Advertisement

 

  அத்தியாயம் முப்பத்தி மூன்று:

தன்செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு                                                                                              நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்                                                                                

நின்னைச் சரணடைந்தேன்

(பாரதி)

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதின் பாரமெல்லாம் இறங்கி லேசாக உணர்ந்த கார்த்திக் வீடு வந்த போது… பிரபுவும் சிவாவும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

சுமித்ராவும் சிவாவும் அன்று பிரபுவின் வீட்டிலேயே இருந்து கொண்டனர்….. சுமித்ராவும் வைஷ்ணவியும் உறங்க சென்றிருந்தனர்.

“நீங்க ஏன் தூங்காம உட்கார்ந்திருக்கீங்க”, என்ற கார்த்திக்கின் கேள்விக்கு….                                                                 

“அத்தை உட்கார்ந்து இருந்தாங்க….. நீங்க போங்க, நான் இருக்கேன்னு சொல்லி அனுப்பினேன்.. நான் இருக்கேன்னு சிவாவும் உட்கார்ந்துட்டாரு…….”,

“நாங்க வந்து ரொம்ப நேரம் ஆகிடிச்சு, நீ ஏன் இவ்வளவு நேரம்”, என்றான் பிரபு.

“பேசிட்டே இருந்தேன் டைம் ஆகிடுச்சு……”, என்றான் கார்த்திக் சொல்லும் போது அவன் முகம் மலர்ந்து இருக்க…..

“இது கார்த்திக் தானா”, என்று ஆச்சர்யமாக பார்த்த சிவா……. “இன்னைக்கு நிறைய மாற்றம் கார்த்திக் உங்ககிட்ட”, என்றான் மனதார…

ஒரு புன்னகை மட்டுமே பதில்……

பிறகு இருவரின் அருகில் அமர்ந்தவன்……. “பிரபு உனக்கும் வைஷ்ணவிக்கும் கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாமா”, என்றான்.

“முதல்ல நீ பண்ணிக்கோ, நீ என்னை விட ஒரு வருஷம் பெரியவன்….”,

“முதல்ல உன் கல்யாணம் நடக்கட்டும்”,

“ம்கூம், உன்னதுதான்”,

“சொன்னா புரிஞ்சிக்கோ பிரபு….. வைஷ்ணவியும் சுமித்ராவும் ஒண்ணா சுத்திட்டு இருந்தாங்க…. சுமித்ரா வைஷ்ணவியை தேடுறதை விட…… வைஷ்ணவி சுமித்ராவை அதிகம் தேடுவா……”,

“அம்மாவை விட அவங்க ரெண்டு பேரும் தான் அதிகம் பேசிக்குவாங்க….. அதுல சுமித்ராக்கு கல்யாணம் ஆகிடுச்சு, அதனால வைஷ்ணவிக்கும் பண்ணனும். அதுக்கு அப்புறம் நான் பண்ணிக்கறேன். நான் என்ன பண்ணிக்க மாட்டேன்னா சொல்றேன்”,

“உன்னை என்னால நம்ப முடியாது……. அவ்வளவு லவ் இருந்தும் ஒரு வார்த்தை கூட உன்வாயில இருந்து வரலை, ரொம்பவும் ஒரு எக்ஸ்ட்ரீம்ல தான் சொல்லியிருக்க…….  கோபம் வந்தா நீ என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியாது….. ஆனா நான் சக்தியை நம்பறேன்…… அவங்க உங்க கல்யாணம் நடக்கும்னு சொன்னா, நான் எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்….”,

“உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் நான் எங்க அம்மா கிட்ட பேசப் போறேன், அதுக்கு அப்புறம் தான் அய்யா கிட்ட  பேசப் போறேன்… இப்போ எப்படி சக்தியை சொல்லுன்னு சொல்லுவேன்”,

“ஏன் அவங்க மாட்டேன்னு சொல்லிட்டா, வேற யாரையாவது கல்யாணம் பண்ண போறியா நீ”, என்றான் பிரபு.

