Advertisement

தீண்டல் – 15
                 முனீஸ்வரன் எப்படி உள்ளே வந்தார்? அடுத்த நிகழ்வுகள் எப்படி நடந்தேறின? என்றெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அனைத்தும் சிறப்பாகவே நடந்தது.
“அப்பா முகமே சரியில்லையே…” என சந்தியா புகழிடம் கேட்க,
“என்னைக்கு தான் அவர் முகம் சரியா இருந்திருக்கு?…” என்றதும் அவளின் முறைப்பில்,
“சரி விடு, ஏதாவது டென்ஷன்ல இருப்பார். வசீகரன் வந்துட்டு போன டென்ஷனா கூட இருக்கும்…” என அவளை சமாதானம் செய்தவனுக்கும் தெரியவில்லை வசீகரன் வந்ததினால் மட்டும் முனீஸ்வரன் இப்படி ஆகவில்லை என்று. 
திருமணம் முடிந்து மாப்பிள்ளை பெண்ணின் வீட்டில் தான் மூன்று நாட்கள் தங்கவேண்டும். அதன் பின் வார இருந்தியில் மாப்பிள்ளை வீட்டு பக்கம் வரவேற்பு.
விஷ்வாவின் குடும்பத்தினர் அனைவரும் மறுநாள் கிளம்பியிருக்க அடுத்த இரண்டாம் நாள் இவர்கள் கிளம்பவேண்டியது.
வீடு முழுவதும் சொந்தங்கள் நிறைந்திருக்க முனீஸ்வரனால் சந்நிதியிடம் எதுவும் பேசமுடியவில்லை. அதையும் தாண்டி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்காமல் அதிசயத்திலும் அதிசயமாய் மகளை ஆராய்ச்சி பார்வை வேறு கோபத்துடன் பார்த்தார்.
அவரின் பார்வை உணர்ந்தவளால் எதற்கு இத்தனை கோபமான பார்வை என்று புரியாமல் சந்நிதி குழம்பினாள். ஆம், யாரும் அறியாமல் மகளை முறைத்தவண்ணம் தான் பார்த்து வைத்தார்.
அன்று சந்தியா புகுந்தவீடு செல்லும் நாள். அவளுக்கு அனுப்பவேண்டிய சீர்வரிசைகளை சிறப்பாக செய்து அவர்கள் கிளம்பும் முன்னரே அனுப்பியிருக்க இன்னும் ஒருமணி நேரத்தில் இவர்கள் கிளம்ப வேண்டும். 
விஷ்வேஷ்வரனின் அக்காவும், அத்தானும் அழைத்து செல்ல வந்திருந்தனர். அவர்களோடு முனீஸ்வரன் பேசிக்கொண்டிருக்க,
“மாமா, கொஞ்சம் வாங்களேன்…” என தனியாய் அழைத்தான் விஷ்வா.
“ஓகே நீங்க பேசுங்க, நாங்க அதுக்குள்ளே கோவிலுக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்திடறோம்…” என்று விஷ்வாவின் அக்காவும், அத்தானும் கிளம்ப அவர்களுடன் கம்பன் சென்றார் துணையாக.
குடும்பமே என்ன இது என்பதை போல பார்த்திருக்க பார்கவிக்கு பதட்டமாகி விட்டது. புகழும், நீதிமாணிக்கமும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க முனீஸ்வரன் விஷ்வாவுடன் மாடிக்கு சென்றார்.
“சந்தியா…” மாடியிலிருந்து விஷ்வா அழைக்கவும் சந்நிதியுடன் அமர்ந்திருந்தவள் எழுந்து சென்றாள்.
“போய்ட்டு வரட்டும் கேட்போம்…” என ராதா சொல்ல மற்றவர்களுக்கு எதுவும் பிரச்சனையோ  என்றுதான் இருந்தது.
“சொல்லுங்க மாப்பிள்ளை, என்ன விஷயமா கூட்டிட்டு வந்திருக்கீங்க?…” முனீஸ்வரனின் குரலில் வரவழைத்துக்கொண்ட தன்மை விஷ்வாவிற்கு புரிந்தது.
அவரும் என்னதான் செய்வார்? இறங்கிய குரலோ தன்மையான பாவனையோ எதுவுமே வரவில்லை. அடாவடியான அதிகாரக்குரலில் பேசியே பழக்கப்பட்டவர்க்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது.
