Advertisement

“என்ன சித்தப்பா இங்க தனியா வந்து உட்கார்ந்துட்டீங்க?…” என மெதுவாக கேட்க,
“அதான் மாப்பிள்ளைன்ற பேர்ல ஒருத்தன கொண்டுவந்து என்னை தலைகுனிய வச்சுட்டீங்களே?…” என்று மற்றவர்களை குற்றம் சாட்ட,
“என்ன சித்தப்பா இது? உங்களுக்கு பிடிச்சதால தான இந்த சம்பந்தமே நடந்துச்சு…”
“அதான் நான் பண்ணின பெரிய தப்பு. போலீஸ்க்காரன் ரொம்ப வாய்சவடால் விடுவான்னு தெரிஞ்சும் புத்தி மழுங்கி பொண்ணை குடுத்துட்டேன். பெரியகுடும்பத்துல வளர்ந்தவன், அனுசரணை தெரிஞ்சு கைக்கு அடங்கி, மரியாதையா இருப்பான்னு பாத்தா என்னையே ஏறி மிதிச்சுட்டான்…”
“சித்தப்பா அவர் நம்ம பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்கறவர். அவரை மரியாதை இல்லாம இப்படித்தான் பேசுவாங்களா? யாராச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க? நம்ம வீட்டு மாப்பிள்ளையை நாமளே மதிக்காம பேசினா வெளில இருக்கற ஊர்க்காரனுங்க மதிப்பானுங்களா?…” என்று அழுத்தமாய் சொல்ல,
“அட போடா. மனசே ஆறலை. என்னை மாதிரி குணம் என்னை மாதிரி குணம்னு சொல்லி சந்தோஷப்பட்டு கட்டிவச்சேன். இப்ப அந்த குணமே என்னை மதிக்கமாட்டேங்குது பாரு. என்னை மாதிரி குணக்காரனுங்க இப்படித்தான் இருப்பானுங்கன்னு தெரிஞ்சு யோசிக்காம செஞ்சுட்டேன்…”
“இதுவாச்சும் தெரியுதா இவருக்கு?” என பார்த்தபடி இருந்த புகழ்,
“சித்தப்பா கல்யாணம் முடிஞ்சு நாலு நாள் ஆகிடுச்சு, இப்ப போய் இப்படி பேசறது அபத்தமா இருக்கு. தப்பா படலையா உங்களுக்கு?…” என கேட்டதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்,
“வீட்டை விட்டு வேற வீட்டுக்கு வாழ போற புள்ளைக்கிட்ட கூட என்னால சரியா பேச கூட முடியலை. கைக்குள்ளயே வச்சு வளர்த்த புள்ள. பயந்த சுபாவம். தெரியாத ஊர்ல போய் படிக்கவச்சுறேன்னு நிக்கிறாரு இந்த மனுஷன். போலீஸ்க்காரர், ஊர்ப்பட்ட பஞ்சாயத்த பார்த்திருப்பாரு. யாராச்சும் மனசுல வச்சிக்கிட்டு புள்ளைக்கிட்ட கோவத்த காட்டிட்டா? கூடவே காவலுக்கு நிப்பாரா இவரு?…”
மருமகனுக்கு மரியாதை தானே வர இந்த முனீஸ்வரன் புகழுக்கு புதிது. இப்படி கரகரப்பான குரலில் மகளின் நன்மையை பார்க்கும் முனீஸ்வரன். கண்கள் லேசாய் சிவந்து இருந்தது. கலங்கியதால் சிவந்ததோ கோபத்தினாலோ, ஆனால் பார்க்க மனதிற்கு ஏதோ போல இருந்தது.
“கல்யாணத்தை கூட நிம்மதியா நான் பார்க்கலை. அந்த கடன்காரன் வந்து என் நிம்மதியா புடுங்கிட்டு போய்ட்டான். போற போக்குல என் சந்தோஷத்துக்கு தீயை வச்சுட்டான்…”  என இப்பொழுது கொலைவெறியுடன் அவர் பேச வசீகரனை தான் சொல்கிறார் என்று புரிந்தாலும்,
“யார் சித்தப்பா? எனக்கு புரியலை…” என தெரியாததை போல கேட்க,
“அதான் முதல்ல தட்டை தூக்கிட்டு ஒரு குடும்பம் வந்துச்சே பொண்ணு கேட்டு, அது சின்னதை கேட்டு வந்திருந்தாங்களாம். அன்னைக்கே தெரிஞ்சிருந்துச்சு நல்லா நார் நாரா கிழிச்சிருப்பேன். பெரியவ இருக்க சின்னதை கேட்டு வர எத்தனை துணிச்சல் இருக்கனும்? தப்பிச்சிடுச்சுங்க அன்னைக்கு…” 
“சித்தப்பா உங்களுக்கு எப்படி தெரியும் சந்நிதியை தான் கேட்டு வந்தாங்கன்னு?…” புகழுக்கு பயமாகிவிட்டது என்ன இது நமக்கு தெரியாமல் என்ன நடக்கிறது என்று.
