Advertisement

தீண்டல் – 25
                அம்பிகாவிடம் சொல்லிகொண்டு மாடிக்கு வந்தவன் படுக்கையில் ஒருபக்கமாய்  படுத்திருந்தவளை கண்டவனின் முகம் மென்மையுற்றது.
“வந்ததுல இருந்து கொஞ்சம் கூட ஒரு டீப் ஸ்லீப் இல்லை…” என சொல்லிக்கொண்டவன் புடவையில் உடலை குறுக்கி கையை கட்டி அவள் படுத்திருக்க அருகில் போய் எழுப்பினான்.
“நிதி…” என்று இரண்டு தடவைக்கு மேல் அழைத்தபின்னர் தான் மெதுவாய் அசைந்தாள் சந்நிதி. 
“நிதி முழிச்சுக்கோ…” என்று அருகில் அமர்ந்து அவளின் கன்னம் தட்ட சோம்பலாய் கண்விழித்தவள் அவனை பார்த்ததும் அடித்துபிடித்து எழுந்து அமர்ந்து புடவையை சரிசெய்ய கோபம் வருவதற்கு பதிலாய் புன்னகைத்தான்.
“இந்த அவஸ்தைக்கு பேசாம சுடி போட்டுக்கலாமே?…” என்றவனை நிமிர்ந்து பார்க்காமல்,
“அம்மா பகல்ல புடவை தான் கட்டனும்னு சொல்லியிருக்காங்க…”
“அப்போ நைட் சுடிதார் போடவும் உன் அம்மாதான் சஜெஸ்ட் பண்ணினாங்களா?…” என கேட்டவனின் குரலில் குறும்பு மீண்டிருக்க,
“இல்லை, இல்லை, நானா தான்…”  பதறி மறுத்தவள் அவனின் விழிகளை பார்த்ததும் மௌனமானாள்.
“நிதி…”
“…..”
“வா சாப்பிடலாம்…” 
“இல்லை நான் கொஞ்சம் முன்ன தான் அத்தை கூட சாப்பிட்டேன். எனக்கு வேண்டாம்…”
“ஓஹ், அப்போ ஓகே…” என்று சட்டை பட்டனை கழற்றி தளர்த்தியவன் அப்படியே படுத்துக்கொள்ள சந்நிதியின் மனதோ அடித்துக்கொண்டது.  
காலையும் உண்ணவில்லை, மதியமும் வேண்டாம் என்கிறானே? என வருந்தியவள் மனது இப்பொழுது தெளிவாகி இருந்தது.
நடந்த எதையும் மாற்ற இயலாது. ஆனாலும் மனதின் நெருடல்களை ஒதுக்கிவைத்து அவனோடு வாழ முயற்சிக்க நினைத்தாள். அதற்கு காரணம் அம்பிகா நேற்றால் மிகையில்லை.
வளர்ந்திருந்தாள். படித்திருந்தாள். ஆனால் குடும்பம் என்பது அவர்களின் குடும்பத்தை ஒத்தது என்னும் எண்ணம் ஸ்திரமாய் இருந்தது.
கம்பன் ராதா தம்பதிகளை பார்க்கும் நேரம் இப்படியெல்லாம் இருக்கிறார்கள் ஏன் தன் வீட்டில் அப்படி இல்லை என்று தான் தோன்றும். அப்படி இருப்பவர்கள் அபூர்வம் என்று நினைத்திருந்தாள்.
அது இயல்பு என்பது முனீஸ்வரனின் வளர்ப்பு ஏற்க மறுத்தது. வசீகரன் வேறு அறிமுகமானதிலிருந்து அடாவடியாக நடந்துகொள்ள அவனும் அப்படித்தான் என்று நினைத்திருக்க இப்பொழுது வந்து அமைதியாக பேச குழம்பி போனாள்.
