Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது :

முடிவு பெற விரும்பாத முத்தத்தை முடிக்க, கதவு தட்டப்பட…. விலகி கார்த்திக் சென்று பார்த்தான்.

பிரபு உள்ளே நுழைந்து ரத்தம் ஏறி முடிந்ததா என்று பார்த்து….. “வேற டெஸ்ட் எல்லாம் நாளைக்கு எடுத்துக்கலாம்”, என்று கூறினான்.

பிறகு வீட்டிற்கு கிளம்ப…. செல்வம் தான் காரை எடுத்தான்…. “நீ ப்ரிசன்ல இருந்து வந்தப்போ இவன் இல்லையா?”, என்று கார்த்திக்கை பார்த்து கேட்டாள் சக்தி.

“இல்லை, அவங்கக்கா ஒருத்தங்க சிங்கப்பூர்ல இருக்காங்க…. அப்போ அவங்க கணவருக்கு ஆக்சிடென்ட் ஆகியிருந்தது.. அதை பார்க்க சிங்கப்பூர் போயிருந்தான்”,

“அதானே பார்த்தேன்! எப்படி உன்னை உன் சிஷ்யன் விட்டான்! நானே விட்டாலும்  அவன் உன்னை விடமாட்டானே…”,

ஏதோ அவனை பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்த செல்வம்…

“என்னங்க மேடம்?”, என்றான்…. 

இருவரும் அவன் பேசுவதை காதில் வாங்கவேயில்லை… அவர்களின் உலகத்திலேயே இருந்தனர்……  செல்வத்திற்கு மனதிற்கு நிறைவாக இருந்தது.

“உனக்கு தெரிஞ்சா செஞ்ச! விடு சக்தி!”, என்றான் கார்த்திக்……

“தெரிஞ்சு செஞ்சாலும், தெரியாம செஞ்சாலும் தப்பு, தப்பு தானே…. ஐ அம் சாரி கார்த்திக்……”, என்றாள் குரல் தழு தழுக்க……

“சக்தி!”, என்று அதட்டியவன்…. “இதெல்லாம் நான் மறக்க நினைக்கற விஷயங்கள்! இனி எப்பவும் இதை பத்தி பேசாத…. நம்ம வாழ்க்கையில இதோட சுவடுகள் வேண்டாம்”, என்றான்.

“ம்”, என்றவள் பின்பு அமைதியாகிவிட்டாள்……

கார்த்திக் அவளின் கைகளை எடுத்து கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.

நேரம் ஒன்றுக்கு மேல் ஆகியிருந்தது…. ஆனாலும் வீடு வந்த போது ஹாலிலேயே வீரமணி உறங்கிக்கொண்டிருக்க…. தெய்வானை இவர்களை எதிர்பார்த்து உறங்காமல் விழித்திருந்தார்.

என்ன? ஏதென்று விவரம் கேட்டார்….. அவர்கள் பேசும் சத்தத்திலேயே விழித்துக் கொண்ட வீரமணி எழுந்து அமர்ந்தார்.

பின்பு கார்த்திக் அவனின் வீட்டிற்கு கிளம்பினான். “அப்பா! கார்த்திக்கை இங்கயே இருக்க சொல்லுங்களேன்”, என்றாள் நேரடியாக வீரமணியிடமே சக்தி….

காலையில் அவளின் அட்டகாசத்தை வீரமணி பார்த்தார் தானே….. “இங்கேயே இரு கார்த்திக்”, என்றார்.

கார்த்திக் தயங்க…… அவனின் தயக்கத்தை பார்த்த சக்திக்கு கோபம் வந்தது….

“அப்பா! அவன் போனா நானும் அவன் கூட போவேன்”, என்றாள் திரும்ப வீரமணியிடமே…

தூக்க கலக்கத்தில் இருந்தவர்….. “இரு கார்த்திக்!”, என்றார் வற்புறுத்தலாக…..

அவரின் பேச்சை மீற முடியாமல், “சரி”, என்றவன்… வெளியே வந்து செல்வத்தை பார்த்து “நீ கிளம்புடா!”, என்றான்.    

