Advertisement

  அத்தியாயம் முப்பத்தி ஆறு :

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா                                                                                                  நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா                                                                                நந்தலாலா நந்தலாலா

( பாரதி )

அன்று பிரபு வைஷ்ணவியின் திருமணம்…. எவ்வளவோ சொல்லியும் தெய்வானை வர மறுத்துவிட்டார்…..

“எனக்கு மனசே சரியில்லை, நான் வரலை… யார் கல்யாணத்தையும் என்னால பார்க்க முடியாது….. கல்யாணமாகறது எல்லாம் உன்னை விட சின்ன பொண்ணுங்க….. எனக்கு தாங்காது சக்தி”,

“அம்மா! அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும். அதுக்காக இப்படி முகத்தை தூக்கி வச்சுக்குவியா”,

“ப்ச், வரலைன்னா விட்டுடு”,

அம்மாவை சமாதானப்படுத்த முடியாமல் சக்தி வீரமணியை பார்க்க…. “விட்டுவிடு”, என்பதாக சைகை செய்தார்.   

வேறுவழியில்லாமல் சக்தியும் வீரமணியும் மட்டும் கிளம்பினர். நிறைய சக்தியினால் வற்புறுத்த முடியவில்லை. வாசுகியும் பிரபுவும் தான் வந்து அழைத்திருந்தனர். கார்த்திக் வரவில்லை………  அதில் அவளுக்கே சற்று ஆதங்கம்… எப்போது பெண் கேட்டு வருவான் என்று எதிர்பார்த்திருக்கும் தெய்வானையிடம் என்ன சொல்லுவாள்.   

ஜரிகை கூட இல்லாத ஒரு பட்டு கட்டி…… எந்த ஒப்பனையுமில்லாமல்….. தெய்வானையின் வற்புறுத்தலின் பேரில் ஒரு சிறிய கண்ணை உறுத்தாத நெக்லஸ் மட்டும் அணிந்து கிளம்பினாள்.

“அரசியல்ல நிக்க வெக்கறேன், வெங்காயதுல நிக்க வெக்கறேன்னு ஒரு அலங்காரம் கூட என் பொண்ணை பண்ண விடாம செஞ்சிடீங்க, நான் ரூம்க்கு ரூம்க்கு நகை வெச்சு லாக்கர் வெச்சிருக்கேன், தேடிப்பிடிச்சு அத்தனை டிசைன் வாங்கி வெச்சிருக்கேன், என்ன பிரயோஜனம்”, என்று வீரமணியிடம் பொறிந்து தள்ளினார்.

“ஏம்மா, அம்மா சொல்றதை கட்டிக்கிட்டு…… நகை கொஞ்சம் நிறைய போட்டுக்க வேண்டியது தானே மா…..”,

“அது இனிமே சரி வராதுப்பா….. நான் அப்படி போனேன்னு வெச்சிகங்க…… அரசியல்ல நிக்கறதுக்கு முன்னாலயே இந்த பொண்ணு இத்தனை நகை போட்டு இவ்வளவு ஆடம்பரமா வருதே…… இன்னும் நின்னு ஜெயிச்சா என்ன பண்ணும்னு பேசுவாங்க……”, என்றாள்.

வீரமணிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை……

தந்தையும் மகளும் திருமணத்திற்கு கிளம்பினர். அன்று எந்த பிரசாரமும் வேண்டாம் என்று தந்தையிடம் சொல்லியிருந்தாள்.

அதனால் இருவருமே சற்று ரிலாக்ஸாக இருந்தனர். சக்திக்கு கார்த்திக்கை காணப்போகும் ஆர்வமும் இருந்தது.

அவர்கள்  திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது தாலி கட்டும் நேரம் நெருங்கியிருந்தது. அதனால் எல்லோரும் அங்கேயிருந்தனர். யாரும் இவர்களை கவனிக்கவில்லை. கூட்டமும் சற்று அதிகமாக இருந்தது…..

முன்னிருக்கையில் வீரமணியை பார்த்த ஒருவர் எழுந்து இடம் விட… “நீங்க உட்காருங்கப்பா”, என்று சொல்லிய சக்தி…. வீரமணி அருகில் அமர சொன்னதை கேட்காமல், “என் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க”, என்று சொல்லி பின்னால் சென்றாள்.

