Advertisement

பாட்டு சத்தத்தில் சந்நிதியும் எழுந்துகொள்ள வசீகரனின் தோளில் இருந்தே அவனை நிமிர்ந்து பார்த்தவள் பட்டென விலகி அமர்ந்தாள்.
சூர்யாவை பார்த்த முனீஸ்வரன் பாட்டை நிறுத்துமாறு கண்ணால் எரிக்க,
“ஆத்தி சனி பார்வை நம்ம மேல பட்டுடுச்சே? நண்பன் கோர்த்துவிட்டுட்டான்…” என்ற அலறலுடன்,
“இந்தா மாத்திட்டேன்…” என முனீஸ்வரனிடம் சொல்லி பார்வையால் கெஞ்சிக்கொண்டே ரிமோட்டில் அடுத்த பாட்டை போட அதுவும் அதே பாடலாய் வந்து நிற்க,
“என்னடா வசீ, நாலு நெக்ஸ்ட் போட்டுட்டேன். ஒரே பாட்டு தான் வருது…” என்று அடுத்தடுத்து மாற்ற அனைத்தும் இந்த ஒரு பாடல் மட்டுமே. 
“ஆஹா, சிறுத்தப்புலிய சீண்டிட்டானே…” என்று பாட்டை நிறுத்த,
“ஹலோ பாஸ், பாட்டு நல்லா தான இருக்கு. போடுங்க…” என்று பிரபு எழுந்துவிட விஷ்வேஷ்வரனை பார்த்து கண்ணடித்தான் வசீகரன். 
“நீ நடத்து” என்று அவனும் சேர்ந்துகொள்ள,
“ஏன்டா வண்டியை கொண்டாறவன் வேற பாட்டு கொண்டார மாட்டியா? என்ன ட்ரைவரு நீ?…”என்று முனீஸ்வரன் ட்ரைவரிடம் எகிற,
“ஸார், உங்க போலீஸ் மாப்பிள்ளை தான்  பாட்டு எதுவும் வேண்டாம். அமைதியா போகனும்னு வண்டிக்கு சொல்றப்பவே பேசிட்டார். நானும் வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு ஒன்னும் எடுத்து வைக்கலை…” என்றுவிட ஒன்றும் சொல்லமுடியாமல் தன் கோபத்தை அடக்கினார் முனீஸ்வரன்.
அவருக்கு நிச்சயம் இது வசீகரனின் வேலை என்று. ஆனால் ஒன்றும் சொல்லமுடியாதே. இப்படி செய்வான் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. 
“தம்பி, விடுப்பா சின்ன பிள்ளைங்க சந்தோஷமா வரட்டுமே. நமக்கென்ன வயசானதுங்க. அவங்க சந்தோஷமா இருக்கட்டும்…” என்று நீதிமாணிக்கம் சொல்ல ஒன்றும் பேசமுடியாது மௌனமாகினார் முனீஸ்வரன்.
மீண்டும் பாட்டு போடப்பட புகழும் பிரபுவும் எழுந்து ஆட அவர்களுடன் இடையில் விஷ்வேஷ்வரனும் சேர்ந்துகொள்ள வசீகரன் எழுந்து நின்றுகொண்டான் கைதட்டியபடி.
அத்தனை கலகலப்பாக அதுவரை எங்குமே சென்றிருக்காத குடும்பம் அவர்களது. இப்படி ஒரு சந்தோஷம் அனுபவித்தறியாத சந்தியாவும், சந்நிதியும் ரசனையுடன் அவர்களும் கைதட்டியபடி அந்த தருணத்தை அனுபவித்தனர். அதை வசீகரனும் கவனிக்கவே செய்தான். சட்டென மனைவியின் புறம் திரும்பியவன்,
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோவக்காரன், அவ அண்ணன் கூட அவசர காரன்
எப்படி நான் சரிகட்ட போறேன், எப்ப நானும் ஜோடி சேர போறேன்
என்று பாட சந்நிதி அதிர்ந்து போனாள்.  அவளின் கண்கள் தன தந்தையை தேட முனீஸ்வரனுக்குமே அப்படித்தான். ஆனாலும் அவர் இவர்களை திரும்பியும் பார்க்கவில்லை. 
