Advertisement

அத்தியாயம் நாற்பத்தி இரண்டு:

வாசுகியிடம், “உங்களை கூட அழைச்சுக்கறேன்”, என்று சொல்லி வந்துவிட்டால் சக்தி…. இருந்தாலும் கார்த்திக்கின் வார்த்தைகள் அவளுக்கு ஒரு எரிச்சலை கோபத்தை கொடுத்தது… மனம் என்ன முயன்றாலும் அதில் இருந்து வெளி வர மறுத்தது.

“நான் இல்லாம உனக்கு வாழ்க்கை இருக்கு……. நாம எல்லோரும் சூழ்நிலைக் கைதி…..”, இந்த வார்த்தைகளே அவளுள் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

இந்த மன உளைச்சல் ஆகாது என்று முடிவெடுத்தவள்…. இன்னும் தேர்தல் வெற்றிக்கு பின் அமைச்சராக பதவி ஏற்ற பின் கட்சியினரை சந்திக்கவில்லை என்பது ஞாபகம் வர…….. அந்த வேலைகளில் இறங்கினாள்.

கட்சியினரை சந்தித்து… அவளுக்காக வேலை செய்த எல்லோரையும் சந்தித்து நன்றி கூறினாள். “என்னுடைய அனுமதி இல்லாம என் பேரை உபயோகப்படுத்தி எந்த வேலையும் செய்யக் கூடாது”, என்று மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக கூறினாள்.

“எந்த உதவினாலும் என்கிட்டே வாங்க….. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்…. முடியலைனாலும் அதுக்கு பதிலா வேற ஏதாவது செய்ய முடியுமான்னு பார்கிறேன்…. ஆனா என் பேரை உபயோகப்படுத்தி நீங்க ஏதாவது காரியம் செஞ்சீங்கன்னாளோ… இல்லை செஞ்சு குடுக்கறேன்னு யார் கிட்டயாவது பணம் வாங்கினிங்கன்னளோ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்”, என்று எச்சரிக்கையாகவே சொன்னாள்.     

“பணத்துக்காக எந்த வேலையும் நடக்கறதை நான் விரும்பலை….. உங்களுக்கு அவசரத்துக்கு பண உதவி தேவைன்னா கேளுங்க, அதை கூட நான் செய்ய தயாரா இருக்கேன்…… என் பேரை உபயோகப்படுத்தி எந்த பண பரிவர்த்தனையும் இருக்க கூடாது…. நீ கட்சி பேரை சொல்லுவியோ, தலைவர் பேரை சொல்லுவியோ….. உன் விருப்பம்… என் பேரை மிஸ் யூஸ் பண்ண கூடாது……. நான் அமைச்சர் கிட்ட சொல்லி இந்த வேலையை செஞ்சி தர்றேன்னு பணம் வாங்கக் கூடாது”, என்றாள்.

சக்திக்கு தெரியும் அவளால் பெரிதாக இந்த மாதிரியான செய்கைகளில் எதுவும் செய்ய முடியாது என்று….. அவளால் முடியக் கூடியது எல்லாம் அவள் பேரை உபயோகப்படுத்தி யாரும் எதுவும் செய்யாமல் இருப்பதே……..

அவள் இப்படி சொன்னவுடன் கட்சியில் இருந்த சில பேர் உதவி என்று ஓடி வந்து நின்றனர்… உண்மையா என்று விசாரித்து… செய்யலாம் என்று தோன்றிய உதவியை உடனே செய்தாள்.

அவளுக்கு அது சற்று நல்ல பெயரை கொடுத்தது…..

“புதுசா வந்து இந்த பேச்சு பேசுது! இதுல அமைச்சர் வேற! இதுகிட்ட இருக்கு பணம் வேண்டாம்னு சொல்லும் என்கிட்டே இருக்கா என்ன? என்ன ரவுசு பண்ணுது…….  எல்லா இவங்களே சம்பாரிக்கனும்….. அடுத்தவன் எவனும் காசு பார்க்க கூடாது”, என்று பலரை முணுமுணுக்கவும் வைத்தது.

கார்த்திக் பரோலில் வரப் போகும் நாளுக்காக காத்திருந்தவள்…. அதுவரை வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்ல தொகுதி முழுவதுமே சென்றாள்.

கூட கட்சி ஆட்கள் மட்டுமே….. செல்வமோ வீரமணியோ இல்லை…… அவர்கள் தான் கார்த்திக்கின் பரோல் விஷயமாக சேலத்தில் இருந்தனர். அவர்களை வரவேண்டாம் என்று சொல்லி தனியாகவே சமாளித்தாள்.

தெய்வானையும் எதிலும் தலையிடவில்லை… அவள் கார்த்திக்கின் நினைவில் இருந்து வெளியே வந்தால் போதும் என்று நினைக்க…. அவளாவது கார்த்திக்கை மறப்பதாவது.

