Advertisement

அத்தியாயம் ஐம்பது :

வீரமணி வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆனது……. கார்த்திக்கிடம் இங்கே தங்கிக்கொள் என்று சக்தி சொல்லியும் அவளின் வீட்டில் தங்க ஒத்துக்கொள்ளவில்லை…. “உங்கப்பா வரட்டும்”, என்று விட்டான்.

அதன் பிறகு சக்தியும் வற்புறுத்தவில்லை… அவள் காலேஜ் வேலைகளில் இறங்கிவிட்டாள்.

அவள் மாலை வீடு திரும்பிய நேரம் கார்த்திக் அவளுக்காக வீட்டில் காத்திருந்தான்.

“என்ன கார்த்திக்? அதிசயமா நான் வீட்டுக்கு வர்றியான்னு கேட்காததுக்கு முன்னாடியே வீட்ல இருக்க…..”,

அவள் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே செல்வம் வந்தான். “என்ன செல்வம்? இப்போ தானே வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போனீங்க”, என்றாள் சக்தி….

“பாஸ் தான் மேடம் வர சொன்னார்”, என்றான் செல்வம்.

கார்த்திக்கை சக்தி பார்க்க…. “இன்னைக்கு உங்க காலேஜ்ல ஏதாவது இன்டர்வ்யூ நடந்ததா”, என்றான் இருவரையும் பார்த்து கார்த்திக்.

“ஆமாம், அட்மினிஸ்ட்ரேஷன்க்கு ஆள் வேணும்னு இன்னைக்கு இன்டர்வ்யூ இருந்தது”, என்றாள் சக்தி……

“யார் பண்ணினா?”, என்றான் கார்த்திக்.

செல்வம் தான் பண்ணினான்.

“நீதானா அது?”, என்றான் கார்த்திக் செல்வத்தை பார்த்து……

“என்ன பாஸ்?”, என்றான் புரியாமல் செல்வம்…..

“ஏண்டா இன்டர்வ்யூ வந்தா கேள்வி கேளு….. பதில் சொன்னா ஓகே! இல்லைன்னா செலக்ட் பண்ணாத! அதைவிட்டுட்டு மிரட்டுவியா?”, என்றான் கோபமாக கார்த்திக்…

கார்த்திக்கின் கோபத்தை உணர்ந்த சக்தி…. “யாரை மிரட்டினான்?”, என்றான் புரியாமல் கேட்டாள்.

“அவனையே கேளு?”,

“மிரட்டினிங்களா செல்வம், யாரை, எதுக்கு?”, என்றாள் சக்தி.

“அது வந்து….”, என்று இழுத்தான்…… இழுத்ததிலேயே அவன் செய்திருக்கிறான் என்று சக்திக்கு புரிந்தது…

“யாரை? உனக்கு எப்படி தெரியும்?”, என்று கார்த்திக்கையும் பார்த்து கேள்விகளை அடுக்கினாள்.

“முதல்ல நீ அவனை கேளு”, என்றான் கார்த்திக்.

“பாஸ் அது….”, என்று செல்வம் இழுக்க…..

“சொல்லுடா”, என்றான் கார்த்திக்..

“நடந்ததை சொல்றேன், கோவிக்க கூடாது!”, என்றான் செல்வம்.

“முதல்ல சொல்லுடா!”,

“அந்த பொண்ணு உள்ள வந்துச்சா……. அவ்ளோ அழகா இருந்துச்சு பாஸ், நான் பார்த்துட்டே இருந்தனா……?????”,

“பக்கத்துல வந்தவுடனே, உட்காருங்க பேர் என்னன்னு கேட்டேன்”,

“அது வந்து ண்ணா வந்து ண்ணா ன்னு சொல்லிச்சா….. முத முதலா இப்போ தான் ஒரு பொண்ணை பார்த்து நான் சைட் அடிக்கறேன், அது என்னை அண்ணான்னு சொன்னா எவ்வளவு கோபம் வரும்! அதான் கோவத்துல எந்த கேள்வியும் கேட்காம எந்திரிச்சு போன்னு கொஞ்சம் கடுமையா சொல்லிட்டேன்…..”,

“உங்களுக்கு தெரிஞ்சவங்களா பாஸ்! என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் தானே”, என்றான் செல்வம்.

செல்வம் சொல்ல சொல்லவே கார்த்திக்கின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு….

“எனக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு தான்! ஆனா வேலைக்கு எடுத்துக்கோங்கன்னு சொல்ல முடியாதே! உங்க மேடம் தான் இது என்னோட காலேஜ்…… அதுல நான் சொல்றதை தான் ஃபால்லோ பண்ணனும்னு சொல்லுவாளே! அதான் சொல்லலை!”, என்றான் சீரியசாகவே.  

“தேவையில்லாததை பேசாத கார்த்திக்! இன்னும் உன் தலைல தையல் கூட பிரிக்கலை ஞாபகம் இருக்கட்டும், திரும்ப உடைக்கவும் யோசிக்க மாட்டேன்…… நீ யோசிச்சு பேசு”, என்று அவனை கோபமாக அதட்டிய சக்தி, “யார் அந்த பொண்ணு முதல்ல அதை சொல்லு!”, என்றாள்.

அவளின் கோபம் பார்த்து தணிந்தவன்….. “மாரியோட பொண்ணு! என்கிட்டே கேட்டுட்டு தான் அவன் இன்டர்வ்யூக்கு அனுப்பினான்….. நான் தான் அனுப்பிவிடுன்னு சொன்னேன்…. சாயந்தரம் உன்கிட்ட விஷயத்தை சொல்லலாம்னு இருந்தேன்! அதுக்குள்ள இந்த லூசுபய இப்படி பண்ணுவான்னு எனக்கென்ன தெரியும்”, என்றான் எரிச்சலாக கார்த்திக்.