அவனிடம் சொல்லி உள்ளே வந்தால் வீரமணியும் இல்லை தெய்வானையும் இல்லை….. ஹாலில் சக்தி மட்டுமே இருந்தாள்.

இப்போது அவன் எங்கே படுப்பது….. அது அவனுக்கு பெரிய சங்கடம்……

“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது, டையர்டா இருக்கு, வா!”, என்றபடி சக்தி மாடி ஏற……

“எங்க? நான் இங்கயே தூங்கறேன்”, என்றான் கார்த்திக்……

ஒன்றும் பேசாமல் சக்தி கீழே இறங்கி வீரமணியின் ரூம் நோக்கி போனாள்…. “என்ன செய்ய போற சக்தி”, என்று கார்த்திக் அருகில் வர…….

“எங்கப்பா கிட்ட சொல்றேன்”, என்றாள்……

தலையில் கைவைத்தவன், “யார்கிட்டயும் சொல்லாத நானே வர்றேன்”, என்று முன்னால் போக…… இப்போது அவள் அப்படியே நின்றாள்…..

“என்ன”, என்று அவன் திரும்பி பார்க்க….. “கால் வலிக்குது”, என்று சொல்லி அசையாமல் நிற்க……

யாரும் இருக்கிறார்களா என்று பார்வையை ஒட்டியவன்….. அவளருகில் வந்து அவளை தூக்கி கொண்டு மாடியேறினான்.

“ரொம்ப பண்ற நீ”, என்று அவளை கடிந்தவாறே….

“ஏன்? ஒரே நாள்ல நான் உனக்கு போர் அடிச்சிட்டனா”, என்றாள்.

கார்த்திக் முறைக்க….

“என்ன முறைக்கிற?”,

“ரொம்ப பேசற நீ! என்னோட சக்தி இப்படியெல்லாம் அடுத்தவங்களை ஹர்ட் பண்ற மாதிரி பேசமாட்டா!”, என்று சொல்லிக்கொண்டே அவளை படுக்கையில் விட….

“நீ அடுத்தவன் இல்லையே கார்த்திக்…… உன்கிட்ட என் பேச்சுக்கு எந்த ரெஸ்ட்ரிக்ஸனும் கிடையாது… என் மனசுல என்ன தோனினாலும் பேசுவேன்…”,

“பேசிக்கோ! என்ன வேணா பேசிக்கோ…..”, என்றவன்…… எங்கே தூங்குவது என்பது போல பார்வையை ஓட்ட….

“என்ன பார்க்கற, கண்ணை நோண்டி கைல குடுத்துடுவேன், ஒழுங்கா இங்க படு!”, என்றாள்.

“ரொம்ப அநியாயம் பண்ற சக்தி நீ! என்ன நினைப்பாங்க உங்க அப்பாவும், அம்மாவும்!”,

“என்ன நினைப்பாங்க? நீ இங்கே இருக்கேன்னு சொல்லலை, நான் தான் இருக்க சொன்னேன்….. ஏதாவது நினைச்சா என்னை தான் நினைப்பாங்க…. ஒரு ஒரு வாரம் அட்ஜஸ்ட் பண்ணு, அப்புறம் உன் வீட்டுக்கு நான் வந்துடறேன்……”,

“உங்கப்பா விடமாட்டார்….., நீ ரிசைன் பண்ண தான் முடிவெடுப்பன்னு தெரியும், அதுக்கே ஏதாவது சொல்லுவார்”,

“அது என் பிரச்சனை, அது பத்தி உனக்கென்ன படு…. தைரியமா படு…. உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன், உன் கற்புக்கு நான் கியாரண்டி”, என்று வாக்குறுதி வேறு கொடுத்தாள்….

அவள் பேசுவதை கேட்க சிரிப்பு தான் வந்தது கார்த்திக்கிற்கு….

அவனும் பதிலுக்கு, “ஏதோ உன் வாக்குறுதியை நம்பி தான் தூங்க போறேன்….”, என்று அருகில் படுத்தான்.

