Advertisement

தீண்டல் – 28
             “இங்க பாருங்கண்ணே இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். நீங்களே கேட்டு சொல்லுங்க. அதுக்காக தான் நான் இங்க வந்தேன்…” 
முனீஸ்வரன் வசீகரனை முறைத்துக்கொண்டு பேசிய தொனியில் இருந்தே அனைவருக்குள்ளும் சர்வமும் நடுங்கியது. வெகு நாட்களுக்கு பின்னர் அவரின் பழைய கடுமையை மீட்டிருந்தார்.
அவரின் முகபாவனையே இன்று பெரும் பிரளயம் நடக்கப்போவதின் அறிகுறியை உணர்த்த பார்த்தவர்களுக்கு பதட்டமானது. வீட்டினுள் இருந்த நிதிக்கோ நிலைகொள்ளவில்லை.  
மெதுவாய் வெளியில் வந்து நிற்க அவளை பார்த்தவனின் மனநிலையை சொல்லும் விதமாய் இல்லை. வெகு நாட்கள் கழித்து அவளை பார்த்த இந்த தருணம் எதுவோ புதிதாய் ஒரு உணர்வு. 
அவளின் முகத்தில் தெரிந்த பயமும், பதட்டமும், மிரட்சியும் கணவனாய் உடனே அவளின் அனைத்தையும் துடைத்தெறிந்து தன்னுடன் அழைத்துச்சென்றுவிடும் வேகம் எழ கட்டுப்படுத்திக்கொண்டு அவளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
ஆனால் தனக்கான தேடலை அப்பட்டமாய் அவளின் விழிகள் இவனிடம் பிரதிபலித்தது என்பதை உவகையுடன் உள்வாங்கிக்கொண்டான். 
“இப்ப உனக்கெதுக்கு இத்தனை கோபம் தம்பி?…” நீதிமாணிக்கம் தன்மையாக கேட்க,
“கோவப்படாம என்னை என்ன மண்ணுன்னு நினைச்சீங்களா? நானும் எம்புட்டு பொறுமையா போயிட்டு இருக்கேன். ஆனா நடக்கிறது எல்லாம் சரியா தெரியலைண்ணே. எனக்கு கோவம் வரத்தான செய்யும்…”
“சித்தப்பா, பொறுமையா பேசுங்க, இது நம்ம நிதி வாழ்க்கை…” புவன் எடுத்து சொல்ல பார்கவி நீதிமாணிக்கத்தை கெஞ்சலுடன் பார்த்தார். 
“என்னடா கல்யாணம் ஆகிட்டா பெரியமனுஷனாயிடுவியா? அப்பனா இருந்தா அதுவும் பொண்ண பெத்தவனா இருந்தா தான் என்னோட கஷ்டம் என்னனு உனக்கு புரியும். கேட்டல நீயும், ஏன் மாப்பிள்ளை வரலைன்னு. இந்தா தான இருக்காரு, நேரா கேளு…”
எண்ணையில் போட்ட கடுகாய் அவர் பொரிந்து தள்ள ஒருவருக்கும் வாய் திறக்கும் தைரியமில்லை.  வசீகரனோ யாருக்கு வந்த விருந்தோ என்று விட்டேற்றியாக அமர்ந்திருக்க அது எரியும் நெருப்பில் என்னை வார்த்ததை போல இருந்தது.