“என்ன பாஸ் லூசு மாதிரி செஞ்சேன்! அண்ணான்னு கூப்பிட்டா கோவம் வராதா?”,

“டேய்! நிஜமாவே நீ லூசு தாண்டா! அந்த பொண்ணு பேரு வந்தனாடா!”, என்றான் சிரிப்போடு கார்த்திக்.

சக்திக்கும் சிரிப்பு பொங்கியது. “இப்படியா செல்வம் நீங்க பல்ப் வாங்குவீங்க!”, என்று சக்தி கிண்டல் செய்ய…. செல்வத்தின் முகம் ஒரு வெட்க புன்னகையை பூசியது.

“அவ வந்து ண்ணா ன்னு சொன்ன மாதிரி எனக்கு காதுல விழுந்தது பாஸ்!”, என்றான் அசட்டு சிரிப்புடன்.

“போடா டேய் போடா…… அது வீட்டுக்கு போய் ஒரே அழுகை போல….  மாரி நேரா என்கிட்டே வந்துட்டான்…. எவன் அவன் என் பொண்ணை அழ வெச்சவன் நான் அவனை விடமாட்டேன்னு….”,

“இரு நான் விசாரிக்கறேன்னு சொல்லி அவனை சமாதனப்படுத்தியிருக்கேன், நான் மட்டும் சீன்ல இருந்து நகர்ந்தேன்னு வை உன் கதை கந்தல்டா…. அவனே ஒரு முரட்டு பய உனக்கு தெரியாததா?”,

“அப்படியா நீங்க என்னை விட்டுடுவீங்க”, என்று அசால்ட்டு போல சொன்னவன்….. “பாஸ் மாரி அட்ரெஸ் என்ன?”,

“எதுக்கு?”,

“அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அனுப்ப தான்…..”,

“இனிமே உன்கிட்ட அனுப்ப மாட்டேன்!”, என்று கார்த்திக் சொல்ல…..

“பாஸ்! என் லைஃப்ல விளக்கேத்தின பெருமை உங்களையே சாரும் பாஸ்.. என்னை கைவிட்டுடாதீங்க”, என்றான்.

“டேய்! சீரியசாவா இருக்க நீ!”,

அந்த பெண்ணின் முகத்தை நினைவில் கொண்டு வந்தவன், “எஸ் பாஸ்! நிஜம்மா எனக்கு பார்த்தவுடனே பிடிச்சது! அது வேற காலுக்கு வலிக்குமோ தரைக்கு வலிக்குமோன்னு மெதுவா நடந்து வந்து உட்கர்ந்துச்சு…… பேர் என்னன்னு கேட்டதும் திரும்பவும் அது வாய்க்கு வலிக்கும்மோ என் காதுக்கு வலிக்குமோன்னு வந்து அண்ணானுச்சா டென்ஷன் ஆகிட்டேன்”, என்றான்.

கார்த்திக் என்ன செய்யலாம் என்பது போல சக்தியை பார்க்க……  

“நாளைக்கு ஜாயின் பண்ண சொல்லுங்க!”, என்றவள்… செல்வத்தின் பக்கம் திரும்பி, “அந்த பொண்ணுக்கு பிடிச்சா ஓகே! இல்லைன்னா டிஸ்டர்ப் பண்ண கூடாது!”, என்றாள் கண்டிப்புடன்.

“நம்புங்க மேடம்! நம்புங்க!”, என்றான் பாவம் போல.

“ஒன்னும் பண்ணமாட்டான்!”, என்று கார்த்திக்கும் சர்டிபிகேட் கொடுக்க….. அதன் பிறகே விட்டாள் சக்தி.   

மறு நாளே வீரமணி வந்துவிட்டார். “என்ன செய்யலாம், திருமண வரவேற்பை எப்படி நடத்தலாம்”, என்பது மாதிரி கேட்க…….

“வரவேற்ப்பு வேண்டாம்!”, என்று பிடிவாதமாக சொல்லிவிட்டாள் சக்தி…… “திருமண அறிவிப்பு….. வாழ்த்து……. இந்த மாதிரி ஏதாவது பேப்பர்ல பெருசா ஒரு நாலஞ்சு பக்கத்துக்கு எங்க போட்டோவை போட்டு குடுத்துடுங்க…. நீங்க மந்திரி ஆனதுக்கு ஒரு பெரிய விருந்து உங்களுக்கு யாரையெல்லாம் கூப்பிடனும்னு தோணுதோ கூப்பிட்டு குடுத்துடுங்க…..”, என்றுவிட்டாள்.

“ஏன்”, என்றவரிடம்….

“பதினாலு மாசத்துக்கு முன்னாடி நடந்த கல்யாணத்துக்கு இப்போ வரவேற்பா வேண்டாம், அவனவன் அவனவன் வீட்ல நம்மை விமர்சிச்சிட்டு இருக்குறதை நாம விருந்து குடுத்து மேடையில நின்னு எங்களை பார்த்து விமர்சிங்கடான்னு சொல்ற மாதிரி ஆகிடும் வேண்டாம்பா”, என்றுவிட்டாள்.

“கார்த்திக்கை நம்ம வீட்ல வந்து இருக்க சொல்லிடலாம்மா”, என்றார்.

“அது உங்களுக்கும் கார்த்திக்கும் உள்ளதுப்பா”, என்று விட்டாள்.

அவர் கார்த்திக்கிடம் அப்படி சொல்ல……

“கொஞ்ச நாள் நாங்க எங்க வீட்ல இருக்கோம் ஐயா! அங்க வர்றதை அப்புறம் பேசிக்கலாம், இதுவும் நீங்க குடுத்த வீடு தானே!”, என்றான் சமாதானமாக.

“ஏன் கார்த்திக்?”, என்றவரிடம்……

“கேஸ் நடக்கும் போது அங்க வேண்டாம்!”, என்றான்.

