Advertisement

தீண்டல் – 23
                மறுநாள் காலை உணவிற்கு அனைவரும் வந்து அமரும் வரை சந்நிதி வசீகரனை பார்க்கவே இல்லை. 
காலை இவள் எழும்பொழுது அமர்ந்திருந்தவன் மொபைலில் கவனமாக இருக்க சந்நிதி எழுந்து குளித்துவிட்டு வெளியேறிவிட்டாள். மீண்டும் அவனை இப்பொழுதுதான் காண்கிறாள்.
புதுமணமக்களை சேர்ந்து அமரசெய்து உண்ண வைக்க தன்னருகில் அமர்ந்திருந்தாலும் விஷ்வேஸ்வரனிடமும் புகழ், புவனிடமும் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தான். 
தூரத்தில் அமர்ந்து நீதிமாணிக்கமும், முனீஸ்வரனும் பார்த்துக்கொண்டிருந்ததால் சந்தியா வாயே திறக்கவில்லை. அப்போதும் விடாமல் பேச்சுக்குள் வேண்டுமென்றே இழுத்தான் அவள் கணவன். 
முறைப்பும் தவிப்புமாய் சந்தியா பார்வையினாலே அவனிடம் சம்பாஷிக்க அதற்கும் அவர்களை வைத்து கலாய்த்தனர் வசீகரனும், புகழும். 
அபிராமிக்கு இதில் மகிழ்ச்சியும் லேசாய் வருத்தமும். தனக்கு சொந்தம் என்று வேண்டாம் என்ற தன் அண்ணனை இப்பொழுது மருமகனாக்கிக்கொண்டு உள்ளனர். 
இதே இந்த அண்ணன், தம்பி உறவு சேராமல் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? என்ற எண்ணம் அவளின் மனதில் இன்னமும் உறுத்திக்கொண்டு தான் இருந்தது. 
அதையும் தாண்டி தன் புகுந்த வீட்டிலிருந்து தன் சொந்தத்தில் பெண் கொடுத்திருக்கின்றனர் என்கிற ஒரு தைரியம். முன்பை விட இப்பொழுது ஓங்கி பேசலாம் என்னும் ஒரு மகிழ்ச்சி. வசீகரனை விழுந்து விழுந்து கவனித்தாள்.
“நாளை காலையில வந்து பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சுட்டு போறதா சம்பந்தி வீட்டில இருந்து போன் செஞ்சிருக்காங்க தம்பி. அவங்க சார்பா அழைக்க ரேவதியும், மாப்பிள்ளையும் கூட நம்ம மாப்பிள்ளை ப்ரெண்ட் சூர்யாவும், அவர் சம்சாரம் அனுபமாவும் வராங்களாம்…” நீதிமாணிக்கம் சொல்ல,
“என்னவோண்ணே இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போகலாம்ன்னா அங்க வரவேற்பு வச்சுட்டாங்க. மறுக்க முடியாது. அடுத்து எப்ப வருவாங்கன்னு நீங்க தன கேட்கனும்…” முனீஸ்வரனுக்கு இத்தனை சீக்கிரம் மகளை அழைத்து செல்வதில் அத்தனை உடன்பாடு இல்லை. அதை எப்படி பேசுவது? யாரிடம் சொல்வது என்று தவித்துதான் இருந்தார்.
“அதுக்கென்னப்பா பேசிட்டா போகுது. இந்தா இருக்கற சென்னை தானே? வான்னா வாரக்கடைசியில வந்து இருந்துட்டு போறாங்க. தியாவை குடுத்த மாதிரி தூரந்தொலைவா இருந்தா நீ விசனப்பட வேண்டியதான். இங்க பக்கம் தானே? சட்டுன்னு கிளம்பினா நீ போய் பார்த்துட்டு வந்துடலாம்…”
“ஹ்ம்ம் புரியுதுண்ணே…”
“இன்னும் என்ன உனக்கு? அதான் நம்ம தம்பியும், ராதாவும் பக்கத்துல தான இருக்காங்க…” என்று சொல்லியும் முனீஸ்வரனின் முகம் தெளிவில்லாமல் இருக்க,
“அங்க பாரு நம்ம புள்ளைங்களும் மாப்பிள்ளைகளும் எப்படி ஒத்துமையா கேலியும், சிரிப்புமா இருக்காங்கன்னு. சந்தோஷப்படு தம்பி. இது என்னைக்கும் நிலைக்கனும்னு அவங்களை மனசார ஆசிர்வாதம் செஞ்சு அவங்களுக்காக ஆண்டவனை வேண்டிக்க. அதுதான் நாம செய்யவேண்டியது…”
“ஹ்ம்ம் ஹ்ம்ம்…” என்று முணங்கினாலும் மனதோ முரண்டியது. சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பிள்ளைகளை திரும்பி பார்த்தார். 
