Advertisement

அத்தியாயம் ஏழு :

கார்த்திக் அதிர்ச்சியில் மயங்கியிருந்தான். அவனுடையது ஏற் பேக் உடன் கூடிய மிகவும் விலையுயர்ந்த கார் என்பதால் அவனுக்கு பெரிய அடி இல்லை. காருக்கு அதிக டேமேஜ் தான்.

பின்னால் வந்தவர்கள் உடனே வந்து இவனை பார்த்து உதவி செய்ய முற்பட்டனர்.  அந்த காரில் காலேஜ் படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் இருந்தனர். அவர்கள் அவனை அப்படியே விட்டு செல்லவில்லை. பக்கத்தில் பெங்களூர் சிட்டி இருந்ததால் அங்கேயே திரும்ப அவனை சிகிச்சைக்கு அவர்களின் காரிலேயே கூட்டிசென்றனர்.

கார் நடு ரோடில் அனாதையாக கிடக்க அங்கே இருந்த ரோட்டோர டீக்கடையில் சொல்லி அவனின் போன் காரில் தென்படிகிறதா என்று பார்த்து எடுத்துக்கொண்டு சென்றனர்.

அங்கே ஹாஸ்பிடலில் சேர்த்து ஒரு அரை மணி நேரத்திற்கு எல்லாம் கார்த்திக்கிற்கு விழிப்பு வந்தது. உதவி செய்தவர்களுக்கு நன்றி கூறியவன்…….

அவர்கள் உடனே தன்னை பார்த்துவிட்டார்களா இல்லை நடுவில் ஏதாவது நடந்ததா என்று கேட்டு அவர்கள் உடனே பார்த்து விட்டதாகவும் நடுவில் வேறு ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிய பிறகே நிம்மதியானான்.

செல்வத்துக்கும் மாரிக்கும் போன் செய்தான். மாரியை காரை பார்க்க சொல்லிவிட்டு செல்வத்தை தன்னிடம் வருமாறு பணித்தான்.

செல்வம் வருவதற்குள் அவனே டாக்டரிடம் பேசி, “என்னென்ன டெஸ்ட் செய்ய வேண்டுமோ எல்லாம் செய்துவிடுங்கள்”, என்றான்.

அவன் வலி சொன்ன இடத்தில் எல்லாம் எக்ஸ்ரேவும், எம் ஆர் ஐ யும் எடுத்தனர். அங்கங்கே ஊமை அடி தான் பட்டிருந்தது. வெளியில் காயம் போலவோ எழும்பு முறிவு போலவோ எதுவும் இல்லை என்றாலும் அவ்வளவு வலியை உணர்ந்தான்….. அதுவும் கழுத்து பயங்கரமாக வலித்தது.

செல்வம் வந்து சேர்ந்த போதும் எம் ஆர் ஐ ஸ்கேன் ரிப்போர்ட்கள் வரவில்லை. ஒரு வழியாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் எதுவும் பெரிய பிரச்சனைகள் இல்லை, கழுத்தில் அதிக வலி உணர்ந்ததால் அங்கே மட்டும் ஒரு காலர் போட்டு அதிக அசைவை கொடுக்க வேண்டாம் என்று சொன்னர்.

ஒரு நாள் இருந்து அடுத்த நாள் டிஸ்சார்ஜ் ஆகும்படி சொன்னர். இதையெல்லாம் முடிக்கும் போது இரவு மணி பத்து.

இவ்வளவு நேரமாக கார்த்திக்கை காணாமல் வீரமணி அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டு அப்போது தான் போன் செய்தார்.

கார்த்திக் அப்போது மருந்துகளின் உதவியால் உறக்கத்தில் இருந்தான். வீரமணியின் அழைப்பு என்பதால் செல்வம் அவனின் போனை எடுத்தவன் விவரத்தை கூறினான்.

“ஒன்றும் பயப்படும்படி இல்லை”, என்று தான் செல்வம் வீரமணியிடம் கூறினான். இருந்தாலும் அவருடைய மனம் பதறி விட்டது. சக்தியிடமும் தெய்வானையிடமும் கூறினார்.

இருவரும் பதறினர் என்றாலும் சக்தி என்னவோ ஏதோவென்று அவளையும் மீறி பதறினாள் என்பது தான் உண்மை.

“அப்பா! நம்ம போகலாமப்பா?”, என்றாள் உடனே வீரமணியிடம்.