எந்த வசீகரன் இதில் நிஜம் என்று புரியாமல் அவனை பார்த்தபடி அமர்ந்திருக்க மூடிய கண்களை திறந்தவன்,
“நீயும் தூங்கு நிதி…” மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். ஒருவேளை தான் பரிமாறவேண்டும் என நினைக்கிறானோ என எண்ணியவள்,
“ப்ளீஸ் எழுந்திரிங்க, நான் உங்களுக்கு சாப்பாடு வைக்கிறேன்…”
“அதெல்லாம் வேண்டாம், என்னோட சேர்ந்து சாப்பிடனும்னா நானும் சாப்பிடறேன். இல்லைனா இருக்கட்டும்…” கண்ணை திறக்காமல் பேச,
“ஐயோ நான் தான் சாப்ட்டேன்னு சொல்றேனே?…”
“எனக்கு தெரியாதா நீ எப்படி சாப்பிட்டிருப்பன்னு. காலையில நான் சாப்பிடலைன்னு நீயும் சரியா சாப்பிட்டிருக்க மாட்ட. இப்பவும் அம்மாவுக்காக ஏதோ பேருக்கு சாப்பிட்டிருப்ப. ரைட்?…” 
அவளை பார்த்தவாறு இப்பொழுது கேட்க அவளை அறிந்தவனாக அவன் சொல்லியவிதம் சந்நிதியை இன்னும் அவன் பக்கம் இழுத்தது. இந்த அன்பும், அனுசரணையும் அவளின் மனதை இனிக்க செய்திருந்தது.
“உங்களுக்கு எப்படி தெரியும்?…” அப்படித்தான் என்பதை போல அவளும் சொல்ல,
“இங்க பாரு நிதி நீ ஒத்துக்கிட்டாலும், இல்லைனாலும் இதுதான் நிஜம். உனக்கு என்னை பிடிக்கும்ன்றது. என்னோட மனசும், கண்ணும் என்னைக்கும் பொய் சொல்லாது. நீ அதை ஒத்துக்காம இருக்க உனக்கு ஆயிரம் குழப்பம் இருக்கலாம். அதை உடனே சரி பண்ணனும்னு இல்லை. கொஞ்சம் கொஞ்சமா போகப்போக நீயே புரிஞ்சுப்ப…”
“நான் ஒன்னும் அந்த மாதிரி உங்களை பார்க்கலை. யாரோ என்னை ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கறது மாதிரி தோணுச்சு. அதான் பார்த்தேன். வேற எதுவும் இல்லை. நீங்க என்னை பார்க்கிறதை அப்பா பார்த்துட்டா. அந்த பயம் வேற…” சந்நிதி சொல்லியதையே சொல்ல சொல்ல,
“பயந்து பார்த்தியோ பாசமா பார்த்தியோ பார்த்த தானே? அது தான் பிடிச்சது எனக்கு…” வசீகரன் அதற்கும் அர்த்தம் கற்பிக்க இவனிடம் இனி பேசவே கூடாது என்று திரும்பிக்கொண்டாள்.
“எனக்கு ரொம்ப பசிக்குது நிதி,. இப்பவும் நீ வரலையா?…” என்று பிடிவாதமாய் கேட்க வேறு வழியின்றி அவனுடன் எழுந்து நடந்தாள்.
“அதான வரயில்ல, சிரிச்ச முகமா வரது…” அதற்கும் அவன் சொல்லியவிதம் அவளின் முகத்தில் புன்னகை பூக்களை மொட்டவிழ செய்ய அதிலேயே கொஞ்சம் திருப்தியாகிவிட்டான்.
கீழே வந்ததும் அம்பிகாவை பார்க்க அவர் கிட்சனில் எதையோ செய்துகொண்டிருந்தார். தாளிக்கும் வாசனை மூக்கை துளைக்க,
“நான் பார்த்துட்டு வரேன்…” என்று போக,
“அம்மாவே வருவாங்க, நீயும் உட்கார்…” என்று அவளை அமர்த்தியவன் இருவருக்குமாய் தட்டை எடுத்துவைத்து பரிமாற அம்பிகா பார்த்தால் தவறாக எடுத்துக்கொள்வாரோ என்று பயந்து,
“நீங்க விடுங்க, நான் போடறேன். அத்தை பார்க்க போறாங்க…”
“எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கேன். இப்ப என்ன அவனும் பரிமாறட்டும். இதுல என்ன இருக்கு. வருஷமெல்லாம் கரண்டியும் தட்டையும் பிடிச்சுட்டு நாமளே நிக்க முடியுமா?…” என்று அம்பிகா வர அவரன் கையில் இருந்த கிண்ணத்தில் தயிரின் மேல் வரமிளகாய், வெங்காயத்தை தாளித்து கொட்டியிருந்தார்.
