Advertisement

அத்தியாயம் நான்கு :

அங்கே நகை கடையில் நகை வாங்கிக்கொண்டு இருந்த இரண்டு பெண்களும் விடாமல் கார்த்திக்கையும் அவளோடு வந்த சக்தியையும் பார்த்தனர். அவர்களுக்கு தெரியவில்லை கார்த்திக் அவர்களை பார்த்தானா இல்லையா என்று, அவன் தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறானே.

அதற்குள் அந்த பெண்களின் புறம் சென்ற கண்களினால் அதில் உள்ளவளை சக்தி கூர்ந்து பார்த்தாள்…… அவள் சிவா காட்டிய பெண் போல இருக்கிறாளே என்று.

உடனே கார்த்திக்கிடம் சொல்லவும் வேறு செய்தாள்….. “கார்த்திக் அந்த பொண்ணு நம்ம சிவா காட்டின பொண்ணு மாதிரியே இல்லை!”,

அப்போது தான் அவர்களை பார்த்த கார்த்திக், “இல்லையே!”, என்றான்.

“இல்லை! அந்த மாதிரி தான் இருக்கு!”, என்றாள் சக்தி.

“அப்போ எதுக்கு என்கிட்ட கேட்டீங்க?”, என்றான் கார்த்திக் எரிச்சலாக.

அவனுக்கு எதற்கு எரிச்சல் என்று புரியாதவளாக, “நீ ரொம்ப ஓவரா பண்ற”, என்று அவனை கடிந்தவள்……… யாரும் எதிர்பாராமல், “ஹாய்”, என்று சொல்லியபடி அந்த பெண்களின் அருகில் போனாள்.

தான் சொன்ன வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து போட்டோவை உடனே சிவா டெலிட் செய்துவிட்டதால்….. அந்த பெண்ணை பற்றி ஏதாவது விவரம் கிடைத்தால் அவனிடம் சொல்லலாம் என்று நினைத்தவள் அவளிடம் நட்பு பாராட்ட சற்றும் யோசியாமல் சென்றாள். 

அந்த இருவரும் பதட்டமானார்கள்…… அவளோடு கார்த்திக் வரவும், “நீ போய் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிரேஸ்லெட் டிசைன் பாரு கார்த்திக், நான் இப்போ வர்றேன்!”, என்றாள்.

கண்களில் இருந்த கண்ணாடியை கழற்றி சக்தி அறியாமல் அந்த பெண்களின் புறம் ஒரு பார்வை பார்த்தான் கார்த்திக். பிறகு கண்ணாடியை மாட்டியவன் சென்று விட்டான்.

“நான் சக்தி, சக்தி பிரியதர்ஷினி”, என்று சிநேகமாக அவர்களை பார்த்து சக்தி புன்னகைக்க……. அந்த போட்டோ பெண்ணுக்கு பதிலுக்கு சிரிப்பதா, வேண்டாமா என்றொரு குழப்பம் போல…….

ஆனால் பக்கத்தில் இருந்தவளுக்கு எந்த குழப்பமும் இருந்த மாதிரி தெரியவில்லை………. “நான் உன்னை பார்த்து சிரிக்க மாட்டேன்”, என்பது போலவே அவளின் பாவனை இருந்தது. அவர்கள் இருவரும் முகத்தை முகத்தை பார்த்துக்கொண்டார்கள்.   

அந்த புகைப்படத்தில் பார்த்த பெண்ணை பார்த்து, “நாம எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு! பார்த்திருக்கோமா!”, என்றாள்.

“இல்லைங்க”, என்று ஒற்றை வார்த்தையில் அந்த பெண் பதில் சொன்ன விதமே அவளுக்கு சக்தியுடன் பேச விருப்பமில்லை என்று நன்கு தெரியப்படுத்தினாள்.

“நான் யார்ன்னு தெரியாம என் கிட்ட பேச தயங்கறீங்கன்னு நினைக்கிறேன், வாசுகி க்ரானைட்ஸ் எங்களதுதான், இப்போ ஓ எம் ஆர் என்ஜினீயரிங் காலேஜும் எங்களது தான்”, என்றாள்.