“இப்போ ரொம்ப ராத்திரி ஆகிடிச்சும்மா! காலையில் போகலாம்……. செல்வத்துக்கிட்ட தெளிவா கேட்டுட்டேன், பயப்படற மாதிரி ஒண்ணுமில்லைன்னு தான் சொன்னான். பிராக்ச்சர் எதுவும் இல்லையாம், காயம் மாதிரி கூட எதுவும் இல்லையாம்மா. கழுத்துல மட்டும் ஒரு காலர் போட்டு இருக்காங்களாம்”, என்றார்.

அப்போதும் மனம் சமாதானமாகாமல் அவளே செல்வத்துக்கு அழைத்தாள், அவன் சக்தியிடமும் அதையே கூறவும், அரை மனதாக போனை வைத்தாள்.

காலை ஐந்து மணிக்கெல்லாம் தந்தையை எழுப்பி விட்டாள், ஹாஸ்பிடல் போவதற்கு. காலை ஆறுமணிக்கு கிளம்பி எட்டு மணிக்கெல்லாம் ஹாஸ்பிடலில் இருந்தனர்.

கார்த்திக்கை பார்த்ததும், “எப்போ நடந்துச்சு?”, என்று அவள் கேட்க…….

அவன், “நாலு மணி”, என்று சொல்லி மற்ற விவரங்களையும் சொன்னான்.

செல்வத்திடம், “நீங்க எப்போ வந்தீங்க?”, என்று கேட்க…….. அவன் இரவு எட்டு மணி என்றான்.

“அவனுக்கு போன் பண்ணி வர சொல்ல முடியுது, எங்ககிட்ட சொல்லனும்னு உனக்கு தோணலை இல்லை”, என்று கார்த்திக்கை காய்ச்சி எடுத்தாள்.

“இல்லை! அனாவசியமா பயபடுத்த வேண்டாம்னு தான் சொல்லை!”, என்று அவன் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை….. பேசித் தள்ளினாள்.

வீரமணி கூட, “என்ன சக்திம்மா? அவனை பார்க்க வந்தியா இல்லை திட்ட வந்தியா?”, என்று கேட்டார்.

“இவன் போன் பண்ணாததுக்கு திட்டாம, என்ன ஏன் திட்டுறீங்க?”, என்று அவரிடமும் பாய்ந்தவள்…..

“எனக்கு நைட் முழுசும் தூக்கமே இல்லை…… ஒரு பேசிக் கர்டசிக்கு கூட இவனுக்கு நம்ம கிட்ட சொல்லனும்னு தோணலை இல்லை”, என்று பொறிந்தவள்……..

“நீங்க ஏன் சொல்லலை”, என்று செல்வத்தையும் ஒரு வழி யாக்கினாள்.   

“விடுங்க மேம்”, என்று கார்த்திக் சற்று பெரிதாக அதட்டவும் தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமைதியானாள்.

பின்பு சற்று நேரம் இருந்துவிட்டு வீரமணி கிளம்பினார். “நான் வரலைப்பா நீங்க போங்க! கார்த்திக் டிஸ்சார்ஜ் ஆகும்போது நானும் வர்றேன்!”, என்றாள்.

“வேண்டாம் மேம்! செல்வம் இருக்கான் போதும். மதியத்துக்கு மேல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க! நான் வந்துடறேன்!”, என்று அவன் சொன்னாலும் சக்தி கேட்கவில்லை.

“நான் இருக்கேன்!”, என்றாள் பிடிவாதமாக..

கார்த்திக் எப்படியோ அதையும் இதையும் பேசி அவளை வீரமணியுடன் அனுப்பி வைப்பதற்குள் ஒரு வழியாகினான். 

அவனுக்கு கோபமாக வந்தது, இந்த வீரமணி அவளை அழைத்து செல்ல கூடாதா என்று.

வீரமணிக்கு சக்தியை பற்றி நன்றாக தெரியும், சக்தி கார்த்திக்குடனான திருமணத்திற்கு மறுத்து இருந்தாலும் கார்த்திக்கின் மீது அவளுக்கு ஒருவகையான பாசம் நட்பு இருந்ததை உணர்ந்திருந்தார். அதனால் அவர், “அவள் நான் இருக்கேன் பா”, என்றபோது தடுக்கவில்லை.  

கார்த்திக்கிற்கு எப்போதும் சக்தி தன்னிடம் அதிக உரிமை எடுத்துகொள்வதை பார்த்து ஒரு பயம். அவள் சென்றதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டான். சக்தியின் அருகாமையில் மூச்சு முட்டுவதாக உணர்ந்தான்.

