Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஐந்து:

வெற்றியெட்டு திக்கு மெட்டக்                                                                                                               கொட்டு முரசே                                                                                                        வேத மென்றும் வாழ்க வென்று                                                                                                  கொட்டு முரசே

                 ( பாரதி )

எவ்வளவோ கார்த்திக்கிடம் போராடி பார்த்த சக்தியும் ஏதும் செய்ய இயலாமல் விட்டுவிட்டாள். கார்த்திக்கிடம் ஒரு சிறிய காரியத்தை கூட சாதிக்க முடியாத அவளுடைய இயலாமை பலமாக அவளை தாக்கியது.

கார்த்திக் மற்றவர்கள் போல் இல்லை என்று அவளுக்கு தெரிந்தது தான். இருந்தாலும் அவளை அவளால் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை.  

மீண்டும் அவள் கல்லூரி வேலைகளில் தன்னை மூழ்கடிக்க ஆரம்பித்தாலும்…… கார்த்திக் அவளின் மனதில் பாரமாக ஏறி உட்கார்ந்து கொண்டான்.

என்ன வைஷ்ணவியின் திருமணத்தை தானே காரணம் சொல்கிறான். அவள் திருமணம் முடியட்டும்… நிச்சயமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நேரடியாக திருமணம் தான்…. அவன் என்ன மறுத்தாலும் விடக் கூடாது என்று முடிவாக இருந்தாள்.   

சக்தி இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே….. வீரமணி எதிர்பார்த்துக் காத்திருந்த…….. மத்தியில் ஆட்சி காலம் முடிவடையும் நிலை வந்து….. புதிய அரசு அமைவதற்கு தேர்தல் நடத்த நாட்கள் அறிவிக்கப்பட இருந்த நிலையில்…. வீரமணி இருந்த கட்சி வாக்காளர்களை அறிவித்தது.

கட்சி நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்திருந்தது. அதுவுமில்லாமல் பெண்களுக்கு என கட்சியே இத்தனை தொகுதிகள் என்று ஒதுக்கி இருந்தது.

அதன் பொருட்டு சற்றுப் போட்டி இருந்தாலும் முடிவில் கிருஷ்ணகிரி தொகுதி எம் பீ எலெக்ஷனில் சக்திக்கு சீட் கொடுக்க பட்டது……. 

குறைந்த வயது, பெண் படித்திருந்தாள், தேர்தலுக்கு செலவு செய்யும் வசதியும் இருக்கிறது….. இத்தனையும் கருத்தில் கொண்டு  கட்சி மேலிடம் அவளுக்கு சீட் கொடுத்தது.

கட்சியில் நிறைய நாட்களாக சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த சில பேருக்கு இதில் மிகுந்த மனவருத்தம்…. “இப்போது வந்தவள் இந்த பெண்… கட்சியிலேயே சேர்ந்து ஒரு வருடம் கூட இருக்காது…. போனமுறையும் தொகுதி கூட்டணி கட்சிக்கு போய்விட்டது…….. இப்போது கிடைக்கும் என்று பார்த்தால்…….. இப்போதும் இப்படி…  என்னை மாதிரி கட்சிக்கு நாயாய் பேயாய் உழைத்தவனுக்கு என்ன மரியாதை”, என்ற காழ்புணர்ச்சி அநேகம் பேரின் மனதில் இருந்தாலும்….

கட்சி தலைமை சக்திக்கு சீட் கொடுத்தது. இளைஞர்களுக்கு படித்தவர்களுக்கு வழிவிட கட்சி முடிவு செய்திருந்ததால்….. சக்திக்கு சீட் கிடைத்தே விட்டது. 

தகவல் தெரிந்ததும் வீரமணிக்கு சந்தோசம் பிடிபடவில்லை…. “என் பொண்ணு நிக்கறா! ஜெயிக்கறா!”, என்று தெய்வானையிடம் காலையில் இருந்து பேச ஆரம்பித்தவர்…… நிறுத்தவேயில்லை.

அதற்குள் கட்சியிலிருக்கும் ஆட்கள் வீட்டிற்கு வந்தனர் வாழ்த்து தெரிவிக்க… கடை மட்டத்திலிருந்து மேலே வந்திருந்ததாலும்…. சீட் கிடைக்காமல் இருப்பதில் வருத்தம் இருந்தாலும்…… அதை வெளியே காட்டாமல்…….. என்ன வேலை செய்யலாம் எங்கே கட்சி ஆபிஸ் போடலாம் என்று கேட்க ஆட்கள் வந்துவிட்டனர்.