முதலில் கோபம் வந்தது தான். அதன் பின் இது ஒரு பாட்டு. இதற்கு ஏன் தன்னோடு சம்பந்தப்படுத்தி கோபப்படவேண்டும் என்று நினைத்து அமைதியாகிவிட்டார்.
அதிலும் வீட்டு மாப்பிளைகளும், புகழும் ஆட ஆரம்பித்ததும் அப்படி ஒரு கோபம் அவருக்கு. இது என்ன பழக்கமில்லாத பழக்கமாக இருக்கிறது என்று திட்டிவிட்ட தான் நினைத்தார். 
இதை விட வீட்டு பெண்கள் இதற்கு கை தட்டி தங்களின் மகிழ்வை வெளிப்படுத்தியது இன்னுமே கோபம். எப்படி சொல்ல என்று திரும்பி திரும்பி பார்த்தவர் விஷ்வாவின் ஆட்டத்தை பார்த்து கோபம் மறைந்து சிரிப்பு வந்துவிட்டது.
வேன் சென்றுகொண்டிருக்கும் நேரம் அதன் வேகத்தில் அவ்வப்போது தடுமாறிக்கொண்டே அவன் ஆடியது அத்தனை நகைச்சுவையாக தோன்ற எங்கே பலமாய் சிரித்துவிடுவோமோ என்று முகத்தை பாதையில் வைத்துக்கொண்டவர் திரும்பி பார்க்கவில்லை. 
ஆட்டமும் பாட்டமுமாக சென்னை வந்துசேர்ந்தார்கள். முதலில் நேராக மண்டபத்திற்கு சென்றுவிடலாம் என்று முனீஸ்வரன் சொல்ல வீட்டிற்கு தான் செல்லவேண்டும் என்று நீதிமாணிக்கம் சொல்லிவிட்டார்.
வசீகரனின் வீட்டிற்கு வந்தவர்களை அம்பிகாவும் குகனும் இன்முகமாக வரவேற்க முனீஸ்வரனுக்கு உள்ளே வர தயக்கமாக இருந்தது.
சிரித்தபடி குகன் வாங்க சம்பந்தி என்று அழைத்தாலும் களையில்லா முகத்துடன் தான் உள்ளே வந்தார்.
திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை வீடு பார்க்கும் சம்பிரதாயத்திற்கு கூட நீதிமாணிக்கம் தான் வந்தார். முனீஸ்வரன் செல்லவில்லை. போட்டோவில் பார்த்துக்கொண்டார்.
இப்பொழுது நேரில் பார்க்க மனதிற்கு திருப்தியாக இருந்தது அவருக்கு. இருந்தாலும் உரிமையாய் அமர மனம் இடம்கொடுக்கவில்லை. இதை கவனித்த குகன்,
“அபி அவர் எதோ சங்கடமா பீல் பன்றாரு. என்னால பார்க்க முடியாது. நே போய் பேசு….” என மனைவியை அனுப்ப சரியென்று சென்ற அம்பிகா,
“என்னண்ணே நம்ம வீடு புடிச்சிருக்கா? உட்காருங்கண்ணே எவ்வளோ நேரமா நிப்பீங்க?…” என்று சொல்லவும் முனீஸ்வரனின் முகம் பளிச்சென்று ஆனது. மனதில் இருந்த சிறு சஞ்சலமும் விலக,
“சும்மாதாம்மா நின்னுட்டு இருந்தேன். இதோ…” என்று சென்று அமரவும் அம்பிகாவுக்கு உண்மையில் பாவமாக போனது.