“அவனே போகும் போது சொல்லிட்டு போனான். இருக்குது இந்த சிறுசுக்கு….” என வேஷ்டியை வரிந்துகட்டிக்கொண்டு எழுந்து சட்டையை மாட்ட ஐயோவென பதறிப்போனவன்,
“நிதி என்ன பண்ணுவா சித்தப்பா? கொஞ்சம் உட்காருங்க. இத்தனை கோபம் வேண்டாம்…” என்று அவரை பிடித்து அமர்த்தியவன் மனதிற்குள் வசீகரனை திட்டி தீர்த்தான்.
“அவளுக்கு தெரியாமலா இருக்கும்?. நல்ல கன்னத்துல நாலு இழுப்பு இழுத்தா தான் எனக்கு நிம்மதி. இனி அவ அவனை பாத்தா கூட ஒதுங்கி போகனும்…”
“முடிஞ்சது போங்க. ஏன் சித்தப்பா புரியாம கோபப்படுறீங்க? சப்போஸ் நிதி அவரை பார்க்காமலே இருந்திருந்து நீங்களே பார்க்க வைக்க போறீங்களா?…”
“என்ன என்ன? பார்த்திடுவாளா? பொண்ணு வீட்டோடையே கிடக்கட்டும்னு காலை ஒடிச்சு போட மாட்டேன்?…”
“ஏற்கனவே அப்படிதான் இருக்கு. இப்ப சொல்லுங்க பிஸியோதெரபியை ஸ்டாப் பண்ணிடுவோம். நீங்க நிதிக்கிட்ட கேட்கவும் வேண்டாம். உங்க ஆசைப்படி அவளுக்கு கால் குணமாகாம வீட்டோடையே இருப்பா…” 
புகழ் சொல்லவும் தலையில் கை வைத்துக்கொண்டவர் என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்திருக்க,
“நான் சொல்றது கேளுங்க சித்தப்பா, நிதிக்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். அப்படி ஒரு மனுஷன் வந்துட்டு போனதே அவ மறந்திருக்கலாம். நீங்களா எதையும் பேசி அவளுக்கு ஞாபகப்படுத்திடாதீங்க. இனி யாரும் யாரையும் பார்க்க போறது இல்லை. இதை இப்படியே விட்டுடுங்க. நான் சொல்றது நம்ம நல்லதுக்கு தான் சித்தப்பா…” என்றவன் கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசியே கரைத்து அவரிடமிருந்து நிதியை காப்பாற்றிவிட்டுதான் விட்டான்.
அந்த வார இறுதியில் விஷ்வேஷ்வரன் சந்தியா வரவேற்பு மிக சிறப்பாக நாகர்கோவிலில் நடைபெற எதையும் காண்பித்துக்கொள்ளாமல் சென்று வந்தனர். 
விஷ்வேஷ்வரன் நடந்ததை மனதில் வைத்து கொள்ளாமல் வந்தவரிடம் நன்றாக பேச முனீஸ்வரனின் கோபம் கொஞ்சம் குறைந்தது எனலாம். அங்கிருந்து கிளம்பும் பொழுது தான் மனதளவில் எதையோ விட்டுசெல்லும் உணர்வு அவருக்கு. 
தாய், தங்கை, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, அண்ணன்கள்  என அனைவரிடமும் தன் பிரிவுத்துயரை காண்பித்த மகள் தன்னை நெருங்காமல் தூரமே நின்று கண்ணீருடன் பார்க்க நெருங்க முடியாது அமைதியாக இருந்துவிட்டார்.
ஏனோ போய் ஆறுதல் சொல்லவும் தோன்றவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. இதை விட அதை எப்படி செய்வதென்று தெரியவில்லை. இயல்பாக அது அவருக்கு வராததால் அனைவரையும் பார்த்தபடி நின்றார்.
சந்தியா தன் வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது அன்றைய நாளை போல் கடிந்து பேச, புத்திமதி சொல்ல மனம் வரவில்லை. வெறும் தலையசைப்பு மட்டும். தூரமாய் தான் அதுவும்.
