Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஆறு :

காரில் வரும் பொழுது கார்த்திக் சக்தியிடம்……. “என்ன சக்தி உடம்பை இப்படி கெடுத்து வெச்சிருக்க….. சாப்பிடுவியா மாட்டியா…..”, என்றான் ஆதங்கத்தோடு……

தன்னுடைய தோற்றத்தையும் கார்த்திக்கின் தோற்றத்தையும் ஒப்பிட்டாள் சக்தி…. அவனின் முன்பை இன்னும் அதிகமாக வசீகரிக்கும் தோற்றம்???

“நான் எப்படியிருந்தா என்ன….. நான் இல்லாம நீ ரொம்ப நல்லா இருக்க கார்த்திக்… முன்னைவிட ஹான்ட்சமா….. இன்னும் அட்ராக்டிவா…. பார்த்துகிட்டே இருக்கலாம் போல….. ஜம்முனு ராஜா மாதிரி இருக்க….. என்ன உனக்கு கவலை மனைவி பத்தின கவலையா இல்லை புள்ள குட்டியா”, என்றாள்.

குரலில் அப்பட்டமான குற்றச்சாட்டு…. நானில்லாமல் நீ ஒன்றும் வருத்தப் படவில்லையே….. நன்றாக தானே இருக்கிறாய்……. இன்னும் அதிகமாக என்னை கவர்கிறாய்…… நான் தான் பைத்தியம் போல இப்படி இருக்கிறேன் என்பதாக……

“ஏன் நீ வராதன்னு  சொன்னா…… ரோட்ல யாருமில்லாம நிப்பேன்னு நினைச்சியா”, என்றான் பதிலுக்கு.

“நான் இல்லாம நீ நல்லா இருக்கேன்னு தான் சொன்னேன்….. ரோட்ல நிப்பேன்னு நினைச்சியான்னு பேச்சை மாத்தாத”,

“நான் ஒன்னும் பேச்சை மாத்தலை…… இது தான் பேச்சு”, என்றான்.

“உன் திமிர் குறையவே குறையாது”, என்றாள் சக்தி.

“திமிரா? எனக்கா?”, என்றவன் குரலில் அவ்வளவு வலி…. அது சக்தியையும் பாதித்தது. ஆனால் அதை தொடர்ந்து கார்த்திக் பேசியது மீண்டும் அவளை ஆத்திரப்படுத்தியது. 

“ஆமா! என் பொண்டாட்டி மூணு வேளை எனக்கு சமைச்சு போட்டு நான் வக்கணையா சாப்பிடறேன் பாரு…. அந்த திமிர் தான்”, என்றான்.    

“அதிகம் பேசாத கார்த்திக்…….. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”, என்று கோபமாக கத்தினாள்.

அடுத்து கார்த்திக் கேட்டது இன்னும் அவளை ஆத்திரப்படுத்தியது…. “என்ன இது வேஷம், நீயும் உன் டிரஸ்சும் பார்க்க சகிக்கலை”,

“ஒஹ்! உன் பெர்சனாலிடிக்கு நான் கம்மின்னு சொல்றியா”,

“நான் உன் டிரெஸ்ஸை தான் சொன்னேன்…. இந்த மாதிரி காலர் வெச்சு கிழவிங்க மாதிரி ஒரு ப்ளவ்ஸ்….. யங்கா இருக்குற உன்னை வயசான மாதிரி காட்டுது”,

“ஒஹ்! இந்த வேஷமா…. இது நான் உன்கிட்ட வாங்கிக்கிட்ட தாலியை மறைக்க”, என்றாள்.

அவளை திரும்பி பார்த்த கார்த்திக் அதன் பிறகு பேசவில்லை…

சொன்ன பிறகு சக்திக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது… அவளின் வாழ்கையின் மிக முக்கியமான தருணம் அதை தானே கேலி செய்வதா……

 சக்தியின் வீடு வந்து உள்ளே நுழைந்த போது வீரமணி அங்கே ஹாலில் தான் அமர்ந்திருந்தார்.

கார்த்திக்கும் சக்தியும் சேர்ந்து வந்திருப்பதை வியப்புடன் பார்த்தவர்…… 

“ஏம்மா வந்துட்ட?”, என்று சக்தியை பார்த்து கேட்டார்….