“டேய்!”, என்று கார்த்திக் எரிச்சல் பட….

“அப்புறம் எதுக்கு அதையும் இதையும் சொல்ற! சக்தி சொல்லட்டும்! அதுக்கு அப்புறம் நான் என் முடிவை சொல்றேன்… இப்போ தூங்கப் போகட்டுமா”, என்று எழுந்தான்.

“தோ பாரு பிரபு! நீ எப்போ வைஷ்ணவியை கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீயே முடிவு பண்ணிக்கோ….. ஆனா எப்போன்னாலும் உங்க கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் தான் என் கல்யாணம் நடக்கும்…. அவ்வளவுதான்…… அதுக்காக நான் சக்திகிட்ட போய் நீ என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு வாக்குறுதி குடுன்னு எல்லாம் கேட்க முடியாது..  உனக்கு என்ன தோணுதோ செஞ்சிக்கோ”, என்றபடி கார்த்திக் செல்ல ஆரம்பிக்க….

“ஏண்டா? ஏண்டா? உனக்கு இவ்வளவு திமிர், சக்திகிட்ட கூட கேட்க மாட்டியா”,

“நான் யார் கிட்டயும் எதையும் கேட்க மாட்டேன்! உரிமையா கேட்க கூடிய தைரியம் எனக்கு இல்லை……. விட்ரு, உனக்கு புரியாது! ஏன்? யாருக்கும் புரியாது!”, என்று சொல்லி நிற்காமல் சென்றுவிட்டான்.

சிவா ஆதரவாக பிரபுவை தட்டி கொடுத்தவன்…… “நீ இவர் கிட்ட பேசறதை விட சக்திகிட்ட பேசலாம்…..”,

“எப்பவும் இப்படிதான் யார் பேச்சையும் கேட்கவே மாட்டான்…. இப்போ சக்தியை சொல்ல சொல்லுனா அவங்க கிட்ட கூட கேட்க மாட்டேன்னா எப்படி?”, என்று பிரபு வருத்தப்பட…..

“சக்திகிட்ட பேசலாம்”, என்றான் சிவா…….

அடுத்த நாளே சக்தியை கல்லூரியில் சந்தித்தான் சிவா….. பிரபு, “நான் வரலை நீங்க பேசுங்க”, என்று விட்டான்.

பிரபுவிற்கும் கார்த்திக்கிற்கும் நடந்த வாக்குவாதத்தை சக்தியிடம் சொன்னான் சிவா.

“கார்த்திக், ஒரு அண்ணனா பேசறான் அதுல என்ன தப்பு…..”, என்றாள் சக்தி. கார்த்திக் உன்னிடம் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான் என்று சிவா சொன்னதை ஒதுக்கினாள். அதை சிவாவும் உணர்ந்தான்.

சிவாவின் முகத்தில் புன்னகை…. “எப்பவும் கார்த்திக்கை விட்டுக் குடுக்காதீங்க………”,

இப்போது சக்தி முகத்தில் புன்னகை…. “என்ன பண்றது? சொல்ற பேச்சை அவங்க கேட்க மாட்டாங்க…… அப்போ இப்படி தானே போயாகனும்”, என்றாள்.

சக்தி முயன்று மரியாதை பன்மையை பேச்சில் கொண்டு வந்தாள்.

“ரெண்டு பேரும் பிடிவாதமா இருக்காங்க…… பிரபு முதல்ல கார்த்திக்ன்றான்….. கார்த்திக் முதல்ல பிரபுங்கறாங்க”,

“என்ன பண்ணலாம்?”, என்றாள் சக்தி.