“என்னத்தை இப்ப தாளிச்சுட்டீங்க? இங்க வேற தயிர் இருக்கு…” என மேஜையில் இருந்த இன்னொரு கிண்ண தயிரை காட்ட,
“உன் புருஷனுக்கு நாக்கு ரொம்ப நீளம், உன்னை கூப்பிட போகும் போதே தயிரை பார்த்துட்டு போன பார்வையே சரியில்லை. அதான் அவனே கேட்கிறதுக்குள்ள தாளிச்சிடுவோம்ன்னு தான்…” என சொல்லி அவனுக்கருகில் வைத்துவிட்டு அவனெதிரில் அமர்ந்தார்.
“சாப்பிடு நிதி…” என்றவன்,
“ம்மா, நீங்க ஒரு ரவுண்ட்?…” தாயை கேட்க,
“என் வீட்டுக்காரர் ஒரு ரவுன்ட் கூப்பிடுவார். அப்ப நீ இன்னொரு ரவுண்ட் வருவியா? பேசாம சாப்பிடுடா…” என்று பேசிக்கொண்டே சாப்பிட அம்பிகா பொரித்துவைத்திருந்த வடாமை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே பேச சந்நிதிக்கு அந்த சூழல் அத்தனை பிடித்தமானதாக இருந்தது.
தன் வீட்டில் நால்வரும் சேர்ந்து உண்ணுவது அபூர்வம். எப்பொழுதாவது தான் நடக்கும் நிகழ்வு. அதிலும் யாரும் எதுவும் பேசிவிட முடியாது. அதிலும் பார்கவி நின்றுகொண்டே தான் பரிமாறுவார்.
கவனம்ன்றி எதையாவது தட்டில் வைக்க மறந்துவிட்டாலோ அவ்வளவு தான்.வார்த்தைகளால் போர் தொடுத்து பார்கவியை குற்றுயிர் ஆக்கிவிடுவார்.
சாப்பிடும் போது தாங்களும் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அதற்கும் எரிந்துவிழுவார். பிடிக்கும், பிடிக்காதென்னும் பாகுபாடே இன்றி அனைத்தையும் உண்ணவேண்டும்.
நினைவுகள் தன் வீட்டை சுற்றி சுழல அம்பிகாவும் வசீகரனும் பேசிக்கொண்டிருந்தவர்கள் இவள் உண்ணாமல் இருக்க,
“நிதி?…” என்றான் அவன்.
“ஹாங்…”  என திடுக்கிட்டு திரும்பியவள்,
“ஸாரி, ஸாரி, எதுவும் போடனுமா?…” என்று பதறி அவனின் தட்டை பார்க்க,
“ஹேய் ஈஸி, சாப்பிடாம திகைச்சு போய் இருந்தியா, அதான் கூப்பிட்டேன்…”
“ஹ்ம்ம், பசிக்கலை, அதான்…” முணுமுணுப்பாய் சொல்ல,
“உங்கம்மாகிட்ட பேசறியா?…” அவளின் கை பற்றி அவன் கேட்கவும் கண்கள் கலங்க இல்லை என தலையசைத்தாள்.
“அப்பா வாரம் ஒருக்கா பேசினா போதும்னு சொல்லியிருக்கார். இங்க அப்பத்தான் ஒட்டுவேன்னு…” என்றதும் பல்லைக்கடித்தவன் தன் மொபைலை எடுத்து முனீஸ்வனுக்கு வீடியோ கால் செய்ய,
“ஐயோ வேண்டாம், அப்பாவுக்கு கூப்பிடாதீங்க. ப்ளீஸ்…” என்றவளின் பதட்டத்தை கண்டுகொள்ளாதவன் முனீஸ்வரன் எடுக்கும் வரை அழைத்தான். 
