Advertisement

தீண்டல் – 32
           “வசீகரனின் சந்நிதி, இந்த வார்த்தை இது குடுக்கற அர்த்தம் எனக்கு எப்படி ஒரு உணர்வை தரும்னு நான் யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாது. அது என்னால மட்டுமே புரியக்கூடிய அனுபவிக்க கூடிய ஒன்னு. ஆனா வெறும் வார்த்தையில் மட்டும் இது இருக்குதோன்னு தோணுது…”
சந்நிதியின் குழப்பமான மனநிலை இன்னும் தெளியாமல் இருக்க அவளின் கலக்கம் வசீகரனுக்கு நன்றாகவே புரிந்தது. தன்னுடைய வாழ்க்கையை தானே சிக்கலாக்கிகொண்ட மடைமையை எண்ணி தலையிலடித்துக்கொண்டவன் நிதானமாக மனைவியை பார்த்தான்.
அவளின் கண்களில் இருந்த அலைப்புருதலை முதன்முதலில் கணவனாய் அவதானித்து உள்வாங்கினான். அவளை டைனிங் டேபிள் சேரில் அமர்த்தியவன் தங்களுக்கு குடிப்பதற்கு எதுவாவது இருக்குமா என பார்க்க உள்ளே சென்றான். 
வெளியே லேசாக மழை தூற தொடங்க இதமான குளிருக்கு எதுவாக டீ தயாரிக்க ஆரம்பிக்க அவனின் பின்னே வந்தவள்,
“என்கிட்டே கேட்டா நான் போட மாட்டேனா?…” என கடிந்துகொண்டு அவனை நகர்த்திவிட்டு புடவையை இடுப்பில் சொருகிவிட்டு பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.
“உனக்கு அம்மா போடற டீ ரொம்ப புடிக்கும்ல. அதான் உனக்கு போட்டு குடுக்கலாமேன்னு. அதே மாதிரி தான் நானும் போடுவேன்.  ட்ரை பண்ணி பாரேன்…” என்று அவன் அவளை தள்ள,
“அம்மா போடற டீ அம்மா இருக்கும் போது குடிங்க. இப்ப நான் போடற டீயை குடிக்கலாம் தப்பில்லை. உங்களுக்கு எனு செய்யனும்னு தோணுச்சுன்னா என்னால முடியாதப்போ செய்ங்க…” என முறைப்புடன் சொல்ல,
“டிபிகல்ட் வொய்ப் மாதிரி பேச ஆரம்பிச்சுட்ட…” வசீகரன் சிரிக்க சந்நிதிக்குமே அவன் சொல்லியது உண்மை தானோ என்று தோன்றியது.
“நிஜமாவா?…” என தன்னையே கேட்டுக்கொள்ள,
“தப்பில்லை, ஆனா இவ்வளோ நேரம் என்னோட சண்டை போட்டுட்டு இப்போ ஒரு டீ போட வரவும் புருஷனுக்கு போட்டு குடுக்கனும்னு உன்னை அறியாமலே ஒரு உந்துதல். அதுக்கு தான் சொன்னேன். இது இயற்கை நிதி. எல்லாருக்குள்ளையுமே இருக்க கூடிய ஒண்ணு. தன்னை மீறி செயல்பட கூடிய ஒண்ணு…” 
“அம்மாவை அப்படியே பார்த்துட்டு இப்ப எனக்கும் அப்படியே ஆகிடுச்சோ?…”
“இப்ப தானே சொன்னேன். தப்பில்லைன்னு. இது உறவுகள் மேல நாம வச்சிருக்கற பற்றுதல். நாளைக்கே நமக்கு ஒரு குழந்தை வரப்போ குழந்தை கேட்கும் முன்ன அதுக்கு பசிக்குமேன்னு  தானா நீ கவனிப்பா பாரு இதெல்லாம் நம்ம உணர்வோட ரத்தத்தோட கலந்தது…”
“நானும் தப்புன்னு சொல்லலை. சும்மா தப்பில்லை, தப்பில்லைன்னு சொல்லி…”
“ஓகே சொல்லலை. சரண்டர் மேடம்…” என்று காதை பிடித்துக்கொண்டு கெஞ்சலாய் பார்க்க நிதியின் முகத்தில் சிறு புன்னகை கீற்று. அதற்குள் டீக்கு வைத்த நீர் கொதித்து வற்ற ஆரம்பிக்க அதை  அவள் கவனிக்க அவளின் பின்னால் இருந்து மென்மையாக அணைத்துக்கொண்டான் வசீகரன்.
