று கோபம் கொண்டவன் வேகமாக அவளை இழுத்து தனக்குள் அழுத்தமாய் புதைத்தான்.

“உனக்கு எப்படி புரியவைக்க? பழசையே நினைச்சிட்டு இருக்காம இனி அந்த முகத்தை மறந்திட்டு உன் கணவனான இந்த முகத்தை ஞாபகம் வச்சுக்கோ நிதி…” என்ற முனங்கலுடன் அவளை தன் ஆளுமைக்குள் கொண்டுவந்தான்.

அவளை அணைக்கும் வரை இருந்த கோபமும் எரிச்சலும் அந்த தீண்டலில் பனியென கரைந்து அவள் மீதான நேசமும், இத்தனை நாளான காத்திருப்பும் அவனை திசைமாற்ற தீப்பற்றிக்கொண்ட உணர்வு.

அவனின் திடீர் தாக்குதலில் அதிர்ந்தவள் அவனிடமிருந்து விலக பார்க்க முடியாமல் போக அவனின் சட்டையை பிடித்து இழுத்தாள்.

“விடுங்க. விடுங்க ப்ளீஸ்…” என்று அவள் சொல்ல சொல்ல அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முத்தங்களை அழுத்தமாக பதிக்க அவனின் அணுகுமுறையில் உடல் விரைத்தது சந்நிதிக்கு.

“ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க. பிடிக்கலை. அழுகையா வருது. என்னால மூச்சு விட முடியலை…” என்று அவளின் குரல் இபொழுது கதறலாக வெளிப்பட மெதுவாய் அவளை விலக்கியவன்,

“இதுவரை நடந்த எல்லாமே நடந்ததாகவே இருக்கட்டும். இப்ப நீ என்னோட வொய்ப். இனி இதுதான் நம்ம லைப். அதை மட்டும் பாரு. அதை மட்டும் மனசுல பதிச்சுக்க…” என்று மீண்டும் அவளை நெருங்க பார்க்க,

“தயவு செஞ்சு விட்டுடுங்க என்னை. நான் என்ன பொம்மையா? என்னோட உணர்வுகளை தூண்டிவிட்டு ஏன் அதில் குளிர்காய பார்க்கறீங்க? என்னை வச்சு நீங்க உங்க ஆசையை நிறைவேத்த நினைக்கறீங்க. என்னோட மனசு என்னன்னு நீங்களும் நினைக்கலை. என் அப்பாவும் நினைக்கலை…”

“நிதி…”

“உங்க ரெண்டு பேரோட ஈகோவுக்கு நான் பலியா? உங்களுக்கு பிடிச்சதுன்னு கேட்டீங்க. இல்லைன்னதும் வேண்டாம்னு தூக்கி போட்டீங்க. இப்ப திரும்பவும் வந்து…” முகத்தை மூடிக்கொண்டு அழுதவள்,

“இப்ப இந்த தாலி எதுக்கு கட்டினீங்க? உங்க சவால்ல ஜெயிச்சதுக்காகவா? இல்லை உங்க ஈகோ எந்த விதத்துலையும் பாதிக்கபடலைன்னதும் போனா போகுதுன்னு கட்டினதா? என்ன மனுஷன் நீங்க?…” கோபத்திலும் ஆத்திரத்திலும் வசீகரனை அந்த வாங்கு வாங்க,

“நீ இவ்வளவு பேசுவியா? நைஸ். ஐ லைக் இட். ஹ்ம்ம், உன்னோட ஒபீனியனை நான் மாத்த விரும்பலை. அப்படியே வச்சுக்கோ. நோ பிராப்ளம். என்ன வேணும்னாலும் பேசிக்கோ. ஆனா இந்த வீட்டுக்குள்ள இந்த நாலு சுவத்துக்குள்ள மட்டும்…”

“வெளில பேசினா? என்ன பண்ணிட முடியும் உங்களால?…” ஆவேசமாய் கேட்டவளை நெருங்கியவன் அவளின் இதழ்களை பார்வையால் முற்றுகையிட முகம் திருப்பிக்கொண்டாள்.