இரண்டாம் அழைப்பில் எடுத்தவர் திரையில் மருமகனை பார்த்ததும் அப்படியே இருந்தார். அவன் பேசட்டும் என்று இவனும், இவன் ஆரம்பிக்கட்டும் என அவரும் பார்த்திருக்க,
“பாரேன் இவன் பார்க்க, உன் அப்பா பார்க்க. உன்னை பேச சொல்லி அழைச்சுட்டு இப்ப உன் அப்பாவை பார்த்ததும் பையன் மெர்சல் ஆகிட்டான்…”
அம்பிகா சந்நிதியின் காதை கடிக்க அந்த பயத்திலும் அவளுக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் என்ன சொல்வாரோ தந்தை என்கிற படபடப்பு குறையவே இல்லை.
“சொல்லுங்க…” என முனீஸ்வரனே இறங்கி வரவும்,
“அத்தைக்கிட்ட பேசனும். இருக்காங்களா?…” என்றான் இவனும்.
“டேய் மாமான்னு பேசேன்…” என அம்பிகா கண்டிக்க ஒரு நொடி ம்யூட் செய்தவன்,
“அவர் என்னை மாப்பிள்ளைன்னு சொல்லட்டும்…” என சொல்லி ம்யூட்டை எடுத்துவிட்டான்.
சில நொடிகளில் பார்கவி வரவும் அவரை பார்த்து அவன் புன்னகைக்க அவரோ,
“நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை? சாப்ட்டீங்களா? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?…” என்று கேட்க முனீஸ்வரன் பார்கவியை முறைத்துவிட்டு தள்ளி அமர்ந்தார் அவர்கள் பேசட்டும் என்று.
“நான் நல்லா இருக்கேன் அத்தை. அம்மா பேசனும்னு சொன்னாங்க, இருங்க தரேன்…” என்று அம்பிகாவிடம் தர அவர் நிதியோடு நெருங்கி அமர்ந்தார்.
மகளை பார்த்ததுமே கலங்கிய கண்களை துடைத்துக்கொண்ட பார்கவி அம்பிகாவிடமும் நலம் விசாரிக்க மூவருமாய் பேசிக்கொண்டே இருக்க நேரம் செல்ல செல்ல அதற்குள் சந்நிதியும், வசீகரனும் சாப்பிட்டே முடித்துவிட்டனர்.
பார்கவியின் பதில்கள் இப்பொழுது ஒற்றை வார்த்தையில் சுருங்கி திரையை தாண்டி சென்று தவிப்புடன் திரும்புவதாகப்பட அம்பிகாவின் கண்ணசைவில் எழுந்து வந்து பார்த்த வசீகரன் யோசனையானான்.
மேலும் அவரை சோதிக்காமல் அழைப்பை துண்டிக்க அங்கே பார்கவியின் நிலை தான் பரிதாபம்.
“என்ன நினைச்சுட்டு இருக்காரு? அங்க போனதும் சிறுசுக்கு கொம்பு மொளைச்சிருச்சோ. படிச்சு படிச்சு சொன்னேன். குடும்பம் நடத்த போன இடத்துல பொறந்த வீட்டு சொகத்த நெனைக்க கூடாதுன்னு. புத்திகெட்டத்தனமால இருக்கு. என்ன நெனப்பாக அவுங்க வீட்டாளுங்க…” என்று குதிக்க,
“அவங்க தானே கூப்பிட்டாங்க…” 
“பதிலா சொல்லுது. இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. கூப்பிட்டா உடனே போனுக்குள்ள விழுந்து கெடப்பியோ? கூப்பிட்டா சுருக்க பேசி வைக்கிறதுக்கென்ன? எப்பவும் பொண்ண குடுத்த எடத்துல கொஞ்சமாச்சும் வெடுக்கா இருந்து பழகு. அந்த பொட்டக்கழுதையும் அப்பன்னு ஒருத்தன் இருக்கேனே, பேசனும்னு நினைச்சாளா?…”
பார்கவி வாயே திறக்கவில்லை. அமைதியாக நின்றிருக்க எழுந்து சென்று சாப்பிட அமர்ந்தவர்,
“நல்லா இருக்காளா? என்ன சொன்னா சிறுசு? அங்க ஒழுங்கா பொருந்தி போறாளா? சொல்லி வை இங்க இருக்கற மாதிரியே இருக்கனும்னு நெனைக்க கூடாதுன்னு. நம்ம கௌரவத்த காப்பாத்தற மாதிரி நடக்கனும். அவுக அப்படியிப்படி பேசினா கூட கம்மின்னு இருக்க சொல்லு. புரியுதா?…” என்றதற்கு பார்கவி தலையசைக்க,
“ஏன் முத்து கொட்டிருமாக்கும்? வாய தொறக்க சொன்னா தொறக்கமாட்ட, பேசாதன்னா காதுவரைக்கும் நீளும். வந்துட்டா பெருசா? உனக்கு என்கிட்டே மதிப்பில்லாம போகுதோ? தொலைச்சுக்கட்டிருவேன்…” என அவர் பேச பேச நிமிரவே இல்லை பார்கவி.
