Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஐந்து :

பிரபு வாசுகியை அழைத்துகொண்டு அடுத்த நாளே டெல்லி செல்ல முடிவு செய்தான்.

“நானும் வருவேன், நான் தனியா இருக்க மாட்டேன்”, என்று வைஷ்ணவி ஒரே அழுகை. எப்படி பத்ரிநாத்தை மட்டும் தனியாக விட்டு செல்வது என்று யோசித்தனர்.

வைஷ்ணவியின் பிடிவாதத்தை பார்த்த பத்ரிநாத் அவரே.. “அவளையும் கூட்டிட்டு போங்க நான் இருந்துக்கறேன்”, என்று சொன்னார்.

இவர்கள் டெல்லி செல்வதை பற்றி தெரிந்த சிவா.. “நானும் வர்றேன். எனக்கும் அவங்களை தெரியும், நீங்க மட்டும் கூப்பிட்டா நல்லா இருக்காது”, என்றான்.

சிவாவும் கிளம்பினான். சுமித்ரா, “என்னை மட்டும் விட்டுட்டு எல்லோரும் போறீங்களா”, என்று ஏக்கமாக கேட்க. பிரபு, “அவளும் வரட்டும்”, என்று விட்டான்.

“செவன்த் மந்த் ஆக போகுது”,. என்று சிவா பயப்பட.

“நான் தான் இருக்கேனே.. இவ ஃபிப்த் மந்த்ல வரும்போது அவ வரக்கூடாதா”, என்று பிரபு வைஷ்ணவியைக் காட்டினான். ஆம் வைஷ்ணவிக்கும் இது ஐந்தாவது மாதம்.   

அனைவரும் கிளம்பி டெல்லி சென்றனர். பிரபு அழைக்க வருகிறான் என்று முன்பே சக்தியிடம் சொல்லியிருந்தான்.. 

“யார்? யார் வர்றீங்க?”, என்று சக்தி எப்படி கேட்பது எதாவது தப்பாக நினைத்து விட்டால் என்று அவள் கேட்கவில்லை.

பிரபுவும் எல்லோரும் வருகிறோம் என்று சொல்லவில்லை.

சக்தி பிரபு வருகிறான் என்று ஏற்போர்டிற்கு கார் அனுப்பியிருந்தாள்.

சொல்ல போனால் கார் பத்தவில்லை. இருவரும் கர்ப்பிணிகள் என்பதால் அவர்களை வாசுகியோடு காரில் அனுப்பிவிட்டு பிரபுவும் சிவாவும் டாக்ஸி எடுத்தனர்.

அவர்கள் வீட்டிற்கு சென்ற போது சக்தியில்லை தெய்வானை மட்டுமே இருந்தார். “ஏதோ முக்கியமான வேலையாம், இப்போ வந்துதுடுவா”, என்று அனைவரையும் வரவேற்றார். 

அவர்கள் வந்த சிறிது நேரத்திலேயே சக்தி வந்துவிட்டாள். சக்தி அனைவைரையும் உற்சாகமாக வரவேற்க.. அந்த உற்சாகம் யாரையுமே தொற்றவில்லை.

சக்திக்கு சுமித்ராவையும் வைஷ்ணவியையும் கர்ப்பிணிகளாக மேடிட்ட வயிற்றோடு பார்க்க அவ்வளவு சந்தோசம்.. அவள் இருவரையும் அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.  

ஆனால் அவர்கள் கண்டது உடல் இளைத்து பொலிவிழந்திருந்த சக்தியை தான்.

“யாரிது? நான் ஏஞ்செல்ன்னு கூப்பிட்ட பொண்ணு எங்க?”, என்று சிவா கேட்டே விட்டான்.  

அவன் கேட்டதும் தெய்வானை இருக்கிறாரா என்று தான் முதலில் சக்தி பார்த்தாள். சமீபமாக மிகவும் கோபமாக இருந்தார் தெய்வானை. சக்தி தன் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது குறித்து.. இதை மட்டும் கேட்டிருந்தால்  தெய்வானை மிகவும் வருத்தபட்டிருப்பார்.  

