Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு :

சென்றதனைக் குறித்தல் வேண்டா                                                                                            இன்றுபுதி தாய்ப்பிறந்தோ மென்று நீவிர்                                                                                                                     எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு                                                                                                                             தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;                                                                                                                     தீமையெலாம் அழிந்து போம், திரும்பி வாரா.                                                                                             ( பாரதி )

வீரமணி கார்த்திக்கை ஏர்போர்டில் செல்வத்துடன் எதிர்பார்க்கவில்லை.

அவரின் நிழல் போல கிட்ட தட்ட பத்து வருடங்கள் இருந்தவன். சக்தி மட்டும் கார்த்திக்கை மிஸ் செய்யவில்லை…. வீரமணியும் அவனை மிகவும் மிஸ் செய்தார்.

அவன் சொல்வதை செய்வதையே பழக்கமாக வைத்திருந்தார். அவராக எதையும் செய்ய மாட்டார். அவ்வளவு நம்பிக்கை அவன் மேல்.

அதனால் அவனால் சொத்தை எளிதாக கைபற்ற முடிந்தது. 

அவன் ஏமாற்றி சென்ற போது கூட அவரால் அவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. காரணம் அவர் அவன் மேல் வைத்த அன்பு ஒரு புறம்…. மற்றொரு புறம் அவரின் உயிர் நண்பனின் மகனாக போய்விட்டான்.

இதையெல்லாம்விட முக்கிய காரணம் சொத்து….. அவரிடம் பெருகியிருந்த சொத்து…. எல்லாம் அவன் மூலம் வந்தது….. இப்போது போய் கம்ப்ளைன்ட் அது இது என்று பிரச்சனை செய்தால்… எப்படி இத்தனை சொத்துக்கள் என்று தேவையில்லாமல் கேள்விகள் வந்தால்…. சிக்கலாகும்….. அமைதியாக இருப்பது தான் உத்தமம் என்று அறிந்தே அமைதியாக இருந்தார்.        

இப்போது எதற்கு இங்கே வந்து இருக்கிறான் என்று யோசனையாக நின்றார்.  

“எங்கே நம்ம கார்”, என்று செல்வத்திடம் கேட்க…

“பாஸ், நான் தான் ஐயாவை கூப்பிடுவேன்னு சொல்லி வந்துட்டார்….”, என்று சொல்லியபடி கார்த்திக்கை பார்த்தான்.

இது என்ன புதிதாக என்பது போல பார்த்தார்….. அவன் கார், ஏறுவதா வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றார். செல்வம் பக்கத்தில் இருந்தவன் கார்த்திக்கின் ஒரு பார்வையில் தூர போனான்.

“வாங்கய்யா”, என்றான்..

வீரமணி அமைதியாக நிற்க……

“ஹாஸ்பிடல் திறப்பு விழாக்கு இன்விடேஷன் எல்லாம் கொடுக்கனும், நிறைய வேலை இருக்கு போல……. நான் கொடுக்கட்டுமா”, என்றான் எடுத்த எடுப்பிலேயே.

அவன் பேசிய விதத்தை பார்த்த வீரமணி இவனுக்கும் எனக்கும் சண்டை தானே, இவன் என்ன இப்படி ஒன்னுமே நடக்காதது போல பேசறான் என்று வியந்து போனார். 

“அதையெல்லாம் நான் பார்க்கலை, சக்தி பார்க்குறா, அவ தான் சொல்லனும்”,

“அவங்க சொல்ல மாட்டாங்கன்னு தானே நான் உங்ககிட்ட கேட்கறேன், நான் உங்க கூட இருக்கேன்”,

“இனிமே அதெல்லாம் சரிவராது”,

“சரி வந்தாலும்……. வராட்டாலும்……… நான் உங்க கூட தான் இருப்பேன்”, என்றான் பிடிவாதமாக.

“நானாடா உன்னை போக சொன்னேன்”,

“ஆமா, நீங்க தான் சொன்னீங்க இவன் என் முகத்துலயே முழிக்க கூடாதுன்னு”,

“நீ செஞ்ச வேலைக்கு வேற என்ன சொல்வாங்க….. சொத்தை ஏமாத்தி வாங்கியிருக்க..”,

“நிஜமா சொல்லுங்க………… நான் உங்களை ஏமாத்தினேனா”, என்றான் பிடிவாதமான குழந்தை போல………

அவன் கேட்ட விதத்தில் வீரமணிக்கு கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது…… இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல், “பின்ன நீ செஞ்சதுக்கு பேர் என்ன….”,

அமைதியாக நின்றவன், ஏன் செய்தான், எதற்கு செய்தான், என்று எந்த விளக்கமும் சொல்லவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை…..