அவள் என்னவோ வாய் வார்த்தைக்காக தான் சொல்லி சென்றாள். ஆனால் நிஜமாகவே அவளோடு யு ஜி படித்த தோழி ஒருத்தி அங்கே அவளின் கணவனோடு அமர்ந்திருந்தவள் இவளை பார்த்ததும், “ஹாய் சக்தி”, என்று ஆர்வமாக அழைத்து அருகமர்த்தி கொண்டாள்.

அவளின் தோழியின் மடியில் அவளின் ஒன்றரை வயது அழகு பெண் குழந்தை அமர்ந்திருந்தது. அது சக்தியை ஈர்க்க அவளும் எல்லாவற்றையும் மறந்து தோழியின் அருகமர்ந்து குழந்தையை ஆர்வமாக வாங்கினாள்.

அதுவும் அடம் செய்யாமல் அவளிடம் சமத்தாக வந்தது.

“சக்தி எலெக்ஷன்ல நிக்கிறியாமே”, என்று அவளின் தோழி பேச்சை ஆரம்பிக்க…..

“ஆமாம்”, என்று அவளுக்கு பதில் கொடுத்த வண்ணம்  குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள்.

வீரமணி வந்ததை கவனித்த செல்வம் உடனே சென்று கார்த்திக்கிடம் கூறினான். அதன் பிறகே கார்த்திக்… அவரை வரவேற்று விட்டு சக்தியையும் தெய்வானையையும் பற்றி விசாரித்தவன்……. தெய்வானை வரவில்லை, சக்தி மட்டும் வந்திருக்கிறாள் என்று தெரிந்தவுடனே அவளை தேடி வந்தான்.

அவன் சக்தியை பார்த்த போது சக்தி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள்… அவளின் தோழி பேச்சுக் கொடுத்து கொண்டிருந்தாள்….. சக்தி அவளிடம் பேசிக்கொண்டு இருந்தாலும்,…….. தனிச்சையான அந்த பேச்சில் கவனமில்லாது இருந்தது அவளின் பதில்கள்.

அவளின் கவனமெல்லாம் குழந்தையிடம் தான்.

அந்த குழந்தையிலேயே லயித்திருந்தாள்…. கார்த்திக் அருகில் வரும் வரையிலும் அவளுக்கு தெரியவில்லை…… அவன் அருகில் வந்து, “சக்தி”, என்று அழைத்த பிறகு தான் அவனை திரும்பி பார்த்தாள்…….

கார்த்திக் என்று உணர்ந்து பார்த்த விழிகளில் அத்தனை ஏக்கம்……. கார்த்திக்கிற்கு வாழ்க்கையே வெறுத்தது…. எதுவும் செய்ய முடியாத தன்னுடைய சூழ்நிலை அவனுக்கு அப்படி ஒரு வலியை கொடுத்தது.   

யாருடன் அமர்ந்திருக்கிறாள் என்று பார்த்தான்….. அந்த கணவன் மனைவியில் கணவன் கார்த்திக்கின் உறவினன். அவனிடம் மரியாதை நிமித்தம் ஒரு இரண்டு வார்த்தை பேசிவிட்டு……                    

சக்தியிடம், “அங்க மேடைக்கு வா சக்தி”, என்றான்……

“இல்லை, நான் இங்கயே இருக்கேன். பாப்பா செம க்யூட்! என்கிட்டே கூப்பிட்டவுடனே வந்துட்டா…… அழவேயில்லை!”, என்றாள் குழந்தைத்தனமாக. 

“அங்க தாலி கட்ட போறாங்க! நீ அப்புறம் இங்க வருவியாம்! அங்க வா!”, என்றான் குரலில் சற்று வற்புறுத்தல் இருந்தது.

தோழியின் முன் கார்த்திக்கிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட முடியாமல் எழுந்து அவனுடன் நடந்தவள்…. “கல்யாணத்துக்கே நீ என்னை கூப்பிடலை! இப்போ எதுக்கு மேடைக்கு கூப்பிடற…..”, என்றாள் மெதுவான குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக…

கார்த்திக்கும் சற்றும் சளைக்காமல், “அவங்கவங்க வீட்டு கல்யாணத்துக்கு அவங்கவங்களே இன்விடேஷன் வெச்சிக்குவாங்களா”, என்றான்.

