Advertisement

“நீ இப்படி சொல்லுவன்னு தான் அம்பிகாம்மா குடுத்துவிட்டுட்டாங்க. இரு எடுத்துட்டு வரேன்…” என்றவன் கேரியரை கொண்டுவந்து டேபிளில் வைக்க,
“அனுவையும் கூப்பிடு, சேர்ந்து சாப்பிடுவோம்…”
“அவ ஒரு போன் கால்ல  இருக்கா…”
“ஹ்ம்ம்…” என சொல்லிவிட்டு எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு வர அவனுக்கும் எடுத்துவைத்து தனக்கும் வைத்துகொண்ட சூர்யா,
“என்னடா நிதிட்ட பேசினியா?…” என்று ஆரம்பிக்க, 
“இல்லையே…” சாப்பிட்டுக்கொண்டே அவனும் பதில் கொடுக்க இப்பொழுது சூர்யா தான் குழம்பினான். 
“என்ன கொஞ்சமும் பொண்டாட்டியை பிரிஞ்ச கவலை இல்லாம இருக்கான். கோவமா தான் இருக்கானோ? என பார்க்க,
“என்னடா லுக்கு? தட்டை பார்த்து சாப்பிடு…” வசீகரன் சொல்ல,
“உனக்கு எதுவும் வேணுமான்னு பார்த்தேன்…” சமாளிப்பாய் சூர்யா பேச,
“முதல்ல உன் தட்டில என்ன இருக்கு இல்லைன்னு பாரு. என் தட்டை நான் பார்த்துப்பேன். நான் என்ன சின்ன குழந்தையா?…” என்றதற்கு இன்னமும் குழப்பம் தான் சூர்யாவிற்கு. 
“நீ தட்டை பத்தியா பேசற?…” என இழுக்க,
“நீ எதைன்னு நினைக்க?…” வசீகரன் கிடுக்கிபிடி போட,
“ஐயோ சாவடிக்கிறானே என்னிய” என நொந்துபோனான்.
“நீ கோவமா இருக்கியா வசீ?…”
“என்ன தேவைக்கு?…” மீண்டும் கொஞ்சம் சாதம் வைத்து மோர்குழம்பை ஊற்றிக்கொண்டு வசீகரனும் கேட்க,
“நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன்டா. நீ நிதிக்கும் உனக்கும் டிக்கெட் புக் பண்ணினதும், ரிசார்ட்ல காட்டேஜ் புக் பண்ணினதும் எனக்கு தெரியும்டா. இப்ப தங்கச்சி இல்லைன்னு உனக்கு கோவம். அதானே நிதி கூட பேசலை?…” என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தவன் அமைதியாக,
“இப்போ என்னடா? நீ ஒரு போன் பண்ணி வான்னு சொன்னா நிதி வந்திடுவா…”
“மாட்டா. நானும் மாட்டேன்…”
“என்ன பதில் இது?…”
“…”
“ஓகே விடு, இந்த பிரிவும் கூட நல்லது தான். உன்னை நிதி புரிஞ்சுக்க இந்த இடைவெளி தேவைன்னு நினைச்சுக்க. உங்களுக்குள்ள இன்னும் எதுவோ சரியில்லைன்னு தோணுது. இப்ப இந்த கேப் அதுக்கு ஒரு நல்ல சொல்யூஷன் தரும்னு நம்பறேன். உன்னை இன்னும் நல்லா புரிஞ்சுப்பா…”
“எப்படி எப்படி? நான் என் வாயால சொல்லி புரிஞ்சுக்காம இப்ப நான் சொல்லாம புரிஞ்சுப்பாளா? என் இருப்பு உணர்த்தாததை என் இல்லாமை உணர்த்திடுமா?…” அத்தனை கோபமாக அவன் கேட்க,