“அதுக்கு தானே உங்க கிட்ட பேச வந்திருக்கேன்….”,

“கார்த்திக் கிட்ட பேசிப் பார்க்கிறேன்……. அப்போ கூட வைஷ்ணவிக்கு கல்யாணம் பண்ணாம ஒத்துக்குவாங்கன்னு தோணலை….. அதுவுமில்லாம சிவா நீங்க புரிஞ்சிக்கனும்…. நான் கார்த்திக் கிட்ட  போய் நம்ம கல்யாணம் முன்ன நடக்கனும்னு எப்படி சொல்லுவேன்….. அது முடியாது….  வேற ஏதாவதுன்னா பரவாயில்லை…. அவங்க தங்கச்சி கல்யாணம் நடக்கனும்னு நினைச்சிருக்கும் போது என்னால முடியாது…”,

“நீங்க என் பேட்ச் சக்தி…”,

“கார்த்திக்காக நான் எவ்வளவு நாள்னாலும் வெயிட் பண்ணுவேன்”, என்றாள் புன்னகையோடு. 

“என்ன சக்தி இப்படி சொன்னா எப்படி…..”,

“நான் தான் பேசறேன்னு சொல்றேன்ல, ஆனா கண்டிப்பா நடக்கும்னு சொல்ல முடியாது”.

அரை மனதோடு எழுந்து போனான் சிவா………

அவன் போனவுடனேயே கார்த்திக்கிற்கு போன் அடித்தாள் சக்தி……

வெகு நேரம் கழித்தே எடுத்தான் கார்த்திக்…. எடுத்தவன் உடனேயே, “முக்கியமான விஷயம்னா சொல்லு சக்தி! இல்லைன்னா அப்புறம் பேசலாம்”, என்றான்.

“முக்கியமா இல்லையான்னு எனக்கு தெரியலை?”,

“சொல்லு”,

“பிரபு உங்கிட்ட ஏதோ பேசினாறாமே அதை பத்தி….”,   

“அப்புறம் பேசலாம் சக்தி, நானே கூப்பிடறேன்”, என்றான்…….

சொன்னவன் தான்…… இரண்டு நாட்கள் யார் கண்ணிலும் படவில்லை…. வேலை என்று சொல்லி குவாரி ஆபிசிலேயே தங்கிக்கொண்டான்.

இது மட்டுமே எல்லோருக்கும் தெரிந்த விவரம்…. சக்தி சில முறை அழைத்த போது கூட….. “வில் கால் லேட்டர்”, என்ற மெசேஜ் மட்டுமே வந்தது.

“பத்து வருஷமா காதலிச்சதை ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்லிட்டு, ரெண்டு நாளா ஆளைக் காணோம்! என்ன பண்றது இவனை?”, என்று தான் சக்திக்கு தோன்றியது.

“வரமுடியலைன்னாலும் ஒரு போன் கூடவா பண்ண கூடாது! என்ன சொல்ல?”, என்று சலிப்பாக இருந்தது…

அவனை கண்டால் தாறுமாறாக திட்ட வேண்டும் என்றதற்கு மாறாக….. அவனை கண்டவுடன் பேச்சே மறந்துவிட்டது….

இரண்டு நாட்கள் கழித்து அவள் கல்லூரியில் இருந்து கிளம்பும் சமையம் வந்து நின்றான்.                                    

மிகுந்த சோர்வான தோற்றம்… களைப்பு அவன் கண்களில், உடல் மொழியில் நன்கு தெரிந்தது…..    

படிகளில் இறங்கி கொண்டிருந்தவள், கார்த்திக்கை பார்த்ததும் அவன் அருகில் வருவதற்காக நின்றாள்.

வந்தவன், “சாரி! நிறைய வொர்க் அவுட் பண்ண வேண்டி இருந்தது! அதான் என்னால பேச முடியலை….”,

பேசமால் அவள் திரும்பவும் அவளின் ரூம் நோக்கி நடக்க பின் தொடர்ந்தான்….. “கேண்டீன்ல காஃபியும் ஸ்நாக்ஸ்சும் வாங்கிட்டு வாங்க”, என்று ப்யுனை பணித்தாள்.

வந்து அமர்ந்தவன் அவனையறியாமல் கழுத்தை பிடித்தான்.

