Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஒன்று :

செல்வம் விரைந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தான்…

இங்கே ஹாஸ்பிடலில் வாசுகியின் நிலை சற்று தேறியிருந்தது… கண்விழித்து சுற்று புறம் பார்த்தார்…….. ஆனால் யாரிடமும் பேச விருப்பின்றி கண்களை முடிந்தவரை மூடியே வைத்திருந்தார்.

ஏன் தனக்கின்னும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைக்க வில்லை….. இன்னும் எனக்கென்ன பார்க்க இறைவன் வைத்திருக்கிறான் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது. 

பிரபுவிற்கு காலையில் சக்தியின் கலங்கிய முகத்தை பார்த்ததில் இருந்து மிகுந்த குற்ற உணர்ச்சியாக இருந்தது. செல்வம் சொன்னது உண்மை தானே சக்திக்கு இல்லாத அக்கறை கார்த்திக்கிடம் வேறு யாருக்கு அதிகமாக இருக்க கூடும்…….

வைஷ்ணவியையும் சிவாவையும் தாளித்து தள்ளி விட்டான். “நீங்க அப்படி போன் வெச்சிருக்க கூடாது சிவா… எனக்கு சக்தியை இப்போ கொஞ்ச மாசமா தான் தெரியும், ஆனா உங்களுக்கு அவங்களை எவ்வளவு நாளா தெரியும்…. இதுல உங்க ஃபிரண்ட்   அவங்க….”,

“இப்போ நம்ம அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கறதை விட்டுட்டு நாமளும் சேர்த்து டென்ஷன் குடுத்திருக்கோம்…. காலையில என்னால அவங்க முகத்தை பார்க்க முடியலை……. அழுது முகமெல்லாம் வீங்கி.. பேசவே முடியலை……… அப்போ கூட அவங்க என்கிட்ட முகத்தை திருப்பலை…..”,

“செல்வம் வந்து என்கிட்டே கேட்கிறான்…… அவங்க ரொம்ப பதட்டமா இருக்காங்க…. ஒரு தூக்க மாத்திரை குடுங்கன்னு….. அவனுக்கிருக்குற அக்கறை கூட நமக்கில்லாம போச்சு….”,   

“என்கிட்ட சண்டை போடறான்….. என் மேடம்க்கு இல்லாத அக்கறை தான் உங்களுக்கெல்லாம் என் பாஸ் மேலையான்னு? என்ன பதில் சொல்வேன் நான் அவன்கிட்ட…….”,

“சாப்பாடு, தூக்கம்னு இப்படி ஏதாவது உன் வேலை உங்கண்ணன் அரெஸ்ட் ஆகிட்டான்னு நின்னதா…….. அவங்களை எதுக்குடி பேசின…….  இன்னொரு தடவை இந்த மாதிரி நீ அதிகப் பிரசிங்கிதனம் பண்ணின கொன்னே போட்டுடுவேன்”, என்றான் வைஷ்ணவியை பார்த்து…..

“விடுண்ணா”, என்று சுமித்ரா சமாதானப்படுத்தினாள்….. இப்போது சிவாவிற்குமே  மிகுந்த குற்ற உணர்ச்சியாக இருந்தது….

“நம்ம போய் சக்தியை பார்த்துட்டு வரலாமா?”, என்றான் சுமித்ராவிடம்….

“இப்போ வேண்டாம் தூங்குவாங்க……. என்கிட்டே தான் செல்வம் தூக்க மாத்திரை வாங்கி கொடுத்தான்”, என்றான் பிரபு…

சக்தி உறக்கத்தின் பிடியில் இருந்தாலும் அவளின் ஆழ்மனதில் கார்த்திக்கின் ஞாபகமே….

தெய்வானை சக்தியை விட்டு அகலவில்லை…. உறங்கும் தன் மகளை பார்த்துக்கொண்டிருந்தார்….. சக்தி எப்போதுமே சற்று ஒல்லியான உடல் வாகு தான்….. இப்போது இன்னும் மெலிந்து தெரிந்தாள்…

அழுதழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது…… கண்களை சுற்றி இரண்டு நாட்களிலேயே கருவளையம் ஆரம்பித்து இருந்தது.     

