Advertisement

“இப்போதைக்கு எதுவும் முடிவு பண்ணலை. கொஞ்சம் டைம் குடுங்க…” என்றவன் சிறிது நேரம் அவர்களுடனே இருந்துவிட்டு தன் அலுவலகம் வந்தவன் பிற்பகல் தாண்டியிருக்க புகழுக்கு அழைத்தான்.
“வசீ…” தயக்கமாய் வருத்தத்துடன் வந்தது அவனின் குரல்.
“உன் சித்தப்பா என்ன சொன்னார் என் அப்பாக்கிட்ட? ஒரு வார்த்தை குறையாம எனக்கு தெரியனும்…” அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க வேறு வழியின்றி புகழ் அனைத்தையும் சொன்னான்.
“அப்போ நாங்க வந்து அங்க ஒருநாள் தங்கி இருந்து விருந்தாடிட்டு உன் தங்கச்சியை கூட்டிட்டு போகனும். இல்லைனா அவளை அனுப்ப மாட்டார், நானும் அவளும் அதுவரை பிரிஞ்சு இருக்கனும். அப்படித்தானே? வெல். அப்படியே இருக்கட்டும். வச்சுக்கட்டும். ஆனா ஒன்னு நிதி எங்க இருந்தாலும் என் மனைவியா தான் இருப்பா. இப்ப அவர் வீட்டில் இருக்கிறது அவரோட பொண்ணில்லை. என் பொண்டாட்டி…”
“வசீ ப்ளீஸ், நீயும் டென்ஷன் ஆகாதே. நீங்க யாரும் இங்க வரலை, தங்கலைன்னு ஒரு ஆதங்கத்துல தான் சித்தப்பா இப்படி அறிவுகெட்ட தனமா நடந்துக்கறார் அவர் நோக்கம் தப்பில்லை. அவர் பேசின முறை தான் தப்பு. அதுவும் அவரா பேசலை. இந்த ஊர்க்காரங்க…”
“டேமிட், நாளைக்கு பொண்ணோட வாழ்க்கைக்கு ஊர்க்காரனுங்களா வந்து நிப்பானுங்க? அவனுங்க வந்து பார்த்துப்பானுங்களா? அப்பா ஊரை கட்டிட்டே அழட்டும். பை…”  என அழைப்பை துண்டிக்க போக,
“நிதி அழறா வசீ…” என்றதும் வசீகரனிடம் ஒருநிமிட அமைதி,
“வீம்புக்கும் வறட்டு பிடிவாதத்துக்கும் கொடிபுடிச்சா அழத்தான் வேணும். நேத்தே அவ என்கிட்டே இப்படி ஒரு பிரச்சனைன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இதை அப்பாம்மா காதுக்கே போகாம நான் பார்த்திருந்திருப்பேனே? ஏன் நானே வந்து கூட்டிட்டு வந்திருப்பேன். அவங்கக்கிட்ட போய் என்னலாம் பேசியிருக்கார் உன் சித்தப்பா?…” என்று வைத்துவிட புகழுக்கு வருத்தமாய் இருந்தது.
முனீஸ்வரன் தான் எடுத்த முடிவே சரியானது, இப்படி மிரட்டலாய் சொன்னால் தான் பெற்றோர்கள் மகனுடன் வந்து நிற்பார்கள் என முட்டாள்த்தனமாக செய்ய போய் இத்தனை தூரம் வந்து நிற்கிறது.
நீதிமாணிக்கமும் குடும்பத்தினரும் எத்தனை பேசியும் காதிலேயே வாங்கவில்லை முனீஸ்வரன். சந்நிதியின் அழுத முகத்தை பார்க்கும் பொழுதெல்லாம்,
“ரெண்டு மாசமாச்சு, பேசி சரிக்கட்டி இந்த வீட்டுக்கு கூட்டிட்டுவர துப்பில்லை உனக்கு. என்ன பொண்ணோ?…” என்று வாய்க்குவந்தபடி அவளையும் பேச பார்கவி மகளை அவரின் கண்ணில் படாமல் பார்த்துக்கொண்டார்.