அந்த போட்டோ பெண்ணுக்கு பக்கத்தில் இருந்த பெண், “ஒஹ்! வாசுகி க்ரானைட்ஸ் உங்களுதா?”, என்றாள். அவள் கேட்ட விதம் சாதாரணம் போல தோன்றினாலும் அதில் ஏதாவது நக்கல் இருக்குமோ என்ற மாதிரியான ஒரு எண்ணம் சக்திக்கு தோன்றியது.

அதுவுமில்லாமல் அந்த பெண் தன்னை ஒரு குரோதத்துடன் பார்ப்பது போல தோன்றியது. இப்போதான் பார்க்கும் சிறு பெண்ணிற்கு இந்த வார்த்தைகள் அதிகம் தான் இருந்தாலும் சக்திக்கு தோன்றியது. 

சக்தி மிகவும் ஸ்நேகபாவத்தை விரும்பும் பெண் என்பதால் முகம் மாறாமல் மேலும் பேச்சுக் கொடுத்தாள்………

“நீங்க என்ன பண்றீங்க?”, என்றாள்.

அந்த போட்டோ பெண், “நாங்க காலேஜ் படிக்கிறோம்”, என்று சொன்னாள்.

பக்கத்தில் இருந்த பெண் அவள் பதில் சொல்வதை விரும்பவில்லை என்று முகத்தில் நன்றாக காட்டினாள்.

சக்திக்கு அது புரிந்தாலும், சிவாவிற்காக என்று பேச வந்தவள், இப்போது அவளுக்கே ஏதோ பேச வேண்டும் போல ஒரு ஆர்வம் எழ………. அவளை விட்டு அந்த போட்டோ பெண்ணுடன் மட்டுமே பேசினாள்…….. “உங்க பேரு?”, என்று சக்தி கேட்க………  

“நான் சுமித்ரா! இது வைஷ்ணவி!”, என்று கேட்காத தகவலாக பக்கத்தில் இருந்தவளின் பெயரையும் சேர்த்து சொல்ல…….

அவள் தங்களின் விவரம் சொல்வது பிடிக்காத வைஷ்ணவிக்கு என்னவோ கோபம் எழ……..  

அந்த வைஷ்ணவியாகப்பட்டவள்……. “நம்ம போகலாம் சுமி!”, என்று சொல்லி சக்தியுடன் அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவளை கை பிடித்து இழுத்துக்கொண்டு போகப் போனவள்…….

“i dont think it is neccessary for you to know about us….. you are a stranger to us…… do you get that, நீங்க வாசுகி க்ரானைட்ஸ் சேர்ந்தவங்கங்கறதுக்காக உங்களுக்கு நாங்க எங்க விவரம் சொல்லனும்னு ஏதாவது இருக்கா என்ன”, என்றாள் கடுமையாக.

சக்திக்கு ஒரு மாதிரி யாகிவிட்டது…. அந்த பெண்ணின் கண்களில் தெரிந்த கோபத்தில் சக்தி தடுமாறினாலும் ஒரு மாதிரி சமாளித்து உடனே பதிலும் சொன்னாள்…… “am sorry, this wont be reapeted again even in diehard circumstances”, என்று அலட்சியமாக சொல்லி திரும்ப கார்த்திக்கிடம் நடந்தாள்.

அந்த வைஷ்ணவி சொன்னது என்னவோ உண்மை தான், யார்? எவர்? என்று தெரியாமல் விவரம் சொல்வது தவறு தான். அங்கே தான் சக்தி ஒரு தவறும் செய்தாள், வாசுகி கிரானைட்ஸ் என்னவோ அவளின் பெரிய அடையாளம் மாதிரி அதை சொன்னால் அந்த பெண்கள் தன்னுடன் ஸ்நேகிதமாகி விடுவார்கள் என்று நினைத்தாள்.