இதில் கங்காதரனோடு தொலை பேசியில் பேசி அங்கே அமைச்சக நிலவரங்களையும் தெரிந்து கொண்டாள்.

மொத்தத்தில் பிசியாக இருந்தாள்…. இரவில் கார்திக்கினோடு பேசுவதை தவிர்பதற்காக தூக்க மாத்திரை உட்கொண்டு தூங்கினாள்……

தெய்வானை மகளோடு உறங்கியதால் இரண்டு நாட்கள் கார்த்திக்கின் போனை அவர் தான் எடுத்தார். அதிலேயே தன்னோடு பேச சக்திக்கு விருப்பமில்லை என்று புரிந்த கார்த்திக் திரும்ப அழைக்கவில்லை.   

சிவா சுமித்ராவோடு சில முறை சக்தியை சந்திக்க முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை…. சக்தி அவ்வளவு பிசியாக இருந்தாள். 

சக்தி சில முடிவுகளோடு மனதை சமாதானமாக வைத்திருக்க…. கார்த்திக் தான் மிகவும் அல்லல் பட்டு போனான்.

சக்தியும் கோபித்துக் கொண்டு கார்த்திக்கினோடு பேசவில்லை…. அவன் சொன்னதில் அவனுக்கு எதுவும் தவறிருப்பதாக தோன்றவில்லை…… வேறு யாரோடும் அவனுக்கு பேச விருப்பமில்லை….. 

இந்த உளைச்சல்களில் மறுபடியும் கழுத்து வலி ஆரம்பித்து அது வேறு உயிரை வாங்கியது……..

செல்வமும் வீரமணியும் ஒருமுறை அவனை பார்த்து பரோலில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை கூறினர்.

இவனோடு அரெஸ்ட் ஆன மற்ற குவாரி அதிபர்கள் ஜாமீனுக்கு முயற்சி செய்து கொண்டிருக்க கார்த்திக் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  

ஒரு வார போராட்டதிற்கு பின் கார்த்திக் பரோலில் செல்ல அனுமதிக்கபட்டான்…. 

அதிகாலையிலேயே அவனை போலீசார் போலிஸ் வேன் மூலமாக….. கிருஷ்ணகிரி கூட்டி வந்தனர். ஹாஸ்பிடலில் அவனின் அன்னையை பார்த்துவிட்டு சில மணி நேரத்தில் திரும்ப கூட்டி வந்துவிடுவதாக ஏற்பாடு.

அவன் பாரோலில் வருவதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்….. ஏனென்றால் இன்னும் கிரானைட் ஊழல் செய்திகள் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் தான் இருந்தன… கார்த்திக்கை பற்றி பல பல செய்திகள் ஊடகங்களில் உலாவிய வண்ணம் தான் இருந்தது.

சக்தியின் நல்ல நேரமோ என்னவோ….. அவன் வீரமணியுடன் இருந்தான்….. வீரமணி இப்போதையை மத்திய அமைச்சரின் தந்தை என்பது மாதிரி தான் செய்திகள் உலாவின.

சக்தியை நேரடியாக யாரும் அவனோடு சம்மந்தப்படுத்தவில்லை….. அவன் தான் அதற்கான வாய்ப்புகளை என்றுமே கொடுத்தது இல்லையே……

அவன் பரோலில் வரும் விஷயம் வெளியே தெரியக் கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க சொன்னான் கார்த்திக்….

ஆனால் பத்திரிக்கைகள் எந்த நேரத்தில் எப்படி செயல்படும் என்று கணிக்க முடியாது… கார்த்திக் வரும் விஷயம் எப்படி கசிந்தது என்று தெரியவில்லை…

அவன் கிருஷ்ணகிரியில் ஹாஸ்பிடலை அடைந்த போது அவ்வளவு பத்திரிக்கையாளர்கள், டீ வீ சேனல்கள் கூட்டம்….

அவனை வேனை விட்டு போலிசார் இறக்கவேயில்லை…….

முதலிலேயே செய்தியாளர்கள் குழுமியதை அறிந்த சக்தி…… அது அவளின் ஹாஸ்பிடல் என்பதால் அவர்கள் யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி போலிஸ் பந்தோபஸ்திற்கு ஏற்பாடு செய்திருந்தால்…..

இப்போது பிரச்சனை என்னவென்றால் சக்திக்கு எப்படி உள்ளே போக பத்திரிக்கையாளர் கண்ணில் படாமல் என்று புரியவில்லை……

காலையிலேயே கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள்…… கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் வாழ்த்து தெரிவிக்க வீட்டிற்கே வந்துவிட அவளால் அசைய முடியவில்லை.

அன்று தெய்வானை கோவிலில் பூஜைக்கு கொடுத்திருக்க…. அவர் காலையிலேயே வீரமணியை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தார்….. பூஜையை முடித்துக் கொண்டு அப்படியே ஹாஸ்பிடல் போய்விடுவதாக சொல்லி சென்றனர்.   