“சோத்த போடு, இதான் சாக்குன்னு கைய கட்டி நிக்கித? வேலைக்கு வளையமாட்டிக்கோ?…” என மீண்டும் தீக்கங்குகளாய் வார்த்தையை கொட்டினார்.
வேகமாய் பார்கவி எடுத்து வைக்க முனீஸ்வரனுக்கு மனதே ஆறவில்லை. வசீகரன் மாமா என்று அழைத்து பேசவில்லை. மகளும் என்ன ஏதென்று கேட்கவில்லை. மனதிற்குள் பொருபொருவென்று வந்தது.
“இங்க பாரு நேத்து தான பார்த்தோம், அதுக்குள்ளே என்ன சிறுசுக்கு? சொல்லி வை அவக்கிட்ட, உன்கிட்ட இங்கயே பேசிட்டு இருந்தா அங்க எப்படி ஒத்துபோவா? அவுங்க நல்ல கொணசாலிகளா இருக்க போயி இன்னைக்கு பொழைப்பா. இப்படியே இவ பண்ணினா சலிச்சுட மாட்டாங்க?…” என்று ஒவ்வோர் வாய் உள்ளே தள்ளும் பொழுது திட்டிக்கொண்டே தான் உண்டார்.
வேலை முடிந்தது என்பதை போல சாப்பிட்டுவிட்டு வேகமாய் உறங்க சென்றுவிட பார்கவிக்கு சாப்பாடு இறங்கவில்லை. அனைத்தையும் எடுத்துவிட்டு ஒதுக்கியவர் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டார்.
மதியம் பார்கவி தூங்கும் பழக்கமில்லை. பழக்கமில்லை என்பதை விட முனீஸ்வரன் அதற்கு விட்டதில்லை. அதனால் இருந்த பழக்கங்கள் பார்கவியின் திருமணத்தின் பின்னர் மாறிப்போனது.
ஆக்ஸிடென்ட் ஆகியிருந்த நேரம் உடல்நிலை சரியில்லை என்பதால் ஓய்வெடுக்க விட்டுவிட்டார். அப்பொழுதும் மருந்து மாத்திரைகளின் உபயத்தால் மட்டும். வேறு பொழுது போக்கென்று எதுவும் இல்லை. டிவி பார்ப்பது முனீஸ்வரன் இருக்கும் நேரத்தில் முடியாதென்பதால் வெறுமனே அமர்ந்திருந்தார்.
மகள்கள் இல்லை. தனிமை, என்னவோ இதுவரை இல்லாத ஒரு வெறுமை. அவருக்கு இது பிடிக்கவே இல்லை. அந்த வீடு பிடிக்கவில்லை, அந்த இறுக்கம் பிடிக்கவில்லை. மொத்தத்தில் வாழ பிடிக்கவில்லை. 
“என் மகள்களின் பிள்ளைகளை தூக்கி கொஞ்சும் வரை மட்டுமே இந்த உயிரை எனக்குள் விட்டுவைத்திரு இறைவா” என்கிற பிரத்தனை மட்டுமே சிரிப்பில்லா அவரின் முகத்தில்.
சந்நிதியோ தாயிடம் பேசிவிட்ட நிம்மதியில் வெகு மகிழ்வாக இருந்தாள். அதிலும் அம்பிகாவுடன் சேர்ந்து பேசியது. 