அவருக்கும் அது சரியென்று பட…. நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து சக்தியை வீரமணியும் தெய்வானையும் கார்த்திக்கின் வீடு கொண்டு சென்று விட்டனர்.

அவர்கள் சென்றதும் ஆதரவாய் சக்தியை அணைத்துக் கொண்ட கார்த்திக், “வெல்கம் ஹோம்”, என்றான்.

“அப்பா! உன்னோட வர எத்தனை போராட்டங்கள்!”, என்று பாந்தமாய் அவனின் கைகளுக்குள் அடங்கினாள்.

“நீ இப்போ என்ன பண்ற கார்த்திக்! நான் இன்னும் அதை கேட்கவேயில்லை… கேட்கனும்னு நினைப்பேன்! மறந்து போய்டுவேன்…”, என்றாள் அவனின் கைகளுக்குள் இருந்தவாரே…..

“நானா? இப்போ சினிமா தயாரிக்கறேன்…. அப்புறம் மாரி பேர்ல மறுபடியும் குவாரி கான்ட்ராக்ட் எடுத்திருக்கேன்…..”, என்றான்.

மறுபடியுமா என்பது போல அவள் முகத்தில் கவலையை பார்க்கவும்….

“நம்பு! இந்த முறை கவர்மென்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எதையும் மீற மாட்டேன், எனக்கு அதை விட்டா வேற தொழில் தெரியாது…..”, என்றான்.

“அதான் சினிமா தயாரிக்கறியே!”, என்றாள்…..

“சினிமான்றது ஒரு கேம்ப்ளிங் மாதிரி சக்தி! எப்போ வெற்றி வரும்! எப்போ தோல்வி வரும்னு சொல்ல முடியாது… அதை மட்டுமே நம்ப முடியாது……”,  

“நம்பு சக்தி! விதிமுறைகளை மீற மாட்டேன்….”,

“நம்பறதும் நம்பாததும் இல்லை கார்த்திக் இங்க பிரச்சனை! அந்த கலெக்டர் இருக்கான் தானே……….”, என்று ஆரம்பித்தவள் இருவருக்குள்ளும் நடந்த சம்பாஷனையை அப்படியே தெரிவித்தாள்….

கார்த்திக் அவளை இன்னும் இறுக அணைத்துக் கொண்டான், “தேங்க்ஸ் சக்தி!”, என்று…

“ஆனா அவன் கேட்டான்…… பழசு செஞ்சதேல்லாம் இல்லைன்னு ஆகிடுமான்னு….. ஏன் கார்த்திக் இப்படியெல்லாம் பண்ணின…. எனக்கு எல்லாம் தெரிஞ்சது தானா… இல்லை எனக்கு தெரியாம ஏதாவது இருக்கா?”, என்றாள். 

கார்த்திக் பதிலே சொல்லவில்லை, அவன் முகம் மிகவும் தீவிரமாக மாறிவிட்டது.

நிமிர்ந்து அவனை பார்த்தவள், அவன் முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்ததும் வேறு பேச்சுக்கு மாறினாள்.      

“இரு உங்கம்மாகிட்ட நான் இங்க வந்ததை சொல்லிடறேன்!”, என்று சொன்னவள், அவரை அழைத்து விஷயத்தை சொல்லி, “எங்களோட வந்து இருங்கத்தை”, என்று சக்தி கூப்பிட…

“வைஷ்ணவி இப்போ கர்ப்பமா இருக்கா… சுமித்ரா வேற வந்து இருக்கா…… அவளையும் பார்த்துக்கனும்”, என்று வாசுகி இழுக்க….

“சரி! அங்கேயே இருங்கத்தை!”, என்றுவிட்டாள்.

“நம்ம இன்னும் சுமித்ராவை பார்க்கவேயில்லையே கார்த்திக்……. பங்க்ஷன்க்கும் போகலை…… போய் பார்த்துட்டு வரலாமா?”,

“ம்! போகலாமே!”, என்றான்….

பின்பு அவனின் தாத்தாவின் வீட்டிற்கு செல்ல…. பத்ரிநாத் அவளை பார்த்ததுமே, “ஏன்மா ராஜினாமா பண்ணிட்ட?”, என்றார்.

அவரிடம் பெயருக்கு ஒரு காரணத்தை சொல்லி தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பிரபு, வைஷ்ணவி மற்றும் சிவா, சுமித்ராவுடன் பொழுது இனிமையாக கழிய….. இரவு வீடு வந்து சேர்ந்த போது வெகு நேரமாகிவிட்டது. ஆனால் இவ்வளவு நேரத்திற்கும் கார்த்திக் கின் முகம் தீவிர யோசனையில் இருந்தது.

வீடு வந்ததும் கார்த்திக் அவனாக…..  

“இந்த வீக்கென்ட் ஊட்டில எங்க ஸ்கூல் அலுமினி மீட் இருக்கு….. அதுகூட பழைய ஸ்டுடண்ட்ஸ் ஃபாமிலியோட கெட் டுகெதர்…. இதுவரைக்கும் என் ஃபிரண்ட்ஸ்க்கு நான் எங்க இருக்கேன்னு தெரியலை….”,

“போன வருஷம் தான் என்னோட கேஸ் எல்லாம் பேப்பர்ல பார்த்து என்னை கண்டு பிடிச்சானுங்க….. இந்த தடவை நான் கண்டிப்பா வரனும்னு கம்பெல் பண்றாங்க… போகலாமா”, என்றான்.

“போகலாமே கார்த்திக்!”,

பின்பு, “தூங்கலாமா?”, என்று கேட்க….

“ஒஹ், எஸ்!”, என்றாள்…..

கார்த்திக் ஏதோ பேச வருவது போல தோன்ற, “ஏதாவது சொல்லனுமா கார்த்திக்!”, என்றாள்..

அவன் முகத்தில் ஏதோ தயக்கம்… பிறகு, “அப்புறம் சொல்லட்டுமா!”, என்றான்.