சரியாக சக்தி கிளம்பும் நேரம் அந்த பிரமுகர் வந்துவிட சக்தியால் அசைய முடியவில்லை….. அவர் பேசி கிளம்பும் போது ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்க…. அதன் பிறகு சக்தி கிளம்புவோம் என்றால் அங்கே ஒரு பெரிய கும்பலே இருக்கும் செய்தி வர….  

சோர்ந்துவிட்டாள்….

போலீசிற்கு சொல்லி ஓரளவு ஒழுங்கு படுத்தி விட்டாள்….. இருந்தாலும்…. 

யார் போனாலும் பிரச்சனையில்லை…… அவள் சென்றால் அது தலைப்பு செய்தியாகிவிடும்…. அதற்காக கார்த்திக்கை பார்க்காமல் இருக்க முடியாது…..

சற்று நேரத்திற்கு மூளையே ஓடவில்லை…..

ஒருவழியாக பத்திரிக்கையாளர்களை கடந்து கார்த்திக் இருந்த வேனை சற்று ஹாஸ்பிடலின் வராண்டா உள் கொண்டு நிறுத்தினர்…….

அப்போதும் கார்த்திக் இறங்கி போகும் போது ஒரே பிளாஷ் லைட் மின்னல்….. வீடியோ ரெகார்டிங்…….. கார்த்திக் ஒரு மாதிரியான எரிச்சலான மனநிலைக்கு சென்று கொண்டிருந்தான்.

உள்ளே வந்தவுடனே, பத்திரிக்கையாளர் கண் பார்வையில் இருந்து மறைந்த உடனே எதிரில் வந்த செல்வத்திடம் எரிந்து விழுந்தான்… “இந்த கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டாம்னு தான் நான் யாரையும் பார்க்க வரவேண்டாம்னேன்….. நானும் ஜாமீனுக்கு அப்ளை பண்ணலை, எதுவும் பண்ணலை…….”,

“அவங்க கவனத்தை திருப்ப வேண்டாம்னு தான் எதுவும் செய்யலை… எங்கம்மா வந்து இப்படி செஞ்சு உயிரை எடுக்கறாங்க”, என்று அவனிடம் எரிந்து விழுந்தான்.

“பண்ணினது ஊழல்…… இதுல யாரும் இவரை போட்டோ எடுக்க கூடாதாம்”, என்று அருகில் வந்த கான்ஸ்டபள் மற்றொருவரிடம் மெல்லிய குரலில் சொல்ல…. கூட வந்த சப் இன்ஸ்பெக்டர் முறைத்தார்.

“யோவ்! அவரை எதுவும் நாம கேட்க கூடாது, கண்டுக்க கூடாதுன்னு சுளையா ஆளுக்கு ரெண்டு லட்ச ரூவா பேசியிருக்கோம்…  அவரை எந்த தொந்தரவும் குடுக்காம மறுபடியும் ஜெயில் கொண்டு போய் விட்டதுக்கு அப்புறம் தான் பணமே கைக்கு வரும்… அடக்கி வாசிங்கய்யா….. இதுக்கு தான் கத்துக் குட்டிங்க கூட கூட்டணி போடக் கூடாது”, என்றார்.

அதன் பிறகு அவர்களுக்கு காதும் கேட்கவில்லை… பார்வையிலும் எதுவும் படவில்லை….. வாயும் திறக்கவில்லை……

எப்போதும் பரோலில் வரும் கைதியை விட்டு இம்மியும் காவலர்கள் நகர கூடாது… எந்த காரணத்தை முன்னிட்டும்….

ஆனால் கார்த்திக் முன்னால் நடக்க….. இவர்கள் அவனை இடைவெளி விட்டு தான் தொடர்ந்தனர்……     

வாசுகியை தனியாக ஒரு ரூமில் வைத்திருந்தனர்…….. அந்தப் பக்கமே யாரையும் விடவில்லை…..

ஆனால் அவனின் குடும்பம் அங்கேயிருந்தது…… பிரபு, வைஷ்ணவி, சிவா, சுமித்ரா, வீரமணி, தெய்வானை என்றிருக்க…… கார்த்திக்கின் கண்கள் சக்தியை தேடியது அவளை காணவில்லை…..

கார்த்திக்கிற்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை…. “எதுக்குடா அத்தனை பேரும் நிக்கறாங்க”, என்றான் இன்னும் எரிச்சலாக….. அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது.

“மெதுவா பேசுங்க பாஸ், கேட்டுற போகுது”, என்று செல்வம் தான் அடக்கினான்.

“போடா”, என்றவன்……. “எங்கடா உன் மேடம்”, என்றான்…….

“அதான்  தெரியலை, ஒரு வேளை உள்ள ரூம்ல வாசுகி அம்மாவோட இருக்காங்களோ என்னவோ?”,

அருகில் வந்ததும் எல்லோரையும் பார்த்து பொதுவாய் ஒரு புன்னகை புரிந்தான்…..