பதில் சொல்லாமல் தந்தையின் அருகில் போய் அமர்ந்தவள் கார்த்திக்கை பார்த்து முறைத்தாள்…..

“நான் தான் ஐயா கூட்டிட்டு வந்தேன்…. கொஞ்ச நேரம் கழிச்சு போறோம்”, என்றான்.

“சேர்ந்தா போறீங்க”, என்றார் வீரமணி…..

“ஆம்”, என்பது போல கார்த்திக் தலையசைக்க…. வீரமணி சக்தியை பார்த்தார். சக்தி “ஆம்”, என்று சொல்லவில்லை, “இல்லை”, என்றும் சொல்லவில்லை…….. யாரோ யாரை பற்றியோ பேசுவது போல பார்த்திருந்தாள்.

“நம்ம இன்னும் கல்யாணத்தை முறையா அறிவிக்கலை கார்த்திக்….. அதுக்கு முன்ன சேர்ந்து போய் யாராவது ஏதாவது பேசினா நமக்கு அது மரியாதையில்லை”, என்றார் வீரமணி.

“எப்போ அறிவிக்கலாம்”, என்று கார்த்திக் பதிலுக்கு கேட்க… வீரமணி என்ன சொல்லுவார்.

அவர் மெளனமாக சக்தியை பார்க்க…. சக்தி அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.     

“கல்யாணம் என்னை கேட்டு பண்ணலை, இப்போ எப்போ அறிவிக்கலாம்னு என்னை கேட்டா நான் என்ன சொல்றது”, என்றார் இருவருக்கும் பொதுவாக…..

கார்த்திக் சக்தியை பார்த்து இப்போது நேரடியாகவே கேட்டான், “எப்போ சொல்லலாம்”, என்று….

சக்தி அதற்கும் அமைதியாக இருக்க…… “சக்திம்மா பதில் சொல்லு!”, என்று வீரமணி சொல்ல….

“நான் ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆனதை பத்தி சொல்லிட்டேன் பா….”,

“கல்யாணம் ஆனதை தான் சொன்ன, யார்கூடன்னு இன்னும் சொல்லலையே”, என்றான் கார்த்திக்.

“கேட்கிறான் தானே! சொல்லு சக்தி!”, என்று தந்தையும் சொல்ல……

“யார்கூடன்னு சொல்ற அளவுக்கு இப்போ சந்தர்ப்பம் இல்லைப்பா”,

“இப்படி தான் நான்…. இது தான் நான்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிகிட்ட…. இப்போ சந்தர்ப்பம் வரலை அது இதுன்னா……”,   

“கொஞ்ச நாள் போகட்டும்”, என்றாள் சக்தி…..

“அப்படி எல்லாம் விட முடியாது, இப்போவே சொல்லனும்”, என்றான் கார்த்திக்.

“இப்போல்லாம் சொல்ல முடியாது”, என்றாள் சக்தி….

“ஏன்? ஏன் சொல்ல முடியாது…..?”,

“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது……”,

கார்த்திக்கிற்கு இப்போது கோபம் வந்தது…… அவளை விடுத்து வீரமணியிடம் புகார் படித்தான்…..

“நானா அவசரமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்! இவளே கல்யாணம் பண்ணிகிட்டா…… அப்புறம் நான் வெளில வந்த     துக்கு அப்புறம் பார்க்க கூட வரக் கூடாதுன்னு சொல்லிட்டா… நான் ஜெயிலுக்கு போனதை அவ்வளவு கேவலமா ஃபீல் பண்ணினா……. என்னை எதுக்கு கல்யாணம் பண்ணனும்….. அப்புறம் எதுக்கு அவாய்ட் பண்ணனும்”,

“இப்போ நானா கல்யாணத்தை பத்தி சொல்லலாம்னு சொன்னாலும், வேண்டாம்னு சொன்னா நான் என்ன செய்ய…. ஒரு வேளை பிரிஞ்சிடலாம்னு நினைக்கறாளோ என்னவோ”, என்று கார்த்திக் சொன்னது தான் தாமதம்…

ஆத்திரம் கண்ணை மறைக்க…… எதிரே டீபாயின் மேல் இருந்த ஸ்டீல் ஃப்ளவர் வாஷை தூக்கி அவன் மேல் வீசினாள்… கார்த்திக் அப்போதும் விரைவாக விலகினான். ஆனாலும் அதன் முனை நெற்றியில் பட்டுவிட்டது…

வலியில் அவனையும் மீறி, “அம்மா”, என்றவன் காயம் பட்ட இடத்தை கையை வைத்து அழுத்திக் கொண்டான்…

“சக்தி”, என்று வீரமணி அவளிடம் கோபமாக விரைந்தார்….. “என் பொண்ணா இப்படி?”, என்று…..