“எதை?”,

“நான் சொல்ல வர்றதை”,   

“உனக்கு கஷ்டமா இருக்கும்னா சொல்லனும்னு அவசியமில்லை..”, என்றாள் சமாதானமாக. 

அதை கேட்டதும், “நான் தூங்கட்டுமா?”, என்று பெர்மிஷன் கேட்டான்…… “சரி”, என்பது போல சக்தி தலையசைக்க தூங்கிவிட்டான்….. “என்ன விஷயமாயிருக்கும்? தன்னிடம் சொல்வதில் எதற்கு இவ்வளவு யோசனை, தயக்கம்”, என்று சக்திக்கு புரியவில்லை.

பிறகு வந்த மூன்று நாட்களும் அமைதியிலேயே கழிந்தது….. கார்த்திக் அவளிடம் நன்றாக பேசுவது போலவும் இருந்தது….  பேசாதது போலவும் இருந்தது…..

முதல் நாள் இங்கு வந்த போது அணைத்தது தான்….. பின்பு அணைப்பிற்கு கூட பஞ்சமாகிவிட்டது. ஏன் என்று புரியாத போதும்….. தங்களின் குடும்ப வாழ்க்கை இன்னும் தொடங்க படாத போதும்…… சக்தி எந்த வகையிலும் கார்த்திக்கை தொந்தரவு செய்யவில்லை, கேள்வி கேட்கவில்லை….. அவன் போக்கிலேயே விட்டாள்.

“நாளைக்கு நாம ஊட்டி கிளம்பனும் சக்தி!”, என்றான்…..

“எத்தனை நாளைக்கு டிரஸ் எடுத்து வைக்கட்டும்!”, என்று சக்தி கேட்க…..

“உனக்கு காலேஜ் வொர்க் எதுவும் பார்க்க வேண்டியது இல்லைன்னா ஒரு ஒன் வீக் எடுத்து வெச்சிக்கோ”, என்றான்.

“இரண்டு நாள் தான் மீட்…. அப்புறம் நம்ம ஒரு ரெண்டு மூணு நாள் அங்க இருக்கலாமா?”, என்றான்.

“உன்கூட இருக்க எனக்கு கசக்குமா என்ன? ஏன் நீ இப்படி பேசற?”, என்றாள்.

சிரித்தான்….. ஆனால் என்னவோ குறைந்தது….

ஊட்டியில் ஒரு  ரிசார்டையே அவனுடைய பேட்ச் மேட்ஸ் புக் செய்திருந்தனர்…. கார்த்திக்கிற்கு அங்கே கோலாகல வரவேற்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்…..

நண்பர்களை பார்த்ததும் உற்சாகமானான் கார்த்திக்…. 

“we missed you very much karthick in every meet”, என்பது வேறு வேறு விதமாக அங்கிருந்த அனேகம்பேரின் வாய் வார்த்தையாக இருந்தது.

அதன் பிறகே அவரவர் குடும்பத்தை அவரவர் அறிமுகப்படுத்த…. கார்த்திக் சக்தியை, “என் மனைவி”, என்று அறிமுகப்படுத்த…… சக்தி அடையாளம் காணப்பட…. இன்னும் ஆச்சர்யமாகிப் போயிற்று அனைவருக்கும்.

“ஹலோ மேம்!”, என்று ஆர்வமாக அனைவருமே அறிமுகப்படுத்திக் கொண்டனர்… பாரபட்சமில்லாமல் ஏன் ரிசைன் செய்துவிட்டாள் என்று கேட்டனர்…..

இந்த சலசலபெல்லாம் அடங்கி நண்பர்கள் உற்சாகமாக பேச ஆரம்பித்தனர். சக்தி ஒரு இடத்தில் அமர்ந்து இன்முகத்தோடு அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

கார்த்திக்கின் சிரிப்பு சத்தம் நன்றாக கேட்டது….. கார்த்திக் அப்படி சிரிப்பான் என்பதே சக்திக்கு ஆச்சர்யமாக இருந்தது……..

 ஏதோ ஒரு நண்பன் சக்தியை நோக்கி வருவதையும் கார்த்திக் அவனை இழுத்துக் கொண்டு போவதையும்…… அவன் போனால் மற்றொருவன் வருவதையும் கார்த்திக் அவனையும் இழுத்துக் கொண்டு செல்வதையும்….. எல்லோரும் ஏதோ சத்தமாக சிரிப்பதையும்….

பின்பு அவரவரின் துணைகளையும் குழந்தைகளையும் ரிசார்ட்டில் இருந்த அவரவரின் ரூமிற்கு செல்ல சொல்ல…. அங்கே டிரிங்க்ஸ் பார்ட்டி கலை கட்டும் என்று சொல்லவா வேண்டும்.

“சக்தி, நீ போ!”, என்று இருந்த இடத்தில் இருந்தே கண்களால் கார்த்திக் சொல்ல…. சக்திக்கு கார்த்திக் இப்படி சந்தோஷமாக இருப்பது பிடித்திருக்க…. அவள் ரூமிற்கு சென்று விட்டாள்.

உறங்கியும் விட்டாள்…. எங்கோ விடாமல் மணி அடிப்பது போல தோன்ற…. சிரமப்பட்டு கண்விழித்தாள்…… அவளின் போன் அடித்தது…. “கதைவை திற சக்தி!”, என்ற கார்த்திக்கின் குரல் ஒலிக்க……

கதவை திறந்துவிட்டு அவன் மேலேயே சாய்ந்தாள். அவன் தூக்கி படுக்கையில் வந்து கிடத்த….. கண்களை திறந்து நன்றாக பார்த்தாள் கார்த்திக் தெளிவாக இருந்தான்.

“நீ குடிக்கலையா கார்த்திக்…..”,

“உனக்கு தெரிஞ்சது தானே நான் எப்பவுமே அதை தொட கூட மாட்டேன்”, என்றான்….