இப்போதே இப்படி இருப்பவள் உண்மைகள் தெரிய வரும் போது….. என்ன செய்வாளோ என்று பயமாக இருந்தது.

இனி வெகு காலத்திற்கு உண்மைகளையும் தள்ளி போட முடியாது என்று புரிந்தது. வாசுகிக்கு இன்னுமும் அவனை இங்கே விட மனமில்லாமல் தான் இங்கே இந்த ஊருக்கே வந்திருப்பது புரிந்தது.

அவனுடைய தாத்தாவிற்கும் ஆரோக்கியம் சற்று மட்டுப்பட ஆரம்பித்தது. அதற்குள் அவனின் தந்தை தொலைத்த இந்த அவரின் சொத்தை ஒப்படைப்பது அவனின் கடமை.

ஏதாவது செய்தே ஆகவேண்டிய காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தான். அதுவுமில்லாமல் இன்று சக்தி தன்னிடம் காட்டிய அக்கறை கார்த்திக்கிற்கு பிடிக்கவில்லை.

அவனுக்கு சக்தி அவனை திருமணம் செய்ய மறுத்துவிட்டது தெரியவில்லை. அவனுக்குள் ஒரு கலக்கம்  எங்கே சக்தி தன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடுவாளோ என்று.

அவனுக்கு அவள் தன்னுடனான திருமணத்திற்கு மறுத்ததும் தெரியவில்லை, அதே சமயம், “எனக்கு கார்த்திக் மாதிரி ஒரு மாப்பிள்ளை வேண்டும்”, என்று தந்தையிடம் கேட்டதும் தெரியவில்லை.

ஏதாவது செய்ய வேண்டிய நிலைமையில் இருந்தான். அவனுடைய குடும்பத்தை விட்டு பல வருடங்கள் பிரிந்து இருந்து விட்டான். 

அவனின் அம்மாவும் தான் என்ன செய்வார்.

கணவனின் ஆதரவு இல்லாமல் தனியாக எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக்கொண்டார். மகனான தான் தந்தைக்குரிய கடைமையை செய்ய பிரிந்து வந்துவிட்டான். 

தந்தை…… அவனின் தந்தை…… அவருக்காக அவன் எதுவும் செய்வானே! அவருக்காக அவன் செய்த செயல்????????  

அவனின் அம்மாவையும் கவனிக்க வேண்டும் தானே! இங்கேயிருந்து தான் போக வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான்.

அதுவுமில்லாமல் வைஷ்ணவியும் திருமணத்திற்கு நிற்கிறாள். அண்ணனாக தான் அவளுக்கு கடமைகள் ஆற்ற வேண்டிய நேரமிது என்பதையும் உணர்ந்தான்.

அவளுக்கு மட்டுமல்ல அவனின் தாய்மாமன் மக்களான சுமித்ராவிற்கும், பிரபுவிற்கும் அவர்கள் வாழ்கையை நன்றாக அமைத்துக்கொள்ள வைக்க வேண்டிய கடமையும் அவனுக்கு இருக்கிறது.

சுமித்ராவை பற்றியும் தன்னை பற்றியும் அம்மாவிற்கு இருக்கும் ஆசைகளை அவன் அறியாதவனல்ல……..

அவனுக்கு பெரிதாக திருமணத்தை குறித்த எந்த எதிர்பார்ப்புமில்லை. வருவது எதுவாகினும் எதிர்கொள்ள தயாராக தான் இருந்தான். சுமித்ராவின் எண்ணம் என்ன என்பதும் அவனுக்கு தெரியவில்லை.

அதுவுமில்லாமல் அவனின் தாத்தா சுமித்ராவை தனக்கு திருமணம் செய்ய விரும்புவாரா தெரியவில்லை. அவர் விரும்பாவிட்டால் பரவாயில்லை என்பதே கார்த்திக்கின் எண்ணமாக இருந்தது.            

இந்த சக்திக்கு வீரமணி திருமணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்றும் தோன்றியது. மகளுடைய திருமணத்தை அவர் எதிர் நோக்க இருக்கும் சமயத்தில் அவருக்கு வாழ்க்கையில் அடி கொடுக்க கார்த்திக் விரும்பவில்லை. அது எந்த வகையிலாவது சக்தியின் வாழ்க்கையை பாதித்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையும் இருந்தது. 

என்ன செய்யவேண்டும்? ஏது செய்யவேண்டும்? என்று வரையறுக்க ஆரம்பித்தான்.

