Advertisement

தீண்டல் – 17

           “வசீ?…” என்று குகன் வரும் வரை வசீகரன் அந்த அறையிலேயே தான் அமர்ந்திருந்தான். சந்நிதி கிளம்பும் பொழுது கூட எழுந்து செல்லாமல் அங்கிருந்தே அவள் செல்வதை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

அவளிடம் பேசி முடித்ததும் தன் மனதினை சொல்லிவிட்ட நிம்மதியை விட இனி அவள் என்ன செய்துவைக்க போகிறாளோ என்கிற படபடப்பு அதிகமாகியது.

சந்தியா அளவிற்கு அப்படி அதிகமாய் பயப்படுகிறவளும் இல்லை தான். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் முனீஸ்வரனிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது அப்படி ஒரு சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று இப்பொழுதே யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

இப்படி தன் எண்ணங்களின் சுழலில் சிக்கியிருந்தவன் சுற்றுபுறம் மறந்து அமர்ந்திருக்க சந்தியா போன் செய்ததும் தெரியவில்லை, விஷ்வா அழைத்ததும் தெரியவில்லை. இப்பொழுது குகன் வந்து உலுக்கவும் தான் நிமிர்ந்து பார்த்தான்.

“சொல்லுங்கப்பா…” என்று முகத்தை துடைத்துக்கொண்டு கேட்க,

“கண்ணை திறந்துட்டே தூங்கற போல?…” என்று இலகுவான மனநிலையுடன் அவன் எதிரே அமர்ந்தார் குகன்.

“சும்மா ஒரு யோசனை. வேறொண்ணும் இல்லைப்பா…” என பளிச்சென்று அவன் சிரிக்க,

“சந்நிதி கிளம்பியாச்சா?…” என்றதும் தலையசைத்தவன்,

“நான் பேசிட்டேன்ப்பா…” என்றான்.

“ஓஹ்…” என்றதுடன் குகன் அமைதியாகிவிட சில நொடிகள் மௌனத்தில் கரைய,

“என்னப்பா உங்க ரியாக்ஷன் இவ்வளோ தானா?…”

“நீ சொல்லனும்னு நினைச்ச, சொல்லிட்ட. வேற என்ன பண்ணனும் வசீ?…” மகன் அமைதியாக பார்க்க,

“ஒரு விஷயம் உன் விஷயத்தில் எனக்கு தெளிவு. அந்த பொண்ணோட அப்பாவுக்காக கோபத்துல இந்த முடிவை நீ எடுக்கலை. உன் விருப்பத்தால ஆரம்பிச்சு வச்ச விளையாட்டு இது. ஆனா வாழ்க்கை விளையாட்டு இல்லை வசீ…”

“ஐ க்நோ ப்பா…”

“இதை மட்டும் தெரிஞ்சா போதுமாப்பா? இன்னும் தெரியவேண்டியது இருக்கேன்…”

“தெரியப்படுத்த நீங்க, அம்மா ரெண்டு பேரும் இருக்கீங்க. போதுமே எனக்கு. தெரிஞ்சுக்கலாம்…”

“இப்படி சொன்னா சரி இல்லை வசீ. இது நீயா எடுத்த முடிவு, இத்தனை நாள் எப்படியோ? ஆனா இன்னைக்கு அந்த பொண்ணுக்கிட்ட உன் பிடித்தத்தை சொல்லிட்ட. இனி நீ பின்வாங்க முடியாது வசீ…” என்றார் தீவிரமாக.

“ப்பா…”

“இதுக்கு மேலையும் உன்னால இதுல இருந்து வெளில வர முடியாது வசீ. முனீஸ்வரன் குணம் தெரிஞ்சது தான். உன் விஷயம் தெரிஞ்சா அவர் எப்படி நடந்துப்பார்ன்னு சொல்ல முடியாது. இனியும் ஒரு அவமானத்தை பார்க்கிற தைரியம் இல்லை வசீ…”

மகனை பார்த்துக்கொண்டே சொல்லியவரின் வார்த்தைகள் வசீகரனை பலம் கொண்ட மட்டும் தாக்கியது.

“இது உன்னை காயப்படுத்த சொல்லலை வசீ. நீ புரிஞ்சுக்கனும்…”

“எஸ் ப்பா…” ஆமோதிப்பாக தலையசைத்தான் மகன்.