அவன் கையில் நறுக்கென்று வலிக்கும் படியாக யாருடைய கவனத்தையும் கவராமல் கிள்ளினாள்.

“அச்சோ! என்ன இது?”, என்று அவன் முகம் சுருக்கவும்…..

“பேசறது நீதானான்னு செக் பண்ணினேன்!”, என்றாள்.

அங்கே என்ன ஒரு கிலோமீட்டர் தூரமா…… அதற்குள் மேடை வந்திருக்க…. மேடையில் அமர்ந்திருந்த பிரபு இவளை பார்த்ததும் வரவேற்கும் விதமாக தலையசைத்தான்.   

அவன் தலையசைக்கவும் தான் அங்கே இருந்த சுமித்ரா, சிவா எல்லோரும் திரும்ப….. சக்தியை பார்த்தனர்.

வேகமாக இறங்கி வந்த சுமித்ரா சக்தியை கையோடு அழைத்துக் கொண்டு போய் மேடையில் அருகில் நிறுத்திக் கொண்டாள்.   

“நான் பின்னாடி நிக்கறேன்!”, என்று பின்னால் போகப் பார்த்த சக்தியை சுமித்ரா விடவில்லை…. அருகிலேயே நிறுத்திக் கொண்டாள்…. நகர விடவில்லை.  புண்பட்ட சக்தியின் மனதிற்கு இந்த செய்கைகள் சற்று ஆறுதலாக இருந்தது.

ஆர்வமாக திருமண சடங்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள். வைஷ்ணவியின் முகத்தில் அத்தனை பூரிப்பு, அத்தனை வெட்கம்….. பிரபுவின் முகமுமே சந்தோஷத்தை பூசிக்கொண்டு இருந்தது.

கண்களில் கனவுகளோடு சக்தி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் முறையாக வீரமணியும் அவருடைய பெண்ணை ஆழ்ந்து கவனித்தார். சக்திக்கும் மனதில் திருமண ஆசை இருக்குமோ என்று தோன்றியது.

கவனிக்க வேண்டியவன் திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தான்.

பிரபு மங்கள நாண் பூட்டினான். அய்யர் சொல்லும் மந்திரங்களோடு அது மட்டுமே அங்கு நடந்த திருமண சடங்கு…… அதோடு அக்னியை வலம் வந்தனர். அவ்வளவே தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கே இல்லை…

பிரவிற்கு தாய் தந்தை கிடையாது….. வைஷ்ணவிக்கு தந்தை கிடையாது……. அதனால் பிரபு அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டான். 

வயதின் மூப்போடு இருக்கும் பத்ரிநாத் உறவுகளை வைத்து அதை செய்ய சொல்ல… பிரபு எதற்கும் அசையவில்லை. அது என் தாய், தந்தை, மாமாவிற்கு உரியது, அவர்கள் இல்லாத போது அது தேவையில்லை என்று விட்டான்.

வேறு மணமக்களின் நெருக்கத்திற்கு உதவும், இந்த மோதிரம் போடுவது, அப்பளம் உடைப்பது போன்ற விளையாட்டுகளும் இல்லை…..

மற்றபடி திருமணம் அதற்குரிய சகல லட்சனங்களோடு  சிறப்பாக நடந்தது. 

கார்த்திக்கின் முகத்தில் அவனுடைய கடமையை முடித்த நிறைவு தெரிந்தது. அதனால் அவன் எதிர்கொள்ள வேண்டி இருந்த பிரச்சனைகளுக்கு தற்காலிக விடை கொடுத்தான்.

வாசுகி ஆரோக்யமான பெண்மணி தான். இருந்தாலும் திருமண அலைச்சலோ இல்லை வேறு ஏதோ முதல் நாள் இருந்து அவருக்கு காய்ச்சலாக இருக்க…… பிரபு மேடையிலேயே ஒரு ஓரமாக சோஃபா ஒன்றை போட்டு அவரை அமர்த்தி இருந்தான்……

கார்த்திக் வாசுகியிடம் நெருங்காத குறையை பிரபு எப்போதும் தீர்த்து வைப்பான்……

“கல்யாணம்… உறவுக்காரங்க வருவாங்க… அது இதுன்னு எங்கயும் அலையக் கூடாது அத்தை நாங்க பார்த்துக்கறோம்”, என்று பிரபு சொல்லியிருந்தான். அவரின் சோர்வான தோற்றமே அவருக்கு காய்ச்சல் என்பதை பறை சாற்ற…… உறவுகளும் எந்த பேச்சும் பேசவில்லை…. என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஆளுக்கு ஒரு வேலையாக இழுத்துப் போட்டு செய்தனர்.      

