Advertisement

தீண்டல் – 35
          வசீகரன் சூர்யாவின் வீட்டில் முறைப்புடன் அமர்ந்திருந்தான். அனுவுக்கு பேசி பேசி தொண்டையே வரண்டதை போல் இருந்தது. எத்தனை பேசியும் மசிவேனா என்னும் விதமாயும், என்ன ஆனாலும் போக கூடாது என்ற பிடிவாதமும் அவனின் முகத்தில் தெரிய வசீகரன் பாவம் போல் பார்த்தான்.
“இவன் என்ன குரளிவித்தை காமிச்சாலும் மடங்கிடாதடா சூர்யா” நண்பனின் தோற்றத்தை பார்த்து மயங்கிய மனதை கட்டுப்படுத்தி பார்க்க,
“நீ இல்லாம எப்படிடா காது குத்த முடியும்?…” வசீகரன் மீண்டும் ஆரம்பிக்க,
“நீ எங்க வேணும்னாலும் குத்திக்க. இப்ப எனக்கு காது குத்தாத. நான் வரமாட்டேன்…”
“இனி அப்படி நடக்காம நான் பார்த்துக்கறேன்…”
“இதுவரைக்கும் நடந்ததை பார்த்துட்டு தான இருந்த. அதுவும் பிரபு தல தில்லுன்னு சொல்லும் போதெல்லாம் எனக்கு ஜிவ்வுன்னு ஆகிடும். என்னத்தையாவது நானே ஏடாகூடமா பண்ணிடுவேன்…” சூர்யா சொல்ல வசீகரனும் அனுபமாவும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனை பார்த்தனர். வாசலில் பைக் வந்த சத்த கேட்க,
“என்ன இன்னுமா ஐயா கிளம்பலை?…” விஷ்வாவும் வந்துவிட,
“போலீஸ்க்கார்…” சூர்யா அவனை வரவேற்கும் விதமாய் எழுந்து நிற்க,
“கொஞ்ச நேரம் முன்னாடி தான். உன்னை கூப்பிட வசீ வந்திருக்கான்னு வீட்ல சொன்னாங்க. அதான் நானும் புகழும் கிளம்பி வந்தோம். நீ என்னன்னா ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு சொல்லிட்டு இருக்க…” என்றவன்,
“அனு நீ போய் பேக் பண்ணு…” என,
“நான் நேத்தே பேக்கிங் முடிச்சுட்டேன்…” அனு வேகமாய் தங்கள் பேக்கை கொண்டுவந்து காண்பிக்க சூர்யா பல்லை கடித்தான்.
“வசீ கார்லயா வந்த?…” விஷ்வா கேட்க,
“ஹ்ம்ம், இவனை மரியாதையா கூட்டிட்டு போகலாமேன்னு அதுல தான் வந்தேன்…” சூர்யாவை முறைத்துக்கொண்டே சொல்ல,
“அப்பறம் என்ன இன்னும் பேசிட்டு. தூக்குடா செல்லத்தை. துள்ளிக்கிட்டு இருக்கறவன அள்ளிக்கிட்டு வரதை விட்டுட்டு சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கான்…” என்று சூர்யாவின் பக்கம் வந்தவன் தன்னிடம் இருந்த பைக் கீயை தூக்கி புகழிடம் போட்டவன்,
“ புகழ் பைக்கை எடுத்துட்டு வா…” என சொல்லி வசீகரனிடம் கண்ணை காண்பிக்க இருவருமாய் குண்டுகட்டாக சூர்யாவை தூக்கி காருக்கு சென்றனர். சிரித்தபடி அனு வீட்டை பூட்டிவிட்டு வந்து காரில் ஏற விஷ்வா அவனுடன் பின்னால் அமர்ந்து மீசையை முறுக்கிக்கொண்டு பார்த்தான்.
