Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்பது :

சக்திக்கு நிஜமாக செல்வம் சொன்னதை கேட்டதும் மயக்கம் வந்தது….

என்ன நடக்கிறது என்று செல்வத்தை தெரிந்து சொல்ல சொல்லியிருந்தாள்….

“பாஸ நேத்து அரஸ்ட் பண்ணியிருக்காங்க….. இவர் மட்டுமில்லை இவரோட சேர்த்து இந்த பிரச்சினையில மூணு பேர்… ஆனா இவர் மேல தான் கம்ப்ளைன்ட்ஸ் அதிகம்…..”,

“அது நானே பேப்பர்ல பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்…..”, 

“நேத்து அரஸ்ட் பண்ணி கோர்ட்ல ஆஜர் படுத்தியிருக்காங்க…. சேலம் சென்ட்ரல் ஜெயில்ல போட சொல்லியிருக்காங்க…….”,

“நேத்து நைட் அங்க அவங்களை கூட்டிட்டு போகும்போதே நேரமாயிடுச்சு….. அப்போதைக்கு ஒரு செல்ல போட்டிருக்காங்க….. இப்போ காலையில வீ ஐ பீ செல்க்கு பாஸை மாத்திட்டாங்க….”,

“வீ ஐ பீ செல்ல என்ன ஸ்பெஷல் இருக்கு….”,

“சாதான்னா குறைஞ்சது நாலு பேராவது இருப்பாங்க…. எல்லாம் அப்படியே படுத்து உருளனும்…… எதுக்குமே ஒரு பிரைவசி இருக்காது…. ரொம்ப கஷ்டம்…… வீ ஐ பீ செல்னா ஒரு கட்டில் இருக்கும், பேன் இருக்கும், லைட் இருக்கும், அவ்வளவு தான்”,

“எப்படி இவனை மாத்தினாங்க…..”,

“அவங்களா மாத்தினாங்களா….. இல்லை ரிக்வெஸ்ட் குடுத்து பணம் கட்டி இவர் மாத்திகிட்டாரா தெரியலை…….”,

“யார் லாயர்….”,

“நமக்கு எப்பவும் இருக்கிறவர் தான்….. ஆனா அவருக்குமே வேலை ஒண்ணுமில்லை….. ஜாமீன்க்கு அப்பீல் பண்ண வேண்டாம்னு பாஸ் சொல்லிட்டார் போல…..”,

“என்ன பண்றான் அவன்…. இதுல நீ வேற என்னமோ சொல்ற….. கலக்டர் குடும்பத்தை காணோம்னு…… எப்படி தெரியும் பேப்பர்ல வந்ததா….”,

“இல்லை, இந்த செய்தியெல்லாம் சேகரிச்ச மாதிரி தான்……. அதுவும் என் காதுக்கு வந்தது……. இன்னும் வெளில நியூஸ் பரவலை…… அந்த கலெக்டர் இதை மீடியாக்கு தெரியப்படுத்தலை….. ரகசியமா தான் வெச்சிருக்கான்…. வெளில தெரியாம கண்டுபிடிக்க எல்லா முயற்சியும் எடுத்திருக்காங்க”,

“ஏன்”,

“தெரியலை”,

“கார்த்திக் இதுல இன்வால்வ் ஆகியிருப்பான்னு நினைக்கறியா….”,

“தெரியலை மேடம்”, 

“உண்மையை சொல்லு”,

“நிஜமாவே தெரியலை மேடம்…… அரஸ்ட் ஆனதுக்கு அப்புறம் பாஸ் யாரையும் பார்க்கலை…….. யாரும் அவரையும் பார்க்கலை….. லாயர் வெச்சு எதையுமே மூவ் பண்ணலை….. என்ன பண்றார்ன்னு ஒன்னும் தெரியலை…….”,

“என்ன உள்ள போய் ரெஸ்டா எடுக்கறான்”, என்றாள் கடுப்பாக சக்தி…… மீண்டும் கார்த்திக்கிடம் எதுவும் செய்ய முடியாத இயலாமை பலமாக தாக்கியது.

மனதிற்குள் அவனை சகட்டு மேனிக்கு திட்டினாள்…. புலம்பினாள்….. “என்ன சுதந்திர போராட்டத்துல உள்ள போயிருக்கானா இல்லை ஒரு நடக்காத விஷயத்துக்கு தப்பா அரெஸ்ட் ஆகிட்டானா……. பண்ணினது எல்லாம் பிராடு தனம்…. இப்போ புதுசா கடத்தல் வேறயா… என்னமோ தெரியலையே”,

“எப்பவும் எல்லா முடிவும் அவன்தான்….. நம்மளை எதுவும் சொல்ல விடறதில்லை கேட்கறதில்லை……. அவன் என்ன செய்யறான்னு நமக்கு தெரியறதில்லை……”, என்றாள் மித மிஞ்சிய வருத்தத்தோடு…..