அடுத்த நான்கு மாதங்கள் வெகு சீக்கிரமே ஓடிவிட்டன. இப்பொழுது சந்நிதி நன்றாகவே நடக்க ஆரம்பித்திருந்தாள். கொஞ்சம் கவனமாகவும். 
வீட்டில் சந்தியா இல்லை என்கிற குறையை தவிர மற்றபடி வழக்கம் போல தான் இருந்தது, ஒன்றை தவிர. 
முன்பு போல அனைத்திற்கும் குற்றம் பேசி நோகடிக்கும் முனீஸ்வரன் இப்பொழுதெல்லாம் அதை குறைத்துக்கொண்டதை போல ஒரு தோற்றம் அவர்களுக்குள்.
அது பெரியப்பாவின் குடும்பம் வந்து செல்வதால் அப்படி பெரிதாக வருத்தமாக தெரிவது இல்லையா? இல்லை உண்மையாகவே அவர் குறைத்துக்கொண்டாரா எதுவும் புரியவில்லை தாய்க்கும், மகளுக்கும். 
எதுவோ ஒன்று இந்தளவில் மாறிக்கொண்டாரே என நினைத்து ஏதோ நிழல் கிடைத்துவிட்டதை போல சற்று இளைப்பாறிக்கொண்டனர் அவர்கள் இருவரும்.  ஆனாலும் சந்நிதியை முன்பைவிட ஒரு கவனிப்புடனே பார்த்திருந்தார். கண்களில் முறைப்பும், வசீகரன் மீதான கடுப்புமாக.
இடையில் ஒருமுறை சந்தியா விஷ்வேஷ்வரனுடன் வந்து சென்றாள். ஒருநாள் மட்டுமே தங்கிவிட்டு செல்ல அதற்கும் விஷ்வேஷ்வரன் தான் காரணம் என்று புகழிடம் குதிகுதியென குதித்தார் முனீஸ்வரன்.
அவரின் கவனம் இபொழுது பெரியமகள் மருமகனின் மேல் இருந்ததால் வசீகரன் மனதின் ஓரத்திற்கு சென்றுவிட்டான். அவன் பேசியதையும் கூட விஷ்வேஷ்வரனின் செயல்களின் மீதான கோபத்தில் மறந்துவிட்டார். ஆனால் முழுவதுமாக இல்லை.
பல மாதங்களுக்கு பின்னர் சந்நிதியின் வருகை சென்னையில். ராதாவின் மகள் ரேவதி தலை பிரசவத்திற்கென பாண்டிசேரியில் இருந்து சென்னை வந்திருக்க தனியாக சமாளிக்க முடியாதென ராதா போராடி சந்நிதியை தன்னுடன் அழைத்திருந்தார்.
முனீஸ்வரன் வசீகரனை மனதில் வைத்துக்கொண்டு அனுப்ப யோசிக்க இத்தனை மாதங்கள் வசீகரன் எந்த பிரச்சனையும் செய்யவில்லை, கண்ணிலும் படவில்லை. அவரிடம் வேண்டுமென்றே பெண்ணை பார்த்ததாக சொல்லியிருப்பான், அது இதுவென புகழ் அவர் மனதை கரைத்தான்.
சந்தியா இருக்கும் பொழுது சந்நிதியின் முகத்தில் அத்திபூத்தார் போல தோன்றும் புன்னகை கூட அவள் சென்றதிலிருந்து முனீஸ்வரன் பார்க்கவே இல்லை. முன்பை விட மெலிந்து சோர்வாய் இருக்கும் பெண்.
ஒருவழியாக அங்கேயாவது சென்று இருந்துவிட்டு வரட்டுமே என நீதிமாணிக்கமும் சொல்ல அரைமனதாக அனுப்பியிருந்தார். அதிலும் ஆயிரத்தெட்டு கண்டீஷன்ஸ். பல்லை கடித்துக்கொண்டு ராதா அனைத்திற்கும் சரியென்று சொல்லி அழைத்து சென்றார்.  
ராதாவின் வீடு வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. சந்நிதிக்கு அந்த சூழல் அத்தனை பிடித்தது. தினமும் சந்தியாவிடம் வீடியோ காலில் பேசினாள். 
தங்கள் வீடென்றால் வாரம் ஒருமுறை தொலைபேசியில், இரண்டு வாரம் ஒருமுறை வீடியோ காலில் என்று முனீஸ்வரன் சொல்லியிருக்க இங்கே அந்த கட்டுப்பாடுகள் ஏதுமின்றி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். 
