உண்மையிலே அவளுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தாள். இந்த வேலையை விட வேண்டுமே என்றும் கஷ்டமாக இருந்தது. இன்னொரு பெண் இந்த வேலைக்கு வந்ததும் அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க மீண்டும் செழியன் கஷ்டப் பட வேண்டும் என்று அவனுக்காக பரிதாபப் பட்டாள். அவளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவள் மனக் கண்ணில் வலம் வந்தது.

அவனுடைய கால்கள் உரசிய போது வந்த கூச்சம், மௌசை எடுக்கப் போகிறேன் என்று தன்னுடைய கையை அவன் தீண்டியது என எல்லாம் நினைவு வந்தது. புதிதாக வரும் பெண்ணுடன் அவன் இந்த அளவுக்கு குளோசா இருப்பானோ என்று சந்தேகம் வந்து உள்ளுக்குள் புகைந்தது. பொறாமை படக் கூட தனக்கு தகுதி இல்லை என்று தன்னையே அடக்கிக் கொண்டாள்.

கூடவே இந்த தொடுகையை எல்லாம் செய்ய அந்த அருணை அனுமதிக்க முடியுமா என்ற மிகப் பெரிய கேள்வி உதயமானது. கண்டிப்பாக முடியாது என்று தோன்றியது.

“ஐயோ செத்துறலாம் போல இருக்கு”, என்ற எண்ணம் வந்த போது தான் காதல் தோல்வி அடைந்தவர்களின் தற்கொலை எண்ணத்தில் நியாயம் இருப்பது போல பட்டது.

ஆனால் அவள் அப்படிச் செய்தால் அவளது குடும்பம் எப்படிக் கதறும் என்று எண்ணி அந்த நினைவைக் கை விட்டாள். “என்ன செய்யப் போறேன்னு தெரியலையே?”, என்று அவள் தலையில் கை வைத்து அமர்ந்த போது தான் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் செழியன். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளைக் கண்டதும் அவன் கண்களில் மின்னல் தெறித்தது. “மாலினி”, என்ற அவனுடைய ஒற்றை அழைப்பில் வெகு நாட்கள் காதலியை பிரிந்து இருந்த துயரத்தைக் கண்டாள்.

அவனிடம் பேச முடியாமல் உதடுகள் சண்டித் தனம் செய்ய முயன்று “குட் மார்னிங் சார்”, என்றாள்.

“உன்னைப் பாத்துட்டேன்ல? நிஜமாவே எனக்கு நல்ல மார்னிங் தான். எப்படி இருக்குற? உடம்புக்கு ஒண்ணும் இல்லை தானே? சத்தியமா இன்னைக்கு உன்னைப் பாப்பேன்னு நினைக்கவே இல்லை. தேங்க்ஸ் மாலினி ஆபீஸ் வந்ததுக்கு”

“கடவுளே இப்ப போல இவன் இப்படி உருகனுமா?”, என்று எண்ணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“என்ன மாலினி, இப்படி பாக்குற? நான் ஏன் இப்படி இருக்கேன்னு கேக்குறியா?”, என்று கேட்டான். உண்மையிலே அவன் அப்படித் தான் இருந்தான். அவ்வளவு சோர்வு அவன் முகத்தில். பல நாள் பட்டினி கிடந்தது போல இருந்தவனின் தோற்றம் அவள் மனதை கசக்கிப் பிழிந்தது.

“நிஜமாவே நேத்து நான் நானா இல்லை. நீ வேற வரலையா. என்னால இயல்பா இருக்க முடியலை. என் மேல உனக்கு கோபம் வந்துருக்குமோன்னு ரொம்ப தவிச்சுப் போயிட்டேன்”, என்று டீனேஜ் பையன் போல அவனுடைய மனதைச் சொல்லிக் கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கு எப்படி இருக்குமாம்?

“ஏன்டா, இப்படி இருக்குற?”, என்று அவனுடைய சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் போலவும் அவன் நெஞ்சில் சாய்ந்து கதற வேண்டும் போலவும் இருந்த உணர்வை அடக்கி அவனை வெறுமையாக பார்த்தாள்.

“நீ நேத்து மதியம் சாப்பாடு கொண்டு வரலை. அதனால நான் சாப்பிடவே இல்லை தெரியுமா? முன்னாடி எல்லாம் பசியே தெரியாது. நேத்து எனக்கு அவ்வளவு பசி”, என்று சொல்ல அவள் கண்கள் கலங்கியது.

அவன் இன்னும் ஏதோ சொல்ல வரவும் “செழியன் பிளீஸ்… இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க… என்னால எதுவும் கேக்க முடியாது”, என்று சொன்னாள்.

“சரி நான் எதுவும் சொல்லலை. ஆனா ஒரே ஒரு தேங்க்ஸ் மட்டும் சொல்லிக்கிறேன்”, என்றான். அவள் அவனை குழப்பமாக பார்க்க “என் பேர் சொன்னதுக்கு. நீ சொன்னப்ப தான் என் பேர் இவ்வளவு அழகா இருக்குனு தோணுது”, என்றான்.

