Advertisement

ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தனியே இருக்க இருக்க இதன் நினைவுகள் அதிகமாக கனம் தாளமாட்டாது இறங்கி கீழே வந்து தோட்டத்தில் நின்றுகொண்டாள். தூறல் ஓய்ந்து மெல்லிய காற்று வீசிக்கொண்டிருக்க அந்த குளுமையை ரசித்து அனுபவித்தபடி நின்றிருக்க சத்தமில்லாமல் அவளின் பின்னால் வந்து நின்றான் வசீகரன்.
கேட்டிற்கு வெளியேயே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வர முல்லைக்கொடி பந்தலுக்கு கீழ் அவள் நின்றுகொண்டிருந்த கோலம் ஓவியமென மனதில் தூரிகை கொண்டு வர்ணம் தீற்றியது. 
விசில் அடித்தபடி அவளருகில் வர இவனின் சத்தத்தில் வேகமாய் திரும்பியவளின் புன்னகை முகம் நீங்காத சித்திரமாய் அவனுள்.
“இத்தனைநாள்ல இன்னைக்கு தான் என்னை பார்த்ததும் உன் முகத்துல எந்த சஞ்சலமும் இல்லாத ஒரு சந்தோஷம். வெல் இம்ப்ரூவ்மென்ட்…” என்றவன்,
பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும்
தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும்
சந்நிதியை பார்த்து பாடிக்கொண்டே அவளின் பார்வை தன்னிடமில்லாது தனக்கு பின்னால் செல்ல, திரும்பிய வசீகரன் முகம் விளக்கெண்ணையை குடித்ததை போல ஆனது. 
அங்கே அம்பிகா இடுப்பில் கைவைத்து முறைப்புடன் நிற்க,
“ம்மா…” என்றான் மகன்.
“பெண்கள் இல்லா வீடுன்னா இந்த வீட்ல நான் யாருடா? என்னை பார்த்தா எப்படி இருக்காம் அப்பாவுக்கும் பிள்ளைக்கும்?…” என்று குகனையும் வம்பிழுக்க,
“நான் எதுவும் பாடலையே அபி…” என்று கணவன் வர,
“நீங்க குடுக்கற தைரியம் தான் இதெல்லாம். எப்படி பாடறான் பாருங்க. எல்லாம் உங்களால…” என்று கோபிப்பதை போல முகத்தை தூக்கிவைக்க அப்பாவும், பிள்ளையும் அவரை கட்டிக்கொண்டு சமாதானம் செய்ய கெஞ்ச அதை பார்த்த சந்நிதி கண்களில் நீர் வர சிரித்தாள்.
“இவன் பைக்கை வாசல்ல நிறுத்திட்டு பம்மி உள்ள போகும் போதே நினைச்சேன். பாருங்க, ஆள் இல்லைன்னா எப்படி பேசறான்னு?…” என்று அம்பிகா பேச பேச அவரை கட்டிக்கொண்டவன்,
“ம்மா, இதெயெல்லாம் கண்டுக்கப்படாது. பேசாம இருங்க. நிதி ஷையா பீல் பண்ணுவா…”
“எனக்கென்னமோ நீ தான் பீல் பண்ணுவன்ற மாதிரி தோணுதுடா. போ. போ…” என்று அம்பிகா உள்ளே செல்ல சந்நிதியின் முகம் அத்தனை பொலிவுடன் இருந்தது.
ராதா வீட்டிற்கு சென்று அங்கு நடந்தவைகளை பேசிக்கொண்தே இரவு உணவிற்கு தயார் செய்ய நால்வருமே அடுப்படியை ரணகளப்படுத்தினார்கள். அடிபிடித்த டீ பாத்திரத்தை பார்த்துவிட்டு அதற்கும் அத்தனை திட்டு திட்டினார் வசீகரனை.
நால்வருமாக சேர்ந்து உணவருந்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்க சென்றனர். அந்த சூழல் முன்பை விட இப்பொழுது அழகானதாய் தோன்றியது சந்நிதிக்கு.