பெரிய கட்டில் இன்னும் இரண்டு பேர் கூட தாராளமாக தூங்கலாம், கார்த்திக்கிற்கு அப்போது பார்த்து சந்தேகம் வந்தது……

“உன் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு பெரிய கட்டில்….”,

“காலையில இருந்ததா?”, என்றாள்.

யோசித்தான்….. “இல்லையே”,

“இப்போ எங்கம்மா போட்டிருப்பாங்க!”, என்றாள் பெருமையாக….

“உங்கம்மா தானே! உன்னை மாதிரி ரொம்ப புத்திசாலி!”, என்றான் கிண்டலாக.  

“ஏன்……?”,

“இருக்குறதை ஸ்பேஸ் கம்மி பண்ணினா பரவாயில்லை…. இப்படி ஆளுக்கொரு பக்கம் தூங்குங்கன்ற மாதிரியா போடுவாங்க”, என்றான் நக்கலாக

“ஒஹ்! நீ அப்படி வர்றியா? சரி காலையில அம்மா கிட்ட எடுக்க சொல்லிடறேன்!”, என்று அவள் சீரியசாக சொல்லவும்……

“அப்படி எதுவும் சொல்லி என் மானத்தை வாங்கிடாத சக்தி..”, என்றான் பதறி…. ஒரு வேலை அவள் சொல்லிவிட்டாள் என்ன செய்வது என்று.  அவனுக்கு சக்தியை தெரியும்…… செய்யாதே என்று சொன்னால் செய்து விடுவாள் என்று…

“சரி! சரி! பொழைச்சு போ!”, என்று பெரிய மனது மாதிரி சொன்னவள்…. ஒரு பக்கமாக உறங்க மறுப்பக்கம் கார்த்திக் படுத்தான்……

கார்த்திக் படுத்ததும் உறங்கிவிட….. சக்திக்கு தான் உறக்கமேயில்லை… தான் துணை இருந்திருக்க வேண்டிய நேரத்தில் அவனை விட்டுவிட்டோம் என்பது மனதுக்கு சொல்லொணாத ஒரு துயரத்தை கொடுக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

அவனையே பார்த்தபடி படி படுத்துக்கொண்டிருந்தவள், “சாரி கார்த்திக்!”, என்று முணுமுணுக்க……… அந்த இரவின் நிசப்தத்தில் நன்கு கேட்டது…. அந்த சிறு சத்தத்திற்கும் விழித்த கார்த்திக்….. “நீ இன்னும் தூங்கலையா?”, என்றான்.

எழுந்து உட்கார்ந்தவள், “ம்! தூக்கம் வரலை!”,

“வா!”, என்று தலையசைத்து அவன் கூப்பிட…..  

அவனருகில் வந்தவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான்…..

“ம்! தூங்கு!”, என்று கார்த்திக் சொல்ல…. அவன் மேல் படுத்திருந்த சக்தியை சிறிது நேரத்தில் எல்லாம் உறக்கம் தழுவியது.        

சக்தி உறங்கிவிட்டாள் என்று தெரிந்ததும், கார்த்திக்கும் கண்மூட அவனும் நிமிடத்தில் உறங்கி விட்டான்.    

இருவருக்குள்ளும் எந்த சலனங்களும் இல்லை. உடல் சார்ந்த தேவைகள் அங்கே முன் நிறுத்தப்படவில்லை….. இருவருமே எப்பொழுதும் மனதை அலைபாய விடாதவர்கள்…..  அதிலும் அப்பொழுது அவர்களின் மனது  வேறு யோசிக்கவில்லை.

அவர்களுக்கு தேவை ஒருவருக்கொருவரின் அருகாமையே….. துணையே….

அந்த முத்த பரிமாற்றம் கூட அவர்களின் உறவை மேம்படுத்திக் கொள்ள தான். ஒரு புதிய பரிமாணத்திற்கு வாழ்கையை கொண்டு செல்ல தான்…..

அவர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள கார்த்திக்கின் மனதிற்கு ஒரு இதத்தை கொடுக்க சக்தியாக கையில் எடுத்தது தான்….. அவர்களுக்குள் எந்த அவசரமும் இல்லை…..    