சக்தியிடமிருந்து புன்னகை மட்டுமே பதில்.

வாசுகிக்கு மனதில் மிகுந்த பாரம் ஏறிக்கொண்டது.. எவ்வளவு பிடிவாதம் பிடித்து கார்த்திக்கை மணந்து கொண்டாள்.

கார்த்திக் தன் மகன் என்பதை கூட மறந்துவிட்டார். சமீபத்தில் பார்த்த அவனின் தோற்றத்தோடு சக்தியின் தோற்றத்தை ஒப்பிட்டார்.

கார்த்திக் முன்பை விட இப்போது இன்னும் ஹான்ட்சமாக இருந்தான். சக்தி அவனின் பக்கத்தில் நின்றாள் பார்க்கவே பரிதாபமா இருப்பாள். 

சக்தி எல்லோரோடும் பேசிக்கொண்டிருக்க..

வாசுகியால் தாளவே முடியவில்லை. அவருக்கு ஒதுக்கியிருந்த ரூமிற்கு போனவர். கார்த்திக்கை முதலில் தொலைபேசியில் அழைத்தார்.

“சொல்லுங்க அம்மா”, என்று அவனின் குரல் கேட்டது தான். அதன் பிறகு அவனை பேசவிடாமல். ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தார்.         

“ஏன் கார்த்திக் உங்கப்பாவோட சரித்தரத்த திருப்பறியா. உங்கப்பா மாதிரி நீயும் உன் மனைவிய விட்டுட்டியா.”,

“ஆனா பாரு உங்கப்பாவை பிரிஞ்சது எனக்கு வருத்தம் தான்.. சொல்ல முடியாத இழப்பு தான். அது என் மனசை உருக்கியிருந்தாலும். என் உடம்பையெல்லாம்  உருக்கலை. இன்னும் கல்லு மாதிரி உயிரோட தான் உட்கார்ந்து இருக்கேன்.”,

“ஆனா நீ சக்தியை கொன்னுடுவ போல.”, என்று குரல் கம்ம சொன்னவர்..

அதற்கு மேல் பேச முடியாமல் போனை வைத்துவிட்டார்.  

“சக்தியை கொன்னுடுவ போல”, என்ற அம்மாவின் வார்த்தை கார்த்திக்கை கொன்றது.. ஆண்கள் ஆழக் கூடாது என்பதை எப்போதும் போல ஞாபகப்டுத்திக் கொண்டான். 

கார்த்திக்கிற்கு உடனே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது.. இன்றென்ன புதன் அடுத்த புதன் ஃபங்க்ஷன் வரட்டும் அப்புறம் அவளை விடமாட்டேன் என்று நினைத்துக் கொண்டான்.

அம்மா திட்டிய போதும் டெல்லியை நோக்கி அவன் கால்கள் திரும்ப கூட இல்லை. “வராத! என்னை பார்க்காத!”, என்ற வார்த்தைகள் தான் அவனின் காதுகளில் ஒலித்தன.    

வாசுகி மறுபடியும் ஹாலுக்கு வந்து சக்தியை பார்த்த பார்வையில் அவரின் அருகில் வந்தவள்.. “அத்தை! எங்கம்மா முன்னாடி இப்படி பார்த்துடாதீங்க. நான் நல்லா இருக்கேன். என்ன கொஞ்சம் வீக்கா இருக்கேன் அவ்வளவு தான்.. இப்படி சிவா பேசின மாதிரி இல்லை இப்படி என்னை பார்த்தீங்கன்னா அவங்க வருத்தப்படுவாங்க ப்ளீஸ்”, என்றாள் கெஞ்சுதலாக.

பேசாமல் அவளை அருகமர்த்திக் கொண்டார்.

“நீங்க ஏன் இவ்வளவு இளைச்சிடீங்க அண்ணி?”, என்றாள் வைஷ்ணவி. 

