Advertisement

 

   அத்தியாயம் முப்பத்தி இரண்டு :

பேச்சுக் கிடமேதடி – நீ                                                                                                          பெண்குலத்தின் வெற்றியடி                                                                                                                 ஆச்சர்ய மாயையடி – என்றன்                                                                                                    ஆசைக் குமரியடி

                       ( பாரதி )

எல்லோரும் கிளம்பி கீழே வந்தனர்….. பிரபு, வைஷ்ணவியை முதலில் அனுப்பினான் கார்த்திக்…

பின்பு சிவாவையும் சுமித்ராவையும் கிளப்பினான்.    

அவர்களும் சென்ற பிறகு செல்வத்தை பார்க்க….. “ம்கூம் நான் போகமாட்டேன், முதல்ல நீங்க கிளம்புங்க”, என்றான்…..

எப்பொழுதும் போல சக்திக்கு கார்த்திக் சென்று கார் கதவை திறந்து விட…..

“ஒரே ஒரு பாஸ வெச்சிட்டு நான் படர அவஸ்தை இருக்கே…….”, என்று நொடித்தவன் அவன் திறந்த கதவை மூடினான்.

கார்த்திக்கும் சக்தியும் கேள்வியாக பார்த்தனர்.

கார்த்திக் திறந்தது காரின் பின் கதவு…. அதை கடுப்பில் அறைந்து சாத்திய செல்வம்…… முன் பக்க கதவை திறந்து, “ஏறுங்க மேடம்”, என்றான்…..

சக்திக்கு சிரிப்பு…… அவள் சிரித்த முகத்தோடே  ஏறினாள்……

“டேய், இன்னைக்கு நீ ரொம்ப பண்றடா…..”,

“என்ன பண்றது உங்களுக்கு கல்யாணம் ஆன பிறகாவது எனக்கு பொண்ணு பார்ப்பீங்கன்னு தான்”, என்று சொல்லியபடியே டிரைவர் சீட்டின் கதவை அவனுக்காக திறந்து விட்டான்.    

புன்னகையோடே கார்த்திக் ஏற…. “லேட் பண்ணாதீங்க பாஸ்……. சீக்கிரம் வீட்டுக்கு கொண்டு போய் விட்டுடுங்க”, என்று சொல்லியபடி அவர்கள் கிளம்பிய பிறகு தான் அவன் கிளம்பினான்.

“உனக்கு நல்லா ஒரு அடிமை சிக்கியிருக்கான்”, என்று சொல்லியபடியே சக்தி பேச்சை துவங்கினாள்……

“அவன் உன்கிட்ட வேலை பார்க்கிறான்………”,

“என்ன நடக்குதுன்னு உன்கிட்ட சொல்றான் தானே”,

“இல்லை சக்தி, சொல்ல மாட்டான்….. முதல் நாள் சொன்னதோட சரி… அதுக்கப்புறம் ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது….. அடிச்சு கேட்டாலும் வாய் தொறக்க மாட்டான்…..”,

“இப்போ தான் இந்த இன்விடேஷன் லிஸ்ட் எழுதும் போது தான் வந்து என் ஹெல்ப் கேட்டான்……”,

“அப்போ கூட நான் லிஸ்ட் மட்டும் எழுதி கொடுக்கறதா தான் இருந்தேன்…… ஆனா நைட் ஒரு மணிக்கு நீங்க செல்வத்துக்கு போன் பண்ணுனிங்களா….. தூக்கத்துல கூட இந்த யோசனையான்னு இருந்தது…… அதுவுமில்லாம நைட் அந்த நேரத்துல நீங்க போன் பண்ணினது எனக்கு பிடிக்கவேயில்லை……. அதுக்கப்புறம் தான் நான் மறுபடியும் அய்யாவை பார்க்க வந்தேன்…”,

அவன் பிடிக்கவேயில்லை என்று சொன்னது சக்தியின் முகத்தில் புன்னகையை அதிகப்படுத்தியது.

