அத்தியாயம் நாற்பத்தி நான்கு :

கிட்ட தட்ட ஒரு வருடமாகிவிட்டது சக்தி கார்த்திக்கை பார்த்து…..

அன்று சக்தி, “வராதே”, என்று சொன்ன பிறகு கார்த்திக் தொடர்பு கொள்ளவேயில்லை…..

கார்த்திக்கின் பதில்களால் சக்தி இறுகியிருந்தாள்…… அவளுக்கு அழுகை கூட வரவில்லை…… இனி அவனிடம் இறங்கி போகக் கூடாது என்று முடிவு ஸ்திரமாக மனதிலும் மூளையிலும் உட்கார்ந்தது.  

கார்த்திக் சொன்னது போல இரண்டே நாட்களில் வாசுகி வைஷ்ணவியை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்று சொல்ல… சக்தி ஒன்றும் சொல்லவில்லை உடனேயே அவரை அனுப்பி வைத்து விட்டாள்.

அவர் கிருஷ்ணகிரி திரும்பியதுமே…… தெய்வானை மகளை தனியே விட இஷ்டமில்லாமல் சக்தியுடன் இருக்க டெல்லி சென்றுவிட்டார்.

வீரமணி டெல்லிக்கும் கிரிஷ்ணகிரிக்கும் அலைந்து  கொண்டிருந்தார்.

செல்வம் மெடிக்கல் காலேஜ் அப்ரூவல் வாங்கியிருந்தான்.   

சக்தி அவனிடம் மிகவும் கோபப்பட்டாள்…. “என்னுடைய வேலைங்க என் இஷ்டப்படி தான் நடக்கனும்……. இது என் காலேஜ்……  உங்களால அப்படி இருக்க முடியும்னா என்கூட இருங்க இல்லைன்னா…… உங்க பாஸ் கூட கிளம்பிடுங்க… இனிமே நீங்க எனக்கு தேவையில்லை”, என்று கட் அண்ட் ரைட்டாக சொன்னாள்.

“உங்க பாஸ் சொன்னான்னு ஏதாவது இங்க செஞ்சீங்க நடக்கறதே வேற…..”,

செல்வம், “சாரி”, கேட்டு நிற்க…… அப்போதும் அவனை மன்னிக்க வெல்லாம் இல்லை…

“காலேஜ் வேலையை மட்டும் இனிமே பார்த்துக்கோங்க…. என்கூட இருக்க வேண்டாம்… அதுவும் காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் பக்கவா இருக்கனும்….. எனக்கு தெரியாம எதுவும் நடக்க கூடாது…… டொனேஷன்…. லஞ்சம் இப்படி எதுவும் என்னோட காலேஜ்குள்ள வரக்கூடாது…… வந்தது……… தொலைச்சிருவேன் உங்களை…..”,      

“உங்க பாஸ் எவ்வளவு குடுத்திருக்கான் இந்த அப்ரூவல் வாங்கறதுக்கு….”,

செல்வம் தொகையை சொல்ல…..

“அவன் வந்ததுமே சொல்லுங்க, முதல்ல அவன்கிட்ட இந்த பணத்தை திரும்ப குடுக்கனும்”,  

அவ்வளவு கோபமாக சக்தியை பார்த்திராத செல்வதிற்கு அமைதியாக சக்தி சொல்வதை செய்வதை தவிர வேறுவழியில்லை. 

அதனால் காலேஜ் பொறுப்பை முற்றிலுமாக செல்வம் எடுத்துக் கொண்டான்.         

இரண்டு மாதங்கள் கார்த்திக் ஜெயிலில் இருந்த பிறகு….. டிஸ்ட்ரிக்ட் கோர்டில் பெயில் அப்ளை செய்து அது ரிஜெக்ட்டாகி பின்பு ஹை கோர்டில் பெயில் அப்ளை செய்து வெளியே வந்தான்.

ஓரளவு கிரானைட் ஊழல் விஷயம் அமுங்கியிருந்தது.  

வெளியே வந்ததுமே வீரமணி நேரே அவனை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கே சென்றவன் சக்தியை போனில் அழைத்து பேசினான்.