அவனை அது தாக்கியது என்று பார்த்தும் அசையாமல் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்…. இவ்வளவு பெரிய பெண்ணை என்ன செய்ய முடியும்… செய்வது அறியாமல் வீரமணி நின்றுவிட…

கையை மீறி… கார்த்திக்கின் தலையில் இருந்து ரத்தம் வரவும் தான் முகம் மாறியவள், “ஐயோ ரத்தம்!”, என்று எழுந்து விரைந்து அவனருகில் போனாள்……   

இப்போது கார்த்திக் அசையாமல் உட்கார்ந்திருந்தான்…..                              

“கையை எடு கார்த்திக்! பார்க்கலாம்!”, என்று சக்தி பதற…..

கார்த்திக் கையை எடுக்கவேயில்லை…..

“ஐயோ ரத்தம் வருது….. கையை எடு கார்த்திக்….”,

“நீ முதல்ல நம்ம கல்யாணத்தை எப்போ சொல்றோம்னு சொல்லு! அப்போ தான் கையை எடுப்பேன்……..”,

“என்ன ப்ளாக் மெயில் பண்றியா? எடு!”, என்று அவனின் கையை பிடித்து இழுத்தாள்.

வீரமணி வேறு பார்த்துக் கொண்டிருந்தார்…. சக்தியின் நடவடிக்கைகள் அவருக்குமே கோபத்தை கொடுத்தது.

“கையை எடு கார்த்திக்! காயத்தை பார்க்கலாம்!”, என்று வீரமணி சொல்ல…… அவர் பேச்சை தட்டமுடியாமல் கையை எடுத்தான்…

சக்தி அவளின் புடவையை கொண்டு ரத்தத்தை துடைத்தாள்…… துடைக்க துடைக்க ரத்தம் வந்தது….. அந்த பூச்சாடியின் முனை பட்டு ஆழமாக நெற்றியின் ஓரத்தில் ஒரு வெட்டு இருந்தது.

“என்ன சக்தி இப்படி பண்ணிட்ட?”, என்று வீரமணி கோபப்பட்டார்….

“ஹாஸ்பிடல் போகலாம் கார்த்திக்!”, என்று அவர் சொல்ல….

“வேணாங்கய்யா”, என்றான்….

கார்த்திக் வீரமணியிடம் மறுத்து பேச… வீரமணியின் கவனம் கார்த்திக் மேல் இருக்க, இருவருமே சக்தியை கவனிக்க தவறினர். 

அவனின் காயம்……. அதில் வழிந்த ரத்தம்…… தன்னால் தான் என்ற குற்ற உணர்வு…… காலையில் இன்னும் சாப்பிடாதது……. இது மட்டுமல்லாது முன்பே பலகீனமான அவளின் உடம்பு…….. சக்தியை ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்ல….

ரத்தத்தை துடைத்தவள் கார்த்திக்  மேலேயே மயங்கி சரிந்தாள்…….

“சக்தி”, என்று பதறி கார்த்திக் அவளை பிடிக்க…. அவனின் தலையில் இருந்து சொட்டிய ரத்தம் அவளின் புடவையில் ஆனது….. “சக்திம்மா”, என்று வீரமணியும் பதற…. அவள் தான் மயங்கியிருந்தாலே…….

பிரபு எப்படியும் விழா ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரபுவை கூப்பிடாமல்….. செல்வத்தை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி யாராவது டாக்டரை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வருமாறு கார்த்திக் சொல்ல……

ஒரு நம்பிக்கையான லேடி டாக்டரை அழைத்துக்கொண்டு உடனே வந்தான் செல்வம்.