“இந்த நீங்க.. விட்டுடேன்… அப்புறம் மறுபடியும் உன் தங்கச்சி சண்டைக்கு வருவா….. என் அண்ணா உங்களை மரியாதையா கூப்பிடனுமான்னு….”,

“அவ எப்பவும் அப்படிதான் வெடுக் வெடுக்ன்னு பேசுவா….. ஆனா பிரபு நல்லா கண்ட்ரோல் பண்ணுவான்…… அதனால பிரச்சனையில்லை, அன்னைக்கு ஏர்போர்ட்ல உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம் பிரபுகிட்ட ஏர்போர்ட்லயே அடிவாங்கினா போல…..”,

“அடிச்சாங்களா……. அதுவும் பப்ளிக்ல…… தப்பில்ல…..”,

“தப்பு தான்……. ஆனா ரெண்டு பேர்க்குள்ள நான் போகமுடியாது….. ஏண்டா அடிச்சேன்னு கேட்டேன்…… உன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணி குடுக்குற ஐடியா இருந்தா இந்த விஷயத்துல தலையிடாதனான்……”,

“நீ அடிச்சுக்கோ கொஞ்சிக்கோ என்னவோ பண்ணிக்கோன்னு விட்டுடேன்….. ரெண்டும் ரொம்ப க்ளோஸ், யாருக்கு தெரியும்….. தனியா அவகிட்ட மொத்து வாங்குவானா இருக்கும்”, என்றான்

கார்த்திக் சக்தியிடம் பேசுவான், அவளை இதை செய், அதை செய், இதை செய்யாதே, அதை செய்யாதே என்று தான் சொல்லுவான், ஆனால் இப்படி அவனைப் பற்றி பேசியதே இல்லை…..  

சக்திக்கு தெரியவில்லை கார்த்திக் யாரிடமும் இது போல பேசியது இல்லை…… பேசவும் மாட்டான் என்று……..

“சொல்லேன் கார்த்திக்……. உன்னை பத்தி……. எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கனும் போல் இருக்கு……”,

“என்னைப் பத்தியா? என்ன?”,

“உன் லவ் ஸ்டோரிய சொன்ன……. ஆனா ஏன் வீட்டை விட்டு வந்த… எதுக்கு அப்பா கிட்ட வந்த, ஏன் இப்படி பண்ணின?”, என்று நல்லவிதமாக கேட்டாள்.

“நீ ஏன் எங்களை ஏமாற்றினாய்”, என்பதை அவனின் மனம் புண்படாமல் சக்தி கேட்க வருவது கார்த்திக்கிற்கு நன்கு புரிந்தது…..  

காரை ஓரமாக நிறுத்தியவன்…… சக்தியை திரும்பி பார்த்தான்…. 

“என்னை பத்தி தெரியலைன்னா, என்னை ஏத்துக்க மாட்டியா……”,

அவன் குரல் அவளிடம் அவளை யாசித்தது……. “என்ன பேசற கார்த்திக்”,

“நான் செஞ்சது எல்லாமே தப்பு தான் சக்தி…. அதுக்கான காரணத்தை சொல்லி அதை ஜஸ்டிஃபை பண்ண எனக்கு விருப்பமில்லை சக்தி”,

“அதுவுமில்லாம அந்த காரணங்கள்ல எங்கப்பா வர்றார்……. you know i love my dad very much……”, சொல்லும்போது அவனின் கண்கள் பளபளத்தன…..    

“அவரை பத்தின விஷயங்கள் நான் எங்கம்மா கிட்ட கூட சொன்னதில்லை….. அம்மா கிட்ட சொல்லாம நான் யார்கிட்டயும் சொல்ல கூடாது…… எங்கம்மா வாழ்க்கையை அப்பாவோட சரியா வாழலை…. யார் மேல தப்புன்னு எனக்கு தெரியலை….”,

“எங்கம்மா ரொம்ப பாவம்….. சுத்தி நிறைய பேர் இருந்தாலும் கணவன் கூட இல்லாத தனிமையை அனுபவிச்சவங்க……”,

“பிரிஞ்சு இருந்தாங்க……. அப்புறம் அப்பா இறந்துட்டாங்க…. அப்புறம் நானும் விட்டுட்டு வந்துட்டேன்……. இதுவரைக்கும் நான் செஞ்சது எல்லாமே அப்பாக்காக தான்….. எங்கம்மாவை நான் சரியா பார்க்கலைன்னு எனக்கு தோனுது…..”, என்றான்….

கியர் மேல் இருந்த அவனின் கை மேல் அவளின் கை வைத்த சக்தி, “இனிமே நல்லா பார்த்துகோங்க”, என்றாள் ஆதரவாக…….