“இது விதண்டாவாதம் வசீ. உங்க கல்யாணத்துல அவங்க எப்படி இருந்தா?. முகமே சரியில்லை. இப்ப கல்யாணத்துக்கு பின்னால உன்னை புரிஞ்சு ஏத்துக்கிட்டு நடந்துக்கலையா? இது நிதி எடுத்த முடிவில்லை. அவங்கப்பா சனீஸ் எடுத்த முடிவு. நிதியை கோவிச்சு நோ யூஸ்…”
“ஏத்துக்கிட்டாளா? காதல் ஏத்துக்க கூடிய விஷயமாடா?…”
“என்ன விஷயம்டா, சொல்லேன்…”  
“என்னோட காதல் நிதிக்கு ஆமோதிப்பா இருக்க கூடாது. ஆராதிக்க கூடியதா இருக்கனும்னு நான் விரும்பறேன். அதுல என்ன தப்பு?…”
“ஆராதிப்புன்னா சாமிக்கு ஆராத்தி காட்டுவாங்களே அதாடா?…” என சொல்லி பெரும்சிரிப்பு சிரிக்க வசீகரன் முறைக்க,
“புரியற மாதிரி சொல்லேன்…”
“நிதி என்னை ஏத்துக்கிட்டான்னு சொல்றது ஆமோதிக்கிற விஷயம். ஆனா நிதி என்னோட காதலை உணர்ந்து அதற்கு மிகையான காதலை எனக்கு குடுக்கறது என் காதலுக்கான ஆராதனை.  இதை தான் எதிர்பார்க்கறேன்…” வசீகரனின் முகத்தில் அத்தனை உணர்ச்சிகள் இதனை சொல்லும் பொழுது.
“அப்ப ஆராதிக்காம ஸார் ஏன் டிக்கெட் புக் பண்ணுனீங்களாம்?…” என கேட்ட பின்னர் தான் ஐயோவென பார்த்தான். வசீகரன் எரிப்பதை போல பார்க்க அனுவும் வந்துவிட,
“ஹேய் நான் வரதுக்குள்ள சாப்பிட ஆரம்பிச்சாச்சா?…” என தனக்கும் வைத்துக்கொள்ள,
“வசீ எடிட்டிங்க்ல ஹெல்ப் பண்ணவா?…” அவனின் கோபம் உணர்ந்து கேட்க,
“நீ புடுங்கற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான்…” என கடுப்பாய் வசீகரன் சொல்ல,
“பாமா…” என அனுவை சூர்யா அழைக்க,
“மாமா…” என்றாள் அவனை போலவே,
“காதலை பத்தி சொன்னதுக்கு இவன் என்னை கலாய்ச்சுட்டான்….” 
“அவன் கிடக்கறான் விடுங்க, டாங்கிக்கு தெரியுமா டக் கிரேவி வாசனை…” என அனு அவனை வெறுப்பேற்ற இருவரையும் வசீகரன் முறைக்க, 
 “பேசாம நேரா போய் கூட்டிட்டு வந்திடேன். இத்தனை கடுப்பா எதுக்கு இருக்கனும்?…”
“அவ போனதும் என்னை அவ பின்னாலையே போக சொல்றியா? அதுக்கு வேற ஆளை பாரு…” என சொல்லிவிட்டு விருட்டென எழுந்து சென்றுவிட,
“ரொம்ப கோவமா இருக்கான் போலையே?…” என அனு கவலைப்பட,
“அவன் ஏற்கனவே சொல்லிருக்கான் பொண்டாட்டி போனா பின்னாடி போக மாட்டான்னு. அவன் என்ன என்னை மாதிரியா? மானஸ்தன்…” என சொல்லி அனுவை பதறிப்போய் பார்க்க,
“என்ன சொன்னீங்க?…” என பத்திரகாளியாய் அவள் அவதாரமெடுக்க,
“ஐயோ நா அந்த அர்த்தத்துல சொல்லலைம்மா. அனு, பாமா, அனுபமா…” என அவளை கொஞ்ச,
“இந்த ஆபீஸ்லையே மானஸ்தனாவே இருங்க. வீட்டுக்கு வந்தீங்க அவ்வளோ தான்…” என எரிந்து விழ பேசிவிட்டு வேகமாய் கிளம்பிவிட தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் சூர்யா.