சந்நிதி திடீரென்ற இந்த அணைப்பில் திடுக்கிட்டு தடுமாற அவளை விலக விடாமல் பிடித்தவன்,
“நீ போடு. நான் டிஸ்டர்ப் செய்யலை…” என்றான் அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியபடி. 
“நமக்குள்ள எதுவும் முழுமையா இன்னும் சரியாகிட்டது மாதிரி எனக்கு தெரியலை…”
“உடனே எதுவுமே சரியாக வேண்டாம். இந்த மாதிரி மனவேறுபாடுக்கு உடனுக்குடன் பார்க்கும் தீர்வு நிரந்தர தீர்வா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை நிதி. அதுக்காக தீர்வு தெரியற வரைக்கும் தள்ளி நிக்கனும்னு இல்லையே…” அவன் சொல்ல அதை புரியாமல் பார்த்தாள் சந்நிதி.
“இந்த உலகத்துல யாருமே பர்பெக்ட் இல்லை நிதி. நிறை குறைகள் இல்லாத மனுஷனே இல்லை. அதுக்காக உன்னோட குறையெல்லாம் நிறையாக்கிட்டு வா வாழலாம்ன்னா வாழ்க்கையே முடிஞ்சுடும். என்கிட்டயும் நிறைய தப்பு இருக்கு. சரி பண்ணிக்கலாம் கொஞ்சம் கொஞ்சமா. உடனே எந்த மாற்றம் எதுவும் தலைகீழா நடந்திடுமா என்ன?…”
“நீங்க என்னை குழப்பறீங்க…” சந்நிதி உண்மையாக சொல்ல,
“குழப்பம் நல்லது. குழம்பி ஒரு தெளிவு கிடைக்குமே அது இன்னும் நல்லது தான். நீயே யோசிச்சு பாரு. என் மேல உன்னோட எதிர்பார்ப்பும் தப்பில்லை. உன் மேல என்னோட எதிர்பார்ப்பும் தப்பில்லை. அதை சரியா ஒருத்தருக்கொருத்தர் உணர்த்தாம விட்டது தான் தப்பு…”
“உணர்த்தனும்னா?…” என தலையை திருப்பி அவனை அண்ணாந்து பார்த்து அவள் கேட்க முழுமையாய் தன் பக்கம் திருப்பியவன் அவளிதழில் மென்மையாய் ஒரு முத்தமொன்றை லேசாய் ஒற்றி எடுத்தான்.
இதழ் முத்தமாய் இதுவே முதல் முத்தம். இதை எதிர்பாராதவள் சட்டென பாய்ந்த மின்சார தாக்குதலில் அதிர்வுடன் நிற்க,
“நான் பேசிடறேன். அதுவரைக்கும் இந்த லாக் ஓபன் ஆக கூடாது. இல்லைனா திரும்ப திரும்ப லாக் லாக் பண்ணுவேன்…” என்று வசீகரமாய் புன்னகைக்க அவளிடம் பேச்சில்லை.  
“உன் அப்பாக்கிட்ட சொன்னியே அவரை பிடிச்சது, ஆனாலும் இந்த கல்யாணம் வேண்டாமேன்னு அந்த நிமிஷம் நான் எப்படி பீல் பண்ணினேன் தெரியுமா? எனக்கு தெரியும் உனக்கு என்னை பிடிக்கும்னு. அதனால தான் உன்னை விடலை. என்னையும் பிடிச்ச ஒரு பொண்ணை தானே விரட்டி கட்டிக்க போறேன்னு என்னையே சமாதானம் செஞ்சுக்கிட்டேன்…”
“நீ என்கிட்டையே என்னை வேண்டாம்னு சொன்னப்போ வெறும் யூகத்துக்காக என்னை மறுக்கறன்னு கோபம். கல்யாணம் ஆனா பின்னாலையும் அந்த பயத்தோட என்னை விட்டு விலகி நின்னது இன்னும் கோபம். என்னை அறியாமல் அது எனக்குள்ள இருந்திருக்கு…”
“உன்னோட யூகம் வெறும் யூகமாக தான இருக்கும், எந்த சூழ்நிலையிலும் உன்னை அப்படி ஒரு இக்கட்டில் விடமாட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அதை என்னால காப்பாத்த முடியலை. உன் அப்பா தான் புரியாம செய்யறார்ன்னா நானும் வீம்புக்கு செய்ய தானே செஞ்சேன். என்னை நீ கன்சிடர் பண்ணனும்னு நினைச்சேனே தவிர உன்னை நான் நினைக்காம போய்ட்டேன்…”
உணர்ந்து அவன் சொல்ல சொல்ல சந்நிதியின் மனதின் அழுத்தங்கள் குறைய துவங்கியது.