“யாருக்கிட்ட?…” என சொல்ல,
“யாருக்கிட்டயும் வேண்டாம்னு தானடா வரமாட்டேன்னு சொல்றேன் விடமாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்க. எனக்கு நேரமே சரியில்ல…” என்று கத்தியவன் அனு அவனருகே வந்து அமர்ந்ததும் காரை கிளப்பிய வசீகரனை பார்த்து,
“ஏன்டா வருஷத்துக்கு நாலு விசேஷம் வைக்கறீங்க உங்க வீட்டுல. நாட்டுல விலைவாசி இந்த ஏறு ஏறும் போது தேவையாடா?…” என கடுகடுக்க,
“ஹா ஹா ஹா, உனக்கும் மாம்ஸ் முனீஸ்க்கும் பூர்வஜென்ம பந்தம் போலடா…” வசீகரன் கேலி பேச,
“அந்த பூர்வத்தை தான் மனப்பூர்வமா வேண்டாங்கறேன். படுத்தா தூக்கம் வரமாட்டிங்குதுடா. இதோட முத்தம் வேற குடுக்க போயிருக்கேன்…” என்றபடி திரும்பினால் அனு அப்படி முறைத்தாள்.
“பார்த்தியா இதுக்கு தான் சொல்றேன். அங்க உனக்கு கோபம் வரும் போக வேண்டாம்னு…”
“கம்முன்னு போற இடத்துல போனோமா வந்தோமான்னு இல்லாம உங்களை யாரு குடிக்க சொன்னா. குடிச்சிட்டு இல்லாத சலம்பல் பன்றது. பண்ணிட்டு இருக்கறவங்களை ப்ளேம் பன்றது. முதல்ல உங்க தப்பை ஒதுக்கங்க…”
“விடு அனு அது விட்ட குறை தொட்ட குறையா இருக்கும். மனசுக்குள்ள அந்தளவுக்கு மாம்ஸ் மேல லவ்ஸ் போல இவனுக்கு. வெளில தான் பயந்தாமாதிரி பம்மிட்டு இருக்கான். சரக்கு உள்ள போனா அவர் இவனை பார்த்து தெறிச்சு ஓடறார்…” விஷ்வாவும் கேலி பேச,
“உங்களுக்கு பொழுது போக நான் தான் கிடைச்சேனா?…”
“நீ இல்லாம எந்த பங்க்ஷன் வீட்ல முழுமையாகிருக்கு?…” விஷ்வா கேட்க,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை…” சூர்யா பொறும அவனின் பேச்சுக்கள் அங்கே எடுபடாமல் போக விஷ்வாவும் வசீகரனும் பேசிக்கொண்டே வர வீடு வந்துவிட்டது.
வாசலில் ஒரு பஸ் நிற்க அதை பார்த்துக்கொண்டே வந்த சூர்யா வழியில் வந்த முனீஸ்வரன் மேல் மோதி கீழே விழ இருந்தவரை தாங்கி வேறு பிடித்துக்கொண்டதும் தான் அவர் முனீஸ்வரன் என்பதையே கண்டான்.
விஷ்வாவும் புகழும் பார்த்து சிரிப்பை அடக்கி நிற்க பிரபு இதை புகைப்படமாய் சேமித்துக்கொண்டான்.
“தம்தன தம்தன தாளம் வரும்…” என வசீகரன் பாட மற்றவர்கள் சேர்ந்து சத்தமில்லாமல் கோரஸ் பாட, 
“கண்ண என்ன பின்னாடியா வச்சிருக்க? பார்த்து வர தெரியாதா?…” என்று அவர் பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டு நிமிர்ந்து நின்று சூர்யாவை முறைத்தார். 