“குட் பாய். இப்ப நீ பண்ண வேண்டியது ரெண்டு குடும்பத்துக்கும் எந்தவித மரியாதை குறைச்சலும் இல்லாம இந்த சம்பந்தம் முடியனும். அது உன் பொறுப்பு…”

“ஹ்ம்ம் பார்த்துக்கலாம்ப்பா…”

“எனக்கு உன் கல்யாணம் எந்த வித மன சங்கடமும் இல்லாம நடக்கனும். திரும்பவும் ஒரு பிரச்சனைன்னு வந்து அவங்க பேசினா அவங்களவுக்கு இறங்கி பேச என்னாலையோ உன் அம்மாவாலையோ முடியாது. யாரோட மனகஷ்டத்துலயும் உன் கல்யாணம் முடிய கூடாது. எங்களுக்கு வேண்டியது இதுதான்…”

“ப்பா, நீங்க எதையும் நினைச்சு குழம்ப வேண்டாம். யாருக்கும் மரியாதை குறைவா ஆகிடாம பார்த்துப்பேன். நீங்க கவலைப்படாம இருங்கப்பா…”

“அந்த நம்பிக்கை இருக்கறதால தான் இத்தனை பேசறேன். அந்த மனுஷன் பேச்சை நேர்ல பார்த்தவங்க நாங்க. நீயும் தான். அப்படி பேசினதால தான் அத்தனை தூரம் உனக்கு கோபம் வந்தது. திரும்பவும் அவர் பேசினார்ன்னு கோபப்பட்டு எதையும் நீ செய்யாம இருக்கனும்…”

குகன் எதை சொல்கிறார் என்று வசீகரனுக்கு புரியாமல் இல்லை. கோபத்தில் சந்நிதியை வேண்டாமென சொல்லிவிட அவனால் இயலுமா? நினைக்கவும் தோன்றவில்லை அப்படி ஒரு சூழ்நிலையை.

“நீ கிளம்பலை?…”

“ம்ஹ்ம் இதோப்பா….”

“அப்பா உன்னை கன்ப்யூஸ் பண்ணிட்டேன்னு நினைக்கறியா?…” தந்தையாய் மகனின் முகம் வாட்டம் பொறுக்காமல் கேட்க புன்னகைத்தவன்,

“குழம்பின குட்டையில தான் மீன் புடிக்க முடியும்னு அம்மா சொல்லுவாங்களே? இந்நேரம் இங்க இருந்தா இதை தான் சொல்லியிருப்பாங்க…” என்றதும் குகனுக்குமே புன்னகை தான்.

“நல்ல அம்மா, நல்ல பிள்ளை…” என்று அவனின் முதுகை தட்டிக்கொடுக்க தந்தையை அணைத்துக்கொண்டான் வசீகரன்.

“ஓகேப்பா நான் கிளம்பறேன்…” என்றுவிட்டு கிளம்பிவிட குகனின் முகத்தில் மீண்டும் யோசனை.

யாரோ ஒரு பெண்ணுக்காக இத்தனை தூரம் மகன் பொறுமையுடன் காத்திருப்பது அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது அவருக்கு. எதுவாக இருந்தாலும் காத்திருப்பு அவனுக்கு பிடிக்காத ஒத்துவராத விஷயம்.

எதையும் தள்ளிப்போட்டு பழக்கமில்லாதவன். உடனுக்குடன் அனைத்தையும் செய்துவிடுபவன். இன்று விரும்பிய பெண்ணிற்காக எத்தனை பார்க்கறான் என்று எண்ணியவர் இது சாத்தியமாக கூடுமா என்றும் நினைத்தார்.

யோசனைகள் இப்படியே செல்ல அம்பிகா அழைத்து தான் வெளியில் செல்வதாக சொல்லி அவருக்கு எதுவும் வாங்க வேண்டுமா என கேட்க குகன் சொல்ல பேசிவிட்டு வைத்தவர் மற்ற வேலைகளில் ஆழ்ந்தார்.

இங்கே கம்பனின் குடும்பமே சந்தியா, விஷ்வா வரவிற்காக காத்திருக்க எதிர்பாராதவிதமாக வந்தது முனீஸ்வரன்.