அதை அந்த கர்வத்தை ஒன்றுமில்லாமல் செய்தாள் வைஷ்ணவி. அதுமட்டுமில்லாமல் அதை அவள் சொன்ன விதம் ஏதோ சக்திக்கும் அவளுக்கும் ஜென்ம பகை என்பது போல தோன்றியது.    

ஏனோ கண்கள் கலங்கி விடுமோ என்று பயந்தவள் அமைதியாக கார்த்திக்கின் புறம் சென்று அமர்ந்து கொண்டாள். அவளுக்கு புரியவில்லை ஏன் அந்த பெண்ணிற்கு தன்னிடம் இத்தனை கடுமை. யாரோ எவரோ அவர்களிடம் பேசிய தன்னுடைய அதிக பிரசிங்கித்தனத்தை அவளே வெறுத்தாள்.

“என்ன ஆச்சு? ஏன் மேம் ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்றான் கார்த்திக்.

“ஒண்ணுமில்லை”, என்றாள்.

“யாராம் அந்த பொண்ணுங்க?”, என்றான் அவள் அவர்களை பற்றி என்ன தெரிந்து கொண்டாள் என்று அறிவதற்காக.

“தெரியாது? அந்த பொண்ணுங்க ஒண்ணும் சொல்லலை! என்னவோ அந்த பொண்ணுங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை! ஏன்ன்னு எனக்கு தெரியலை! ரொம்ப ஹார்ஷா பேசினா கார்த்திக் அவ……?”, என்றாள் குரலில் வருத்தம் நன்கு தெரிந்தது.

செல்வ சீமானின் ஒரே பெண்ணான அவளிடம் யாரும் இதுவரை இப்படி பேசியதில்லை.   

“அவ சொன்னது கரெக்ட் தான் யார் என்னன்னு தெரியாம விவரங்கள் சொல்ல முடியாது! அது ஓ கே! ஆனா என்னவோ ரொம்ப ஹார்ஷா அந்த பொண்ணு பதில் சொன்னா? என்னவோ ஜென்ம ஜென்ம பகை மாதிரி?”, என்றாள்………

“எந்த பொண்ணு?”, என்று அடையாளம் கேட்க…….

“வைஷ்ணவி”, என்றாள்.

“பேர் சொன்னாங்களா?”,

“அந்த பொண்ணு சுமித்ரா நல்லா பேசிச்சு! ஆனா இந்த வைஷ்ணவிக்கு என்னவோ பிடிக்கலை ரொம்ப எடுத்தெரிஞ்சு பேசினா”

“பேசாம அவளும் உன்னை மாதிரி ஒரு கறுப்பு கண்ணாடி போட்டுக்கலாம்….. அப்பா என்னமா முறைக்கிறா! எனக்கு பயமா போச்சு!”, என்றாள்.

அவளின் இந்த வார்த்தையில் டென்ஷனான கார்த்திக்….

“உங்களை யார் அவங்க கிட்ட போய் பேச சொன்னா! பண்றது எல்லாம் அதிகப்ரசிங்கித்தனம் அப்புறம் அதையும் இதையும் சொல்ல வேண்டியது”, என்று எரிந்து விழுந்தான்.

“என்னடா இது? நம்ம நேரமே இன்னைக்கு சரியில்லை போல! ஆளாளுக்கு திட்டுறாங்க! சக்தி எல்லோருக்கும் அவ்வளவு ஈஸியா போயிட்டனா?”, என்று ஒரு கோபம் சக்திக்கு தோன்ற……

அந்த கோபத்தை கார்த்திக்கிடம் காட்டினாள்…… “போ! நீ தூர போ! பக்கத்துல இருந்து சும்மா என்னை திட்டி திட்டி டென்ஷன் பண்ணாத! எழுந்து போ!”, என்று அமர்தலான தீவிரமான குரலில் சொல்ல…….

அந்த குரல்…….. சக்திக்கு அதிக கோபம் வந்தால் வெளிப்படும் அந்த குரல்… கார்த்திக்கை பணிய வதைத்து. எழுந்து கடையை விட்டு போன் பேசுபவன் போல வெளியே வந்தான்.