“பாவம்ங்க, கோபத்தை காட்ட தெரிஞ்ச மனுஷனுக்கும் குணம் இருக்கு. எத்தனை உறுத்தல் இருக்கு பாருங்க. என்ன ஒன்னு தயவுதாட்சண்யம் இல்லாம வார்த்தையை விட்டுட்டு இப்ப மூஞ்சில முழிக்க முடியாம அல்லாடறாரு…” 
“ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்ட இல்ல?…” குகன் கேட்க,
“எதையும் கஷ்டமா எடுத்தா அது ரொம்பவே கஷ்டமா தான் தெரியும். ஐயோன்னு அந்த கஷ்டத்தை தூக்கிட்டே திரிய வேண்டியது தான். அட இது ஈஸிலன்னு தூக்கி ஓரமா போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கனும். இப்ப என் வேலையை பார்க்க போறேன். ரிசப்ஷனுக்கு கிளம்பனும்…”
மனைவியின் பேச்சில் இருந்த கூற்று எத்தனை உண்மை என்று அவருடன் வாழ்ந்தவருக்கு தெரியாததா என்ன? புன்னகையுடன் வந்தவர்களுடன் சென்று அமர்ந்துகொண்டார்.
வந்தவர்கள் மதிய விருந்து உண்டுமுடித்து சிறிது நேரம் ஓய்வெடுக்க சந்நிதி வசீகரனின் அறைக்குள் அம்பிகாவுடன் வந்தாள்.
“இதுதான் உன்னோட உங்களோட ரூம். உன் திங்ஸ் வசீ கொண்டுவந்து வச்சுட்டான். நீ ப்ரெஷ் ஆகிக்க.  தூங்கிடாத. இன்னும் ஒருமணி நேரத்துல மண்டபத்துக்கு கிளம்பிடுவோம். அங்க போய் எல்லாரும் ரெடி ஆகிடலாம்…” என்று சொல்லி அவர் சென்றுவிட தனியாக அங்கு இருந்தவள் கட்டிலில் அமராமல் டேபின் அருகில் இருந்த சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
டேபிளின் பக்கத்தில் லைட்லேம்ப் ஒன்றும் அதன் அருகில் லேமினேட் செய்யப்பட்ட ஒரு போட்டோவும் இருக்க எடுத்து பார்த்தவளின் புருவம் வியப்பில் உயர்ந்தது.
அது பாண்டிச்சேரியில் ரேவதியின் திருமணத்தன்று எடுத்திருந்த போட்டோ. அதை கையில் வைத்து அப்படியே நின்றிருக்க,
“என்ன பச்சைக்கிளி மலரும் நினைவுகளா?…” என்று பின்னால் இருந்து வந்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் பதட்டத்தில் போட்டோவை கீழே போட அதை விழுந்துவிடாமல் கேட்ச் பிடித்தவன் சரியாய் டேபிளில் வைக்க,
“எப்பவுமே முன்னால வந்து பேச மாட்டீங்களா? பின்னால பேசி பயம்காட்டிட்டே இருக்கீங்க?…” என்று படபடத்த இதயத்தை பிடித்துக்கொண்டே மூச்சுஏற இறங்க பேச சிரிப்புடன் அதை பார்த்தவன்,
“இத்தனை பயம் இருக்கு, ஆனா அன்னைக்கு அந்த பேச்சு பேசின? இதுல எந்த நிதி உண்மையான நிதி என் சந்நிதி?…” என்று அவளை ரசித்துக்கொண்டே கேட்க,
“திரும்ப திரும்ப அப்பாவை சீண்டிட்டே இருக்கீங்க. வேன்ல அந்த சாங் நீங்க வேணும்னே போட்டது தானே?…” அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தான் கேள்வி கேட்க,
“ஆமாம், வேணும்னே தான் போட்டேன். நீ வேணும்னு தான் போட்டேன். என்ன வேணாலும் பண்ணுவேன். இதுவரைக்கும் பண்ணினேன். இனியும் பண்ணுவேன்…”
“இப்படியே பண்ணிட்டிருந்தா கோபத்துல எங்கப்பா உங்களை விட்டு என்னை கூட்டிட்டு போய்டுவார். அப்பறம் ஒன்னும் பண்ணமுடியாது பார்த்துக்கோங்க…” என்று அவனை மிரட்டுவதை போல அவள் சொன்னாலும் எதற்கு அப்படி சொன்னால் என்று அவளுக்கு தெரியவில்லை. 