பிதற்றிக்கொண்டிருந்தாள்….. என்னென்னவோ பேச்சுக்கள்……

“நான் போன் பண்ணியிருக்கனும்”,

“நீ என்னை நம்பலையா கார்த்திக்”,

“எனக்கு இது பிடிக்கலை வேண்டாம்”,

“மறுபடியும் நீ என்கிட்டே வரமாட்டியா”,

“ஐயோ! வக்கீல் பார்க்க போகனும்”,  என்று தூக்கத்தில் உடல் உலுக்கிப் போட்டது…. காய்ச்சல் வேறு இருந்தது……

அவளை மடியில் போட்டு அழுத்தி பிடித்துக் கொண்டார் தெய்வானை….. அவருக்கு மகளின் நிலையை பார்த்து அழுகை பொங்கியது…..  

மாலை வரையுமே இதே நிலைமை தொடர்ந்தது….. பயந்து விட்டார்…. யாரை கூப்பிடுவது என்று தெரியாமல் செல்வத்திற்கு அழைத்து யாராவது ஹாஸ்பிடலில் இருந்து டாக்டரை வர சொல்ல….

அவன் பிரபுவிடம் சொல்லி ஒரு லேடி டாக்டரை அனுப்ப சொல்ல…..   

லேடி டாக்டருடன் பிரபுவும் வந்தான்…..  எல்லா மருந்துகளையும் இஞ்செக்ஷன் மூலமாகவே செலுத்தினர்…… சிறிது நேரம் உட்கார்ந்தும் பார்த்தனர்….. சக்தியின் பிதற்றல் நின்று அவள் ஒரு மயக்கமான உறக்க நிலைக்கு செல்லவும்…… தான் கிளம்பினர்.

“எதுன்னாலும் என்னை எப்போன்னாலும் கூப்பிடுங்க…..”, என்று பிரபு நம்பர் கொடுத்தான்….. “நைட்ன்னு தயங்காதீங்க….. என்ன அவசரம்னாலும் கூப்பிடுங்க”, என்று சொல்லி சென்றான்.

வீரமணியும் செல்வமும் கார்த்திக் பரோல் விஷயமாக அலைந்து கொண்டிருந்தனர். அவர்கள் சேலத்தில் இருந்தனர்.

இரவுமே மகளை அணைத்தவாறே தான் தெய்வானை உறங்கினார்….. அவ்வளவு மருந்துகளின் வீரியம் இருந்த போதும்… சரியாக பன்னிரண்டு மணிக்கு எழுந்து அமர்ந்தவள் வேகமாக இறங்கி போனை தேடினாள்…..

சக்தியின் அசைவினால் எழுந்த தெய்வானை…. “என்ன சக்திம்மா தேடற?”, என்று அவசரமாக அவர் இறங்கி லைட்டை போட…..

“அம்மா என் போன் எங்கம்மா….?”,

“தெரியலை! நான் கவனிக்கலை! இரு பார்க்கிறேன்! நீ உட்காரு!”, என்றவர்.. “எதுக்கு”, என்றார்..  

“கார்த்திக் போன் பண்ணுவான்மா”, என்றாள்.

தெய்வானைக்கு சந்தேகமே வந்துவிட்டது, சக்திக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று…..

பொறுமையாக, “அவன் எப்படி சக்தி போன் பண்ணுவான், அவன் ஜெயில்ல இருக்கான்”,

“ஜெயில்ல இருந்து தான்மா பண்ணுவான்……. வார்டன் கிட்ட போன் வாங்கி பேசுவான்”, என்றாள்….

தெய்வானைக்கு அவள் உண்மை சொல்கிறாளா இல்லை மனவுளைச்சலில் சொல்கிறாளா தெரியவில்லை….

