Advertisement

அத்தியாயம் எட்டு :

உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்                                                                                     உள்ளங் குலைவ துண்டோ? – மனமே!                                                                                      வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்                                                                                            வேதனை யுண்டோடா?                                                                                                                              

                                             ( பாரதி )

“வாயை மூடுறியா நீ”, என்று கார்த்திக் கர்ஜித்ததும் ஒரு நிமிடம் அப்படியே அசைவு நின்றது சக்திக்கு.

இப்படி என்றுமே கார்த்திக்……… எந்த நிலையிலும் மரியாதையை இல்லாமல் சக்தியை பேசியதே இல்லை.

கோபப்படுவான், திட்டுவான், ஆனால் மரியாதை பன்மையையோ, மேம் என்ற வார்த்தையையோ விட மாட்டான். கோபப்பட்டாலும் மரியாதை என்றுமே குறைந்தது இல்லை.

இன்று வாயை மூடுறியா நீ என்று ஒருமையில் கத்துகிறான். அசைவின்ற நின்ற சக்தி சில நொடிகளில் தேறினாள்.

அவளுக்கு கோபம் எல்லாம் வரவில்லை………. கோபத்திற்கு பதில் ஒரு ஆராய்ச்சி தன்மையே தோன்றியது.

சிவாவுடனான ஃபோன்கால் இன்னும் ஓடிக்கொண்டிருக்க……. சக்திக்கு இதெல்லாம் சிவாவிற்கு கேட்டிருக்குமோ என்று கவலையாக இருந்தது. சிவா லைனில் இருக்கிறானா இல்லையா என்று சக்தி பார்க்கவில்லை.

சிவாவிற்கு சில நிமிடங்களுக்கு எதுவும் ஓடவில்லை…… “நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை…….”, என்றது மட்டுமே அவனின் கவனத்தில் பதிந்தது. அவன் என்ன பேசுகிறார்கள் என்று ஆராயும் முன், “வாயை மூடுறியா நீ”, என்று கார்த்திக் கத்துவது போனில் நன்கு கேட்டது.

பின்பு பேச்சு எதுவும் கேட்கவில்லை. அவனும் ஆராயவில்லை. அவன் சுமித்ராவை பற்றிய நினைவுகளிலேயே உளன்று கொண்டிருந்தான்.       

“நான் அப்புறம் பேசறேன் சிவா”, என்று சக்தி போனை கட் செய்தாள்.    

கார்த்திக்கின் முகத்தை பார்த்தாள்……… இன்னும் அது கோபத்தில் தகித்தது.

“என்ன பிரச்சனை உனக்கு?”, என்றாள் நேரடியாக கார்த்திக்கை தீர்க்கமாக பார்த்தபடி……

அவனுக்கு சக்தியை ஒருமையில் திட்டியது உறைக்கவேயில்லை…….

அவளின் பார்வையில் நிதானித்தான். இந்த சக்தியின் பார்வை அவனுக்கு புதிது.

எப்போதும் அவன் திட்டினால் பதிலுக்கு சண்டையிடுவாள் அல்ல கோபித்து முகத்தை தூக்கி கொள்வாள் அல்லது அவன் சொல்வதை அப்படியே கேட்டு விட்டுக்கொடுத்து விடுவாள்.

இப்படி நின்று நிதானித்து பொறுமையாக எதிர்கொள்ள மாட்டாள்.

அவளின் பார்வை அவனை அணு அணுவாக ஆராய்ந்து கண்டுகொள்ள விழைந்தது.

அவளின் பார்வையில் தடுமாறினான். “என்ன? என்ன எனக்கு பிரச்சனை?” என்று அவளிடமே கேள்வி கேட்டான்.

கையை கட்டி நின்று அவனை ஒரு பார்வை பார்த்தவள்………. “அது உனக்கு தான் தெரியனும்”, என்றாள்.

சிறு பெண்ணாக இதுவரை அவனின் கண்களுக்கு தெரிந்த சக்தி இப்போது பெரியவளாக தோன்றினாள்.

“இல்லை! எனக்கொன்னும் பிரச்சனையில்லை!”, என்றான் விறைப்பாக…..