“பிளீஸ்… இப்படி எல்லாம் பேசாதீங்க….. எனக்கு கஷ்டமா இருக்கு”

“நான் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறேன்னு எனக்கே தெரியலை மாலினி. ஐ அம் இன் அவுட் ஆப் கண்ட்ரோல்”, என்று தன்னுடைய உண்மையான மனநிலையைச் சொன்னான்.

“சார், பிளீஸ் நான் கொஞ்சம் பேசணும். நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா என்னால என் மனசுல இருக்குறதை சொல்ல முடியாம போயிரும்”

“சரி, சொல்லு. நான் கேக்குறேன்”, என்றவன் அவள் எதிரே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அப்போதும் அவனது அருகாமை அவளை பாதித்தது. தன்னுடைய மனதை அடக்கிய படி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“சார் நீங்க முதல்ல ஒரு உண்மையைத் தெரிஞ்சிக்கணும். உங்களுக்கு என் மேல வந்துருக்குற காதல் மாதிரி எனக்கு உங்க மேல எந்த உணர்வும் வரலை”

“மாலினி”

“நான் முதல்ல பேசிறேன் சார். நிஜமாவே எனக்கு உங்க மேல எந்த உணர்வும் வரலை. என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க எனக்கு நல்ல ஃபிரண்ட். தெரியாத விசயங்களைச் சொல்லிக் கொடுக்கும் கைடு. சம்பளம் கொடுக்குற முதலாளி. அவ்வளவு தான். அதுக்கும் மேல எதுவுமே இல்லை. ஒரே ரூம் குள்ள நான் இருந்தும் நீங்க எந்த தப்பான பார்வையும் பாத்தது இல்லை. அதனால உங்க கண்ணியம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த சின்ன வயசுல இவ்வளவு உயரத்தில் இருக்குற உங்களோட உழைப்பு ரொம்ப பிடிக்கும். மத்த படி வேற எதுவும் இல்லை. சாப்பிட வச்சது கூட நம்ம பிரண்டை பட்டினி போடக் கூடாதுன்னு தான். உங்களுக்குன்னு கடவுள் அனுப்பின தேவதை நான் இல்லை சார். அவங்க கட்டாயம் உங்களைத் தேடி வருவாங்க”

“மாலினி, நீ நிஜமா தான் சொல்றியா?”, என்று ஏக்கமாக கேட்டான். தன்னுடைய காதல் தோற்றுப் போன வலி அவன் குரலில் வெளிப்பட்டது.

“ஆமா சார், எனக்கு உங்க மேல காதல் இல்லை. இனி வரவும் வராது”

“காதல் இல்லைன்னா என்ன? நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நான் இன்னைக்கே அம்மாவை உங்க அப்பா கிட்ட பேசச் சொல்றேன்”

“இதை ஏன் டா நீ முன்னாடியே செய்யலை?”, என்று எண்ணிக் கொண்டு “காலம் கடந்துருச்சு சார். எனக்கு வீட்ல வேற மாப்பிளை பாத்துட்டாங்க. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். இந்த மாசத்துக்குள்ளே கல்யாணமும் முடிவு பண்ணிட்டாங்க”, என்றாள்.

“என்ன மாலினி சொல்ற?”, என்று அதிர்ந்து போய் கேட்டான்.

“ஆமா சார், நேத்து தான் எல்லாம் பேசி முடிச்சாங்க. அதனால தான் நான் லீவ் போட்டேன். நான் இன்னும் நாலு நாள் தான் வேலைக்கு வருவேன். எங்க வீட்ல அதுக்கு மேல விட மாட்டாங்க. என்னால உங்களுக்கு தான் கஷ்டம். இன்னொரு ஆளை நீங்க டிரெயின் பண்ணனும்”

“நீங்க ஒண்ணும் விளையாடலை தானே மாலினி?”, என்று கேட்டான். அவன் குரலில் இருந்த மரியாதைப் பன்மையே அவன் மனது அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டதை உறுதிப் படுத்தியது.

“நான் உண்மையா தான் சார் சொல்றேன். வேணும்னா நிச்சயதார்த்தத்துக்கு வாங்க”, என்று இரக்கமே இல்லாமல் சொன்னாள்.

அவன் கண்களில் இருந்த வலியைப் பார்த்த மாலினிக்கு குத்துயிரும் கொலையுயிருமாக அடி பட்டுக் கிடந்த பறவையின் வலியாக தான் தெரிந்தது.

அவளது ஒற்றை வார்த்தையோ, அவளது ஒற்றை தொடுகையோ, அவளது ஒற்றை முத்தமோ அவனை உயிர்த்தெழ செய்து விடும் தான். ஆனால் அவள் அப்படிச் செய்தால் அவள் குடும்பம் கதறுமே என்று எண்ணி தன்னை அடக்கிக் கொண்டாள்.

அவளுடைய தெளிவான பேச்சே அவள் சொன்னது உண்மை என்று உணர்த்த அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்ற முடிவை செழியனை எடுக்க வைத்தது.