கலவரமாக பெண்ணை பார்த்தார்….  அவருக்கு என்ன தெரியும் கார்த்திக் சக்தியிடம் பேசுகிறான் என்று…..

தன் பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றே நினைத்தார்.

அதற்குள் போனை எடுத்திருந்த சக்தி…. அதில் சார்ஜ் இருக்கிறதா, ஏதாவது போன் வந்திருக்கிறதா என்று சரி பார்த்தாள்….. அவளால் மருந்தின் வீரியத்தில் நிற்க கூட முடியவில்லை…..

படுக்கையில் அமர்ந்தவள் பின்பு சரிந்து படுத்து கொண்டாள்… உடலில் செலுத்தியிருந்த மருந்துகள் அவளை தூக்கத்திற்கு கொண்டு போக முயல…… முயன்று கண்ணை திறந்து வைத்துக்கொண்டிருந்தாள்.

அவள் படும் சிரமங்களை பார்க்க முடியாமல்…. “நீ தூங்கு சக்தி! போன் வந்தா நான் எழுப்பறேன்!”, என்றார் தெய்வானை.

டபக்கென்று எழுந்து உட்கார்ந்தவள், “இல்லையே! எனக்கு தூக்கம் வரலையே!”, என்றாள்.

“சரி தூங்காத! அம்மா மடில சும்மா படுத்திட்டு இரு!”, என்று பேசி…. அவளை மடியில் சாய்த்துக்கொள்ள….. படுத்தவள் அன்னை மடியின் அணைப்பில் அவளையும் மீறி உறங்கிவிட்டாள்.

எங்கே அசைந்தால் எழுந்துகொள்வாளோ என்று சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தார் தெய்வானை… சற்று நேரத்தில் போனின் ஒலி கேட்க அவசரமாக எடுத்தார்.

“சக்தி”, என்று கார்த்திக்கின் குரல் கேட்கவும் தெய்வானைக்கு அழுகையே வந்துவிட்டது. சக்திக்கு எதுவுமில்லை, அவள் கார்த்திக் போன் செய்வதை நிஜமாக தான் கூறியிருக்கிறாள் என்றதும் அப்படி ஒரு நிம்மதி தெய்வானைக்கு.

“நான் சக்தி அம்மா!”, என்றார்.

சக்தி போன் எடுக்காமல் இருக்க மாட்டாளே……. இவர் ஏன் எடுத்திருக்கிறார் என்றதும் கார்த்திக்கிற்கு பயம் பிடித்துக் கொண்டது….. “என்னம்மா சக்திக்கு என்ன?”, என்றான் பதட்டமாக….

“உடம்பு சரியில்லை கார்த்திக்! பீவர்! இப்போ தான் கண் அசந்தா…”, என்றார்.

மேலே அவரிடம் என்ன பேசுவது என்று கார்த்திக்கிற்கும் தெரியவில்லை, அவருக்கும் தெரியவில்லை.

“நான் நாளைக்கு கூப்பிடறேன்மா”, என்று அவன் வைக்க போக….

“வெச்சிடாத கார்த்திக்”, என்றார் பதட்டமாக…… “என்னால இவளை சமாளிக்க முடியாது, அவளை எழுப்பறேன்! இரு! இரு!”, என்றார்.

“சக்தி”, என்ற அவரின் அழைப்பிற்கும் சிறு அசைவிற்கும் எழுந்தாள்….. “கார்த்திக்”, என்று அவர் போனை கொடுக்கவும்…

“கார்த்திக்”, என்றாள் போனில்….. அவளையும் மீறி அவளின் சோர்வு அவளின் குரலில் நன்கு தெரிந்தது.

“என்ன பண்ணுது சக்தி…. உடம்பு சரியில்லையா……”,

“இல்லையே! நான் நல்லா இருக்கேனே!”, என்றாள் முயன்று வரவழைத்த உற்சாகத்துடன்..

