Advertisement

அத்தியாயம் ஐந்து :

அடுத்த நாள் காலை சக்தி கண்விழித்தது அவளின் அம்மா தெய்வானை முகத்தில் தான்.

“அம்மா!”, என்று அவளின் கழுத்தை கட்டிக்கொண்டாள், “எப்போ வந்தீங்க?”,

“இப்போ தான் வர்றேன்”,

“ஆனா நீங்க வர்றதுக்கு இன்னும் ஒன் வீக் இருந்ததே!”,

“என் பொண்ணு என்னை மிஸ் பண்ணும்போது எங்கயாவது உட்கார்ந்துட்டு இருப்பனா என்ன? நீ பேசி முடிச்சதும் ஃபிளைட் பார்த்தோம், ஒரு டூ ஹவர்ஸ்ல ஃபிளைட் இருந்தது. உடனே ரூமை வேகேட் பண்ணி, பிளைட் பிடிச்சு சென்னை வந்து, இப்போ இங்க வந்துட்டோம்”, என்றார்.

“ஸோ ஸ்வீட் மாம் யூ ஆர்”, என்றாள் சக்தி அவரின் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டே. சக்தி அவளின் அம்மாவிடம் கொஞ்சுவது அதிகமல்ல, மிக மிக அதிகம்.  அம்மாவை பார்த்ததும் நேற்று இருந்த அவளின் மனசோர்வுகள் எல்லாம் போயே போச்சு……. போயிந்து……… இட்ஸ் கான்…..

வேகமாக ரூமை விட்டு அப்பாவை பார்க்க ஓடி வந்தாள், அவர் ஹாலில் ஃசோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். அங்கேயே தான் கீழே இன்னும் கார்த்திக் உறங்கிக்கொண்டு இருந்தான்.

“அப்பா!”, என்றபடி சக்தி அவரின் பக்கத்தில் அமர……

“என்ன சக்திம்மா? இப்படி அப்பாவையும் அம்மாவையும் பயமுறுத்திட்டியே! என்னடாம்மா, என்ன ஆச்சு? என்றார்.

“ஒண்ணும் ஆகலைப்பா! என்னவோ உங்களை பார்க்கணும் போல இருந்துச்சு!”,

“இதுக்கு தான் கூட வான்னு கூப்பிட்டாலும் வர மாட்டங்கற”, என்றார்.

அதற்கு பதில் ஒரு புன்னகை மட்டுமே…. சக்திக்கு அப்படி வெளிநாடுகளில் சுற்ற பெரிதாக ஒன்றும் ஆர்வமில்லை…… அதுமட்டுமில்லாமல் அவளின் அம்மாவும் அப்பாவும் காதல் மனம் புரிந்தவர்கள். ஆரம்ப காலத்தில் மிகுந்த சிரமங்களை அனுபவித்தவர்கள்.

அவர்களது பெரிய கூட்டுக் குடும்பம்…… சக்தி எட்டாவது படிக்கும் போதோ என்னவோ தான் தனியாக வந்தார்கள்.

அதுவும் கூட்டு குடும்பத்தில் இருக்கும் போது அவர்களின் பாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட்…… இவர்கள் காதல் மனம் புரிந்தவர்கள் என்பதால் எல்லா வேலைகளும் இவளின் அம்மாவின் தலையில் தான் விழும். என்ன செய்தாலும் அதில் பேச்சும் வாங்குவார். 

தனியாக வந்த பிறகு தான் அவளின் அம்மாவிற்கு நிம்மதியான மனநிலை கிட்டியது என்று சக்திக்கு தெரியும்.

இப்போது அதிக இடங்களுக்கு அடிக்கடி சென்றாலும் முன்பு எங்கேயும் சென்றது கிடையாது. ஏன் தனிமை என்பதே வீரமணிக்கும் தெய்வானைக்கும் அரிதான ஒன்று.

அதனால்தான் தான் ஒற்றை பெண்ணாய் நின்று விட்டோமோ என்று வளர்ந்த பிறகு சக்திக்கு தோன்றுவது உண்டு. அதனால் தன் அம்மா அப்பாவின் தனிமையில் என்றுமே சக்தி குறுக்கிட மாட்டாள்.                  

