Advertisement

“அப்ப நேரா அங்க தான வந்திருக்கனும்? ஏன் இங்க வந்தாராம்?…” 
“அதான் நீங்களே சொன்னீங்களே, ஆடி அழைப்புக்கு சேர்ந்து வந்த தான் மதிப்புன்னு. சேர்ந்து போக நான் ப்ளான் பண்ணியிருந்தா உங்க பொண்ணு வாயே திறக்காம என்னை விட்டுட்டு வந்துட்டா. நான் மட்டும் தனியா வந்தா அது எனக்கும் மதிப்பில்லையே. எனக்கும் கோபம் வரும் தானே?…”
அவனின் பேச்சில் இருந்த உண்மை புரிய அனைவரும் சில நொடிகள் எதுவும் பேசவில்லை.
“அவளையும் தப்பு சொல்ல முடியாது. என்ன எதுன்னு அவக்கிட்டையும் நீங்க பொறுமையா கேட்டு பழகிருக்கனும். சொன்னா திட்டுவீங்கன்ற பயத்துல அவ விட்டுட்டா. இதுல நிதி எந்த தப்பும் பண்ணலை…” கணவனாய் அவளை காப்பாற்ற பார்க்க,
“இதுதான் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டில ஆட்டுறதா? உங்களை” என விழிகளால் அவனை அனல்பார்வை பார்த்தாள்.
“இப்ப என்னப்பா உனக்கு திருப்தியா? மாப்பிள்ளை பக்கமும் நியாயம் இருக்கு. உண்மை என்னனு புரியாம இப்படி சபையில இத்தனை பேசிட்டியே?…”
“சரிண்ணே, அப்ப இப்பவே நான் ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறேன்…” என முனீஸ்வரன் எழுந்துகொள்ள,
“இல்லை, நான் அம்மாக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன். வெய்ட் பண்ணுங்க…” என போனுடன் எழுந்து சென்றுவிட்டான்.
“பார்ததீங்களாண்ணே …” என மீண்டும் மீசையை முறுக்க அனைவருக்கும் ஐயோவேன்றானது. வாசலுக்கு வந்து அம்பிகாவிற்கு அழைத்தவன்,
“ம்மா, நான் காஞ்சிபுரம் வந்திருக்கேன். புகழ் வீட்டுக்கு…”
“அதான் போய்ட்டேள, என்னவோ போறதுக்கு முன்னால பர்மிஷன் கேட்கிற மாதிரி சொல்ற. இன்பர்மேஷன் கூட இல்லை….” அம்பிகா நொடிக்க,
“ம்மா…” என பல்லை கடித்தான். அவர் அமைதியாக இருக்கவும்,
“நிதி அப்பா அவர் வீட்டுக்கு கூப்பிடறார். என்ன செய்யட்டும்?…”
“அப்பப்பா உனக்கு ஒண்ணுமே தெரியாது. என்னை கேட்டா அங்க போய் சவால் விட்ட? என்னை கேட்டா ஒவ்வொன்னையும் ப்ளான் பண்ணி பண்ணின? என்னை கேட்டா காஞ்சிபுரம் போன? இதுக்கு மட்டும் என்னை கேட்கறானாம். போனா போ. போகலைன்னா இரு…”
“ம்மா…”
“பின்னென்னடா? அந்த பொண்ணு அத்தனை கேட்டுச்சுல, அவரும் இறங்கி வந்து உன்னை அழைச்சார். உனக்கு வீம்பு, கூப்பிட்டதும் போகனுமான்னு…”
“ம்மா, நிஜமாவே அப்படி இல்லை…”
“உன்னை எனக்கு தெரியும், என்னை உஅனக்கு தெரியும். நாம யாருன்னு எல்லாருக்கும் தெரியும் மகனே. நீ சொல்றதை எல்லாம் நம்ப நான் என்ன உன் மாமனாரா? உன் ஈகோவை கேட்டு தான எல்லாம் பண்ணின, இப்பவும் அதையே கேட்டுக்கோ. போனை வை, சும்மா டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு…” என்று வைத்துவிட வசீகரன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
போய்வா என்று சொன்னால் முறுக்கிக்கொண்டு வேண்டுமென்றே  பேச்சை வளர்ப்பான் என்று தெரிந்து அம்பிகா அவன் பாணியில் போய் பேசியது ஒரு புன்னகையை தர சிரிப்புடன் உள்ளே வந்தான்.