“இப்போ என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்றப்போ என்ன பண்ண முடியும்”, என்று அவளுக்குள்ளேயே பேசிக்கொண்டவள்……

“எல்லோரும் எதாவது பண்ண சொல்றாங்க….. அவுட் ஆஃப் தி வே போய் எனக்கு பண்ண இஷ்டமில்லை……. பண்ண மாட்டேன்றது வேற விஷயம்…… ஆனா என்ன பண்ணனும்னு கூட எனக்கு தெரியாதே”, என்றாள் செல்வத்தை பார்த்து….   

“நிஜமாவே உன் பாஸ் என்னைக்கு என்னை பைய்த்தியமாக்கி சுத்த விடப் போறானோ தெரியலை”, என்றாள் குரல் கமற…

“ஏற்கனவே பெரிய பிரச்சனை இப்போ இந்த மாதிரி கிட்னாபிங் அது இதுன்னு ஏதாவது மாட்டிக்குவானா தெரியலையே…..”, என்று அவளாக மறுபடியும் புலம்பினாள்.

அழுகை அடக்க முடியாமல் வந்தது….. ரெஸ்ட் ரூம் போய் தாங்க மாட்டாமல் சிறிது நேரம் அழுதாள்….

பின்பு சிறிது நேரம் ஆபிசில் இருந்து கிளம்பிவிட்டாள்.

அவளுக்கு அங்கே என்ன வேலை என்று ஆனா ஆவன்னா கூட தெரியவில்லை…..

ஒரு அதிகாரி வந்து கையெழுத்து கேட்டார்… எதற்கு என்று படித்து பார்த்தாள்….. புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது….. 

விளக்கம் கேட்டாள் தான், ஆனால் அவர் சொன்ன விளக்கம் சத்தியமாக இவள் மண்டைக்குள் ஏறவில்லை…. அவளுக்கு இருந்த மனவுளைச்சல்கள்….. அவளின் மூளையை மழுங்க செய்திருந்தது…..  

அதுவுமில்லாமல் அவரின் ஆங்கில உச்சரிப்பு இவளுக்கு புரியவில்லை…. இன்னும் சக்தி பார்லிமென்ட் ஆங்கிலத்திற்கும்…. ஹிந்தியோடு கலந்து வரும் ஆங்கிலத்திற்கும் பழகவில்லை.  

“எவனாவது பிராடு அதிகாரியிடம் என்ன செய்வது என்று கேட்டு அவன் பாட்டிக்கு என்னை வைத்து காரியங்கள் சாதித்துக் கொண்டால்…..”, குழப்பத்தில் மண்டையே வெடித்தது. 

செல்வத்திற்கு சக்தியை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. தன்னுடன் பிறந்தவர்களை நினைத்து பார்த்தான்……. அவர்களிடம் பணம் கிடையாது, பதவி கிடையாது…. ஆனால் நிறைய சந்தோசம் இருந்தது….. இப்படிப்பட்ட கவலைகள் இல்லை…. கணவன் குழந்தைகள் என்று சௌக்கியமாக இருந்தனர்….

திருமணத்திற்கு நிற்கும் இரு தங்கைகளும் கண்களில் கல்யாண கனவுகளோடு அந்த வயதிற்கு உரிய துள்ளலோடு இருப்பர்….

இப்படி சக்தியை போல் மனவுளைச்சல்களோ…. கவலைகளோ கிடையாது.

இரவு உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் சக்தி….. மணி பன்னிரண்டை கடந்திருந்தது….. அந்த நேரத்தில் அவளின் தொலை பேசி ஒலிக்க…..

இந்த நேரத்தில் யாராயிருக்கும் என்ற யோசனையோடே எடுத்தாள்…..

சக்தி என்ற கார்த்திக்கின் ஆழ்ந்த குரல் உயிர்வரை தீண்டியது….

“கார்த்திக்! நீயா? நீயா பேசற?”, என்றாள் பதட்டமாக…

“ம்”, என்றான்.

“எப்படி? எப்படி போன் பேசற? ஜெயில்ல இருந்து தப்பிச்சிடியா….?”,

“லூசு மாதிரி உளறக்கூடாது… நீ இப்போ அமைச்சர்…… அமைச்சர் மாதிரி பேசனும்…..”,

“எனக்கு இது வேண்டாம்….. எனக்கு ஒன்னுமே தெரியலை”, என்றாள் அழுகையோடு…. அவன் ஜெயிலில் இருக்கிறான் அவனை பற்றி கேட்க வேண்டும் முதலில் என்று தோன்றவில்லை…… அவளை பற்றி சொல்ல தான் தோன்றியது. 