அந்த வார இறுதியில் சூர்யாவை அழைத்துக்கொண்டு வசீகரன் கிளம்ப எங்கே என கேட்காமல் அவனும் வந்துவிட்டான்.
“என்னடா பேச்சிலர் பார்ட்டியா?…” சூர்யா கேட்க,
“என் மாமனார் குடுக்காராம். வரியா?…” என்றதும் கப்சிப் சூர்யா.
அந்த கோவில் நிகழ்வுக்கு பின்னர் அவன் பலமுறை அந்த வீடியோவை போட்டு பார்த்து பார்த்து புலம்புவான். அதுவும் டீப் கிஸ்ஸி என கேட்கும் நேரம் கண்ணை மூடிக்கொள்வான்.
“தெய்வம் மாதிரி காப்பாத்திட்டடா. குடுத்திருந்தா செத்திருப்பேன். நினைச்சு பாரு அந்த கரடுமுரடான தார் ரோடு கன்னத்துல…”
“நிஜமா கன்னத்துல?…” என கேட்டு வெறுப்பேத்துவான் வசீகரன்.
“நேரம்டா, போயும் போயும் அந்தாளுக்கு ஐ லவ் யூ சொல்லிருக்கேன் பாரு. இப்ப அனுவுக்கு சொல்லன்னும்னாலே வாய் வரமாட்டிக்கு. இதுதான் ஞாபகத்துல வந்து இம்சையா இருக்கு. அவ அதுக்கு மேல காண்டாகறா. அவருக்கெல்லாம் சொல்ல முடியுது, எனக்கு சொல்ல முடியலையான்னு பஞ்சாயத்து வைக்கிறாடா. தூக்கத்துல வேற அப்பப்ப நான் செல்லோ ஐ லவ் யூன்னு சொல்ல யாருக்கு சொன்னீங்கன்னு கேட்கறா…” என புலம்பாத நாளில்லை.
மீண்டும் முனீஸ்வரன், பார்ட்டி எனவும் பொங்கிவிட்டான் சூர்யா.
“எனக்கு டைவர்ஸ் வாங்கிகுடுக்காம மாமனாரும், மருமகனும் ஓயமாட்டீங்க…” என எரிந்துவிழ அப்போதுதான் செல்லும் பாதையை கவனித்தான். கார் காஞ்சிபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
“அடேய் என்னடா இது?…” 
“சும்மா புகழை பார்க்கனும். அதான் ஒரு விசிட்…”
“அதுக்கு நீ போகவேண்டியது தானே? என்னை ஏன் இழுத்துவிடற. தேரை இழுத்து தெருவுல விடறதே பொழைப்பா போச்சு உனக்கு. நான் வரமாட்டேன்…” என கார் கதவை திறக்க பார்க்க வசீகரனின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. 
“என்னடா அன்னைக்கு என்னவோ பொண்டாட்டியா இருந்தாலும் பின்னாடி போகமாட்டேன்னு சொன்ன. இப்ப எதுக்கு போறியாம்? உன்னை போய் மானஸ்தன்னு நினைச்சேன் பாரு…”
“நான் சொன்னது காதுல விழலையா? நான் ஏன் அவளை பார்க்க போகனும்? புகழை தான் பார்க்க போறேன்…” 
“அய்ய நம்பிட்டேன். இதெல்லாம் நல்லாயில்ல பார்த்துக்க…” என்றவன் வேறு வழியின்றி கண்ணை மூடி உறங்க முற்பட உதட்டில் உறைந்த புன்னகையோடு பாதையில் கவனமானான் வசீகரன்.