“ஓகே போகலாம். அதுக்கு முன்ன அம்மாவுக்கு ஒரு புடவை எடுக்கனும். நிதியை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு அப்படியே புடவை எடுத்துட்டு வரேன்…” என சொல்ல,
“அதெல்லாம் சரிப்பட்டு வராது. வீட்டுக்கு வந்துட்டு கோவிலுக்கு போங்க…” என்றவர் சந்நிதியை பார்க்க பார்கவியும் சந்நிதியும் அவரின் பின்னே வந்து நின்றனர். வேறு வழியின்றி புகழை பார்த்தவன்,
“உன் பைக் கீ குடு புகழ். நானும் நிதியும் அதுல வரோம்…” என்றதும் முனீஸ்வரனின் முகம் அத்தனை திருப்தியை காட்டியது. ஊரார் பார்க்க இருவரும் ஜோடியாக வருவது அவருக்கு பெருமை அல்லவா.
முனீஸ்வரன் முன்னே நடக்க உடன் நீதிமாணிக்கமும் கோமதியும் பின்னே சென்றனர் அவரின் வீட்டிற்கு. புவனும், புகழும் இன்னொரு பைக்கில் வர,
“ஏன்டா அதான் சூர்யா இருக்கானே, அவனோட கார்ல வாங்க…” வசீகரன் சொல்ல பட்டென கையெடுத்து கும்பிட்ட சூர்யா,
“செய்வினைன்னு தெரியாம இங்க வந்து சிக்கினேன். தெரிஞ்சே அந்த தெரு பக்கம் கால வைப்பேனா? கோவில் வாசல்ல வெய்ட் பன்றேன். உன் சீராட்ட முடிச்சுட்டு வந்து சேரு….” என சொல்லிவிட்டு ஆளுக்கு முன்னால் கிளம்பிவிட அபிராமியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் சந்நிதியுடன்.
பைக்கில் ஏறியதும் அவள் அவன் மீது பட்டும் படாமல் அமர பைக்கை ஸ்டார்ட் செய்யவே இல்லை வசீகரன். நேரம் கடக்க பொறுமையிழந்த நிதி அவனின் இடுப்பை சுற்றி கை போட்ட பின்னால் தான் மெல்லிய சிரிப்புடன் கிளம்பினான்.
வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் முகம் இறுக்கமாக நிதியின் இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது.
“போச்சு பழசை ரிவைண்ட் பன்றாங்க” என பயந்து அவள் பார்க்க ஒரு பெருமூச்சுடன் அந்த வீட்டிற்கு நுழைய நிலைவாசல் முன்னால் நிறுத்தி இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர்.
ஏனோ வசீகரனுக்கு அந்த வீட்டில் மூச்சை அடைப்பது போல தோன்ற புகழ் அதை அவனின் முகத்தை வைத்தே புரிந்துகொண்டான். நிதிக்குமே பார்க்க அத்தனை வருத்தமாய் இருந்தது. காலத்திற்கு இது மறையாதே? 
புகழ் அவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என நினைத்தவன் தன் தாயிடம் காதில் கிசுகிசுக்க அவரும் புரிந்ததை போல தலையசத்தவர்,
“தம்பி முதல் தடவை வந்திருக்கீங்க. பாலும் பழமும் சாப்பிடுங்க. சாப்பிட்டு போக சொல்லலாம் தான். ஆனா உங்க வேலை புரியுது. அதுதான். கோவிலுக்கு இப்ப கிளம்பினா கூட்டம் குறைவா இருக்கும்…” என கோமதி பேச,
“என்ன?…” என்று வாயை திறந்த முனீஸ்வரனை பார்வையால் அடக்கினார் நீதிமாணிக்கம்.