சக்தியை பரிசோதித்தவர், “ரொம்ப வீக்கா இருக்காங்க சர்! அதனால் கூட மயக்கமா இருக்கலாம்….”, என்று சொல்லி ஏதோ இஞ்செக்ஷன் செய்தவர்…. ட்ரிப்ஸ்சும் ஒரு நர்ஸின் உதவியுடன் போட்டார்…… பின்பு வீட்டிற்க்கே வந்து லேப் அசிஸ்டெண்ட் டெஸ்டிற்காக ப்ளட் எடுத்து சென்றனர்…… சக்தி விழிப்பதற்காக காத்திருக்க…..

வீரமணி மகளை பார்த்து அமர்ந்திருந்தார்.

ட்ரிப்சிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி வருவது, லாப் அசிஸ்டண்டை அழைத்து வருவது என்று பிசியாக இருந்த செல்வம்……. அப்போதுதான் கார்த்திக்கை சரியாக பார்த்த செல்வம், “பாஸ்!”, என்று அலறினான்.

“என்னடா?”, என்று பதட்டமாக கார்த்திக் கேட்க……

“உங்க நெத்தில என்ன இது காயம், ரத்தம் உறைஞ்சிருக்கு….”, என்று பதற…  

சக்தியை கவனித்துக் கொண்டிருந்ததில் ரத்தம் தானாகவே நின்று, அது உறைந்தும் இருந்தது.    

அப்போதுதான் ஞாபகம் வந்தவராக வீரமணி….. “அந்த காயத்தை பாருங்க டாக்டர்!”, என்று சொன்னதும்…..

அவர் அதை கிளீன் செய்து பார்த்தவர்…… “ஆழமா இருக்கு சர்….. தையல் போட்டா சீக்கிரம் காயும்… தையல் போட்டுட்டா பரவாயில்லை”, என்றார்.   

கார்த்திக்கை வீரமணி பேசவே விடவில்லை…. “போடுங்க டாக்டர்!”, என்றார்…..

சற்று நேரத்தில் சக்திக்கு விழிப்பு வந்தது….. வந்த போது டாக்டர் தையல் போட்டுக் கொண்டிருந்தார்.

சக்தியின் பார்வையில் பட்டது….. கார்த்திக் அமர்ந்திருக்க…. ஒரு பெண் அவளின் நெற்றியில் ஏதோ செய்து கொண்டிருந்தது தான்…..

கண்களை சுழற்றியவள் பார்வையில் வீரமணி பட… “என்ன பண்றப்பா அவ?”, என்றாள் அந்த சோர்விலும் எரிச்சலாக…

டாக்டர் காதில் இந்த மரியாதையில்லாத வார்த்தைகள் விழுந்துவிடக்கூடாதே என்று அவசரமாக வீரமணி, “ஷ்! டாக்டர் மா! தையல் போடறாங்க!”, என்று சொன்னார்.

அப்போதும், “பிரபு, வரலையா”, என்றாள்…..

“இன்னைக்கு அவங்க வீட்ல விஷேஷம் மா”, என்று வீரமணி ஞாபகப்படுத்த அதன் பிறகே அமைதியானாள்.     

அயர்வில் கண்களையும் மூடிக் கொண்டாள்.

தையல் போட்டு அதை பேண்டஜ் செய்த டாக்டர்…

பின்பு சக்தியை பரிசோதித்தவர், “இப்போ பரவாயில்லை, கான்ஷியஸ் வந்துடுச்சு….  இருந்தாலும் ஹாஸ்பிடல்ல ஃபுல் செக் அப் பண்ணிடலாம்….. இந்த பாட்டுள் ட்ரிப்ஸ் போதும்”, என்றார். 

“அந்த சிஸ்டரை விட்டுட்டு நீங்க கிளம்புங்க டாக்டர்… இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சதும் அவங்க எடுத்து விட்டுட்டு வரட்டும்”, என்று கார்த்திக் சொல்ல டாக்டர் கிளம்பினார். 

“சக்தி வர முடியாது……. நான் மட்டுமாவது விஷேஷதுக்கு போறேன் ஐயா!”, என்று கார்த்திக் வீரமணியிடம் சொன்னான்.