“சொல்லு கார்த்திக்…..”, குரலில் ஏதோ ஒட்டாத தன்மை இருப்பது போல கார்த்திக்கிற்கு தோன்றியது…. அதனால் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை… 

“நான் பெயில்ல வந்துட்டேன் சக்தி……”, என்றான்.

சக்தி அமைதியாக இருக்க…..

“எனக்கு உன்னை பார்க்கனும்”,

“எதுக்கு…..?”,

“எதுக்குன்னா….???”,

“எதுக்கு பார்க்கனும்….. நான் இப்படியே தான் இருப்பேன்னு முடிவா நீ இருக்கும் போது நாம பார்த்து என்ன செய்ய போறோம்……. போன்ல சண்டை போடறதை நேர்ல சண்டை போடுவோம் அவ்வளவு தான் வித்தியாசம்……”,

“ஒரு தடவை நான் சொல்றதை கேளேன்….. நாம நேர்ல பார்க்கலாம்”,

“வேண்டாம் கேட்க வேண்டாம்……. பார்க்க வேண்டாம்….. உன்னோட அநியாயங்களை நீ நியாயம் மாதிரியே பேசுவ…. உன்னை பார்த்தா கொஞ்சம் கூட சூடு சொரணையில்லாம நானும் உருகி நிப்பேன்”   

“அப்போ நாம பார்க்கனும்னு அவசியமில்லைங்கற…..”, என்றான் ஒரு மாதிரிக் குரலில்…..

“நாம பார்க்க அவசியமில்லாத படி தான் உன் செய்கைகள் இருக்கு கார்த்திக்….”,

“அப்போ எதுக்கு அவ்வளவு பிடிவாதமா என்னை கல்யாணம் பண்ணிகிட்ட…….”,

“அது என் இஷ்டம் கார்த்திக்…… அதுக்காக நீ செய்யறதை எல்லாம் சரின்னு சொல்ல முடியாது……”,

“சரி நம்ம பார்க்க வேண்டாம்”, என்று சொல்லி போனை வைத்துவிட்டான்….

அதன் பிறகு கார்த்திக் எந்த முயற்சியும் செய்யவில்லை….

ஆயிற்று ஒரு வருடமாகிவிட்டது அவனை பார்த்து பேசி…… அவன் பரோலில் வந்த போது அவனை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்த போது பார்த்தது தான்.

என்ன செய்கிறான்…… ஏது செய்கிறான்….. எதுவும் தெரியாது…… யாருக்கும் தெரியவில்லை….. மீண்டும் தீவிரமாக சினிமா தயாரிப்பில் இறங்கி விட்டான் என்று கேள்வி…… 

வீரமணி அவனை பற்றி பேசுவார்….. ஆனால் சக்தியின் கோபத்தை பார்த்து அவளின் செய்கைகளை பார்த்து அவரும் சொல்வதில்லை……  

சக்திக்கு அவனுடைய ஞாபகங்கள் அதிகமாகும் போது உடையக் கூடிய வீட்டில் இருக்கும் பொருட்கள் தூள் தூளாகும்….. அதிகம் உடைப்பது போனை…. கண்ணாடியை…….. வீட்டில் அலங்காரத்திற்கு இருக்கும் பொருட்களை…..  

முன்பு அதிகம் உடையும் இப்போது குறைந்து விட்டது….

என்ன ஏதென்று தெரிந்து அவர்களை சமாதானப்படுத்த வீரமணியும் தெய்வானையும் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி….. என்ன பிரச்சனையென்றே தெரியவில்லை…

கார்த்திக் சக்தி தான் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்று முடித்துக் கொண்டான். திரும்ப அவனையும் கேட்க முடியவில்லை….. கேட்டாலும் பதிலில்லை…

தலைவேதனையாய் இருந்தது வீரமணிக்கும் தெய்வானைக்கும்……  

என்ன இல்லை அவர்களிடம்…… சக்தி வெளிப்பார்வைக்கு மிகவும் கம்பீரமாக இருந்தாள்…… அவளுடைய துறையில் கங்காதரனின் ஆலோசனையோடு நல்ல திட்டங்களை கொண்டு வந்து அதை செயல்படுத்தி அரசாங்கத்திற்கும் வருவாயை பெருக்கினாள்….. அதே சமயம் தொழில் செய்பவர்களுக்கும் அதில் ஆதாயமே இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் சிறந்த யூத் ஐகானாக தேர்ந்தெடுக்க பட்டிருந்தாள்……. அதற்காக அவர்கள் பேட்டி ஒன்றை கேட்டிருந்தனர்.