அப்படித்தான் இவன் செய்யும் சில்மிஷங்களில் கோபம் கொண்டு தன தந்தை செய்துவிடுவாரோ என்ற அடிமனத்தின் அச்சத்தினால் கேட்டாளா என்று கூட அவளால் பிடித்தறியமுடியவில்லை.   
ஆனால் அப்படி ஒரு பயம் அவளுக்குள் இருந்துகொண்டே இருப்பதென்பது தான் உண்மை. 
“நிதி, என்னை பார்…” என்று அவளின் முகம் நிமிர்த்தியவன்,
“உங்கப்பா கூட்டிட்டு போறேன்னு உன்னை கூப்பிட்டா போய்டுவியா?…” என்றதும் அவளின் விழிகள் கலங்கி போயின.
என்னவோ இருவரும் மனமொத்து காதலாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்களை போன்ற ஒரு பாவனை இருவரின் முகத்திலும். 
வசீகரனுக்கு அவளின் தவிப்பும், பயமும் புரிந்தது. அது அவளுக்கு புரியவில்லை என்பது தான் அவனின் ஆதங்கம். சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டாள். தானே தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.
“ஹேய் எதுக்கு இப்படி கண்ண கசக்கிக்கட்டு?…”
“இதுக்குதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களா? அழ வைக்கிறீங்க…” 
“தியாவை விட நீ கொஞ்சம் தைரியம்னு சொன்னாங்க உன் சித்தி. ஆனா அப்படி இல்லை போல. சின்ன விஷயத்துக்கு கூட கலங்கி போற?…” என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிற்க,
“ஓகே, யாரும் அழைச்சிட்டு போய்ட முடியாது உன்னை. நான் எதுக்கு இருக்கேன். சரியா?…” என்றுஅவன் சொல்லிய விதம் அவளின் மனதை தொடுவதாய் இருக்க,
“கொஞ்சம் நேரம் தூங்கலாமே. இப்படி ஏன் எதையாவது யோசிக்கனும்?…”
“இல்லை அத்தை தூங்க வேண்டாம்னு சொல்லிட்டு போனாங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல கிளம்பனும்னு…”
“ஓகே ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்க. நான் கீழே இருக்கேன். ஒரு பிப்டீன் மினிட்ஸ்ல மேல வரேன். நானும் கிளம்பனுமே…” என,
“இன்னைக்கு இப்படி பேசிட்டு நேத்து ஏன் பேசவே இல்லை?…” கேட்க கூடாது என்று நினைத்தாலும் மீறி வந்துவிட்டது. அவளின் முகத்தை பார்த்தவன் மென்மையாக புன்னகைத்து,
“அதுக்கு தான் என்னை பார்த்துட்டே இருந்தியா?…”
“நான் சும்மா தான் பார்த்தேன். அந்த வீட்ல எல்லாரையும் தான் பார்த்தேன்…” 
“ஓஹ், அவ்வளோ தானா?…” என்றவனின் குரலில் எதையோ உணர்ந்தவள்,
“இல்லையில்லை, நான் சண்டை போட்டதுல கோபமா இருந்தீங்களோன்னு பார்த்தேன்…”
“ஓஹ் இவ்வளோ தானா?…” மீண்டும் அதே குரலில் கூற இவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தாள். அவளின் கண்களில் அதை படித்தவன் முகத்தில் பரவும் சிரிப்பை அவள் கவனித்துவிடாமல் கீழே இறங்கிவிட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில் பரபரவென அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றுவிட வரவேற்பு அனைவரும் வியக்கும் வண்ணம் நடைபெற்றது. 
அனைத்தும் நல்லவிதமாகவே சென்றுகொண்டிருந்தது மறுநாள் சந்நிதிக்கு தெரியும் வரை.

Advertisement