“கொஞ்சம் வொர்க் அதிகம், அதான்”, என்றாள்.

“போங்க அண்ணி! எல்லோரும் மினிஸ்டர் ஆனா சொகுசா இருப்பாங்க. குண்டாயிடுவாங்க. நீங்க என்னன்னா வேலைன்னு சொல்றீங்க”, என்றாள்.

பிரபு இதைப்பற்றி பேசவேயில்லை.. மருத்துவனான அவனுக்கு சக்தி மிகவும் வீக்காக இருக்கிறாள் என்று புரிந்தது.

சுமித்ராவும் எதுவும் பேசவில்லை. அவளுடைய எண்ண ஓட்டங்கள் எல்லாம் வேறு மாதிரி இருந்தன..

சக்தியிடம் சிவா, “சாரி”, கேட்க.

சக்தி எதற்கு சாரி என்று கேட்கவில்லை. அமைதியாக தான் இருந்தாள்.

“ஏதோ ஒரு டென்ஷன்ல பண்ணிட்டேன்”, என்றான் சிவா.

கோபமாக எல்லாம் சக்தி பேசவில்லை. பொறுமையாகவே பேசினாள்.. “என்ன டென்ஷன். எனக்கில்லாத டென்ஷன் உங்களுக்கு. நண்பன்னா ஒரு கஷ்டத்துல கூட இருக்கனும் அதை விட்டுட்டு இப்படியா நடந்துக்குவாங்க..”, என்றாள் ஆதங்கமாக.

“முதல்லையும் இப்படி தான் சுமித்ரா விஷயமா ஏதோ ப்ரோப்லம் வந்தப்போ என்கிட்டே பேசவேயில்லை. அப்புறம் ரொம்ப மாசம் கழிச்சு உங்களோட கல்யாண பத்திரிக்கையோட தான் என்னை பார்க்க வந்தீங்க.

“நான் நினைக்கிறேன் சுமித்ராவோட உங்க கல்யாணம் ஃபிக்ஸ் ஆகலைன்னா என்கூட பேசியே இருக்க மாட்டீங்கன்னு.. எனக்கு சுமித்ரா கார்த்திக்கோட ரிலேடிவ்ன்னு கூட தெரியாது?”,

“சாரி! அது எனக்கு தெரியாது”, என்றான் சிவா..

“இப்போவும் அப்படிதான் கார்த்திக்காக எதுவும் செய்ய மாட்டேன்னு சொன்ன உடனே முகத்துல அடிச்ச மாதிரி போனை வைக்கறீங்க.. ஐ ஃபெல்ட் வெரி பேட்”,

சிவா குற்றவுணர்வோடு சக்தியை பார்க்க. அதை போக்கும் விதமாக சக்தி. 

“எது எப்படியோ எல்லாம் சுமித்ராக்காக தானே. அந்த வகையில ஷி இஸ் லக்கி.. நீங்க ஒரு மோசமான நண்பனா இருக்கலாம் ஆனா நல்ல கணவன்”, என்றாள் சக்தி..

இரவின் தனிமையில் சுமித்ராவும் சிவாவிடம் அதையே பிரதிபலித்தாள். “நான் நிஜமாவே தப்பிச்சிடேன்”, என்றாள் சுமித்ரா.

“என்ன?”, என்று புரியாமல் பார்த்த சிவாவிடம்.. “கார்த்திக் மாமா சக்தி அக்காவை எங்க வீட்ட விட்டு வந்ததுல இருந்து பார்த்துட்டு லவ் பண்றார். நான் ரெண்டு மூணு தடவை பார்த்தபோவும் அவங்களை அப்படி கவனிச்சுப்பார். எனக்கு சக்தி ரொம்ப முக்கியம்னு தைரியமா சொல்லுவார்..”,

“இதெல்லாம் தான் எனக்கு அவர் வேண்டாம்னு நான் டிசைட் பண்ண காரணம். சின்ன வயசுல இருந்து அவரோட கல்யாணம்னு பேசி அத்தை  என்னோட மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணினாங்க”,