மூன்று நாட்களுக்கு பின்னர் போனை ஆன் செய்ய வசீகரனிடமிருந்து முதல்நாள் அனுப்பிய செய்தியும் அழைப்பும் மட்டும் இருக்க அதன்பின் எந்த ஒரு செய்தியோ அழைப்போ இல்லை. அம்பிகாவிடமிருந்து கூட. மனதே விட்டுப்போனது. 
இருபது நாட்கள் கடந்துவிட்டது. அழைத்து செல்வதை பற்றி வசீகரன் வீட்டிலிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை என்பதால் முனீஸ்வரனுக்கு நாளுக்கு நாள் கோபம் அதிகமாகிக்கொண்டே சென்றது. அந்த கோபம் அவரை மூர்க்கனாக்கியது.
“இங்க பாரு தம்பி பெண்ணை கொடுத்துட்டோம், சீருடன் நாமலே போய் விட்டுட்டு வருவோம். நீ கூட எதுவும் கேட்கவேண்டாம். நீ பேசினதுக்கு நான் அவங்கக்கிட்ட வருத்தம் சொல்லிக்கறேன்…” என வந்து நீதிமாணிக்கம் சொல்ல,
“அப்ப என்னை நீங்களும் மதிக்கமாட்டீங்களா? என் பேச்சுக்கு இந்த வீட்டில மரியாதை இல்லையா?…”
“ஏன்பா நீ தான சொல்லுவ, போன இடத்துல பொண்ணுங்க இருக்கறத வச்சுத்தான் நமக்கு மரியாதைன்னு. அனுப்பாம இருந்தா அது இன்னும் தப்பாகிடாதா?…”
“அவங்க வீட்டில இங்க வந்து போய் இருந்தா நான் ஏன் சொல்ல போறேன். இவ அங்க சின்னதா தப்பு பண்ணினாலும் இவளை நா சும்மா விடமாட்டேன். ஆனா அதுக்குன்னு என்னட மரியாதைய நான் விட்டுடறதா?…” என்று குதித்துவிட்டு சென்றுவிட சந்நிதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 
சரியாக சாப்பிடாமல் தூங்காமல் தன்னை வருத்த எதிர்காலத்தின் பயம் வேறு அவளை வாட்ட கொண்டவன் கூட வந்து பார்க்கவில்லையே என வருத்த துவண்டுகொண்டிருந்தாள். இதை எல்லாம் பார்த்த பார்கவி புகழை வர சொல்லி பேச அவன் அம்பிகாவிற்கு பேச சொல்லி போன் செய்துகொடுத்துவிட்டான்.
“சொல்லு புகழ்…” என அம்பிகா பேசியதுமே,
“மன்னிச்சிடுங்க சம்பந்தி நான் பார்கவி பேசறேன்…” நடுங்கும் குரலில் பயத்துடன் அவர் பேச அம்பிகாவிற்கு திக்கென்றானது.
“அண்ணி என்னாச்சு? நிதிக்கு ஒண்ணுமில்லையே. யாருக்கும், ஏதும் ப்ச், எல்லாரும் நல்ல இருக்கீங்க தானே?…” அவரின் அன்பில் பார்கவி நெக்குருகி போனார்.