பாலும் பலமும் கொண்டுவந்து இருவருக்கும் கொடுத்தவர் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும்,
“தம்பி சீர் எல்லாம் பொண்ணை அனுப்பறப்போ சேர்த்து நல்ல நாள் பார்த்து அனுப்பறோம். அம்மாக்கிட்ட சொல்லிடுங்க…” என கோமதி பேச,
“அட என்னங்கத்தை, இருக்கட்டும். இந்த காலத்துலயும் ஆடி, அது இதுன்னு யாராச்சும் பார்ப்பாங்களா? நீங்க ஒன்னும் சிரமப்பட வேண்டாம்…” என வசீகரன் பொதுவாய் சொல்ல,
“எந்த காலமா இருந்தாலும் தாலிய கழுத்துல தான கட்டுறோம். காலம் மாறுதுன்னு கால்ல கட்டிக்கறோமா? இல்லையில்ல. இதெல்லாம் சம்பிரதாயம். கௌரவம்…” என முனீஸ்வரன் அவனருகே அமர்ந்திருந்த மகளை பார்த்து கோபமாய் சொல்ல,
“என்னவோ கூட்டிட்டு இப்படியே ஒடிடறவன் மாதிரி இத்த முறை முறைக்காரு. என் பொண்டாட்டி, என் பக்கத்துல, இவருக்கு என்னவாம். இப்பவும் கூட்டிட்டு போவேன். எனக்கு உரிமை இருக்கு” என மனதினுள் கடுப்படிக்க,
“நிதி போய் அவருக்கு குடிக்க தண்ணி கொண்டு வந்து குடு…” 
முனீஸ்வரனுக்கு இத்தனை பெரியவர்கள் முன்னால் மகள் அமர்ந்திருக்கிறாளே? மரியாதையாக இருக்காதே என்ற எண்ணம்.
சந்நிதியும் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கவும் வாங்கி குடித்தவன் அதை டீப்பாயில் வைத்துவிட்டு,
“நான் கிளம்பறேன். நிதியை புகழ் வீட்டில விட்டுடறேன்…” என்றதும்,
“போறது சரி, இருட்டுமுன்ன வீடு வந்து சேரனும், காலம் கெட்டுக்கிடக்கு…” விரைப்புடன் அவர் சொல்ல,
“இவர் பன்ற காமெடிக்கு அளவே இல்லை. ஏன் இப்ப பகல்ல ஒன்னும் பண்ணமாட்டேனாக்கும்? இந்த மனுஷன் என்னை டர்ட்டியா திங்க் பண்ண வைக்கிறார்…” என வாய்விட்டு முனங்கிவிட சந்நிதியின் காதுகளில் ஸ்பஷ்டமாய் விழுந்துவைக்க அப்போதுதான் கவனித்தவன்,
“கேட்டுட்டா” என சிரிப்புடன் பார்த்து புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க அனைவரையும் கருத்தில் கொண்டு ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.
“காந்தக்கண்ணழகி…” என மீண்டும் முணுமுணுக்க மனதிற்குள் சில்லென்று இருந்தாலும் சிரிப்பையும் விழுங்கி அமைதியாய் நின்றாள்.
அவர்கள் இருவரும் சொல்லிகொண்டு கிளம்ப முனீஸ்வரன் கோபமாகவே இருந்தார்.