“எனக்கு லவ் அந்த மாதிரி எல்லாம் அவர் மேல கிடையாது. ஆனா அவரோட தான் கல்யாணம்னு பேசி ஒரு மாதிரி என்னை உரிமையா நினைக்க வெச்சிருந்தாங்க.”,

“பட், எப்பவும் ஒரு சின்ன விஷயத்துல கூட அந்த மாதிரி என்னால கார்த்திக் மாமா கிட்ட காட்ட முடியாது. எப்பவும் அவர் பார்வையாலேயே தூரமா நிறுத்தி வெச்சிடுவார்”,

“அதெல்லாம் எனக்கு பிடிக்கவேயில்லை. என்னோடது என்னோடதா மட்டும் தான் இருக்கனும்..  எனக்கு கணவனா வரப்போறவருக்கு என்னை விட யாராவது முக்கியம்னா  how could i be able to tolerate that. chanceless”, 

“ஒரு ஃபிராக்ஷன் ஆஃப் செகண்ட்ல மாமா வேண்டாம்னு நான் டிசைட் பண்ணினேன். உடனே நீங்க தான் ஞாபகத்துக்கு வந்தீங்க.. மாமாவை வேண்டாம்னு சொல்லிட்டு சும்மா இருந்தா திரும்பவும் அத்தை என்னை கன்வின்ஸ் பண்ணிடுவாங்கன்னு நினைச்சு எப்படி தப்பிக்கறதுன்னு நினைச்சப்போ உங்க ஞாபகம் மட்டுமே வந்தது..”,

“உங்ககிட்ட வந்தேன்.. நீங்க என்கிட்டே ஒன்னுமே கேட்கலை. உடனே என்னை கல்யாணம் பண்ணிக்கிடீங்க”,

“யு நோ மாமா வேண்டாம்ன்றதுக்காக அஸ் எ சாய்ஸ் தான் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன், but now i love every moment of my life. அப்பா அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க..”,

“அத்தை நல்லா பார்த்துக்கிட்டாலும் ஒரு தனிமை, ஒரு குறை மனசு ஓரத்துல இருக்கும். அண்ணாவும் எப்போவும் ஹாஸ்டல்ல இருப்பான். இப்போ எனக்கு அது எதுவுமே ஞாபகம் இல்லை.”,

“உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள்ல இருந்து ஒரு நொடி கூட நான் தனியா ஃபீல் பண்ணினது இல்லை. எல்லாம் போன ஜென்மம் மாதிரி இருக்கு. ஐ லவ் யு.. ஐ லவ் யு ஸோ மச்..”, என்று அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.  

அவளை அணைத்துக் கொண்டவன். “இதை என்கிட்டே நீ நிறைய தடவை சொல்லிட்ட சுமி”, என்றான் சிவா.

“அப்போல்லாம் நான் சொன்னது என்னோட ரீசன்ஸ்.. இப்போ நிஜமாவே மாமாகிட்ட இருந்து தப்பிச்சிட்டேன்னு தோணுது. சும்மா சின்ன வயசுல இருந்து பேசினாங்கன்றதுக்காக கல்யாணம் பண்ணியிருந்தா ஐயோ நினைச்சு பார்க்கவே முடியலை.”,

“it would have been a big tragedy for both of us”,

“அவர் இவ்வளவு லவ் பண்ணின சக்தி அக்காவையே இந்த பாடு படுத்தறாரே என் நிலைமையெல்லாம் என்ன ஆகியிருக்கும். நிஜமாவே தப்பிச்சிட்டேன்..”,

“என்னை உங்க வாழ்க்கையில நீங்க வரவிட்டதுக்கு நான் ரொம்ப லக்கி”, என்றாள்.

