Advertisement

“அப்பா அவர் போன்ல பேசிட்டு இருக்காரு. நான் அப்பறமா சொல்லிவைக்கறேன். நீங்க தப்பா நினைக்காதீங்க. அவர் சும்மா தான் பேசியிருப்பார்…” சந்தியா கையை பிசைய,
“அது, அது ஒன்னும் தேவையில்ல. ஏதோ வேலை டென்ஷன்ல பேசிட்டாரு போல. நா மறந்துட்டேன். நீ ஒன்னும் கேட்டுக்க வேணாம். அவருக்கு குடிக்க எதாச்சும் கொண்டுபோய் குடு. ரொம்ப கோவமா இருக்காரு…” என்று பெருந்தன்மையாக சொல்ல ஹப்பாடா என ஆனது சந்தியாவிற்கு.
ஒரு இளநீரை வெட்டி வாங்கிக்கொண்டு கணவனிடம் செல்ல இவள் வருவதை பார்த்து அவனும் தள்ளி தள்ளி சென்றான் போனை பார்த்துக்கொண்டே. மற்றவர்கள் பாரா இடத்திற்கு சென்றதும் தான் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நிற்க,
“உங்களை பிடிக்க எவ்வளோ நேரம். போய்ட்டே இருக்கீங்க? பின்னால நான் வரது தெரியும் தானே?…” சந்தியா படபடக்கவும் போனை பாக்கெட்டில் போட்டவன்,
“ஏன் தெரியாம நல்லாவே தெரியும். என்னவாம் இப்ப அதுக்கு? இங்க தான் யாருமில்லை. அதான் இங்கவந்தேன்…” என சொல்லி அவளின் தோள்களில் தனது கையை மாலையாய் போட்டு அருகில் இழுத்துக்கொள்ள,
“ப்ச் விடுங்க. இந்தாங்க இளநீர்…” என நீட்ட,
“எதுக்குங்க மேடம்?…” என்றான் சிரிப்புடன்.
“நீங்க கோபமா யார்ட்டையோ பேசிட்டு இருந்தீங்க. அதான் அப்பா உங்களுக்கு குடிக்க குடுக்க சொன்னாங்க…” அப்படியே ஒப்பிக்க,
“நான் யார்ட்டையும் பேசலையே…” என்றான் கள்ளச்சிரிப்புடன்.
“இப்ப நீங்க தானே யாரையோ லாடம் கட்ட, சுடன்னு பேசிட்டு…” குழப்பமாய் அவள் பார்க்க,
“அது சும்மா தான். யார்க்கிட்டயும் பேசலை. உன் அப்பாவுக்கு தான் ஒரு போக்கு காட்டினேன். இன்னைக்கு அவர் பண்ணின அழிச்சாட்டியம் ரொம்பவே அதிகம். அதான் போற போக்குல ஒரு காட்டு காட்டினேன்…”
“அட கடவுளே? இதெல்லாம் டூ மச். அப்பாவை போய்…” என்று வாயை பிளந்த மனைவியை ரசனையாய் எதிர்க்கொண்டவன்,
“கோவிலுக்கு வேண்டுதலுக்கு வந்தவங்கட்ட பிஸியா இருக்கற கடவுளை ஏம்மா டிஸ்டர்ப் பண்ணி நம்மக்கிட்ட டைவர்ட் பன்ற?…” என்று சரசமாய் அவளுடன் இழைந்துகொண்டே கேட்க,
“ரொம்பத்தான். கோவில்ல வச்சு பேச்சை பாரு. நான் போறேன்…” என்று அவனிடமிருந்து விலக அவளின் நெற்றியில் மென்மையாய் முட்டியவன்,
“கடவுள் கூட குடும்ப சகிதமா தான் கடவுளா இருக்கார் மேடம்…” என்று அவளுடன் உரசியபடி மற்றவர்களை நோக்கி சென்றான்.
“நீ நடத்து தல. பாரு என்னால இங்க இருந்து நகலவே முடியலை…” வசீகரன் பெருமூச்சு விட,
“பொறுக்கலையாடா உனக்கு? நானே எப்பவாச்சும் தான் இப்படி போக முடியுது? உனக்கு அப்படியா? நீ நினைச்சாலே அபிமா உனக்கு உண்டாக்கி குடுத்துடுவாங்க அந்த சுட்சுவேஷனை. நீயெல்லாம் பேசவே கூடாது…” விஷ்வா கேலி பேச,
“சமூகம் பொறுமை பொறுமை…” என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க கிளம்புவதை மறந்து அங்கும் பெரிய மாநாட்டை நடத்தினார்கள் இளையபட்டாளம்.