தாடி வைத்த ஒரு சோகமான கார்த்திக்கை, ஏதோ தவறு செய்துவிட்டவன் போல வருவானோ என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு…… இப்படி கார்த்திக்கை எதிர் பார்க்கவில்லை……

நன்றாக நீட்டாக இருந்தது அவனின் உடை…. ஷேவ் செய்து முகத்தில் எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல்…. எப்போதும் பார்ப்பது போல தான் இருந்தான்.

பொதுவாக, “அம்மாவை பார்த்துட்டு வந்துடறேன்”, என்று உள்ளே புகுந்து கொண்டான். 

உள்ளே வாசுகியோடு ஒரு நர்ஸ் இருக்க…..  விரலைசைவில், “வெளிய போ”, என்றான்.

அந்த பெண்ணிற்கு ஒன்றும் புரியவில்லை….. “யார் நீங்க”, என்றாள் அந்த பெண்…

கதவை திறந்து தலையை வெளியேவிட்ட கார்த்திக்…. “நீ உள்ள இருக்காம இங்க வெளில என்ன பண்ற?”, என்று வைஷ்ணவியை பார்த்து அதட்டினான். 

வேகமாக வைஷ்ணவி உள்ளே போக…..  “அந்த பொண்ணை வெளில போக சொல்லு!”, என்றான்…….

அந்த பெண் சென்றதுதான் போதும்……..  வாசுகியை பார்த்து கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை……

“கார்த்திக்!”, என்ற வாசுகியின் அழைப்பிற்க்கும் அவரின் அருகில் செல்லவில்லை…..

“என்ன பண்ணின நீ? இது தான் நீ அம்மாவை பார்த்துக்கற லட்சணமா…. அவங்க இந்த மாதிரி பண்ற வரைக்கும் நீ என்ன பண்ணிட்டு இருந்த”, என்று கத்தினான்.

அவன் கத்தின சத்தம் வெளியே கேட்க அவசரமாக உள்ளே வந்தான் பிரபு…. “கார்த்திக்! அவங்க இப்படி செய்வாங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை”, என்று பிரபு சமாதானம் சொல்ல…

சற்றும் கார்த்திக் கேட்கவில்லை….. பிரபுவையும் சேர்த்து திட்டினான்……. “இவளுக்கு தான் எப்போவும் அறிவு வேலை செய்யாது… ஒன்னும் செய்யாது…… நீ எப்படி அலட்சியமா விட்ட…… நீ கவனமா இருந்திருக்க வேண்டாமா…. நான் அரெஸ்ட் ஆகி ரெண்டு நாள்ல இப்படி பண்ணியிருக்காங்க… அந்த ரெண்டு நாள் கூட உங்களால கூட இருந்திருக்க முடியாதா”, என்று பிரபுவையும் திட்டினான்.

பிரபு பதில் பேசாமல் அவன் திட்டிய திட்டுக்களை வாங்கிக் கொண்டான்.

சத்தம் கேட்டு தெய்வானை உள்ளே வந்தார், அவரை தொடர்ந்து வீரமணி…. சிவா சுமித்ரா என்று வந்தார்கள்.    

சுமித்ராவையும் விட்டேனா என்று கேள்வி கேட்டான். “எப்பவுமே வைஷ்ணவிக்கு பொறுப்பு கிடையாது…. ஏன் சுமித்ரா நீ வந்து அம்மாவோட ரெண்டு நாள் இருந்திருக்க கூடாதா…..”,

“அங்க தான் இருந்தா”, என்று சிவா பதில் சொல்ல…..

“இத்தனை பேர் இருந்துமா, கேர் லெஸ்ஸா இருந்தீங்க”,

“நான் பண்ணினதுக்கு ஏன் அவங்களை திட்டுற கார்த்திக்”, என்று வாசுகி இடைபுக….

“உங்களை திட்ட முடியாதுல்ல…… அதான் அவங்களை திட்டிட்டு இருக்கேன்”, என்றான்.

வாசுகி முகம் சுருங்க….. தெய்வானை வீரமணியிடம், “கார்த்திக்கை அமைதியா இருக்க சொல்லுங்க……. நீங்க சொன்னா தான் கேட்பான்”, என்று காதை கடிக்க…….

வீரமணி கார்த்திக்கிடம், “நடந்ததை பேசி என்ன பிரயோஜனம் கார்த்திக்….ஒன்னும் அசம்பாவிதம் ஆகலைல விடு……. இனிமே கவனமா இருப்பாங்க”, என்று சொல்லிக்கொண்டிருந்த போது……

வேகமாக சக்தி உள்ளே வந்தாள்…. அவள் கோஷா உடையில் இருந்தாள்….. முகம் வெளியே தெரியாமல் இருக்க…. கோஷா உடை அணிந்து…… அம்புலன்ஸ் வர செய்து அதில் வந்திருந்தாள்.