“அப்பா இவனை பிடிங்க. அப்ப இருந்து உங்களை கை காண்பிச்சுட்டே இருக்கான்…” என சந்நிதி வந்து அவளின் குழந்தையை கொடுக்க,
“பின்னாடியே உன் பொண்ணும் உன் அப்பாட்ட வர அழ போறா. எல்லாத்துக்கும் போட்டி இப்பவே. சொல்ற பேச்சே கேட்கமாட்டேங்குதுக…” ராதா சொல்ல,
“இப்ப நீ சொன்னதும் கீழுன்னு அதுங்க கேட்டு வேலையை பார்த்துருமாக்கும்? அதுங்களுக்கு புரியும் போது சொல்லிக்க. இப்ப என்னத்துக்கு?…” என்று ராதாவிடம் எகிறிவிட்டு முனீஸ்வரன் சந்நிதியை பார்த்து,
“பாப்பா அழுதா கொண்டுவா. அவளை அதட்டாம…” என மகளையும் பேசிவிட்டு பேரனுடன் வாசலுக்கு வேடிக்கை காண்பிக்க சென்றார்.
“இவர் எப்பவும் வீச்சருவாளும் வெட்டுக்கத்தியுமா தான் திரிவாரோ? டேய் இப்ப விட்டா கூட நான் ஒரே ஓட்டமா ஓடிடுவேன். மனசாட்சியோட பாருங்கடா…” சூர்யா அழாதாகுறையாக கேட்க,
“தல நம்மக்கெல்லாம் இதெல்லாம் தூசுமாதிரி. நீங்கலாம் அந்த காலத்துல அப்படி அசால்ட்டு பண்ணுவீங்களாமே? அண்ணன் சொல்லிருக்கார். இந்த காதுகுத்துல கலக்கறோம் தட்டி தூக்கறோம்…” பிரபு சில்லாகிக்க,
“முதல்ல உன்னை நான் முடிக்கறேன்டா. இப்படி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கறீங்க…”  அவனை மொத்த பார்க்க,
“சூர்யா வர எவ்வளோ நேரம்? உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம். போய் பஸ்ல ஏறு. இப்ப கிளம்பினா தான் நைட் கோவிலுக்கு போக முடியும்…” என அம்பிகா வந்து சொல்லவும் சத்தமின்றி பஸில் ஏற முன்னால் சென்று அமர்ந்துகொண்டான்.
கம்பன், நீதிமாணிக்கம், முனீஸ்வரன், விஷ்வா, பிரபு, குகன் என்று குடும்பமாய் ஏறி அமர்ந்ததும் கடைசியாக வந்து ஏறிக்கொண்டார் முனீஸ்வரன். அவர்களுடன் இன்னும் சில உறவுனர்களும். அதனால் இருக்கைகள் சரியாக இருந்தது.
ட்ரைவருக்கு பக்கவாட்டில் முதல் ஸீட்டில் சூர்யா அமர்ந்திருக்க வேறு இருக்கையில் அமர பிடிக்காது முன்னால் இருந்த இடத்திற்கு செல்ல அங்கே சூர்யா அமர்ந்திருக்க அவனுக்கு முன்னால் சென்ற அமர்ந்ததும் பயந்துபோனவன்,
“இவர் என்னடா இப்படி சுத்தி சுத்தி வந்தீகன்னு படுத்தறாரு?” என்று நொந்துக்கொண்டே அனுவின் அருகில் வந்து பின்னால் அமர்ந்தான்.
அனைவருக்குமே அவனின் செயலில் சிரிப்பு வர அந்த பயணம் ஆட்டம் பாட்டமுமாக ஆரம்பித்தது. சும்மாவே அனல்பறக்கும். அத்தனை பேரும் ஒன்றுகூடிவிட்டால் கொண்டாட்டத்திற்கு பஞ்சமேது?
அது வசீகரன் சந்நிதியின் குழந்தைகளுக்கு மொட்டைபோட்டு காதுகுத்தும் வைபவம். வசீகரனின் குலதெய்வம் கோவிலுக்கு அனைவரும் சென்றுகொண்டு இருக்கின்றனர். 
வசீகரன் சந்நிதிக்கு இரட்டை பிள்ளைகள். பெண் ஒன்றும் ஆண் ஒன்றும் என குழந்தைகள். ஆருஷ், அவந்திகா.  பெண்குழந்தை அப்படியே தகப்பனை கொண்டு பிறந்திருந்தது. ஆண்குழந்தை சந்நிதியை கொண்டு பிறக்க முனீஸ்வரன் கொண்டாடி கொண்டாடிதீர்த்தார்.