“என்ன ஆச்சு கார்த்திக்……?”,

“கழுத்து வலி…. அப்பப்போ வருது! அப்பப்போ போகுது!”,

“ஏன் வருது, டாக்டர் கன்சல்ட் பண்ணுனியா இல்லையா?”,

“பண்ணினேன்! ஒரு ப்ராப்ளமும் இல்லை! பட், ஐ டோன்ட் நோ வை? டென்சன் ஆனா அதிகமாகும்….”,

“இப்போ எதுக்கு டென்சன்…..”,

ஒரு புன்னகை மட்டுமே பதில்…..

சக்தி கடுப்பாக, “நீ சிரிச்சா நான் மயங்குவேன்னு உன்கிட்ட சொன்னேனா”, என்றாள்.

எதற்கு இந்த பேச்சு என்பது போல் கார்த்திக் பார்க்க……

“அப்படியெல்லாம் எதுவுமில்லை…. அதனால நீ ஒழுங்கா எனக்கு பதிலை சொல்லு”, என்றாள்.

“சொல்ற மாதிரி இருந்தா சொல்ல மாட்டேனா”,

“முன்னாடி நடந்த உன் வாழ்க்கையின் ரகசியங்கள் எதுவும் நான் கேட்கலை கார்த்திக், ஆனா இப்போ நடக்கறதை கூட சொல்லலைன்னா எப்படி…. ஏதோ சினிமா தயாரிக்கிறியாமே! அதுல ரொம்ப நஷ்டமாமே! அதனால இப்படி இருக்கிறியா!”,

“ப்ச், அப்படி எல்லாம் எதுவுமில்லை!”, என்று அவன் சொல்லும்போதே… காபியும் பப்சும் வர….

“முதல்ல சாப்பிடு”, என்று அவன் புறம் நகர்த்தினாள். 

“உனக்கு” என்றான் வலிக்கும் கழுத்தை தடவிக்கொண்டே….

“நீ சாப்பிடு”, என்றவள், “ரொம்ப வலிக்குதா? நான் கழுத்தை பிடிச்சிவிடட்டா?”, என்று அவள் எழவும்…..

“வேண்டாம், வேண்டாம்”, என்று அவசரமாக மறுத்தான்….

அவன் மறுத்த வேகத்தை பார்த்த சக்தி… “ஈசி ஒன்னும் பண்ணலை உன்னை”, என்றாள்…   

“ப்ளீஸ் சக்தி புரிஞ்சிக்கோ”,

“என்னத்தை புரிஞ்சிக்க தெரியலையே!”, என்று வாய்க்குள்ளயே முணுமுணுக்க…..

“நீ தொட்டா நான் கரைஞ்சிடுவேன்னு”, என்று சத்தம் கேட்க……

கார்த்திக் பேசினானா என்பது போல் சக்தி அவன் புறம் பார்த்தாள்….  

அவனோ அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…..

இவன் பேசினானா? இல்லையா? என்று சக்தி யோசிக்கும் போதே பிரபு வந்தான்.

“என்ன கார்த்திக் வர சொன்ன……”,

“உட்காரு கொஞ்சம் பேசனும்…..”,

பிரபு அமரவும்……. “கொஞ்சம் தனியா பேசனும், எங்கயாவது போகலாமா”,

“ரொம்ப டயர்டா தெரியற கார்த்திக்! எங்கயும் அலையாத…… இங்கேயே உட்கார்ந்து பேசு……. நான் வெளில வெயிட் பண்றேன்”, என்று சக்தி எழ……

“நீங்க உட்காருங்க சக்தி…… என் விஷயம் உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு எதுவும் இல்லை……… இவனோட விஷயம் உங்களுக்கு தெரியாம இருக்கக் கூடாது”, என்று பிரபு சொல்ல…..

“இல்லை, நான் போறேன்”, என்று சக்தி செல்ல….

பிரபு கார்த்திக்கை முறைத்தான், “ரொம்ப ஓவரா பண்ற நீ”, என்று…..

சாதாரண நேரமாக இருந்தால் கார்த்திக் அவனை விடவும் அதிகமாக பேசுவான்……. இரண்டு நாட்கள் இடைவிடாத உழைப்பு களைப்பை கொடுக்க……..

“இரு சக்தி”, என்றான்.

