அத்தியாயம் நாற்பத்தி மூன்று :

வீட்டிற்கு வந்ததும் சக்தி அவளின் ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.  அவளுக்கு எதையோ சாதித்து விட்ட உணர்வு….

கீழே இருந்தால் தெய்வானையும் வீரமணியும் ஏதாவது கேட்டால் சங்கடமாக இருக்கும் என்று ரூமிற்குள் புகுந்து கொண்டாள். 

வீரமணிக்கு மிகுந்த வருத்தம்… “இப்படி தன் மகள் பிடிவாதம் பிடித்து மணக்கும் அளவுக்கு இருந்திருக்கிறாள்….. தான் அதை கூட தெரிந்து கொள்ளாது இருந்திருக்கோம்”.

எப்போதும் சக்தி அதிகம் கார்த்திக்கை தேடுவாள் என்பது அவருக்கு தெரிந்தது தான்…… திருமணத்திற்கு கூட ஒரு முறை கேட்டிருக்கிறார்கள் தானே சக்தியிடம்….

அவள் தானே எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டாள். அதனால் திரும்ப அவர் அந்த மாதிரி யோசிக்கவேயில்லை…. பிறகு கார்த்திக்குடன் பிரச்சனைகள்… சென்றான்……. வந்தான்…..

இவர் சக்தியின் அரசியல் அதில் வெற்றி இப்படி சிந்தித்து இருந்ததால் தெரியவில்லை….. இல்லை எப்போதுமே கார்த்திக் சக்தி சிரித்து பேசியதோ… அடுத்தவரின் கவனத்தை கவரும் எந்த செய்கையும் இருந்ததே இல்லையே……??

அதனால் தான் கவனிக்கவில்லையோ?

தெய்வானையிடம் கோபித்தார்….. “இவ்வளவு தீவிரமா இருந்திருக்கா நீ எப்படி என் கிட்ட சொல்லாம விட்டுட்ட….”,

“முதல்ல கார்த்திக்கை கல்யாணம் பண்ண கேட்டபோ வேண்டாம்னா….. அப்புறம் இவ வேணும்னு சொன்னப்ப…  கார்த்திக் போயிட்டான்….. திரும்ப சண்டை போட்டுகிட்டாங்க……. பேசிக்கிட்டாங்க…. அப்புறம் எலெக்ஷன்ல நின்னா…..”,

“சரி, கல்யாணம் பேச உங்ககிட்ட சொல்லலாம்னு நான் நினைச்சபோ கார்த்திக் அரெஸ்ட் ஆகிட்டான்……”,

“நீங்க அவனை பரோல்ல எடுக்க அலைஞ்சிட்டு இருந்தப்போ…. பையித்தியம் மாதிரி அவன் பேரை சொல்லிட்டு உளர்றா…. அடுத்த நாளே தெளிவாயிட்டா…… இப்படி பண்ணுவான்னு நானே எதிர் பார்க்கலை…….”, என்றார் வீரமணியிடம் இருந்து மறைத்து விட்ட குற்ற உணர்ச்சியோடு.

“யோசிச்சு பாரு தெய்வா? என்ன பண்ணிவெச்சிருக்கா இந்த பொண்ணு……. ரகசிய கல்யாணம்ன்ற மாதிரி வெளில தெரிஞ்சா எவ்வளவு கேவலம்…. வெளிலயும் சொல்ல முடியாது….. இவ்வளவு சின்ன வயசுல மத்திய அமைச்சர் ஆகற வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்……”,

“எவ்வளவு பெரிய பதவி…..?”,

“அவ தான் நான் பார்த்துக்கறேன்……. பதவிக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு சொல்லியிருக்கால்ல…… பார்போம் விடுங்க…..”,  

என்ன தான் தெய்வானை சொன்னாலும் வீரமணியால் சக்தியின் செய்கையை ஒப்புக்கொள்ள முடியவில்லை… இதுவரை அவர் எதற்கும் அதட்டி பேசியிராத செல்ல மகள்…. இப்போது போய் அவளிடம் என்ன அதட்டி உருட்டி மிரட்டவா முடியும்.