“எனக்கு தெரியலை, எப்படி பார்துக்கறதுன்னு தெரியலை…. ரொம்ப வருஷம் தள்ளி இருந்துட்டேன்… அதுக்கு முன்னேயும் ஹாஸ்டல் தான்…. அவங்க என்கிட்டே பேசிகிட்டே இருந்தாலும் என்னால அவங்க கேட்கறதுக்கு தான் பதில் சொல்ல முடியுது……. நான் பேசனும்னு நினைச்சாலும் சில வார்த்தைகள் தான் முடியுது….”,

“இந்த விஷயத்துல எனக்கே என்னை பிடிக்கலை……”, அந்த வார்த்தைகள் அவன் அடி மனதின் ஆழத்தில் இருந்து வந்தன….

அவனின் பற்றி இருந்த கையை இன்னும் இறுக்கியவள்……. “நான் பார்த்துக்கறேன் உன் மேல குறை வராத அளவுக்கு நான் பார்த்துக்கறேன், உன்னையும் பார்க்க வைக்கிறேன்”, என்றாள்…….

கார்த்திக், “தேங்க்ஸ்”, என்று சொல்ல வர, அதை தான் அவன் சொல்லுவான் என்று தெரிந்தவள்….. அவன் வாயை தன் கைகளால் மூடியவள்……. “ப்ளீஸ், தேங்க்ஸ் சொல்லிடாத….”,

அவளின் கையை விலக்கி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்….  

“நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன்……”,

“சரி பண்ணலாம்…… எல்லாத்தையும் முடிஞ்ச வரைக்கும் சரி பண்ணலாம்…..”,

“சரி பண்ண முடியாத தப்பைக் கூட பண்ணியிருக்கேன்”, என்றான் தன் தந்தையின் இறப்பை மனதில் கொண்டு……

“அப்போ அதைப் பத்தி பேசவேண்டாம்…….”,

“நான் எப்படி இருக்கனும்னு நினைச்சனோ அதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டா இருக்கேன் சக்தி…. நல்லா படிப்பேன், படிக்க முடியலை…….. எனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ், ஆனா இப்போ யாருமே கிடையாது…… ரொம்ப நேர்மையா நல்லவனா இருக்கனும்னு நினைபேன்……  ஆனா இப்போ நான் நேர்மையானவனும் கிடையாது நல்லவனும் கிடையாது…..”,

சொல்லும்போது குரலில் அவ்வளவு வலி……..

“நீ நேர்மையானவன் இல்லைன்னு சொல்லு, ஆனா நல்லவன் இல்லைன்னு சொல்லாத………. நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்…….. இனியும் அப்படியே இருக்கனும்னு அவசியம் இல்லையே…..  இப்போ மட்டும் என்ன கரஸ்ல படி….. நிறைய ஃபிரண்ட்ஸ் வெச்சிக்கோ…. ஜாலியா இரு….. நேர்மையா இரு……”,

“சொல்றது ஈஸி செய்யறது கஷ்டம்…..”,

“செய்யனும்னு நினைச்சா தான் முடியும்….. முடியாதுன்னு நினைச்சா முடியவே முடியாது….. இதுவரைக்கும் எப்படியோ இனிமேலாவது வாழ்க்கையில சில கோட்பாடுகளை கட்டுபாடுகளை வெச்சிக்கோ…..”,

“மே பீ இவ்வளவு பணம் வராம இருக்கலாம்…. ஆனா பணமே வராம இருக்காது…   ட்ரை பண்ணுவ தானே……”,

“ம்கூம் கஷ்டம்…….. எல்லோருக்கும் அவ்வளவு லஞ்சம் குடுத்து பழக்கி வெச்சிருக்கேன்….. விட்டேன் என்னை முடிச்சிடுவானுங்க…..”, 

“அட்லீஸ்ட் நேர்மையா இருக்குறவங்களை டிஸ்டர்ப் பண்ணாத”,

“ம்”, என்று தலையாட்டியவன்….. “உங்க வீட்ல நான்……”, என்று  ஆரம்பிக்கும்போது….

“அதையெல்லாம் வரதட்சணையா வெச்சிக்கோ”, என்றாள்….