“இல்லைன்னா சந்தோஷம். ஆனா எனக்கென்னவோ இருக்குற மாதிரி தோணுது….”,

“சாதாரணமா நான் எது கேட்டாலும் செய்வ நீ……… ஆனா அன்னைக்கு இந்த பொண்ணு போட்டோவை சிவா காட்டினப்ப……… நான் எங்க கார்த்திக் ஹெல்ப் பண்ணுவான்னு சொன்னப்போ அதெல்லாம் முடியாது, நீங்க எப்படி சொல்லலாம்னு கோபப்பட்ட…….. இது என்னை மீறின விஷயம்ன்னு சொன்ன”, என்றாள்.

அச்சு பிசகாமல் அன்று நடந்ததை சொன்னாள்…….. மாட்டிக்கொள்வோமோ என்று பதட்டம் ஏற ஆரம்பித்தது….. கோபம் மாறி பதட்டம் ஏறியது அவனின் முகத்தில்.  “இவ ஞாபக சக்தில தீ வைக்க”, என்று கார்த்திக் மனசுக்குள் பொறிந்தான்.

இருந்தாலும், “அப்படியா சொன்னேன், எனக்கு ஞாபகமில்லை”, என்றான் வருவித்துக்கொண்ட அலட்சியத்துடன்.

“ஞாபகமிருக்கோ? இல்லையோ? அதுக்கு தானே உன் டையலாக் டெலிவரிய திரும்ப சொல்றேன்”, என்றாள் அவனை விடவும் அலட்சியத்துடன்.

கார்த்திக் அப்படியே நிற்க………

“அதுக்கப்புறமும் சிவாவோட காதலை பத்தி பேச்செடுத்தாலே உனக்கு பிடிக்கலை”.

“இன்னைக்கு என்ன சொன்னேன் நான்? நீ கல்யாணம் பண்ண போற பொண்ணையா அவனோட சேர்த்து பேசறேன்னு சொன்னதும்…….. உனக்கு அவ்வளவு கோபம். உன்னையும் மீறி என்னை பார்த்து வாயை மூடுறியா நீன்னு மரியாதையில்லாம பேசின…….”,

அப்போதுதான் அவளை மரியாதை இல்லாமல் பேசியதை கார்த்திக் உணர்ந்தான்.

“எனக்கு நீ வா போன்னு பேசறது பிரச்சனையில்லை…… ஆனா உனக்கு தெரியாம அவ்வளவு கோபத்துல யாரோ எவரையோ பேசற மாதிரி பேசியிருக்க…….. கொஞ்ச நாளாவே நீ சரியில்லை…….. என்கிட்ட கடுமை காட்டுற மாதிரி எனக்கொரு ஃபீல்”,

“இல்லை! அப்படியெல்லாம் இல்லை!”, என்று கார்த்திக் மறுத்து பேச வர…… அவனை பேசவே விடவில்லை சக்தி……  

“ஒண்ணு ஏதோ என்னோட செய்கை உனக்கு பிடிக்காம இருக்கணும், இல்லை சிவா லவ் பண்ற பொண்ணை உனக்கு பிடிக்குதா”, என்றாள்.

அவள் சொன்ன இரண்டுமே ஒரு வகையில் சரி, ஆனால் அதை ஒத்துக்கொள்ள முடியாதே…………

“உளறாதீங்க நீங்க சொல்ற மாதிரி எதுவுமில்லை”, என்றான்.

“அப்படியா? சரி நம்பிட்டேன்!”, என்றாள்.

“அப்போ நான் சொல்றதை நீங்க நம்பலையா?”,

“நீ சொல்றது உண்மைன்னா சிவாவோட காதலுக்கு ஹெல்ப் பண்ணு”, என்றாள்.

“அதெல்லாம் முடியாது”, என்றான் அடுத்த நொடி.

“ஏன்?”, என்ற சக்தியின் ஒற்றை வார்த்தை கேள்விக்கு…….

“அடுத்தவன் ஹெல்ப் எதிர்பார்க்குறவன் எல்லாம் காதலிக்க கூடாது”, என்றான் காட்டமாக…….

“அது தான் விஷயமா?”, என்றாள் சக்தி.

“அது மட்டும் தான் விஷயம்”, என்றான் இன்னும் காட்டமாக கார்த்திக்.

அவனின் முகத்தை சில நொடிகள் உற்று பார்த்தாள் சக்தி………. அவனும் சளைக்காமல் பார்த்தான்……..

இரு கண்களுமே மோதி நின்றன……

அவனின் கண்களை பார்த்த சக்தியால் அவனை மீற முடியவில்லை.

அந்த நொடி அவளுக்கு தோன்றியது, “சரியோ? தவறோ? அவன் எது செய்தாலும் சரி!”, என்பதே.  