சக்தி அடுத்த நாளே டெல்லி கிளம்பினாள்…. கூட வாசுகியை அழைத்துக் கொண்டு…. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய தோற்றம் எப்பொழுதும் போல இருந்தது….. அவள் உடை வித்தியாசப்பட்டது…… மஞ்சள் கயிறு வெளியே தெரியாமலிருக்க….. க்ளோஸ் நெக் காலர் வைத்து சுரிதார் அணிந்திருந்தாள்.  

பத்ரிநாத் மகளை அனுப்ப ஒப்புக்கொள்ளவேயில்லை…. வைஷ்ணவி ஒரே அழுகை ஆர்ப்பாட்டம்….. “மா! நீ போகக் கூடாது”, என்று……

சக்தி விடவேயில்லை…. “நீங்க கார்த்திக்கை இதுவரை படுத்தினது எல்லாம் போதும்…… கொஞ்சம் உங்க வீட்ல இருந்து அவனுக்கு விடுதலை குடுங்க…”,

“அவங்கம்மா இங்க இருக்குற வரைக்கும் அவங்கப்பாவை பேசுவீங்க……. மேல, மேல, அவங்கப்பாவுக்காக அவன் ஏதாவது செய்ய துணிஞ்சு சிக்கல்ல மாட்டிக்குவான்….”,

“உங்க பக்கமிருந்து நீங்க பேசறது நியாயமா இருக்கலாம்…. ஆனா நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையலைன்னா அடுத்தவங்களை திட்டிகிட்டே இருக்க கூடாது… நடக்கறதுகெல்லாம் மத்தவங்களை காரணம் காட்டக் கூடாது”,

“உங்களுக்கு புத்தி சொல்ற வயசோ? அனுபவமோ? எனக்கு கிடையாது….. எனக்கு தேவையெல்லாம் கார்த்திக்கோட நிம்மதி மட்டும்தான்….. நீங்க அவங்கப்பாவை பத்தி ஒரு வார்த்தைக் கூட பேசக் கூடாது…”,

“இறந்து போயிட்டார் அவர்…… இத்தனை வருஷமா ஒவ்வொரு விஷயத்துக்கும் அவரை பிடிச்சு இழுப்பீங்களா நீங்க….. இப்போ வாசுகிம்மாவோட தற்கொலை முயற்சிக்கு கூட நீங்க தான் காரணம்…….”,

“அப்படியா உங்களையும் பிரபுவையும் பிரச்சினையில கார்த்திக் மாட்ட விட்டுடுவான். அவன் உயிரே போனாலும் எல்லாத்தையும் தூக்கி அவன் தலைமேல தான் போட்டுக்குவான்…. தாத்தா பிரபுன்னு கிடையாது…. யாரையுமே அவன் மாட்ட விட மாட்டான்”,

“அவனை புரிஞ்சிக்க முடிஞ்சா புரிஞ்சிக்கங்க! உங்க பொண்ணா இவங்க இவ்வளவு நாள் இருந்தது போதும்… கார்த்திக்கோட அம்மாவா இருக்கட்டும்…. நான் கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி பிடிவாதமாக அவரை அழைத்துக் கொண்டாள்.

“உன்னை பார்த்துக்கவே ஒரு ஆள் வேணும்! நீ அவங்களை பார்த்துக்குவியா…. கார்த்திக் கூட இருந்தா அது வேற பேச்சு…. அவங்க வேற டிப்ரஷன்ல இருக்காங்க….. அங்க வந்து மறுபடியும் ஏதாவது ட்ரை பண்ணிடாங்கன்னா….. வேண்டாம் சக்தி!”, என்று தெய்வானை கூட ஆட்சேபித்தார்.

“அம்மா! எதுவும் சொல்லாத! ப்ளீஸ்…. ப்ளீஸ்…. ஐ வில் மேனேஜ்!”, என்று அவரை கொஞ்சி கெஞ்சி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து…..

விமானத்தில் ஏறிய போது… “ஷ், ஹப்பாடா”, என்று ஆகிவிட்டது.