“சின்ன விஷயம் தான் மாமா, சந்தியாவோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் வேணும். அதுக்காக தான் கூப்பிட்டேன்…”
விஷ்வா சொல்ல சந்தியாவிற்கு நடுக்கம் பிறந்தது. இப்படி கேட்பான் என்று நினைக்கவில்லை அவள். முனீஸ்வரனுக்கோ எதற்காக என்று தெரிந்தாகவேண்டும். ஆனால் அவனாக சொல்வானா என்று சந்தேகமே வந்துவிட,
“என்ன செய்யனும்னு சொல்லுங்க மாப்பிள்ளை. நான் பன்றேன்…”
“பரவாயில்லை மாமா, நீங்க குடுங்க. நான் பார்த்துக்கறேன்…” அவனின் பிடிவாத குரலில் மாமனாருக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“சொல்கிறானா பார்” என உள்ளுக்குள் பொசுங்கியவர்,
“இல்லை எதுக்குன்னு தெரியலை. அதான்…”
“காரணமில்லாம நான் கேட்பேனா மாமா?…” என அவனும் பிடிகுடுக்காமல் பேச வேறு வழியின்றி சென்று எடுத்து வந்தார். அப்பொழுது அவனின் கையில் கொடுக்க மனமில்லை.
“உங்கப்பா என்ன உங்க சொத்து முழுசையும் கேட்கிற மாதிரி இந்த போக்கு காட்டுறார்?…” அவர் உள்ளே சென்ற நேரம் மனைவியிடம் முணுமுணுத்தவன் அந்த பைலை கையில் வாங்கிய பின்பு அவரை பார்த்து புன்னகைத்தவன்,
“சந்தியாவை மேல படிக்க வைக்கலாமேன்னு தான் மாமா. வேற ஒண்ணுமில்லை…” என்று போகிற போக்கில் சொல்ல,
“என்ன?…” என அதிர்ந்து பார்த்தார்.
“இதுக்கு ஏன் ஷாக்?…” வாய்விட்டே அவன் கேட்டுவிட மாப்பிள்ளையாவது ஒன்றாவது என்னும் பாவனை அவரின் முகத்தில் ஏற,
“யார கேட்டு முடிவு பண்ணுனீங்க? அவ படிச்ச வரைக்கும் போதும்னு தான நான் கல்யாணத்தை முடிச்சு வச்சேன். படிக்க வைக்கனும்னா நான் வச்சிருக்க மாட்டேனா? இல்ல எனக்கு வக்கில்லையா?…” என குரலை உயர்த்த,
“அப்பா…” என பயந்து போய் சந்தியா அழைக்க,
“என்ன நீ தான் சொன்னியா படிக்கனும்னு? சொல்லு, கல்யாணம் முடிச்சு வச்சா அப்பன் சொல்றதை கேட்க கூடாதுன்னு இருக்கா என்ன? யார கேட்டு படிக்கனும்னு சொன்ன?…” என்று மகளிடம் கண்களை உருட்டிக்கொண்டு மிரட்டலாய் கேட்டு பழைய முனீஸ்வரனாய் அவதாரம் எடுத்துவிட புகழ் வந்துவிட்டான் மேலே.
“சித்தப்பா?…” 
“வாடா பார்த்தியா உன் தங்கச்சி பண்ணிவச்சிருக்கற காரியத்தை? படிக்கனுமாம். கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு குடும்பம் நடத்த போற கழுதைக்கு படிப்பென்ன வேண்டிக்கிடக்கு? படிச்சா அதுவா வந்து புருஷனை பார்க்கும்? வயித்துக்கு சோறாக்கி போடும்?…” என சகட்டுமேனிக்கு நிதானமின்றி பேச அனைவருமே மேலே வந்துவிட்டனர்.
“என்னங்க இது?…” பார்கவி பதறிப்போய் வர,
“இந்தா உங்கம்மா என்ன படிச்சுட்டா இந்த குடும்பத்தை நடத்தறா? ஒழுங்கா வீட்டுக்கு புருஷனுக்கு கட்டுப்பட்டு கட்டுக்கோப்பா எல்லாத்தையும் கரையேத்திட்டு தான இருக்கா. அவளுக்கு இங்க என்ன குறைஞ்சு போச்சு? அவ சந்தோஷமா ராணி மாதிரி இல்லையா?…” என பேச விஷ்வா அவரை பார்த்தான்.