 “உங்க வீட்ல எனக்கு பொண்ணு குடுப்பாங்களா……. முதல்ல சொன்னாங்க சரி…. இப்போவும் சொல்வாங்களா……”, 

“அவங்க பொண்ணு உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவா…. அதனால அவங்களுக்கு வேற வழியே கிடையாது…. அவ அம்மா வேற யோசிக்கவும் மாட்டாங்க….. மணி பாரு பன்னிரண்டு உன்கூட இருக்க விட்டிருக்காங்க இல்லை…”,

“அது என் மேல இருக்குற நம்பிகைன்றதை விட உன் மேல இருக்குற நம்பிக்கை……. உன்கூட இருந்தா எந்த பயமும் இல்லை, நான் அவங்க கூட இருக்குற மாதிரின்னு அவங்களுக்கு தெரியும்”,

“இதை சொல்லக் கூடாது, இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன்… நீ ஏமாத்தி இருந்தாலும் உன்னை இன்னும் நம்பறாங்க…..  ரொம்ப நம்பறாங்க….”,

“நான் இஷ்டப்படறேன், நம்பறேன்னு சொல்லலாம். ஆனா எங்கம்மா, எங்கப்பா எல்லோரும் நம்பறாங்க….. எப்படின்னு எனக்கே தெரியலை, ஏதோ வசியம் இருக்கு உன்கிட்ட….”, என்றாள் கிண்டலாக.

“உன்னை எனக்கு மாப்பிள்ளையா பார்க்கலாமான்னு அப்பா கிட்ட கேட்டு, என் கவனத்தை அந்த மாதிரி உன்மேல திருப்பி விட்டதே என் அம்மா தான்”, 

“ஆனா அம்மா நீ என் பொண்ணு வாழ்க்கையில வருவியான்னு கேட்டப்போ நான் பேசக் கூட இல்லை…….”,

“அது அம்மா கேட்கலை, அவங்க பொண்ணு கேட்டு விட்டிருந்தா…..”,

“என்ன நீயா?”,

“ம்……”,

“நானாவது பார்த்தவுடனே உன் மேல ஒரு க்ரஷ்ன்னு சொல்லலாம்…. உனக்கு……”,

சிரித்தவள்….. “தெரியலை, நீ என்கூட இருந்தவரை ஒன்னுமே தெரியலை…… நீ என்னை விட்டு போன பிறகு உன்னை தவிர வேற ஒன்னுமே தெரியலை”, என்றாள்.

“ஆனா எனக்கு ஒரு வருத்தம் இருக்கு, ஒரு வேளை சுமித்ரா உன் வாழ்க்கையில இருந்து விலகியிருக்கலைன்னா……. நீ என் வாழ்க்கையில வர்ற வாய்ப்பே இருந்திருக்காதே……”,

“நடந்திருக்க வாய்ப்பிருக்கு…….. ஆனா நிச்சயமா நடந்திருக்கும்னு சொல்ல முடியாது…. நானா ஏதாவது செஞ்சிருப்பேன்….. ஆனா அதுக்கான வாய்ப்பை சுமித்ரா எனக்கு குடுக்கலை”,

“இன்னும் எனக்கு கொஞ்சம் ரெஸ்பான்ஸிபிலிடீஸ் இருக்கு….. மேக்ஸிமம் ஒரு மூணு மாசம் முடிச்சிடுவேன்….. அப்புறம் அம்மா கிட்டயும் அய்யாகிட்டையும் பேசட்டுமா….”,

“இன்னும் மூணு மாசமா….”, என்றாள் அதிர்ச்சியாக.

“சக்தி”, என்று சிரித்தான்…….

“நீ இவ்வளவு ஃபாஸ்டா…..”,

“என்னவோ பயமா இருக்கு…. இன்னும் கூட நீ என்கிட்டே இவ்வளவு பேசினன்றதை நம்ப முடியலை……… நான் பேசறதை கேட்கறேன்னு நம்ப முடியலை……. அப்பா வேற எலெக்ஷன் சீட் அது இதுன்றாங்க எனக்கு பயமா இருக்கு……. நீ என்கூட இருந்தா பரவாயில்லை…..”,

“உங்கப்பாவோட கனவு சக்தி நீ……… அதை நிறைவேத்தி வைக்கிற கடமை உனக்கு இருக்கு…….”,

“ஆனா எனக்கு இதுல அவ்வளவு விருப்பம் இல்லை…….. பீல்ட் வொர்க் பெரிய வேலை….. எனக்கு கூட்டம்னாலே பிடிக்காது……”,