அவளும் வாசுகியும் மட்டுமே சென்றனர்….. செல்வம் காலேஜ் வேலை இருக்கிறது ஒரு வாரத்தில் வருகிறேன் என்று இருந்து கொண்டான். 

அவர்கள் தனியாக செல்கிறார்கள் என்று வீரமணியும் தெய்வானையும் கிளம்ப….. “அம்மா வேண்டாம்மா….. வாசுகிம்மா அன்நீசியா பீல் பண்ணலாம், முதல்ல என்கூட கொஞ்ச நாள் பழகட்டும்”, என்று சொல்ல…..

தெய்வானைக்கு மிகுந்த கோபம் தான்….. இருந்தாலும் சக்தியின் வார்த்தையை மதித்து அவர் கூட செல்லவில்லை. அப்போதும்….. “தோ பாரு! அவங்களை அம்மான்னு கூப்பிட ரெண்டு பசங்க இருக்காங்க……. என் பொண்ணு என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடனும், அவங்களை அத்தைன்னு கூப்பிடு”, என்று மிரட்டி அனுப்பி வைத்தார்.      

செல்வம் செல்லாததற்க்கு காரணம், கார்த்திக்கும் செல்வமும் தான் மெடிக்கல் காலேஜ் அப்ரூவளிற்காக நூறு சீ பேசி ஏற்கனவே அட்வான்சாக ஐம்பது சீ கொடுத்து இருந்தனறே…. அந்த வேலையை கொஞ்சம் பார்க்க வேண்டி இருந்தது….. எப்போது அவர்கள் இன்ஸ்பெக்ஷன் வருவார்கள் என்பது போல…. நிறைய வேலைகள் அணிவகுத்து இருந்தன.

சக்திக்கு தெரியாமல் வேறு செய்ய வேண்டுமே அந்த பதட்டம் வேறு செல்வத்திற்கு.

சக்திக்கு அப்போதைக்கு வாசுகியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்….. கொஞ்சம் கார்த்திக்கின் மனவேதனையை குறைக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது.

இதில் கார்த்திக்கின் நினைவுகள் கூட அதிகமில்லை…. ஆனால் அவளுக்கு தெரியவில்லை…. தான் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் கார்த்திக்கின் மனவேதனையை அதிகப்படுத்தி விட்டோம் என்று.

சக்தி வாசுகியை எந்த குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்….. அமைச்சகத்தில் போய் வேலைகளை சரியாக செய்ய வேண்டும்……. கங்காதரனை வேறு பதவி மாற்றம் செய்துவிட்டோம்…. அவனுக்கு தான் தான் காரணம் என்று தெரிந்திருக்குமா…. அவன் என்ன ஏது என்று தன்னிடம் கேள்வி கேட்பானா…. இப்படிப்பட்ட சிந்தனையிலேயே இருந்தாள்.

புதிய சூழ்நிலையை பழக தயாராகி கொண்டிருந்தாள்.

ஆனால் கார்த்திக்கின் நினைவு முழுவதும் இப்போது சக்தி! சக்தி! சக்தியே.. இத்தனை நாட்கள் எப்படியோ… இனி சக்தியை பிரிந்திருப்பது என்பது ஆகாத காரியம் என்று மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது…… ஒரு நாளைக் கடப்பதற்குள்ளாகவே சிரமப்பட்டு விட்டான்.

யாரவள் என்று தெரியாத அந்த பதின் வயதில் ஒரு நிமிஷமே பார்த்த அந்த காரிகைக்காக…. ரத்தம் வரும் அளவிற்கு அடிவாங்கி ரோடில் அனாதையாக மயங்கிக் கிடந்தவன்……

யாரவள் என்று தெரியாமல் அவளுடன் பழகிய அந்த ஒரு வார ஹாஸ்பிடல் வாழ்க்கையை இன்று வரை பொக்கிஷமாக நினைவில் வைத்திருப்பவன்….

அவள் யாரென்று தெரிந்த பொழுது விலகுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டிருந்தவன்….

அவள் நீ வேண்டும் என்று சொன்னபோதும் வேண்டாம் என்று ஒதுங்கியவன்….