“தேங்க்ஸ்…” என்றாள் கணவனுக்கு.
“அவ்வளோ தானா? இன்னும் பெருசா எதிர்ப்பார்த்தேன்…” அவளை சீண்டும் குரலில் பேச சிரிப்புடன்,
“நிதி இன்னைக்கு காலையில தான் காய்கறிக்கார பொண்ணுக்கிட்ட முழு பரங்கிக்காய் வாங்கி வச்சேன். கிட்சன்ல சிலிண்டர் பக்கத்துல கீழே இருக்கு பாரு. பெருசா கேட்கறான்ல. எடுத்துட்டு வந்து குடு…” என்று கிண்டலாய் சொல்ல,
“ம்மா…” என வசீகரன் பல்லைக்கடிக்க,
“வசீ, சாப்பிட்டா கேரியரை எடுத்துட்டு வரனும்னு தெரியாதா? ஆபீஸ் ரூம்லயே வச்சிட்டு வந்துட்ட. லஞ்ச்க்கு வரப்ப கொண்டுவந்தா என்னவாம்?…” என கேட்டுக்கொண்டே வந்த குகன்,
“என்ன எல்லாரும் சாப்பிட்டாச்சா?…” என வந்து அமர அம்பிகாவும் வசீகரனும் ஐயோ என தலையில் கையை வைக்க சந்நிதியின் முகத்தில் அத்தனை கோபம்.
“ஏமாத்திட்டீங்க…” என்று வெறும் உதட்டசைப்பில் சொல்ல அவளை கெஞ்சலாய் பார்த்தவன்,
“ப்பா…” என கத்த அவர் கண்டுகொண்டாள் தானே?
“மேல வாங்க, பேசிக்கறேன்” என்று மீண்டும் அதே போல உதடசைத்து சொல்லி மேலே செல்ல சிரிப்புடன் அவளின் பின்னே சென்றான் வசீகரன்.
“வசீ திரும்ப போகனும்னு சொன்ன?…” குகன் கேட்க,
“நோ ப்பா சூர்யா பார்த்துப்பான்…”
“நெக்ஸ்ட்…”
“ரெஸ்ட்…” என்று கண்ணைவிட்டு மறைந்தே போனான்.
“உன் பையன் குடும்பஸ்தன் ஆகிட்டான் பாரேன். பொண்டாட்டி கோச்சுக்கிட்டு போகவும் பின்னாடியே போறான். அதுவும் சிரிச்சுட்டு…” குகன் கேலி பேச,
“அவனாச்சும் உடனே புரிஞ்சுக்கிட்டு போறான். இங்க புரியவே பலவருஷம் ஆச்சே…” அம்பிகா ஆரம்பிக்க வாயை திறக்கவில்லை குகன். அம்பிகா எடுத்துவைக்க வேகமாய் சாப்பிட்டார்.
“ஒன்னும் கேட்கலை, உடனே பயந்த மாதிரி ஸீன். பொறுமையா சாப்பிடுங்க…” என்றதும் தான் சிரிப்புடன் மெதுவாய் சாப்பிட்டார் குகன்.
அறைக்குள் நுழைந்ததும் சந்நிதி சோபாவில் கைகட்டி அமர்ந்திருக்க கதவை சாற்றிவிட்டு வந்து படுத்துக்கொண்டான்.
“நான் பேசனும்…” அவளின் குரல் கேட்கவும்,
“கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கறேன் நிதி…” 
“எதுவானாலும் பேசுன்னு சொன்னீங்க. இப்ப என்னன்னா பேசனும்னு சொன்னா வரமாட்டேன்னு சொல்றீங்க?…”
“எனக்கு தெரியும் நீ என்ன பேச போறன்னு. உங்கப்பாவை நான் மாமான்னு கூப்பிடலைன்னு தானே?…”
“நான் என்ன பேசுவேன், பேசமாட்டேன்னு கூட நீங்களா தான் முடிவு பண்ணுவீங்களா?. இல்லை நீங்க நினைக்கிறதை தான் பேசனுமா?…” என வேண்டுமென்றே தான் பேசினாள்.