“போங்கப்பா! எனக்கு சைட் சீயங் எப்பவுமே போரிங்”, என்று சமாளித்தாள்.

“காலேஜ் எப்படி இருக்கு?”, என்று அவர் விசாரிக்க……..

“ஒஹ்! இட்ஸ் ஃபைன் பா! போன வருஷம் வரைக்கும் நான் காலேஜ் ஸ்டுடண்ட்! இப்போ நான் ஒரு காலேஜ்க்கு ஓனர்….. இட்ஸ் எக்சைடிங்!”,

“நான் ப்ரின்சிபல்க்கு மரியாதை கொடுத்தது போய், நான் போனாலே எல்லோரும் எழுந்து நிக்கறாங்க! இது கூட நல்லா இருக்குப்பா! ஆனா இந்த கார்த்திக் அலப்பறை தான் தாங்க முடியலை!”, என்று அவள் சொல்லும் போதே தெய்வானை காபியுடன் வந்தார்.

“சும்மா கார்த்திக்கை சொல்லக் கூடாது! நீ என்ன பண்ணின?”, என்ற கேள்வியுடன்.

“அம்மா!”, என்று சக்தி கத்த…..

“சக்தி! கத்தாத! கார்த்திக் முழிச்சிக்கப் போறான்! அவன் தூங்கட்டும்!”, என்றார் கரிசனமாக…….. அவருக்கு கார்த்திக் என்றால் மிகவும் இஷ்டம். ஏனென்று தெரியாமலேயே சிலர் மேல் நாம் பாசம் வைத்து விடுவோம், அப்படிப்பட்ட பாசம் தெய்வானையுடையது கார்த்திக் மீது.  

சக்தி கத்திய கத்தில் கார்த்திக்கிற்கு விழிப்பு வந்தது, இருந்தாலும் தன்னுடைய பேர் அடிபடுவதால் போர்வையை விலக்காமல் அசையாமல் படுத்திருந்தான்.

“அதும்மா நான் காலேஜ்க்கு ஜீன்ஸ், ஸ்கர்ட், இது மாதிரி ட்ரெஸ்ல போகக்கூடாதாம்”.

“சரியாதானே சொல்லியிருக்கான்! நீ அங்கிருக்கிற ஸ்டுடன்ட்ஸ்க்கு ரோல் மாடலா இருக்கனும் சக்தி! அதுவுமில்லாம உனக்கு இருபத்தைஞ்சு வயசானாலும் நீ பார்க்க இன்னும் ஒரு லேடி அப்பியறன்ஸ்ல இல்லை, ஒரு கேர்ள் அப்பியறன்ஸ்ல தான் இருக்க……. நீ பார்வைக்கு ரொம்ப சின்ன பொண்ணா தெரியக்கூடாதுன்னு அப்படி சொல்லியிருப்பான்”, என்றார்.

“போ! நீ எப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ, என்னோட முடியே பார் என்னோட ஷோல்டர் வரைக்கும் தான் இருக்கு, அதையும் ஹேர் பேண்ட் போட சொல்றான்”, என்று விளையாட்டுத்தனமாக அலுத்தாள்.

“நீ இன்னும் சின்ன பொண்ணில்லை சக்தி, அதுல இருந்து வெளில வா…… கொஞ்சம் சீரியஸா பேசலாம்”, என்றார் தெய்வானை.

“என்னமா?”, என்று உடனே முகபாவனையை மாற்றினாள்.

“உனக்கு எப்படியோ சக்தி? நேத்து நீ பேசினதுக்கு அப்புறம் என் மனசு என்ன பாடுபட்டுச்சின்னு எனக்கு தான் தெரியும்…..”, என்றார் கவலையாக….

“சரி மா! என்ன பண்ணலாம்”,

“கல்யாணம் பண்ணலாம்”, என்றார்.