கார்த்திக் இருந்தால் தான் சக்தியின் மூளை மழுங்கி விடுமே….. இப்போதும் அதுவே செவ்வனே நிறைவேறியது…..

“கத்துக்கோ சக்தி உன்னால முடியலைன்னா வேற யாரால முடியும்”,

“நீ இப்படி பேசி பேசி தான் என்னை இப்படி கொண்டு வந்து நிறுத்திட்ட……”,

“ஷ்! சக்தி நான் ரிஸ்க் எடுத்து பேசிட்டு இருக்கேன்…”,

“யார் போன் இது?”,

“வார்டன்து…..”,

“எப்படி கிடைச்சது…….”,

“அந்த கதையெல்லாம் நேர்ல பேசலாம்…. நீ ரொம்ப அப்செட்டா இருப்பேன்னு தான் கூப்பிட்டேன்……. நீ தைரியமா இருக்கனும்….”,

“ம்ம்! நேர்ல எப்போ பேசலாம்! நீ எப்போ வருவ….?”,

“இப்போதைக்கு வரமாட்டேன்….. கொஞ்ச நாள் போகட்டும்… இந்த விஷயம் கொஞ்சம் அமுங்கட்டும் அப்புறம் பெயில் அப்பிளை பண்றேன்…. அதுவரைக்கும் எந்த ஸ்டெப்பும் எடுக்க மாட்டேன்….”

“யாரும் என்னை பார்க்கவும் வேண்டாம் நானும் யாரையும் பார்க்க மாட்டேன்….”,

“என்கிட்டே போன்ல பேசுவல்ல…….”,

“அடிக்கடி முடியாது… எப்பயாவது பேசறேன்…..”,

“அந்த கலக்டர் ஃபாமிலிய என்ன பண்ணின…….”,

“நான் ஒன்னும் பண்ணலையே……”,

“நீ ஒன்னும் பண்ணமாட்ட, ஆனா நீ தானே கடத்தியிருக்க…..”, என்று பயத்தோடே கேட்டாள்.

“ம்”,

“ஏன் கார்த்திக்? ஏன் கார்த்திக்? இப்படி பண்ற மேலமேல தப்பு பண்ற……”,

“என்ன பண்றது எதுக்கும் மசிய மாட்டேங்கறான்… அவன் வீக்னெஸ் அவன் ஃபாமிலின்னு தெரிஞ்சது அதான் தூக்க சொன்னேன்”, 

“நீயே அரெஸ்ட் ஆகிட்ட…… குவாரிக்கு சீல் வெச்சிடாங்க…… உன்னோட அக்கௌன்ட்ஸ் எல்லாம் முடக்கிருவாங்க……. நிரூபனமாச்சுனா ப்ரோபெர்ட்டி சீஸ் பண்ணிருவாங்க…  இனி அவன் குடும்பத்தை கடத்தி  என்ன செய்ய போற”,

“சும்மா அந்த கலக்டர் டைவர்ட் பண்ண தான்….”,

“என்ன தான் பண்ண போற…..”,

“இப்போவும் சொல்றேன் ஒன்னும் பண்ண மாட்டேன்….. கேஸ் என் மேல பைல் ஆகியிருக்கு…. அது இனி ஒன்னும் பண்ண முடியாது….. ஆனா இது இல்லாம ஒரு செகண்ட் லிஸ்ட் ரெடி பண்ணி வெச்சிருக்கான்….. என்னோட பினாமின்னு பிரபு மேலயும் உங்கப்பா மேலயும்….”,

“அது அவன் வெளில எடுக்கக் கூடாது அவ்வளவு தான்…..”,

“எப்படி எடுக்காம இருப்பான்…… அவன் குடும்பம் காணாம போனதை வெளில கூட சொல்லலை…. இதுகெல்லாம் அவன் அசறமாட்டான்”,

“அப்படியில்லை சக்தி…….. ஒரு பத்து நாள் அவன் குடும்பத்தை தேடறதுலயே போயிடும்…… அந்த டென்சன்ல இருப்பான்… அப்போ ஏதாவது டீல்க்கு ஒத்துக்கறானா பார்ப்போம்…. என் ஃபாமிலிய அவன் ஒன்னும் பண்ணலைன்னா அவன் ஃபாமிலிய உடனே நான் அவன்கிட்ட அனுப்பிடுவேன்”,