“ஐயோ உங்களை என்னலாம் பேசிட்டார் அந்த மனுஷன், அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் சமந்தி, தயவுசெஞ்சு என் பொண்ணை அழைச்சுக்கங்க.  இந்த மனுஷனுக்கு புடிச்சிருக்க கிறுக்கு என்னைக்கு குறைய? அதுக்குள்ளே என் பொண்ணு என்ன ஆவாளோ?…” தாயாய் அவரின் பரிதவிப்பு புகழுக்கும், அம்பிகாவிற்கும் கண்ணீரை வரவழைக்க,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்க ஒன்னும் கலங்காதீங்க. சீக்கிரமே சரியாகிடும். நான் வசீட்ட பேசறேன். என்ன ஒன்னு இன்னும் கொஞ்சம் நாள் போயிருந்தா நாங்களே வந்திருப்போம். அதை வச்சு இப்ப நிதி அப்பா இப்படி பேசியிருக்க வேண்டாம். என்னைன்னா கூட என் உடன்பிறப்பு பேசினதா நான் போயிருவேன். ஆனா என் புருஷன்கிட்டே. அதான் என்னால இதை. ப்ச்…”
“இந்த மனுஷன் கோவத்தால என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகுதே. என்னால ஒன்னும் பண்ண முடியலை, எதுக்கு இந்த உசுருன்னு கெடந்து தவிக்குது. கூட்டிட்டு வந்து விட எனக்கு துணிச்சலும் இல்ல. நா என் மூத்தார் வீட்டுல விட்டுடறேன். அங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க. உங்க கால்ல வேணா விழறேன்…” என கதற,
“சித்தி…” என அவரை தாங்கிக்கொண்டான் புகழ். போன் கீழே நழுவ,
“புகழு என் பொண்ணுங்க சந்தோஷத்துல தான் என் சந்தோஷத்த பார்த்தேன். அது பொறுக்கலை அந்த ஆண்டவனுக்கு. நான்லாம் என்னத்துக்கு பூமிக்கு பாரமா. என் வாழ்க்க தான் இப்படி போச்சு. என் பொண்ணுங்க சிரிப்பு தான் எனக்கு உசுர குடுத்துச்சு. இன்னைக்கு என் கண்ணுமுன்னால வாழமுடியாம நிக்கிறா. வேண்டாம்னவள கட்டிவச்சது இப்படி கண்ணீர்விட வைக்கவா?…”
பார்கவி அடித்துக்கொண்டு அழுதது லைனில் இருந்த அம்பிகாவிற்கு துல்லியமாய் கேட்டது. பார்கவியின் பரிதவிப்பை ஒரு தாயாய் உணர்ந்தார் அம்பிகா. இனியும் அமைதியாக இருக்கவேண்டாம் என முடிவு செய்தவர் குகனுக்கு அழைத்து பேச அவர் அம்பிகாவின் முடிவிற்கு சரியென்று சொல்லிவிட அடுத்து மகனுக்காக காத்திருந்தார்.
மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தவனுடன் சேர்ந்தே சாப்பிட்டு முடித்தவரின் அமைதியில் ஓரளவிற்கு விஷயத்தை கணித்திருந்தான்.
“இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கனும்னு இருக்க வசீ? நிதியை அழைச்சுட்டு வரனும்னு தோணுதா இல்லையா?…”
“ம்மா இப்ப எதுக்கு இது?…”