உறங்கும் பொழுதும் மனைவியின் நினைப்பு அவனை தவிக்கவிட மூடிய விழிகளுக்குள் அவனின் மிரட்சியும், தவிப்புமான முகம் வந்து உறக்கத்தை கலைத்தது. இதற்கு மேலும் முடியாதென கிளம்பியவன் புகழிடம் வேலையாக வருவதாக தகவல் சொல்லிவிட்டான்.
“வேலையா தான் வரேன் உன் வீட்டுக்கு. ஆனா நான் வரும் போது உன் தங்கச்சி உன் வீட்டில இருக்கனும். பார்த்துக்க…” என சொல்லிவிட,
“இவங்க அலப்பறை தாங்கமுடியலைப்பா. என் காலம் முழுசும் இதுங்களுக்கு கட் &பேஸ்ட் பன்றதுலையே காணாம போயிடும் போல?…” என்ற புலம்பலுடன் பார்கவியிடம் நிதியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வரும் படி சொல்ல அதற்குள் நீதிமாணிக்கம்  முனீஸ்வரனுக்கு தகவல் சொல்லிவிட்டார் புகழுக்கு தெரியாமல்.
வசீகரன் வீட்டின் வாசலில் காரை நிறுத்த வீட்டை பார்த்ததும் தான் சூர்யாவிற்கு மூச்சே வந்தது.
“ஆனாலும் நண்பேண்டா. புகழ் வீட்டுக்கு வந்திருக்க. இல்லைன்னா காரை விட்டு இறங்கிருக்கவே மாட்டேன். எனக்கும் தெரியும்டா என்மேல உனக்கு அம்புட்டு பாசம்ன்னு…” என சொல்லிக்கொண்டே உள்ளே வர புகழும் வாசலுக்கே வந்துவிட்டான் அழைக்க.
மூவருமாய் பேசிக்கொண்டு வீட்டினுள் நுழைய நடுநாயகமாய் முனீஸ்வரன். முகத்தில் அத்தனை ஆக்ரோஷம். கையில் அருவாள் இல்லாத அய்யனாராய் சிவந்த விழிகளுடன் வசீகரனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அவரை அங்கே எதிர்பாராதவன் புகழை பார்க்க அவன் கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு சூர்யாவை பார்க்க அவன் முனீஸ்வரனை பார்த்ததில் சிலையாக நின்றுவிட்டான்.
வசீகரனின் அதிர்வு எல்லாம் ஒரு நொடியே. பின் சாதாரணமாய் முகத்தை வைத்துக்கொண்டவன் நகரமாட்டேன் என்பதை போல நின்ற சூர்யாவை இழுத்துக்கொண்டு வந்து தன்னுடன் அமர்த்திக்கொண்டான்.
முனீஸ்வரனுக்கு வசீகரன் மேல் கட்டுக்கடங்காத கோபம். ஆடிக்கு அழைக்க சென்றிருக்க இவனோ முக்கியமான வேலை, ஷூட்டிங் இருக்கிறதென மறுத்துவிட ஊரில் கேட்பவர்களுக்கு பதில் சொல்லமுடியவில்லை அவரால்.
பெண்ணை மட்டும் அழைத்து வந்துவிட்டவர் வேலை முடிந்து வந்தாவது வீட்டிற்கு வருவார் என எதிர்பார்க்க அதுவும் இல்லாமல் போக, இப்பொழுது வருகிறேன் என்று தன் அண்ணனின் வீட்டில் வந்து அமர்ந்திருக்க முனீஸ்வரனின் பொறுமை பறந்திருந்தது.
தன்னை அவமதித்துவிட்டதாக நினைத்திருக்க அவனோ சந்நிதியை பார்வையால் தேடியபடி இருந்தான். முனீஸ்வரன் இன்று இரண்டில் ஓன்று பார்க்காமல் விடப்போவதில்லை என்று இருந்தார்.  

Advertisement