“பீவர்ன்னு தெய்வா மா சொல்றாங்க…..”,

அந்த நேரத்திலும் அம்மாவை திரும்பி பார்த்து முறைத்தவள்…… “இல்லை கார்த்திக்! ஒன்னுமில்லை… கொஞ்சம் டையர்ட்டா இருந்தது……. ஒரு கால்போல் போட்டேன்! அதான் அம்மா சொல்லியிருப்பாங்க….. எனக்கு ஒன்னுமில்லை!”,

“சரி உனக்கு ஒன்னுமில்லை…. பரோல் அப்ளை பண்ணிட்டாங்களா….. அம்மா எப்படி இருக்காங்க”, என்றான்.

முழித்தாள்…… காலையில் இருந்து மருந்துகளின் பிடியில் உறங்கிக்கொண்டு அல்லவா இருக்கிறாள்.. “ஐயோ! வக்கீல்  பார்க்கலையே!”, என்று மனம் பதைத்தது.

“அது கார்த்திக்! லாயர்?……. அம்மா?……”, என்று உளற…..

அவளிடம் இருந்து போனை வாங்கிய தெய்வானை…. “சக்தி அப்பாவும், செல்வமும், உன் பரோல் விஷயமா சேலம்ல தான் இருக்காங்க கார்த்திக்… பிரபு சக்தியை பார்க்க வந்திருந்தார், அப்போ உங்கம்மா நல்லா இருக்கிறதா தான் சொன்னார்”, என்றார்.

கார்த்திக்கின் மனதில் பாரம் ஏறிக்கொண்டது…. “இது எதுவும் தெரியாமல் சக்தி இருக்கிறாள் என்றால் அவளுக்கு நிஜமாகவே உடம்பிற்கு முடியாமல் தான் இருக்க வேண்டும்”, என்று.

“சரிம்மா!”, என்றவன்….. “சக்தி கிட்ட குடுங்க…..”,

அவள் போனை வாங்கியதும்…. “டென்ஷன் ஆகக் கூடாது…. உடம்பை பார்த்துக்கோ”, என்றான்.

“ம்ம்!”, என்றவள்….. “கார்த்திக்”, என்றாள் தயங்கி தயங்கி…

“என்னம்மா”, என்று அவன் கனிவாக கேட்கவும்…….

“இல்லை”, என்று இழுத்தவள்……….. “எத்தனை பிரச்சனை வந்தாலும் என்னை விட்டுட மாட்டியே………. மறுபடியும் என்னை விட்டு போக மாட்டியே”, என்றாள்…….

தெய்வானை  அதை கேட்டுக் கொண்டு தான் இருந்தார்….

“நீதான் சக்தி என்னை விடாம இருக்கனும்…..”,

“நானாவது உன்னை விடறதாவது”, சக்தியின் முகம் அந்த சோர்விலும் புன்னகையை பூசியது……. இருந்தாலும் மறுபடியும் கேட்டாள், “போயிட மாட்டியே”, என்று……

“ம்கூம்!”, என்றவன்…… “ஆனா நாம எல்லோரும் சூழ்நிலைக் கைதி சக்தி, எதுன்னாலும் ஏத்துக்கற மனப் பக்குவம் வேணும்….. நான் இல்லைனாலும் உனக்கு வாழ்க்கை இருக்கு சக்தி……”, என்ற வார்த்தையை சொன்னதுதான் போதும் சக்தியின் போன் பார்ட் பார்டாக போயிருந்தது…….

சக்தி அதை தூக்கி வீசியிருந்தாள்…….  கோபம், ஆத்திரம், அழுகை, எல்லாம் ஒரு சேர பொங்கியது சக்திக்கு கார்த்திக்கின் அந்த வார்த்தைகளில்….

“மறுபடியும் நான் இல்லைனாலும்னு சொல்றான்…..”,

“என்ன? என்ன சக்திம்மா?”, என்று தெய்வானை பதற…..

“ப்ச்! போம்மா!”, என்றவள் அழுகையோடு கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.  