சக்தி காலையில் எழுந்த போது.. கார்த்திக் இல்லை…..

“அம்மா! கார்த்திக் எங்கே?”, என்று கேட்டபடி தான் சக்தி மாடிப்படியே இறங்கினாள்.

“லோடு ஏத்தனும்னு போயிருக்கான்மா!”, என்றார்.

அப்போதுதான் சக்திக்கு உரைத்தது, நேற்றிலிருந்து அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கேட்கவில்லையென்று…..

முதலில் அவன் வந்ததும் அதை கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

வீரமணி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் அவரருகில் போய் அமர்ந்தாள்….. அவளாக பேசட்டும் என்று வீரமணி இருக்க… அவர் ஏதாவது கேட்பாரா என்று சக்தியிருக்க….. சிறிது நேரம் அமைதியில் கழிந்தது.  

“அப்பா! என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?”, என்றாள் சக்தியாக…..

“எதை பத்திமா……?”,

“என்னோட கல்யாணத்தை பத்தி!”, என்று சக்திக்கு கேட்க வாய் வரவில்லை……

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்….. எழுந்து சென்று விட்டாள்….

எதிரில் வந்த தெய்வானை…. சக்தியின் முகம் கோபமாக இருப்பதை பார்த்து…… “ஏங்க சக்தி கோபமா போறா!”, என்று கேட்க…..

“கோபமா போறாளா……”, என்று இழுத்தார் வீரமணி.  

“என்ன பேசினீங்க”, என்றார் கேள்வியாக……

“அப்பா என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேட்டா….. எதை பத்திம்மான்னு கேட்டேன்….. ஒன்னும் பதில் சொல்லாம எந்திரிச்சு போயிட்டா”, என்றார்.

“நீங்க ஏன் இப்படி பண்ணினீங்க…. அவ அவளை பத்தியும் கார்த்திக் பத்தியும் தான் கேட்டிருப்பா……”,

“அவ கேட்டு இதுவரைக்கும் நாம ஏதாவது வேண்டாம்னு சொல்லியிருப்பமா….. கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க இஷ்டபடறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் நடத்தி வெச்சிருக்க  மாட்டேன்னா…… அவசரப்பட்டு யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சு…….. அப்புறம் யாரை கல்யாணம் பண்ணினேன்னு சொல்லாம, கல்யாணம் ஆனதை மட்டும் வெளில சொல்றா….. நமக்குன்னு ஒரு கௌரவம் இல்லையா என்ன….??”,

“சின்ன பசங்க விளையாட்டு போல பண்றா!”, என்று கோபப்பட்டார்.   

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான்…. நான் கேட்கற ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்க…. இதுவரைக்கும் அவ ஏதாவது வேணும்னு கேட்டிருப்பாளா….”,

நிஜம் தான்! சக்தி இதுவரை எதற்குமே பிடிவாதம் பிடித்ததோ கேட்டதோ கிடையாது..

“அவனை வீட்டுக்குள்ள விட்டது நீங்க….. முதல் தடவை மட்டுமில்ல ரெண்டாவது தடவையும்……. நீங்க அவனை விட்டது மட்டுமில்ல….. அவன் இந்த வீட்டுக்கு வர காரணமா இருந்ததும் நீங்க…. சக்தியோட பொறுப்பை முழுசா அவன் கிட்ட விட்டதும் நீங்க….. இப்படி எல்லாமே நீங்க செஞ்சிட்டு இப்போ எதுக்கு அவளை பேசறீங்க….”,  

“வெளில போய் யாரோ ஒருத்தனை பிடிச்சிருக்குன்னு என் பொண்ணு சொல்லலை….. நீங்க வீட்டுக்குள்ள விட்ட ஒருத்தனை தான் சொல்றா….. தப்பெல்லாம் உங்க மேல தான்…..”,

“அவங்கப்பாக்கு உதவி செய்யறேன்னு போய் இன்னைக்கு என் பொண்ணு வாழ்க்கை….??? எவ்வளவு கஷ்டம் அவளுக்கு….. காதலிச்சு கல்யாணம் பண்றது தப்பா…… நம்ம பண்ணலை…. ஆனா என் பொண்ணு கல்யாணம் பண்ணியும் அதை இன்னும் வெளில சொல்லாம தனியா இருக்கா…..”,

“எதுவாயிருந்தாலும் அவளோட முடிவுகளை நீங்க முடிவு பண்ணக் கூடாது… அவ ரிசைன் பண்ணிடுவா…….. பண்ணக்கூடாதுன்னு தான நீங்க கோவத்தை காட்டறீங்க?”, என்றார் வீரமணியை சரியாக கணித்து….