அதற்காக அமைச்சகத்திற்கு சென்று கொண்டிருந்தாள்…….

பேட்டி ஆரம்பித்ததும் மாற்றி மாற்றி கேள்விகள், சலிக்காமல் பதில் சொன்னாள்… தங்கள் திட்டங்கள் அதனால் அரசாங்கத்திற்கு வந்த நன்மைகள்…. 

தன் வேலையின் எல்லா பெருமையையும் தூக்கி கட்சிக்கும்… தன்னோடு உறுதுணையாக இருக்கும் கங்காதரன் போன்ற அதிகாரிகளுக்கும் கொடுத்தாள்.

அவளுடைய காலேஜ் அந்த வருடம் பத்து ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச மருத்துவ படிப்பு வழங்குவதை சொன்னாள்…

எப்படி இவ்வளவும் தனி ஆளாக பார்க்க முடிகிறது என்றதற்கு…..

தான் மட்டும் காரணமல்ல தன்னோடு இருக்கும் அனைவரைக்கும் அந்த புகழையும் பகிர்ந்து கொடுத்தாள்.

கடைசியாக யாரோ ஒரு நிருபர் எப்போது உங்கள் திருமணம் என்று கேட்டார்.

யூத் ஐகான் என்ற பட்டத்திற்கு எடுக்கப்படும் பேட்டியில் சக்திக்கு பொய்யுரைக்க விருப்பமில்லை….

“எனக்கு திருமணம் ஆகிடுச்சே”, என்றாள்.

“என்ன அரசியலை திருமணம் செஞ்சிகிட்டேன்னு சொல்ல போறீங்களா”, என்று ஒரு நிருபர் சிரிப்போடு கேட்க…….

“நோ, நாட்”, என்று புன்னகையோடு மறுத்தவள்….. தனக்கு திருமணமாகிவிட்டது…… சில கருத்து வேறுபாடுகள்……. அவரவர் வாழ்க்கையின் பாதையில் அவரவர் பயணிக்கிறோம்.. என்றாள்.

உண்மையா? பொய்யா? என்று அவர்கள் குழப்பத்தில் இருக்க……

ஸ்திரமாக தான் திருமணமானவள் என்று சொன்னாள்.

“ஏன் சொல்லவில்லை?”, என்றதற்கு…..

“யாராவது கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன், யாரும் இதுவரை கேட்கவில்லை. நீங்கள் தான் முதன் முதலில் கேட்கிறீர்கள், சொல்லிவிட்டேன். எங்கள் இருவரின் வீட்டாரின் முன் நடந்த திருமணம்”, என்றாள்….  

யார்? என்ன? என்ற விவரம் கேட்ட போது…. “சொல்கிறேன்! ஆனால் இப்போதில்லை……. அதில் அவருக்கு விருப்பமா தெரியாது”, என்று முடித்துக் கொண்டாள்.

அவளுடைய பேட்டி தொலைகாட்சியிலும் ஒளிபரப்பானது…..

ஒரு சிறு அலையை ஏற்படுத்தியது தான்…… ஆனால் அதன் பிறகு சக்தி மௌனியாகி விட்டாள் ஒரு வார்த்தை அதை பற்றி பேசவில்லை…… 

“என்ன சக்தி இப்படி கல்யாணமாகிடுச்சுன்னு சொல்லிட்ட ஆளாளுக்கு போன் பண்றானுங்க யாரு என்னன்னு கேட்கறானுங்க…. கருத்து வேறுபாடா யாரு அது நாங்க பேசறோம்ன்றானுங்க என்னமா பண்ற…..”,

“என்னைக்கு இருந்தாலும் தெரியப்போற விஷயம் தானேப்பா…… என்ன ஏதுன்னு கேட்டா அவ்வளவு முக்கியத்துவம் குடுக்காதீங்க விட்டுடுங்க”, என்றாள்.