“பரவாயில்லை கார்த்திக்! எனக்கொன்னும் பிரச்சனையில்லை, ஐ வில் வெயிட் அவுட் சைட்”,    

“ப்ளீஸ், உட்காரு”, என்று அவளின் கைபிடித்து இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டான். “ஒருவேளை நான் சொல்றதை இவன் சரியா புரிஞ்சிக்கலைன்னா கன்வின்ஸ் பண்ண ஈசியா இருக்கும்…”,

அமைதியாக அவனின் அருகில் அமர்ந்து அவனின் பேச்சை கேட்க ஆரம்பித்தாள்.

“பிரபு உனக்கு தெரியாததில்லை……. இந்த வாசுகி குழுமம் எங்க அம்மாவை ஜஸ்ட் பார்த்துக்க சொல்லி தாத்தா கொடுத்த சொத்து. ஆக்சுவலா அது உங்கப்பாவுக்கு சேர வேண்டியது…. தெரியும் தானே?”,

“இப்போ எதுக்கு அந்த பேச்செல்லாம்”,

“தெரியுமா? தெரியாதா?”,

“தெரியும்!”,

“அதை எங்கப்பா யாருக்கும் தெரியாம வீரமணி அய்யாக்கு எழுதிக்கொடுத்தது தெரியுமா? தெரியாதா?……”,

“தெரியும்….”,

அவன் தெரியும் என்று சொன்னவுடன், லாப் டாப்பை திறந்து அதில் காட்டினான். 

“இது உங்கப்பாவோட சொத்து……. அன்னைய தேதில இருந்த அதோட மதிப்பு… அதுக்கு அப்புறம் அதுல இருந்து இத்தனை வருஷமா நியாயமா என்ன லாபம் வந்திருக்குமோ, அந்த அமௌன்ட்…….  அதோட இன்ட்ரெஸ்ட்….. இப்போதைய அதோட மதிப்பு எல்லாம் சேர்த்து…. இவ்வளவு”, என்று காட்டினான்.

சக்தி அதை பார்த்தாள்… தங்களுக்கு கொடுத்த அளவு இல்லையென்றாலும் அதில் பாதி இருந்தது.                 

மலைப்பாக இருந்தது சக்திக்கு…. அதைவிட பிரபு அவனுக்கு பேச்சே வரவில்லை.

“இந்த அமௌன்ட் நான் உனக்கு செட்டில் பண்ணனும்……..”,

“நான் உன்கிட்ட கேட்கலையே”, என்று பிரபு சொல்ல….. அதை காதிலேயே வாங்காமல்… 

“இதெல்லாம் இந்த மதிப்பு வர்ற சொத்துக்கள் அண்ட் ஷேர்ஸ்…..”, என்று லாப் டாப்பில் ஒரு லிஸ்டை காட்டினான்……..

“லிக்விட் காஷ் எதுவும் கிடையாது! எல்லாத்தையும் மொஸ்ட்லி இவங்களுக்கு செட்டில் பண்ணிட்டேன்! என்று சக்தியை காட்டியவன்…… “கொஞ்சம் இருந்ததையும் படம் எடுத்து கரைச்சுட்டேன்……”,

“இந்த சொத்தை நீ வாங்கிக்கோ!”,

“எனக்கு வேண்டாம்!”, என்றான் பிரபு…… இது கார்த்திக் ஒரு வகையில் எதிர் பார்த்ததுதான்….. அதனால் அசையாமல் நின்றான்…….         

“பாரு பிரபு! உனக்கு வேணும் வேண்டாம்ன்றது பிரச்சனை கிடையாது! இது உங்களுக்கு சேர வேண்டியது…… நான் கொடுத்து தான் ஆவேன்”,

“வேண்டான்றேன், அப்புறம் கொடுத்து தான் ஆவேன்னா என்ன அர்த்தம்?”,

“ஒரு அர்த்தமும் கிடையாது….. நான் உனக்கு கொடுத்துடறேன், அதுக்கு அப்புறம் உனக்கு என்ன வேணுமோ அதை நீ முடிவு பண்ணிக்கோ”,   

“இல்லை! எனக்கு வேண்டாம்!”, என்றான் திடமாக பிரபு.