அவளை பார்த்ததும் இன்னும் டென்ஷன் ஏறியது கார்த்திக்கிற்கு…. யாருக்கும் தெரியாமல் இருக்க தான் அப்படி வந்திருக்கிறாள் என்று கார்த்திக்கிற்கு புரிந்தது…

“இப்படி என்னை ரிஸ்க் எடுத்து பார்க்க வரலைன்னா என்ன….. அப்படி என்ன என்னை பார்க்கனும்னு…… யாராவது பார்த்திருந்தா”, என்று அவளிடமும் எகிற………

ஏற்கனவே யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற டென்சனில் வந்திருந்தாள் சக்தி, எல்லோர் முன்னிலையிலும் இப்படி கார்த்திக் பேசியதும்….. கோபம் தலைக்கேற….

“வாயை மூடு….”, என்று கத்தினாள்.

“சும்மா எப்போ பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே….. உன் விஷயத்தை மட்டும் நீ பாரு! நான் என்ன பண்ணனும்…….. உன்னை ஏன் பார்க்கனும்……. இதெல்லாம் நீ சொல்லாத”, என்றாள்.

கோபத்தில் அவளின் முகமே சிவந்து விட்டது…

அவளுக்கு மிகுந்த கோபம் என்று கார்த்திக்கிற்கு புரிந்து விட்டது…… சற்று அமைதியானான்.      

“மா! வாங்க!”, என்று உடனே அவளின் அம்மாவை கூப்பிட்டுக்கொண்டு வெளியே போனாள்.

“சக்தி! இரு! சாரி!”, என்று கார்த்திக் அவசரமாக சொல்ல…..

“எதுக்கு வந்த? அம்மாவை பார்க்க தானே! முதல்ல அந்த வேலையை பாரு!”, என்றாள்.

பிறகு அம்மாவை கூப்பிட்டுக்கொண்டு ரூமை விட்டு போக….. எதுவும் செய்ய முடியாதவனாக கார்த்திக் வாசுகியிடம் போனான்.

தெய்வானை சென்றதும் வீரமணி பின்னோடு சென்றார்.

செல்வம் வெளியே தான் நின்றிருந்தான். கூட அந்த காவலர்களும், சப் – இன்ஸ்பெக்டரும்.

சாதாரண சுரிதாரில் இருந்த சக்தியை அமைச்சர் என்றா அவர்களுக்கு தெரியும். யாரோ ஒரு பெண் என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சேலத்தை சேர்ந்தவர்கள்… பேப்பரில் பார்த்திருந்தாலும்…. நேரில் அந்த உருவத்தை ஒப்புமை படுத்த முடியவில்லை.     

வெளியே வந்ததுமே, “அம்மா”, என்ற சக்தி… “எனக்கு உங்க சம்மதம் வேணும்!”, என்றாள்.

“எதுக்குமா…..”, என்று கேட்டவரிடம்…

கையில் ஒரு நகை டப்பாவை நீட்டினாள்……

தெய்வானை இப்படி இருக்கும் என்று யோசிக்கவேயில்லை….. வீரமணியும் அருகில் தான் இருந்தார்.

அந்த நகை டப்பாவை தெய்வானை திறக்க….. உள்ளே மஞ்சள் பூட்டில் கோர்த்திருந்தது தாலி……

“என்ன சக்தி இது”, என்று தெய்வானை பதற……

எட்டி பார்த்த செல்வம் தாலியை பார்த்தவுடன்….. “வாங்க சார்! டீ சாப்பிட்டுட்டு வரலாம்”, என்று காவலர்களை தள்ளிக் கொண்டு போனான். 

“அம்மா! உன்னை கேட்காம நானா இதை செஞ்சது தப்புதான்…… ப்ளீஸ் மா! எனக்கு நிம்மதியேயில்லை…. என்னால எந்த வேலையும் செய்ய முடியலை… செயல்பட முடியலை…. இவனை பத்தி நினைக்கக் கூடாதுன்னாலும் நினைக்காம இருக்க முடியலை…… இது எனக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுக்கும்னு நினைக்கிறேன்…. வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்க”, என்றாள்.

பேசி சமாதனப்படுத்தவோ……. சொல்லி புரியவைக்கவோ கூடிய நிலையில் சக்தி இல்லை என்று தெய்வானைக்கு புரிந்தது… “சம்மதம்”, என்ற வார்த்தை மட்டுமே அவளை உயிர்ப்போடு வைக்கும்….