சூர்யாவிடம் போன் பேசிவிட்டு வசீகரன் தங்களறைக்குள் வர அங்கே நிதி தன்னுடைய துணிமணிகளை அடுக்கிக்கொண்டிருந்தாள். அவளின் அருகில் வந்து நின்றவன் அவளின் முகத்தையே அளவிட கவனமாய் அவனை பார்ப்பதை தவிர்த்தாள் சந்நிதி. அதை கண்டுகொண்டவன் புன்னகையுடன்,
“வீட்டுக்கு பேசினியா நிதி?…” என்றான் அவளை திசைத்திருப்பும் பொருட்டு,
“ம்ஹூம், இல்லை…”
“இப்போ கால் செய்யட்டுமா? அத்தைக்கிட்ட பேசறியா?…”
“அப்பா வந்திருப்பாங்க. நான் பேசலை. நாளைக்கு பேசறேன்…” என்றால் இன்னமும் அவனை திரும்பி பார்க்காமல்.
அவளுக்கு தெரியும் இன்று தங்களுக்குள்ளான உறவு அடுத்தகட்டத்தை எட்டிவிடும் என்று. ஏனோ ஒருவித பதட்டமும் படபடப்பும். கைகள் சில்லிட்டு போனது.
“எவ்வளோ நேரம் அதை அடுக்கிட்டே இருப்ப? நான் நாளைக்கு ஆபீஸ் போனதும் இதை பார்த்துக்கலாமே?…” 
“இல்ல இப்ப முடிஞ்சுடும்…” குரலில் லேசான நடுக்கம். அவளை திருப்பி தன் பக்கம் கொண்டுவந்தவன்,
“ஏன் இவ்வளோ நெவ்ர்ஸ் ஆகற நிதி? ரிலாக்ஸ்…”
“இல்லையே, அதெல்லாம் ஒண்ணுமில்லை…” 
“அன்னைக்கு மட்டும் என்னை பார்க்க வந்தியே, அப்போ இந்த பயம் பதட்டம் எதுவுமே இல்லையே. அந்த நிதி எங்க?…” சீண்டலாய் அவன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“தெரியலை. நீங்க என்னை என்ன பண்ணுனீங்க? எனக்கு புரியலை. ஊருக்கு வந்துட்டு என்னை பார்க்காம கூட நீங்க கிளம்பிட்டீங்க, அதனால நான் என்ன பண்ணனும் தெரிலை. ஆனா பார்க்கனும்னு தோனுச்சு. அதான்…” சந்நிதி சொல்ல இப்பொழுது புன்னகை அரும்பிய முகத்துடன் அவள் முகம் காணாமல் அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.
“வெயிலோட அருமை நிழல்ல தெரியும்னு சொல்லுவாங்க. அது மாதிரி இருப்பு உணர்த்தாததை சில நேரம் இல்லாமையும், பிரிவும், மௌனமும் கூட உணர்த்தும். பக்கத்துல இல்லையே தவிர உங்களை ஒவ்வொரு நிமிஷமும் உணர்ந்துட்டே தான் இருந்தேன். இதை நான் ஆமோதிப்பா சொல்லலை, அனுபவிச்சு சொல்றேன்…”
“சூர்யா செஞ்ச வேலையா?…” அவளின் முகம் பார்த்து கேட்க,
“நல்லதை யார் வேணும்னாலும் சொல்லலாம்…” என்றவளை ஆழ்ந்து அவன் பார்க்க அதுவரை பேசிக்கொண்டிருந்தவள் இப்பொழுது மௌனப்புன்னகையுடன் நகர்ந்து செல்ல,
ஒ நெனப்புல நா வாட ஏ உசுருல நீ தேட 
மழை வெயிலென பார்க்க வேணா மயங்கிட வாடி மனசோட 
என்றவன் மெல்லிய குரலில் பாடிக்கொண்டே வசீகரனின் சந்நிதியிடம் முழுமையாய் ஆகர்ஷிக்கபட்டு சந்நிதியின் வசீகரனாய் பரிணாமம் கொண்டான்.
காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி 
ஒ ஆச நா ஏ ஆச நீ பேராசை ஆவோமா 
கண் மூடியே கை கோர்த்து நாம் காணாமல் போவோமா 
—————————————————————————————
முனீஸ்வரன் அமைதியாக அமர்ந்திருக்க நீதிமாணிக்கத்திற்கு கவலையாக இருந்தது அவரை பார்க்கவே. 
“சாப்பிட்டு தம்பி…” என சொல்ல,
“ஹாங், ம்ம்ம்…” ஏனோதானோவென்று இட்லியின் மேல் கை வைத்தார்.