“என்ன இது எங்க போனாலும் கூடி கூடி நிக்கறது? கிளம்பனும்னு மனசே இல்லியா?…” முனீஸ்வரன் குதிக்க நீதிமாணிக்கம் தலையில் அடித்துக்கொண்டார்.
“எங்க போனாலும் கால்ல வெந்நீர் ஊத்தின மாதிரி பறக்கறான்…” என்று குகனிடம் புலம்ப,
“அட விடுங்கண்ணே, எப்பவாச்சும் தான் இப்படி ஒண்ணா போக முடியுது. போற நேரத்துல இந்த மாதிரி சந்தோஷங்களை இழக்க முடியுமா? இல்ல இதுக்குன்னு கிளம்பி வர எல்லாருக்கும் தோதுப்படுமா?…” அம்பிகா சொல்ல,
“அதுக்கில்லம்மா ஊர்ல ஆயிரம் சோலி இருக்குல…” முனிஸ்வரன் பம்மி பேச,
“அது என்னைக்கு தான் இல்லாம இருந்திருக்கு? எப்பவும் இருக்கறது தானே? இன்னைக்கு செய்யறதை நாளைக்கு செஞ்சுக்க போறோம். அப்படியே விடப்போறதில்லை தானே? விடுங்க சின்ன பிள்ளைங்க, அப்படித்தான் சிரிப்பும் கும்மாளமுமா இருப்பாங்க. நாமளும் சேர்ந்து அவங்க சந்தோஷத்தை பங்குபோட்டுக்கனும்…”  என சொல்லியவர் நிதானமாக மற்றவர்களுடன் பஸில் அனைத்தையும் எடுத்துவைக்க அவர்களுடன் முனீஸ்வரனும் இணைந்துகொண்டார்.
பின் மாலை மயங்கும் நேரம் தான் அங்கிருந்தே கிளம்பினார்கள். அங்கிருந்து பிரியவே மனமில்லாததை போல அடுத்த விசேஷம் யாருக்கு என்று பேசி முடிவெடுத்து சென்றனர்.
ஒன்றரை வயதாகிவிட்டது வசீகரன் சந்நிதி குழந்தைகளுக்கு. இருவரும் வாழ்க்கையின் அழகியலை உணர்ந்து வாழ்ந்தனர்.
அவனை போல அவளை யாராலும் நேசிக்கவும் முடியாது, அவளை போல அவனின் நுண்ணுணர்வுகளை எவராலும் வாசிக்கவும் என்னுமளவில் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை அதி அற்புதமென நகர்ந்துகொண்டிருந்தது.
இரு குழந்தைகளும் உறங்கி இருக்க வசீகரனுக்காக காத்திருந்தாள் சந்நிதி. ஏற்கனவே சொல்லியிருந்தான் வர தாமதமாகும் என்று.
கீழே அவன் வந்துவிட்ட சத்தம் கேட்க எழுந்து செல்ல முடியாது குழந்தைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். தனியே பிள்ளைகளை விட்டு கீழே சென்றால் அம்பிகா ஒரு பிடி பிடித்துவிடுவார் அதன்பொருட்டே மேலேயே இருந்துகொண்டாள். 
நான்குபேர் தாராளமாக உறங்கும் மிகப்பெரிய கட்டில். சுவற்றை ஒட்டி போடப்பட்டிருக்க மகனை சுவற்றோரம் தலையணை வைத்து முட்டிவிடாமல் படுக்க வைத்திருந்தவள் அடுத்து மகளையும் அதற்கடுத்து தானும் என படுத்திருந்தனர். 