“லூசு மாதிரி பேசக் கூடாது.. நான் லவ் பண்ணினேன் சுமித்ரா உன்னை. ரொம்ப. நீ இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னால ஏமாற்றத்தை தாங்க முடியலை.. அதான் சக்தியோட கூட என்னால பேசமுடியலை.”,

“கார்த்திக்காக சக்திகிட்ட நான் அவ்வளவு கோபப்பட்டேன்னாலும் அதுக்கு காரணமும் நீதான். நீ என்னை பார்க்க வந்தப்போ கார்த்திக் தான் நீ என் வீட்டு முன்னாடி நிக்கறேன்னு போன் பண்ணினார்.. அப்புறம் கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெச்சார்.”,

“அவர் பிரச்சனை பண்ணியிருந்தா சிக்கலாயிருக்கும்.. அந்த ஒரு நன்றி தான் என்னை சக்திகிட்ட ஓவர் ரியாக்ட் பண்ண வெச்சிடுச்சு.”,

“இப்போ நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. சக்தி என்னோட சகஜமா பேசவும் தான் இப்போ மனசுக்கு இதமாயிருக்கு.”,

“மாமா சக்தி அக்காவை ரொம்ப கஷ்டபடுத்தறார் தானே..”,

“பார்த்தா அப்படி தான் தெரியுது. ஆனா கார்த்திக்கோட ரீசன்ஸ் என்னன்னு தெரியலையே. ஏன் சக்தியை பார்க்காம கூட இருக்கார்ன்னு தெரியலையே. ஒரு வேளை சக்தி பார்க்க வேண்டாம்னு சொல்லியிருப்பாங்களோ என்னவோ.”,

“ம்கூம், கார்த்திக் மாமா ஒரு விஷயம் செய்யனும்னு நினைச்சா கண்டிப்பா செய்வாங்க. அவங்களை தடுக்க முடியாது. சக்திக்காவே வேண்டாம்னு சொல்லியிருந்தாலும், அவங்க எப்படி இப்படி செய்யலாம். ஒரு தடவை கூட பார்க்காம.. எனக்கு அக்காவை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு..”,

“நான் மாமா கிட்ட பேசட்டா”, என்றாள்.

“நீ பேசினா கார்த்திக் தப்பா எடுத்துகிட்டா..”,

“எடுத்துக்கட்டும். எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, நான் பேசுவேன்”, என்றவள் உடனே சிவாவின் போனை எடுத்து கார்த்திக்கின் நம்பரை அழைத்திருந்தாள்.

“மணி பாரு பதினொன்னு.”, என்று சிவா தடுத்தும் கேட்கவில்லை.

“சொல்லு சிவா!”, என்று கார்த்திக் சொல்ல.

“மாமா, நான் சுமித்ரா!”,

“சொல்லு சுமித்ரா!”,

“ஏன் இப்படி பண்றீங்க. சக்திக்காவை ஏன் விட்டீங்க”,

“எங்க விட்டேன்.. எங்கயும் விடலை.”,

“அது எனக்கு தெரியாது. எனக்கு அவங்களை பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அக்காவே உங்களை வேண்டாம்னு சொல்லியிருந்தா கூட நீங்க அவங்களை விட்டுருக்க கூடாது.”, என்றாள் குரல் தழுதழுக்க.

“அவளும் என்னை வேண்டாம்னு சொல்லலை.. நானும் அவளை விட மாட்டேன். இந்த மாதிரி கன்சீவா இருக்கும் போது நீ மனசை போட்டு குழப்பாத.. நான் பார்த்துக்கறேன்”, என்றான் கார்த்திக்.

“சரி”, என்றபடி சுமித்ரா போனை வைக்க போக..

“தேங்க்ஸ் சுமித்ரா”, என்றான்.

“எதுக்கு?”, என்றவளிடம்..

“சக்திக்காக பேசறதுக்கு”, என்றான்..

“மாமா, இப்படி பேசி என்னை தள்ளி வைக்காதீங்க”, என்றாள் சற்று கோபத்தோடு சுமித்ரா.

“ஓகே! பேசினது வாபஸ்!”, என்றபடி போனை வைத்தான்.