மீண்டும் சிறு பெண்ணாக மாறி….. அவளையறியாமல், “ஓகே, அஸ் யூ விஷ்!”, என்று ஒப்புகொடுத்து அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

என்ன கோபம் இருந்தாலும் சந்தேகம் இருந்தாலும் அவனுக்காக உடனே விட்டுக்கொடுத்தாள் சக்தி……

அது கார்த்திக்கிற்கு மிகுந்த சஞ்சலத்தை கொடுத்தது. 

அவள் மேலும் மேலும் துருவினாள் என்ன சொல்வது என்று பதட்டத்தில் இருந்த கார்த்திக்கிற்கு……… சக்தி விட்டுக் கொடுத்து சென்றது மிகுந்த நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் இந்த நிம்மதிக்கு ஆயுட்காலம் குறைவு என்று தெரியும்.

சோர்ந்துவிட்டான்……….       

அங்கே சிவாவிற்கு பொறுக்க முடியவில்லை……. சுமித்ராவின் மேல் கோபமாக வந்தது. தான் இத்தனை நாட்களாக அவளை தொடர்வது தெரியாமலா இருக்கும். எந்த வகையிலும் ஒரு எதிர்ப்போ மறுப்போ இல்லையே.

ஏற்கனவே முடிவாகியிருந்தால் அது தனக்கு தெரியும்படி பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தானே என்று கோபமாக வந்தது.   

நாளை அவளை பார்த்து முடிவாக கேட்டு விட வேண்டியதுதான் என்று உறுதி எடுத்தான்.

எதற்கும் சக்தியிடம் அவள் சொல்வது எந்தளவிற்கு உண்மை என்று தெரிந்து கொள்ள விரும்பினான்.   

சக்திக்கு திரும்பவும் போன் செய்தான். அப்போதுதான் சக்தி கார்த்திக்கிடம் பேசி முடித்து உள்ளே நுழைந்தாள், போன் அடித்தது.

எடுப்பதா? வேண்டாமா? என்று சக்திக்கு குழப்பம். அவளுக்கு கார்த்திக்குடன் எந்த காரணதிற்க்காகவும் சண்டையிட இஷ்டமில்லை.  

அவள் எடுக்கவில்லை சிவாவும் விடவில்லை, தொடர்ந்து இரண்டு முறை அடிக்க வேறு வழியில்லாமல் எடுத்தாள்.

“சக்தி! பிஸியா”,

“ஆமாம், சிவா”,

“ஒரே ஒரு விஷயம் மட்டும் கேட்கட்டுமா”, என்றான்.

“கேளுங்க”,

“நீங்க சொன்ன விஷயம் நிஜமா! உங்களுக்கு நல்லா தெரியுமா!”, என்றான்.

“தெரியும்! ஒரு நாலஞ்சு நாள் முன்னாடி கல்யாணத்துல அவங்களை பார்த்தோம்! அவங்க குடும்பம் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க போல……… பேசினாங்க, அப்போ தான் எனக்கு விஷயம் தெரிய வந்துச்சு!”, என்று சொன்னாள்.

“ஓகே சக்தி! சொன்னதுக்கு தேங்க்ஸ்! நான் பார்த்துக்கறேன்!”, என்று சொல்லி வைத்துவிட்டான்.

“என்ன பார்க்க போகிறான்”, என்று சக்தி கேட்கவில்லை. இந்த கார்த்திக் தான் கோபப்படுகிறானே என்று நினைத்தவள்…….. சிவா என்னவோ பண்ணிக் கொள்கிறான் என்று விட்டுவிட்டாள்.

அவளை பொறுத்தவரை கார்த்திக் தான் அவளுக்கு முக்கியம். அதன் பிறகு தான் எல்லோரும். அவனுக்கு பிடிக்காததால் பிரச்சனையை தூக்கி தூர போட்டுவிட்டாள்.

ஆனால் சிவாவிற்கு சுமித்ராவை தூக்கி தூரப் போடும் எண்ணமெல்லாம் வரவில்லை. அவளை பார்த்து பேச வேண்டும் என்று மனம் முடிவெடுத்தது. 

அடுத்த நாள் காலையிலேயே அவர்கள் வீட்டின் முன் போய் காரை நிறுத்தி காருக்குள்ளயே அமர்ந்து கொண்டு பார்த்தான். அவள் வெளியே எதற்காகவாவது வருகிறாளா என்று…….