“யாருன்னு தெரிஞ்சா ப்ரச்சனையாகுமேம்மா”,

“தெரியும் போது பார்த்துக்கலாம்…..”,  

“என்னமா? என்ன இது?”, என்றார் சலிப்பாக…

“கல்யாணமானதை சொல்லாம இருந்திருக்கனும்…… சொன்னா மாப்பிள்ளை யாருன்னு சொல்லனும்…… ஏன் இப்படி பண்ற? இவ்வளவு நாள் சொல்லாம இப்போ ஒரு வருஷம் கழிச்சு திடீர்னு ஏன் சொல்ற”, என்றார்.

“இவ்வளவு நாளா இப்படி பப்ளிக்ல என்னை யாரும் கேட்கலைப்பா, அது தான் நிஜம்……”, 

சக்தியின் பேட்டியை கார்த்திக் பார்த்தான்….. அவனும் அவளை நேரில் பார்த்து வருடமாகிறது தான்….. பத்திரிக்கைகளில் எப்போதாவது பார்ப்பது தான் ஆனால் உருவம் அதில் மங்கலாக தானே தெரியும்…….

இப்போது சக்தியின் பேட்டியை பார்த்தவனுக்கு… முதலில் சக்தியை பார்த்ததுமே தோன்றியது ஒன்று தான்….. இவள் சாப்பிடுகிறாளா? இல்லையா? என்பது போல தான்….

அவனுக்கு என்ன தெரியும் நிஜமும் அதுதான்…….. சக்தி உயிர்வாழ மட்டுமே சாப்பிடுகிறாள் என்று….

வாரத்தில் ஐந்து நாட்கள் பாதி நாள் விரதம்….. அதாவது மதிய உணவு வரை பச்சை தண்ணீர் கூட சக்தியின் பற்களில் படாது….. ஒரு நாள் முழு விரதம், மாலை தான் உணவு இறங்கும்……

வாரத்தில் ஒரு நாள் அதாவது ஞாயிறு மட்டுமே மூன்று வேலை உணவு உண்பாள்.

தெய்வானையும் என்னெனவோ செய்து பார்த்து விட்டார்… சக்தி அசையவில்லை….. “சாமி கண்ணை குத்திடும், நான் வேண்டுதல் வெச்சிருக்கேன்….. தப்பக் கூடாது”, என்பாள்.

இந்த உணவு முறைகளால் மிகவும் மெலிந்திருந்தாள்……. அதோடு உடல்  நலம் குறைந்துமிருந்தது…… ரத்த சோகையோ என்று சொல்லும் அளவிற்கு வெளுத்து இருந்தாள்…… உடலில் ஹீமொக்லோபின் அளவு குறைவாக இருந்தது…… இரண்டு முறை மயக்கமாகி கூட இருந்திருக்கிறாள்.

தெய்வானையிடம் மறைத்துவிட்டாள்.

இதெல்லாம் கார்த்திக்கிற்கு தெரியாது….. அவள் இப்படியெல்லாம் தன்னை வருத்திக் கொள்கிறாள் என்று அவனுக்கு எப்படி தெரியும்…….

வர வேண்டாம் என்று ஜெயிலில் இருந்த போது தான் சொன்னாள் என்றால்…. வெளியே வந்து போன் செய்த போதும் அதையே சொன்னாள்.

அதன் பிறகு கார்த்திக் எந்த முயற்சியும் எடுக்கவில்லை….. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டான்…..    அவன் போராட்டங்கள் அவனோடு….. வரவேண்டாம் என்று சொன்ன பிறகு எப்படி அவளிடம் செல்லுவான்…. சொல்லுவான். 

சக்தியும் திரும்ப பேசவில்லை……. விட்டுவிட்டான். 