தான் முதன் முதலில் பார்த்த வசீகரன் இவனில்லையே என தன் இளைய மருமகனை அளந்து பார்த்தவர் சட்டென அவன் இவரை பார்த்ததும் திடுக்கிட்டு வேறு புறம் திரும்பிக்கொண்டார்.
“என்ன புது மாப்பிள்ளை மாமனார் இத்தனை கரிசனமா பார்க்கறாரே? என்னை பார்த்தா மட்டும் அக்யூஸ்ட்டை பார்த்த காவலதிகாரியா விறைப்பும் முறைப்பும் தான். இது சரியில்லையே…” என்று விஷ்வேஷ்வரன் தன் தொடையை தட்ட,
“அவர் டவுட்டா பார்க்கறது உனக்கு லார்லிங் லுக் மாதிரியா இருக்கு?…” வசீகரனும் சொல்ல,
“அட போதும் டார்லீஸ் முதல்ல இதை முடிச்சுட்டு வெளில எங்கையாச்சும் போவோம்…” புகழ் சொல்லவும் அனைவரும் வேகமாய் உண்டுவிட்டு வர சந்நிதி வசீகரனை பார்ப்பதும் யோசனையுமாக இருந்தாள்.
“விரும்பி கட்டிக்கிட்டேன்னு சொன்னாரு, இப்ப என்னன்னா சும்மா கூட பார்க்கலை. இதுல என்ன விருப்பம் இருக்கு? எப்படி? எப்படி?” என்று நினைத்து அவன் பார்ப்பானா பார்ப்பானா என்று அவனை அதிகமாய் பார்த்து வைக்க வீட்டில் அனைவருக்கும் சந்நிதியின் பார்வை வசீகரனை சுற்றுவது அப்பட்டமாக தெரிந்தது.
இதில் விஷ்வேஷ்வரன் வேறு கிண்டல் பேச முனீஸ், நீதி இருவரை தவிர மற்றவர்களின் நமுட்டு சிரிப்பும் வசீகரனை இம்சிக்க அன்று முழுவதும் இதே தான். சந்நிதி தெரிந்து செய்கிறாளா இல்லையா என்று புரியாமல் இவனும் கண்டுகொள்ளாததை போல இருந்தாலும் உள்ளூர ரசிக்கவே செய்தான்.
அன்று இரவு இவள் வரும் முன்னரே படுத்து உறங்கிவிட அவனின் இந்த செயல் சந்நிதிக்கு பிடித்தும் பிடிக்காத உணர்வை தந்தது.
மறுநாள் காலையே ரேவதி, பிரபு, சூர்யா, அனுபமா என்று நால்வரும் வந்துவிட அந்த வீடே களைகட்டியது.
காலை உணவை முடித்துக்கொண்டு அனைவரும் கிளம்புவதாக முடிவு செய்யப்பட்டிருக்க சாப்பிட்டுவிட்டு புறப்பட தயாராகினார்கள்.
சாமிக்கு கும்பிம்பிட்டு விட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வர நீதிமாணிக்கமும் கோமதியும் முதலில் ஆசிர்வதிக்க அதன் பின்னால் முனீஸ்வரனிடம் வர பார்கவியோடு சேர்ந்து நின்றவர் ஆசிர்வதித்துவிட்டு அவர்களை பார்க்காமல் தலையை குனிந்தபடி நகர்ந்துவிட்டார்.
“என்ன வசீ உன் மாமனார் இப்படி போறாரு? நல்லதா எதுவும் சொல்லாம வாயே திறக்காம?…”
“உன்கிட்ட வேணும்னா தனியா பேச சொல்லவா?…” என்றதற்கு வாயை மூடிகொண்டான் சூர்யா.
அதன் பின்னும் வசீகரன் எதிரே வந்தாலும் முனீஸ்வரன் பார்க்காமல் குனிந்தபடி செல்வதும் ,வேறெங்கோ பார்ப்பதுமாக இருக்க வசீகரனின் முகத்தில் அப்பட்டமான புன்னகை. 
திருமணத்தின் முதல் நாளில் இருந்தே இப்படித்தானே நடக்கிறது. அதனால் அவனும் இதை கண்டுகொள்ளவில்லை.  