முதலில் சக்தியின் திருமணம் அவனுக்கு முக்கியமாக பட்டது. வைஷ்ணவியும் சுமித்ராவும் அவனுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு சற்றும் குறையாமல் சக்தியும் அவனுக்கு முக்கியம்.

அவள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டால் அவனுக்கு அவனின் வேலைகள் சுலபமாகிவிடும் என்றே தோன்றியது.

வீரமணியிடம் இருந்து அவன் தொழிலை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்காக அவர் ஒன்றுமில்லாமல் போக வேண்டும் என்பது அவனின் எண்ணம் கிடையாது.

அவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர் நன்றாக இருப்பது அவரின் மகள் நன்றாக இருப்பதால் மட்டுமே முடியும். செய்ய வேண்டும் ஏதாவது சீக்கிரத்தில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான். 

முடிவெடுப்பது சுலபம்! ஆனால் செயல் படுத்துவது மிகவும் கடினம்! சில சமயம் முடியாமல் கூட போய் விடும் என்பதை அறிய இன்னும் கார்த்திக்கிற்கு நேரம் வரவில்லை. ஏனென்றால் இதுவரை அவன் முடிவெடுத்தது எல்லாம் செயல் படுத்தி இருந்தான்.

இப்போதைக்கு அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் வீரமணியின் வார்த்தைகள் தான். அவர் சக்தியிடம் கூறிய, “அவர்கள் பணம் கொடுத்திருந்தால் நான் இதை அவர்களிடமே கொடுத்திருப்பேன்”, என்று சொன்னது சற்று ஆறுதலாக இருந்தது.  

வாழ்க்கை இன்னும் அவனுக்கான சோதனைகளை முடிக்கவில்லை என்பதும் அவன் அறியவில்லை.  

அன்று மாலையாகிவிட்டது கார்த்திக் சக்தியின் வீடு வந்து சேர்வதற்கு…….

இதற்குள் சில முறை அவனின் அம்மா வீட்டில் இருந்தும் அவனுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவன் எடுக்கவில்லை. யார் அழைக்கிறார் என்றும் தெரியவில்லை. யாராகினும் எடுத்தால் அவன் ஹாஸ்பிடலில் இருப்பதை மறைக்க முடியாது என்று அவன் எடுக்கவேயில்லை.

அவன் ஹாலில் வந்து அமரவும், தெய்வானை வேகமாக வந்தார். “என்ன கார்த்திக் ஒரு போன் பண்ணியிருக்க வேண்டாமா? இந்த வீட்ல தான் இருக்க, அதுக்காகவாவது தகவல் சொல்லி இருக்க வேண்டாமா”, என்று குறைபட…….

“அது அப்படி இல்லைங்கம்மா! ஒன்னுமில்லாததுக்கு வீணா பயப்படுத்த வேண்டாம்னு தான் சொல்லலை!”, என்று சமாதானப்படுத்தினான்.

“நீ ஈசியா சொல்லிட்ட! இவளை சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு! நைட்டே உன்னை பார்க்கனும்னு ஒரே பிடிவாதம்! காலைல போகலாம்னு சொன்ன பிறகு தூங்கவேயில்லை போல!”,

“இவளை பத்தி தெரிஞ்சு நான் வந்து எட்டி பார்க்கும் போது எல்லாம் முழிச்சிட்டு இருக்கா! அவங்கப்பாவை அஞ்சு மணிக்கு எல்லாம் எழுப்பி விட்டு கூட்டிகிட்டு வந்துட்டா. என்னவோ போ கலாட்டா பண்ணிட்டா!”, என்று குறை பட்டார்.

“அவங்களுக்கு வேலையே இல்லைம்மா! அதான் எல்லாரை பத்தியும் இழுத்து போட்டுட்டு அக்கறை பட்டுட்டு இருக்காங்க…… அவங்களை கவனிக்க இல்ல அவங்க கவனிக்க கூடிய மாதிரி சீக்கிரம் நாம ஆளை கொண்டு வரணும்”, என்றான் இரு பொருள் பட.

சக்தி, “எல்லோரை பத்தியும் இழுத்து போடறனா? யாரை போடறேன்?”, என்று சண்டைக்கு வந்தாள்.

கார்த்திக் இரு பொருள்பட கூறியது சக்திக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது ஒன்று…….. மற்றொன்று அவள் சிவாவிற்கு, அவனின் சுமித்ராவின் மேல் உள்ள காதலுக்கு உதவி செய்ய நினைப்பது….

அது மற்றவர்களுக்கு புரியவில்லை…..