ஏனென்றால் அவள் காலேஜ் வரும்பொழுது கூட வைஷ்ணவியும் வருவாள். அதனால் தனியாக எதற்காவது வருவாளா என்று விடியற்காலையில் வந்து நின்று கொண்டான். 

ம்கூம்! யாரும் வரவில்லை…… கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் நின்றான்……. வைஷ்ணவியும் சுமித்ராவும் காலேஜ் போக ஸ்கூட்டியை தள்ளி கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது தான் இருவரும் தங்களின் வீட்டின் எதிரில் நின்று கொண்டிருந்த காரை பார்த்தனர். கிட்ட தட்ட இந்த ஊருக்கு வந்த சில மாதங்களாக இந்த காரை இருவரும் அவ்வப்போது பார்ப்பது தான், அதில் உள்ளவனையும் பார்ப்பது தான்.

அதற்கு முன்பும் அதே காலேஜில் தான் படித்தார்கள்……… ஆனால் ஹாஸ்டலில் இருந்தார்கள். வாசுகி இங்கே வீட்டை மாற்றிக்கொண்டு வரவும் அவர்களும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். அப்போது இருந்து அவன் எங்காவது கண்ணில் பட்டுக்கொண்டே தான் இருப்பான். 

ஆனால் இதுவரை தொடர்வான், பார்ப்பான், அவ்வளவே! பேச முயற்சி செய்தது இல்லை! எதுவும் கலாட்டா செய்தது இல்லை! சில சமயம் அவர்களை தான் பார்க்க வருகிறான் என்பது கூட தெரியாத மாதிரி இருக்கும்.

முதலில் அவன் யாரை பார்க்கிறான் என்பதே அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் எல்லா இடங்களுக்கு வைஷ்ணவியும் சுமித்ராவும் சேர்ந்தே செல்வார்கள்.

வைஷ்ணவி தான் ஒரு நாள் அவள் முன்னே போய் சுமித்ராவை சற்று நேரம் கழித்து வர சொன்னாள்….. யாரை பார்க்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காக.

அவன் வைஷ்ணவி சென்ற போது பின் வரவில்லை, சுமித்ராவின் பின் வந்தான். அதன் பிறகே அவன் சுமித்ராவின் பின் தான் வருகிறான் என்று கண்டு கொண்டனர்.    

வைஷ்ணவி அவனிடம் கேள்வி கேட்க விழைந்த போது……… சுமித்ரா அவளை அடக்கி விட்டாள்…… “வேண்டாம் வைஷு! நம்மளா எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அவன் எதுவும் நம்ம கிட்ட பேச வந்தா பார்த்துக்கலாம்”, என்றாள். 

“நான் கார்த்திக் கிட்ட சொல்லவா சுமி!”, என்றதற்கும் கூட…….

“வேண்டாம்!”, என்று மறுத்து விட்டாள்.           

“பார்த்தா மரியதையானா ஆளா தான் தெரியறாங்க! நம்ம பாட்டுக்கு உங்க அண்ணன் கிட்ட சொன்னா……. அவங்க இவரை உண்டு இல்லைன்னு ஆகிடுவாங்க! வேண்டாம், விட்டுடலாம்! பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம்!”, என்றுவிட்டாள்.

வைஷ்ணவிக்கு இதில் உடன்பாடு இல்லை தான்……… இருந்தாலும் சுமித்ரா முடிவாக சொன்ன பின் விட்டு விட்டாள்.

இன்று வீட்டு வாயிலுக்கே எதற்கு வந்து நிற்கிறான் என்று புரியவில்லை. வைஷ்ணவி பாட்டிற்கு ஸ்கூட்டியை ஓட்ட……… சுமித்ரா அவளின் பின்னால் அமர்ந்திருந்தாள்.

கார் அவர்களை தொடர்ந்தது.

ஒரு திருப்பத்தில் காரை அவர்களுக்கு அட்டைகட்டி நிறுத்தினான் சிவா. வேறு வழியின்றி வைஷ்ணவி ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

சுமித்ரா தான் சற்று டென்சன் ஆனாள். “நம்ம சுத்திட்டு போகலாம் வைஷு”, என்று அவள் வைஷ்ணவியிடம் சொன்னாள். அவள் அதை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அதை கேட்டுக்கொண்டு சிவா காரை விட்டு இறங்கினான்.  