இப்போது அவளாக திருமணத்திற்கு பிடிவாதம் பிடித்த போதும் முழு மூச்சாக அதை எதிர்த்தவன்…..

அவளின் பிடிவாதத்தின் முன் வேண்டா வெறுப்பாக தோற்று போனவன்….

இப்போது அவளிடம் விரும்பியே தோற்றுப் போக விரும்பினான்……

உடலின் ஒவ்வொரு செல்லும் இப்போது சக்திக்காக ஏங்கியது…..        

அடுத்த நாள் இரவு எப்பொழுது வரும் அவளுடன் பேசவேண்டி காத்திருந்தான்.

சக்தி அன்று மாலை தான் டெல்லி வந்து சேர்ந்திருந்தாள்…. அவளுக்கான பங்களாவிற்கு அன்று தான் வந்தாள்.

அதை சுற்றி பார்த்து…. ஆட்கள் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தாள்….. பந்தோபஸ்திற்கு இரண்டு காவலர்கள்…… வீட்டு வேலைக்கு ஒரு ஆள் சமையலுக்கு ஒரு ஆள் என்று இருந்தனர். என்ன எல்லோரும் ஆண்கள்……. மத்திய வயதில் இருந்தனர்.

சீக்கிரம் யாரவது பெண்ணை வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.   

இல்லையென்றால் தான் வெளியே சென்று விட்டால் வாசுகிக்கு பொழுது போகாது என்று நினைத்தாள்…..

வாசுகிக்கும் அவளிற்கும் அவளே தான் ரூம் தயார் செய்தாள்….. இரண்டு பேரின் ரூமிற்குள்ளும் வேலையாட்கள் வரவேண்டயது இல்லை என்பது தான் அவளின் முதல் சொல்லாக இருந்தது.

தனியாக சமாளிக்க மனம் சற்று பயந்தது…. முதலில் என்றால் செல்வம் கூட இருந்தான்… இப்போது அவள் மட்டும்……. எல்லாம் அவளாக செய்ய வேண்டும்….. செல்வத்தை அழைத்து வந்திருக்க வேண்டும்….. காலேஜ் வேலையை அவன் இருந்து பார்க்க வேண்டும் என்று என்ன????? வேறு யாராவது பார்க்க மாட்டார்களா……..

அவளுமே கார்த்திக்கின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்…..

போனை கையில் வைத்து அமர்ந்திருந்தவளை அதிகம் காத்திருக்க வைக்காமல்…. அன்று பதினொரு மணிக்கே தொலை பேசி அடித்தது….

“சக்தி”, என்ற கார்த்திக்கின் குரல் கேட்டதுமே…  கார்த்திக்கை பேச விடாது சக்தி தான் வாசுகியை அழைத்துக் கொண்டு டெல்லி வந்துவிட்டதை சொல்ல……

“என்ன எங்கம்மாவை கூட கூட்டிட்டு வந்துட்டியா”, என்றான்  ஒரு மாதிரி குரலில்….

“ஏன் கார்த்திக்? நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கிறியா”,

“அம்மா இருக்க மாட்டாங்க சக்தி”, என்றான்.

“ஏன்?”,

“அவங்க என்னை விடவும் வைஷ்ணவி, பிரபு, சுமித்ராவோட ரொம்ப க்ளோஸ்… அதுவும் வைஷ்ணவி ரொம்ப செல்லம்….. அப்பாவும் கூட இல்லை…. நானும் கே ஜி ல இருந்தே ஹாஸ்டல்….. அப்புறம் வீட்டை விட்டு வந்துட்டேன்……. அவங்க வைஷ்ணவியோட ரொம்ப அட்டாச்மென்ட்…… விட்டுட்டு இருக்க மாட்டாங்க…….”,

“ஒரு ரெண்டு நாள் இருப்பாங்க…… அப்புறம் போறேன்னு சொல்லுவாங்க பாரேன்”, என்றான். 