வெளியே வந்தாலும் கண்கள் எல்லாம் உள்ளே சக்தியின் மேலும் வைஷ்ணவி மற்றும் சுமித்ராவின் மேலும் தான் இருந்தது.

அந்த பெண்கள் நகையை கவனித்ததை விட சக்தியை கவனித்தது தான் அதிகம்.

இப்போது கார்த்திக் அருகில் இல்லாததால் அவனை தேடியும்  கண்களை சுழற்றினர்.  

ஆனால் அதிகம் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இரண்டே நிமிடத்தில் தேர்ந்தெடுத்த சக்தி, “பில் பண்ணுங்க!”, என்றாள்.

அவள் காஷ் எடுக்க அவளின் ஹேண்ட் பேகை திறக்க போகவும்….. “கார்த்திக் சார் எங்கங்க மேடம்!”, என்று அந்த கடையின் முதலாளி கேட்டார்.

“ஏன் கேட்கறீங்க?”,

“காலையில ஒரு நகை வாங்கினார் அதுக்கும் சேர்த்து பில் பண்ணவா? இல்லை அப்புறம் தர்றாரான்னு கேட்கணும்”,

“அந்த பில் எவ்வளவு?”,

“மூணு லட்சம்?”,

யாருக்கு நகை வாங்கியிருப்பான் என்ற யோசனை எழுந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி, “பில் பண்ணிடுங்க”, என்றவள் கார்த்திக்கை பார்த்து உள்ளே வருமாறு சைகை செய்தாள்.

அவன் வரவும், “கேஷ் என்கிட்ட கம்மியா இருக்கு கார்த்திக் நீ பே பண்ணு”, என்றாள்.

அதற்குள் கடை முதலாளி வந்து, “வாங்க மேடம்! புது டிசைன்ஸ் வந்திருக்கு!”, என்று கூப்பிட…… எழுந்து அவரோடு  வேறு பக்கம் டிசைன்ஸ் பார்க்க போனாள்….

கார்த்திக் இங்கே பணம் கொடுக்க எண்ணி கொண்டிருக்க……….

வைஷ்ணவியும் சுமித்ராவும் இரண்டு நகை எடுத்திருந்தனர், அதன் பில்லும் வந்தது.

அதை கையில் வாங்கிய சுமித்ராவிடம் இருந்து….. திரும்ப வாங்கிய வைஷ்ணவி, “அவர்கிட்ட கொடுத்திடுங்க”, என்று கார்த்திக்கை காட்டினாள்…..

அந்த கடை சிப்பந்தி விழிக்க…….. “குடுங்க சார்!”, என்றாள் அலட்சியமாக.

“வேண்டாம் வைஷு!”, என்று சுமித்ரா சொல்ல…..

“வாயை மூடு எருமை மாடே! உனக்காக தான் நான் சண்டை போடறேன்! இல்லைன்னா எனக்கென்ன வந்தது!”, என்று அந்த சுமித்ராவிடம் எரிந்து விழுந்தாள்.   

சுமித்ரா மௌனமாகிவிட…….. வைஷ்ணவி கார்த்திக் என்ன செய்கிறான் என்று தான் பார்த்தாள்.

கார்த்திக்கிடம் அந்த சிப்பந்தி போய், “சார்! அவங்க குடுக்க சொன்னாங்க!”, என்று கை காட்ட….. கார்த்திக் அவர்களை கூட பார்க்கவில்லை…… அவசரமாக சக்தி எங்கே இருக்கிறாள் என்றுதான் பார்த்தான்.

சக்தி அங்கே வேறு எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதை விட……… வேறு பார்ப்பது மாதிரி முயன்று மனதை அமைதிபடுத்திக்கொண்டிருந்தாள். இதுவரை யாரும் அவளிடம் இப்படி பேசியதே இல்லை.

அங்கே இருந்தால் அந்த பெண்களின் புறமே பார்வை செல்வதால் அதன் எதிர்புறம் வந்து நின்று கொண்டிருந்தாள்.