பயமெல்லாம் வைஷ்ணவிக்கு சற்றும் இல்லை. சிவாவை பார்த்தவாறே…….. “இரு சுமி! சார் இவ்வளவு நாளா இல்லாம இன்னைக்கு தைரியமா நம்ம கிட்ட பேச வந்திருக்கார், என்னன்னு கேட்போம்”, என்றாள் கூலாக.

“வேண்டாம்! போவோம் வா!”, என்று சுமித்ரா பிடிவாதம் பிடிக்க…….

“அட இருங்க! உங்க தோழி பெரிய மனசு பண்ணி என் தைரியத்தை பாராட்டி இருக்காங்க! ஒரு ரெண்டு வார்த்தை பேசிட்டு போயிடலாம்!”, என்றான் சிவாவும்.

“ஏய்! என்ன நக்கலா?”, என்றாள் வைஷ்ணவி.

“தோடா! நான் எவ்வளவு மரியாதையா என் ஆளை கூட வாங்க போங்கன்னு பேசறேன்! நீங்க ஏங்க துள்ளுறீங்க மரியாதையா பேசுங்க!”, என்ற அதட்டினான்.

“யாருங்க உங்க ஆளு?”, என்று சுமித்ரா கேட்பதை அவன் காதிலேயே போடவில்லை.

“அப்புறம் நான் உங்களுக்கு சொந்தக்காரனாகும் போது வருத்தபடுவீங்க”, என்றான் வைஷ்ணவியை பார்த்து.  

“நீ………”, என்று வைஷ்ணவி கோபமாக ஆரம்பிக்கும் போதே சுமித்ரா அவளை அடக்கினாள், “பிரச்சனையை வளர்த்தாத மரியாதையா பேசு”, என்றவளின் காதை கடித்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு……….. வைஷ்ணவி, “என்ன விஷயம் சொல்லுங்க”, என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“எனக்கு இவங்க கூட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்”, என்றான் சுமித்ராவை காட்டி சிவா.

“என்ன பேசணும்?”, என்று வைஷ்ணவி கேட்க…….

“எனக்கு அதை அவங்க கிட்ட தான் பேசணும்!”, என்றான் சிவா.

“நான் இங்க தான் இருப்பேன்! அவளை தனியா விட்டுட்டு எங்கேயும் போக முடியாது! இப்படியே பேசுங்க!”, என்றாள் வைஷ்ணவி.

சிவா சற்றும் அதற்கு மேல் தாமதிக்காமல்……. “உங்களுக்கு உங்க அத்தை பையனோட கல்யாணமாமே……. அப்படியா?”, என்றான்.

சுமித்ராவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

அவள் அப்படியே நிற்க……. “சொல்லுங்க, அது உண்மையா”, என்றான்.

“ஆமாம்!”, என்றாள்……. சொன்னது சுமித்ரா அல்ல வைஷ்ணவி.

“நான் உங்களை கேட்கலை”, என்றான் சிவா.

அவனை எதிர்த்து பேச வாயை திறந்த வைஷ்ணவி……. பின்பு பிரச்சனையை வளர்க்க விரும்பாமல், “சொல்லு சுமி!”, என்றாள்.

“ஆமாம்!”, என்று சுமி ஆமோதிக்கவும்…….

“ஏன் என்கிட்ட சொல்லலை?”, என்றான்.

எதை இவனிடம் சொன்னோம், இதை சொல்லாமல் இருப்பதற்கு என்பது போல சுமி பார்த்தாள்.

வைஷ்ணவி ஏதோ பேச வர…. “ப்ளீஸ்! கொஞ்சம் அமைதியா இருங்க! எனக்கு அவங்க கிட்ட பேசியே ஆகணும்”, என்றான் பிடிவாதமான குரலில் சிவா.

என்ன தான் பேசிவிடுவான் பார்ப்போம் என்பது போல வைஷ்ணவியும் அமைதி காத்தாள்.

“சொல்லுங்க! நான் உங்க பின்னாடி சுத்தறேன்னு உங்களுக்கு இத்தனை மாசமா தெரியாதா. என்னை பார்த்தா உங்களுக்கு ரோட் சைட் ரோமியோ மாதிரியோ இல்லை டைம் பாஸுக்கு சுத்தற மாதிரியா தெரியுது”.

“உங்களுக்கு கல்யாணம் வேற ஒருத்தரோட ஆகப்போகுதுன்னா என்கிட்ட சொல்லியிருக்கலாமே! நான் மனசுல ஆசையை வளர்த்து இருக்க மாட்டேனே!”,  என்றான் நேர் பார்வை பார்த்து.