சொல்லாமல்கொள்ளாமல் வந்ததும் இல்லாமல் வழக்கமான வார்த்தை ஆட்டத்தை ஆரம்பிக்க முனீஸ்வரனிடம் சிக்கிக்கொண்டு கம்பன் தான் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்.

இப்பொழுதே மகளை அழைத்துக்கொண்டு செல்ல போவதாக அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டிருந்தார்.

“அண்ணே நான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல. எனக்காக பார்க்க மாட்டீங்களா?…” கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் கம்பன் பேசியது ராதாவிற்கு கோபத்தை உண்டுபண்ணியது.

“அப்பா ப்ளீஸ், இன்னும் ஒரு வாரம் மட்டும் இருந்துட்டு…” என நிதி அழுகையுடன் சொல்ல அவளை ஒரு பார்வை தான் பார்த்தார். வாயை மூடிக்கொண்டாள்.

“கிளம்புன்னு சொன்னா மறு வார்த்தை பேச கூடாது. இங்க வந்த கொஞ்ச நாள்ல பயம் அத்துப்போச்சோ சிறுசு?. தப்பா இருக்கே…” என்றபடி மீசையை முறுக்க மாடியில் இருந்து ரேவதியின் அழுகை குரல் கேட்க அனைவரின் கவனமும் மேலே சென்றது.

“என்னாச்சு?…” என கேட்கும் முன்னே மீண்டும் ராதா மேலே சென்றிருக்க,

“ரே க்கு சூட்டுவலியாம். அதான் சித்தி கஷாயம் கொண்டு வர சொன்னாங்க. கூடவே தைலமும். அதை எடுக்கத்தான் வேகமா வந்தேன்…”

“மரமட்டை, ஒன்னத்துக்கும் உதவாது. என் உசரத்துக்கு வளர்ந்திருக்க தெரியுது. கேட்டத உடனே கொண்டுப்போக தெரியல. அசமந்தம், அசமந்தம். வாய் பார்த்துட்டு நிக்காம போய் குடு. வெரசா போ…” என்று அதற்கும் விரட்ட கம்பனுக்கு இவரை நினைத்து கவலை கொள்வதா, மகளை பார்ப்பதா என்பதே பெரிய தலைவலியாக போனது.

“இங்க என்னடா பார்வை? டாக்டருக்கு போன போட்டு வர சொல்லு. நிக்கிறான் பாரு மரம் மாதிரி…” என்று அவரையும் விரட்ட விட்டால் போதும் என்பதை போல ஓடியே போனார் கம்பன்.

சந்நிதி வந்ததும் அவளுடன் மேலே சென்றவர் அறையின் வாசலிலேயே நின்றுகொண்டார். சட்டென உள்ளே செல்ல முடியாது கழுத்தை நீவிக்கொண்டே நடக்க உள்ளே அழைக்க பயந்து சந்நிதி வேகமாய் சென்றுவிட்டாள்.

ரேவதி வலியில் அதிகமாய் கதறும் சத்தம் கேட்க முனீஸ்வரனுக்கு பொறுக்க முடியவில்லை.

“இந்தா ராதா…” என்று வெளியில் நின்று கதவை தட்டி அழைக்க சிறிது நேரத்தில் வெளியில் வந்தவர்,

“சொல்லுங்க அத்தான்…”

“என்ன சாவகாசமா சொல்லுங்கத்தான்னுற? போ போயி புள்ளைய கை தாங்கலா கூட்டிவா. ஹாஸ்பிட்டல் போவோம்…” என்று பரபரக்க,

“இது சூட்டு வலி அத்தான். கொஞ்சம் நேரத்துல சரியாகிடும். ஹாஸ்பிட்டல் தேவை இல்லை…”

“அறிவில்லாம பேசாத. மெத்தபடிச்ச மேதாவி, உனக்கு அம்புட்டும் வெளங்குதோ? சூட்டு வலி, காட்டு வலின்னுட்டு. போ போய் கூட்டி வா. நா உள்ள வரக்கூடாதேன்னு பார்க்கிறேன். இல்லைனா நாபாட்டுக்கு புள்ளைய கூட்டிட்டு போய்டமாட்டேன்…” என்று ராதாவிடம் எகிற,