இல்லை உன் ஃபிரண்ட்ஸ் கூட நீ எப்படின்னு எனக்கு தெரியாது தானே…… அப்புறம் எதுக்கு இவ்வளவு நேரம் இருந்த?”, என்று நேரத்தை பார்த்தபடி கேட்டாள்… நேரம் நள்ளிரவு இரண்டு மணி….

“அதுவா குடிச்சவனை எல்லாம் பத்திரமா அவன் ரூம்ல விட வேண்டாமா?”,

“இது பெரிய சேவையா இருக்கே!”, என்று தூக்க கலக்கத்திலேயே சிரித்தாள்…..

கார்த்திக்கின் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பில்லை முகம் தீவிரமாக இருந்தது…

“அப்பப்போ சீரியஸ் ஆகிடற கார்த்திக் நீ”, என்று சொல்லியபடி தூக்கம் கண்களை இழுக்க கண் மூட ஆரம்பித்தாள்.

உறங்கும் அவளின் ராஜய்க்குள் புகுந்து அவனும் உறங்குவது போல கண்களை மூடிக்கொண்டான். அவனின் சிறு வயது….. அவனின் குறும்புகள், நண்பர்கள், அவனின் தந்தை”, என்று ஒன்று ஒன்றாக படமாக ஓட ஆரம்பித்தது.

எப்போது உறக்கம் அவனை தழுவியது அவனே அறியான்.

காலையில் அவன் படித்த பள்ளிக்கு சென்றனர். அங்கே ஒவ்வொரு இடமாக சுற்றி காட்டி வர…… ஒரு இடம் வந்ததும் ஒரு நண்பன் ஓடி வந்து, “சிஸ், இந்த இடத்தோட பெருமையை சொல்ல நேத்து நைட் வந்தோம்……. இவன் விடவேயில்லை”, என்று ஆரம்பிக்க………

“டேய்!”, என்று அவனை தூக்கி கொண்டு போனான் கார்த்திக்……….

அதற்குள் அவர்களின் பள்ளி தலைமை ஃபாதர் வர……. அங்கே கனமான அமைதி எல்லோரும் அவ்வளவு பணிவுடன் நின்றனர்,

கார்த்திக் கைகளில் தூக்கிய நண்பனுடன் அப்படியே நிற்க…

“இறக்கி விடு கார்த்திக், அவனை!”, என்றார் பாதர்.

பாதர் சொன்னதும் கார்த்திக் அப்படியே விட… அதை எதிர்ப்பார்க்காத நண்பன் தொப்பென்று விழுந்தான். 

அங்கே ஒரு மெல்லிய நகையோலி கிளம்பியது…..                                          

பிறகு அவர்களின் குடும்பத்தை ஃபாதரிடம் அறிமுகப்படுத்த…  கார்த்திக் கடைசியாக எல்லோரும் முடித்ததும் வந்தான்.

சக்தியை அறிமுகப்படுத்த…… அவர்களை ஆசீர்வதித்தவர், அந்த இடத்தை பற்றி சொன்னார்.

“இந்த இடத்துல தான்மா இவனை நான் லாஸ்டா பனிஷ் பண்ணினேன்….. எல்லோரும் ஏதாவது செய்வாங்க…… எல்லாத்தையும் தூக்கி இவன் மேல போட்டுக்கிட்டு மத்தவங்களை காப்பாத்தி விட்டுட்டு இவன் பனிஷ்மெண்ட் அனுபவிப்பான்…..”,

“நைட் பூராவும் இங்க நின்னான்!”, என்றார் அன்றைய நாளின் நினைவோடு…..

“ஊட்டி குளிரில் நைட் முழுவதும் வெளியே நிற்பதா”, என்று அதிர்ந்த விழிகளோடு சக்தி பார்க்க….. இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்பது போல ஒரு பார்வை பார்த்து நின்றான் கார்த்திக்….  

மாலை வரை பள்ளியில் இருந்துவிட்டு பிறகு ரிசார்ட் வந்து, அங்கு பின்பு ஒரு பார்ட்டி இருக்க……. டான்ஸ், லிக்கர் என்று மீண்டும் அமர்க்களப்பட்டது.

கார்த்திக் டான்ஸ் செய்வான் என்பதே சக்திக்கு அன்று தான் தெரியும்… ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம்….. தண்ணி பார்ட்டியின் வீரியம் ஏற, “நீ போ!”, என்ற கார்த்திக்கின் சைய்கையில் ரூமிற்கு வந்தவள்……

கார்த்திக்கின் இந்த புதிய பரிமாணத்தை வியந்து யோசித்துக் கொண்டே உறங்கி விட்டாள்.

அன்றும் அதே போல கார்த்திக் மூன்று மணிக்கே வந்து எழுப்ப….. கதவை திறந்து அவன் மேலேயே சாய புன்னகையோடே…… அவளை தூக்கி கொண்டு வந்து உறங்கினான்.

மறுநாள் காலை நண்பர்கள் எல்லோரும் கிளம்பிவிட……. அவர்களும் அந்த ரிசார்டை காலி செய்து வேறு ஹோட்டலுக்கு வந்தனர்.

“அவுட்டிங் போகலாமா?”, என்று கேட்டவனிடம்…..

“கொஞ்சம் நேரம் தூங்கு கார்த்திக் போகலாம்”, என்றாள்.

அவளின் சொல் தட்டாமல் உறங்க ஆரம்பித்தான்…

அவன் விழித்த போதும் வெளியே செல்ல ஆர்வம் காட்டாமல் அமர்ந்திருந்தான்…

“என்ன கார்த்திக் உன் பிரிண்ட்ஸ் சொல்ல வந்தாங்க, நீ விடலை!”,

“அதுவா அது ஒன்னுமில்லை!”, என்றான் ஒரு ரகசிய புன்னகையோடு….