“இப்படி முகத்துல பேண்டஜ் போட்டுட்டு எங்கயும் போகாத…. இங்கயே இவ கூடவே இரு… ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு, மனுஷன கடிச்ச கதையா……. என் பொண்ணு இதுவரைக்கும் கண்ணாடி….. சாமான் செட்டு……. உடையக்கூடிய  பொருட்கள்……  இதை தான் உடைச்சிட்டு இருந்தா…… இப்போ மண்டையை உடைக்க ஆரம்பிச்சிட்டா……”,

“நீ எங்கயும் போகலை, நீ அவகூட தான் இருக்க….. உங்க கல்யாணத்தை என்ன பண்ணனும், ஏது பண்ணும்னு நான் முடிவு பண்றேன்…. உங்க இஷ்டமெல்லாம் இனி எதுவும் கிடையாது….. ரெண்டு பேரும் வார்த்தையை விட்டுக்காம அமைதியா இருங்க..”, என்று அதட்டினார்.      

“உங்க சார்பா வேணா நான் விஷேஷதுக்கு போயிட்டு வர்றேன்…….. அப்புறம் இந்த ஐயாவை விட்டுடு……..உறவை சொல்லி கூப்பிடு”, என்றார்.   

வீரமணி கிளம்பவும்…. “நீ போ செல்வம்! பிரபுக்கு போய் ஹெல்ப் பண்ணு…. நானும் இல்லை, பார்த்துக்கோ”, என்று அவனையும் அனுப்பினான்.

செல்வத்திற்கு முகமே இல்லை…… “எங்களுக்கு ஒன்னுமில்லை! மேடம் கொஞ்ச வீக்கா இருக்காங்க…… எனக்கு ஒரு சின்ன காயம் தான்! நீ போ!”, என்றான்.

“முடிச்சு இங்க தான் வருவேன்…”, என்றான் விட்டு போக மனமேயில்லாமல்.  

“சரி! இப்போ போ! அங்க வேலையை பாரு!”, என்று அனுப்பினான்.

சக்தி கண்களை திறக்கவேயில்லை….. ஒரு சேரில் அமர்ந்து கால்களை தூக்கி சக்தியின் கட்டில் மேல் வைத்துக் கொண்டு கார்த்திக்கும் கண்களை மூடிக் கொண்டான்.

சிஸ்டர் தான் அவ்வப்போது வந்து ட்ரிப்சை செக் செய்தவள்…. முடியும் தருவாயில், “சர், முடியப்போகுது”, என்றாள்.

“ட்ரிப்ஸ் மட்டும் எடுத்துடுங்க, அந்த ஊசி இருக்கட்டும், நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டு எடுத்துக்கறேன்”, என்றான்.

அதற்கு தான் கண்ணை திறந்த சக்தி….. “நீங்க எடுத்துடுங்க சிஸ்டர்”, என்றாள்.

“அமைதியா இரு!”, என்று சக்தியை அடக்கியவன்……

“நீங்க போங்க சிஸ்டர்…. நான் பார்த்துக்கறேன்”, என்று அந்த  பெண்ணை அனுப்பினான்.

“இப்போ இது எதுக்கு”, என்று சக்தி கேட்க….

“வேற ஏதாவது மெடிசின்ஸ் குடுக்கனும்னா திரும்ப குத்துவாங்க… வலிக்கும்…..  சொன்னா கேளு…. பிரபு கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு எடுத்துடலாம்”, என்றான் கடுமையாக.

எழுந்து உட்கார்ந்தவள், “நீதான் என்னை விட்டு பிரியப் போறியே, எனக்கு வலிச்சா உனக்கென்ன”, என்றாள்.

“சக்தி ப்ளீஸ்! இப்படி சண்டை போட்டு, சண்டை போட்டே நம்ம வாழ்க்கை முடிஞ்சிடும் போல இருக்கு… நானும் எதையும் பேசலை, நீயும் எதையும் பேசாத….. இருக்குற இந்த க்ஷணதுல வாழ்வோம்”, என்றான் கெஞ்சலாக.

அதற்கு பதில் சொல்லவில்லை, ஆனால் மேலே சண்டையை வளர்க்கவில்லை.   அமைதியாக படுத்திருந்தாள்.