“கல்யாணமா?”,

“ம்! கல்யாணம் தான்!”,

“உங்கப்பா இன்னும் நீ சின்ன பொண்ணு மாதிரி இருக்கன்னு யோசிக்கறார்! என்ன உயரம் எல்லாம் நல்ல உயரமா தான் இருக்க! உடம்பு தான் ஏறலை! ஒல்லியா இருக்க! அதுக்கென்ன பண்றது உன் வயசுல எனக்கு நீ அஞ்சு வயசு குழந்தை”, என்றார் டென்ஷனாக……

“எல்லோரும் இந்த ஜீரோ சைஸ் லுக்குக்கு எவ்வளவு கஷ்டப்படறாங்க…. டையட் ஜிம் அது இதுன்னு….. எனக்கு தானா இருந்தா எதுக்கு கவலை”,  

தெய்வானை முறைக்க….

“ஓகே! ஓகே! நான் வீக்கா இருக்கேன்! ஒத்துக்கறேன்! நான் இன்னும் ஸ்ட்ராங் ஆகனும்!”, என்று கார்ட்டூனில் வருவது போல பேசி பயில்வான் போல் புஜத்தை கையால் தட்டி காமிக்க….. இன்னும் டென்ஷன் ஆனார் தெய்வானை. 

“முதல்ல நீ இந்த கார்டூன் சேனல் பார்க்கறதை நிறுத்தனும்! அப்போ தான் நீ பெரிய பொண்ணு ஆவ!”, என்று தெய்வானை சொல்ல…….

அவரின் காதருகில் சென்று, “நான் பெரிய பொண்ணாகி பன்னண்டு வருஷம் ஆகுது!”, என்றாள் ரகசியமாக..

“கர்மம்! கர்மம்!”, என்று அவளை இரண்டு அடி வைத்தார்.

“நான் பெரிய பொண்ணு ஆகிட்டேன்னு ஒத்துக்குறியா, கார்டூன் பார்க்கறவங்க இப்படி பேச மாட்டாங்க”, என்றாள் கண்ணடித்து.  

“நான் உன் அம்மாடி!”,

“ஸோ வாட் மாம்!”, என்று மறுபடியும் கழுத்தை கட்டிகொண்டவள்…. 

“நீயென்ன இதுக்கு போய் டென்ஷன் ஆகற……….. நீ கல்யாணம் பண்ணிக்கோன்னா கல்யாணம் பண்ணிக்கறேன்! உன் பேச்சை நான் எப்போ மறுத்திருக்கிறேன்!”, என்று உடனே சக்தி சம்மதம் கொடுக்க…

“பாருங்க! அவளே சரின்னு சொல்லிட்டா! நீங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க!”, என்றார் வீரமணியிடம்.

“சரி!”, என்று வீரமணி சொல்லும்வரை விடவில்லை.

அவர் சரியென்று சொல்லுவதற்கு காத்திருந்தது போல உடனே வேறொன்றை ஆரம்பித்தார் தெய்வானை……..

கார்த்திக் உறங்கிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து தைரியமாக பேசினார்……..

“நம்ம கார்திக்கையே பார்க்கலாமா! நிறைய வருஷமா நம்மகூட இருக்குற பையன்…. நல்ல பையன்…… நமக்கு நல்லா தெரிஞ்சவன்……. தொழிலை நல்லா பார்த்துக்கறான்……. சக்தியும் நம்ம கூடவே கல்யாணத்துக்கு அப்புறமும் இருப்பா………  என்ன சொல்றீங்க?”, என்றார் வீரமணியும் சக்தியையும் பார்த்து.

வீரமணி அது சரிவருமா என்று யோசிக்கும் முன்னரே…… “அம்மா! கார்த்திக் என்னை விட சின்னவன்”, என்றாள் சக்தி.