“ரெண்டு நாள்ல பார்கவியை கூட்டிட்டு வந்துடுவோம். இல்லைனா நீ போய் பார்த்துட்டு வாயேன்…” என சொல்ல 
“இல்லண்ணே, அவ இருந்துட்டு வரட்டும். பரவாயில்லை. நான் கூப்பிட்டு அதுவும் வேணும்னே கூப்பிடுறதா நினைச்சுட்டா? ஏற்கனவே சிறுசு பேசறதில்ல. மூஞ்சிய தூக்கிவச்சுட்டு சுத்துது. இப்ப நான் வர சொன்னா அதையும் பிரச்சனை பண்ணன்னு தான் பார்ப்பாங்க…” கடுமையாக சொன்னார் அவர்.
பத்து நாட்களில் ஆளே ஓய்ந்துபோய் இருந்தார் முனீஸ்வரன். சந்நிதிக்கு உடல்நிலை சரியில்லை என்று வசீகரன் பார்கவியை அழைக்க பார்கவி எதையும் யோசிக்காமல் மகளை பார்க்க கிளம்பிவிட்டார்.
ஏற்கனவே முனீஸ்வரன் பேசி மகளை அனுப்பிவிட்ட கவலை மனடஹி பிசைந்துகொண்டே இருந்தது அவருக்கு. கண்ணீரோடு நிராதரவாக மகள் சென்ற கோலம், இப்பொழுது உடல்நிலை சரியில்லை என்ற தகவல் பார்கவியை அங்கே இருக்க விடவில்லை.
கடையிலிருந்து முனீஸ்வரன் வந்ததும் அவருக்கு மதிய உணவை பரிமாறியவர் சாப்பிட்டு முடித்ததும் நீதிமாணிக்கத்தை வரவழைத்து விஷயத்தை சொல்ல,
“ஏன் என்கிட்டே சொல்லமாட்டாளா? என்ன ஆணவம்?…” என்று முனீஸ்வரன் எகிறிவிட,
“எனக்கு என் பொண்ண பார்க்கனும்ங்க அத்தான். இல்லனா நினச்சு நினச்சே செத்துருவேன். அப்படி அழுதுட்டு போனவ, இன்னைக்கு முடியாம கிடக்கா. பார்க்கனும்னு அனத்துறாளாம். நான் போறேன்…” என நீதிமாணிக்கத்திடம் முறையிட,
“என்ன பேச்சு பேசறா பாருங்க அச்சானியமா. போறேன் போறேன்னு. கொஞ்சமாச்சும் கூறு இருக்கா இவளுக்கு. போகனும்னா நா கூட்டிபோய் விடமாட்டேனா?…” முனீஸ்வரன் படபடப்பாய் கத்த,
“ஐயோ, வேணாம்ங்கத்தான். புள்ளைக்கு எம்புட்டு வேதனையோ? இப்ப அங்க போயும் அவளை ஏச அத பாக்க எனக்கு தெம்பில்ல. நா மட்டும் போறேன். விட சொல்லுங்கத்தான்…” என்று கெஞ்சி அழ முனீஸ்வரனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
பார்கவியிடம் இதை எதிர்பார்க்கவில்லை அவர். போகிறாளாம். நான் போனால் என்னை என் பெண் பார்த்தால் என்னவாகிவிடும்? நினைக்க நினைக்க நெஞ்சை பிழிந்தது.
விட்டுவிட்டார். எதுவும் பேசவில்லை. புகழ் பார்கவியை அழைத்துசென்று வசீகரன் வீட்டில் விட்டுவிட்டான். 
அவர்கள் வீடு எப்பொழுதும் அமைதி தான். ஆனால் அதில் மனைவி, மகள்கள் வாசம் நிறைந்திருக்கும். ஆனால் பார்கவியும் சென்ற பின்பு அங்கு மூச்சு திணறுவதை போல உணர்ந்தார்.
சந்நிதி பிறந்த பின்பு இருவரும் தனி தனி அறையில் தான். குழந்தைகளோடு பார்கவி கீழ் அறையிலும் முனீஸ்வரன் மாடி அறையிலும். ஆனாலும் அவர்களின் நடமாட்டம் தான் அந்த வீட்டையும், அவரையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது என்னும் உண்மை அவரின் முகத்தில் அறைந்தது.