“பாருங்க மனுஷன் இந்த கத்து கத்தறேன், யாரையோ சொல்ற மாதிரி கண்டுக்காம இருக்காரு. எனக்கு கோவம் வருமா வராதா?…” 
“இல்லைன்னாலும் உன் அங்கிள்த்ரெட்க்கு கோவமே வராதாக்கும்?…” சூர்யா வசீகரனின் காதை கடிக்க,
“என்ன த்ரெட்? புரியலைடா…”
“அதான்டா மாமா+நார். அங்கிள்+த்ரெட்….” என யாருக்கும் கேட்டுவிடாமல் விளக்க,
“ஓஹ் அப்படி சொல்றியா…” சாதாரணமாய் சொல்ல,
“யப்பா சாமி. ஆனாலும் உனக்கு இம்புட்டு தெனாவட்டு ஆகாதுடா. இந்த மாமனாருக்கே நீ இந்த கெத்து காட்டினா வாயில்லா பூச்சி சிக்கியிருந்தா விட்டா வச்சிருப்ப…”
“இப்பவே என்னால அவரோட இந்த கோபத்தை திசை திருப்ப முடியும்…”
“நோ சான்ஸ், அதுக்கு வாய்ப்பில்ல ராஜா…” சூர்யா நக்கலாக பேச,
“ஏன் முடியாது? வாய்ப்பிருக்கே ராஜா. இந்த வாட்ஸ் ஆப் வீடியோவை அவருக்கு பார்வேட் பண்ணினா வாய்ப்பு இருக்கா இல்லையா ராஜா?…” என்று சூர்யா குடித்து விட்டு செய்த ரகளையை அவனுக்கு காட்ட,
“நீயெல்லாம் இந்த மாமனாரோட இந்த ஜென்மம் மட்டும் இல்லை, இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் குப்பை கொட்டனும், இது என் சாபம். நான் கிளம்பறேன்…”
“இந்தா கீ…” என கார் கீயை தர,
“இதுக்கெல்லாம் வச்சுக்கறேன்டா…” என அழாதகுறையாக கார் சாவியை வாங்கிகொண்டு சூர்யா எழுந்து செல்ல,
“எங்க போறீங்க? பேசனும்னு வந்துட்டா பேசாம இப்படி இடையில போனா என்ன அர்த்தம்?…” முனீஸ்வரனின் பாய்ச்சல் சூர்யாவிடம் மையம் கொள்ள,
“ஐயோ அங்கிள் நான் இவனை ட்ராப் பண்ண தான் வந்தேன். ஒரு வேலை இருக்கு…”
“கும்மாளம் போட மட்டும் கூடவே சுத்த முடியுது. ப்ரெண்டுக்கு பிரச்சனைன்னா கூட நிக்க முடியல, இதெல்லாம் ஒரு நட்பா? என்ன பொறுப்பில்லாத தனம்?…” என பேச பேச,
“இல்ல நா இங்க…”
“உட்காருங்க…” என அதட்ட சூர்யாவின் முகம் போன போக்கில் வசீகரனும், புகழும் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டனர். 
“நல்ல குடும்பம்டா….” என கண்ணீர் வடிக்காத குறையாக நண்பனின் அருகே அமர்ந்தவன்,
“நான் என்னடா பண்ணேன். என் மேல காயறாரு?…”
“இங்க பேசுங்க, என்ன சொல்றாரு அவரு…”
“அவரு ஒன்னும் இல்லைங்க அங்கிள்…”
“இந்த அங்கிள தூக்கி கடாசுங்க அங்குட்டு…” என்றதற்கு எதை எங்கே தூக்கி வீச என்பதை போல சூர்யாவும் சுற்றிலும் பார்த்துவைக்க அவனின் அவஸ்தையில் வீட்டில் இருந்தவர்களின் முகத்திலும் லேசாய் புன்னகை. 
முனீஸ்வரன் கூட அவனின் அரண்ட முகத்தில் கொஞ்சம் கோபம் குறைய மூச்சை இழுத்துவிட்டார்.
“இங்க பாருங்கண்ணே, ஊர்ல என்னவோன்னு பேச்சு கிளம்பிடுச்சு. உங்க காதுக்கு வராம இருக்காது. கல்யாணம் முடிஞ்சு மூத்த பொண்ணு ஓர் வாரம் இருந்தா. ஆனா சிறுசு ரெண்டு நாள்ல கிளம்பிட்டா. அடுத்து வரலை. ஆடிக்கும் ரெண்டுபேரையும் அழைச்சிட்டு வந்து சீர் செய்யறது முறை….”