கார்த்திக் அம்மாவின் பக்கத்திலேயே இருந்தான். மகளுடைய திருமணம்…… அவன் தந்தை இல்லாத குறையை தாய் உணர்ந்தாலும், அவன் கூட இருக்கிறான் என்ற நம்பிக்கையை கொடுக்க கூடவே இருந்தான்.

அவனுக்கு ஏதோ வேலை வர….. “சக்தி! அம்மாவோட இரு!”, என்று சொல்லி அவளை அழைத்து பக்கத்தில் அமர்த்தி சென்றான்.

அது சக்திக்கு எவ்வளவு நிறைவை கொடுத்தது என்பது அவளுக்கு தான் தெரியும். வாசுகி என்னவோ அமைதியாக இருந்தார்.   

அவருடையை வயதையொத்த அக்கா, தங்கை, அத்தை மக்கள், மாமன் மக்கள் எல்லாம் பூவும் பொட்டுமாக கணவனோடு இருக்க…… தனக்கு கொடுப்பினையில்லாத சந்தோஷமான திருமண வாழ்க்கை……. கார்த்திக்கின் அப்பா மிகவும் ஞாபகத்திற்கு வந்தார்.

மக்களுக்கு திருமணம் ஆகும் வரை தான் தாய் தந்தைக்கு முதல் உரிமை அவர்களிடம், அதன் பிறகு அது அவர்களின் கணவனாகவோ மனைவியாகவோ ஆகிவிடுவர்.

இளமையை விடவும்…. இந்த சூழலில் துணையை அதிகம் தேடும் மனது…                          

அவரின் மனவோட்டத்தை அறியாமல் அவர் சோர்வாக இருப்பதை பார்த்து….. “உங்களுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வரட்டுமாம்மா”, என்றாள் சக்தி.

“நான் தான்மா உன்னை உபசரிக்கனும், பிரபு இந்த இடத்தை விட்டு எந்திரிக்க கூடாதுன்னு ஆர்டர் போட்டிருக்கான்”, 

“அதனால என்னம்மா உங்களுக்கு உடம்பு சரியானதும்  நல்லா கவனிச்சுகோங்க….. சக்தி எப்பவும் டையட் எல்லாம் கிடையாது நல்லா சாப்பிடுவா”, என்று உற்சாகமா சொன்னாள்.

அவருக்கு சக்தி அவள் தான் என்று சட்டென்று ஞாபகம் வரவில்லை….ஆனால் அவளின் உற்சாகமான பேச்சு அவரை மேலும் சக்தியிடம் பேச வைத்தது.

“யாரு சக்தி?”, என்றார்.

“நான் தான்மா”, என்று சொல்லவும்….

அவருக்கு சோர்வையும் மீறி சிரிப்பு வந்துவிட்டது… நன்றாகவே புன்னகைத்தார். என்ன தான் வாசுகி வெளியில் எதையும் காட்டிகொள்ளாமல் இருந்தாலும் கணவனுடைய பிரிவு…. பின்பு மறைவு……. மகனுடைய பிரிவு…… இதெல்லாம் அவர் முகத்தில் புன்னகை என்ற ஒன்றை மறையச் செய்து இருந்தது.

இரு திருமணங்கள் வீட்டில் வரவும் தான் புன்னகை முகத்தை மற்றவர்களுக்காக இழுத்துப் பிடித்தார்.

இப்போது அவரின் முகத்தில் புன்னகை தானாக விரிந்தது.

“உன்னை பார்த்தா அப்படி நல்லா சாப்பிடற மாதிரி தெரியலையே…. ஒல்லியாதானே இருக்க”,

“என்னை பார்த்து அப்படியெல்லாம் தப்பா நினைக்காதீங்க, எங்க முனியம்மா மட்டும் காரச் சட்னி செஞ்சிச்சு…….. சக்தி பத்து இட்லிக்கும் குறையாம சாப்பிடுவா…”, என்று பெருமை அடித்தாள்.