சமீபமாக அவனின் இரண்டு படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருந்தது……

அவனின் தந்தையின் பேனரின் பெயர் வெற்றி பெற்றதில் உற்சாகமாக இருந்தான். கோர்டில் அது பாட்டிற்க்கு ஒரு பக்கம் கேஸ் நடந்து கொண்டிருந்தது…. எந்த இடத்தில ஆரம்பித்ததோ வழக்கு அதே இடத்தில் இருந்தது… குறைந்த பட்சம் பதினைந்து ஆண்டுகளாவது இழுக்கும்….. இழுக்க வைத்து விடலாம் என்பது அவனின் நம்பிக்கை…..

கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தவன்…… இப்போது பதுக்கி இருந்த கிரானைட் கற்களை எல்லாம் மீண்டும் எக்ஸ்போர்ட் செய்வதில் ஈடுபட்டு இருந்தான்…… அதில் நிறைய லாபம் பார்த்துக் கொண்டிருந்தான்…… அதோடு அவனின் உரிமம் தானே ரத்தாகியிருந்தது…..

இப்போது மாரி பெயரில் வேறு இடத்தில் உரிமம் எடுக்க முயன்று கொண்டிருந்தான்…..

சக்தியின் ஞாபகங்கள் அதிகமாக இருந்தாலும் அது அவனின் செயல்பாடுகளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை…… ஏனென்றால் அவனின் பதினேழாவது வயதில் இருந்து இது பழக்கம் தானே…..

மீண்டும் வெற்றி, பணம் என்று அந்த பாதையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்…. ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்படிருந்தான்.

செல்வம் தான் காலையில் அழைத்து, “மேடம் பேட்டி வருது பாருங்க”, என்று சொன்னதும்…. சக்தியை பார்க்கும் ஆர்வமிகுதியில் டீ வீ யின் முன் அமர…….

அவளின் தோற்றத்தை பார்த்தவன் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான்……. நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பதால் தோற்ற மாற்றம் கண்ணுக்கு நன்கு புலப்பட்டது…

“தன்னை ஈர்த்த மதி முகமா இது….”,

“அவள் வரவேண்டாம் என்று மறுத்திருந்தாலும் தான் போயிருக்க வேண்டுமோ… ஆனால் எப்படி போயிருக்க முடியும்???????????”,

ஒரு இனம் விளங்கா வலியை நெஞ்சு உணர்ந்தது…..  

அவ்வளவு நேரமாக அவளையே பார்த்துகொண்டிருந்ததால்….. அவளின் பேட்டியை கவனிக்கவில்லை…. அவன் கவனிக்க ஆரம்பித்த போது பேட்டி முடியும் தருவாயில் இருக்க……

சக்தியின் திருமணத்தை பற்றி கேட்டதும், அதற்கான அவளின் பதில்களையும் கேட்டுக் கொண்டு தானிருந்தான்.                         

“தைரியம் தான் இவளுக்கு, திருமணமாகிவிட்டது….. இப்போதைக்கு யாரென்று சொல்ல முடியாது…. என்று எவ்வளவு தைரியமாக சொல்லுகிறாள்… யார் என்ன நினைப்பார்கள் என்ற அச்சமே இல்லை”,     

அவளின் நினைவில் ஒரு சிறு புன்னகை….. “ரொம்ப தைரியம் தான்….”,

பார்க்க வேண்டும் அவளை இப்படியே விட முடியாது என்று தோன்றியது… 

இன்னும் ஒரு வாரத்தில் வரும் சுமித்ராவின் வளைக்காப்பு நினைவில் வர……. பிரபுவை அழைத்தான்……

“பிரபு! சுமித்ராவோட செவன்த் மந்த் ஃபங்ஸன்க்கு வீரமணி அய்யாவை இன்வைட் பண்ணிட்டியா…”,

“ம்! பண்ணிட்டேனே..”,

“எப்போ பண்ணின…..”,

“போன வாரமே நானும் அத்தையும் வீட்டுக்கு போய் இன்வைட் பண்ணினோம்”,

“யார் இருந்தா?”,

“ஐயா மட்டும் தான் இருந்தார்…. அப்புறம் டெல்லிக்கு போன் செஞ்சு சக்திக்கும் அவங்கம்மாவுக்கு சொல்லிடலாம்னு விட்டுடேன்….”,