அப்போதும் வீரமணிக்கு புரியவில்லை…. “என்ன தெய்வா தாலி…..”,

“கார்த்திக்கை இப்போ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றா”,

“என்ன”, என்றார் அதிர்ச்சியாக வீரமணி……. அவருக்கு கார்த்திக்கிற்கும் சக்திக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சனைகளே தெரியாது……

“கார்த்திக்கை பார்க்காதீங்க…….. அவனை பத்தி யார்கிட்டயும் பேசாதீங்க! இப்படியெல்லாம் சொல்லிட்டு….. இப்போ இது என்ன? எனக்கு புரியலை!”, என்றார்.

“ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இஷ்டம்”, என்றார் தெய்வானை.

“ஏன் தெய்வா என்கிட்டே சொல்லலை?…”,

“ப்ச்! என்னத்த போய் சொல்ல! ரெண்டு பேரும் உயிரை எடுக்கறாங்க…”, என்றார் தெய்வானை சலிப்பாக.

“அப்பா! நீங்க சொல்லுங்க சம்மதமா? இல்லையா?”, என்று இடைவெளி விட்டவள்…. “நீங்க சம்மதம் இல்லைன்னு சொன்னாலும் நடக்கும்பா….”,

வீரமணிக்கு ஒன்றுமே ஓடவில்லை……. இவ்வளவு பிடிவாதமான சக்தியை அவர் பார்த்ததே இல்லை….. அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டார்.

“இப்போ பண்ணினா பிரச்சனையாகும் சக்தி! அமைச்சர் பதவி கூட பறிபோயிடும்”,

“யாருக்கும் இப்போதைக்கு தெரியாதுப்பா…… தெரியவிட வேண்டாம்…..  எனக்கு அமைச்சர் பதவி முக்கியமில்லை…….. இருந்தாலும் அது உங்க கனவுன்னு எனக்கு தெரியும்….. உங்களுக்காக அது பறிபோகாம நான் பார்த்துக்கறேன் பா…..”,

“என் அரசியல் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன் பா”, என்று வாக்கு கொடுத்தாள்.

“எங்ககிட்ட பேசற சரி…… கார்த்திக் ஒத்துக்க மாட்டான்”, என்றான் தெய்வானை…..

“அவன் எப்படி ஒத்துக்காம போறான்னு நான் பார்க்கிறேன்”, என்றாள் கோபமாக…

“சக்தி! பொறுமையா செய்யலாம் மா!”, என்றார் தெய்வானை.

“முடியாது!”, என்று உள்ளே போனாள்.

வீரமணி கவலையாக மனைவியை பார்க்க……. “நம்மளால ஒன்னும் பண்ண முடியாது, கவலைப்பட்டு உடம்பை கெடுத்துகாதீங்க”, என்று வீரமணியை சமாதானப்படுத்த ஆரம்பித்தார் தெய்வானை…..

காவலர்களை விட்டு சற்று முன்னே வந்திருந்த செல்வம் எல்லாவற்றையும் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் …. சக்தியின் பிடிவாதம்… முடிவு…. “ஐயோ இந்த பாஸ் என்ன செய்ய போறாரோ தெரியலையே??”, என்று அவனின் மனமும் பதைத்தது.

சக்தி திரும்ப ரூமினுள் சென்ற போது…. கார்த்திக் அவனின் அம்மாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

இவர்கள் ஆளுக்கொரு பக்கம் நின்று கொண்டிருந்தனர்.

சக்தியின் முகத்தில் இருந்த தீவிர பாவனையை பார்த்த பிரபு, மறுபடியும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டாலும் போட்டுக் கொள்ளலாம் என்று அனுமானித்து…. மற்ற மூவரையும் வெளியே அழைத்துக் கொண்டு சென்றான்.

சக்தி, கார்த்திக் வாசுகியிடம் பேசும்வரை அமைதியாக இருந்தாள்.

பிறகு கார்த்திக்கை பார்த்து கை நீட்டினாள்…… அவள் கையில் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி இருக்க…..  

“இதை கட்டிட்டு போனா நீ திரும்ப வரும்போது நான் இருப்பேன்…. இல்லைனா அடுத்த டைம் உனக்கு பரோல் கிடைச்சு நீ வர்றதுக்காக எங்கப்பா வெயிட் பண்ணுவாரா இல்லை என்னை அடக்கம் பண்ணிடுவாரா என்னால சொல்ல முடியாது!”, என்றாள்.

அவளின் வார்த்தைகளை கேட்ட கார்த்திக்கின் கண்கள் ரத்தமென சிவக்க……. அவனே சக்தியை கொன்று புதைத்து விடும் பார்வை பார்த்தான்.    

“இதை கட்டிட்டா நீ உயிரோட இருப்பியா?”,

“ம்கூம்! நீ இல்லாம வாழ கத்துக்குவேன்! நீ இல்லைனாலும் என் வாழ்க்கையை நான் வாழனும்னு நீதான சொன்ன?”, என்றாள். 

“என்ன ப்ளாக் மெயில் பண்றியா… அடக்கம்…… இல்லாம வாழ கத்துக்குவேன் அது இதுன்னு சொல்லி…. எதுக்கு அப்படி? நானே கொன்னுடறேன் உன்னை!”, என்று கோபமாக அருகில் வர…….