“என்ன சின்னவனா? உளறாத! எப்படி வாட்ட சாட்டமா இருக்கான்! நீ சின்னவன்னு சொல்ற!”,

“இல்லைம்மா, பார்க்க தான் அவன் அப்படியிருக்கான், ஆனா என்னைவிட பத்து நாள் சின்னவன்”,

“உனக்கு எப்படி தெரியும்?”,

“அவன் சொன்னான்!”,

“அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்லியிருப்பான்”,

“இல்லைமா நான் அவன் டிரைவிங் லைசென்ஸ் பார்த்தேன்!”,

“என்னங்க கார்த்திக் சக்தியை விட சின்னவனா?”, என்று தெய்வானை வீரமணியை பார்த்துக் கேட்டார்.

கார்த்திக் மூச்சு விடவும் மறந்து போர்வைக்குள் இதையெல்லாம்  கேட்டுக்கொண்டிருந்தான். அவன் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்டது.

“தெரியலை தெய்வா! ஒரு பதினாறு பதினேழு வயசுல நம்ம கிட்ட வந்தான்னு நினைக்கிறேன்! உனக்கு எத்தனை வயசுன்னல்லாமா கேட்பாங்க! அப்போவே உயரமா தான் இருப்பான்……. தவிர ஒல்லியா இருப்பான்…… வயசெல்லாம் தெரியலை!”, என்றார்.

“என்ன படிச்சிருந்தப்போ வந்தான்”, என்று படிப்பை வைத்து வயதை கணக்கிட முயன்றார் தெய்வானை.

“பத்தாவதா பன்னடாவதா, எனக்கு சரியா ஞாபகமில்லை”, என்றார் வீரமணி.

“பத்து நாள் தானே சக்திம்மா! நம்ம கார்த்திக் மாதிரி ஒருத்தன் உனக்கு மாப்பிள்ளையா வரணும்னு எனக்கு ஆசை. உன்னை நல்லா பார்த்துக்கறான்”, என்றார்.

“ஆனா மா அவன் சின்னவன், இது சரிவராது! நான் வேற அவனை வா போன்னு கூப்பிட என் ஃபிரண்ட்ஸ் எல்லோரும் கேட்க, அவன் சின்னவன்னு டமாரம் அடிச்சிருக்கேன்”,  

“உனக்கு கார்த்திக்கை பிடிக்குமா? இல்லையா?”,

“இது ஒரு கேள்வியா? எனக்கு கார்த்திக்கை பிடிக்கும்ங்கறது ஊருக்கே தெரிஞ்ச ரகசியம்”, என்று சிரித்தாள் சக்தி.

“அப்போ பேசலாமாடா”, என்று தெய்வானை மறுபடியும் கேட்க…..

“வேண்டாமா! அவன் சின்னவன்! ஆனா எனக்கு கார்த்திக் மாதிரி ஒரு மாப்பிள்ளை பாருங்க!”, என்றாள்.

“ஏண்டாம்மா அசல் உன் கண்முன்னாடி இருக்கான்! நீ அவனை மாதிரி ஒரு நகலை கொண்டுவான்னா நான் எங்க போவேன்”, என்றார்.

“சக்திக்கு மாப்பிள்ளை பார்க்கறதுன்னா சும்மாவா! தேடுங்க!”, என்றாள் சிரிப்புடனே.

கார்த்திக்கிற்கு இப்போது தான் சற்று மூச்சு சரியாகிற்று. ஆனாலும் முள் மேல் படுத்திருப்பது போல இருந்தது. இவர்கள் எப்போது எழுந்து போவார்களோ தெரிவில்லை என்று இருந்தது. 

“முடிவா சொல்றியா சக்திம்மா?”, என்றார் வீரமணி.

“முடிவா தான் சொல்றேன்! எனக்கு கார்த்திக் மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்! அப்படியே பாருங்க!”, என்றாள் சக்தி.

பிறகு, “அப்பா! நாளைக்கு என் ஃபிரண்ட் கஸ்தூரியோட கல்யாணம் பா! நம்ம போகணும்!”, என்றாள்.

“நீ போயிட்டு வாம்மா!”,

“ம்கூம்! அதெல்லாம் முடியாது! அவங்க அப்பா, அம்மா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோட வந்து நமக்கு மரியாதை செஞ்சு பத்திரிகை வெச்சிட்டு போனாங்க…….. நீங்க வர்றீங்க! நான் உங்களோட தான் போவேன்!”, என்றாள்.