“ஒஹ்! நான் உங்க தாத்தா கிட்ட கொஞ்சம் பேசி கூப்பிட்டுகிட்ட வந்தேன்….”,

“அதுக்கெல்லாம் பீஃல் பண்ணாத…. அதெல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்கு…. அதுக்கெல்லாம் எங்க தாத்தா கொஞ்சம் கூட அசர மாட்டார்…. அவர் செய்யறதை தான் செய்வார்…….”,

“என்ன கார்த்திக் இப்படி சொல்லிட்ட? நான் என்னவோ வீர தீர பராக்கிரமம் எல்லாம் செஞ்சு உங்கம்மாவை காப்பாத்திக் கூட்டிட்டு வந்திருக்கேன்னு நினைச்சா… நீ இப்படி பொசுக்குனு சொல்ற……”, என்று சிணுங்கினாள்.

கார்த்திக் சிரித்தான்…..

“எங்க வீடு அப்படிதான்…….. எங்க அம்மாவை நம்பி நீ இறங்கியிருக்க வேண்டாம்! என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்….”,

“நான் உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு நினைச்சேன்…….”,

“சரி விடு! போறேன்னு சொன்னா அனுப்பிடு…… வைஷ்ணவியை மிஸ் பண்ணுவாங்க”,

“நான் எங்கம்மாவை வேற ரொம்ப சமாதனப்படுத்தி கூட்டிட்டு வந்தேன்…. அப்போவும் அம்மா சொன்னாங்க, கார்த்திக் இல்லாத சமயத்துல வேண்டாம்னு நான் கேட்கலை”,

“யார்? யார் இருக்கீங்க அங்க…….?”,

“நானும் வாசுகிம்மாவும் மட்டும் தான்!”,

“என்ன சக்தி இப்படி தனியாவா வருவ….”, என்று கோபப்பட்டான்.

“அம்மாவும் அப்பாவும் வர்ரேன்னு தான் சொன்னாங்க….. நான் தான் அங்க காலேஜ்ல பில்டிங் வேலை நடந்துட்டு இருக்குன்னு விட்டுட்டு வந்தேன்…”,

“ப்ச்! இப்படி யாரவது செய்வாங்களா…. செல்வம் என்ன செய்யறான்…”,

“மெடிக்கல் காலேஜ் அப்ரூவள்க்கு இந்த வாரம் இன்ஸ்பெக்ஷன் வர்றேன்னு சொன்னாங்க…. முடிஞ்சதும் வர்றேன்னு சொன்னான்”,

கார்த்திக்கிற்கு இப்போது அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் போய் தனியாக இருக்கிறாள் என்ற கவலை வந்துவிட்டது.

அந்த கவலையில் இன்னும் ஐம்பது சீ கொடுக்க வேண்டும் என்பது பின்னுக்கு போய்விட்டது.

“இனிமே என்கிட்டே கேட்டுட்டு எதுவும் செய் சக்தி….. இப்படி தனியா போகலைன்னா என்ன? ஐயா ப்ரீ ஆனதுக்கு அப்புறம் இல்லை செல்வம் வந்ததுக்கு அப்புறம் நீ போயிருக்கலாம்…..”,

“அச்சோ! என்ன கார்த்திக் நீ! நான் என்ன சின்ன பொண்ணா? யு நோ நான் அமைச்சர்… என்னை சுத்தி பாதுக்காப்புக்கு எத்தனை பேர் இருக்காங்க…. ஐ ஹேவ் எஸ்கார்ட்ஸ்……. ஒரு நாலஞ்சு நாள் தானே செல்வம் வந்துடுவான்…”,

“என்ன தான் பாதுக்காப்புக்கு ஆள் இருந்தாலும் புது இடம்…..”,

“நிறைய எனக்கு தெரிஞ்சவங்க கட்சியில இருக்காங்கப்பா”,

“அவங்களை எல்லாம் நம்ப முடியாது சரியா…….. யாரை நம்பி எந்த வேலையும் செய்யாத….. அப்புறம் பெர்சனலா யார்கிட்டயும் பேசாத….”,

“போ! நீ என்னை இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே ட்ரீட் பண்ற….. நான் எல்லாம் பார்த்துக்குவேன்”, என்று பெரிய மனுஷி போல சொல்லி போனை வைத்தாள்.