“ஆனா நான் போய் அழைக்கும் போது எங்கையோ காட்டுக்குள்ள படப்பிடுப்பு இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டாரு. உறவு, சனம் என்ன நினைக்கும்? பொண்ண கூட்டிட்டு தனியா வந்து நின்னேன். என்கிட்டே பேச பயப்படறவனேல்லாம் ஆடி அழைப்பு மாப்பிள்ளைக்கு இல்லையா? புது முரியா இருக்கே பொண்ண மட்டும் அலைக்கிரதுன்னு தெனாவெட்டா திமிரா நக்கலா பேசிட்டு போறான்…”
“ஊர்ல எப்படா மட்டந்தட்டி பேசுவோம்னு இதுக்குன்னே காத்துக்கிடப்பானுங்க. அதை பெருசு பண்ணுவியா நீ?…” நீதிமாணிக்கம் சமாதானம் செய்ய,
“எனக்கென்ன தெரியாதா வம்புக்கு பேசுவானுங்கன்னு. அதுக்கு ஒரு வாய்ப்ப எடுத்துக்குடுத்தது யாரு?…” என்றவர் வசீகரனை பார்க்க அவன் சலனமின்றி அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் அந்த பார்வையில் அவர் லேசாய் தடுமாற,
“வசீ, உனக்கும் நிதிக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகுதோ இல்லையோ? உன் மாமனானுக்கும் உனக்கும் பர்பெக்ட்டா ஆகுதுடா. பாரேன் உன் பார்வையில் ஓராயிரம்னு  மனுஷன் தடுமாறுரத. அப்படியே இந்த நவரசத்தை சும்மா சொட்ட சொட்ட அள்ளிவிடு. ம்ம்ம்ம்…” என சூர்யா கேலி பேச,
“அடங்கறியா? இல்ல…” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப,
“உண்மையை சொன்னா இந்த உலகம் இப்படித்தான். அடங்க சொல்றவன் என்னை ஏன்டா கூட்டிட்டு வரனும்? நான் கோவமா போறேன்…” என சூர்யா எழ,
“தம்பி, உட்காருங்க, அதான் பேசிட்டு இருக்கோம்ல….” மீண்டும் முனீஸ்வரன் சூர்யாவை முறைக்க,
“பாயின்ட் வரட்டும்னு வெய்ட் பண்ணிட்டிருந்தேன் அங்கிள். அதுக்குள்ளே வாஷ் ரூம் போய்ட்டு வரேன்…” என கையை காண்பிக்க,
“வாங்க நான் கூட்டிட்டு போறேன்…” புகழ் அவனுடன் தன்னறைக்கு செல்ல அவனிடம் எகிறிவிட்டான் சூர்யா.
“என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? குடும்பமாடா இது? அவன கேட்க உன் சித்தப்பாவுக்கு தைரியமில்லா. என்னை புடிச்சு ஏறுறாரு. எனக்கு கோவம் வந்துச்சு…” என்றவன் முறைப்புடன் பாத்ரூம் போய்விட்டு வந்து,
“பசில கண்ண கட்டுதுடா, பச்சை தண்ணியாச்சும் கண்ணுல காண்பி. நல்லா கவனிக்கிறாங்கைய்யா. வீட்டு மாப்பிள்ளை வந்திருக்கான். வந்தவனை சாப்பிட சொல்ல ஒரு ஆள் இல்லை. மைக் இல்லாத குறையா மேடை கிடச்சுடுச்சேன்னு அவரேன்னன்னா ஓவர் பேச்சு பேசறாரு…” என்று முன்னே நடக்க தவறை உணர்ந்த புகழ்,
“ஓஹ் ஸாரி சூர்யா, நீங்க உட்காருங்க, குடிக்க எடுத்துட்டு வரேன்…”
“அதுக்குன்னு பச்சத்தண்ணிய கொண்டுவந்திடாத. உன் சித்தப்பா முன்னாலையே என் காதுல ஊத்திட்டு வேகமா எந்திச்சு போய்டுவேன் பார்த்துக்க…” என பேசிவிட்டு நல்லபிள்ளை போல அவன் வந்து அமர்ந்துகொள்ள,
“ம்மா, வந்தவங்களை சாப்பிட சொல்லலை. குடிக்க கொண்டுவாங்க…”
“இதோ, அபிராமி போய் சூடா காபி கொண்டுவா…” என கோமதி மருமகளை ஏவ,
“ஏற்கனவே அடிக்கிற வெயில்ல தலைக்குமேல சூரியன் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுட்டு இருக்காரு. போதாததுக்கு இந்த மனுஷன். காதுகுடுத்து கேட்டே நான் டயர்டாகிடுவேன். இதுல காபியா? அதுவும் சூடா…” என நொந்தேபோனான் சூர்யா. 
அபிராமி அடுத்த சில நொடிகளில் காபியோடு வரவும் வசீகரன் வாங்கிக்கொள்ள சூர்யாவோ,
“இதை கொஞ்ச நேரம் ப்ரிட்ஜ்ல வச்சு அப்பறமா தாங்களேன். நான் காபி அப்படிதான் குடிப்பேன்…” என சொல்லவும்,
“வந்தவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கொண்டுவர தெரியாதா உனக்கு? எத்தனை தடவை தான் உனக்கு சொல்ல? பொறுப்பே வராதா? என்ன வேணும் வேண்டாம்னு கேட்டு கொண்டுவா. அவர யாருன்னு நினைச்ச? உன் இஷ்டத்துக்கு கொண்டுவர?…”
“இல்ல மாமா அத்தை தான்…” அபிராமிக்கு அழுகையே வந்துவிட்டது.