“எனக்கு ராணி எல்லாம் தேவை இல்லை மாமா. எனக்கு என் மனைவி என் மனைவியா இருந்தா போதும். அவளுக்கு நான் கணவனா இருந்தா போதும். இந்த ராஜா ராணி வாழ்க்கை எங்களுக்கு தேவை இல்லை. ஹ்ம்ம், என்ன சொன்னீங்க?…”  யோசிப்பதை போல அவன் புருவம் சுருக்கி நெற்றியில் கை வைக்க,
“மாப்பிள்ளை, ப்ளீஸ்…” புகழ் விஷ்வா கோபப்பட்டுவிட்டானோ என கலக்கத்துடன் பார்க்க,
“வெய்ட் புகழ், உங்க சித்தப்பா என்னமோ சொன்னாங்கல்ல அதுக்கு பதில் சொல்லவேண்டாமா?…” என அவனை தடுத்தவன்,
“குழந்தை குட்டின்னு நாங்க வாழப்போற வாழ்க்கையை நாங்க தான் முடிவெடுக்கனும் மாமா. அவளுக்குன்னு எந்த ஆசையும் இருக்க கூடாதா என்ன? அவளை படிக்க சொல்லி நான் தான் சொன்னேன். இப்ப நான் உங்ககிட்ட இதை கேட்க போறேன்னு கூட அவளுக்கு தெரியாது. என்னை வச்சுட்டே இத்தனை பேசறீங்க?…” என அவனும் குறையாத கோபத்துடன் பேச,
“இன்னும் அதிகமா படிச்ச பொண்ணுதான் வேணும்னா என் பொண்ணை கேட்டிருக்க கூடாது. தெரிஞ்சு தானே கல்யாணம் செஞ்சீங்க? இப்ப படிக்கலை, படிக்கவைக்க போறேன்னா என்ன அர்த்தம்?…” 
முனீஸ்வரன் யோசியாமல் வார்த்தையை விட அனைவரும் அதிர்ந்துபோனார்கள். விஷ்வாவின் முகத்தில் அத்தனை இறுக்கம். பார்க்கும் பொழுதே கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறான் என்பது நன்றாகவே விளங்கியது.
மெதுவாய் சந்தியா அவனின் கைகளை பற்றிக்கொள்ள அவளை பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
“இங்க பாருங்க மாமா, இப்பவும் உங்களுக்கு இதுக்கு ஏன் கோபம் வருதுன்னு எனக்கு புரியலை. புரியவைக்க நான் ரெடி இல்லை. உங்க வாழ்கையை நீங்க வாழுங்க. எங்க எதிர்காலத்தை நாங்க முடிவு பண்ணிக்கறோம். என்ன செய்யனும்னு இனி நான் முடிவு பண்ணிக்கறேன்…” என்றவன்,
“சந்தியா கிளம்புவோம்…” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு வேகமாய் மாடியிலிருந்து இறங்கி வர மேலே வரமுடியாமல் நடந்த வாக்குவாதங்களை கேட்டுக்கொண்டு கீழே பரிதவிப்புடன் சந்நிதி நின்றிருந்தாள்.
“அத்தான்…” என கெஞ்சலாய் கண்ணீருடன் அழைத்தவளை பார்த்தவனுக்கு இரக்கம் சுரந்தது. அவளின் தலையில் தட்டியவன் கண்ணீரை துடைத்துவிட்டு,
 “ஹேய் நிதி பேபி, எதுக்காம் அழறீங்க? நான் என்ன கோவமாவா போறேன். இல்லை இங்க வராம போய்டுவேனா? நான் சண்டை எல்லாம் போடலை. சோ சீக்கிரமே திரும்ப உன் தியாக்காவோட இங்க வரேன்…” என்று எத்தனை சமாதானம் செய்தும் சந்நிதியின் அழுகை நின்றபாடில்லை.
சந்தியாவும் தங்கையை கட்டிக்கொண்டு பிரியப்போகும் நேரம் அழுகையில் கரைய சில நிமிடங்கள் அமைதியாக அவர்களை பார்த்தபடி நின்றான் விஷ்வா. அதற்குள் மாடியில் நீதிமாணிக்கமும் புகழும் முனீஸ்வரனை ஓரளவிற்கு சமாதானம் செய்து சமாளித்து இருந்தனர்.
சமாளிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை. அத்தனை கோபத்துடன் இருக்கும் அவரிடம் இந்த நேரம் தவறு அவரின் பக்கம் என எதை எடுத்து சொன்னலும் எடுபடாது. 
அதையும் தாண்டி தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டு மீண்டும்  இரு குடும்பங்களுக்குள் பிரிவு ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. முக்கியமாக நீதிமாணிக்கமும், புகழும்.
கீழே அனைவரும் இறங்கி வர அதை உணர்ந்தாலும் விஷ்வா திரும்பி பார்க்கவில்லை. சந்தியா இப்பொழுது தங்கையை விட்டு தாயை கட்டிக்கொண்டு அழ விஷ்வாவின் பார்வை யாரிடத்திலும் இல்லை. 