அவன் சுமித்ரவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது வைஷ்ணவியிடமிருந்து மூன்று மிஸ்டு கால்கள்.

அவளிடமிருந்து அடுத்த திட்டு என்று கார்த்திக்கிற்கு தெரியும் இருந்தாலும் அழைத்தான்.

“என்ன அண்ணா நீ?”, என்று ஆரம்பித்தவள். வை ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சிற்கு பேசினாள்.

“ஏய் போதும் வைடி. என்னவோ நீ சொல்லி அவன் கேட்கற மாதிரி எதுக்கு இவ்வளவு பேச்சு”, என்று பிரபு அவளிடம் சொல்வது கார்த்திக்கிற்கு நன்றாக கேட்டது.

காலையில் அம்மா பேசிய போது மனதிற்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அவரின் வார்த்தைகள் சாட்டையாய் அவனை அடித்தது தான். ஆனால் இவர்களின் வார்தைகள் ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. சக்திக்காக அவர்கள் பார்ப்பது மனதிற்கு இதமாயிருந்தது..

சக்திக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

வளைக்காப்பன்று விடியலே பிரபு வீட்டில் கார்த்திக் அடித்த பெல்லினால் தான் ஆரம்பித்தது. ஆம், விடியற் காலையே வந்து பெல் அடித்தான்.

“யாரடா இந்த நேரத்தில், அதுவும் வாட்ச்மேன் போன் கூட செய்யவில்லை”, என்று நினைத்துக்கொண்டே வந்து பிரபு கதவை திறக்க.

கார்த்திக்.

அவனை பார்த்தும், “ஃபிளைட் எத்தனை மணிக்கு வந்துச்சு”, என்று பிரபு கேட்க.

“எந்த ஃபிளைட்”, என்றான் கார்த்திக் புரியாமல்..

“இவ்வளவு காலையில வந்திருக்க. அதான் பிளைட் எத்தனை மணிக்கு வந்துச்சுன்னு கேட்கறேன்”, என்று பிரபு சொல்லவும்.

அவனின் நக்கல் புரிந்து கார்த்திக் முறைத்தான்..

“என்னடா முறைக்கிற, இருக்கறது உள்ளூர்ல. நேத்து நைட் வந்திருக்கனும் இல்லை நல்லா விடிஞ்சதுக்கு அப்புறம் வந்திருக்கனும்.. இப்படி அஞ்சு மணிக்கா வருவ”, என்று நக்கலடிக்க..

கார்த்திக் உடனே வெளியே செல்ல திரும்ப. “மாமா, டேய்! உள்ள வாடா!”, என்று கார்த்திக்கின் கை பிடித்து உள்ளே இழுத்து சென்றவன்.. “உனக்கு ரோசம் அதிகம்னு எனக்கு தெரியும்! அதை என்கிட்டே காட்டு! ஆனா சக்தி கிட்ட கட்டாத.”,

“அவங்க நாலு அடி அடிச்சா கூட வாங்கிட்டு. அவங்க  கால்ல விழறதுன்னா கூட விழுந்து. அவங்களை சமாதானப்படுத்து.. உனக்காக சொல்லலை அவங்களுக்காக சொல்றேன்”,          

“நீ மட்டும் தான் அவங்களோட சந்தோசம், நிம்மதி எல்லாம் புரிஞ்சிக்கோ.”,

கார்த்திக் எதற்கும் பதில் சொல்லவில்லை.    

“நீ செய்யறதை தான் செய்வ! உனக்கு சொல்ல கூடாதுன்னு தான் நினைச்சேன்! ஆனா சொல்லாம இருக்க முடியலை. பார்த்துக்கோடா.”, என்றான்.

பிரபு மிகவும் சீரியசாக இருக்கிறான் என்றுணர்ந்த கார்த்திக்.. “பார்த்துக்கறேன்!”, என்றான் வாயை திறந்து.