வைஷ்ணவி சுமித்ராவை பார்த்து முறைத்தாள், “நான் அப்போவே சொன்னேனே கேட்டியா”, என்பது போல…….

வைஷ்ணவியின் குற்றம் சாட்டும் பார்வையை பார்த்தவள்……. சிவாவிற்கு பதிலளித்தாள்.

“கெஸ் பண்ணினோம்! ஆனா கன்ஃபார்மா தெரியாது”, என்றாள் வேண்டுமென்றே சுமித்ரா……… சொன்னதோடு நில்லாமல், “நீங்க என்கிட்ட பேசினதே இல்லை! நான் எப்படி சொல்ல முடியும்!”, என்றாள் முயன்று வரவழைத்த தைரியத்தோடு…….  

“என்னங்க பேச்சு இது! உங்களுக்கு நிஜமா தெரியாதா நான் உங்களை விரும்பறேன், அதனால தான் பின்னால வர்றேன்னு! ஒரு தடவையாவது உங்களுக்கு கல்யாணம் உங்க சொந்தத்துல பேசிட்டாங்கன்னு சொல்லியிருக்கலாமில்லை”, 

சுமித்ரா அமைதியாக நிற்க……..

“சரி! இப்போ பேசறேன்! நான் உங்களை காதலிக்கறேன்………!”, என்றான்.

உடனே சுமித்ராவின் பார்வையில் பதட்டத்தை பார்த்தவன்…… “எனக்கு உங்களை பிடிச்சிருக்கு…….. உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். நீங்க சரின்னு சொன்னிங்கன்னா எங்கப்பா அம்மாவை பொண்ணு கேட்க உங்க வீட்டுக்கு அனுப்பறேன்”, என்றான்.

வைஷ்ணவி இப்போது மிகவும் கோபப்பட்டாள், “என்ன சார்? என்ன விளையாடறீங்களா? அவளுக்கு அத்தை பையனோட கல்யாணம்னு தெரிஞ்சும் இப்படி பேசறீங்களே……”,

“அத்தை பையன்! மாமா பொண்ணுன்னு இருந்தா! இந்த பேச்செல்லாம் வர்றது சகஜம் தான். அதுக்காக அந்த கல்யாணம் தான் நடக்கனும்னு எந்த அவசியமும் கிடையாது”, என்றான்.

“உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் இதுல”, என்று வைஷ்ணவியை பார்த்து கேட்க…….

“அவளுக்கு என் அண்ணனோட தான் கல்யாணம்….. இதுல பேச எதுவுமில்லை, நீங்க கிளம்புங்க”, என்றாள்.

“என்ன? உங்க அண்ணனா!”, என்றான்.

“ஆமாம்! என் அண்ணன் தான்! உங்க விருப்பம் நிறைவேறாது கிளம்புங்க!”, என்றாள்.

“என்னங்க? சும்மா நீங்க நிறைவேறாது அது இதுன்னு சொல்றீங்க! சொந்தம்னு இருந்தா ஆயிரம் சொல்லுவாங்க! அது பேச்சில்லை! எனக்கு உங்களோடவும்  பேச்சில்லை! சுமித்ராவோட தான் பேச்சு!”, என்றான் சிவாவும் பதிலுக்கு கோபமாக.  

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே கார்த்திக்கின் கார் அங்கே வந்தது. அவனுக்கு சக்தி சிவாவிடம் சுமித்ராவின் திருமண விஷயத்தை சொல்லிவிட்டாள் என்று தெரிந்ததுமே, சிவா சுமித்ராவிடம் பேச முயற்சிப்பான் என்று தோன்றியது.

அதுதான் அவர்களின் கல்லூரி வாயிலில் அவர்களுக்காக கார்த்திக் காத்திருந்தான். அவர்கள் எப்போதும் வரும் நேரத்திற்கு வர காணோம் என்றதும்அவர்களை தேடி வர……..

அவன் நினைத்தது சரி என்பதாக சிவா இவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

சிவாவின் கார் அருகில் ஒரு கார் வந்து நிற்கவும்……..

மூவரும் யார் என்பது போல பார்க்க…… கார்த்திக் இறங்கினான்.   

வைஷ்னைவி மற்றும் சுமித்ராவின் முகத்தில் ஒரு பயம் வந்தது.

சிவா இவன் எங்கே இங்கே என்பது போல அதிர்ச்சியாக பார்த்தான்.       

 

  

 

Advertisement