“அது மினி இட்லி தானே”, என்று புன்னகை முகத்தோடே வாசுகி கேட்க….

“ம்கூம், பெரிய இட்லி…. மினி புஃட் பால் சைஸ்ல இருக்கும். நீங்க வேணா கார்த்திக் கிட்ட கேளுங்க…. இட்லி செஞ்சா நான் அவனை விட நிறைய சாப்பிடுவேன்…… அவன் கூட கதவை இடிச்சு புதுசா வைக்கனும் போலன்னு கிண்டல் பண்ணுவான்”,

சக்தி இயல்பாக பேசியதால் மரியாதை பன்மை மறந்திருந்தாள்…. அவள் பேசும்போது கார்த்திக்கை ஒருமையில் பேசுவதை வாசுகி கவனித்தார்…… அதில் மரியாதை இல்லாத தன்மை என்பதை விட ஒரு உரிமை கலந்திருந்தது.

“இப்போ கூட பாருங்க……. நான் வர்றதே கல்யாண வீட்டுக்கு…….. எங்கம்மா நான் பசி தாங்க மாட்டேன்னு ரெண்டு இட்லியை உள்ள தள்ளுனதுக்கு அப்புறம் தான் அனுப்பினாங்க”,

“இது என்ன?”, என்று செல்லமாக கோபித்த வாசுகி.. “அப்போ இங்க சாப்பிட மாட்டியா”,

“யார் சொன்னது? அது ஜஸ்ட் ஸ்டார்ட்டர்….. சக்தியோட கெப்பாசிட்டி யே வேற…. ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு……”,

“என்ன சிக்கல்…..?”,

“நிறைய பேர் இருந்தா பந்தில சாப்பிடறதுக்கு முன்னாடியா எப்போ எழுந்திருப்போம்னு வந்து பார்த்துட்டே இருப்பாங்க…… என்னால சாப்பிடவே முடியாது…”,

வாசுகிக்கு இப்போது நன்றாக வெ சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது…..

“ஆனா அதுக்கு கூட ஒரு ஐடியா வெச்சிருக்கேன்”,

“என்ன”, என்றார் சிரிப்போடு. 

“முதல்ல போய் சாப்பிட்டிட்டு வந்துடறேன். அப்புறம் நீங்க சாப்பிட போகும்போது இன்னொரு தடவை வர்றேன்….. நீங்க எப்படியும் லேட்டா தானே போவீங்க”, என்றாள்….

வாசுகிக்கு சக்தி அதை சொன்ன விதத்தில் சிரிப்பு பொங்கியது…….

வாசுகி சிரித்ததை மேடையில் இருந்து திரும்பிய பிரபு பார்த்து… வைஷ்ணவியிடம் கட்டினான்….. வைஷ்ணவி கார்திக்கிடமும் சுமித்ராவிடமும் காட்டினாள்.

கார்த்திக்கின் கால்கள் தன்னை போல அங்கே சென்றது…..   

“அம்மா! இவங்க என்ன கதை அளந்துட்டு இருகாங்க! ரொம்ப கதை விடுவாங்க! நம்பாதீங்க!”, என்றான்.

இந்த பெண் ஒருமையில் பேசுகிறது, இவன் இப்படி பேசுகிறானே என்று வாசுகிக்கு தோன்ற இருவரையும் கவனித்தார்.

“நான் ஒண்ணும் கதை விடுல! நான் பத்து இட்லி காரச் சட்னில சாப்பிடறதை சொன்னேன்”, என்றாள் சலுகையாக.

கார்த்திக்கும் இப்போது வாய் விட்டு நகைத்தான்…. பிரபு, வைஷ்ணவி, சுமித்ரா மூவரின் பார்வையும் அவர்களையே வட்டமிட்டது.