“ஏன் போக மாட்டீங்க? கொஞ்சம் முன்ன வரைக்கும் நிதியை கூட்டிட்டு போவேன்னு சொன்னீங்க, இப்ப ரேவதியை. யாரையாச்சும் தரதரன்னு இழுத்துட்டு போய்டனும் உங்களுக்கு. நீங்களே பார்த்தீங்கள்ள, ஒன்னுக்கு மூணு ஆள் இருந்தா தான் புள்ளைதாட்சியை சுளுவா பார்த்துக்க முடியுது…”

“நிதி இருந்தா ஒத்தாசையா இருக்குமேன்னு, அவளும் என் மகன்ற உரிமையில அவளை இருக்க சொல்லிட்டேன். பொறுக்கலை உங்களுக்கு, உங்க மக இங்க வேலை செய்யனுமான்னு நினைக்கிறீங்க. அதான் கூட்டிட்டு போகனும்னு தவிக்கிறீங்க….” ராதா விட்டேனா பார் என்பதை போல தாக்க முனீஸ்வரன் திகைத்து போனார்.

“இந்தா எதுக்கு எதை இணைகூட்டி பேசற. நான் எதுக்கு அப்படி நினைக்க போறேன்?…”

“பின்ன அவ இங்க எனக்கு உதவிக்கு இருக்கனுமான்னு நினைச்சு தானே இத்தனை கோவம் உங்களுக்கு. எங்க உங்க மக காலு எங்களால திரும்ப பாழாகிடுமோன்னு தான கூட்டிட்டு போகனும்னு நினைக்கறீங்க? தாராளமா போங்க. நெட்டையோ குட்டையோ நானே என் மகளை பார்த்துக்கறேன்…”

“என்ன இங்க சண்டை? ராதா என்ன பேசிட்டு இருக்க?…” என கம்பன் வந்து கேட்க,

“இவ ஒருத்தி கூறுகெட்ட தனமா பேசிட்டு இருக்காடா. அங்க வீட்டுல இவ அக்கா வெருக்கு வெருக்குன்னு ஒத்தக்காட்டு குரங்கட்டாம் மூஞ்சியை முகரையில தூக்கி வச்சுட்டு உட்கார்ந்துருக்கா. பெருசும் இல்லையா. சின்னதும் வீட்ல இல்லாம எனக்கே சுருக்குன்னு இருக்கு. அதான் கூட்டி போக வந்தேன்…”

அவர்களை பார்க்காமல் தலையை தடவிக்கொண்டு மாடிப்படியை பார்த்தபடி  முனீஸ்வரன் சொல்ல ஆவென்று அதிசயமாக பார்த்தனர் ராதாவும், கம்பனும். இருவரின் பேச்சு சத்தத்தை காணாமல் திரும்பி பார்த்தவர்,

“இங்க என்ன கதையா சொல்லிட்டு இருக்கறேன்? போய் அவ வலி போய்டுச்சான்னு பாரு. வாய பார்த்துட்டு நிக்காம. இன்னும் வலிச்சதுன்னா சத்தம் காட்டாம கிளம்பி வரனும். புரியுதா?…” என மிரட்டலாக சொல்ல தலையசைத்த ராதா உள்ளே சென்றார்.

“டாக்டருக்கு சொன்னியாடா?…” கம்பனிடம் பேச,

“சொல்லிட்டேண்ணே. வலி அதிகமா இருந்தா கிளம்பி வர சொன்னாங்க. இல்லைன்னா தேவையில்லை…”

“ஏன் வீட்டுக்கெல்லாம் வரமாட்டாங்களா?…”

“இல்லைண்ணே. பிஸியா இருப்பாங்க. நாம தான் போகனும்…”

“கிறுக்குபயலே பக்கத்துல எதாச்சும் டாக்டர அவசரத்துக்கு பார்த்து வச்சிக்க வேண்டியது தானே? பிஸியா இருக்கறவ நம்ம புள்ளைய பொறுமையா பார்ப்பாளா? முதல்ல அத நிப்பாட்டிட்டு வேற டாக்டரை பாரு…” என சொல்ல கம்பனுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் பரிதாபமாய் பார்த்தார்.

“அவசரத்துக்கு தான டாக்டர பாக்கறோம். நமக்கு பாக்கத்தானே படிச்சிருக்காக. வர சொன்னா வர முடியாதாவங்க என்னத்துக்கு டாக்டருக்கு படிக்கனும்?….”