“டேய்! கார்த்திக்!”, என்று வாசுகி கூட கத்தினார்.

ஆனால் சக்தி சற்றும் அசையவில்லை….. நீட்டிய கையையும் மடக்கவில்லை…. “ஓகே! அஸ் யு விஷ்”, என்றாள் எப்போதும் அவள் சொல்லும் வார்த்தையாக…..   

கோபம் இவளிடம் வேலைக்காகாது என்றுணர்ந்தவன்….. பொறுமையாக பேச ஆரம்பித்தான்.

“பாரு சக்தி… இத்தனை நாள் அப்பா யாரு அம்மா யாருன்னு கூட சொல்லாம அடையாளத்தை மறைச்சு வாழ்ந்துட்டேன்…. ஆனா அப்படி மனைவியை கூட அடையாளம் காட்ட முடியாம….. என்னால ஒரு வாழ்க்கை வாழ முடியாது”,

“இப்போதைக்கு நம்மளால கல்யாணம் பண்ணிக்க முடியாது….. என்னை பார்க்கவே நீ எப்படி ஒளிஞ்சு வந்திருக்க…. வெளில தெரிஞ்சா பத்திரிக்கைல எப்படி எழுதுவாங்கன்னு கூட சொல்ல முடியாது”,

“இப்போதைக்கு வெளில தெரியாம பார்த்துக்கலாம்….. அப்புறம் பிரச்சனை கொஞ்சம் ஓய்ஞ்சதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்”,

“உன்னோட அரசியல் வாழ்க்கையே கேள்வி குறியாகிடும்…..”,

“என் வாழ்க்கையே இங்க கேள்வி குறி? அப்புறம் எங்கயிருந்து வந்தது அரசியல் வாழ்க்கை??????”,

“பிடிவாதம் பிடிக்காத சக்தி”,

“உன் பிரச்சனை இப்போதைக்கு ஓயாது கார்த்திக்…. அதுவரைக்கும் என்ன ஏதுன்னு யோசிச்சு….. நீ எப்போ எது பேசுவேன்னு தெரியாம….. ஒரு வேளை திரும்ப விட்டுட்டு போயிடுவியா……. இப்படியெல்லாம் யோசிச்சு எனக்கு பையித்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு”    

“எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்”, என்றாள் நீட்டிய கையை நீட்டியபடியே….. பார்வையை சற்றும் விலக்காமல்…… அவள் பார்வை உரைத்த மொழிகள் பல….

எப்பொழுது உன்னை சேர்வேனடா

நான் தவிப்பது தெரியவில்லையா 

எதிர்பாரா நிகழ்வுகளில்
ஏங்கித் தவிக்கும் என் மனதின் ஓசைகள்
ஓங்கி உரைத்திடும் தனிமையில்

உறக்கமே இல்லாத பல இரவுகளிலும்
இரக்கமே இல்லாத உன் பெயரையே
ஓயாமல் உச்சரிப்பதால்
என் நினைவும் எனக்கு பகையாகி விடுகிறதே

 

ஊழிக் காற்றினில் சிக்கிய
கலங்கள் கரை காண்பதில்லை! 

உன் அண்மை இல்லாமல்

வாழ்வின் சுவையை உணர்ந்ததில்லை

வாழ்வின் தேவையை அறிந்ததில்லை

 

உன் நினைவினில் சிக்கி..
உன் உறவினை நினைந்து..
உன் காதலை சுவைத்தபின்  

மறந்திடல் தகுமோ???

 

கலைந்த புன்னகையோடு  ….
கலையாத உன்  நினைவோடு

கேள்வி கேட்டுநின்ற இடங்களில்
பதிலும் கேள்வி எழுப்பிட
கேள்வியற்ற பதிலாய் நின்றேன்
ஆனாலும் மறப்பேனோ உன்னை ???

 

“நீ என்ன சொன்னாலும் என் முடிவு மாறாது”, என்பது போல அவள் நிற்க… வேறுவழியில்லாமல் அவள் கைகளில் இருந்ததை எடுத்தவன்….

தெய்வானையையும் வீரமணியும் அழைத்தான்…… “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க”, என்றான் பரிதாபமாக……. “என்ன செய்யட்டும்”, என்று அவர்களிடம் சம்மதம் வேண்டினான்.

அவர்களிடம் சம்மதம் வேண்டியவன், அவனின் அம்மாவையும் ஒரு பார்வை அவரின் சம்மதம் வேண்டி பார்த்தான். 

யாருக்கும், “சம்மதம்”, என்ற வார்த்தையை சொல்வதை தவிர வேறு ஒன்றை சக்தி விட்டு வைக்கவேயில்லை.