“எப்போ இங்க சக்தி வர்றா.”,

“ஃபங்க்ஷன் மண்டபத்துல பத்தரை மணிக்கு மேல.. நாம இங்கிருந்து எல்லாம் கொண்டு  போகனும். காலையில டிஃபன்க்கு நம்ம வீட்டுக்கு வர சொன்னேன். நேத்து நைட் கூட போன் பண்ணினேன்.”,

“மண்டபத்துக்கு வந்துடறேன்னாங்க.. வீட்டுக்கு தான் வரனும்னு சொல்லியிருக்கேன்.. என்ன பண்ண போறாங்க தெரியலை!”, என்றான்.

சக்தி மண்டபத்திற்கு போகலாம் என்று சொல்லியும். தெய்வானை பிடிவாதம் பிடித்து சக்தியை பிரபுவின் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வாயிலில் போனில் பேசிக்கொண்டிருந்த கார்த்திக், சக்தியின் மினிஸ்டர் காரை பார்தததும்.. சக்திக்காக அதையே பார்த்தபடி நின்றான்.

கார் போர்டிகோவில் நிற்கவும் கார்த்திக்கின் கால்கள் அவனையும் மீறி எப்பொழுதும் போல காரின் அருகில் சென்று சக்திக்காக கார் கதவை திறந்தது..

தெய்வானை தான் இறங்கினார்.. கார்த்திக்கை பார்த்ததும் சக்திக்கு கால்கள் தடுமாறின. இப்படியே திரும்பி போய்விடலாமா என்றிருந்தது..    

கண்டிப்பாக அவனை பார்ப்போம் என்று தெரியும்.. பார்த்தாலும் தன்னை அது எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்று மனதை ஒருவாரமாக நிலை படுத்திக் கொண்டிருந்த சக்தியால்.. ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.

அவளால் இறங்கவே முடியவில்லை.

நன்றாக கார் கதவை திறந்து பிடித்த கார்த்திக்.. சக்திக்காக கை நீட்டினான்..

நீட்டிய கையை சக்தி பற்ற யோசிக்க. குனிந்து அவனாகவே கையை பற்றினான்.

அவளின் கைகள் சில்லிட்டு இருந்தன.. கார்த்திக்கின் கைகள் சில்லிப்பை உணர. சக்தி கார்த்திக்கின் கைகளின் இதமான சூட்டை உணர்ந்தாள்.

இரு கைகளுமே துணையை விரும்பின. சூடான கார்த்திக்கிற்கு சக்தியின் கைகளின் சில்லிப்பு குளிர்ச்சியை தர.. சக்தி கார்த்திக்கின் கதகதப்பை உணர்ந்தாள்.  

“இறங்கு சக்தி”, என்றான். பற்றிய கையையும் விடவில்லை..

சக்தி இறங்கவும் அவளின் தோற்றத்தை ஆராய்ந்தான்.. டீ வீ யில் தெரிந்ததை விட இன்னும் பரிதாபமாக இருந்தாள். அதிலும் அவளின் உடை புல் நெக் காலர் வைத்த ப்ளவுஸ், அந்த காட்டன் புடவை. கைகளில் போட்டிருந்த ஒற்றை வளையல் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. கழுத்தில் எதுவும் தெரியவில்லை.  

மொத்தத்தில் கார்த்திக்கின் பார்வைக்கு பஞ்சத்தில் அடிபட்ட பரதேசி மாதிரி இருந்தாள்.

“என்னம்மா பார்த்துக்கறீங்க. என்னமா டிரஸ் இது? இப்படி தான் ஒரு ஃபங்க்ஷன்க்கு வருவாங்களா? என்ன அரசியல் கூட்டத்துக்கா போறா இவ?”, என்று தாள மாட்டாமல் தெய்வானையிடம் கேட்க..

காலையில் இருந்து ஒவ்வொரு விஷயத்திற்கும் சக்தியிடம் போராடிக்கொண்டிருந்த தெய்வானை கார்த்திக்கிடம் கோபத்தை திருப்பினார்..