“ஒன்னுமில்லைன்னு நான் சொல்றேன்! நீ மேட்டரை சொல்லு!”, என்றாள்.

சிறு புன்னகையோடே…… “லாஸ்ட் டே நாங்க சினிமா போய் கலாட்டா பண்ணி பனிஷ்மென்ட் வாங்கினோம், அதை சொல்ல வந்தாங்க…..”,

“அதுக்கு தான் நைட் முழுசும் ஊட்டி குளிர்ல வெளில நின்னியா? அப்போவே தைரியம் உனக்கு! என்ன கலாட்டா?”,

“அதுவா……”, என்று மறுபடியும் இழுக்க….. சாய்ந்து அமர்ந்திருந்தவனை அடிப்பவள் போல அருகில் செல்லவும் அவள் கை பிடித்து அருகில் இழுத்துக் கொண்டான்.

“டைடானிக் மூவி போனோம்….. முதல் நாள் எங்க சீனியர்ஸ் போய்ட்டு வந்து ஒரு ரெண்டு மூணு சீனை விலாவரியா டிஸ்க்ரைப் பண்ணியிருந்தாங்க… அந்த சீன எதிர்பார்த்து நாங்க ஃபிரண்ட்ஸ் போனோமா…..?”,

“அந்த சீனை கட் பண்ணிட்டான்…..”,

“போடுடான்னு தியேட்டர்ல கலாட்டா பண்ணினோம்…. அவன் ஃபாதர் கிட்ட போட்டுக் கொடுத்துட்டான்”,

“ஃபாதர் நைட் பூராவும் வெளில நிக்க சொல்ல…… வீட்டுக்கு தெரிஞ்சான்னு டென்ஷன் ஆகிட்டானுங்க….. நான் அவனுங்கல்லாம் பண்ணலை! நான் தான் பண்ணினேன்னு சொல்லி நான் நைட் முழுசும் நின்னேன்……. அந்த புகழை பாட வந்தாங்க”, என்றான்.

பெருமையாக அவனை பார்த்தவள்…. “கிரேட் கார்த்திக் நீ! அவனவன் பழிய தூக்கி அடுத்தவன் மேல போட்டு எஸ்கேப் ஆக பார்க்க…… நீ அவங்களுக்காக வெளிய நின்னிருக்க!”, என்றாள் அவன் மீது சாய்ந்து அணைத்துக் கொண்டே.

அவனும் சக்தியை கைகளுக்குள்லேயே வைத்திருக்க… திடீரென்று சக்திக்கு ஒரு சந்தேகம் உதித்தது…..

“ஆமா! என்ன சீன் அது? ஏதாவது கிஸ் சீனா?”, என்றாள்…

“ம்கூம்”, என்று இல்லையென்பது போல தலையாட்டியவன்…. புன்னகையோடே “இண்டர்வல்க்கு அப்புறம்  கேட் வின்ஸ்லெட்ட ஹீரோ ஓவியமா வரைவாறு…… அந்த சீன்”, என்றான்.

“அதுல என்ன கலாட்டா பண்ணி பார்க்க இருக்க”,

“அவ டிரஸ் இல்லாம போஸ் குடுப்பா! அவளை அப்படியே ஹீரோ இஞ்ச் பய் இஞ்சா ரசிச்சு வரைவாண்டி என் மண்டு”, என்றான் அவளை பார்த்து கண்ணடித்தபடி.

“என்ன?”, என்று அவனை விட்டு எழுந்து இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தாள்.

 

கார்த்திக் புன்னகை முகத்தோடு இருக்க……. “அப்போ நீ அப்போ பார்க்கலைன்னாலும் அப்புறம் பார்த்துட்ட?”, என்றாள் கேள்வியாக.

“இதெல்லாம் அந்த ஏஜ்ல பெண்களை தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்…. தப்பா எடுக்க கூடாது!”, என்றான்.

“பெண்களை தெரிஞ்சிக்கற ஆர்வமா? அப்படி ஒன்னும் எனக்கு தெரியலையே!”, என்றாள்.

“நீ என்னை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை”, என்ற மறைமுக குற்றச்சாட்டு அதில் இருந்தது…

பெருமூச்சு விட்டவன்…… “யார் சொன்னா ஆர்வமில்லைன்னு! நிறைய ஆர்வமிருக்கு ஆனா அதுக்கும் முன்னாடி எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்! என் வாழ்க்கையோட கருப்பு பக்கங்கள்”, என்றான்.

“என்ன?”, என்றாள் சஞ்சலத்தோடு.

“நான் ஒரு கொலை செஞ்சிருக்கேன்!”,

“யாரை?”, என்றாள் நம்பாத குரலில்..

“எங்கப்பாவை!”, என்றான்.

அவள் இன்னும் நம்பாத பார்வை பார்க்க….

தன் அப்பா தனியாக இருந்தது…… குடிக்கு அடிமையாகியிருந்தது…… அவன் ஸ்கூல் அரையாண்டு லீவிற்கு வந்த போது அவரை பார்க்க போனது…. அவரை தேடி போன போது அவர் சாக்கடையில் விழுந்து கிடந்தது……

பதினைந்து வயதில் ஒற்றை ஆளாக அவரை தூக்கியது….. போதையில் இருந்த அவரை அவன் தான் குளிக்க   வைத்தது…… குளிக்க வைக்கும் போது நாய் கடித்த இடத்தை அதுதான் என்று தெரியாமல் வெறும் காயம் என்று கவனிக்காமல் விட்டது….