அவர்களுக்கு இது பணம் பார்க்கும் சமயம் அல்லவா….. அதுவுமில்லாமல் இப்போது உழைத்தால் தான் நாளை ஒரு வேளை சக்தி வெற்றி பெற்று விட்டாள் அவளை வைத்து காரியங்கள் சாதிக்கலாம்…..

அரசியல் சக்தியின் வீட்டுக்குள் வந்தே விட்டது….

அநேகம் பேர் வாழ்த்து தெரிவிக்க…… தெரிவிக்க வேண்டியவன் அழைக்கவேயில்லை.

காலையில் இருந்தே விஷயம் பரவி விட்டது…. மாலை வரை அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை…

“அப்பா, கார்த்திக்கு தெரியுமாப்பா?”, என்று வீரமணியிடம் கூட கேட்டே விட்டாள்..

“தெரியுமே சக்திம்மா….. காலையிலேயே நான் சொல்லிட்டேன்……. நான் சொல்றதுக்கு முன்னாடியே அவனுக்கு தெரிஞ்சிருந்தது”,

“ஒஹ், அவனுக்கு தெரியுமா?”, பலமான ஏமாற்றம் தாக்கியது.

“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்? இவன் சொன்னதால் தானே சரி என்றோம்….. இப்போதே இப்படி செய்கிறானே….. என்னுடன் எப்படி இதற்கு துணை நிற்பான்”, என்ற கேள்வி இன்னும் பலமாக தாக்கியது.   

கோபம்…….. மறுபடியும் ஒரு கண்மண் தெரியாத கோபம்….  ஆத்திரம் கரை கடக்க ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலைவரை பொறுத்தாள்….. அதற்கு மேல் அவளிடத்தில் பொறுமையில்லை…. அவனை தொலைபேசியில் அழைக்கவும் மனது வரவில்லை……. செல்வத்திடம் விசாரித்து அவன் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து, செல்வத்தை கூட அழைத்துகொண்டு போனாள்.

குவாரி ஆபிசில் இருந்தான்….. ஏதோ கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.                                   

அவளை பார்த்தும், “என்ன சக்தி? இங்க யாரோட வந்த!”,

“யார் கூட வரனும்….. இனிமே தனியா போயிட்டு வர கத்துக்கிட்டு தானே ஆகனும்”, என்றாள் காட்டமாக அவனை பார்த்துக்கொண்டே. அப்படி பார்த்ததற்கு அப்போதைய காரணம் அவன் கழுத்தில் புதிதாக ஏறியிருந்த கழுத்து வலிக்கு போடும் காளர்.

தான் அவளை போய் பார்க்காததுக்கு கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது.

கழுத்து வலியோடு ஏதோ பறிகொடுத்தவன் போல் அமர்ந்திருந்த அவனின் தோற்றம் இன்னும் கோபத்தை கொடுத்தது.

“ரொம்ப வலியா?”, என்றாள்.

“ப்ச், அதை விடு!”, என்று அவன் சொல்லவும் ஒரு மாதிரி எரிச்சலாக…… “நீ எப்படியோ போ!”, என்று ஒரு பார்வை பார்த்தாள். 

“எப்போ வேணா இன்ஸ்பெக்ஷன் வரலாம், அதான் கணக்கு வழக்கு சரி பார்த்துட்டு இருக்கேன், அதான் வரமுடியலை”, என்றான் விளக்கம் கொடுக்கும் விதமாக.

“ஒரு நிமிஷம் உனக்கு என்னோட போன்ல பேசக் கூடவா நேரமில்லை”,

“அது கொஞ்சம் டென்சன் சக்தி”,

“நீ சொல்ற காரணம் உனக்கே சரியா படுதா……..”,

“நிஜமாவே என்கிட்ட நேரமேயில்லை சக்தி… நான் ஒரு நிமிஷம் இன்னும் நேத்துல இருந்து தூங்கக் கூட இல்லை….”,

“என்ன நேரமில்லை?…. சரி சாப்பிடலை… தூங்கலை…… இப்படி பலது சொன்னாலும் தண்ணி கூடவா குடிச்சிருக்க மாட்ட……. அது உன்னோட அத்தியாவசியமா இருக்கும் போது…… நான் உன்னோட அத்தியாவசியம் இல்லையா…..”,   

கார்த்திக் பதில் பேசாமல் மௌனியாக நிற்க…….