அனைவருமாக சேர்ந்தே கிளம்பிவிடுவது என்று முடிவாகி வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 
நீதிமாணிக்கம், முனீஸ்வரன், கம்பன் இவர்களின் குடும்பத்தை தாண்டி சூர்யாவின் குடும்பம் தான். அதனால் தனித்தனியாக வருவதற்கு ஒன்றாகவே சென்றால் இன்னும் நன்றாக இருக்குமே என விஷ்வேஷ்வரனின் யோசனை இது. 
அங்கிருந்த ட்ராவல்ஸ் ஒன்றிற்கும் அவனே அழைத்து பேசிவிட சிறிது நேரத்தில் மொத்த குடும்பமும் கிளம்பியது. சூர்யாவும், பிரபுவும் வந்திருந்த காரை முனீஸ்வரன் வீட்டு ட்ரைவர் எடுத்துவந்துவிடுவார் என புகழ் சொல்லிவிட்டான்.
வேனில் ஏறி அமர்ந்ததும் வசீகரனுக்கு பக்கவாட்டில் இருந்த சீட்டில் முதலில் அமர்ந்த முனீஸ்வரன் பின் எழுந்து ட்ரைவர் சீட் பக்கத்தில் அமர சென்றுவிட்டார். 
“இதெல்லாம் ஓவர்டா, ரொம்பத்தான் ஒதுங்கி போறாரு…” என அவர் எழுந்து சென்ற இருக்கையில் அமர்ந்த சூர்யா வசீகரனிடம் ரகசியமாய் சொல்ல,
“இப்பத்தானடா புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. அவருக்கும் வெட்கம் இருக்காதா?…” என ரகசிய குரலில் வசீகரனும் சொல்ல,
“யூ மீன்? இந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு?…”
“எல்லாம் தான். பொண்ணுங்களுக்கு மட்டும் தான் இந்த பயிர்ப்பு உயிர்ப்பா? பசங்களுக்கும் தான். இவர் கொஞ்சம் பெரிய பையன்…” என உல்லாசமாய் சொல்ல,
“மனுஷனாடா நீ? எப்படி இருந்த மனுஷனை இப்படி ஆக்கினதும் இல்லாம, இப்படி இரக்கமே இல்லாம ஓட்ட வேற செய்யற? இந்த பாவம் சும்மா விடாதுடா…” என்ற சூர்யாவை கண்டு கண்னடித்தவன்,
“அந்த பாவம் தானோ என்னவோ ரெண்டு நாளா சும்மா தான் இருக்கேன்” என தனக்குள் நினைத்தவன் மனைவியை திரும்பி பார்க்க அவள் இவன் புறம் திரும்பவே இல்லை. தள்ளி இருக்கும் பொழுது நொடிக்கொருதரம் தன்னையே பார்வையால் சுற்றி வருபவள் பக்கத்தில் அமர்ந்ததும் கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்தவன்,
“இவள” என பல்லை கடித்தான்.
“அடேய் அடங்குங்கடா, இதுக்கு பேரு ரகசியமா? எனக்கே கேட்டிருச்சு. பேசாம வாங்க…” சூர்யாவின் பின்னால் அமர்ந்திருந்த விஷ்வேஷ்வரன் சொல்ல, 
“நான் தூங்கிட்டேன் அப்பவே…” என்று கண்ணை மூடிக்கொண்டான். சூர்யாவின் செயலில் உண்டான சிரிப்புடன் சந்நிதியை பார்த்தவன் சட்டென அவளின் தோள் மேல் சாய்ந்துகொள்ள பதறி திரும்பினாள்.
அவளை நகரவிடாமல் இடதுகையால் அழுத்தி பிடித்தவன்,
“டயர்டா இருக்கு நிதி. சென்னை ரீச் ஆனதும் எழுப்பிவிடு. அதுவரை ஒரு குட்டி தூக்கம்…” என்று அழுத்தமாய் அவளின் தோளில் சாய்ந்துகொண்டான். 
முதல்நாள் முழுவதும் தன்னிடம் பேசாமல் பார்க்காமல் விலகி சென்றவன் இப்பொழுது பேசவும் மனதினுள் வெளிச்சம் பரவ அதை உணராது கோபத்தை இழுத்து பிடித்தாள்.