கார்த்திக்கின் காதுகளில், “ங்கொய்”, என்று சத்தம்……

என்ன நடந்தது என்று தெரியாமல் மீண்டும் சக்தியின் போனிற்கு அழைக்க.. அது ஸ்விச் ஆஃப் என்று வரவும்….. தெய்வானைக்கு அழைத்தான்.

“என்ன ஆச்சும்மா”,

“நீ என்ன சொன்ன? அவ போனை தூக்கி போட்டு உடைச்சிட்டா..”,  

“அது சக்தி என்னை ரொம்ப டிபென்ட் பண்ற மாதிரி பேசினாங்க…. அதனால நான் இல்லைனாலும் வாழ்க்கை இருக்குன்னு சொன்னேன்”,

“நீ புரிஞ்சு பேசறியா? புரியாம பேசறியா? தெரியலை கார்த்திக்! அவ என்ன உன்னோட விளையாட்டு பொம்மையா…… ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன், அவ வாழ்க்கையில வர்ற மாதிரி இருந்தா மட்டும் திரும்ப வா….. இல்லைனா வராதன்னு…… அவகிட்ட இந்த வார்த்தை சொன்னா கோபம் வராதா…. அழுதுட்டு இருக்கா…..”,

“இருக்குற சிக்கல் போதாதுன்னு நீ ஏன் இன்னும் வாழ்கையை சிக்கல் ஆக்குற……. அவளை எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ண வைக்கிற”,

“உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா?”,

“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்! ஆனா உன்கிட்ட கோபத்தை காட்டினா சக்திக்கு பிடிக்காதே! நான் என்ன செய்யட்டும்! என்னவோ போ! காலையில இருந்து அவ உளறின உளறலை கேட்க முடியலை…..”,

“இப்போ என்ன செய்ய போறாளோ…..?”,

“அவங்க கிட்ட குடுங்கம்மா………”,

சக்தி வாங்கவேயில்லை…….  ஏன் அவள் இந்த உலகத்திலேயே இல்லை….. அவளின் காதுகளில் திரும்ப திரும்ப, “நான் இல்லைனா கூட உனக்கு வாழ்க்கை இருக்கு சக்தி”, என்ற வார்த்தையே ஒலித்துக்கொண்டே இருந்தது.         

எதுவரை என்றால் சக்தி இப்படி பிரம்மை பிடித்த மாதிரி அமர்ந்திருப்பதை பார்த்து தெய்வானை மீண்டும் பிரபுவிற்கு தொலைபேசியில் அழைத்து….. “டாக்டர்! என் பொண்ணு நைட் இருந்து ஒரு செகண்ட் கூட தூங்கலை! அவ தூங்கனும்! ஏதாவது தூக்க மாத்திரை குடுங்க! இல்லைனா இஞ்செக்ஷன் பண்ணுங்க!”, என்றார். 

பிரபு அங்கே போகிறான் என்று தெரிந்து…. வைஷ்ணவி, சுமித்ரா, சிவா மூன்று பேரும் உடன் வருகிறேன் என்க….. “நான் அங்கே டாக்டரா தான் போறேன்”, என்று அனைவரையும் மறுத்துவிட்டான்.

வாசுகி சற்று உடல் நிலை தெரியிருந்தாலும் ஐ சீ யு விலேயே இருந்தார். கார்த்திக்கிற்கு பரோல் கிடைக்க வேண்டி அவர் அங்கேயே வைக்கப் பட்டிருந்தார்.

பிரபு வந்து சக்தியை பார்த்து மருந்து மாத்திரைகள் கொடுக்கவும்… சக்தியும் எந்த மறுப்பும் சொல்லாமல் கொடுத்ததை எல்லாம் போட்டுக் கொண்டு நன்கு தூங்கி எழுந்தாள் சக்தி.    

இப்போது சற்று தெளிவாக உணர்ந்தாள்…… உடல் நிலையும் நன்றாக இருந்த மாதிரி தோன்ற…… வாசுகியை பார்க்க போனாள்…..