“பேசித்தான் பாரேன். என்ன செய்வேன்னு சொல்லவெல்லாம் மாட்டேன். செஞ்சு காட்டுவேன். நான் சொல்லி செஞ்சது உன் விஷயத்துல மட்டும் தான்…”   என பேசியவனின் குரலில் கொஞ்சமும் இளக்கம் இல்லை.

“உங்களால வேற என்ன பண்ண முடியும்? உண்மையை சொன்னா கோபம் வேற வருதா? எத்தனை தடவை கேட்டாலும் நான் இதைத்தான் சொல்லுவேன். நீங்க சுயநலம் பிடிச்சவர்ன்னு…”

“அவ்வளோ தானே, ஓகே சொல்லிக்கோ…” சற்றுமுன் கிடைத்த அவளின் நெருக்கத்தின் மயக்கத்தில் கட்டுண்டிருந்தவன் இன்னமும் அந்த மயக்கம் தெளியாமல் பேச அவனின் அலட்சியத்தில் கொதித்துப்போன சந்நிதி,

“நீ ஏன் சொல்ல மாட்ட? உனக்குத்தான் யாரை பத்தியும் கவலை இல்லையே. உன் ஆசை நிறைவேறின சந்தோஷம்டா. நீ பேசத்தான் செய்வ…” என்று கண்ணீருடன் அவனை வேறெதுவும் செய்யமுடியாத ஆதங்கத்துடன் கண்ணீரை துடைத்துக்கொண்டே கேவலுடன் அவள் பேச சாவாசமாக சாய்ந்திருந்தவன் இப்பொழுது அழுத்தமாய் அவளின் முன்னால் வந்து நின்றான்.

“உனக்கு இப்போ சொல்றது தான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட். இந்த வாடா, போடா மரியாதை இல்லாம பேசறது அது கொஞ்சலா இருந்தாலும் சரி கோபமா இருந்தாலும் சரி எனக்கு பிடிக்காது நிதி. டா போட்டு புருஷனை பேசறது, டி போட்டு பொண்டாட்டியை கூப்பிடறது இது எனக்கு ஒத்துவராது. புரியுதா?…”

வசீகரன் சொல்லியதும் சந்நிதியின் கோபம் மறைந்து அவளின் இதழ்களுக்குள் இகழ்ச்சியான புன்னகை உருவாக அது முகத்தில் வியாப்பிக்க,

“இதுதான் இதுக்குக்கு தான் சொன்னேன். எங்கப்பாவும் நீங்களும் ஒண்ணுன்னு இதுலயும் புரியுதா? சொல்லுங்க…”

“ஷப். உனக்கு எல்லாம் புரிஞ்சுடுச்சாக்கும்…”

“எஸ், நல்லாவே புரிஞ்சிடுச்சு. ரொம்ப நல்லாவே. அப்ப தியா வெடிங்ல கூட இதே மாதிரி தான் நீங்க என்னை பார்த்திருக்கீங்க…” என்று உதடு துடிக்க அவள் கேட்க இவனும் அவளை முறைத்தபடி அதுவரை நின்றிருந்தவன் அவளின் கேள்வியில் சிரித்துவிட்டான்.

“இதுதான் நீ புரிஞ்ச லட்சணம். தியா வெடிங்க்ல இல்லை, ரேவதி வெடிங்க்ல இருந்தே நான் உன்னை இப்படித்தான் பார்த்திட்டு இருக்கேன். இது உனக்கு தான் புரியலை…” என்றவன் துடிக்கும் இதழ்கள் மேல் பார்வையை நிலைக்க விட்டவன் கன்னம் பற்றி தன்னருகே இழுத்தான்.

“நீ இவ்வளோ பேசற, அதுவும் இன்னைக்கு. நீ பேச பேச…” என்று அவளின் முகத்தை தனக்கு நெருக்கமாக்கியவன் அவளை வாசம்பிடிக்க அவளுன் நடுக்கம் பிறந்தது.