“உன் அப்பாவோட கோபத்தை நீ நியாயப்படுத்தறியேன்னு எனக்குள்ள ஒரு எரிச்சல். கல்யாணம் ஆனா பின்னால நீ என்னை தான் முதல்ல வச்சு யோசிக்கனும்னு சராசரி புருஷனா நினைச்சுட்டேன். இப்போ எல்லாமே புரியுது. ஆனா என்னையும் நீ புரிஞ்சுக்கனும் நிதி…”
“என்கிட்டே நீ பேசியிருக்கலாம். நீ வரலைன்னு தெரியவுமே நான் உனக்கு போன் பண்ணினேன். ஆனா உன் அப்பா முதல் நல நைட்டே அனுப்ப முடியாதுன்னு சொல்லியிருக்கார். அப்பவே என்கிட்டே நீ பேசியிருக்கலாம் தானே? ஒரு பிரச்சனை வரப்போ தனியா சமாளிக்கலாம்னு நினைக்கிறது தன்னம்பிக்கை தான். அதே நேரம் நீ என்னை தேடறன்னு எனக்கும் தெரியும் போது அது ஒரு கர்வம். என் பொண்டாட்டி என்னை தேடறான்னு…”
“அந்த சுகத்துக்கு ஈடா வேற எதுவுமே இல்லை. அதை நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன். அப்பவும் நான் உன்னை தேடினேன். உனக்கு போன் பண்ணினேன். நீ ஆஃப் பண்ணி வச்சிருக்கவும் தான் எனக்கு அவ்வளவு கோபம். ஆனா உன்னை விட்டிருக்க மாட்டேன். என்னை விடு போகனும்னு உனக்கு தோணவிடவும் மாட்டேன்…”
“எனக்குள்ள ஒரு தொய்வு. தோற்றுவிட்ட உணர்வுன்னு கூட சொல்லலாம். உன்னை பார்த்து, விரும்பி, காதலிச்சு, உன்னை எப்படி என்கிட்டே கொண்டுவரலாம்னு யோசிச்சு இத்தனை வருஷம் உன்மீதான என் தேடலுக்கான பிரதிபலிப்பு உன்கிட்ட இல்லைன்னதும் என்னவோ தோத்துட்டோமோனு பயம் வந்துருச்சு…”
அவன் இதை சொல்லும் பொழுது உணர்ச்சிகுவியலின் கொந்தளிப்பாய் குரல் தழுதழுக்க அவனின் மார்போடு சாய்ந்தவள் இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள்.
“ப்ளீஸ்…” நிதி முணங்க,
“என்னோட சுயநலத்துக்காக தியாவை கஷ்டப்படுத்திட்டேன்னு சொல்ற. உங்க வீட்ல பிரச்சனை செய்யாம இருந்திருந்தா கூட உன் அப்பா ஏதோ ஒரு வகையில் இந்த மாதிரி பரிகாரங்களை செய்ய வச்சிருப்பார் அவளோட ஜாதகத்தை வச்சு. ஆனா அதுக்கு நேரடியா நான் காரணமாகிட்டேன்னு நான் வருந்தாத நாளே இல்லை…”
“போதும், இனி எதுவும் சொல்லவேண்டாம்…” அவனின் வாயை தன் விரல் கொண்டு அடைக்க,
“இனி சொல்ல என்ன இருக்கு? சொல்லிட்டேன் மொத்தமா. சொல்லாததை நீயே புரிஞ்சுக்க. இப்படி ஒரு வாழ்க்கை தேவையான்னு தோணிடுமோன்னு இனி நீ பயப்படவே வேண்டாம். இப்படி ஒரு வாழ்க்கைக்காக எத்தனை தடவை வேணும்னாலும் உன் அப்பாவோட சண்டை போடலாம்னு தோணுற மாதிரி வாழ்ந்து பார்ப்போம்…”
“என் அப்பாவை பேசலைன்னா உங்களுக்கு தூக்கம் வராது போல…” செல்லமாய் அவனின் மார்பில் அடிக்க,
“எந்த நேரத்துல என் அம்மாக்கிட்ட என்னால உன் அப்பாவோட குடும்பம் நடத்த முடியாதுன்னு சொன்னேனோ என்னால குடும்பமே நடத்த முடியலை…” என்று குறும்பாய் அழுத்துகொள்வது போல சொல்ல இன்னும் இரண்டடிகள் வைக்க,
“கோபம் போய்டுச்சா?…” என்றான் அவளின் நெற்றியில் முட்டி.