“என்னக்கென்னவோ உன்னோட இந்த விஷயம் பிடிக்கலை கார்த்திக்….. இத்தனை நாள் கல்லோட விளையாண்ட ஓகே….. எல்லோருக்கும் லஞ்சம் குடுத்து வேலையை சாதிச்சிகிட்ட ஓகே…… ஆனா மனுஷங்களோட நீ விளையாடுறது எனக்கு பிடிக்கலை கார்த்திக்…….”,

“நம்ம செய்யற பாவங்கள் நம்மளோட போகட்டும்….. நம்ம குழந்தைங்களுக்கு வேண்டாம் கார்த்திக்…… நீ அரெஸ்ட் ஆகியிருக்கிற விஷயத்துல அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு அவ்வளவு தான்…… இதுல தனிப்பட்ட மனுஷ பாதிப்பு கிடையாது…. ஆனா இப்போ நீ பண்ணியிருக்கிறது அப்படி இல்லை……”,  

“ப்ளீஸ் இந்த பிரச்சனையை வேற மாதிரி டீல் பண்ணிக்கோ……. அவங்க குடும்பத்தை விட்டுடு கார்த்திக்….. நீ ஒன்னும் பண்ணமாட்டன்னு எனக்கு தெரியும்… ஆனா அது அவங்களுக்கு தெரியுமா…..”,

சக்தி கார்திக்கையும் அவளையும் தனித்து பார்க்கவேயில்லை…. அவனுடைய செய்கைகளையும் தன்னுடையதாகவே சொன்னாள். 

“நம்மளால நேர்மையா இருக்க முடியாத பட்சத்துல…. நேர்மையா இருக்குறவங்களை நம்ம சோதிக்க கூடாது…… வேற ஏதாவது யோசி அவன் குடும்பத்தை விட்டுடு…… ப்ளீஸ் எனக்காக”, என்றாள் கெஞ்சுதலாக…

“வேற ஆப்ஷனே என்கிட்டே இல்ல சக்தி……. இருந்தா நான் இந்த அளவுக்கு கீழ இறங்கியிருக்க மாட்டேன்…. இதுவரைக்கும் இந்த மாதிரி எல்லாம் நான் செஞ்சதே கிடையாது…..”,

“அதுக்கான அவசியம் வந்திருக்காது நீ செஞ்சிருக்க மாட்ட அவ்வளவுதான்…… அதுக்காக நீ நல்லவன் மாதிரி பேசாத விட்டுடு……”, என்றாள் கடுமையாக…. கெஞ்சுதலை கைவிட்டு இருந்தாள்…..  

“விட்ரு அவங்களை விட்ரு வேற ஆப்ஷன் தேடலாம்…..”,

“நாளாயிடுச்சுனா எல்லாம் கைமீறிடும் சக்தி……. நான் பண்ணினதுக்கு அடுத்தவங்க பாதிக்கப் படக்கூடாது இல்லையா……”,

“சொத்தை அனுபவிக்கும்போது பாதிப்பு மட்டும் வரக் கூடாதா?”, என்றாள் ஆவேசமாக..

“சக்தி! இது நான் அவங்க கிட்ட இருந்து வாங்கினதை குடுத்ததுதான்…… இதுல அவங்க கை கிடையாதுப்பா”, என்றான் பொறுமையாகவே…….

சக்தி அமைதியாக இருக்க….. அவனை வேற எந்த வழிளையும் கார்னர் பண்ண முடியாது…….. அவன் அங்க இருக்குற வரை பிரச்சனை தான்…..”,  

கார்த்திக் பேசவும் சட்டென்று ஒரு யோசனை பளிச்சிட “நீ என்னை நம்புறியா கார்த்திக்”,

“என்ன கேள்வி இது?”,

“அப்போ அவங்களை விட்டுடு….. இப்போவே அவங்களை விட்டுடு… நான் ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்”,

“சக்தி இது விளையாட்டில்லை”,

“உன்கிட்ட நான் விளையாட்டு பொண்ணு தான் கார்த்திக்….. ஆனா மத்த விஷயத்துலயும் மத்தவங்க கிட்டயும் நான் அப்படி கிடையாது…”,   

“என்ன செய்யப் போற?”,

“செஞ்சிட்டு சொல்றேன்…..”,

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “ரொம்ப நேரம் பேசிட்டேன், வெச்சிடறேன்”,

“நாளைக்கு என்னை கூப்பிடு கார்த்திக், என்னன்னு நான் சொல்றேன்….”,

“ம்”, என்றவன்…….. “எங்கம்மா கிட்ட பேசு சக்தி, அவங்களை பார்த்துக்கோ”, என்று சொல்லி வைத்தான்.