பரீட்சை முடிந்து மூன்று மாதம் கழித்து…. திரும்ப வந்த போது.. தான் அஜாக்ராதையாக கவனிக்காமல் விட்டிருந்த நாய் கடியால் தந்தையை ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது…. அந்த புண் சீல் பிடித்து புழுக்கள் நெளிந்து கொண்டிருந்த நிலையில் இருந்தது…… அவர் நாய் மாதிர்யான செய்கைகளை செய்ய ஆரம்பித்திருந்தது…

பார்க்க முடியாமல் ஒரு விஷ ஊசி போட்டு அவரை தானே கொன்றது….. என்று அவன் முடித்த போது பிரமிப்பாய் கேட்டிருந்தாள்.

அவன் கண்களில் மெல்லிய நீர் படலம்…. “அவரை கொன்னது மட்டுமில்லை, அவர் சாகர ஒரு நிலைமையும் என்னால தான்”, என்றான்.

“அவரோட சாவுக்கு வந்த பிரபுவோட அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க…..”, என்று ஆரம்பித்து.. தான் வீட்டை விட்டு வந்தது, அதன் காரணம்.. பின்பு சக்தியை பார்த்தது என்று ஆதி முதல் அந்தம் வரை உரைத்திருந்தான்.

சக்தி வாயடைத்து அமர்ந்திருந்தாள்…… அவனின் தந்தையின் முடிவு……. அவன் அதை கொடுத்த விதம்……. அதை அவன் மறைத்த விதம்…… இத்தனை நாட்கள் அவன் அதை தன் மனதில் பூட்டி வைத்தது….

“இப்படியும் ஒரு மனிதனா……”,

அதை தன்னிடம் ஒப்புக் கொள்கிறான்.. 

அவனின் எல்லா செய்கைகளுக்குமான காரணங்கள்…..

ஓரளவிற்கு கார்த்திக் இப்போது பிடிபட்டான்…

“எங்கம்மாவுக்கு கூட இது தெரியாது சக்தி! தெரியவும் வேண்டாம்! அப்புறம் அவங்களுக்கும் ஒரு நிம்மதியான சாவு இருக்காது…..”,

“வராது கார்த்திக்! என் வாயில இருந்து ஒரு வார்த்தை இதை பத்தி வராது!”, என்றாள்.

அவள் இன்னும் பிரமிப்பு அகலாமல் அமர்ந்திருக்க….. “என் மேல வெறுப்பா எதுவும் இல்லையே, அதுவும் எங்கப்பா…….”, என்று அவன் ஆரம்பிக்கும் போது….

உதட்டின் மேல் கைவைத்து, “பேசாதே!”, என்பது போல காட்டினாள்……

“ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிடறேன்”, என்றவன்….. “ஐ லவ் மை டாடி வெரி மச்!”, என்றான் சுவரில் சாய்ந்து காலை நீட்டி அமர்ந்து…..

ஒன்றும் பேசாமல் அவன் மேல் ஏறி படுத்துக் கொண்டாள்.

“இதை மறந்துடு! கார்த்திக் மறந்துடு!”,….

“கஷ்டம் சக்தி! என்னோட இந்த செய்கை என்னோட நிழல் மாதிரி என்னை துரத்திட்டே இருக்கு!”, என்றான்.     

அவனை விட்டு விலகி அமர்ந்த்தவள், பேசத் துவங்கினாள்..

“நாமெல்லாம் பொம்மலாட்டத்தில வர்ற பொம்மைகள் கார்த்திக்! நம்மை ஆட்டி வைப்பவன் அவன்…. இது அவன் செயல்… இதுவும் கடந்து போகும்…..”,

“நியாயத்தையும் அவனே நடத்துகிறான், அநியாயத்தையும் அவனே நடத்துகிறான்…… அவனின்றி அணுவும் அசையாது…. “,

“யாம், எமது, எமக்கு, அப்படின்னு செய்யற செயல்கள் தப்பு…. நீ இங்க செஞ்சது அவருக்கு கொடுத்த விடுதலை…. இந்த உலக வாழ்க்கையில இருந்து அவரோட வலிகள்ள இருந்து…… அவரோட அவமானத்துல இருந்து…..”,  

“இது விதின்னு சொல்லி முடிக்கலாம்….. ஆனா அதை உன்கையால செய்ய வெச்சது கடவுளோட செயல்…. பாரத்தை தூக்கி அவன் மேல போடு…. எல்லாம் அவன் பார்த்துக்குவான்”,

சக்தியின் வார்த்தைகள் கார்த்திக்கிற்கு ஒரு ஆன்மீக தேடலை கொடுக்க முற்பட்டது.

ஆனால் அதை அவனின் கழுத்து வலி தடை செய்ய…  

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கார்த்திக் கழுத்தை பிடித்தான், “வலிக்குது சக்தி! இது என் ஞாபகத்துக்கு வரும்போது இல்லை நீ எனக்கு கிடைக்க மாட்டியோன்னு நினைக்கும் போது வலிக்குது”, என்றான் சிறுபிள்ளை போல…..

“நீ படுத்துக்கோ! நான் பிடிச்சு விடறேன்!”, என்றாள்.

கார்த்திக் படுக்க முற்படவும்… “உன் டீ ஷர்ட்”, என்றாள்.

அதை அவன் கழட்ட கையை தூக்கும் போது வலியில் முகம் சுளிக்க….. சக்தி அவனுக்கு உதவினாள்….

மனதின் பாரத்தை கார்த்திக் இறக்கி வைத்திருக்க…… சக்தியின் அருகாமையில் ஒரு மெல்லிய சலனம்…

அவளோ கருமமே கண்ணாயினார் என்பது போல அவன் டீ ஷர்ட்டை கழற்றி…. அவனை திரும்பி படுக்க வைத்து தன் தளிர் கரங்களால் அவனின் கழுத்தை இதமாக பிடித்து விட…….

ஒரு புது வித மயக்கம் கார்த்திக்கினுள்…….

“சக்தி!”, என்றான்….

“ம்”, என்று அவள் தன்னுடைய விரல்களால் கார்த்திக்கின் உடலின் அத்தனை உணர்ச்சிகளையும் தூண்டிக் கொண்டிருக்க….