“எல்லாரும் பார்ப்பாங்க. என்ன நினைப்பாங்க. எழுந்து உட்காருங்க. சீட்ல சாய்ந்சுக்கோங்க…” என கிசுகிசுக்க,
“யாரும் பார்த்தாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நேத்து முழுக்க நீ என்னை பார்த்ததை கூட தான் எல்லாரும் பார்த்தாங்க. என்ன சொன்னாங்க? அதே மாதிரி இதுக்கும் எதுவும் சொல்ல மாட்டாங்க. சைலன்ட்டா இருந்தேன்னா தோள்லயே தூங்கி எழுந்துப்பேன். ரொம்ப பண்ணின மடியில படுத்துப்பேன்…”
அவனின் மிரட்டலில் நெளிந்துகொண்டிருந்தவள் அசையாமல் அமர்ந்துகொண்டாள். அதை உணர்ந்தவன் அவளின் கையோடு கை கோர்த்துக்கொண்டு உறங்க முற்பட்டான். ஆனால் உறங்கவில்லை.
சந்நிதிக்கோ அனைவரும் நேற்று உன்னை பார்த்தார்கள் என்ற வார்த்தையிலேயே வெட்கமாகி போனது. என்ன நினைத்தார்களோ என்று தன்னையே நொந்துகொண்டாள்.
பயணம் செல்ல செல்ல அவனின் தலை மீது தானும் தலை சாய்ந்து உறங்கிபோக வசீகரனுக்கு மொத்தமாய் உறக்கம் கலைந்தது. அவளின் உறக்கம் கலைந்துவிடாமல் மெல்ல நிமிர்ந்து அவளின் தலையை தன் மீது சாய்துக்கொண்டவன் அணைவாய் அணைத்துக்கொண்டான்.
“ஐயோ இவன் தொல்லை தாங்கலையே. எனக்கு தெரியும்டா உன் மாமனார் இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் முன்னாடியே போய்ட்டார்….” என்ற புலம்பலுடன் சூர்யா திரும்பிக்கொள்ள அவனின் தலையை பின்னால் இருந்து கொட்டிய விஷ்வா,
“கண்ணை மூடிட்டு தூங்கு. அங்க என்ன பார்வை?…”
“போலீஸ்க்காரன் பின்னாடியும் கண்ணிருக்குன்னு சொல்லுவானுங்க. இங்க முன்னாடி பார்த்தா மட்டும் விடவா போறான்…” என்று புலம்பி திரும்பியவன்,
“கொஞ்சம் அந்த கஞ்சிசட்டைய கழட்டி ஓரமா வையுங்க போலீஸ்க்கார் போலீஸ்க்கார்…” 
“அனு…” விஷ்வா சூர்யாவின் மனைவியை அழைக்க,
“திரும்பவும் நான் தூங்கிட்டேன்…” என கண்ணை மூடிக்கொண்டான். இவனின் சேட்டையில் புன்னகைத்த விஷ்வா,
“போரடிக்குது, கல்யாண கொண்டாட்டம் கொஞ்சமும் இல்லை. ட்ரைவர் சாங்க்ஸ் இருந்தா ப்ளே பண்ணுங்க…” என கத்த,
“அதானே, பாட்டு போட்டு ஜாலியா போவோம்…”என்று புகழும் சொல்ல முன்னால் இருந்த முனீஸ்வரன் திரும்பி பார்த்துவிட்டு ட்ரைவரிடம் போடுமாறு கை அசைக்க,
இந்த பென்ட்ரைவை ட்ரைவரிடம் கொடுக்க சொல்லி சூர்யாவிடம் வசீகரன் தர,
“ஏன் நீ எந்திச்சு போய் குடுக்க மாட்டியா?…” அவன் மறுக்க,
“ப்ச், நிதி தூங்கறாடா. நன் எழுந்தா தூக்கம் கலைஞ்சிடும்…”
“பாட்டு போட்டா மட்டும்  உறக்கம் கலையாதாமா?…” என்ற கடுப்புடன் கொண்டுபோய் தானே ஆன் செய்துவிட்டு ரிமோட்டுடன் வந்து ப்ளே செய்தான். 
காதல் பண்ண திமிரு இருக்கா? கைய புடிக்க தெம்பு இருக்கா? 
உனக்கு ஏத்த பொண்ணு இருக்கா? அவளுக்குன்ன புடிச்சு இருக்கா?
என்று ஆரம்பிக்க நொடி பொழுதில் முனீஸ்வரன் சூர்யாவை பார்த்த அனல் பார்வையில் நடுங்கியே போனான். 

Advertisement