“புரிஞ்சிக்கோ பிரபு….. இந்த சொத்துனால தான் ப்ரச்சனையே…… ஆனா அந்த சொத்தை உங்களுதுன்னு சொல்லிட்டாலும், உங்களுக்கு குடுக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன்….”,  

“அதுக்குண்டான பணத்தை வாங்கிக்கோ! தயவு செஞ்சு எனக்கு இந்த பிரச்சினையில இருந்து விடுதலை கொடு….. எங்கப்பா எதையும் ஏமாத்தினதா இருக்க வேண்டாம்! வாங்கிக்கோ!”,

“வேண்டாம் கார்த்திக்! நாங்க அதை அத்தைக்கு குடுத்ததாவே இருக்கட்டும்”,

“அப்படி நினைச்சு உங்க தாத்தா பேசலை! இனி அதை பேசியும் பிரயோஜனமில்லை! வாங்கிக்கோ!”,

“முடியாது……”,

“முடியாதுன்னா இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது…. நான் அம்மாவையும் வைஷ்ணவியையும் கூட்டிட்டு வெளில போயிடுவேன்… உங்க வீட்டுக்கு நான் பொண்ணும் குடுக்க மாட்டேன்…”,

“என்ன ப்ளாக் மெயில் பண்றியா?”,

“நீ எப்படி வேணா வெச்சிக்கோ……”,

“நீ என்ன பண்ணினாலும் வைஷ்ணவியை என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது கார்த்திக்”,

“ஏன்? நான் மட்டும் தான் எங்கப்பாக்கு பிறந்தனா? அவ பிறக்கலை? ஏழூருக்கு வாயடிக்கறா…. எங்கப்பாக்கு நேர்ந்த அவமானம் அவளுக்கு இல்லையா…. அதையும் மீறியா அதை துடைக்காம நீ வேணும்னு கல்யாணம் பண்ணிக்குவா”,

“பண்ணிக்க மாட்டா…. மீறி பண்ணிக்கிட்டா…. கொன்னுடுவேன்”,

“கார்த்திக்”, என்று அதட்டினாள் சக்தி.

“நீ இதுல தலையிடாத சக்தி, உன் வேலையை பார்”, என்று எரிந்து விழுந்தான். 

“ஏண்டா இப்படி பையித்தியம் மாதிரி பேசற…… என்னடா அப்படி உங்கப்பா மேல உனக்கு பையித்தியம்”, 

“ஆமா! நான் பையித்தியம் தான்….. எங்கப்பா மேல பையித்தியம் தான்… அவருக்காக தான் எல்லாமே! உங்களுக்கு சொத்து திருப்பி கொடுக்குற விஷயத்துக்காக தான் நான் வீட்டை விட்டு வந்து…… இவ்வளவு தப்பான வேலைகளை செஞ்சு…….. என் எதிர்காலத்தை அழிச்சிகிட்டு……..  என் மனசோட நான் போராட்டிட்டே இருக்கேன்….”,

சொல்லும்போதே கழுத்தில் சுளீரென்று வலி….

“இப்போ அதையெல்லாம் தேவையில்லைன்னு நீ ஒரு வார்த்தையில சொன்னா… நான் விட்டுடுவேனா….”,

“உனக்காக அடுத்தவங்களை நீ சிரமப்படுத்துவியா….. கொல்லுவேன்னு எல்லாம் சொல்லுவியா”,

“வேற என்ன பண்ண சொல்ற? என்னை சாக சொல்றியா? இந்த சொத்தை நான் உங்களுக்கு கொடுக்கலைன்னா என் சாவு ஒன்னு தான் எனக்கு நிம்மதியை கொடுக்கும்….. உனக்கு அது தான் இஷ்டம்னா சொல்லு!”,

“கார்த்திக்!”, என்று கத்தினாள் சக்தி.