சக்தியின் கவனம் இங்கே இல்லவே இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்ட கார்த்திக்……

ஒன்றும் சொல்லாமல் அந்த பில்லை வாங்கி வைத்துக்கொண்டு எல்லாவற்றிற்கும் சேர்த்து பணம் கொடுத்தான்.

“அதானே பார்த்தேன்! அவன் மட்டும் வாங்காம இருந்திருக்கட்டும்?”, என்று சுமித்ராவிடம் வைஷ்ணவி கோபப்பட………

“எனக்கு பயமா இருக்கு வைஷு! அவங்க திட்டுவாங்க!”, என்றாள்.

“போடி! எது வந்தாலும் நான் பார்த்துக்கறேன்! அவன் மட்டும் எனக்கு தெரியாம உன்னை திட்டுனான்னா சொல்லு! நான் பார்த்துக்கறேன்!”, என்றான்.  

கடையின் முதலாளி யோசனையாக பார்க்க…… கார்த்திக் எந்த விளக்கமும் குடுக்கவில்லை.

கடை முதலாளியாகவே பேச்சுக் கொடுத்தார்….. “ரொம்ப நல்லா வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவங்க! இப்போவும் வசதிக்கு குறைச்சல் இல்லை…… ரொம்ப வருஷமா வேற ஊர்ல இருந்து இப்போ தான் இங்க வந்து இருக்காங்க….. சின்ன பொண்ணுங்கன்றதால யாரு என்னன்னு எனக்கு அடையாளம் தெரியலை அப்புறம் அவங்க அம்மா போன் பண்ணி சொன்னாங்க” என்றவர்….. 

“உங்களுக்கு……”  என்று அவர் ஆரம்பிக்க…….

சக்தி அவர்கள் புறம் வருவதை கண்டவர், கார்த்திக்கின் சிறு கையசைவில் பேச்சை அவராகவே நிறுத்தி விட்டார்.

கார்த்திக் என்ன நினைக்கிறான், அவனுக்கு விவரங்கள் தெரியுமா? தெரியாதா? என்பது போல பார்க்க…… அவருக்கு ஒன்றும் தெரியவில்லை, அவன் தான் கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறானே!  

சக்தியும் அந்த பெண்களின் புறம் கண்கள் திருப்பக்கூடாது….. கூடாது…. என்று நினைத்துக்கொண்டே கதவு வரை போனவள், முடியாமல் அவர்களை திரும்பி பார்க்க அவர்கள் இவளை தான் பார்த்திருந்தனர்.

அந்த பெண் சுமித்ரா சாதாரணமாக தான் பார்த்துக்கொண்டிருந்தால்…… ஆனால் அந்த வைஷ்ணவி முகத்தில் கோபத்தை அப்பட்டமாக காட்டினாள்.

ஏன்? ஏன்? ஏன்? என்று சக்தியின் மண்டையை குடைந்தது.

கார்த்திக்கிடம், “அந்த பெண் என்னை முறைக்கிறாள்”, என்று சொல்ல வந்தவள்……. “ஆமா, சொன்னா இவன் பெரிய இவன் மாதிரி என்னை திட்டுவான்…… இதுக்கு தான் தெரியாதவங்க கிட்ட எப்பவும் பேசக்கூடாது…. உனக்கு இது தேவை தான்”, என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டே போனாள். 

அவர்கள் கடையின் வாசலில் நிற்க……. காரை கருப்பண்ணன் கொண்டு வரவும், எப்போதும் போல கார்த்திக் கதவை திறந்து விட சக்தி ஏறினாள்.

அதை பார்த்த சுமித்ராவின் கண்களில் வருத்தம் தோன்ற……. அதை பார்த்த  வைஷ்ணவியின் கண்களில் அவ்வளவு கோபம் தோன்றியது.   

காரிலும் ஏதாவது கருப்பண்ணனுடனோ கார்திக்குடனோ வளவளக்கும் அவள் அன்று அமைதியாகவே வந்தாள்.

கார்த்திக் அன்று அவள் சாப்பிட்டாளா இல்லையா என்று அவனே சரிபார்த்துக்கொண்டான். அன்று போல கலாட்டா எதுவும் செய்யவில்லை, அவள் நேரத்திற்கு சாப்பிட்டு விட்டாள்.   