சந்தியாவின் மகன் வர்னேஷ் முனீஸ்வரனை கண்டாலே நெருங்கமாட்டான். ஏனோ சிறிதும் ஒட்டுதல் அவரிடத்தில் இல்லவே இல்லை. அப்படி ஒரு பயம். இவரின் குரல் கேட்டாலே வீறிட்டு அழ தன்னால் பேரன் அழுகிறானே என்று தூரம் நின்றே பார்த்துச்செல்வார். தன்னை பார்த்து மிரளும் பொழுதெல்லாம்,
“உன் மூத்த மாப்பிள்ளை சொல்லி வளர்த்திருப்பாரா இருக்கும். அதான் என்னை கண்டாலே ஆகறதில்ல…”  என பார்கவியிடம் புலம்பி தள்ளுவார். பார்கவிக்கு பார்க்கவே பரிதாபமாக இருக்கும் அவரின் பரிதவிப்புகள்.
ஆனால் சந்நிதியின் குழந்தைகளோ அப்படியே நேர்மார். அனைவரிடமும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அதனாலேயே மூத்த பேரனிடம் அனுபவிக்காத அத்தனையும் இரண்டாம் பெண்ணின் பிள்ளைகளிடம் அனுபவித்து வாழ்ந்தார்.
பெரியவர்கள் அனைவரும் இளையவர்களின் கலாட்டாவில் மகிழ்ந்திருக்க புகழும் அவன் மனைவி தர்ஷினியும் சேர்ந்து நடனமாடி அனைவரையும் ஆச்சர்யமூட்டினர். இதில் அபிராமிக்கு அத்தனை பொறாமை. 
“உங்க சித்தப்பா இந்நேரம் நான் ஆடியிருந்தா அவரும் ஆடியிருப்பாரு. இப்ப சின்ன மருமகளை மட்டும் திரும்பி பார்த்து ரசிக்கிறத பாருங்க…” 
“நீயும் ஆடேன். அவரும் ரசிப்பாரு. நீ ஆடாமலே என்கிட்டே ஆடி என்ன செய்ய?…” புவனும் அவளை தங்களுக்குள் இழுக்க அவளுக்கென்ன ஆசை இல்லாமலா? அபிராமியின் பெற்றோரும் வந்திருக்க ஆடினால் அவ்வளவு தான் தன் தாய் உண்டில்லை என்று ஆக்கிவிடுவார் என்றே அடக்கிவாசித்தாள்.
சந்தியாவும் சந்நிதியும் அனுவுடன் எப்பொழுதும் போல கைத்தட்டி அவர்களை உற்சாகமூட்டிக்கொண்டிருந்தனர்.
சூர்யா தான் அசையவே இல்லை. அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல இருக்க விஷ்வா பிரபுவிற்கு கண்ணை காண்பிக்க அடுத்த நிமிடம் அனைவரின் மொபைலிலும் சூர்யா முனீஸ்வரனை தாங்கிபிடித்த போட்டோ வலம்வர அதை பார்த்த தர்ஷினி,
“செம்ம ஸீன் அண்ணா. உங்களுக்குள்ள இப்படி ஒரு ரெமோ ஒளிஞ்சு இருக்கறது தெரியாம போச்சே?…” என்றதும் என்னவென வாங்கி பார்த்தவன் கோபத்துடன் பிரபுவை தேட,
“இங்க இருக்காரு அண்ணா…” ரேவதி அவனை காண்பித்து தர,
“அடேய்…” சூர்யா பொங்க,
“எங்க தலைக்கு தில்ல பார்த்தியா?…” வழக்கமாக அவன் சொல்லவும் அனைவருக்குமே சிரிப்பு தான். பெரியவர்களுக்கு அவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ஆனாலும் உங்க அன்புக்கு அளவே இல்லாம போய்டுச்சு…” புகழ் கேலி பேச,
“சூர்யா அனுவை லவ் பண்ணலையாம். மாம்ஸ் தான் சூர்யாவை லவ் பன்றாராம்…” என வசீகரன் சொல்லி விஷ்வாவுடன் ஹைபை அடிக்க அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் ஆர்ப்பரித்தது.