வைஷ்ணவியும் சுமித்ராவும் அங்கே இருக்கவும்…. ஒரு அறிமுகமானவர்கள் என்ற பார்வையை தவிர சக்தியிடம் வேறு பிரதிபலிப்பு இல்லை…. அவளின் பார்வையே அவர்களை விலக்கி நிறுத்தியது.

சகஜமாக அவர்களால் பேச முடியவில்லை…..

அவர்கள் முன்னிலையில் சக்திக்கு பேச இஷ்டமில்லை… “நான் வாசுகிம்மா கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்”, என்றாள்.

அவர்கள் வெளியேற….       

அவளை பார்த்ததும் வாசுகி….   “கார்த்திக் எப்படி இருக்கான்… யாருக்கும் அவனை பத்தி கேட்டா தெரியலை…..”,

“கார்த்திக் நல்லா இருக்காங்க! ஜெயில்ல இருக்காங்கன்றதை தவிர ஒரு குறையும் இல்லை! அவங்க என்ன செய்ய நினைக்கிறாங்களோ அங்க உட்கார்ந்துட்டு கூட அதை தான் செஞ்சிட்டு இருக்காங்க…. அதை விடுங்க! நீங்க ஏன் இப்படி பண்ணுனீங்க?”, என்றாள் அதட்டலாக…..

அதற்கு வாசுகி எந்த பதிலும் சொல்லவில்லை…..

“எவ்வளவோ கஷ்டத்தை பார்த்துட்டீங்க… இப்போ ஏன் இந்த மாதிரி பண்ணுனீங்க..”,

“எல்லோரும் அவனை விட்டுட்டாங்க…….. நீயும் அவனுக்காக எதையும் செய்ய மாட்டேன்னு சொன்னியாமே….”,

“ஒன்னு நல்லா புரிஞ்சிகோங்க…… யாரும் உங்க பையனுக்கு தேவையே கிடையாது….. அவங்க என்னையே தேவைன்னு நினைக்கறது இல்லை! வேற யாரை நினைப்பாங்க…?”,

“நீயும் அவனை விட்டுட்ட தானே”,

“யார் சொன்னா அப்படின்னு? நான் சொன்னனா! உங்ககிட்ட யாரவது சொன்னா நம்பிடுவீங்களா….. என்கிட்டே பேசனும்னு உங்களுக்கு தோணலையா…..”,

“நீயும் தான் என்கிட்டே பேசலை…..”,

“எப்படி பேசுவேன்! உங்க பையன் செஞ்சு வெச்ச வேலைக்கு எனக்கு அதை பார்க்கவே சரியா போச்சு….. அப்புறம் உங்ககிட்ட பேசலாம்னு வரும்போது இப்படின்னு செய்தி..”, என்று அதட்டலாகவே பேசினாள்.

வாசுகி அமைதியாக இருக்கவும்…..

“அவன் எங்க இருந்தாலும் உங்ககிட்ட கொண்டு வர்றது என் பொறுப்புன்னு சொன்னேனே! அதை ஏன் நீங்க நம்பலை….”,

“அப்போ அவனை கூட்டிட்டு வர்றியா?”, என்றார் கண்கள் பளபளக்க.

அவர் அருகில் அதரவாக அமர்ந்தவள், அவரின் கையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு…. “உடனே முடியாது! ஆனா கண்டிப்பா கூட்டிட்டு வருவேன்! நம்புங்க!”, என்றாள்.

“ஏம்மா இப்படி பண்ணுனீங்க…..”,

“என் அப்பா சொன்னாங்க, பிரபுவை அவரை எல்லாம் பிடிச்சிட்டு போயிடுவாங்கன்னு…. எப்பவும் போல கார்த்திக் அப்பாவை, கார்த்திக்கை எல்லாம் திட்டுனாங்களா? என்னால தாங்க முடியலை!”, என்று உண்மையை மறைக்காமல் உரைத்தார்.