இரவு ஒரு எட்டு மணி இருக்கும் போது அவளின் அப்பா போன் செய்ய, “எப்போப்பா வர்றீங்க?”, என்றாள் எடுத்த உடனேயே……

மகள் அப்படி கேட்டதுமே வீரமணி பதட்டமாகிவிட்டார்…. அவர் எத்தனை முறை சக்தியை விட்டு டூர் வந்திருக்கிறார்….. எப்போதும் சக்தி இந்த மாதிரி கேட்டதேயில்லை.

என்னவோ இரண்டு மூன்று நாட்களாக அவர்களை சக்தியின் மனம் தேடியது.

கார்த்திக் அவளிடம் சற்று கடுமையாக நடந்து கொள்வதினால் அவர்களை மனம் தேடியதா? இல்லை இன்று சந்தித்த அந்த பெண்கள்… அதிலும் அந்த வைஷ்ணவியின் கண்களில் தெரிந்த வெறுப்பு பயமாக இருந்தது சக்திக்கு என்னவோ நடக்க போவதாக…….  

“ஏன்மா?”, என்றார்.

“இல்லைப்பா, கேட்டேன்”, என்றாள் சலிப்பாக……..

அவரிடம் இருந்து போனை வாங்கிய அவரின் மனைவி தெய்வானை……… “என்ன சக்திம்மா?”, என்றார்.

“ஐ மிஸ் யூ மா! நீ எப்போ வர்ற!”, என்றாள்  குரல் கமறியது.

“சீக்கிரம் வந்துடறோம் சக்திம்மா!”, என்றார் அவர். “என்ன சக்தி ஏதாவது பிரச்சனையா?”,

“இல்லைம்மா! என்னவோ தனியா இருக்குற மாதிரி இருக்கு!”, என்றாள்.

மகளை சமாதானப்படுத்த அவளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார் தெய்வானை.

அவளிடம் போன் பேசி முடித்ததுமே அவர் உடனே கார்த்திக்கிற்கு அடித்தார்.

“சொல்லுங்கம்மா”, என்று கார்த்திக் கேட்டதுமே…….

“என்ன பிரச்சனை கார்த்திக்? சக்தி ஏன் அப்செட்டா இருக்கா! எப்பவுமே அவ இப்படி இருந்ததே இல்லை! எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்குவாளே!”, என்றார்.

“ஒண்ணும் பிரச்சனை இல்லீங்களே!”, என்றான் கார்த்திக்.

“நிச்சயாமா தெரியும் தானே உனக்கு? தெரியாம ஏதாவது இருக்க போகுது!”, என்றார் கவலையாக…  

“இல்லைங்கமா, எனக்கு நல்லா தெரியும்! என்ற கார்த்திக்……. “எதுக்கும் நான் மேடம் கிட்ட பேசறேன்”, என்றான்.

“எங்க இருக்க கார்த்திக்?”,

“வெளில இருக்கேன்மா”,

“முதல்ல வீட்டுக்கு போ கார்த்திக்! அவ தூங்க போற வரைக்கும் நீயும் வீட்லயே இரு!”, என்றார். குரலிலேயே அவரின் கவலை கார்த்திக்கிற்கு நன்கு தெரிந்தது.

கார்த்திக் விரைந்து வீட்டிற்கு வர சக்தி அவளின் ரூமில் இருந்தாள்.

முனியம்மாவை விட்டு அவளை அழைத்து வர சொன்னவன்…. “என்ன மேடம் ஏதாவது பிரச்சனையா”, என்றான்.

“இல்லையே!”, என்றாள் சக்தி.

“அம்மா சொன்னாங்களே! நீங்க ஏதோ அப்செட்ன்னு!”,

“அம்மா சொன்னாதான் நான் அப்செட்ன்னு உனக்கு தெரியுமா?”, என்றாள்.