ஓவென்ற கூச்சலுடன் ஹே ஹே ஹே என்று கத்த கோபத்தை விடுத்து சூர்யாவும் அவர்களின் கலாட்டாவில் இணைந்துகொண்டான். இடையையே சாப்பிட, டீ காபிக்கு, இயற்கை அழைப்புகளுக்கு என்று அங்கங்கே நிறுத்தி நிறுத்தி செல்ல இரவாகிவிட்டது திருச்சியை தாண்டி அவர்களின்  கிராமத்திற்கு.
வழக்கம் போல இந்த முறை ஓர் பெரிய வீட்டை பார்த்துவைத்திருக்க சொல்ல அதன்படி அனைவரும் அங்கே சென்றுவிட்டனர் இரவு உணவிற்கு. சாப்பிட்டு முடித்து பெரியவர்கள் உறங்க சென்றுவிட தம்பதிகள் குழந்தைகளை அவர்களிடம் விட்டுவிட்டு மாடிக்கு சென்றனர்.
முதல்முறை அங்கு வந்தபொழுது நடந்த விஷயங்களை சொல்லி அவ்விடத்தையே சுவாரசியமாக்கிக்கொண்டிருந்தனர் ஆண்கள்.
புவனிடம் இத்தனை கலகலப்பை அபிராமி இன்றுதான் காண்கிறாள். எந்தவித தடைகளும் இல்லாத அட்டகாசமான சிரிப்பு. ஏனோ மிகவும் பிடித்துப்போனது அந்த சூழல். 
“புவன் அங்க பாரு தங்கச்சி உன்னை மியூசியத்துல வச்ச பொம்மையை பார்க்கற மாதிரி அதிசயமா பார்க்கறதை?…” விஷ்வா கோர்த்துவிட,
“பின்ன வீட்ல இப்படி பேசி சிரிச்சா தெரியும். இவருக்கு இவ்வளோ பேச வரும்னே சமீபமா தான் தெரியும். அதும் இத்தனை கேலி கிண்டல்…” என்று புவனை பார்த்துக்கொண்டே சொல்ல சொல்ல அவன் சிரிப்புடன் பார்த்திருந்தான்.
“இதுக்கெல்லாம் காரணம்…” என ஆரம்பித்த பிரபுவை நடுவில் பிடித்திழுத்து அவனின் வாயிலேயே நாலு அப்பு வைத்த சூர்யா,
“பேசாத நீ. நீ பேச கூடாது…” என சொல்ல,
“எதுக்குடா இப்ப அவனை அடிக்கிற?…” விஷ்வாவும் வசீகரனும் தடுக்க,
“இவன் பேச ஆரம்பிச்சாலே என்கிட்டே கொண்டுவந்து நிறுத்தற மாதிரியே இருக்குடா. அதான் பேசுமுன்ன வாயில போட்டேன்…”  
“இதுக்குத்தான் சொன்னேன் தலைக்கு தில்லு பார்த்தியான்னு…” பிரபு விடாமல் கலாய்க்க,
“அடேய் உன்னைய…” என்று அவன் மேலேயே விழுந்து உருள பெண்கள் சிரிப்புடன் ஓரமாய் ஒதுங்கி அமர்ந்தனர். இவர்களின் சத்தத்தில்,
“மேல என்ன சத்தம்? யாரும் இன்னும் தூங்கலையா?…” கீழே இருந்து முனீஸ்வரன் குரல் கொடுக்க,
“தல உங்காளு கூப்பிடறாரு. பேசிட்டிருக்கோம்னு போய் தில்லா சொல்லிட்டுவாங்க…” பிரபு அப்பொழுதும் சூர்யாவை வம்பிழுக்க,
“அடிங்க….” என்று மீண்டும் அங்கே ஒரு ரகளை ஆரம்பித்தது. குதூகலமும் கொண்டாட்டமுமாக அன்று இரவு அவர்கள் உறங்கவே இல்லை. மறுநாள் புவன், புகழ் மடியில் வைத்து இரு குழந்தைகளுக்கும் மொட்டையெடுத்து காதுகுத்துவதற்கு கிளம்பினார்கள்.