சக்தியின் கவலையில் அவளை காண வேண்டும் என்று இதயம் துடிப்பதை சொல்ல அவனுக்கு சந்தர்ப்பமே இல்லை….

இவள் எதுவும் விளையாட்டு பெண்ணாக செய்து விடக் கூடாதே….

மீண்டும் அவளின் நினைவுகளுடன் அடுத்த நாளின் இரவை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை கார்த்திக்கிற்கு……          

சக்தி அடுத்த நாள் அமைச்சகத்திற்கு சென்றாள்…. அங்கே கண்ணை கட்டி காட்டில் விட்டது போல தான் இருந்தது அவளுக்கு…..

சில கோப்புகள் அவளின் பார்வைக்கு வந்த போது அவள் சற்றும் கூச்சமே படவில்லை……. கங்காதரனை அழைத்து என்ன ஏதென்று கேட்டு…. எப்படி பார்க்க வேண்டும் என்று கேட்டாள்.

சக்தி கேட்ட விதம் கங்காதரனுக்கு அவள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொடுத்தது…. அமைச்சர் என்ற பந்தா இல்லாமல், “சர்”, என்று மரியாதையுடன் அழைத்து ஒரு கற்றுக்கொள்ளும் மாணவியின் முறையோடு தான் கேட்டாள்.

மிகுந்த சிரத்தையோடு புரிய வைத்தான் கங்காதரன். யார் என்ன சொன்னாலும் கேட்டாலும்….. கங்காதரனிடம் ஒரு வார்த்தை கேட்டே செய்தாள்.

கங்காதரன் கூட கேட்டே விட்டான், “என்ன மேடம்? என்னை இப்படி நம்பறீங்க…. நான் ஏதாவது தப்பா சொல்லிக்குடுத்துட்டேனா…”,

“நீங்க செய்ய மாட்டீங்க….. எல்லோரையும் நான் நம்பறதில்லை….. ஆனா உங்களை நம்பறதுல எனக்கு பயமில்லை”, என்று சிரித்தாள்.

அவள் சிரித்து பேசவும், கங்காதரன் நேரடியாக கேட்டான்…. “மேடம்! என்னோட இந்த திடீர் ட்ரான்ஸ்பர்…… என்ன காரணம்….?”,

சக்தி சற்றும் யோசிக்கவில்லை…….. “உங்களை மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி என்கூட இருந்தா என்னால சிறப்பா செயல்பட முடியும்ன்னு நினைச்சேன்….”,

“அதுதான் காரணமா…..”,

“ம், வேற என்னன்னு நீங்க நினைக்கறீங்க”, என்று சக்தி அவனிடமே விஷயத்தை வாங்க முற்பட….. இப்போது கங்காதரனுக்கு சிரிப்பு வந்தது.

“நானும் கிருஷ்ணகிரி கலெக்டர்…… நீங்க அதோட எம் பீ! கொஞ்ச நாள் கிரானைட் பிசினெஸ்ல இருந்திருக்கீங்க…. நான் க்ரானைட்ல ஊழள்ன்னு ரிப்போர்ட் பண்ணியிருக்கேன்”, 

“ம்கூம்! நான் க்ரானைட்ல இல்லை, அப்பா”, என்றாள்.

“சரி உங்கப்பா! என்னோட ட்ரான்ஸ்பர்க்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா……”,

“இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்….. ஆனா உங்க மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி என்கூட இருக்கறதை நான் நிச்சயம் விரும்பறேன்”, என்றாள்.

“அதுக்கு தான் அன்னைக்கு சாரி சொன்னீங்களா?”,

ஒரு புன்னகை மட்டுமே பதில்..

அன்று இரவு கார்த்திக்கிடம் நடந்தது அனைத்தையும் ஒப்பித்தாள்……

“அம்மா! தாயே! கார்த்திக் தான் கடத்தினான்னு சொல்லாம போனியே! உனக்கு ரொம்ப புண்ணியம்……”, என்றான்.