அவன் சீரியசாக பேசவும், “என்ன கார்த்திக்?”, என்றார் தெய்வானை.

“மேம்க்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்கனும்மா!”, என்று சொல்லியே விட்டான் கார்த்திக்.

“ஒஹ்! அதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா!”. என்று சொன்ன சக்தி……… “அதெல்லாம் ஏற்கனவே பேச்சை ஆரம்பிச்சிட்டாங்க”, என்றாள்.

அதோடு நிறுத்தாமல், “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்கம்மா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க!”, என்று அசால்ட்டாக சொல்ல…..

கார்த்திக்கிற்கு பயங்கர அதிர்ச்சி, நெஞ்சு துடிப்பு அதிகரித்தது. ஏற்கனவே ஒரு நாள் படுத்திருக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் கேட்டது தான் என்றாலும் நேரடியாக கேட்பது அவனின் துடிப்பை அவனுக்கே கேட்க வைத்தது…..

அவனின் அதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவனின் கண்களில் இன்னும் நன்றாக தெரிந்தது. அப்போது அவன் கண்ணாடி அணியவில்லை.

அவனின் கண்ணில் அவ்வளவு அதிர்ச்சியை பார்த்த சக்திக்கு சிரிப்பு வந்தது. “என்ன பேச்சு இது சக்தி!”, என்று தெய்வானை கூட அதட்டினார்.

“நீங்க சொன்னதை தானேம்மா சொன்னேன்”, என்று சொன்னவள்……..

கார்த்திக்கை பார்த்து, “பயப்படாத கார்த்திக்! நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்!”, என்று சொன்னவள்……..

“நீதான் என்னைவிட சின்னவனாச்சே! அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்!”, என்று சொன்னாள்.

கார்த்திக்கிற்கு இதயத் துடிப்பு எகிறியது.

அப்போதும் தெய்வானை, “கார்த்திக் நீ சக்தியை விட சின்னவனா?”, என்று கேட்டார்.

கார்த்திக் பதில் சொல்லும்முன்பே, “அதான் நான் சொல்றேனில்லை மா, நீங்க தான் அதை நம்பவே மாட்டேங்கறீங்க!”, என்று சலித்தவள்…….     

“ஆனா வேற ஒரு விஷயமும் சொன்னேன்”, என்றாள்.

என்னவோ ஏதோ வென்று பயந்தபடி கார்த்திக் பார்க்க…….. “எனக்கு உன்னை மாதிரி தான் மாப்பிள்ளை வேணும்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன்”, என்றாள் சீரியஸாக.                     

அந்த பேச்சை கார்த்திக் சற்றும் ரசிக்கவில்லை, அவனுக்கு மனதை பிசைந்தது.

“எனக்கு டையர்டா இருக்கு! நான் போய் தூங்கறேன்!”, என்று அவனின் ரூம் நோக்கி சோர்வோடு எழுந்து போனான். உடலின் சோர்வு, வலியை விட……… மனதின் சோர்வு வலி இன்னும் அதிகமாக இருந்தது.

“இவள் ஏன் தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைக்கிறாள்”, என்று சக்தியை நினைத்து கோபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

ஏற்கனவே செய்த பாவங்கள் போதாது என்று ஏமாற்றும் பாவத்தை வேறு செய்ய போகிறோம். இதில் நம்பிக்கை துரோகி என்ற பெயர் வேறு வாங்க போகிறோம். அவனின் மனம் துடித்தது .

உடல் வலியில் தூக்கமில்லை, மனதின் வலி தூக்கம் வர விடவில்லை. செல்வத்தை அழைத்து தூக்க மாத்திரை வாங்கி வர சொல்லி…….. இரண்டு மாத்திரையை போட்டு தூங்கினான்.  

இரண்டு நாட்கள் எங்கும் செல்லவில்லை, யாருடனும் பேசவில்லை. தந்தையின் நினைவுகளும் செய்ய போகும் காரியங்களின் வீரியமும் அவனுக்குள் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி இருந்தது.

வீரமணியுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் சக்தியிடம் அது கூட இல்லை. அவள் வரும் போது எல்லாம் உறங்குவது போன்ற பாவனை.

அவளும் ரொம்பவும் முடியவில்லை போல என்று நினைத்து அவனை தொந்தரவு செய்யவில்லை. தெய்வானை அவனுக்கு தேவையானது, உணவு எல்லாம் சரியான சமயத்தில் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார்.