“உங்களுக்கு வேணும்னா நீங்க அரசியல்ல நில்லுங்க! மந்திரியாகுங்க! என்ன வேணா ஆகுங்க… என்ன வயசா ஆகிபோச்சு உங்களுக்கு…. அவளை அவ இஷ்டத்துக்கு விடுங்க…”,                    

“அவ ஏதாவது டிசைட் பண்ணியிருப்பா….. நான் சொன்னா கேட்க போறதில்லை! அப்புறம் என்ன!”, என்றார்.

அவருக்கு சக்தியை பற்றி தெரியும் அவரின் பெண் அல்லவா…. முடிவெடுத்துவிட்டால் மாற மாட்டாள்….. பிடிவாதம்….. ஒரு வார்த்தை கூட தன்னிடம் கேட்காமல் சொல்லாமல் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டாள் தானே….? அந்த கோபம் அவருக்குள் இருந்தது…..

அதன் வெளிப்பாடே இது????

மந்திரி பதவி, இன்று வரும் நாளை போகும்….. அது போகும் வருத்தமும் இருந்தது.  

கார்த்திக் அவளை ஹாஸ்பிடல் கூட்டிப் போக வேண்டும் என்று விரைவாக வந்துவிட்டான்.

“சாப்டியா? ஹாஸ்பிடல் கிளம்பலாமா?”, என்று கார்த்திக் கேட்க…….

“இல்லை! இன்னைக்கு வேண்டாம்!”, என்றாள்.

“ஏன்? ஏன்? என்ன?”,

“வேண்டாம்னா விடு!”,

“என்ன ஆச்சு, நைட் நல்லா தானே இருந்த….”,

“ப்ச், விடு கார்த்திக்!”, என்றாள்….

“என்னடா பிரச்சனை இப்போ! சொன்னா தானே தெரியும்……”,

“நான் அப்பாகிட்ட என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேட்டேன்…. எதை பத்தின்னு கேட்கிறார்….. நம்ம கல்யாணத்தை பத்தின்னு எனக்கு சொல்ல பிடிக்கலை…. வந்துட்டேன்”, என்றாள் கோபமாக….

சற்று யோசித்தவன்…..

“அவர்கிட்ட கேட்காம தானே கல்யாணம் பண்ணிகிட்ட…… இப்போ அதை பத்தி சொல்றதுக்கு என்ன? அதை தான் அவர் எதிர் பார்க்கிறாரோ என்னவோ….?”,

“நானெல்லாம் பேசமாட்டேன்! உன் பொண்டாட்டி வேணும்னா நீ கூட்டிட்டு போ! இல்லை இப்படியே இருந்துக்கலாம்!”, என்றாள்.

அவனை தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவெல்லாம் காணமல் போயிருந்தது.

அவளை சமாதானப்படுத்த, “சரி! என்ன பண்ணணுமோ பண்ணலாம்! முதல்ல நீ ஹாஸ்பிடல் வா!”, என்றான்….

“ம்கூம்! வரமாட்டேன்!”,

“சக்தி என்னை கோவப்படுத்தாத! எழுந்திரு!”, என்றான் அதட்டலாக…..

பதில் பேசாமல் அவனின் பின்னால் நடந்தாள்…..

அவனே தான் வீரமணியிடமும் தெய்வானையிடமும் ஹாஸ்பிடல் செல்வதை சொன்னான்… சக்தி தெய்வானையிடம் கூட சொல்லவில்லை……

ஹாஸ்பிடலில் ஒரு கம்ப்ளீட் செக் அப் செய்து…. பெரிதாக ஒன்றுமில்லை….  அவள் வீக்காக இருக்கிறாள் என்ற ரிசல்ட் மட்டுமே வர, அப்போதுதான் நிம்மதியாகிற்று கார்த்திக்கிற்கு.