“இவ்வளோ பயமா? நான் தானே கிஸ் பண்ண போறேன். இத்தனை பயம் வேண்டாம் நிதி…” கிசுகிசுப்பாய் அவன் சொல்ல,

“திரும்பவும் சொல்லுவேன். நீங்களும் என் அப்பாவும் ஒன்னு. அவரும் பயம் காட்டி மிரட்டி எங்களை பேசவிடாம செய்வார். நீங்களும் என்னை கிஸ் பண்ணிடுவேன்னு மிரட்டி என்னை வாய் திறக்க விடாம செய்றீங்க. ரெண்டுமே தப்பு. தெரிஞ்சே செய்யறீங்க. தானா தோணனும் இப்ப நீங்க செய்யறது எந்த மாதிரி காரியம்ன்னு. எனக்கு பிடித்தமில்லாத விஷயம்னும்…”

சந்நிதி அழுத்தம் திருத்தமாய் சொல்ல வசீகரனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

“உன்னோட இந்த பேச்சு உன்னை இன்னுமே என்னை பிடிக்க வைக்குது. எங்க உங்க வீட்ல இருந்த மாதிரி என்னோடையும் நம்ம வீட்லயும் அடங்கி ஒடுங்கி இருந்திடுவியோன்னு நினைச்சேன். பட் லைப் இன்ட்ரஸ்டிங்கா போகும்னு இப்ப நம்பறேன்…”

வசீகரன் பேச பேச சந்நிதி இவன் என்ன சொல்கிறான் என பார்க்க மீண்டும் அவளை நெருங்கியவன்,

“பேசு நிதி, உனக்கு பிடிக்காததை நான் செய்தா கூட உன்னோட எதிர்ப்பை காண்பி. உனக்கு எல்லா விதத்துலயும் நான் துணையா இருப்பேன் உன் கூடவே…” என்றவனை திகைத்து பார்க்க,

“அதை விட்டுட்டு வாயை மூட்டி சிலையாட்டம் நின்னா மியூசியம்ல தூக்கி வச்சிடுவாங்க…” என்று கிண்டல் பேச,

“அப்போ உங்களுக்கு நான் பேசின எதுவுமே புரியலை அப்படித்தானே? உங்களோட தப்பை நீங்க ஒத்துக்கலை தானே?…” மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்தே நிற்க,

“நான் ரொம்ப டயர்டா இருக்கேன். இன்னைக்கு இத்தனை பேசினது போதும்னு நினைக்கேன்…” என்றவன் உடை மாற்ற பாத்ரூமிற்கு சென்றான்.

அவன் சென்றதிலிருந்து சந்நிதி சுய அலசலில் ஈடுபட்டாள். தான் சரியாகத்தான் அவனிடம் பேசினோமா இல்லை வேண்டுமென்றே தன்னை திசை திருப்புகிறானா என்று குழப்பத்திலேயே இருந்தவள் அவன் வந்ததையும் கவனிக்கவில்லை. கட்டிலில் அமர்ந்து தன்னையே பார்த்திருந்ததையும் கவனிக்கவில்லை.

கால் வலிப்பதை போல இருக்க மெதுவாக நிமிர்ந்தவள் அவன் அமர்ந்திருந்த விதத்தை பார்த்துவிட்டு,

“நீங்க சொன்ன மாதிரி இப்ப என்னை வசீகரனின் சந்நிதியா மாத்திட்டீங்கள்ள?…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“தூங்கலாமா?…” என்றான். அவள் கால் வலித்தாலும் அசையாமல் நிற்க கீழே இறங்கியவன் அவளை அள்ளி கட்டிலில் போட்டுவிட்டு பக்கத்தில் படுத்துக்கொண்டான்.