“அத்த சொன்னா? நீ கேட்க வேண்டியது தான? இத எப்ப கத்துக்க போற? வந்திருக்கறது இந்த வீட்டு மாப்பிள்ளை. உனக்கு அண்ணன்றது எல்லாம் உங்க வீட்டோட. இந்த வீட்டுக்கு நீ மருமக. இந்த வீட்டு மாப்பிள்ளைக்கான மரியாதையை ஒழுங்கா குடு. புரியுதா?…” என்று ஆடு ஆடுவென ஆடி தெற்க்க,
“இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை?. எனக்கு என் வேலை முக்கியம். இது ஒன்னும் காலையில போய்ட்டு சாயங்காலம் வீட்டுக்கு வர கவர்மென்ட் வேலைன்னு நினைச்சீங்களா? என் தொழில்ல இப்படித்தான். எப்போ சான்ஸ் கிடைக்குதோ அதை பயன்படுத்திக்கனும். அதையும் திறமையோட…” 
“வசீ, அமைதியா இருடா…” சூர்யா சொல்லியும் கேட்காதவன்,
“பொண்ணை கட்டிகுடுத்தா நீங்க வான்னு சொல்ற நேரமெல்லாம் உங்க வீட்டுக்கு வந்துட்டு போனா எல்லாம் ஆச்சா? சம்பாத்தியம் யார் பன்றது? உங்க மகளை கண்கலங்காம நல்ல வச்சு வாழ சம்பாதிக்க வேண்டாமா? இல்லை உங்க வீட்டோட வந்து உங்க ஜவுளிக்கடையை பார்த்துக்கனும்னு நினைக்கறீங்களா?…”
“நான் என்ன அந்த அர்த்தத்திலையா சொன்னேன்?…” முனீஸ்வரன் மென்றுவிழுங்க,
“எந்த அர்த்தத்துல சொன்னீங்களோ? உங்க பொண்ணே என்கிட்டே கோச்சுக்கிட்டு வந்தே ஆகனும்னு பிடிவாதம் பண்ணினா பெரியவங்களா நீங்க தான் சொலி புரியவைக்கனும். அதோட ஆடி மாசம் அன்னைக்கே வந்தா தான் கொண்டாடின மாதிரியா? இல்லை ஆடிக்கு வந்தா தான் மரியாதையா?. மத்த நாள் வந்தா ஏத்துக்க மாட்டீங்களா?…”  
“சபாஷ்” மனதிற்குள்ளே சூர்யா குத்தாட்டம் போட முனீஸ்வரன் அமைதியாய் பார்த்தார்.
“உங்க சூழ்நிலை எனக்கு புரியுது. அதே நேரம் என்னோட சூழ்நிலையும் நீங்க புரிஞ்சுக்கனும் மாமா. நான் நிதியை இருக்க இருக்க சொல்லியிருந்தேன். ஷூட் முடிஞ்சுவரவும் சேர்ந்து போவோம்னு. அவன் உங்ககிட்ட சொல்ல பயந்து சொல்லாம இருந்துட்டா. இதுல என் தப்பு என்ன இருக்கு?…” என்றதுமே மகளை அவர் திரும்பி பார்க்க நடுங்கிப்போனாள் சந்நிதி.
“இங்க பாருங்க மாமா, முதல்ல நீங்க நிதானமா யோசிங்க. நீங்களே இத்தனை கோபப்பட்டா நாளைக்கு உங்க பொண்ணுக்கு யார் நல்லது சொல்லுவா. இதை பேசறதுக்குள்ள எதுக்காக கோபத்தை அபிக்கிட்ட காட்டறீங்க? வீட்டுக்கு வந்த மருமக பொண்ணை சந்தோஷமா வச்சுக்கிட்டா தான் உங்க பொண்ணு வாழ்க்கையும் நல்லா இருக்கும். இது நான் சொல்லலை. பெரியவங்க சொன்னது…”
அத்தனை நேரம் கோபமும் ஆத்திரமுமாய் இருந்த முனீஸ்வரன் அமைதியாக இருக்க,
“மாப்பிள்ளையே சொல்லிட்டாரு. உன் மேல தான் தப்பு தம்பி. எடுத்தேன் கவுத்தேன்னு இப்படி பேச கூடாது…” நீதிமாணிக்கம் சொல்ல,

Advertisement