வெளியே வந்தவுடனே சக்தி……. “கார்த்திக் எனக்கும் அப்பாக்கும் நாளைக்கு காலைல ஃபிளைட்ல டெல்லிக்கு டிக்கெட் புக் பண்ணிடு……. அவர் வந்தா வரட்டும்! இல்லை நான் பார்த்துக்கறேன்….”,

டெல்லிக்கு அப்போதும் கூட வாங்க என்று வீரமணியை சக்தி கூப்பிடவில்லை…… அவரும் ஒன்றும் கேட்கவில்லை….. ஓரளவிற்கு தந்தை அனுமானித்திருப்பார் தான் ராஜினாமா செய்ய போவதை அதான் இந்த கோபம் என்று சக்திக்கு புரிந்தது…

இப்போது மீண்டும் தானாக போய் பேசினால் வேண்டாம் என்று சொல்வார் என்று தெரிந்து சக்தியும் பேசவில்லை.

டிக்கெட் புக் செய்திருந்ததையே கார்த்திக் தான் சொன்னான். மகளும் தந்தையும் பேசிக்கொள்ளாமலேயே டெல்லி பயணப்பட்டனர். அவளுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் சிறிது இருந்ததால் அவள் முதலில் அவளின் அமைச்சகம் சென்றாள்.

அங்கு சென்றவள், விரைந்து வேலைகளை முடித்து….. கங்காதரனை மட்டும் அழைத்து தான் ராஜினாமா செய்ய போவதை பற்றி சொன்னாள்.

“ஏன்?”, என்றான் அவன் அதிர்ச்சியாக……

“எனக்கு கல்யாணமாயிடுச்சுன்னு சொன்னதை நீங்க பார்த்திருப்பீங்க”,

“ஆம்”, என்பது போல தலையாட்டிவன்…. “நம்ம அஃபீசியலா நிறைய பேசியிருந்தாலும், நீங்க பெர்சனலா என்கிட்டே ஒரு வாரத்தை கூட பேசினதில்லை! அதான் கேட்கலை!”, என்றான்.

கார்த்திக்கை பற்றி தான் எதுவும் அவனிடம் பேசிவிடக்கூடாதே என்பதற்காக அதிகம் பெர்சனலாக பேசியது இல்லை சக்தி……

புன்னகைத்தவள்…. “என்னோட கணவர் கார்த்திக்…….. ஐ மீன் கார்த்திகேயன், வாசுகி க்ரானைட்ஸ்…. அதான் இந்த ரெசிக்னேஷன்”, என்றாள்.

கங்காதரனின் முகம் ஒரு மாதிரியாகிவிட்டது… “உங்கப்பாக்கும் அவருக்கும் ரொம்ப பழக்கம்னு தெரியும்! ரொம்ப வருஷம் சேர்ந்து இருந்தாங்க தொழில்லன்னு தெரியும்!  அதான் இந்த ட்ரான்ஸ்பர்ன்னு தெரியும்……. அவ்வளவு கூடவா தெரியாம இருப்போம்….. ஆனா இதெல்லாம் சகஜம் அதான் நான் எதுவும் இஸ்ஸு ஆக்கலை”,

“ஏன் நான் இங்க வர்றதுக்கு முன்னாடி என் குடும்பமே காணாம போச்சு! உடனே திரும்ப வந்துட்டாங்க….. உடனே என் ட்ரான்ஸ்பர்….. இதெல்லாம் அவர் தான் காரணம்னு என் மனசு சொல்லுது…. ஆனா எதுக்கும் எந்த ஃப்ரூபும் கிடையாது அதான் சும்மா விட்டேன்”, என்றான்….