பாவமாக தான் இருந்தது அந்த பெண்மணியை பார்த்து சக்திக்கு… “இனிமே இந்த மாதிரி பண்ணக் கூடாது! என் பையன் யாருக்கும் எந்த பிரச்சனையும் வர விடமாட்டான்னு தைரியமா பேசனும்…”,

சொல்லும் சக்தியை அப்போது தான் நன்றாக பார்த்தார்……. முகமெல்லாம் வீக்கமாக இருக்க கண்களை சுற்றி கருவளையம் இருக்க… அவரையும் விட அவள் தான் பார்ப்பதற்கு உடம்பு சரியில்லாதவள் போல இருந்தாள்.

“நீயேன் சக்தி இப்படியிருக்க……”,  

“எப்படி இருக்கேன்? நல்லா இருக்கேன்……..!”,

“இல்லை! பார்க்கவே உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு…”, 

“நீங்க இப்படி பண்ணிக்கிட்டீங்க…… உங்களை பார்க்கலைன்னு கார்த்திக் திட்டினானா? கொஞ்சம் அப்செட் ஆனேன்! இப்போ பரவாயில்லை! நாளைக்கு சரியாகிடுவேன்!”, என்றாள் புன்னகையோடு…..

“என் பையனை விட்டுட மாட்டல்ல”,

“இந்த ஜென்மத்துல எனக்கந்த ஐடியா இல்லை….. ஆனா உங்க பையனுக்கு இருக்கும் போல இருக்கு…… அதுக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியலை…..”, என்றாள் லகுவாகவே….

அந்த குரலில் லகுத்தன்மையையும் மீறி வருத்தமிருந்தது. இரு பெண்களுமே அதன் பிறகு கார்த்திக்கின் நினைவில் அமைதியாகினர்.     

சற்று நேரத்தில் சக்தி கிளம்ப… “நாளைக்கு வருவியா?”, என்றார்…

“கண்டிப்பா வருவேன்! நீங்க ஹாஸ்பிடல்ல இருக்குற வரைக்கும் வருவேன்! அதுக்கப்புறம் உங்களை என்கூட கூட்டிட்டு போயிடுவேன்….. உங்கப்பா கிட்ட விட மாட்டேன்!”, என்று சொல்லிவிட்டு சென்றாள்.

வாசுகி விளையாட்டு பெண், விளையாட்டிற்கு சொல்கிறாள் என்று நினைத்தார்.  

ஆனால் சக்தி விளையாட்டு பெண்ணில்லை என்பது ஒரு வார போராட்டதிற்கு பின் பரோலில் வந்த கார்த்திக்கிற்கு தெரிந்தது. அந்த ஒரு வாரமும் கார்த்திக்கிடம் சக்தி பேசவில்லை… 

பகலில் கட்சி பணியில் இருந்தாள்…. இரவில் தூக்க மாத்திரை உதவியுடன் போனை ஸ்விச் ஆப் செய்து வைத்து உறங்கினாள்.

அவனின் அம்மாவை பார்த்து தைரியம் சொல்லும்வரை அவன் அருகில் அமைதியாக நின்ற சக்தி……

அவன் கிளம்பும் நேரம் அவன் முன் கை நீட்டியவள்…… “இதை கட்டிட்டு போனா நீ திரும்ப வரும்போது நான் இருப்பேன்…. இல்லைனா அடுத்த டைம் உனக்கு பரோல் கிடைச்சு நீ வர்றதுக்காக எங்கப்பா வெயிட் பண்ணுவாரா இல்லை என்னை அடக்கம் பண்ணிடுவாரா என்னால சொல்ல முடியாது!”, என்றாள்.

அவளின் வார்த்தைகளை கேட்ட கார்த்திக்கின் கண்கள் ரத்தமென சிவக்க……. அவனே சக்தியை கொன்று புதைத்து விடும் பார்வை பார்த்தான்.    

“இதை கட்டிட்டா நீ உயிரோட இருப்பியா?”,

“ம்கூம்! நீ இல்லாம வாழ கத்துக்குவேன்! நீ இல்லைனாலும் என் வாழ்க்கையை நான் வாழனும்னு நீதான சொன்ன?”, என்றாள். 

 

Advertisement