“என்னண்ணே நீங்களே இப்படி சொல்லலாமா? உங்களுக்கு தெரியாததா?…”

“அதான் சொல்லுறேன். நாளைக்கு பெருசுக்கே புள்ளைன்னு வரப்ப என் பேச்ச கேட்கற டாக்டர தான் நான் பாப்பேன்…” என்று சொல்லும் பொழுதே ஏனோ மனது மகளின் நிறைமாத கோலத்தை கண்களில் கற்பனை செய்து பார்த்தது.

முகம் விகசிக்க மீசையை பெருமையாய் முறுக்கியவர் அதே நினைப்புடன் மடியிலிருந்து கீழே சென்றார். அண்ணனை வித்தியாசமாக பார்த்த கம்பன் அவரின் மோனநிலையை கலைக்க பயந்து, விட்டால் போதும் என்பதை போல மேலேயே நின்றுகொண்டார்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த ராதா முனீஸ்வரனை தேட கம்பன் கீழே கை காண்பிக்க,

“அத ஏன் இப்படி நின்னுட்டு சத்தமே வராம சொல்றீங்க?…”

“அதை விடு ரேவதிக்கு பரவாயில்லையா?…” என கேட்க,

“ஹ்ம்ம் இப்ப பரவாயில்லை. நான் போய் அவளுக்கு குடிக்க சூடா கொண்டுவரேன். நீங்க உள்ள போய் பாருங்க. என்ன பொண்ணோ சின்ன வலி பொறுக்கமாட்டாம…” என்று கீழே இறங்கியவர் அப்பொழுதும் முனீஸ்வரன் அப்படியே அமர்ந்திருக்க,

“உங்களுக்கு காபி, டீ ஏதாவது கொண்டு வரட்டுமா அத்தான்?…” என்றதும் தான் கனவு கலைந்த முகத்துடன் பார்த்தவர்,

“ரேவதி எப்படி இருக்கா?…”

“இப்ப வலி இல்லை அத்தான். உட்கார்ந்திருக்கா. போய் வேணும்னா பாருங்க. நான் அவளுக்கு மருந்து கஞ்சி வைக்க போறேன். அப்படியே காபியும் கலக்கறேன். உங்களுக்கும் சேர்த்து…” என,

“இல்லம்மா, மோர் இருந்தா எடுத்தா. என்னவோ நா வறண்டு தெரியுது…” என்று தொண்டையை தடவ,

“உடம்புக்கு ஏதும் முடியலையா?…” அக்கறையுடன் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றவர் கண்களை மூடி சோபாவில் உறங்குவதை போல சாய்ந்துவிட,

“குறைச்சு பேசனும். இதுல இவருக்கு தொண்டை வறளுதாம்? திட்ட சொல்லு மூச்சு விடாம சண்டைக்கு நிப்பாரு கத்தி இல்லாத குறையா நாக்கால வெட்டி போட. நல்லவிதமா மட்டும் ஒரு வார்த்தைக்கு மேல பேசிட கூடாதே?…” என மனதினுள் பேசியபடி சென்றவர் மோரை கடைந்து கொண்டு வந்து முனீஸ்வரனிடம் கொடுக்க வாங்கி குடித்தவர்,

“நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். வந்ததும் கிளம்பிடுவேன். மிளகு ரசம் வச்சு கொள்ளு துவையல் அரைச்சு வை…” என்றதும் ராதாவின் முகம் சுருங்கிவிட,

“நான் மட்டும் தான் போறேன். போய்ட்டு ரெண்டு நாள் கழிச்சு உன் அக்காவ கூட்டிவந்து விடறேன். இங்க நாலு நாள் இருக்கட்டும். வேணுமின்னா பெரியவளையும் வர சொல்லிக்க. சரிதானே?…” என்றதும் தான் ராதாவின் முகம் சிரிப்பை காட்டியது.

அதையும் அளவுடன். எங்கே அதிகபட்ச சந்த்ஷத்தை காண்பித்து அதற்கும் வேண்டுமென்றே ஆப்பு வைத்தாலும் ஆச்சர்யமில்லை. செய்யக்கூடியவர் தான். முனீஸ்வரனின் குணம் அப்படி.