அவனின் முகமே யாரையும் பார்க்க விரும்பவில்லை என்பதை போல இருக்க நீதிமாணிக்கமும் புகழும் தான் அவனருகில் சென்று நின்றனர். வருத்தம் தெரிவிப்பதை போல சங்கடத்துடன் நிற்கும் அவர்களை பார்த்தவன் தன் இறுக்கத்திலிருந்து கொஞ்சம் தளர்ந்து மிதமான புன்னகையை சிந்தினான்.
“மாப்பிள்ளை எங்க பொண்ணை…” நீதிமாணிக்கம்  ஆரம்பிக்க,
“இங்க பாருங்க மாமா இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். கட்டின பொண்டாட்டியை அவ சுயமரியாதை குறையாம, நிம்மதியா, சந்தோஷமா வச்சுக்காதவன் வாழவே தகுதி இல்லாதவன்னு நினைக்கிற ஆள் நான். நான் இன்னொருத்தர் சொல்லி நடந்துக்கறவன் இல்லை.  என்னடா இப்படி சொல்றானேன்னு நினைக்க வேண்டாம். இப்ப இதை நான் சொல்ற காரணம் உங்களுக்கே புரியும். நீங்க கவலைப்படாதீங்க…” 
நறுக்கென்று அவன் சொல்லிய வார்த்தைகள் முனீஸ்வரனை குத்த பல்லை கடித்துக்கொண்டு பொறுமையாக அவர் நின்றார்.  அவரிடம் சொல்லிக்கொள்ள சந்தியா வர முறைப்புடனே அவளை பார்த்தவர்,
“போற இடத்துல குடும்ப மானத்தை வாங்கற மாதிரி அதிகபிரசங்கித்தனமாக நடந்துக்காம மரியாதையா நடந்துக்க. மாப்பிள்ளை சொல்பேச்சை கேட்டு அந்த வீட்டு மருமகளா, மனைவியா வீட்டுக்கு அடக்கமா இருக்க பழகு. படிக்கிறேன் பட்டம் வாங்கறேன்னு வாழ்க்கையை தொலைச்சிடாத. உன் அம்மாவை பார்த்து கத்துக்கோ. போய்ட்டு வா…”  
முனீஸ்வரன் சொல்ல சொல்ல விஷ்வாவின் கோபத்தின் அளவு ஏற மற்றவர்கள் அனைவரும் தலையில் அடித்துக்கொள்ளாத குறை தான். 
“வாழ போற பொண்ணுக்கிட்ட போய் கோபத்தை காமிச்சுட்டு என்ன மனுஷன் இவர்? இந்த மனுஷனுக்கு நல்லவிதமா பேச கூடவா தெரியாது?…” ராதா வாய்விட்டே பார்கவியிடம் சொல்லிவிட அவரோ இதனை கொண்டு எங்கே மீண்டும் மாப்பிள்ளையும் மருமகனும் சண்டையிட்டு கொள்வாரோ என சஞ்சலத்துடன் கண்ணீர் வடித்துக்கொண்டு நின்றார்.
வேறு யாரும் பேசும் முன் விஷ்வாவின் அக்காவும், அத்தானும் வந்துவிட  அந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டனர்.
அவர்கள் வந்து ஒரு பத்து நிமிடத்திலேயே பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டவர்கள் கிளம்பிவிட போகும் போது வரவேற்பிற்கு முதல் நாளே வந்துவிடுமாறு வலியுறுத்திவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்ட விஷ்வா கடைசியாக முனீஸ்வரனிடம் வந்தவன் வெறும் தலையசைப்புடன் விடைபெற அவர் என்ன நினைத்தாரோ,
“பார்த்து போய்ட்டு வாங்க மாப்பிள்ளை…” என்றார்.
“சரிங்க மாமா…” என்று அதன் பின்னர் தான் இவனுமே பேசினான். கிளம்பும் வரை அமைதியாக இருந்தவர் அவர்கள் கார் கண்ணில் இருந்து மறைந்ததும் கோபம் மீண்டும் தலைக்கேற வேகமாய் உள்ளே சென்று  மாடி ஹாலில் அமர்ந்துகொண்டார்.
எத்தனை பெரிய அவமானம் இப்படி அனைவரின் முன்பும் அசிங்கப்படுத்திவிட்டானே? என பொங்கி பொங்கி பொருமியபடி சட்டையை கழட்டிவிட்டு அமர்ந்தவரால் ஒரு நிலையில் அமர முடியவில்லை.
கீழே இருந்தவர்களுக்கு மாடிக்கு செல்ல அத்தனை அச்சமாக இருந்தது. புகழ் தான் வேறு வழியின்றி மாடிக்கு சென்றான். 

Advertisement