“கல்யாணம் கோயில்ல! ரிசப்ஷன் மதியம் பதினொன்னுல இருந்து ரெண்டு வரைக்கும், நம்ம ரிசப்ஷன் தான் போறோம்!”, என்றாள்.

அவர் யோசிக்கும் போதே தெய்வானை……. “போங்க! நாலு எடத்துக்கு போனா தான் நல்ல மாப்பிள்ளை யாராவது கண்ல படுவாங்க! இல்லை அட்லீஸ்ட் அவங்க அப்பா அம்மவாவது கண்ல படுவாங்க!”, என்றார்.

“மா நீ வரலை!”,

“இல்லை சக்தி, அப்பாவை கூட்டிட்டு போ! அம்மா வரலை!”, என்றவர்…… “ப்ளீஸ்டா”, என்றார்.

“சரி போ!”, என்று சக்தி எழுந்து போக……

“என்னங்க இப்படி சொல்லிட்டா! எனக்கு கார்த்திக் மாப்பிள்ளையா வரணும்னு தான் ஆசை! நம்ம பொண்ணு நம்ம கூடவே இருப்பான்னு நினைச்சேன்! வரப்போற மாப்பிள்ளை கிட்ட நம்ம விடவா சொத்து அதிகமா இருக்க போகுது? எதுக்கு தெரியாதவங்க யாரையாவது பார்க்கனும்”. 

“தெய்வா! இனிமே அவளுக்கு மாப்பிள்ளை பொறக்க போறது இல்லை! கார்த்திக் தான் அவளுக்கு மாப்பிள்ளையா வரணும்னு விதி இருந்தா அவன் தான் வருவான்! அவன்  வரக்கூடாதுன்னு இருந்தா நம்ம என்ன செய்ய முடியும் சொல்லு! எல்லாம் நல்லதாவே நடக்கும் விடு!”, என்று அவர் எழுந்து போக….. தெய்வானையும் அவர் பின்னோடு போனார்.

அதன் பிறகே கார்த்திக் எழுந்து உட்கார்த்தான்.

யாரும் பார்க்கும் முன்னர் அவனின் ரூமிற்கு வந்துவிட்டான்.

நெஞ்சு பட படவென்று அடித்துக் கொண்டது.  சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டே வேலையை கவனிக்கப் போனான்.

அடுத்த நாள் திருமணத்திற்கு கிளம்பினர். வீரமணி எங்கே போனாலும் இதுவரை அவரின் நிழலாய் தான் கார்த்திக் இருப்பான்.

இன்று வீரமணியும் சக்தியும் ரெடியாகி வர….. கார்த்திக் இன்னும் ரெடியாகவே இல்லை.

“கார்த்திக், நீ வரலையா?”, என்றார் வீரமணி.

“இல்லைங்கய்யா நீங்க போங்க!”, என்றான் கார்த்திக்….. எப்போதும் அப்படி சொன்னதே இல்லை. அவருக்கு முன் அவன் நிற்பான்.  

“ஏன் கார்த்திக்?”, என்றாள் சக்தி.

“கொஞ்சம் குவாரில வேலை இருக்குது”,

“நீ வந்தா ரிசப்ஷன் முடிச்சிட்டு அப்படியே நம்ம வாங்கியிருக்கிற காலேஜ் போய் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சேன்”, என்று வீரமணி சொல்லும்போதே…

அங்கேயிருந்த தெய்வானை, “நீ போ கார்த்திக்! சக்திக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கோம்! கல்யாணம் மாதிரி இடத்துக்கு போனா தான் ஏதாவது மாப்பிள்ளை நமக்கு தகுந்த மாதிரி இருக்கான்னு தெரியும்! நீ போ நம்ம சக்திக்கு ஏத்த மாப்பிள்ளையா பாரு! இவருக்கு சாமர்த்தியம் பத்தாது! சக்திக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியது உன் பொறுப்பு!”, என்றார்.