“உன்கிட்ட கெஞ்சி பார்த்துட்டேன்…. கோவப்பட்டு பார்த்துட்டேன்…….. மிஞ்சி பார்த்துட்டேன்…… நல்ல விதமா சொல்லி பார்த்துட்டேன்…… இனிமே நிஜமாவே எனக்கு உன்னை எப்படி அப்ரோச் பண்றதுன்னு தெரியலை……”,

“உனக்கா எப்போ என்கிட்டே வரனும்னு தோணுதோ! அப்போ வா”, என்று சொல்லி கிளம்ப….

“ப்ளீஸ் சக்தி! புரிஞ்சிக்கோ! நீயே என்னை புரிஞ்சிக்கலைன்னா எப்படி….. பிரச்சனை முடிஞ்சதும் வந்துடுவேன்”,

“நீ பிரச்சனையோட என்கிட்டே வரக் கூடாதுன்னு நான் சொல்லியிருக்கனா என்ன?…….. நீ எப்படி வந்தாலும் எனக்கு சம்மதம் கார்த்திக்……… அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற…….. சும்மா பிரச்சனை முடிஞ்சதும், முடிஞ்சதும்னு சொல்லாதா…….”,

“நீ கணக்கு வழக்கு சரிபண்ணலாம்…… நீ பண்ணின எதுக்குமே ப்ஃரூப் இல்லாம பார்த்துக்கலாம். ஆனா?……. நீ கிரானைட் எடுக்கறேன் குடைஞ்சு வெச்ச மலையையும் தோண்டி வெச்ச பள்ளதையும் என்ன பண்ணப் போற……”,

“மலையை சிமென்ட் கொண்டு அடைக்க போறயா, இல்லை பள்ளத்தை மண்ணு போட்டு மூடப் போறயா”,

நிதர்சனங்கள் அங்கிருந்த கார்த்திக்கையும்… செல்வத்தையும் பலமாக தாக்கியது. இது கார்த்திக்கிற்கு  தெரிந்தது தான் என்றாலும் அவன் சிறு பெண்ணாக நினைக்கும் சக்திக்கே தெரிகிறதே என்பது தான் அவனின் எண்ணம்.

இன்னும் அவன் பார்வையில் சக்தி திறமையானவள் என்று ஒப்புக் கொள்ள மனம் வராமல் முரண்டிக் கொண்டே இருந்தது……

அவளால் இந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்ற எண்ண ஓட்டமே அவனுக்கு வரவில்லை.

“எதுவுமே முடியாது……”, என்றவள் நடக்க ஆரம்பித்துவிட்டாள்……

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்தவன்….. வேகமாக அவள் புறம் ஓடி….. “கார்த்திக் கூட இல்லைனாலும் சக்தி ஜெயிப்பா”, என்றான்.

அவனை விழியகற்றாமல் நீண்ட ஒரு நிமிடம் பார்த்தவள்….. “கண்டிப்பா கார்த்திக் இல்லைன்னாலும் சக்தி ஜெயிப்பா! அதுல உனக்கு சந்தேகமே வேண்டாம்! ஆனா அதுல அவளுக்கு சந்தோசம் இருக்காது!”, என்று சொல்லி வேகமாக சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

பின்னாலேயே வந்த செல்வம்….. “நான் சொன்னாலும் நீங்க எதுவும் கேட்க மாட்டீங்க, எனக்கு தெரியும் பாஸ்! இருந்தாலும் சொல்றேன்! அவங்க ஜெயிக்கறதுக்காக நீங்க அவங்க கூட இருக்கீங்களோ இல்லையோ? நீங்க ஜெயிக்கறதுக்காக அவங்களை கூட வெச்சிகோங்க பாஸ்!”, என்றான்.

எதற்கும் கார்த்திக்கிடம் இருந்து பதிலில்லை…. 

செல்வமும் கிளம்ப, “சக்தி கூடவே இருடா”, என்றான் செல்வத்தை பார்த்து.