“ஆனா உங்க கணவர்ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை….. நாம சேர்ந்து ஒரு வருஷம் வேலை பார்த்திருக்கோம்…. நான் பல தடவை உங்க புத்திசாலித்தனத்தை  பார்த்து… உங்க நேர்மையை பார்த்து வியந்திருக்கிறேன்….”,

“இப்படி இருக்குற நீங்க கூட இந்த மாதிரி ஆட்களை உங்க கணவரா தேர்ந்தெடுக்கும்போது இந்த மாதிரி ஆட்கள் தப்பானவங்கன்னு மற்ற பெண்களுக்கும் தெரியறதில்லை….”,

“தப்பு செய்யறவன் எல்லாம் ஹீரோ ஆகிடறாங்க”, என்றான் ஆதங்கத்தோடு..

“எனக்கு மத்தவங்களை பத்தி தெரியாது…. ஆனா நான் கார்த்திக்கோட மனைவின்றதுனால மட்டும் இதை சொல்லலை…… அவனை எனக்கு கிட்ட தட்ட பன்னிரண்டு வருஷத்துக்கும் அதிகமா தெரியும்…”,

“கார்த்திக்ன்ற மனுஷன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன்……. அவன் செஞ்சது நியாயம், தப்பில்லைன்னு நான் சொல்ல வரலை….. அவன் நேர்மையா இல்லாம இருந்திருக்கலாம்….. ஆனா என்னோட இந்த நேர்மை அவன் குடுத்தது தான்…..”, என்றாள் பெருமையாக….

“என்னோட இந்த தைரியமான நேர்மையான செயல்பாடுகள் அவன் கத்து கொடுத்தது தான்…..  அவனும் மாறுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு…….”,

“மாறிட்டா அவர் செஞ்சது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா…”,

“இதுக்கு என்கிட்டே பதில் கிடையாது! ஆனா இந்த கேள்விக்கும் கண்டிப்பா ஒரு நாள் நான் உங்களுக்கு பதில் சொல்லுவேன்!”, என்றாள் புன்னகையோடு…

“இப்போ பாருங்க, நான் ரிசைன் பண்ணனும்னு எந்த அவசியமும் கிடையாது.. கேஸ் தான் நடக்குது… எப்படியும் என்னோட இந்த மந்திரி பதவி முடியறதுக்கு முன்னாடி… கேஸ் முடியபோறதில்லை…”,

“நான் ரிசைன் பண்ணினாலும் விமர்சிப்பாங்க! பண்ணலைன்னாலும் விமர்சிப்பாங்க! ஆனா பதவில நான் இருந்தா எங்களால சேர்ந்து வாழ முடியாது…. என்னாலயும் முடியாது……. அவனும் அதை எப்பவும் விரும்ப மாட்டான்”,

அவள் சொல்லும் விதத்தை பார்த்தவன்.. “ரொம்ப லவ் பண்றீங்க போல அவரை”, என்றான்.

“அது எனக்கு தெரியாது….. பட் யு நோ! ஹி லவ்ஸ் மீ எ லாட்……. அவன் என்னை ரொம்ப லவ் பண்றான்…. ஆனா ரொம்ப அடமென்ட், இன்னும் சொன்னது கூட இல்லை”, 

“என்ன பதில் இது”, என்று யோசனையாக கங்காதரன் பார்த்தாலும்….. சக்தி சொன்ன விதத்தில் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“நான் தப்பா நினைச்சிட்டிருக்குற ஒரு மனுஷனை பத்தின கண்ணோட்டங்களை உங்க கிட்ட பேசின இந்த கொஞ்ச நேரத்திலயே மாத்திடுவீங்க போல இருக்கே”, என்றான். 

புன்னகைத்தவள்… “எதிர்க்காலத்துல எப்பவாவது சந்தர்ப்பம் கிடைச்சா கார்க்திக்கோட உங்களை மீட் பண்றேன்….. நான் சொல்றது எந்தளவுக்கு நிஜம்னு நீங்க புரிஞ்சிக்குவீங்க…..”,

“கீப் இன் டச்ன்னு என்னால சொல்ல முடியாது……. ஏன்னா என்னோட எப்பவும் கார்த்திக் இருப்பான்……. நீங்க உங்க பதவியில இருக்கீங்க…… சந்தர்ப்பம் அமைஞ்ஜாலும் தவிர்க்கறது தான் பரவாயில்லை!”, என்று சொல்லி சக்தி விடை பெற…..