“என்ன சாப்பிடற? கொண்டு வர சொல்றேன்!”, என்றான் கார்த்திக்…….

“ஒன்றும் வேண்டாம்”, என்பது போல சக்தி தலையசைக்க…..

அவனாக முனியம்மாவிடம், சாத்துக்குடி ஜூஸை கொண்டு வர சொன்னான்.

அவர் கொண்டு வரவும் ஒரு கிளாசை மட்டும் எடுத்துக்கொண்டு இன்னொன்றை திருப்பி அனுப்பியவன்…. “குடி சக்தி!”, என்று அவளிடம் நீட்டினான்.

சக்திக்கும் குடித்தால் பரவாயில்லை போல தோன்ற….. எடுத்து குடித்தவள்…… பின்பு தான் கவனித்தாள் அவன் சாப்பிடவில்லை என்பதை…… “உனக்கு”, என்றாள்.

“வேண்டாம்!”,

“ஏன்? உனக்கும் தான் அடிப்பட்டிருக்கு! நீயும் தான் டையர்டா இருப்ப…”,

“வேண்டாம்! நான் தான் சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா தானே இருக்கேன்! கொஞ்சம் சாப்பிடாம உன்னை மாதிரி வீக் ஆகிடறேன்….. அப்போவாவது உனக்கு என் மேல கருணை வருதான்னு பார்க்கலாம்…”,

“அந்த சிஸ்டர் இருக்காங்களா? போயிட்டாங்களா?”,

“ஏன்? என்ன பண்ணுது? அவங்க போயிட்டாங்க”, என்று அக்கறையாக கார்த்திக் கேட்டான்.

“எனக்கொன்னும் பண்ணலை! உனக்குத்தான்!”, என்றாள்.

“எனக்கொன்னும் இல்லை!”, என்று கார்த்திக் சொல்ல……

“இல்ல! இந்த பக்க மண்டையை தான் உடைச்சு இருக்கேன்…. அந்த பக்கம் எதையாவது தூக்கி போட்டு உடைக்கிறேன்….. ஃபர்ஸ்ட் எய்ட்க்கு சிஸ்டர் வேனும்தானே……. அதுக்கு தான் கேட்டேன்”, என்றாள் சீரியசாக.

கார்த்திக் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது…

“என் மனதையும் உடைத்தாய்!!!!                                                                                                               என் மண்டையையும் உடைத்தாய்!!!!”,

ன்னு கவிதை சொல்லட்டுமா…..  

“உனக்குள்ள இப்படி ஒரு கவிதை திறமையா???? இந்த ஒரு கவிதைக்காகவே உன் மண்டையை சுத்தியல் வெச்சு உடைக்கலாம்…”, என்று சக்தியும் புன்னகையோடு திருப்ப….

“வேண்டாம்! வேண்டாம்! உனக்கு அந்த சிரமமே வேண்டாம்! இப்போதைக்கு என் மண்டையை உடைக்கற குத்தகையை ஃப்ளவர் வாஷ்க்கே விட்டுடு”,

வாய்விட்டு சிரித்த சக்தி…. “ஜூஸ் கொண்டுவர சொல்லி நீ குடிக்கலை! கைவிட்டு நான் குடிச்சதை வாமிட் பண்ணிடுவேன்!”, என்று மிரட்டினாள்.

அவன் கொண்டு வர சொல்லி குடித்த பிறகே விட்டாள்.    

“இந்த புடவைய மாத்திடு சக்தி.. ரத்தமா இருக்கு”, என்றான்.

அவனின் தலையை அதில் தானே துடைத்தாள்….. பிறகும் அவனின் கைகளில் அவள் மயங்கி விழுந்த போது ரத்தம் அதில் தெறித்திருந்தது.

“அம்மா வரட்டும்!”, என்றாள்….

“அம்மா வர்ற வரைக்கும் இதுலயே இருப்பியா….. வேண்டாம்! முதல்ல மாத்து! எனக்கு இதை பார்க்கவே பிடிக்கலை! யாரோ மாதிரி இருக்கு!”, என்றான்.

“அம்மா வரட்டும்!”, என்றாள் மீண்டும்.