“என்னமா? அப்பாக்கு சாமர்த்தியம் பத்தாதுன்னு பொசுக்குன்னு சொல்றீங்க! எவ்வளவு சாமர்த்தியமா உங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கார்! இப்படி சொல்லிட்டீங்களே!”, என்று போலியாக வருத்தப்பட

“அதனால தான் சக்திம்மா எனக்கு சாமார்த்தியமில்லை”, என்று வீரமணி சொல்ல,

“அப்பாவும் பொண்ணும் என்னை ஓட்டரீங்களா? இருங்க உங்க ரெண்டு பேருக்கும் நைட் டிஃபன் கிடையாது!”,

“என்ன ஃடிபன் கிடையாதா?”, என்று வீரமணி போலியாக பயப்பட……

“அப்பா! டோன்ட் வொர்ரி! டிஃபன் கிடையாது, ஒன்லி சாப்பாடு!”, என்று சக்தி சொல்ல….. அங்கே எல்லோரும் சிரிக்க….. கார்த்திக்கின் முகத்தில் சிரிப்பல்ல….. ஒரு புன்னகையல்ல…. ஒரு இளக்கம் கூட கிடையாது.

மூவரும் அவனை தான் பார்த்தனர்……. அதுவும் சக்தி வாய்விட்டே சொன்னாள், “ஏன் கார்த்திக் எப்பவும் இப்படி சீரியஸா இருக்க! மனுஷனா பொறந்தா சிரிக்கனும்”, என்றாள்.

எதற்கும் கார்த்திக்கிடம் பதில் இல்லை.

“அவன் தான் அப்படின்னு தெரியும் இல்லை. ஏன் அவனை வீணா இழுக்கற, போ! கார்த்திக் சீக்கிரம் கிளம்பி வா”, என்று அவனை ரெடியாக அனுப்பினார் தெய்வானை.

ஐந்து நிமிடத்தில் வந்தான் கார்த்திக்……..

பிறகு மூவரும் கிளம்பினர்….. கருப்பண்ணன் காரை எடுக்க போக…

“அதான் கார்த்திக் வர்றான் இல்லை, நீ இங்கயே இரு!”, என்று வீரமணி அவனை நிறுத்தி விட்டார்.  கார்த்திக் வண்டியோட்ட………. வீரமணி பக்கத்தில் அமர…… சக்தி பின்னால் அமர்ந்தாள். 

திருமண வீட்டில் இவர்கள் கார் நின்றதுமே வேகமாக பெண்ணின் தந்தையும், மாப்பிள்ளையின் தந்தையும் வீரமணியை வரவேற்க விரைந்து வர………. அவர்களோடு இன்னும் சில பேரும் வர…….. அவர்களோடு கேமராமேனும் லைட் பாயும் கேமராவையும் லைட்டையும் தூக்கிகொண்டு ஓடி வந்தனர்.

அந்த கூட்டத்தைப் பார்த்து சக்தி பயந்து விட்டாள். “அப்பா! நீங்க இறங்கி போங்க! நான் கார்த்திக் கார் பார்க் பண்ணின உடனே அவனோட வர்றேன்!”, என்றாள்.

“நீங்க அப்பாவோட போங்க மேம்! அது தான் மரியாதை!”, என்றான்.

“ஏன்? உன்னோட போனா என்ன மரியாதை இல்லை! அங்க பாரு எத்தனை பேரு? இடிச்சு தள்ளிடுவாங்களோ என்னவோ? நான் போகலைப்பா! உனக்கு என்கூட வர இஷ்டமில்லைன்னா நான் தனியா போயிக்கறேன்!”, என்றாள்.

அதற்குள் யாரோ வீரமணிக்காக கார் கதவை திறக்க அவர் இறங்கினார், அவர் இறங்கியதும் பெண்ணின் தந்தை, “கார்த்திக் தம்பி! இறங்குங்க! நம்ம பசங்க கார் பார்க் பண்ணிடுவாங்க!”, என்றார்.

“இல்லைங்க! நீங்க அய்யாவை கூட்டிட்டு போங்க! நான் பார்க்க பண்ணிட்டு வர்றேன்!”, என்று அவர் மேலே பேசும்முன் காரை நகர்த்தி விட்டான் கார்த்திக்.