“நீங்க சின்ன பொண்ணு இல்லை மேடம்! இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு அப்செட் ஆகறதுக்கு………”, என்று அவன் சொல்லி மேலே பேச போக……..

“அப்பா! அட்வைஸ் திலகம்! கொஞ்ச நேரம் அட்வைஸ் பண்ணாம வேற ஏதாவது பேசறதுன்னா பேசு! இல்லைனா எதுவும் பேசாத!”, என்றாள் சலிப்பாக.

கார்த்திக் வாயை மூடிக்கொள்ள……

“யார் கார்த்திக் அந்த பொண்ணுங்க? அவங்களுக்கு என் மேல என்ன கோபமா இருக்க முடியும்! அவங்களை பத்தின விவரம் தெரிஞ்சிக்க முடியுமா!”, என்றாள்.

“ம்கூம், முடியாது! வயசு பொண்ணுங்க நாம ஏதாவது விசாரிக்க போய் தப்பாயிடுச்சுன்னா! வேண்டாம்! அவங்களை விட்டுடுங்க! அவங்களை மறந்துடுங்க!”, என்றவன்…….

அவளை போலவே……. “நீங்களும் வேற ஏதாவது பேசறதுன்னா பேசுங்க! இல்லை, எதுவும் பேசாதீங்க!”, என்றான்.

“ம்”, என்று அமைதியானவள்……. உடனயே ஞாபகம் வந்தவளாக, “ஆமாம்! யாருக்கு கார்த்திக் காலையில நகை  வாங்கின? அந்த கடைக்காரர் சொன்னார்!”, என்றாள்.

கார்த்திக்கிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை……. அவள் எதைப்பற்றி சொல்லுகிறாள் என்று. ஏனென்றால் வைஷ்ணவி சுமித்ராவின் நகைகளுக்கும் அவன் தானே பணம் கொடுத்தான்.

அவன் விழிக்க…….

“அதான் பா அந்த மூணு லட்சம்!”, என்று அவள் எடுத்துக்கொடுக்கவும் தான்…… ஹப்பாடா என்று அவனின் மூச்சு வெளியே வந்தது. சுமித்ரா, வைஷ்ணவியின் பில்கள் அதைவிட அதிகம்……. சுமார் ஐந்து லட்சம்.

சாமான்ய மக்களால் யோசித்து செய்யப்படும் செலவுகள் அவனால் எப்போதுமே தண்ணீராய் செலவு செய்யப்படும். எல்லாம் கிரானைட் செய்யும் மாயம்.

“கலெக்டர் பேரனுக்கு காதுகுத்து! அதான் நம்ம கிஃப்ட் பண்ணினோம்!”, என்றான்.

“லஞ்சமா?”, என்றாள் காட்டமாக சக்தி.

“லஞ்சம்ன்னு ஏன் சொல்றீங்க மேடம்…… இப்போ நீங்க உங்க ஃபிரன்ட் கல்யாணத்துக்கு கூட நகை வாங்கினீங்க…….. அதை ப்ரெசென்ட் பண்ண போறீங்க! அது லஞ்சமா?”, என்றான்.

“அவ என் ஃபிரன்ட் கார்த்திக்!”,

“இவர் என் ஃபிரன்ட் மேடம்!”,

சக்திக்கு மேலே என்ன பேசுவது என்றே தெரியவில்லை. கார்த்திக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவும் மனமில்லை.  லஞ்சம் என்பது அவளுக்கு பிடிக்காத விஷயம் என்றாலும் கார்த்திக்கிற்காக அதை ஒதுக்கினாள்.

“போ! நீ என்னை ஏய்க்கற கார்த்திக்”, என்றாள் சலுகையாக.  அந்த வார்த்தைகளை கேட்டு மனதிற்குள் அதிர்ந்த கார்த்திக், மேலே எதுவும் பேசவில்லை.

மெய்யென்பர் பொய்யென்பர்

மெய்யை மெய் தீண்டும் போது

மெய்யே பொய்யாகி போனால்

பூவை மெய்யும் பொய்யாகுமோ?  

( மெய் = உடலும் , உண்மையும் )………..

Advertisement