“ஏன் இவ்வளவு பிடிவாதம்? நான் சொன்னா எதையும் கேட்க கூடாதுன்னு முடிவோட இருக்கியா..”,

“கார்த்திக் கையில வென்ஃபளான் இருக்கு…. அந்த கை அசைச்சா வலிக்கும்… நான் ஒரு கையில எப்படி டிரஸ் மாத்துவேன்…..”,

“முனியம்மாவை ஹெல்ப்க்கு கூப்டுக்கோ……”,

“அடிவாங்க போற நீ! அப்படியெல்லாம் யார் முன்னாடியும் நான் மாத்த மாட்டேன்”, என்று கோபப்பட……

“ஓகே! ஓகே லீவ் இட்! லேடி தானேன்னு சொன்னேன்…..”, 

“லேடின்னா”, என்று அதற்கும் கோபப்பட……

“தெரியாம சொல்லிட்டேன்…. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டா”, என்றான் தயங்கி தயங்கி……

“வேண்டாம்! அம்மா வரட்டும்!”, என்றாள் பிடிவாதமாக சக்தி…..

அவள் மறுத்த விதம் பார்த்து கார்த்திக்கிற்கு கோபம் வர…. “ஏன் என்கூட குடும்பம் நடத்தற ஐடியாவே இல்லையா உனக்கு?”, என்றான் கோபமாக….

“ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டா…… ரகசியமா குடும்பம் கூடவா நடத்துவாங்க?”, என்றாள்.

கார்த்திக்கிற்கு வார்த்தையே வரவில்லை… அடிப்பட்ட பார்வை பார்த்தவன்…. ரூமை விட்டு மௌனமாகா வெளியே போக கதவை திறக்க……

அவனின் கையை பிடித்து நிறுத்தியவள், “சாரி!”, என்றாள்.

“எவ்வளவு உயர்ந்த எண்ணம் உனக்கு என்னை பத்தி!”, என்றான் தாள மாட்டாமல்.

அவனை முதுகுப் பகுதியில் அணைத்து முகத்தை அங்கே புதைத்து கொண்டாள். ஆனாலும் அசையாமல் நின்றான். அவளின் கண்ணீரின் ஈரத்தை கார்த்திக் முதுகு பகுதியில் உணர்ந்தான்.

“சொல்லு! எப்பவாவது நான் உன்னை ஒரு ஹஸ்பண்ட் மாதிரி பார்த்திருப்பனா? ஒரு ஹக் பண்ணியிருப்பனா? ஒரு கிஸ் பண்ணியிருப்பனா….? நான் போய் உன்கூட ரகசியமா குடும்பம் நடத்துவனா? அப்படி ஒரு நிலைமையில உன்னை வைப்பனா?”, என்றான்…

“ஏன்? ஏன் நீ அப்படி பார்க்கலை? ஏன் நீ இதெல்லாம் செய்யலை? நான் எப்பவாவது செய்ய கூடாதுன்னு சொன்னனா?”, என்றாள் அழுதபடியே அவளின் அணைப்பை இறுக்கி…

அவளின் கை இறுக்கத்தை உணர்ந்தவன், நீடில் அசைந்துவிடும் என்று மெதுவாக அவளின் விரல்களை பிரித்து விட்டவன்…… மீண்டும் அவளின் கையின் சில்லிப்பை உணர்ந்தான்.

“எப்படி பார்ப்பேன்….. நீதான் என்னை வராதன்னு சொல்லிட்டியே!”,

“நான் சொன்னா நீ வரமாட்டியா……. நான் அப்படிதான் வருவேன்னு சொல்லிக்கிட்டு நீ வந்து நிற்பேன்னு நான் எவ்வளவு நாள் எதிர்பார்த்தேன் தெரியுமா?”, என்றாள் தேம்பியவாறே…..

அவளின் கைகளை விலக்கி அவள் முன்பாக திரும்பி நின்றவன், அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான். தன் உடலின் சூட்டை அவளுக்கு கொடுத்தான். அவனின் மார்பில் முகம் புதைத்தவள் வெகு நேரம் அழுதுகொண்டிருந்தாள்…. ஆண்கள்அழக் கூடாது என்பது எப்போதும் போல கார்த்திக்கின் ஞாபகத்தில் இருந்தது.    

Advertisement