அதனால் அவர் செல்லும் வரை வாசலை பார்த்திருந்தவர் சென்ற பின்னர் ஏக சந்தோஷத்தோடு வேகமாய் மேலே வந்தார்.

கம்பன் மகளிடம் பேசிக்கொண்டிருக்க அதை கேட்டுக்கொண்டிருந்தாலும் சந்நிதியின் கண்கள் கலங்கியபடி தான் இருந்தது. இபொழுது கிளம்பிவிடுவோம் என நினைத்தக்கொண்டே அவளின் கைகள் தன்னுடைய உடமைகளை எடுத்து பேக்கினுள் திணித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் மனதினுள் வசீகரனும், அவன் சொல்லியதும் எங்கோ சென்றுவிட்டிருந்தது. நினைவில் இருப்பதெல்லாம் கிளம்பவேண்டும். இது மட்டுமே. போகும் வழியெல்லாம் தனியாக இவருடன் சென்றால் எடுத்ததற்கெல்லாம் திட்டுவாரே என மனதிற்குள் மருகியபடி இருந்தாள் சந்நிதி.

“சுத்தம் நீ இதத்தான் செஞ்சிட்டு இருப்பன்னு நான் நினைச்சேன். நீயும் அப்படித்தான் இருக்க…” என அவளின் கையில் இருந்த பேக்கை பிடுங்கி வாட்ரோபினுள் வைத்தவர் அதை சாற்றிவிட்டு,

“நீ ஊருக்கு ஒன்னும் போகலை. முதல்ல முகத்த சந்தோஷமா வச்சுக்க. எனக்கே பார்க்க முடியலை…” என்றவரை நம்ப முடியாமல் பார்த்தாள் நிதி.

“எல்லாத்துக்கும் பார்வை தான் உன்கிட்ட. எப்பவும் நீ அதிகம் பேசமாட்ட தான். ஆனா இப்போ உன் பேச்சு இன்னுமே குறைஞ்சு போச்சு நிதி. கொஞ்சம் நஞ்சம் இருந்த உன் துடுக்குத்தனம் கூட இப்ப என்னவோ இல்லை…”

“அப்படியெல்லாம் இல்லை சித்தி. நான் எப்பவும் போலதான் இருக்கேன்…”

“எனக்கு தெரியாதா உன்னை. அந்த ஆக்ஸிடென்ட் நடந்த பின்னால ரொம்பவே…”

“சித்தி ப்ளீஸ், நான் நல்லா தான் இருக்கேன். இதுக்குமேல நான் என்ன நல்லா இருந்திருக்கேன். என் சந்தோஷத்தோட அளவுகோல் என்னைக்கும் இந்த எல்லையை தாண்டினதில்லையே. நான் என்னவோ பிறந்ததில இருந்து சோகத்தையே பார்க்காத மாதிரி பேசறீங்க?…”

“உன் வாய் கொழுப்பு இருக்கு பாரு. உன் அப்பா வாய் உனக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு கிடக்கு. வந்துட்டா பெரியமனுஷி மாதிரி பேசிட்டு…” என்று அதட்டல் போட இவர்கள் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் கம்பனும், ரேவதியும்.

“போய் முகத்தை கழுவிட்டு வா. உங்கப்பாவுக்கு கொள்ளு துவையலும், மிளகு ரசமும் வேணுமாம்…”

“அம்மா வைக்கிற அதே பக்குவம் எனக்கு தெரியாதே?…” என்று அவள் கை விரித்தாள்.

பார்கவி பெண்களுக்கு சமையலையும் ஓரளவிற்கு கன்று தந்திருந்தார் முனீஸ்வரனின் உத்தரவின் படி.  சந்தியா விரும்பியே செய்வாள். சந்நிதி தான் சாப்பிடுவதை தானே சமைப்பதா என நினைப்பாள். கற்றுக்கொள்ள வேண்டுமே என்கிற கட்டாயத்தின் பேரில் ஓரளவிற்கு தெரியும். அவ்வளவே.