அவன் சாப்பிட்டு முடித்து மேலே வரும் சப்தம் கேட்கவும் உறங்குவதை போல பாவனை செய்ய அறைக்குள் நுழைந்தவன் நிஜமாகவே சந்நிதி உறங்கிவிட்டாளோ என்று நினைத்து சப்தம் எழுப்பாமல் இரவு உடையை எடுத்து அங்கேயே மாற்ற,
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன் பசங்க இருக்கும் போது சேஞ்ச் பண்ணாதீங்கன்னு…” என்று பட்டென்று சந்நிதி எழுந்தமர்ந்து அவனை முறைக்க,
“ஹேய் ஸ்பைசி அதான் தூங்கறாங்கல. ரொம்ப பண்ணாத…” என வேண்டுமென்றே அங்கேயே மாற்றினான். எழுந்து வந்து அவனின் முதுகில் அடித்தவள்,
“எப்பவுமே ஏடாகூடம் தான். சொல்றதை கேட்கறதே இல்லை. வேணும்னே பன்றீங்க…” என்று அவனை சராமாரியாக அவள் மொத்த சிரிப்புடன் தனக்குள் வளைத்து நிறுத்தியவன்,
“நான் வரும் போது தூங்கற மாதிரி ஆக்ட் பண்ணாதன்னு நானும் எத்தனை தடவை உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ மட்டும் கேட்கறியா ஸ்பைசி…” என அவளின் மூக்கை பிடித்து ஆட்ட,
“முதல்ல நீங்க கேளுங்க. அடுத்து நான் கேட்கறேன்…”
“ம்ஹூம், நீதான் பர்ஸ்ட்…”
“ம்ஹூம் நீங்க தான் பர்ஸ்ட்…”
“பாரு இப்ப கூட கேட்க மாட்டேன்ற. உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், நான் வீட்டுக்கு வரப்ப உன்னை பார்க்கனும்னு. நீ கேட்கறதே இல்ல. பாதி நாள் விளையாட்டு. அதான் நானும் இப்படி பன்றேன். கேட்டா கோபம் மட்டும் வருது. இத தான் சொல்றேன் மினியேச்சர் முனீஸ்ன்னு…”
“வாட்?…” என்று அவள் இடுப்பில் கை வைத்து முறைக்க,
“நிதி, இப்பவும் உன் வாட் எனக்குள்ள ஏகப்பட்ட வாட்ஸ் உண்டுபண்ணுது. நானும் அதை கண்டுபிடிக்கலாம்னு பார்க்கறேன். முடியத்தான் இல்லை…” என்று அவளின் கூந்தலில் முகம் புதைத்தவன்,
“இப்பலாம் நைட்ல நைட் ட்ரெஸ் போட்டுக்கற. நான் வரவரைக்கும் புடவை கட்டினா என்னவாம்?…” சிணுங்கலுடன் அவளுள் புதைய,
“அதுக்கு என் பேச்சை நீங்க கேட்கனும். இன்னைக்கு இருக்கும் பழக்கம் தான் என்னைக்கும் வரும். நாளைக்கு குழந்தைங்க இப்படி ட்ரெஸ் மாத்தறது தப்பில்லைன்னு நினைக்க நாமலே காரணமா இருந்துட கூடாது…” 
அவனின் அணைப்பில் மதிமயங்கி போனாலும் வார்த்தைகள் கறாராய் வந்துவிட்டிருந்தது.
“இப்ப கூட ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் நீ…” என்றவன் அங்கிருந்த சோபாவில் அவளுடன் சரிந்தான். அதற்கு மேல் முன்னேறவிடாமல் அவளின் மகள் சிணுங்கலுடன் புரண்டு படுக்க,
“சுத்தம், அவ முழிச்சுட்டா இனி நடந்த மாதிரிதான்…” என்று சொல்லிக்கொண்டே சந்நிதியை தூக்கிச்சென்று மகளருகே கிடத்தியவன்,
“நீ இவளை பாரு, நான் கொஞ்சம் வேலை பார்க்கனும்…” என சிரிப்புடன் சொல்லிவிட்டு மகளையும் கொஞ்சிவிட்டு தனது லேப்டாப்புடன் சோபாவில் அமர்ந்தான். சிரிப்புடன் மகளை தன்னோடு அணைத்துக்கொண்டவள் அவளுக்கு தட்டிக்கொடுத்து உறங்க வைத்தாள்.
சிறிது நேரத்தில் தானும் உறங்கிபோக தன்னை அணைத்தபடி அவளின் முதுகோடு ஒண்டிக்கொண்டு படுத்துக்கொண்டான் வசீகரன். அதில் அவளின் உறக்கம் கலைய,
“ஹ்ம்ம், நிதி. தூங்கு…” என தட்டிகொடுத்துக்கொண்டே தானும் உறங்கிவிட உதட்டில் நிரந்தரமாய் குடியேறிய புன்னகையுடன் அவனின் புறம் திரும்பி அவனின் தலையை கோத,
“ம்ஹ்ஹூம் நோ நீட். நீ தூங்குடா…” என்றான். ஆனாலும் அவளின் கையை விலக்கவில்லை. அதிலேயே தெரிந்துபோனது அவனுக்கு தேவையாக இருந்தது என்றும், ஏதோ டென்ஷனில் இருக்கிறான் என்றும். 
“என்ன யோசிக்கறீங்க? நீங்க இன்னும் தூங்கலை எனக்கு தெரியும்…” என சொல்ல விழி திறக்காமல் அவளை தன் நெஞ்சோடு தாங்கிக்கொண்டவன் இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.
“மை ஹாட் வொய்ப், என்ன தெரியுமாம்?…” அவள் பதில் சொல்லாமல் இருக்க கண்ணை திறந்து அவளை பார்த்தவன்,
“திரும்பவும் ஷூட் போகனும் நிதி. ஆனா அங்க தனியா போக விருப்பமில்லை…”  என்று அவன் சொல்லியதிலேயே தெரிந்துபோனது அவளுக்கு.