“நீங்களா அவங்களை தேடி வர்ற வரைக்கும், அவங்க கூட தான் நான் இருப்பேன் பாஸ்”, என்றான்.

அவனின் தோளில் தட்டி கொடுத்த கார்த்திக் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.                    

திருமணத்திற்கு பத்து நாட்களே இருந்தன….. அழைப்புகள் எல்லாம் ஓரளவிற்கு முடிந்து சிலது மட்டுமே பாக்கி இருந்தது.

கார்த்திக்கின் வீடு திருமண வேலைகளில் மிகவும் உற்சாகமாக இருந்தது. பிரபு அதைவிட உற்சாகமாக இருந்தான். எத்தனையோ மனவுளைச்சல்களையும் பிரச்சனைகளையும் கார்த்திக் நாளுக்கு நாள் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும்  எதையும் வெளிக்காட்டவில்லை…….      

ஒரே தங்கை அவளுடைய திருமண ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்தான்…….. 

அன்று சக்தி வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்…… அன்றாவது வருவான் என்று மிகவும் எதிர்பார்த்தாள்…… கார்த்திக் வரவேயில்லை.

அங்கே செல்ல கிளம்பும் சமயம் வரை ஒரு எதிர்பார்ர்பு…. ஒரு வேளை நான் மனு தாக்கல் செய்கிறேன் என்று தெரியாதோ என்று வேறு அந்த பேதை உள்ளம் நினைத்தது.

மெதுவாக செல்வத்திடம், “என்ன பண்றான் உங்க பாஸ்….. நான் இன்னைக்கு வேட்பு மனு தாக்கல் செய்யறது தெரியாதா?”,

தயங்கினாலும் செல்வம் உண்மையை சொன்னான்….. “தெரியும்”, என்று….

“ஒஹ்! அவனுக்கு வர நேரமில்லையா! இன்னைக்கு எந்த கணக்கை பார்க்கிறானாம்…..”,

“ஏதோ வேற வேலைன்னு சொன்னாங்க”,

“வேலையிருக்குன்னு நாளைக்கு அவன் தங்கச்சி கல்யாணம் நடக்கும் போது போகாம இருப்பானா என்ன? அவனுக்கு வர இஷடமில்லைன்னு சொல்லு”, என்றாள் கோபமாக.

“அவன் சொன்னான் கூட இருப்பேன்னு…… அவன் சொன்னான்னு தானே நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன், இப்போ என்னை தனியா விட்டுட்டான்”, என்று சொல்லும்போதே சக்தியின் குரல் கலங்கியது.

அவளால் கார்த்திக்கை பற்றி வேறு யாருடனும் பேச முடியவில்லை… வேறு யாரிடத்திலும் அவனை பற்றி குறை கூறவோ, குறைத்து பேசவோ முடியாது.   

சக்தி கலங்குவது பிடிக்காமல்…….  

“அது அப்படியில்லை மேடம்…….. நிறைய பிரச்சனைகளுக்கு நடுவுல இருக்கார், உங்க கூட இந்த சமயத்துல வந்தா….. நாளைக்கு பிரச்சனையாகும் போது உங்க பேர் கெடும்னு……. உங்க வெற்றி பாதிக்கும்னு………”, என்று செல்வம் இழுக்க…….

சக்தி வெடித்தாள்…….“உலகத்துல நீங்க மட்டும் தாண்டா புத்திசாலிங்க! அதுவும் உன் பாஸ் இருக்கானே….. அவனை தவிர எல்லாம் கூமுட்டைங்கன்னு அவனுக்கு நினைப்பு…. இதே அவனுக்கு எனக்கும் கல்யாணம் நடந்திருந்தா என்ன பண்ணியிருப்பான்….. விட்டுட்டாப் போயிருப்பான்……”,

“என்ன பெரிய பிரச்சனை….. வர்றதுக்கு முன்னாடியே இப்படி அதை பிடிச்சு தொங்கினா எப்படி….. செய்யும்போது தெரியாதா பிரச்சனை வரும்னு…. சொன்னாலும் கேட்க மாட்டேங்கறான்…… அவனவன் பேர்ல பிரச்சனையிருக்கறவனே அரசியல்ல நிக்கறான்….. இதுல கூட இருக்கறவங்களுக்கு பிரச்சனையிருந்தா எனக்கு ஓட்டு போட மாட்டாங்களா…….”,