“உங்கப்பா என்னை பார்த்து நான் பொண்ணை பெத்து வெச்சிருக்கிறதால தான் நீ என்னை ஏமாத்திட்டன்னு சொன்னார்…….. அது அப்படி இல்லை….. நீ எந்த வகையிலும் யாருக்கும் குறைஞ்சவ இல்லைன்னு நான் காட்டியே ஆகனும்…… எனக்காக இதை செய்….”, 

“எதுக்கு எனக்கு இது, தேவையில்லை……. நான் பாட்டுக்கு காலேஜ் உண்டு, என் வேலை உண்டுன்னு இருந்துட்டு போறேன், என்னால முடியும்னு தோணலை”, 

“முடியும்! உன்னால முடியும்!  நான் எப்பவும் உன் கூட இருப்பேன்… நமக்குள்ள பிரச்சனை வந்தப்போவே இருந்தேன்….. இப்போ இருக்க மாட்டேனா”, என்றான்……

“அரசியல் பெரிய விஷயம் கார்த்திக்…. சாதாரணம் இல்லை…. அது ஒரு புதைகுழி…. விழுந்தோம் மீண்டு வர்றது கஷ்டம்……. மான ரோஷம் பார்க்குறவங்க அங்க இருக்க முடியாது……  விமர்சிக்க தகுதியிருக்கறவங்க மட்டுமில்லை யார் வேணா விமர்சிப்பாங்க……”,

“மேல போனாலும் எனக்கொன்னுமில்லை…… கீழபோனாலும் எனக்கொன்னுமில்லைன்ற மென்டாலிட்டி வேனும்….. யார் என்ன பேசினாலும் நம்மளை அது பாதிக்காத மனப்பான்மை வேணும்….”,

“நான் மக்களுக்கு அதை செய்வேன் இதை செய்வேன்னு நாம என்ன தான் திட்டம் போட்டாலும் அதை செயல் படுத்த போறது அரசாங்க அதிகாரிகள் தான்…”,

“அவங்க அரசியல்வாதிகளை கெடுக்கறாங்களா….. இல்லை அரசியல்வாதிங்க அரசாங்க அதிகாரிகளை கெடுக்கறாங்களா கடவுளால கூட பதில் சொல்ல முடியாத விஷயம்…..”,

“ரெண்டு பக்கமும் நேர்மையா இருக்குறவங்க நமக்கு ஏன் வம்புன்னு ஒதுங்கி தான் போறாங்க”,   

“நம்ம நேர்மையா இருக்க நினைச்சாலும் நம்மை சுத்தியிருக்குறவங்க அப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது….. அவங்களை எதிர்கொள்ற தைரியம் வேணும்…..”,

“எப்பவுமே பெண்களுக்கு போராட்ட குணம் அவசியம்……. அதுவும் பொது வாழ்க்கைக்கு வரும்போது ரொம்ப அவசியம்…..”,

“அதுவும் பெண்கள்ன்றப்போ முதல்ல அவங்க எதிர்கொள்றது character assasssinaton….. ரொம்ப சுலபமா அவளை மத்த ஆண்களோட இணைச்சு பேசுவாங்க……”,

“கல்யாணமானவங்க… கல்யாணமாகாதவங்க……. வயசானவங்க…… எதை பத்தியும் கவலை படமாட்டாங்க…… எந்த உயர்ந்த நிலையில இருந்தாலும் விடமாட்டாங்க….   பொண்ணுன்னாலே they will do it….. அதுவும் வெற்றியை நோக்கி போற பெண்கள் இதனால அதிகமா பாதிக்கபடுவாங்க”, என்றாள்.

“சொல்லப் போனா இது அரசியல்ல மட்டுமில்லை எல்லா இடத்துலையும் இருக்கு”,

“சொல்றோம் பெண்கள் வளர்ந்துட்டாங்க….. உரிமை கொடுக்குறோம் அது இதுன்னு, ஆண்களை அடக்கி ஆள்றாங்க அப்படி இப்படின்னு……..”,

“ஆனா உண்மையா ஆண்கள் இருக்குற இடத்துல பெண்கள் இரண்டாம் பட்சம் தான்”,    

“இவ்வளவு தெளிவா பேசற அப்புறம் என்ன? உன்னால முடியாம யாரால முடியும்”,  

“பேசலாம் கார்த்திக், ஆனா செய்யறப்போ ரொம்ப மனதிடம் வேனும்…..”, என்று சொல்லிகொண்டிருந்த சக்தி அவனுக்கு புதிதாக தெரிந்தாள்…….