“கூர்க்?…” 
“ஹ்ம்ம்…” என்றவனின் பெருமூச்சின் அனல் அவளை சுட,
“போலாமே. சேர்ந்து போகலாம்…” இலகுவாய் அவள் சொல்லியதும் அதனை எதிர்பாராதவன்,
“நிஜமாவா? நம்ம பேபீஸ்?…”
“பேபீஸ் நம்மோட கூர்கை என்ஜாய் பண்ணட்டும்…” கண்சிமிட்டி அவள் சொல்ல,
“ஆர் யூ சூர்?…” 
நம்பமுடியாமல் அவன் கேட்கவும் அவனை தாண்டிக்கொண்டு கையை நீட்டியவள் தன்னுடைய மொபைலை எடுத்து அம்பிகாவிற்கு அழைத்துவிட்டாள். சிரிப்புடன் அவளையே அவன் பார்த்திருக்க,
“அத்தை நானும் அவங்களும் குட்டீஸ் கூட கூர்க் போகலாம்னு நினைக்கிறோம். அவங்களுக்கு அங்க ஷூட் இருக்கு போல…” என நிதி சொல்ல,
“ஹ்ம்ம், கிளம்புங்க கிளம்புங்க. கிளம்பும் போது கதவை கதவை நல்லா பூட்டிட்டு போ. நான் எழுந்து திறந்துப்பேன். புள்ளைங்க பத்திரம்…” அம்பிகா சொல்லவும்,
“அத்தை நாங்க எப்பன்னு இன்னும் முடிவு பண்ணலை…” 
“அப்ப டிஸைட் பண்ணிட்டு சொல்லு. எப்ப போனாலும் கதவை பூட்டிடு. இப்ப போனை வை…” என்று வைத்துவிட படுத்திருந்தவன் எழுந்தமர்ந்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க அவனை முறைத்தவள் தலையணையை கொண்டு அவனை தாக்கினாள்.
“அம்மாவை தெரிஞ்சும் இந்நேரம் கால் பண்ணினா நாம என்னவோ இப்பவே கிளம்பறதா தானே நினைப்பாங்க…” என சிரித்துக்கொண்டே அவளின் அடிகளை வாங்கிக்கொள்ள அடிப்பதை நிறுத்தியவள்,
“எவ்வளோ ஸ்வீட்ல அத்தை. அத்தையை மாதிரி ஒரு அம்மாவா நான் இருக்கனும்னு அவ்வளோ ஆசை எனக்கு…” என்றாள் கண்களில் கனவு மின்ன,
“அம்மா அம்மாவை மாதிரி இருக்கட்டும். நீ உன்னை மாதிரியே இரு. நம்ம குட்டீஸ் எல்லாரையும் அப்சர்வ் பண்ணி அவங்கள மாதிரி வளரட்டும்…” என்றவனின் தோளில் சாய்ந்துகொண்டவள் அவனின் விரல்களுடன் தன விரல்களை கோர்த்துகொண்டாள்.
இருவரையும் தித்திப்பாய் ஒரு மௌனம் ஆட்கொள்ள உள்ளத்தின் நிறைவுடன் உறங்கிபோயினர்.  
அடுத்த இரண்டு நாட்களில் கூர்க். 
வசீகரன் சந்நிதி மட்டுமல்லாது, விஷ்வா சந்தியா, சூர்யா அனு, புகழ் தர்ஷினி என்று ஒரு கும்பலாக கிளம்ப,
“இது என் லிஸ்ட்லையே இல்லையே…” என திகைத்துப்போன வசீகரனிடம்,
“அத்தை ஏற்பாடு தான். புள்ளைங்களோட போறோம், அவங்களும் வந்தா ஜாலியா இருக்கும்னு ஏற்பாடு…” சந்நிதி சொல்ல,
“ம்மா…” என்று அவன் கத்திய கடத்தல் அம்பிகாவிற்கே கேட்டிருக்கும்.
அவர்களின் கொண்டாட்டமும் ஆராவாரமும் அந்த வாரம் முழுவதும் கூர்க்கையே ஆர்ப்பரிக்க செய்தது.
மிகையில்லா சந்தோஷமும் மகிழ்ச்சியும் அந்த குடும்பத்திற்கே உரியதாய் மாறிப்போனது தான் விந்தையிலும் விந்தை.
இந்த மகிழ்வு என்றென்றும் அவர்கள் உள்ளங்களில் பரவ அந்த சந்தோஷம் அவர்களின் வாழ்வில் என்றும் நிரந்தரமாய்.  

Advertisement