“பாருங்க, கொஞ்ச நேரம் இருந்தா என்னவாம் இவருக்கு?…” என அண்ணனிடம் பாய,
“நீ ஒன்னும் அவங்க வீட்டுக்கு போய் அவமானப்பட்டு வரலை தம்பி. அவங்க இங்க வந்து ரொம்பவே அசிங்கப்படுத்தி நீ அனுப்பியிருக்க. அவங்க வீட்டுக்கு போனப்போ உனக்கே எத்தனை கஷ்டமா இருந்தது அங்க இருந்து எப்போ கிளம்புவோம்னு. எதுவுமே சட்டுன்னு மாறாது. அவர் இந்த வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து எத்தனை சங்கடமா உட்கார்ந்திருந்தார் பார்த்தல்ல. விடு. சீக்கிரம் சரியாகிடும்…” என்றதும் தான் அமைதியானார் முனீஸ்வரன்.
கோவிலுக்கு வந்தவர்கள் அமைதியாக சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வர அடுத்து கடைக்கு செல்கிறோம் என சந்நிதி நினைத்திருக்க பைக் ஊரை தாண்டி சென்றது.
“என்ன இது? எங்க போறீங்க? அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளோ தான்…” என சந்நிதி பதற எதையும் காதுகொடுத்து கேளாதவன் ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்த திண்டில் அமர்ந்துகொண்டான்.
அவனின் செய்கை புரியாது பார்த்தவள் அவனிடம் கோபமாய் பேச வர ஒற்றை விரல் கொண்டு அவளின் இதழ்களை பூட்டியவன் அமைதியாக தன்னருகே அமர்த்திக்கொண்டான்.
அவளின் கையை பிடித்துக்கொண்டு அவளின் முகம் பார்ப்பதும் விரல்களை வருடுவதுமாக இருக்க,
“என்னாச்சு?. ஏன் இங்க?…” 
“ஷ்….” என்றான் ஒற்றை சத்தத்தில். அதன் பின்னால் அவளும் எதுவும் பேசவில்லை. அவனும் பேசவில்லை. இருவரும் தன் இணையின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்துக்கொண்டு இருந்தனர். 
இது சந்நிதிக்குமே ஒரு அமைதியை தர அவன் தன்னுடன் பேசாதது, தன் அழைப்பை ஏற்காதது அனைத்தும் பின்னால் சென்றுவிட்டது. அரைமணி நேரம் கடந்திருக்கும்.
“வா…” என்றதோடு பைக்கை கிளப்பியவன் புகழ் வீட்டில் சந்நிதியை இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அதே போல மறு வாரமும் புடவை எடுக்க மறந்துவிட்டதாக சொல்லி வந்துவிட்டு சந்நிதியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கும், ஊருக்கு வெளியேவும் வந்தவன் வருகையை மூன்றாம் வாரம் சந்நிதி எதிர்பார்த்திருக்க அவன் வரவே இல்லை. 
இதற்கிடையில் மொபைலில் பேசுவதோ சந்நிதி வாட்ஸ் ஆப்பில் அனுப்பும் செய்திகளை பார்த்தாலும் பதிலளிப்பதோ எதுவும் இல்லை வசீகரனிடம். ஆனால் அவளிடமிருந்து செய்தி வந்தால் அடுத்த நொடி அதை பார்த்திருப்பான். 
அவன் பார்க்கிறானே அதுவே போதும் என்ற நினைப்பில் அவள் அனுப்ப இவன் பார்க்க என இப்படியே ஓட மூன்றாம் வாரம் இவன் வராமல் போக ஏன் என்று கேட்டு சந்நிதி அனுப்பிய செய்திக்கு பதிலும் தராமல் போக இப்பொழுது கோபம் கொள்வது அவள் முறையானது.
ஆடி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்க நான்காம் வாரம் கடைசி ஞாயிறு. காஞ்சிபுரம் வந்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போல புகழ் வீட்டில் அவள் இல்லை. தனக்காய் காத்திருப்பாள் என்று அவன் நினைத்திருக்க சந்நிதி வரவே இல்லை. 
கோமதி போன் செய்து அவன் வந்திருப்பதாக சொல்லி வர சொல்ல முடியாதென்று மறுத்துவிட்டாள். அதற்கு மேல் வசீகரனுக்குமே அங்கிருக்க முடியாமல் கிளம்பிவிட்டான்.

Advertisement