“இப்ப பேசலைனா வேற எப்ப பேச? விளையாட்டா போச்சா உனக்கு? இப்படி முறுக்கிட்டு நின்னு யாருக்கு எதை நிரூபிக்க போற? இதனால உன்னோட வாழ்க்கை மட்டுமில்லை. நிதிக்குமே கஷ்டம் தானே? இப்ப என்ன அவர் எங்களை அவமானப்படுத்தற மாதிரி பேசிட்டார் அதானே? அவர் சூழ்நிலையை நாங்களே அவரை புரிஞ்சுட்டோம். ஊருக்குள்ள எத்தனை கேள்விகளை அவர் எதிர்க்கொண்டிருப்பார். அவமானம் தானே?…” 
“ஏன்ம்மா அவமானம்ன்றது அவரும் அனுபவிக்கட்டுமே. மத்தவங்களுக்கு குடுத்தே பழக்கப்பட்டவர், இப்ப தனக்குன்னு வரப்ப வலிக்குதாமா? அதோட தாக்கம் எப்படி இருக்கும்னு உணரட்டும்…”
“தப்பு வசீ. அவருக்கு சொல்லி புரியவைக்கனும்…”
“அவர் என்ன குழந்தையா சொல்லிக்குடுக்க? உறவுகளை யார் யார்ன்னு சின்னப்பிள்ளைகளுக்கு அடையாளப்படுத்தி முறையை சொல்லிகொடுக்கலாம். உறவுகள்னா என்னன்னு வளர்ந்த ஒரு மனுஷனுக்கு சொல்ல இவர் என்ன அம்னீஷியா பேஷன்டா? இத்தனை வருஷம் என்ன காட்டுக்குள்ளையா இருந்தார்? ஊர்க்காரங்க பேசறாங்கன்னா அதே ஊர்க்காரங்க குடும்பத்தோட எப்படி வாழ்றாங்கன்னு பார்த்து தானே இவரும் வாழ்ந்தாரு…”
“டைவர்ட் பன்ற வசீ…”
“ஒன்னு பார்த்து தெரிஞ்சுக்கனும். பட்டாவது திருந்தனும். அவருக்கு புரியவைக்கிறது என்னோட கடமை இல்லை. எனக்கு அவசியமும் இல்லை. இதுல என் வாழ்க்கையை தொலைச்சிடுவேனொன்னு எனக்கு பயமா இருக்கும்மா. மிரட்டி உங்களையும் என்னையும் அவர் வீட்டுக்கு வரவச்சு பார்க்க நினைகிறார்ன்னா என்ன மனுஷன் இவரு?…”
“இப்ப என்னதான் சொல்ல வர? இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்ததுன்னு சொல்றேன்…” விட்டேற்றியாக சொல்ல,
“அப்போ நிதி?…”
“நிதிக்கு என்ன? அவ நல்லா இருப்பா. கொஞ்ச நாள் போகட்டும், பார்த்துப்போம்…”
“அதுவரைக்கும் அவ இருக்கனுமே. அவ நல்லா இருக்கான்னு உனக்கு தெரியுமா?…”
“ம்மா…”
“போதும்டா, எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா? நிதிக்கிட்ட என்ன எதிர்பார்க்கற நீ? தெரியாம தான் கேட்கறேன், நீ அவளோட அந்த சுபாவத்தை மாத்த தான் கல்யாணம் செஞ்சியா? அதாவது அவ அப்பா மேல இருக்கற பயம் போய் தைரியமா மாறனும்னு. நான் கூட காதலால கல்யாணம் பண்ணினேன்னு நினைச்சுட்டு இருந்தேன். பார்த்தா சேவை பண்ணியிருக்க நீ….”
“ம்மா…”
“என்ன அம்மா? ஒருத்தவங்களோட இயல்பான குணம்னு ஒன்னு எல்லாருக்குள்ளையுமே இருக்கும். சிலருக்கு இடம் மாறினா கொஞ்சம் மாற்றம் வரும்னு சொல்லுவாங்க. சிலர் தானே அந்த இடத்துக்கு தகுந்தா போல மாறிப்பாங்க. ஆனா நீ அவளை போர்ஸ் பன்ற. மாறு மாறுன்னா அவ என்ன தப்பா அப்ன்றா நீ அவளை திருத்தி நல்வழிப்படுத்த. ஒருத்தர் மேல பயமும் பாசமும் தானா வரும், தானா போகும். யாராலையும் உண்டாக்கவோ உருவாக்கவோ முடியாது…”
“….”
“ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தவங்க மேல ஒவ்வொருவிதமான அபிமானம் பார்வை இருக்கும். உனக்கு உன் அம்மா ஜாலியான கலகலப்பான கேரேக்டரா தெரியலாம். இதுவே இந்த மாதிரி ஆளுங்களை விரும்பாதவங்களுக்கு இவங்க சரியிலையே. வாய பாருன்னு தான் தோணும். அது அவங்கவங்க குணாதிசயத்தை பொறுத்து…”
“ம்மா. இது எல்லாமே எனக்கும் புரியுதும்மா. ஆனாலும்…”
“என்னடா ஆனாலும் ஆவலைன்னாலும்ன்னு? காதல் நிறைகுறைகளை பார்க்காது வசீ. நீ அவளை முதல்முறை பார்த்தப்போ அவ ப்ளஸ், மைனஸ் எதுவும் உன் கண்ணுக்கு தெரியலை. மனசுல பதிஞ்சுட்டா. ஆனா அதுவே வாழும் போது அந்த ப்ளஸ், மைனஸ் உன் கண்ணை உறுத்த ஆரம்பிக்கும். அந்த உறுத்தலை அப்படியே விட்டுட்டா கண்ணை எடுக்கற சூழ்நிலைக்கு கூட தள்ளிடும்…”
“இப்ப நான் சொல்றேன். போய் நிதியை அழைச்சுட்டு வா. இல்ல அவ மாறி வரட்டும்னு நின்னா நீ இங்கயே இரு. நான் போய் என் மருமகளை கூட்டிட்டு வரேன். இங்க இல்லை. அவளும் நானும் தனிக்குடித்தனம் போய்டுவோம். நீ எதிர்பார்க்கற மாற்றம் வரப்ப அவளை பாரு…”
“நீங்க போக வேண்டாம்…”
“சில உறவுகள் நிலைக்கனும்னா இந்த மாதிரியான விட்டுக்கொடுப்புகள் முழுமனதா இருக்கனும் வசீ. தப்பில்லை விட்டுகொடுக்கறதுல. பெருந்தன்மையா விட்டுகொடுக்கலாம். ஏமாளியா தான் விட்டுட்டு நிக்கக்கூடாது…” என்றவர் அவனருகே வந்து மகனின் கையை பிடித்துக்கொண்டார்.
“நீ உன் மாமனாரோட வறட்டு பிடிவாதத்தை பார்க்கற. நான் என் மகன், மருமகளோட எதிர்காலத்தையும், அதுக்காக ஏங்கிட்டு இருக்கற ஒரு அனுதாபத்திற்குரிய ஜீவனையும் சேர்த்து பார்க்கறேன்…”
“ம்மா…” 
“உன் மாமியார் பாவம் வசீ…” 
“புரியுதும்மா, நான் நிதியை அழைச்சுட்டு வரேன். இப்பவே கிளம்பறேன்…” என்றதும் அம்பிகாவிற்கு அத்தனை சந்தோஷம். 
“அப்பாக்கிட்ட சொல்லிட்டு போ வசீ. அப்படியே எனக்கு கொஞ்சம் ஜூஸ் போட்டு குடுத்துட்டு போ. பிரச்சாரம் பன்றவங்களுக்கேல்லாம் ஒரு பெரிய ஓ போடனும். கொஞ்ச நேரம் கத்தி பேச முடியலையே. யப்பப்பா…” என்று சொல்லிகொண்டு சோபாவில் காலை நீட்டி அமர வசீகரனின் முகத்தில் புன்னகை. 
————————————————————————-
முனீஸ்வரனின் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் உள்ளே செல்ல அங்கே சந்நிதி பேசிய பேச்சில் ஆடாது அசையாது அப்படியே நின்றுவிட்டான்.
“இனிமே யாருமே என்னை பத்தி கவலைப்பட வேண்டாம். நான் கிளம்பறேன். இத்தனை பேசினப்பின்னாலையும் நான் இங்க இருக்க மாட்டேன்…” என்ற சந்நிதி கோபத்துடன் வாசலுக்கு வர அங்கே வசீகரன் நின்றிருந்தான்.
“நிதி…” என வியப்பு அகலாது அவன் அழைக்க அவனை பார்வையால் எரித்தவள் கோபத்தில், 
“யோவ் போய்யா, பெருசா வந்துட்டான்…” என கத்திவிட்டு விறுவிறுவென அவனை கடந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
ங்கே என விழித்துக்கொண்டிருந்தவன் என்ன நடந்தது? என அவன் உணர்ந்து மீளும் முன்னே சந்நிதியின் தலை மறைந்திருந்தது.

Advertisement