சக்தி கார்த்திக்கின் செயல் பற்றிய யோசனையில் இருந்ததால்….. இனி தான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்ததால் வாசுகி பின்னுக்கு போய்விட்டார்.

சக்தி அதன் பிறகு முயன்று உறக்கத்தை வரவழைத்து தூங்கினாள்….. செய்ய வேண்டிய வேலைகளை பதட்டமில்லாமல் செய்ய வேண்டும்….. பதறிய காரியம் சிதறி விடும் அபாயம் உண்டு…. அதனால் பதட்டமில்லாமல் கையாள  முதலில் உறங்கினாள்.

எழுந்தவுடன் தெளிவாகியிருந்தாள்.

செய்ய வேண்டிய வேலைகள் மனதில் அணிவகுக்க…….

முதலில் செல்வத்தை அழைத்து, “கலெக்டரின் குடும்பம் கிடைத்துவிட்டதா”, என்று கேட்க…..

அவன் விசாரித்து, “அதிகாலையே வந்துவிட்டார்கள்”, என்று உறுதி படுத்தினான்.

“என்ன ஏதுன்னு காரணம் மாதிரி ஏதாவது பேசறாங்களா…..”,

“இன்னும் ஒன்னும் தெரியலை”, 

செய்தி கேட்ட பிறகே மனம் நிம்மதியாகிற்று பின்பு அமைச்சகம் சென்றவள்…..

பேச வேண்டியவர்களிடம் பேசி….. விரைந்து செயல்பட…… மாலைக்குள் ஃபாக்ஸ்களும் மெயில்கலும் பறந்தது…..

மதுரை கலெக்டரான கங்காதரன் ஐ ஏ எஸ்…..

சக்தியின் அமைச்சகத்திற்கு சக்திக்கு கீழ் பொறுப்பெடுக்க……. ஆன் ஸ்பெஷல் டெபுடேஷனில் அடுத்த நாளே டெல்லியில் பணியில் சேர பணித்து…… பதவி உயர்வுடன் மாற்றப்பட்டான்.

மனம் பதைத்து இருந்தது எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று…..

அவர் ஜாயின் ஆவதை உடனே மெயிலில் உறுதி படுத்த சொல்ல….. அவரோ, “நாளை பொறுப்பெடுக்கிறேன்”, என்று மெயில் அனுப்பிய பிறகு தான் மூச்சே சரியாக விட்டாள்.   

அதன் பிறகே நிமிர்ந்தவள்…..  சற்று ஆசுவாசப்டுத்திக் கொண்டாள்…. செய்வது சரியா தவறா தெரியாது….. பார்ப்போம் என்ற மனநிலையில் இருந்தாள்.

அன்று இரவு இதை சொல்வதற்காக கார்த்திக்கின் அழைப்பை எதிர்பார்த்து இருக்க…

கார்த்திக் அழைக்கவேயில்லை….    

அவன் ஜெயிலில் இருக்கிறான் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டாள்….. அதன் பிறகே கார்த்திக் வாசுகியிடம் பேச சொன்னது ஞாபகம் வர……. அழைக்கலாம் என்று நேரம் பார்த்தால் மணி ஒன்றுக்கு மேல் ஆகியிருந்தது……

இனி அழைக்க முடியாது காலையில் அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

காலையில் கங்காதரன் அங்கே வந்து ஜாயின் ஆகப் போவதை பற்றி நினைத்துக் கொண்டிருந்ததால் வாசுகிக்கு அழைக்க மறந்துவிட்டாள்……

அவள் அலுவலகம் வந்து அந்த கங்காதரன் எப்போது வேலையில் சேருவான் என்பது போல் எதிர்பார்த்துக் காத்திருக்க….

செல்வம் பதட்டத்தோடு வந்தவன், “பாஸோட அம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க போல… நான் எப்பவும் போல் நம்ம ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டேன் விஷயம் தெரிஞ்சது……”,

“என்ன? என்ன அவங்களுக்கு?”, என்று சக்தி பதட்டமாக கேட்க…

“தெரியலை மேடம்…….”,

உடனே பிரபுவிற்கு அழைத்தாள்…… அவன் எடுக்கவே இல்லை……

நேரே தலைமை மருத்துவருக்கே அழைத்தாள்…. அவர், “சூசைட் அட்டெம்ப்ட்”, என்று சொல்ல…. சக்திக்கு ஒன்றுமே ஓடவில்லை……

கார்த்திக்கிற்கு என்ன பதில் சொல்ல போகிறோம் என்ற பயம் பலமாக தாக்கியது.  

 

Advertisement