“சாப்பிட தெரியும்ல. நான் செய்யற பக்குவம் உன் அப்பா சாப்பிடற அளவுக்கு இருக்காது. இருந்தாலும் நீ டெஸ்ட் பீஸ். வந்து டேஸ்ட் பார்த்துட்டு கூட குறையா இருந்தா சொல்லு, சரி பண்ணிடலாம்…”

“பட்டி,டிங்கரிங் வேலை தானேம்மா?…” என ரேவதியும் கிண்டல் பேச,

“இம்புட்டு நேரம் வீட்டையே பிரிச்சு போட்டுச்சு உன் அழுகை. இப்ப வந்து பேச்சை பாரு. உதை விழும் ராஸ்கல்…” என்றவர்,

“நல்லா வைக்கிற உன் அம்மாவையே வாங்குவாங்குன்னு வாங்குவார் உன் அப்பா. இல்லாத குறையெல்லாம் கண்டுபிடிப்பார். இன்னைக்கு நான் காதுல பஞ்சை வச்சுட்டு தான் போகனும்…” என புலம்பிக்கொண்டே செல்ல அவருடன் பின்னே சென்ற சந்நிதியின் முகத்திலும் சிரிப்பு.

“உங்க சமையலை ஓரளவு அப்பா கணிச்சுட்டார் போல சித்தி. அம்மாவுக்கு முடியாதப்போ நீங்க தான் சமையல் செஞ்சீங்க. அப்பா எதுவுமே சொல்லலையே…”

“அம்மாடியோ, இந்த புரளியை யார்ரா கிளப்பிவிட்டது? ஏய், நான் எங்க சமைச்சேன்? எல்லாம் உன் பெரியம்மா தான். நான் கூடமாட நின்னேன். அவ்வளோ தான். போச்சு இன்னைக்கு மொத்தமா காலி போல…” என்று புலம்பல் இன்னமும் அதிகமாக சந்நிதியின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.

இப்படியே பேச்சுக்களுடன் சந்நிதியின் கவலையை மறக்கடித்து பேசி சிரித்தபடி சமையலை முடித்துவிட்டு வர ரேவதி மெதுவாய் கீழே இறங்கி வந்துவிட்டாள் கம்பனின் கையை பிடித்துக்கொண்டு.

“உனக்கு இதே வேலையா போச்சு, மேலையும் கீழேயுமா போக வர. எனக்கு நீ படி ஏறும் போதும், இறங்கும் போதும் நெஞ்சு பதறுது. பேசாம கீழ் ரூமை எடுத்துக்கோன்னா கேட்கறதே இல்லை. இனி நீ மாடிக்கொண்ணும் போக வேண்டாம்…”

“ம்மா, அத்தை வராங்களாம். இப்ப தான் போன் பண்ணிருந்தாங்க…” என ரேவதி சொல்ல,

“என்ன உன் மாமியாரா?…”

“ஆமா, இன்னும் பத்து நிமிஷத்துல வந்திருவாங்களாம். என்ன சமையல் செஞ்சிருக்கீங்க?…”

“எல்லாம் சாப்பிடற மாதிரி தான்…”

“ம்மா….” என ரேவதி பல்லை கடிக்க,

“பின்ன ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கிற? வெள்ளிகிழமை என்ன செய்வாங்களாம்? சாம்பார், கூட்டு, பொரியல், உன் பெரியப்பாவுக்கு ரசமும், துவையலும். கூடவே வடகம், அப்பளம். போதுமா இல்ல வேற ஏதாவது?…”

“போதும் தான். ஆனா இன்னும் ஒன்னு. கொஞ்சமா ரவை பாயாசம் செஞ்சிடுங்களேன். அத்தைக்கு ரொம்ப பிடிக்கும்…” என்று ஆடர் போட,

“நினைச்சேன். சரி இரு. நான் போய் செஞ்சிட்டு வரேன்…” என்றவர்,

“போய் உடுப்பை மாத்தி தலையை லேசா சீவிக்க…” என்று வேறு சொல்லிக்கொண்டு செல்ல,

“எல்லாம் ஏற்கனவே மாத்தியாச்சு.சீவியாச்சு…” என்ற ரேவதி சந்நிதியையும் போய் வேறு சுடிதார் மாற்றி வர சொல்ல அவள் இதுவே போதும் என்றுவிட்டாள்.

வந்தது ரேவதியின் மாமியார் மட்டுமல்ல கூடவே அம்பிகாவும் தான்.

வசீகரனின் தாய் அம்பிகா.

Advertisement