தெய்வானை கலங்கிய கண்களை மறைத்தவாறு எல்லோரையும் உள்ளே அழைக்க…..

காவலர்கள் நேரம் ஆகிறது…. என்ன நடக்கிறது? ஏன்? எதற்கு? எல்லோரும் உள்ளே போகிறார்கள் என்பது போல எழ..

“சார்! ரெண்டு சொன்னனா? மூணு சொன்னனா? எனக்கு சரியா ஞாபகமில்லை!”, என்றான் செல்வம்.

“என்ன ரெண்டு, மூணு?”, என்பது போல அவர்கள் பார்க்க…

“அதான் சார், ரெண்டு லட்சமா? மூணு லட்சமா? நகையா? பணமா? இல்லை வேற எப்படி குடுக்க?”, என்று அவர்களை வாயடைக்க வைத்து உள்ளே சென்றான்.

அவர்களுக்கு குழப்பம் வந்துவிட்டது, “ஆளுக்கு ரெண்டு லட்சமா? இல்லை மொத்தமா மூணு லட்சம் சொல்றாங்களா”, என்று……   

நாள் பார்க்காமல்….. நட்சத்திரம் பார்க்காமல்……. நல்ல நேரம் பார்க்காமல்… யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தோடு…..

சற்றும் பயமில்லாத இரு மனங்களின் சங்கமம்…… திருமணம் என்ற அங்கீகாரத்தை  கொடுத்துக் கொண்டது.   

சக்தியின் மனதிலும் உற்சாகமோ சந்தோஷமோ எல்லாம் இல்லை…. தன்னுடையை திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தன் பெற்றோரின் ஆசைகளையெல்லாம் அவள் நிராசையாக்கியது மட்டுமல்லாமல்…… இந்த திருமணத்தை யாரிடமும் சொல்ல முடியாத ஒரு நிலையில் வைத்திருக்கிறோம் என்பது அவளுக்கு மிகுந்த வேதனையே.

இருந்தாலும் அவளுடைய போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது போல நிம்மதி…

கார்த்திக்கின் கைகள் அவளின் கழுத்தில் தாலி கட்ட…

காண்டீனில் இருந்து சிறிது அரிசியை விரைந்து எடுத்து வந்த செல்வம் அதில் மஞ்சளை பிரட்டி எல்லோர் கையிலும் கொடுத்தான்.

எல்லோரும் அட்சதை தூவ மூன்று முடிச்சை நிதானமாக அவளின் கழுத்தில் கட்டினான். 

சக்தியின் மனதின் போராட்டம் முடிய……. கார்த்திக்கின் போராட்டம் ஆரம்பித்தது. இதுவரை அவன் தனி ஆள், அவனின் செய்கைகள் அவனை மட்டுமே தார்மீக ரீதியாக பாதிக்கும்…….

இனி அப்படி அல்லவே……

அதன் பிறகு கார்த்திக்கும் சக்தியும் எதுவும் பேசிக்கொள்ளவேயில்லை…..

நடந்து முடிந்ததில் கார்த்திக்கிற்கு சற்றும் விருப்பமில்லை…. அவன் வாழ்க்கை எப்படியோ…… ஆனால் சக்தி, அவளின் திருமணம் இப்படியா நடக்க வேண்டும்….. அவன் மனமே அவனை கொன்றது……  

உடனே கிளம்பியும் விட்டான்…..

சக்திக்கு கண்களில் நீர் தளும்பியது…..

பார்த்திருந்த கார்த்திக் மனம் கனத்து திரும்பியும் பாராமல் சென்றான்……

விடை பெறுவது ஒன்றும்

அத்தனை சுலபமில்லை என் சகியே 

உன் விழிகள் சுமந்து நிற்கும்

கண்ணீரை கண்ட பின்..!!

 

எத்தனை ,எத்தனை ..

வார்த்தைகள் பேசிய

உன் உதடுகள் ….

ஊமையாய் நான் பேசும்

பலநூறு வார்த்தைகட்கும்

பதிலேதும் சொல்லாமல் ..

உன் மவுனமே சாட்டையாய்

இதயமெங்கும் நுழைந்து

என்னை முழுவதுமாய்

உருக்குலைத்து ….ஓங்கி

ஒலிக்கிறதே…..

கொஞ்சலாய் .கெஞ்சலாய் …

கதறலாய்…..மழலையாய் ..

கேள்வியாய்…பதில்களாய்……

 

என் வாழ்க்கை பிறர் வாழ நான் பிறந்தேனோ
பாசக்கயிறு கழுற்றை நெருக்குகிறது 

காலம் கனிந்து போகுமோ – இல்லை

கண்ணீரில் கழிந்து போகுமோ

சஞ்சலத்தில் மனமே ரணமாய்

 

சஹியே என் சகலமும் ஆனவளே

உனக்கான என் தேடலையும் தொலைத்து

உயிருள்ள ஜடமாய் நான் !!!  

Advertisement