“சொன்னா எதையுமே புரிஞ்சிக்க மாட்டீங்களா…… உங்களுக்கு அப்பாவோட போனா என்ன?”,

“என்ன புரிஞ்சிக்கனும்? எனக்கு கூட்டத்தை பார்த்தாலே பிடிக்காது! நான் போகலை! விடேன்! இதுக்கு ஏன் நீ இவ்வளவு பெரிய இஷ்யு பண்ற!”, என்று சக்தி கேட்க……. கார்த்திக் மௌனியாகிவிட்டான்.

கார்த்திக் காரை பார்க்க செய்து, இவள் புறம் வந்து இவளுக்கு கதவை திறந்து விட்டான். இவன் கார் கதவை திறந்து விடவும் சக்தி இறங்கவும், எதிர்புறமாக அப்போது தான் ஒரு கார் வந்து நிற்க…. அதில் இருந்தவர்கள் இதை கவனித்தனர்.

அவர்கள் இறங்கவில்லை, இவர்கள் செல்வதற்காக காத்திருந்தனர். கார்த்திக் அவள் இறங்கியதும் முன்னே நடந்தான். எப்போதும் சக்தி நடக்க அவளை முன்னே விட்டு பின்னே நடப்பான்.

இன்று முன்னே நடந்தான். சக்திக்கு அவனின் செய்கையே புது மாதிரியாக இருந்தது. “கல்யாணத்துக்கே வரமாட்டேன்னு சொல்லிட்டு, எதுக்கு இப்படி ஓடறான்?”, என்பது போல பார்த்தவள், அவள் நடக்க தொடங்கினாள்.

அப்போது பார்த்து அவள் அணிந்திருந்த கொலுசு புடவையின் ஜரிகையில் மாட்டிக்கொள்ள…..

அவளுக்கு நடக்க முடியவில்லை, தடுக்கியது. அவள் கீழே குனிந்து அதை எடுத்து விட முயல, அது வருவேனா என்றது. சக்திக்கு பொறுமையே போயிற்று, ஒரு இழு இழுத்து விடலாமா என்று பார்த்தால் புடவை கிழிந்து விடுமோ என்று இருந்தது.

திருமணம் முடிந்திருந்தால் புடவை கிழிந்தாலும் பரவாயில்லை என்று இழுத்திருப்பாள். ஆனால் இன்னும் மண்டபத்தின் உள்ளேயே போகவில்லையே.

சிறிது தூரம் நடந்துவிட்ட கார்த்திக் சக்தி வருகிறாளா என்று பின்னால் திரும்பி பார்க்க……. அவள் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

அவளின் அருகில் வந்த கார்த்திக், “என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

“கொலுசு புடவையில மாட்டிக்கிச்சு! வர மாட்டேங்குது……. நடக்கும் போது தடுக்குது”,

சுற்றும் பார்வையை விட்டான். அந்த சமயத்தில் பார்க்கிங்கில் யாரும் இல்லை, எதிரில் இருந்த காரோ அதன் ஆட்களோ கண்களில் படவில்லை.

அவன் அப்படியே உட்கார்ந்து ஜரிகையில் மாட்டியிருந்த கொலுசை எடுக்க பார்க்க.. அது வரவேயில்லை. மிகவும் சிரமப்பட்டு எடுத்தான்.

பார்ப்பவர்களுக்கு அவன் நிறைய நேரமாக அவளின் காலை பிடித்துக்கொண்டு ஏதோ செய்வது போல தோன்றும்.

காரில் மூன்று பெண்கள் இருந்தனர். ஒரு ஜோடி கண்கள் எந்த சலனமுமில்லாமல் பார்க்க…… ஒரு ஜோடி கண்கள் கோபத்துடன் பார்க்க……. ஒரு ஜோடி கண்கள் வருத்தத்துடன் பார்த்தது. 

“ம்! வந்துடுச்சு!”, என்று கார்த்திக் நிமிர்ந்தான்……… பின் சக்தி நடக்க……… அவன் பின் தொடர்ந்தான்.