“அப்படியா நான் உன்னை மாட்ட விடுவேன்…”, என்று சிரித்தவள்…….. “அதை விடு! ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்! உன்னை கேட்காம செல்வத்தை கேட்க கூடாதுன்னு தான் வெயிட் பண்றேன்”,

“என்ன?”,

“நீ கேட்டேன்னு ஐம்பது சீ ஒரு பைனான்ஷியர்கிட்ட கேட்டிருக்கான்….. எங்க பாஸ் வந்ததுமே திரும்ப குடுத்துவார்ன்னு உறுதி குடுத்திருக்கான்…… அவர் குடுக்கறதுக்கு முன்னாடி அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கார்….. அப்பா என்கிட்டே சொன்னாங்க……  நீயா கேட்க சொன்ன……”,

கார்த்திக் கேட்க சொல்லவில்லை…..  ஆனால் அனுமானித்தான் மெடிக்கல் காலேஜ் அப்ரூவளிற்காக கேட்டிருப்பான் என்று…. ஏதாவது அவசரமாக கொடுக்க வேண்டியிருந்திருக்கும்…. கார்த்திக்கிடம் பேச நேரம் இருந்திருக்காது என்று…..

“இப்போ என்ன பணம் செல்வத்துக்கு போய் சேர்ந்துச்சா இல்லையா……”,

“அப்பா செல்வதுக்கிட்ட கேட்டிருக்காங்க…… நீ தான் கேட்க சொன்னேன்னு அப்பாகிட்ட சொல்லியிருக்கான்…… அதை ஏன் வெளில கேட்கனும் நான் குடுக்கறேன்னு அப்பா சொல்லியிருக்காங்க….. இல்லை  பாஸ் வெளில தான் வாங்க சொல்லியிருக்காங்கன்னு செல்வம் சொல்லியிருக்கான்… எதுக்குன்னு கேட்டாலும் சொல்லலை….. அப்புறம் அப்பா குடுக்க சொல்லிட்டாங்க……”,  

“நீ தான் பணம் கேட்க சொன்னியா?”,  

“ம்! நான் தான் கேட்க சொன்னேன்”,

“எதுக்கு அவ்வளவு பணம்?  என்கிட்டே கேட்காம எதுக்கு வெளில கேட்க சொன்ன……”, என்றாள் அதிகாரமாக.

“நீ இப்போ கேட்டயில்லையா எதுக்குன்னு….. அதுக்கு தான் உன்கிட்ட கேட்கலை……”,

“ஏன்? எதுக்குன்னு நான் கேட்க கூடாதா…. அப்படி என்ன எனக்கு தெரியக் கூடாத விஷயம்….”,

“எனக்கு யாருக்கும் கணக்கு சொல்லி பழக்கமில்லை சக்தி…..”,

“இது எப்படி கணக்கு கேட்கறது ஆகும்…… நீ ஸ்பாட்ல இல்ல….. உன் பேர சொல்லி இவ்வளவு பெரிய அமௌன்ட் செல்வம்  கேட்கறான்… எதுக்குன்னு கேட்க கூடாதா..”,

“நீ என்ன செல்வத்தை சந்தேகப்படறியா…..”,

“நிச்சயமா இல்லை….. நீ சொல்லாம அவன் செய்ய மாட்டான்னு தெரியும்….”,

“நீ இப்படி வெளில வாங்க வேண்டிய அவசியம் என்ன…… என்ன செஞ்சிட்டு இருக்க…… எதுக்கு அவ்வளவு பணம்….. மறுபடியும் ஏதாவது செஞ்சு சிக்கலை இழுத்து விட்டுக்காத”,

“எனக்கு தெரியும் சக்தி! என்ன பண்ணனும்? என்ன பண்ணக்கூடாதுன்னு….?”, 

“தெரிஞ்சா அதை என்கிட்டே மறைக்க வேண்டிய அவசியம் என்ன…. அவ்வளவு தைரியமானவனா இருந்தா உண்மையை சொல்லு”, என்று கார்த்திக்கை உசுப்ப…..

“அது மெடிக்கல் காலேஜ் அப்ரூவல்க்கு”, என்று உண்மையை சொல்லிவிட்டான்..

“என்ன?”, என்றாள் அதிர்ச்சியாக…… சக்தி இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

தான் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க அவளுக்கு தெரியாமல் இவ்வளவு வேலைகளா???