“அவ கிட்ட வேற சேரி கட்ட சொல்லி, நகை போட சொல்லி காலையில இருந்து எவ்வளவு சண்டை தெரியுமா. அவளுக்கு எடுத்து வச்ச டிரஸ் நகை கூட அப்படியே பெட் மேல தான் இருக்கு. திரும்ப அதை எடுத்து நான் பீரோல கூட வைக்கலை. இருந்த கோபத்துல அப்படியே விட்டுட்டு ரூமை பூட்டிட்டு வந்துட்டேன்..  ஆவூன்னா இப்போ புதுசா நான் இப்படியே டெல்லிக்கு கிளம்பிடுவேன்னு மிரட்றா”, 

“என் பொண்ணா இருந்தவரைக்கும் நல்லா இருந்தா கார்த்திக்.. உன் மனைவியா ஆனதுக்கு அப்புறம் தான் இப்படியாகிட்டா.”,

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு, என்னால முடியலை, நான் உள்ள போறேன்!”, என்று சொல்லவும். அவர்களை அழைக்க பிரபுவும் வாசுகியும் வெளியே வரவும் சரியாக இருந்தது.

வாசுகியும் பிரபுவும் அவர்களை வரவேற்க. தெய்வானையிடம் சாவியை வாங்கியவன். “நீங்க போங்க!”, என்று அவரை வாசுகியுடன் அனுப்பிவிட்டு.

“எங்களுக்கு வெயிட் பண்ணாதீங்க பிரபு, நீங்க மண்டபத்துக்கு கிளம்பிடுங்க”, என்று சொல்லியவன். சக்தியிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போனான்.

அவள் வரும் வேகத்திலேயே அவளுக்கு விருப்பமில்லை என்று தெரிந்தது. இருந்தாலும் விடாமல் சற்று இழுத்த மாதிரி தான் சென்றான்.  சக்தியின் மினிஸ்டர் காரை விட்டு. அவனின் காரின் கதவை திறந்து, “ஏறு சக்தி!”, என்றான்.

சக்தி அவனிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. “நான் வரவில்லை”, என்று வாயால் சொல்லாமல். ஏறாமல் அப்படியே நின்று அவளின் விருப்பமின்மையை காட்டினான்.

சில நொடிகள் அவளுக்கு அவகாசம் கொடுப்பது போல கார்த்திக் அவளை பார்த்திருந்தான். சக்தி அப்போதும் அசைய மாட்டேன் என்பது போல நிற்க.  

இது வேலைக்காகாது என்று புரிந்து. அவளை அப்படியே இடையில் ஒரு கையை கொடுத்து, முழங்காலில் ஒரு கையை கொடுத்து தூக்கினான். சக்தி இதை எதிர்பார்க்கவில்லை..   

“ஏய் கார்த்திக், என்ன பண்ற விடு! விடு!”, என்று அதட்டியபடியே திமிறினாள்..

அவள் திமிறி இறங்கிவிட்டால் என்ன செய்வது என்பதாக அவனோடு சேர்த்தணைத்து இறுக்கி பிடித்தான்.

“எல்லோரும் பார்க்கறாங்க விடு!  கார் டிரைவர் எல்லாம் பார்கறான்! கீழ இறக்கி விடு!”,  என்று அதட்டலை விட்டு கெஞ்சலில் இறங்கினாள் சக்தி.

தெய்வானை வாசுகி பிரபு மூவருமே பார்த்து தான் இருந்தனர். யார் பார்கிறார்கள், பார்க்கவில்லை என்று கார்த்திக் சற்றும் கவலைப்படவில்லை. 

“இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை பேசினியா? இல்லல்ல.. இப்போ மட்டும் என்ன? வாயை மூடு!”, என்று ஒரு அதட்டல் போட்டவன்..

அவளை அப்படியே சீட்டில் அமர வைத்து, மறுபக்கம் அமர்ந்து காரை கிளப்பினான். அது அவர்கள் இருவரின் மனவோட்டத்தை போல சீறிப் பாய்ந்தது. 

Advertisement