“எனக்கு பொண்ணுங்களை தெரிஞ்சிக்க ஆர்வமில்லை! ஆனா உன்னை தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமிருக்கு….. தெரிஞ்சிக்கட்டுமா?”, என்றான். 

வார்த்தை நிற்க…..

திரும்பி அவளை கண்களில் காதலோடு பார்த்தவன்….. “தெரிஞ்சிக்கட்டுமா”, என்றான் மீண்டும்.

கார்த்திக்கின் இந்த புதிய பரிமாணம் சக்தி புதிது…. சற்று அச்சத்தோடு பார்க்க…

“என்கிட்டே என்ன பயம்….. வா!”, என்று கண்களால் அழைத்தான்.

சக்தி தயங்கினாள்….. கார்த்திக் அவளிடம் பகிர்ந்த விஷயங்களை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தாள்…       

கார்த்திக் யோசிக்கவேயில்லை இழுத்து மேலே போட்டுக் கொண்டவன்…… ஒரு புது உலகத்தை சக்திக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தான்….. முடிவு பெறா தேடல்கள்…..

“ஐயோ! எப்போது முடியுமோ இது?”, என்று யாரவது ஒருவர் நினைத்தாலும் அடுத்தவருக்கு அது தோல்வியே……

“ஐயோ! முடிந்துவிட்டதா?”, என்ற உணர்வை ஒருவருக்கு கொடுத்தாலும் அது தோல்வியே…..

“இன்னும் நீளாதா……”, என்று இருவருக்கும்  தோன்றினால் தான் அது வாழ்க்கை கல்வியின் வெற்றி…..

இது கயிற்றின் மேல் நடப்பது போல தான்…   கரணம் தப்பினாலும் உணர்வுகளின் மரணம்.

வாழ்க்கை கல்வியின் வெற்றியை கார்த்திக் சக்திக்கு பூரணமாக கொடுத்துக் கொண்டிருந்தான்….  

இருவருமே அவனின் தந்தையின் நினைவுகளில் இருந்து வெளியே வந்திருந்தனர்.

வார்த்தை பிரயோகங்களினால் அது காதலாகவும் காட்டப்படும்….. காமமாகவும் காட்டப்படும்……. தெய்வீகமாகவும் காட்டப்படும்…….  சிற்றின்பம் என்று வரையறுக்கப் பட்டாலும்… அதை அறிந்தே… பேரின்பதையும் காண முடியும்…..

கார்த்திக்கின் வெளிப்பாடுகள் சக்தியின் ரகசியங்கள் ஆகின… அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவளை சிறிதும் கஷ்டப்படுத்தாத….. அவளும் முழு ஈடுபாட்டுடன் அனுபவித்த….. ஒரு உறவு…. அவர்களின் வாழ்க்கை நிறைவு பெற நினைக்காமல்….. இப்போது தான் ஆரம்பிப்பது போல ஒரு உணர்வை இருவருக்கும் கொடுத்தது.   

ஒரு வாரம் அவர்களின் பிரத்யேகமான உலகத்தில் இருந்து வீடு திரும்பினர்.

வீடு வந்துவிட்ட போதும் அவர்கள் எங்கேயும் எந்த இடத்திலும் ஒரு கொஞ்சல், சிறு அத்துமீறல் என்று எந்த மாதிரியும் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.

இவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிட்டதா? இல்லையா? என்ற கேள்வியை தான் எல்லோருக்கும் கொடுத்தது….

சக்தியின் முகத்தில் ஒரு அமைதி…. கார்த்திக்கின் முகத்தில் இன்னும் தீவிரமான அவனின் உழைப்பு….. இதை தவிர ஒன்றும் கண்டறிய யாராலும் முடியவில்லை.

சக்தி சரியாக முப்பத்தைந்து நாளில், “எனக்கு ஒரு மாதிரி இருக்குதும்மா”, என்று அம்மாவிடம் பகிர…. அவர் லேடி டாக்டரிடம் அழைத்து சென்று கர்ப்பத்தை உறுதி செய்த போது தான்……

தெய்வானைக்கு உயிரே திரும்ப வந்தது போல் இருந்தது……

சரியாக ஒன்பது மாதங்களில் சக்தி ஆண்மகவை ஈன்றேடுக்க…. “சந்திரசேகர்”, என்ற பெயரை அக்குழந்தைக்கு நாமகரணம் சூட்ட வீரமணி பிரியப்பட…

சக்தி அதற்கு சம்மதிக்கவேயில்லை… கார்த்திக் அந்த பெயரை கூப்பிடும்போது அவனின் தந்தை ஞாபகம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவளுக்கு.. ஆதர்ஷ் என்று கார்த்திக்கின் சம்மதத்தோடு தான் குழந்தைக்கு பெயர் வைத்தாள் சக்தி.

கார்த்திக் இன்னும் மயங்கியிருந்தான் சக்தியிடம்.  

ஆம்! கார்த்திக்கிற்கு இந்த பத்து மாதங்களாக கழுத்து வலியும் இல்லை தந்தையின் ஞாபகங்களும் இல்லை….. கடுமையாக உழைத்தான்…. குவாரி, சினிமா தயாரிப்பு என்று பிசியாக இருந்தான்…

மற்ற நேரம் மனைவி மகனுடன் நேரத்தை செலவழித்தான்… அவனுக்கு அவனுடைய பதினைந்தாவது வயதில் இருந்து தோன்றி சக்தியுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் வரை இருந்த நாட்கள் போன ஜென்ம ஞாபகங்களாக தோன்றின….

அவனை வருத்திக்கொண்டிருந்த ஞாபகங்கள் மறைந்து சக்தியின் முழு கட்டுப்பாட்டில் இருந்தான்…..  வாழ்க்கையை சக்தியுடன் நிம்மதியாக அனுபவித்து வாழ்ந்தான்.

Advertisement