“அப்படி ஏன் மேடம் சொல்றீங்க? எனக்கு மனசுக்கு சரின்னு பட்டா கண்டிப்பா உங்களை சந்திப்பேன்…. நீங்க தான் அப்படி ஒரு காலம் வரும்னு கான்ஃபிடண்டா இருக்கீங்களே…… பார்ப்போம்!”, என்று அவனும் இன்முகத்தோடே விடை கொடுத்தான்.

“கேட்க கூடாது! கேட்டாலும் நீங்க வேண்டாம்னு தான் சொல்வீங்க! இருந்தாலும் கேட்கறேன், நீங்க இங்க கம்ஃபார்டப்ளா இருக்கறீங்களா? இல்லை வேற எங்கயாவது ட்ரான்ஸ்பர் இஷ்டப்பட்டா…….. செஞ்சு கொடுக்கறேன்!”, என்றாள்.

“அது கிருஷ்ணகிரிக்கு திரும்பவும் கலெக்டரான்னா பரவாயில்லையா?”, என்றான் கங்காதரன் வேண்டுமென்றே….

சக்தி சிறிதும் யோசிக்கவில்லை, “ட்ரான்ஸ்பர் பண்ண சொல்லட்டுமா”, என்றாள்….

“வேண்டாம்!”, என்றான் புன்னகையுடன்.  

“நோ! நோ! இஷ்டப்பட்டீங்கன்னா வாங்க! we are ready to face the consequences”, என்றாள். கார்த்திக்கை அவள் தனித்து சொல்லவில்லை தன்னோடு சேர்த்து தான் சொன்னாள்.

“இல்லை மேடம்! வேண்டாம்!”, என்றான் மிகவும் மரியாதையாக கங்காதரன்….

“nice working experience with you sir”, என்று அவள் விடைபெற….

சக்தியை ஏற்கனவே கங்காதரனுக்கு பிடிக்கும், இப்போது இன்னும் அதிகமாக பிடித்தது…… “என்னுடைய நேர்மை அவன் கொடுத்தது……”, அவளின் வார்த்தைகளில் அவன் முகம் புன்னகையை பூசியது.      

சக்தி முதலில் அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்ய யோசித்திருந்தவள்…. இப்போது முற்றிலும் எண்ணத்தை மாற்றி எம் பீ பதவியையும் ராஜினாமா செய்தாள்.

தந்தையிடம் எதையும் கலந்தாலோசிக்கவில்லை….

நம்மிடையே வாரிசு அரசியல் என்பது சகஜம்….. கட்சி தலைமையிடம் பேசி மாறுதலாக தந்தையை பரிந்துரைத்தாள்.     

கட்சியும் மந்திரி பதவியை அவருக்கு கொடுக்க முடிவு செய்தது…… எம் பீ பதவியில் இல்லாவிட்டாலும் மந்திரியாகி ஆறு மாதத்திற்குள் எலக்சனில் நின்று ஜெயித்தால் போதும்.

எப்படியும் சர்ச்சைகள் வரும் தான்….. வீரமணி அதை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார் என்றுணர்ந்தவள் தைரியமாக இந்த முடிவை எடுத்தாள்.

“அப்பா! நீங்க என்ன ஏதுன்னு பார்த்துட்டு வாங்க!”, என்று சொல்லி அடுத்த நாளே டெல்லியில் இருந்து தமிழ் நாட்டிற்க்கு வந்தவள்…… கார்த்திக்கிடம் முன்பே வந்து கூட்டிப் போக சொல்லியிருந்தாள்….

அவன் சக்தியை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரியை நெருங்கும் சமையம்…. “நம்ம வீட்டுக்கு போகலாம் கார்த்திக்!”, என்றாள். 

“அவசரப்படாத உங்கப்பா அனுப்புவார்”, என்று கெஞ்சி கொஞ்சி அவளை வீட்டில் விட்டான் கார்த்திக்.

Advertisement