“நீ அம்மாவை கூட்டிட்டு டெல்லி போய் நேர்ல சக்தியை அழைச்சிட்டு வா….. கண்டிப்பா வரனும்னு அம்மாவை விட்டு சொல்லு…..”,

“என்ன திடீர்ன்னு இவ்வளவு நாளா இல்லாம…….”,

“ம்! இந்தியன் ஏர்லைன்ஸோடா டை அப் போட்டிருக்கேன்…… அடிக்கடி டெல்லிக்கு டூ அண்ட் ஃப்ரோ பிளைட்ல ஆள் அனுப்பறேன்னு…….”,

“உன் திமிரு குறையவே குறையாதுடா…….”,

“சொல்றதை செய்டா…….. உன்னால முடியுமா? முடியாதா?”,

கார்த்திக் போன் செய்ததே அதிசயம்…….. இதில் சக்தியை வேறு அழைக்க சொல்கிறான்……. மறுக்க முடியாது……

“போறேன்!”,

“எப்போ?”,

“உடனே எப்படிடா சொல்ல முடியும் வைஷ்ணவி கிட்ட கேட்கனும்டா….”,

“இதை கூட வா கேட்ப……”,

“பின்ன உன்ன மாதிரி உன்வீட்டமா அங்க நீ இங்கன்ற மாதிரியா இருக்கேன்……. அடிச்சாலும் பிடிச்சாலும் என்னால வைஷ்ணவியை விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்க முடியாது……  உனக்கு இதெல்லாம் புரியாது…….”,

“எனக்கு புரிய வேண்டாம்…… சக்தி வரனும் அதை ஞாபகத்துல வெச்சிக்கோ…… நீ லேட்டா போனா எனக்கு வேலையிருக்குன்னு அவ வரலைன்னு சொல்லிட்டா… நாளைக்கே கிளம்பு”, 

“உனக்கு மிச்சம் அவங்க…. கூப்பிட தான் முடியும்…. வரலைன்னா……”,

“அதுக்கு தாண்டா எங்கம்மாவை கூட்டிட்டு போக சொல்றேன்….. சொல்றதை செய்….”,

“சரி”, என்று அவன் சொல்லும்வரை விடவில்லை…..

“இந்த பிடிவாதத்தை உன் வீட்டம்மாவோட சேர்ந்து வாழறதுல காட்டு”, என்று அப்போதும் கார்த்திக்கிற்கு ஒரு குட்டு வைத்து தான் போனை வைத்தான் பிரபு.

 “இவளால அவனவன் பேசறான், எல்லாம் என் நேரம்……”, என்று கார்த்திக் நொந்து கொண்டாலும் சக்தியின் தற்போதைய தோற்றம் அவனை அசைத்திருந்தது….. அவனின் முடிவுகளை தளர்த்த வைத்தது.  

வீழ்வேனென்று நினைத்தாயா அன்பே

வீழ்த்தி மீளுவேன் என்பதை மறந்தாயோ ???

தாலி என்னும் வேலியில்

என்னை சிறை எடுத்தாயே

உன் நினைவில் என்னையே

மீள வைத்தாயே

 

கையணைக்க வேண்டிய கைகள்…

சூழ்நிலை கைதியாய் சமுகத்தின் பின்னே

உன் கருங்கூந்தலில் முகம் புதைக்க

உருகுகிறேன் இங்கே

உன் மென்காந்தள் விரலை சேர்த்தணைக்க

தவிக்கிறேன் அன்பே

 

உன்னை நேசிக்கும் அளவை நானறிய

பிரிவின் வலியை இறைவன் கொடுத்தானோ ?

உந்தன் கோபங்கள் நேசங்கள்
பாசங்கள் வெறுப்புகள் விருப்புக்கள்
எனக்குள் இருக்கும் உன்னையும்
என்னோடு எடுத்து செல்கிறேன்

உன்னை சேரும் நாள் வரும் என்று

மீண்டு(ம்) சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு !!!