வீரமணி, சக்தி, தெய்வானை மூவருமே அவனை நன்றாக பார்த்துக் கொண்டனர். அது அவனின் குற்ற உணர்ச்சியை மேலும் மேலும் அதிகப்படுத்தியது.

ஒரு வாறு ஐந்து முழு நாட்களுக்கு பிறகு கார்த்திக் இயல்பு வாழ்க்கைக்கும் இயல்பு நிலைக்கும் திரும்பியிருந்தான்.

முயன்று மனதை பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தான்.

நடுவில் அழைத்த வைஷ்ணவியிடம், “உடம்பு சரியில்லை!”, என்று மட்டுமே சொன்னான். அதற்கே வாசுகி பதறி விட்டார்.

அவனை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அவனை எங்காவது வர சொன்னார். அவரை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆக்சிடென்ட் என்று சொல்லியிருந்தால் அவ்வளவு தன் வைராகியத்தை எல்லாம் விட்டு ஒரு வேளை தன்னை பார்க்கவே வந்திருப்பாரோ என்றே தோன்றியது…….

கார்த்திக்கின் உடல் நிலை சரியில்லாததால் சுமித்ராவின் விஷயத்தை சிவாவிடம் சொல்ல மறந்திருந்தாள் சக்தி.

சிவாவாக ஒரு நாள் போன் செய்யவும், “சுமித்ராக்கு அவளோட அத்தை பையனோட கல்யாணமாம்”, என்று சக்தி அவனிடம் விஷயத்தை கூற…… அவனுக்கு பயங்கர அதிர்ச்சி.

“எப்படி? எப்படி? எனக்கு தெரியாம போச்சு! நான் தினமும் அவளை காலேஜ் போகும் போது எங்கேயாவது அவள் கண்ணில் பட்டுடுவேன். அவளும் என்னை கவனிக்கறா! என் மேல விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரியலைன்னாலும்…. அவளுக்கு இப்படி கல்யாணம் பேசியிருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை”.

மனதிற்குள் பேசியவன் என்ன செய்வது என்று தெரியாமல் சமைந்து விட்டான்.

இப்படி ஒரு விஷயம் இருக்க கூடும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

சக்தி ஹாலில் நுழைவாயிலில் நின்று தான் போன் பேசிக்கொண்டு இருந்தாள். இவள் விஷயத்தை சொன்னதும் சிவாவிடம் இருந்து ஒரு பதிலும் வராமல் போகவே…. “சிவா! சிவா இருக்கீங்களா?”, என்று கத்த………..

அது சிவாவிற்கு கேட்டதோ இல்லையோ ரூமில் இருந்த கார்த்திக்கிற்கு நன்றாக கேட்டது.  

அவன், “என்ன?”, என்பது மாதிரி வெளியே வந்து நிற்க….. இவனை பார்த்ததும் சக்தி தடுமாறினாள். சும்மாவே இவன் பேசுவான், இப்போது என்ன பேசுவானோ என்பது போல பார்த்தாள்.

“என்ன மேம்? என்ன விஷயம்?”, என்று கேட்டான்.

சட்டென்று பொய் சொல்ல வராத சக்தி, “சுமித்ராக்கு அவளோட அத்தை பையனோட கல்யாணம்ன்ற விஷயத்தை சிவா கிட்ட சொன்னேன்”, என்று சொல்லிவிட…….

கார்த்திக்கிற்கு பயங்கர கோபம்…….

“உங்களுக்கு ஏன் இந்த அதிக பிரசிங்கித்தனம்! அவனே மறந்தாலும் அந்த பொண்ணை நீங்க மறக்க விட மாட்டீங்க போல இருக்கே!”, என்றான் ஆத்திரத்தை மட்டுப்படுத்தி கோபமாக…….

அவனின் முகபாவனைகளை பார்த்த சக்தி, அவனின் கண்களில் தெரிந்த கோபத்தை பார்த்த சக்தி…… அவனையே பார்த்து நின்றாள். 

யாரோ ஒரு பெண்ணை பற்றி பேசினால் இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று சக்திக்கும் சற்று ஆத்திரம் வர……  

அவனின் கோபம் சக்தியை சீண்ட……..

“உனக்கு ஏன் இவ்வளவு கோபம்……. ஏதோ நான் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை யாரோடவோ கோர்த்து விடற மாதிரி”, என்று சக்தியிடம் இருந்து அவளையறியாமல் வார்த்தைகள் உதிற…..

“வாயை மூடுறீயா நீ”, என்று ஒரு கதும்பு கதும்பினான்……         

Advertisement