“ஹ்ம்ம் போகலை. ஆனா ஏதோ உங்க பேச்சை கேட்க கேட்க நான் கோபப்பட்டது ஞாபகமே வரலை. இப்ப நீங்க ஞாபகப்படுத்தீட்டீங்க. நீங்களே கோபத்தை விரட்டி விடுங்க…” கேலியாய் சொல்ல,
“போக வச்சுட்டா போச்சு…” என்று நெருக்கத்தின் இறுக்கத்தை வலுப்படுத்த,
“இங்க பாருங்க, இனிமே உனக்காக வந்தேன். பார்த்தேன். நானே உன்னை கட்டிக்க அதை பண்ணினேன், இதை பண்ணினேன்னு சும்மா செல்ப்டப்பா அடிக்க கூடாது. நீ எதுவும் பண்ணலைன்னு ஒரு வார்த்தை வாயில இருந்து வரக்கூடாது. வந்துச்சு. ம்ம். இப்ப நானும் அதுக்கு ஈக்வலா வந்துட்டேன். நீங்க கூப்பிட கூட இல்லை. நான் வந்துட்டேன். நானா தான் வந்தேன். இனி இப்படி பேச கூடாது. இதான் லாஸ்ட். மூச்…”
மிரட்டல் குரலில் அவள் கையை நீட்டி கராறாய் சொல்ல வசீகரனின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
“ஒரே ஒரு சண்டை போட்டு வந்தா அதும், இதும் ஈக்வல் ஆகிடுச்சாமா? அது சரி…” என ராகமாய் கிண்டல் செய்தவன்,
“இங்க பாரு நிதி, இந்த சண்டை மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் அதனால வர பிரச்சனைகள் எல்லாமே நம்ம வாழ்கையில் இனி வராம இருக்கவே இருக்காது. வரும் வரதை பேஸ் பண்ணுவோம் ஒண்ணாவே. நிறைய சண்டி போட்டு நிறைய லவ் பண்ணி. இனியாச்சும் லவ் பண்ணலாம் தானே? உன்னை கல்யாணம் செய்ய யோசிச்சே லவ் பண்ணினது எப்போன்னு தேட வேண்டியதாகிடுச்சு…”
“ஹ்ம்ம், ஹ்ம்ம் பண்ணலாம்…” என்று அவள் தலையசைக்க அவளை போலவே இவனும் தலையாட்ட இருவருமாய் இணைந்து சிரித்த சிரிப்பில் அந்த வீடே விழாகோலம் பூண்டது போல தோன்றியது இருவருக்கும்.
பேசிக்கொண்டே இருந்ததில் அடுப்பில் வைத்த பாத்திரத்தை மறந்துவிட்டிருந்தனர். டீ வற்றிப்போய் பாத்திரம் அடிப்பிடித்து கருக ஆரம்பித்திருந்தது. பதறிப்போய் அதன் கைப்பிடியை பிடித்து எடுத்து சிங்கில் போட்டவன் கை லேசாய் சிவந்துவிட சந்நிதி பதறிவிட்டாள்.
“அய்யோ சூட்டோட யார் எடுக்க சொன்னா? இதுக்குத்தான் நானே போடறேன்னு சொன்னேன்…” அவனின் கையில் எண்ணையை தடவியபடி சொல்ல,
“நீ போட்டது தான், பேசிட்டு இருந்ததுல மறந்துட்டோம்…” 
“ப்ச், சரி இருங்க நான் காபி போடறேன். இன்ஸ்டன்ட் பவுடர் இருக்கு…” என சொல்ல அவனின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
“புடிக்காதா?…” என்றதற்கு அவனும் இல்லை என தலையசைக்க,
“அப்ப எங்க ஊர்ல எல்லாம் குடிச்சீங்க…” என கேட்டுக்கொண்டே வேறு பாத்திரத்தை வைத்து கவனமாய் பாலை காய வைத்தாள்.