ரேவதியை அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்கிறோம் என்று முடிந்தளவிற்கு வெளியில் சென்றுவந்தாள்.
ராதாவிற்கும் கம்பனிற்கும் அவளின் சின்ன சின்ன ஆசைகளை கூட விட்டுவிட முடியாது பார்த்து பார்த்து செய்தனர். அவளின் முகம் பார்த்து மனம் படித்து நடந்தனர்.
அன்று ரேவதி தங்களின் புதிய கம்பெனி திறப்பு விழாவிற்கு இன்விடேஷன் டிஸைன்ஸ் பார்ப்பதற்காக சந்நிதியையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றாள். குகனின் ஆபிஸிற்கு.
GAV டிஸைன்ஸ் வெளியில் இருந்து பார்க்கவே அத்தனை பெரிதாய் இருந்தது.  முதலில் யாருடையது என்று தெரியாமல் தான் வந்தாள். 
உள்ளே வரவும் நேராக முதல் தளத்திற்கு சென்றனர். அங்கே இருக்கும் மாதிரிகளை பார்த்தும் தேர்ந்தெடுக்கலாம். இல்லை பிடித்தமானதை வரைந்து தர சொல்லி அதை ப்ரிண்ட் செய்ய சொல்லலாம். 
கீழ் தளம் முழுவதும் மாதிரிகள். மேல் தளம் டிஸைனிங் செக்ஷன். ரேவதி மேல் தளம் செல்ல அவளுடன் சென்றாள். அங்கே ரேவதி தனக்கு பிடித்தமானதை அவர்கள் வரைந்து காண்பிக்க சொல்லி பார்த்திருக்க சிறிது நேரம் அமர்ந்திருந்த சந்நிதியை வேறு டிஸைன்ஸ் ஏதாவது பார்த்து வர சொல்லி அனுப்பிவிட்டாள் ரேவதி.
“ஹப்பாடா, எப்படா போவோம்னு இருந்தது ரே. சுத்த போர் இங்க…” என்று கிண்டலுடன் எழுந்து கீழே செல்ல அர்த்தமான புன்னகையுடன் ரேவதி தன் வேலையில் ஆழ்ந்தாள்.
கீழே இருந்த ஒவ்வொரு பத்திரிக்கை மாதிரிகளையும் அத்தனை உன்னிப்பாகவும் ரசனையுடனும் பார்த்துக்கொண்டே ஒரு பத்திரிக்கையின் மாதிரியில் லயித்துவிட்டாள்.
மனது வாவ் என்று சொல்லிக்கொண்டாலும் அதையும் தாண்டிய ஒரு வார்த்தையை தேடிக்கொண்டிருந்தாள். அத்தனை அழகான நேர்த்தியான வடிவமைப்பும் அதன் நிறங்களும் கண்களை விட்டு மறையவில்லை. 
“உனக்கு இந்த இன்விடேஷன் பிடிச்சிருந்தா இதையே மேரேஜ்க்கு பிரிண்ட் பண்ணிடுவோம்…” அவளின் பின்னால் இருந்து வசீகரனின் குரல் கேட்க திடுக்கிட்டு ஒருநொடி பயந்து போய் திரும்பி பார்த்தவள் அவனை கண்டதும் கோபத்துடன் பார்த்தாள்.
“நீங்க எங்க இங்க?…” பட்டென கேட்க,
“இது நம்ம கடை. நான் இங்க இல்லாம வேற எங்க இருப்பேன்?…” என்று சிரிப்புடன் அவன் சொல்லி அவளை ஆராயும் பார்வை பார்க்க இன்னமும் கடுப்பானாள்.
“என்ன விஷயம்? மேடம் இத்தனை கோபம்?…” உண்மையில் புரியாமல் தான் கேட்டான்.
“அப்பாக்கிட்ட என்ன சொன்னீங்க நீங்க?…” என்று விஷயத்தை போட்டுடைக்க அவன் கொஞ்சமும் அதிரவில்லை.
சந்நிதியின் பேச்சில் வசீகரனின் முகத்தில் வசீகர புன்னகையுடன் ஒருவித ரசனையும், கொஞ்சம் காதலும் அவளின் கண்களுக்கு தெரியும் விதமாக.
“கேம் ஓவர்…” என்று வாய்விட்டு சிரித்தவனை பார்த்து சந்நிதி தான் ஸ்தம்பித்து போனாள் அவனின் விழிகளின் பாஷையில். 

Advertisement