“நிஜமா அம்மா! அவங்க பத்து இட்லி சாப்பிடுவாங்க….. ஆனா நம்மளால அந்த காரச் சட்னில ஒரு இட்லி கூட சாப்பிட முடியாது…… அவ்வளவு கொடுமையா இருக்கும்…. அதுல இவங்க பத்து இட்லி சாப்பிடுவாங்க, அதுவும் எப்படி ரசிச்சு சாப்பிடுவாங்கன்னா”, என்று கார்த்திக் சொல்ல…. 

அவனை மேலும் பேசவிடாமல் நிறுத்தியவள், “யாரவது கூப்பிடாங்களா உன்னை, கிளம்பு முதல்ல நீ….. கல்யாண வீட்ல எல்லோரும் சொல்லிட்டு போக உன்னை தான் தேடுவாங்க! போ! போ!”, என்று துரத்தினாள்.

“நான் உண்மையை சொல்லிட்டேன்னு பயம்”,

“ஆமா! பெரிய பயம் பாரு! நான் நினைச்சேன்னா உன்னை ஒரு நிமிஷத்துல பயப்படுத்துவேன்”,

“அப்படியா எங்க செய் பாப்போம்”,

வாசுகிக்கு கார்த்திக் இப்படி கூட பேசுவானா என்றிருந்தது.

சக்தி நேரே போனை எடுத்தவள்….. வீட்டிற்கு போன் செய்தாள்… கார்த்திக் நேரம் போனை முனியம்மா எடுக்கவும்…..

“முனியம்மாக்கா நீங்க காரச்சட்னி செய்வீங்க தானே, அது கார்த்திக்கு வேணுமாம்”, என்று சக்தி ஆரம்பிக்கும் போதே… அவளின் போனை பிடிங்கி ஆஃப் செய்த கார்த்திக், “நிஜமாவே நான் பயந்துட்டேன்”, என்றான்.

“நீ பயப்படறது இருக்கட்டும், எங்கப்பா உங்க தாத்தா கிட்ட பேச உட்கார்ந்து இருக்கார்….. உங்க தாத்தா நொந்து போயிடுவார், முதல்ல அவரை போய் காப்பாத்து”, என்றாள்.

ரெண்டு பேரும் பேச்சுல சரியா தான் இருப்பாங்க…. என்றபடி கார்த்திக் நிற்க..

“போப்பா! போ! போ! போய் வேலையை பாரு”, என்றாள்.  

 சிரித்தபடியே கார்த்திக் இறங்கி போனான்.             

கார்த்திக் அகன்றதும் அத்தையின் அருகில் வந்த சுமித்ரா, “சக்திக்கா! என்ன சொன்னீங்க, கார்த்திக் மாமா சிரிச்சிட்டே போறார்”, என்றபடியே அருகமர்ந்தாள்.

அதற்குள் கார்த்திக் சக்தியை பார்த்து கையசைத்தான் வீரமணி அழைக்கிறார் என்று…

“இதோ வந்துடறேன்மா”, என்று வாசுகியிடம் சொல்லி….. சக்தி கீழிறங்கினாள்…

“நான் கிளம்பறேன்மா”,

“நான் பா”,

“நீயும் வர்றியா”,

“இல்லை! அவங்க அப்புறம் வரட்டும்”, என்றான் கார்த்திக்

“நீ கொண்டு போய் விடறேன்னா இருக்கேன்”, என்று மெதுவாக முணுமுணுத்தாள்.

“நான் கொண்டு வந்து விடறேன் அய்யா”, என்று கார்த்திக் சொல்ல வீரமணி கிளம்பினார்.  

அவர்களை பார்த்திருந்த வாசுகி “அவன் இப்படி சிரிச்சோ பேசியோ நான் பார்த்ததில்லை”, என்றார்.

“ஆம்!”, என்பது போல் தலையாட்டிய சுமித்ரா….. “சக்திகிட்ட மட்டும் தான் மாமா இப்படி பேசுவாங்க! அதுவும் அடிக்கடி கிடையாது! எப்பயாவது!”, என்றாள் சுமித்ரா.