கோவிலில் வைத்து மொட்டைபோடுவதற்குள் முனீஸ்வரன் சாமி வந்ததை போல ஆட ஆரம்பித்துவிட்டார்.
“ஏலே கத்திய என்னவாக்கிலடா புடிச்சிருக்க? உனக்கு மொட்ட போட தெரியும்தானே? இதுவரை எத்தன மொட்டை போட்டிருப்ப? ஒரு முடி இருக்க கூடாது. அதே மாதிரி ஒரு கீறல் இருக்க கூடாது. புள்ளைங்க கண்ணுல இருந்து சொட்டு கண்ணீர் வந்துச்சு பார்த்துக்க…” என்று அலப்பறையை கூட்ட முனீஸ்வரன் அருகில் இருந்தால் மொட்டை போடமாட்டேன் என்று அவர் சொல்லும் அளவிற்கு சென்றுவிட்டார்.
“அண்ணே மொட்டை போட்டா நாம புடிக்கிறதுல குழந்தைங்க என்னவோன்னு பயந்து அழத்தான் செய்யும்ங்க. அதும் கும்பலா எல்லாரும் நின்னு பார்க்கும் போது எல்லா புள்ளைங்களும் அழாமவா இருக்கும்? இதெல்லாம் ஒரு விஷயமா?. அங்க வந்து என்னனு பாருங்க…” 
அம்பிகா வந்து அவரிடம் நயமாக பேசி அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டாலும் முனீஸ்வரன் பார்வை முழுவதும் மொட்டை போடும் இடத்திலேயே இருந்தது. அடுத்து காதுகுத்தும் பொழுதும் வாய திறக்க பார்க்க வசீகரன் பார்த்த பார்வையில் கப்பென்று மூடிகொண்டார்.
காதுகுத்தி முடித்து பூஜை முடித்ததும் இரு குழந்தைகளையும் தன் மடியில் அமர்த்திகொண்டவர் அவர்களின் தலையை, காதை உத்து உத்து பார்க்க,
“நீங்க இன்னைக்கு முழுக்க பார்த்தாலும் ரெண்டு காதுலயும் ரெண்டு ரெண்டு ஓட்டை தான் மாமா இருக்கும். சட்டுன்னு நாலு ஓட்டையா மாறிடாது…” என போகிற போக்கில் விஷ்வா சொல்லி செல்ல,
“இந்த பெருசு, இங்க வா…” என சந்தியாவை கோபத்துடன் அழைத்தவர்,
“உன் புருஷன் என்னை வேணும்னே சீண்டிட்டு இருக்காரு. சொல்லிவச்சுக்கோ…” என மகளிடம் கடுகடுக்க,
“லாடம் கட்டுடா அவன. ஓடவிட்டு முட்டிக்கு கீழ சுடு. இதுக்கும் நான் வரனுமா? ஜெயிலுக்கு வந்து கொழுப்பு குறையலையா? என்னை பத்தி தெரியாம இருக்கானுங்க. என்னது ரொம்ப பேசறான்னா? லத்தியா விட்டு வாயில சுத்து. நாலு நாள் பேசாம கிடக்கட்டும். நான் வந்து வச்சிக்கறேன் அவனுங்கள. ராஸ்கல்ஸ…” என போனில் விஷ்வா யாரிடமோ எகிறிகொண்டிருக்க சந்தியாவிற்கு தான் தர்மசங்கடமாக போனது.

Advertisement