“இதுக்கு தான் நான் தனியா பேசறேன்னு சொன்னேன்! நீதானே சக்தி இருக்கட்டும்னு சொன்ன…….”, என்று பதிலுக்கு பிரபுவை பார்த்து குரலுயர்த்தி பேசியவன்….

“என்னன்னு சொல்லு…… எப்படியிருந்தாலும் இதெல்லாம் உன் பேர்ல தான் இருக்கு! அதுல மாற்றமில்லை!”, என்று சொல்லி சென்று விட்டான்.

செல்லும் அவனை பார்த்தனர்… கழுத்தை தடவிக்கொண்டே சென்றான்…. 

கார்த்திக்கின் வலியை சக்தி உணர்ந்தாள்…… இந்த கார்த்திக் இன்னும் அவளுக்கு புதிதாய் தெரிந்தான்.

எதுவும் செய்ய இயலாதவளாக சக்தி பார்த்தது பார்த்தபடி நின்றாள்…..

திரும்பிய சக்தி, பிரபுவை பார்த்தாள்……

“ஏன் பிரபு? எதுக்கு இவ்வளவு பிடிவாதம்….? அவங்க சொல்றது நியாயம் தானே அவங்கப்பா செஞ்சதுக்கு கார்த்திக் திருப்ப நினைக்கிறாங்க….. வாங்கிக்கங்க அதுக்கப்புறம் அதை என்ன பண்ணனுமோ நீங்க முடிவு பண்ணிக்கங்க……”,

“அவனுக்கு இல்லையில்லை, அவங்களுக்கு ஏன் இவ்வளவு டென்சன் குடுக்கறீங்க”, என்று பிரபுவிடம் சண்டைக்கு போனாள்.

“அவன் எங்களுக்கு திருப்ப நினைக்கறது சரி சக்தி! ஆனா அதை அவன் நியாயமா செய்யலையே….. ஏன் நீங்களே கூட அவனை திருடன்னு சொல்லியிருக்கீங்க”,

“கண்டிப்பா! ஆனா அது சொத்தை மீன் பண்ற மாதிரி இருக்கும், நிஜம் அது இல்லை! அவன் என்னை தான் திருடினான்…… விடுங்க, திருடன் என்ன? அதைவிட மோசமா கூட நான் அவனை திட்டுவேன்! that doesnt matter and that should not bother you even……. நியாயமோ? அநியாயமா? அது அவனோடது……. உங்களை பாதிக்காது பாதிக்கவும் விடமாட்டான்… நீங்க அதை பத்தி பேசாதீங்க..”, என்றாள் கறாராக.  

“என்ன பண்ணட்டும்”, என்றான் பிரபு ஒரு பெருமூச்சை வெளியேற்றி….. 

“நீங்க சொல்லுங்க”,

“கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லுங்க”,

“அப்போ சொத்து?”,

“அதை வாங்கலைன்னா பொண்ணு குடுக்க மாட்டேங்கறானே, என்ன பண்ண…. உங்களை அப்படி திட்டினானே கோவம் வரலை… இவ்வளவு அவனுக்காக பேசறீங்க”,

“வரலை! என்கிட்ட அவன் கோவத்தை காட்டாம வேற யார்கிட்ட காட்டுவான்”,

“நிஜமாவே கார்த்திக் லக்கி தான்…. டு ஹேவ் எ கேர்ள் லைக் யு இன் ஹிஸ் லைப்…. ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்குன்னு அவன் கிட்ட தெளிவா சொல்லிடுங்க….. அட்லீஸ்ட் உங்க நிச்சயமாவது முடிஞ்சா தான் எங்க கல்யாணம்”, என்றான் தெளிவாக பிரபு.    

“சாரி பிரபு! நிச்சயமா என்னால சொல்ல முடியாது, அவன் கிட்ட பேசி வேணா பார்கிறேன்”, என்றாள்.     

“என்னவோ போங்க….. அவன் என்ன செஞ்சாலும்…… சொன்னாலும் தலையாட்டுறீங்க……”, என்றான்.

புன்னகைத்தாள் சக்தி…..   

 

Advertisement