கரை காணாத கோபம் பொங்கியது……. 

“கார்த்திக்!”, என்று கோபமாக கத்தினாள்……

“உன்னை யாரு இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது…… நான் அவுட் ஆஃப் தி வே போய் எந்த வேலையும் செய்ய மாட்டேன்னு உன்கிட்ட சொல்லியிருக்கேன் தானே…. என்னை கேட்காம உன்னை யாரு இதை செய்ய சொன்னா……..”,

“உன் வேலையெல்லாம் இதுல காட்டாத…..”, என்றாள்…… அந்த வார்த்தை கார்த்திக்கை காயப்படுத்த…. 

“என்ன வேலை என் வேலை…..”, என்றான் நிதானமாக கார்த்திக்.

“அதான் இந்த லஞ்சம் கொடுத்து காரியத்தை நடத்திக்கறது….. என்னோட இன்ஸ்டிட்யூஷன்ல அப்படி நடக்கறதை நான் விரும்பலை….. முன்ன எப்படியோ இனிமே நீ இப்படி இருக்கிறதை நான் விரும்பலை”,

“ஏன் இப்போ என்ன?”,

“இப்போ என்னோட ஹஸ்பண்ட் கார்த்திக் நீ……”,

“ஒஹ்! நான் தான் உன்னோட ஹஸ்பண்ட்டா…. நீ என்னோட வைஃப் இல்லையா?”,

“நான் அந்த மீனிங்கள சொல்லலை கார்த்திக்….. உன்னோட நல்லது கெட்டது எல்லாம் என்னையும் சேரும்….”,

“என்னை கல்யாணம் பண்ணிக்கும்போது அது தெரியலையா”,

“அர்த்தமில்லாம பேசாத கார்த்திக்…. இதுவரைக்கும் எப்படியோ? இனிமே இந்த மாதிரி செய்யாதன்னா செய்யாத….. அதைவிட்டுட்டு நீ ஏன் இப்படி பேசற……”,

“நான் இப்படி தான் சக்தி……”,

“அப்போ எனக்கு……. என்னோட வார்த்தைக்கு எந்த  கன்ஷிடரேஷனும் இல்லையா……”,

“என்னால அவ்வளவு ஈஸியா மாற முடியாது…..”,

“அப்போ நீ மாற மாட்ட…..”,

“இந்த கார்த்திக் தானே உனக்கு பிடிச்சது….. இப்போ நான் மாறனும்னு ஏன் சொல்ற….”,

“எனக்கு நீ எப்படியிருந்தாலும் பிடிக்கும் கார்த்திக்! அதுக்குன்னு நீ மேல மேல தப்பு செய்வியா….. நீ செஞ்ச காரியத்தால தான் என் மனசாட்சிக்கு விரோதமா அந்த கலெக்டரை இங்க ட்ரான்ஸ்பர் பண்ணினேன்”,

“உன்னை நான் பண்ண சொல்லலையே… என் விஷயம் எனக்கு பார்த்திருக்க தெரியும்……”,

“ச்சே! ச்சே! உங்கிட்ட பேசறதே வேஸ்ட்….. எது எப்படியோ என் விஷயங்கள்ல இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாத….. அது என் காலேஜ்……. நான் பார்த்துக்கறேன்…… உன்னோட நியாய அநியாயங்கள் உன்னோட….. அதை என் வரைக்கும் கொண்டு வராத…….”,

கார்த்திக்கை இந்த வார்த்தை மிகவும் காயப்படுத்தியது……

அவனும் கோபமாக, “நான் வந்தன்னா என்கூட எல்லாம் தான் வரும் சக்தி…..”,

“வரக்கூடாது! நீ மாறனும்…”,

“நான் மாற முடியாது….”,

“இன்னும் எல்லாமே உன் இஷ்டம் தானா….. நீ மாறனும்…..”,

“கண்டிப்பா, மாற மாட்டேன்….”,

“அப்போ வராத…….”, என்று சொல்லி கோபத்தில் போனை தூக்கி எறிந்தாள்……