“அது வேற வழியில்லாம. இங்க அப்படி இல்லையே. அம்மாவுக்கு நான் எப்ப என்ன கேட்பேன்னு நல்லா தெரியும். கொஞ்சம் சொகுசா வளர்த்துவிட்டுட்டாங்க. மாத்திக்க முடியலை…”
“எனக்காக மாத்திப்பீங்களா? காபி போடறேன்…” வேண்டுமென்றே அவள் கேட்க,
“உனக்கும் வேணும்னா போட்டு தரேன். மாத்தவெல்லாம் முடியாது…” என சிரித்துக்கொண்டே அவளை தூக்கி சமையல் மேடையில் அமரவைத்தவன் டீத்தூளை கொதிக்கும் பாலில் போட சந்நிதி முறைத்தபடி இருந்தாள்.
“கண்டிப்பா மாத்தனுமா?…” இப்பொழுது அவன் கேட்ட பாவனையில் முறைப்பை விடுத்து புன்னகைத்தவள் அவனை இழுத்து நெற்றியில் முட்டினாள்.
இருவரும் சேர்ந்து டீயை கிட்சனில் வைத்தே பேசிக்கொண்டே குடித்து முடிக்க அதற்குள் ஒரு போன் வந்துவிட்டது வசீகரனுக்கு.
“நிதி ரவி கூப்பிடறான். சூர்யா கூட இல்லை. ஊர்ல ஏதோ விசேஷம்னு போய்ட்டான்…”
“ஓகே போய்ட்டு வாங்க. நான் இருந்துப்பேன்…” அவளின் முகத்தில் புன்னகையும் கூடவே புரிந்துணர்வும். 
“நீ சொல்லிட்ட அம்மாவை தான் சமாளிக்க முடியாது. இங்க பக்கத்துல தான். ஒருமணிநேரத்துல வந்திடுவேன். அதுவரைக்கும் நீ ரெஸ்ட் எடு…” என்றுவிட்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு அவளின் கன்னம் தட்டி சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் செல்லும் வரை பார்த்திருந்தவள் வீட்டுக்குள் நுழைந்து தங்களுடைய அறைக்குள் நுழைந்தாள். இத்தனை நாள் இல்லாத ஒரு படபடப்பு. உள்ளே வந்து அந்த அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தாள்.
தங்களுக்குள் அனைத்தும் சரியாகிவிட்டதா என்று பார்த்தால் சரியாகிவிட்டதை போலும், இல்லை என்பது போலும் இருவேறு தோற்றங்கள். எதையும் சேர்த்து குழப்பிக்கொள்ள தயாராய் இல்லை அவள். 
தனக்கு தோன்றியவிதத்தில் தந்தையிடமும் கணவனிடமும் பேசியாகிவிட்டது. இனி வாழ்க்கை செல்லும் பாதையில் தன் பயணத்தை மேற்கொள்வது என்று முடிவெடுத்துக்கொண்டாள்.
முனீஸ்வரனை நினைக்க கண்கள் கலங்கியது. தான் பேசியது அவருக்கு பாதிப்பா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் மனதினுள் எதிர்த்துவிட்டோமே என்கிற குற்றவுணர்வு மனதின் ஓரத்தில் அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டு தான் இருந்தது.
அவர் பேசியதும் குறைவில்லையே. அவரிடம் இதனை தான் எதிர்பார்த்திருந்தாலும் எதிர்கொள்ளும் பொழுது உண்டான வலி பெரிது. வீட்டை விட்டு வெளியே செல் என்கிற வார்த்தை அதனை வலிமையுடன் தாக்கியது தான் உண்மை.
ஒரு வேலை வசீகரன் என்ற ஒருவன் இல்லையென்றால், தன் பெரியப்பாவின் வீட்டு ஆதரவில்லாமல் இருந்திருந்தால் ஏனோ அந்த அநாதரவான நிலையை எண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை. 

Advertisement