“செய்யறதை எல்லாம் கெட்டதா செஞ்சிட்டு, இப்போ என்னை பொருத்தவரை மட்டும் ஓவர் நல்லவனா இருக்கான்….. ஓட்டு போடமாட்டாங்களாம்…… என்ன கதை இது….”, 

“இப்படி உருப்படி இல்லாத கதையா செலக்ட் பண்ணி தான் சினிமால போயும் தோத்துட்டு இருக்கான்னு நினைக்கிறேன்…..”,

“அறிவுகெட்டவன் என்ன சொன்னாலும், எப்படி சொன்னாலும் கேட்க மாட்டேங்கறான்……..”, செல்வத்திடம் அவனை சகட்டுமேனிக்கு திட்டினாள். அவள் திட்டுவதை கேட்டுகொண்டிருந்த செல்வத்திற்கு இப்போவே அரசியல்வாதி ஆகிட்டாங்க போல என்று நினைத்து பெருமூச்சு விடுவதை தவிர வேறுவழியில்லை.  

“அவனை ஏன் அறிவுகெட்டவன்னு சொல்லனும், நான் தான் அறிவுகெட்டவ, அவனை பத்தியே நினைச்சுட்டு இருக்கேன்……”,

“இவன் என் கூட இருந்தா எனக்கு பிரச்சனை வருமாம்…… நீதான் உன் பாஸ் சொல்றதை நம்பிட்டே உட்கார்ந்திருக்கனும்…… அதுக்கு சக்தி ஆளில்லை….. கிளம்பு நேரமாச்சு”, என்று கோபமாக கத்தினாள்.    

கோபம் எல்லாம் அவள் வீட்டை விட்டு கிளம்பும் வரையில் தான். வெளியில் அவளோடு வேட்புமனு தாக்கல் செய்ய கூட இருந்த ஆட்களை பார்த்தும் முகம் புன்னகையை பூசியது…

அவர்களோடு பேசிக்கொண்டிருந்த தந்தையோடு போய் சேர்ந்து கொண்டாள்….

சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்று பேச ஆரம்பித்தாள். 

“இவர்களா என்னிடம் இப்படி கத்தியது”, என்று செல்வம் யோசிக்கும்படியாக இருந்தது….. இருந்தாலும் இது சக்தியின் இயல்பான சிரிப்பு அல்ல அவள் வரவழைத்துக்கொண்ட சிரிப்பு…. அந்த சிரிப்பில் ஒரு இறுக்கமும் கூடவே இருந்தது.

செல்வத்திற்கு சற்று கவலையாக இருந்தது…… அந்த கூட்டத்திற்கு மத்தியில்….. அந்த கரை வேட்டிகளுக்கு  மத்தியில்……. அந்த அடிமட்ட தொண்டர்களுக்கு இடையில்… சக்தி ஒட்டாமல் தான் தெரிந்தாள்.   

அவள் சமாளிப்பாளா என்று கவலையாக இருந்தது. அவனுடைய பாஸின்மேல் அவனுக்கே கோபம் கோபமாக வந்தது. 

அவன் இப்போதைக்கு செய்ய கூடியது மட்டுமெல்லாம் சக்தியின் நிழலாக இருப்பது மட்டுமே….. ஆனால் அதிலும் ஒரு சிக்கலாக கார்த்திக்கின் மேல் இருக்கும் கோபத்தை செல்வத்திடம் கண்டிப்பாக சக்தி காட்டுவாள்….

“எத்தனையோ பார்த்துட்டோம்! இதை பார்க்க மாட்டோமா?”, என்ற மனப்பான்மையோடு சக்தியின் அருகில் போய் நின்று கொண்டான்.  அவனை தாண்டியே யாரும் சக்தியை அணுக முடியும். 

சக்தி பிரியதர்சினியின் வேட்புமனு தாக்கல் கார்த்திக் இல்லாமலேயே வெற்றிகரமாக முடிந்தது.

சக்தி பிரியதர்சினியின் பிரச்சாரமும் கார்த்திக் இல்லாமலேயே ஆரம்பித்தது……

ஆக மொத்தத்தில் அரசியலை பொருத்தவரை கார்த்திக் இல்லாமல் சக்தியின் பயணம் தொடங்கியது.

 

Advertisement