உண்மையில் அதுவும் தான் அவள் பேச வந்தது. அப்பா தான் முறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்றால் இவனும் அப்படியே இருக்கிறானே? இப்படியே விட்டால் காலத்துக்கும் இதுவே தொடரும் என பயந்தாள்.
ஓரளவிற்கு உறவுமுறை சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டால் அதன் பின் விசாரிப்பு பேச்சுக்கள் ஒன்றிரண்டு என ஆரம்பித்து காலப்போக்கில் சுமூகமாகிப்போகும் என நினைத்தாள்.
அதனை கொண்டு இதை பேச வேண்டும் என நினைத்தாள். இதை மட்டுமல்ல இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூட.
வசீகரன் எழுந்து அமர்ந்தவன் அவள் அமர்ந்திருக்கும் விதத்தை பார்த்துவிட்டு அவளருகில்  வந்தவன்,
“இப்போ என்ன பேசனும் உனக்கு அவ்வளோ தானே?…” என்றவன் பீன்பேக்கை  இழுத்துப்போட்டு அமர்ந்தவன்,
“ஹ்ம்ம் பேசு. உனக்கு ஒருமணி நேரம் டைம் தரேன். எவ்வளவு பேசனுமோ என்ன சொல்லனுமோ, எது கேட்கனுமோ எல்லாமே செய்…” என்றவன் அவளையே பார்க்க அவளோ கொதித்துபோனாள்.
“என்ன கிண்டலா? நீங்க என்ன என்னோட பாஸா? அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணி பேச டைம் குடுக்க. நா போறேன்…” என்றவளை இழுத்து நிறுத்த நிலைதடுமாறி அவனின் மடியில் விழுந்தாள் சந்நிதி.
இதை வசீகரனுமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது. எங்க கீழே விழுந்துவிடுவோமோ என்கிற பயத்தில் முகத்தை மூடிக்கொண்டவள் அவனின் மடியில் தான் விழுந்திருக்கிறோம் என்பதை உணரவே அரை நிமிடம் பிடித்தது அவளுக்கு.
மெதுவாய் கைகளை விலக்கி விழி திறந்து பார்க்க வசீகரனின் பார்வையில் கட்டுண்டு போனாள் அவனின் வசீகரி. பதறி எழுந்துகொள்ள முனைய அவனோ விடாமல் தன் பிடியில் அழுத்தம் கொடுக்க விதிர்த்துப்போனவள்,
“நான் போகனும். விடுங்க…” என திமிற,
“பேச சொன்னதால தான கோவம்? பேச வேண்டாம். கொஞ்சம் நேரம் இப்படியே இரு. நீயும் பேசவேண்டாம். நானும் கேட்க வேண்டாம். சைலன்ட் இஸ் சைலன்ட்…” அந்த மோனநிலையை வெகுவாய் நிதானமாய் ரசித்து உள்வாங்கிக்கொண்டிருந்தான்.
ஆனால் சந்நிதிக்கு அப்படி அல்லவே. அவளுள் அலையலையாய் பொங்கிய ஆர்ப்பரிப்பு ஏதேதோ புதுவித உணர்வுகளை பிறப்பிக்க முற்றிலும் ஸ்தம்பித்து போனாள்.
போர்க்களத்தில் தான் தாக்கியவன் நிலையாய் நிற்பதும் தாக்கப்பட்டவன் நிலைகுலைவதும்.
ஆனால் இங்கே தாக்கப்பட்டவளை விட அதிகமாய் தாக்கியவனும் நிலைகுலைந்து போனான். 
வசீகரன் அவனின் வசமிழந்து போக பெண்ணவள் அவனின் உடல்மொழியில் அவனின் ஸ்பரிசத்தில் முதன் முதலில் மனைவியாய் உணர ஆரம்பித்தாள்.
வார்த்த ஏதும் பேசிட தோணல வாரே ஒ பின்னால 
வேற ஒரு வார்த்தைய தேடிட ஆகாதினி என்னால  
மொத்த சென்மம் ஓஞ்சு போச்சே ஒத்த பார்வையில 

Advertisement