“ஓகே மாலினி, வாழ்த்துக்கள். இனி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க”, என்று சாதாரணமாக சொல்லி விட்டுச் சென்றவன் தன்னுடைய சீட்டில் அமர்ந்தான்.

அந்த அறையில் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது. அந்த அமைதியைத் தாங்க முடியாமல் “நீங்க வேலையைப் பாருங்க மாலினி. ஏதாவது முக்கியமான மெயிலுக்கு பதில் அனுப்ப வேண்டியது இருந்தால் உடனே அனுப்பிருங்க. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றவன் நேராக நின்றது அவனது வீடு தான்.

அவன் சென்றது அவளுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அங்கேயே இருந்தால் அவனைப் பார்க்க பார்க்க அவளுக்கும் அழுகை வந்து கொண்டிருந்தது. எங்கே தன்னையும் மீறி தன்னுடைய மனதை அவனுக்கு உணர்த்தி விடுவோமோ என்று பதறிக் கொண்டிருந்தாள். அதன் பின் வேறு வழி இல்லாமல் வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

இந்த நான்கு நாட்களில் அவனுக்கு உதவியாக இருக்கும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று அவள் முடிவு எடுத்ததால் அவள் கவனமும் வேலையில் சென்றது.

வீட்டுக்கு சென்ற செழியன் முகத்தைப் பார்த்தே எதுவோ சரியில்லை என்று கண்டு கொண்டார் சாரதா.

“என்ன ஆச்சு செழியா?”, என்று கேட்டதும் அனைத்தையும் சொன்னவன் “இனி அவ எனக்கு இல்லை மா”, என்று கதறி விட்டான்.

சிறிது நேரம் அவனை அழ விட்டவர் “போதும் கண்ணா. நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை. ஒண்ணு கிடைக்கலைன்னா அதையே நினைச்சிட்டு அழுறதுக்கு? எல்லாத்தையும் கடந்துட்டு போறது தான் வாழ்க்கை. ஒரு மாசம் காதலிச்ச பொண்ணு உனக்கு இல்லைன்னு இந்த அழுகை வருதுன்னா அத்தனை வருஷம் நகமும் சதையுமா வாழ்ந்த உன் அப்பாவை நினைச்சு நான் எப்படி அழணும்?”, என்று கேட்டார்.

“அம்மா”

“நிதர்சனத்தை ஏத்துக்கோ செழியா. அந்த பொண்ணு நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு அடுத்த வேலையைப் பாத்துட்டு போய்ட்டே இருக்கணும். அவளையே நினைச்சு நீ அழுதுட்டு இருந்தாலோ, அவ உனக்கு கிடைக்கலைன்னு புலம்பிட்டு இருந்தாலோ அவ எப்படி நல்லா இருப்பா சொல்லு? உன்னோட எதிர்மறை எண்ணம் அவளுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது டா. அவ சொன்ன மாதிரி உனக்கான தேவதை அவ இல்லை டா. அவ உன்னைத் தேடி வருவா. அப்ப உன் வாழ்க்கை பிரகாசமா மாறும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ ரொம்ப புத்திசாலி டா. இதுக்கெல்லாம் உடைஞ்சு அழலாமா சொல்லு?”

“நீங்க சொல்றது எல்லாம் புரியுது மா. ஆனா ரொம்ப வலிக்குது”

“காதல் தோல்வி வலிக்காம இனிக்கவா செய்யும்? ஆனா அதையே நினைச்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்? உனக்கு ஆயிரம் வேலை இருக்கு. முதல்ல அவளை ஆஃபிஸ்ல தனியா விட்டுட்டு வந்துருக்க? நீ என்ன நிலைமைல இருக்கேன்னு தெரியாம அவ எப்படி நிம்மதியா இருப்பா? உனக்கு என்ன ஆச்சோன்னு தான் கவலைப் படுவா. உனக்கு புடிச்ச பொண்ணை நீ கஷ்டப் படுத்தலாமா கண்ணா?”

“சரி மா, நான் இப்ப என்ன பண்ணனும்?”

“ஆஃபிஸ்க்கு கிளம்பி போ. அவ கிட்ட முன்னாடி எப்படி பழகினியோ அப்படி பழகு. அவளே நாலு நாள் தான் வருவேன்னு சொல்லிருக்கா. அது வரை அவளை இயல்பா இருக்க விடு டா. நீ அழுது வடிஞ்சிட்டு இருந்தா உன்னை அழ வைக்கிறோமேன்னு அவ தவிச்சு போய்ற மாட்டாளா?”

“சரி மா, நான் ஆபீஸ் கிளம்புறேன். இனி பீல் பண்ண மாட்டேன். அப்படியே பீல் பண்ணினா கூட அதை அவ கிட்ட காட்ட மாட்டேன். போதுமா?”, என்று சொல்லி விட்டுச் சென்றான். மகனின் வலி கூடிய விரைவில் சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்வதைத் தவிர சாரதாவுக்கு வேறு என்ன செய்ய என்று தெரிய வில்லை.