“இவ்வளவு விளையாட்டுத்தனமா இருக்கா! இவளா எலெக்ஷன்ல நிக்கறா…..”,

“உங்ககிட்ட இருந்தா அப்படித்தான்னு நினைச்சிடாதீங்க, ரொம்ப கோபம் வரும்….. கோபம் வந்துச்சு…… ம்கூம்…. மாமா கூட கண்ட்ரோல்ல இருப்பாங்க இவங்க கண்ட்ரோலே கிடையாது……..”,

“மாமாக்கு இவங்கன்னா ரொம்ப இஷ்டமத்தை, அது போல் தான் அவங்களுக்கும், அதான் நான் விலகிட்டேன்…. அதுல எனக்கு வருத்தம்னு நினைச்சிடாதீங்க, கொஞ்சமும் இல்லை”, என்றாள்.

வாசுகிக்கு சக்தியை பிடித்திருந்தது…… “ரொம்ப நல்லா பேசறா…..”, என்றார்.

“நல்ல பொண்ணு அத்தை….. எல்லாரோடையும் நல்லா பழகிடுவாங்க….. கார்த்திக் மாமாக்கு ஆப்போசிட்…… அவங்க எத்தனைக்கு எத்தனை ஆளுங்க கிட்ட இருந்து விலகறாங்களோ ………இவங்க எல்லோரையும் அப்படியே இழுத்து பிடிச்சு வெச்சிகுவாங்க…”,

“கார்த்திக் மாமாவை இவங்களால மட்டும் தான் சமாளிக்க முடியும்…..”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சக்தி வந்துவிட்டாள். பேச்சு மும்முரத்தில் வாசுகி கவனிக்கவில்லை…. அவர் பேசிக்கொண்டே போனார். 

“எனக்கு வேண்டியது எல்லாம் என்ன சுமித்ரா…. என் பையனோட சந்தோசம் தான்….. நிறைய விஷயத்துல அவங்கப்பாவை கொண்டு இருக்கிறான்…. அவங்கப்பா கூட யாரோடவும் பேசினதோ பழகினதோ கம்மி… என்ன ப்ரச்சனைன்னாலும் மனசுக்குள்ளயே  வெச்சிகுவாங்க…..”,

“தலைக்கு மேல போறவரைக்கும் நமக்கு விஷயமே தெரியாது……. அப்போ கூட அந்த கஷ்டத்தை தனியா அனுபவிக்கனும்னு தான் நினைச்சாங்க, என் கிட்ட சொல்லவேயில்லை…. பிரிஞ்ஜோம்…. போயிட்டார்…….”,

“இவனும் எதுனாலும் தனியா தனியா போயிடறான்…. அதுதான் பயம்”, என்று மிகவும் மெதுவாகதான் சொன்னார்.

சொல்லும்போது குரல் கலங்கியது…..

மிகவும் அருகில் நின்றிருந்த சக்திக்கு கேட்டது, சக்தி கல்லாய் சமைந்து நின்றாள்…. சில நொடிகளே…

அவளுடைய முகத்தை பார்த்த சுமித்ரா அவளையே பார்த்தபடி இருக்க….. திரும்பிய வாசுகி சக்தியின் அதிர்ந்த முகத்தை பார்த்தவர்…. அவளை நோக்கி கை நீட்ட… அருகமர்ந்தாள்.

முகம் அதற்குள் சீராகியிருந்தது….. “இங்க பேச வேண்டாம்மா! மெதுவா பேசினாலும் கேட்கும்”, என்று வாசுகியிடம் சொன்னவள்…..

“நீங்க கவலையேபடாதீங்க! இத்தனை பேர் இருக்கோம், கார்த்திக்கை விட்டுடுவோமா என்ன…..? எங்க போனாலும் உங்ககிட்ட கொண்டு வந்து நிறுத்திடறோம்”, என்றாள்.

அவள் எல்லோரையும் சேர்த்து சொன்னாலும், அது அவள் செய்வேன் என்பதை தான் அப்படி சொல்கிறாள் என்றி வாசுகிக்கு புரிந்தது.

சற்று முன்வரை விளையாட்டுத்தனமாக தெரிந்த சக்தி…… இப்போது அவரின் கண்களுக்கு அவரை விடவும் பெரியவளாக தோன்றினாள்.    

சக்தியின் கைகளை அவர் ஆதரவாக பிடித்து கொள்ள…. சக்தியும் பதிலுக்கு பிடித்துக் கொண்டாள்.

இருவரின் பார்வையும் தூரமாய் யாரோடோ பேசிக்கொண்டிருந்த கார்த்திக்கின் மீதே இருந்தது.  

 

Advertisement