மூன்று வேளையும் அண்ணன் வீட்டில் இருந்து தான் உணவு வருகிறது. உண்டு உறங்கினால் போதுமா? தனிமை பலமாய் அச்சுறுத்த அப்பொழுதும் பார்கவியை சென்று அழைத்துவர எண்ணவில்லை அவர்.
பார்கவிக்குமே பயம் தான். கிளம்பி வந்துவிட்டோம். மீண்டும் செல்கையில் என்ன ஆட்டம் ஆடுவாரோ என்று. 
முனீஸ்வரன் உடல் எடை குறைந்து துவண்டு போய் இருக்க காண பொறுக்காமல் புகழ் அழைத்து பார்கவியை அனுப்பும்படி சொல்ல வசீகரன் எடக்குமுடக்காய் பேச கான்பரென்ஸ் காலில் விஷ்வாவையும், சந்தியாவையும் அழைத்துவிட்டான்.
“இவன் அழிச்சாட்டியம் தாங்கலை விஷ்வா, நீங்களே கேளுங்க…” புகழ் அழாத குறையாக சொல்ல,
“அனுப்பித்தான் வையேன்டா…” விஷ்வாவும் கூற,
“உனக்கு வேணும்னா அத்தையை உன் வீட்டுல பத்துநாள் வச்சு பார்த்துக்க…” என்றவன்,
“ஏன் தியா இதுதான் உன் அம்மா மேல நீ வச்சிருக்க பாசமா? உன் வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?…” என்றுவேறு கேட்க,
“ஏன் கூப்பிடம? நாளைக்கே நான் வந்து கூட்டிட்டு போறேன்…”
“இதெல்லாம் சரியே இல்லை வசீ. பாவம் சித்தப்பா…” 
“இனி உன் சித்தப்பாவுக்கு ஆடி மாசம் வந்தாலே அல்லு விடனும். என் பொண்டாட்டியை ஒரு மாசம் கூப்பிட்டு போய்ட்டா நான் ரெண்டு  மாசம் அத்தைய கூட்டிட்டு வந்து பார்த்துப்பேன்…”
“நல்லா வாங்கறீங்கடா பழிக்கு பழி…” என இடையில் புவன் வெடித்து சிரிக்க,
“இந்த யோசனை எனக்கு தோணாம போச்சே…” என விஷ்வா பேச,
“உங்களுக்கெல்லாம் போகுது பார் புத்தி…” 
“நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகும்ல. கவனிச்சுக்கறோம்…” என கோரஸாக வசீகரனும், விஷ்வாவும் சொல்ல,
“தெய்வங்களே, தெரியாம வாயைவிட்டுட்டேன் தெய்வங்களே. ஆளை விடுங்கப்பா சாமிகளா…” என மன்றாட 
“நாளைக்கு நாங்க எல்லாருமே வரோம். உன் சித்தப்பாவுக்கு சப்ரைஸ் குடுக்க. சொல்லிடாத…” என்றதும் அடுத்து கலகலப்பாய் சென்றது அவர்களின் பேச்சு. 
மறுநாள் பார்கவியுடன் சந்நிதி, வசீகரன், அம்பிகா கிளம்பிவிட குகன் மாலை வருவதாய் சொல்லிவிட்டார். இவர்கள் காலை நேராக முனீஸ்வரனின் வீட்டிற்குள் வர புகழ் முதல்நாளே அங்கு வந்துவிட்டதால் அவனே வந்து கதவை திறந்தான்.
நேராக பார்கவி வந்தவர்களுக்கு குடிக்க தர கிட்சனிற்குள் நுழைய நேரம் கடந்தும் முனீஸ்வரன் எழுந்து வரவில்லை. 
புகழும் வசீகரனும் அவரின் அறைக்கு சென்று பார்க்க மனிதர் காய்ச்சலில் உடல் கழன்று போய் நினைவின்றி கிடந்தார்.
இவர்கள் வந்தது எதுவும் தெரியவில்லை. பத்தே நாள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டார். 
வசீகரனுக்கு அத்தனை குற்றவுணர்ச்சியாக போனது. புகழ் வேகமாய் கீழே வந்து காரை எடுக்க வசீகரன் முனீஸ்வரனை தூக்கிக்கொண்டு கீழே விரைந்தான்.
முனீஸ்வரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டார்.

Advertisement