அப்போது தான் எதிரில் இருந்த காரை பார்த்தான். பார்த்தவுடன் டென்சனாகிவிட்டது. இவர்கள் கண்ணில் சக்தியோடு சேர்ந்து தனியாக படக்கூடாது என்று தான் அவளை அவளின் அப்பாவோடு போக சொன்னான்.

அவள் போகவில்லை. பிறகும் இவன் வேகமாக முன்னே போனான். பின்னே திரும்பி வரும்படி ஆகிற்று. அதுவும் அவளின் புடவையில் மாட்டியிருந்த கொலுசை வேறு எடுத்து விட்டுக் கொண்டிருந்தான். அதை வேறு பார்த்திருப்பார்கள், ஐயோ என்று இருந்தது.      

இனி என்ன செய்ய முடியும்… ஒன்றும் செய்ய முடியாதவனாக சக்தியை இடைவெளி விட்டு தொடர்ந்தான்.

“பாருங்கம்மா! நான் சொன்னேன் இல்லை! நீங்க தான் நம்பவேயில்லை”, என்றாள் எதிரில் இருந்த காருக்குள் முன் சீட்டில் அமர்ந்திருந்த வைஷ்ணவி, டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்த அவளின் அன்னையிடம்.

“பாருங்க எப்படி அவளுக்கு கார் தொறந்து விடறான்! கொஞ்சமும் கூச்சமேயில்லாம பப்ளிக்ல காலை பிடிக்கறான் பாருங்க!”, என்று பொறிந்தாள்.

“அவன் புடவையில் மாட்டியிருந்த கொலுசை தானே எடுத்துவிட்டான்! நம்ம தான் பார்த்தமில்ல…..”,

“கொலுசு கால்ல தான் போடுவாங்க”, என்றாள் காட்டமாக….. 

என்ன சொல்வார் அவர்……. அமைதியாக அவர் இறங்க….. அவரை தொடர்ந்து பின்னால் அமர்ந்திருந்த சுமித்ராவும் இறங்கினாள். வைஷ்ணவி இறங்கவேயில்லை.

“இறங்கு வைஷு!”, என்று அவளின் அம்மா சொல்ல……. “நான் வரலை போ! அவன் யாரோடவோ சுத்துற கண்றாவியை எல்லாம் என்னால பார்க்க முடியாது!”, என்றாள் கோபமாக, சுமித்ராவை ஒரு முறை முறைத்துக்கொண்டே.

“வா வைஷு! இங்க எதுவும் சீன் க்ரியேட் பண்ணாத! என்னோட அமைதியா வர்ற! அப்படியே திரும்பவும் வர்ற! அங்க வாயே தொறக்க கூடாது! நம்ம ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப தான் இந்த ஊருக்கு வந்திருக்கோம், வந்தவுடனே உறவுகளுக்கு சலசலப்பை உண்டாக்காத”, என்று அழுத்தமான குரலில் சொல்ல வேறுவழியில்லாமல் வைஷ்ணவி இறங்கினாள்.  

“அவன் இப்படி நம்மளை விட்டு ட்டு அவங்களோட சுத்தினா எல்லோரும் என்ன நினைப்பாங்க?”,

“என்ன நினைப்பாங்க? ஒண்ணும் நினைக்க மாட்டங்க! அவன் என் பையன்றதே யாருக்கும் தெரியாது…… ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கற எல்லோரும் உங்க பையன் எங்கன்னு கேட்பாங்க! யார் கேட்டாலும் கொஞ்சம் வேலையா வெளில போய் இருக்கான்னு சொல்லு!”,

“மேல எதுவும் பேசக் கூடாது…….. நான் ஒண்ணும் அவன் என் பையன் இல்லைன்னு சொல்லலை! அவன் தான் நம்மள வேண்டாம்னு போயிட்டான். அவனா வரும் போது வரட்டும்”, என்றார் அழுத்தமாக வாசுகி, கார்த்திக்கின் அம்மா.   

Advertisement