இவ்வளவு நாட்களாக சக்தியை கார்த்திக் அவன் கைக்குள் வைத்திருப்பது போல் பார்த்து பார்த்து பார்த்துகொள்வான்… இப்போது தோன்றியது அதற்கு அவசியமேயில்லை…… கொஞ்ச நாட்கள் அவளிடம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனுக்கு இளைப்பாறலாம் என்று தோன்றியது…….   

“ஏண்டா என்கிட்டே அங்க சேரமாட்டேன்னு சொல்லிட்டு… இப்போ போய் சேர்ந்துட்டியேன்னு கேட்டதுக்கு பிரபு சொன்னான் அப்போ எனக்கு சக்தியை தெரியாதேன்னு… சரியா தான் சொல்லியிருக்கான்”,

“விட்டா உனக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சு இருப்பான்”, சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கார்த்திக்கின் போன் அடித்தது…….. தெய்வானை…..

“கார்த்திக், எங்க இருக்கீங்க ரொம்ப நேரமாயிடுச்சு…..”,

“இதோ மா வந்துட்டே இருக்கோம்……”,

இவ்வளவு நேரமாக அவளின் பற்றிய கையை விடாமல் பேசிக்கொண்டு இருந்தவன் அதில் ஒரு அழுத்தம் கொடுத்து நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி விடுவித்தான். பின்பு கார் ஸ்டார்ட் செய்து வேகமெடுத்தான்……

வீட்டில் கொண்டு போய் நிறுத்திய போது ஒரே இரவில் ஏதோ ஜென்ம ஜென்மமாய் வாழ்ந்துவிட்ட உணர்வு இருவருக்கும்……..

உடலின் உந்து சக்திகள் கொடுக்கும் நெருக்கத்தை விட இருவரும் நெருங்கியிருந்தனர்.

தெய்வானை காரிடாரில் சேர் போட்டு அமர்ந்திருந்தார்….. கூட முனியம்மா……..

இருவருக்கும் அவரை நிறைய அலைகழித்து விட்டோம் என்ற குற்ற உணர்வு…. அவரை பார்த்தும்…… வேகமாக இறங்கி ஓடினாள் சக்தி…….

“சாரிமா லேட் பண்ணிட்டேனா…..”,

“லேட்லாம் பண்ணலை, நேத்து போய் இன்னைக்கு வந்திருக்க”, என்றார் சிரிக்காமல்….

நேரம் பார்த்தால் ஒரு மணி…….

“சாரிம்மா பேசிட்டேன் இருந்ததுல டைம் போனதே தெரியலை…….”,

“பேசினது பெருசில்ல உருப்படியா ஏதாவது பேசினிங்களா……..”,   

“உருப்படியான்னா……..”,

அதற்குள் காரை விட்டு கார்த்திக் இறங்கி நின்றான்……

“கார்த்திக் நாம உருப்படியா ஏதாவது பேசினோமான்னு அம்மா கேட்கறாங்க, என்ன சொல்லட்டும்”, என்றாள் குறும்பாக சக்தி……

கார்த்திக்கின் முகத்தில் ஒரு மலர்ந்த புன்னகை…… எந்த நேரடியான பதிலும் சொல்லாத செய்தியை அந்த புன்னகை சொன்னது…….

சிரித்தது கார்த்திக் தானா என்று அந்த சமையல் செய்யும் முனியம்மா வாயை திறந்து பார்த்தாள்……

“எப்பவும் சிரிக்காத முகத்தை வெச்சு எல்லோரையும் கடிக்குதே பேசாம திருஷ்டிக்கு இந்த தம்பி போட்டோவை வைக்கலாம்”, என்பது தான் முனியம்மாவின் பழைய எண்ணம்.

ஒரு சிறு தலையசைவுடன் கார்த்திக் விடைபெற்று செல்ல……. சக்தியும் தெய்வானையும் வீட்டை நோக்கி திரும்பினால்….. முனியம்மா அப்படியே பார்த்தது பார்த்த படி நின்றிருந்தாள்.

“அம்மா! ஏன் இவங்க இப்படி நிக்கறாங்க!”,

“அனேகமா கார்த்திக் பேய் அடிச்சிருக்கும் நீ வா…….”, என்று சிரித்தபடியே தெய்வானை சொல்லி போனார்.            

 

Advertisement