“எழுந்திடுங்க. என்னால இப்படி தூங்க முடியாது. எழுந்து போங்க…” என்று சட்டமாய் எழுந்தமர்ந்து அவனை கத்த மல்லாந்து படுத்திருந்தவன் அவள் பக்கமாய் ஒருக்களித்து படுத்து இடது கையை தலைக்கு முட்டுக்கொடுத்து அவளை பார்த்தவன்,

“எழுந்து எங்க போகனும் மிசஸ் வசீ?…” என்று கேட்க பதில் சொல்லாமல் அந்த அறையை சுற்றிலும் பார்வையால் சுற்றி வந்தாள்.

அந்த அறையில் ஒரே ஒரு கட்டில் மட்டுமே இருக்க அமர ஒரு சேர் கூட இல்லை. கட்டிலில் பக்கவாட்டில் சிறு டேபிள் ஒன்றும் அதில் பழங்களும் இனிப்புவகைகளும் பாலும் இருந்தது.

“என்ன சுத்தி பார்த்தாலும் இங்க படுக்க இந்த கட்டில் மட்டும் தான். சப்போஸ் ஒரு திவானோ, சோபாவோ இருந்தாலும் நானும் படுக்கமாட்டேன். உன்னையும் படுக்க விடமாட்டேன். உட்கார தான் சேரும், சோபாவும். படுக்க கட்டில் தான். பேசாம படு…” என்று மிரட்டலாக சொல்ல அது முனீஸ்வரன் சொல்லுவதை ஒத்தது போல தோன்றியது நிதிக்கு.

“எனக்கு பிடிக்காது. எங்க வீட்டில கூட அம்மாவும் தியாவும் தான் ஒரு காட்-ல தூங்குவாங்க. நான் சிங்கிள் காட்-ல தனியா தான் தூங்குவேன். எனக்கு அதான் பழக்கம். இது அன்ஈஸியா இருக்கு…” திணறி திணறி சொல்ல வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே மென்றவன்,

“அது பிஃபோர் மேரேஜ். இது ஆஃப்டர் மேரேஜ்…” என்றவன் அமர்ந்திருந்தவளை இழுத்து படுக்கவைக்க அந்தளவிற்கு பெரிய கட்டிலும் இல்லாமல் அவன் மேலேயே விழுந்துவைத்தாள்.

“விடுங்க என்னை. எனக்கு உங்க மேல இருக்கற கோபத்துக்கு…” என்று பல்லை கடிக்க,

“அட படும்மா பேசாம, கோவத்த தூக்கி கட்டில்ல வச்சுக்கிட்டு…” என்று வலுக்கட்டாயமாக கண்ணை மூடிக்கொள்ள வேறு வழியின்றி அவனருகே படுத்தவளுக்கு உறக்கம் என்பதே வரவில்லை.

கட்டிலும் சுவற்றை ஒட்டி போடப்பட்டிருக்க அவனை தாண்டிக்கொண்டு இறங்கவும் வழியின்றி புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

“என்னை தூங்கவிடாம இப்படி புரண்டுட்டே இருந்தா எனக்கு தூக்கம் போய்டும். அப்பறம்…” என்று அவன் ராகமாய் இழுக்க சுவற்றின் புறம் திரும்பியவள் அசையாது படுத்துக்கொண்டாள்.

கண்களில் கண்ணீர் பெருக பெருக உதட்டை கடித்தபடி அழுகையை அடக்கியபடி தூங்க முயற்சித்தாள். அவளின் தவிப்பை உணராதவன் அவளின் பின்புறம் பார்த்துக்கொண்டே,

“ஹாட் அன்ட் ஸ்பைசி வொய்ப். மை நிதி…” என்று உதட்டில் உறைந்த புன்னகையோடு கண்களை மூடி அவளின் அருகாமையில் நிம்மதியான உறங்க ஆரம்பித்தான்.

அவனை பொருத்தவரை அவள் மனதில் உள்ள அழுத்தங்களை கொட்டிவிட்டால் என்றே அவன் நினைத்திருக்க இதை விட பெரும் புயலென அவள் தன்னை தாக்கவிருப்பதை அறியாமல் போனான்.

Advertisement