“என்ன பிரச்சனைன்னு சொல்லியிருந்தா உட்கார்ந்து பேசி தீர்த்திருக்கலாமே”, 

“சொல்ற மாதிரி இருந்தா உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன்….. எனக்கு உங்க கூட இருக்கனும்”,

“ம்கூம்! அதெல்லாம் இனிமே சரி வராது!”,

“இல்லை நான் உங்ககூட தான் இருப்பேன்! எனக்கு என்ன வேலை செய்யனும்னு தோணுதோ செய்வேன்!”,

“வீட்ல அம்மாவோ சக்தியோ விட மாட்டாங்க…….”,

“நான் வீட்டுக்குள்ள வரலை”,

“எங்க ரோட்ல நிக்க போறியா”,

“ம்! நிக்கறேன்! எனக்கு பிரச்சனையில்லை….. நீங்க போன்னு துரத்தினாலும் போக மாட்டேன்”, என்றான் உறுதியான குரலில்…….

இந்த கார்த்திக்கின் குரல் சொல்வதை செய்வான் என்று வீரமணிக்கு தெரியப்படுத்தும் குரல்.

அதுவுமில்லாமல் நீ தெருவில் தான் நிற்க வேண்டும் என்று அவர் சொல்லியும் கொஞ்சமும் கூச்சப்படாமல் நிற்கிறேன் என்று சொல்பவனிடம் என்ன சொல்வது.

“வீட்ல பேசுவாங்க உனக்கு தான் கஷ்டம்”,

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை, என்ன பேசினாலும் வாங்கிக்குவேன்……. நான் தான் வீட்டுக்கு உள்ளயே வரலைன்னு தானே சொல்றேன்”,

“சக்தி ஒத்துக்க மாட்டா”,

“அவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் உங்க கிட்ட வந்திருக்கேன்…. நான் உங்க கூட தான் இருப்பேன்”,

“நீ என்கிட்ட சம்மதம் வாங்குறியா இல்லை தகவல் சொல்றியா”,

“சம்மதம் கொடுத்தா சம்மதம் வாங்குறேன்! இல்லைன்னா தகவல் சொல்றேன்!”, என்றான் சற்றும் அசராமல்.

“தெய்வா என்னை பேசுவாடா”,

“நான் சொன்னேன் அவன் கேட்கலைன்னு சொல்லுங்க”,

“ஆகற காரியத்தை பேசு கார்த்திக்”,

“எல்லாம் ஆகும்…… நான் உங்க கூட தான் இருப்பேன்”,

“வா! உன் நேரம் நல்லாயில்லை போல……. வீணா தெய்வாவும் சக்தியும் உன்னை பேசுவாங்க……… பேசுவாங்க என்ன பேசுவாங்க? அவமானப்படுத்துவாங்க சொன்னா கேளு வேண்டாம்”,

“அதெல்லாம் ஏற்கனவே நிறைய வாங்கிட்டேன்!”,

“அதெல்லாம் கம்மி தான் உனக்கு தெரியாது…….. சக்தி ரொம்ப பேசுவா”,

“எல்லா பேச்சும் வாங்கிட்டேன்! ஏன் காபி அபிஷேகமே வாங்கிட்டேன்!”, என்றான் உணர்ச்சிவசப்பட்டு தன்னை நிரூபிக்கும் பொருட்டு…….

“என்ன காபி அபிஷேகமா…..”, இது என்ன புதிய விஷயம் என்பது போல பார்த்தார்…

அப்போது தான் உளறிவிட்டதை உணர்ந்தவன்……… “மேம் கிட்ட கேட்டுறாதீங்க… அப்புறம் அது இன்னும் பிரச்சனையாகும்”, என்றான்.

“சக்தி அந்தளவுக்கு கோபப்படர அளவுக்கு நீ என்ன பண்ணின”, என்று சரியான இடத்திற்கு வந்தார்.

“ப்ளீஸ் நான் சொன்னதை மறந்துடுங்க…..  இதை தயவுசெஞ்சு மேடம் கிட்ட கேட்டுடாதீங்க….. அவங்களோட இருக்குற பிரச்சனையே எனக்கு போதும்! இப்போதைக்கு புதுசா என்னால எதையும் பார்க்க முடியாது…..”, என்று நிறுத்தியவன்…..  

“முடிவா சொல்றேன்! நான் உங்ககூட தான் இருப்பேன், ஏறுங்க!”, என்றான்.

அவனை மறுத்து பேச முடியாத குரல்…….. மறைமுகமாக மிரட்டுகிறானோ என்பது போலவும் தோன்றியது………. உரிமையில் பேசுகிறான் என்றும் தோன்றியது……

அவன் பேச்சு உரிமையாய் இருப்பதும் மிரட்டலாய் இருப்பதும் அவர் கையில் தான் என்று புரிந்தவர் அமைதியாக ஏறிக்கொண்டார்.  

வீட்டில் அவரை விட்டவன் கேட்டுக்கு உள் போனான்…… ஆனால் வீட்டுக்கு உள் போகவில்லை. இறங்கி அங்கிருந்த லானில் தான் இருந்தான்.

“வா”, என்ற வீரமணியின் அழைப்பிற்கு, “இங்கேயே இருக்கேன்”, என்று விட்டான். அவரும் வற்புறுத்தவில்லை. 

வீட்டுக்கு வெளியில் யார் நிற்கிறார்கள் என்பது போல சக்தியும் பார்க்கவில்லை தெய்வானையும் பார்க்கவில்லை.

வீரமணி உள்ளே வந்தவுடன் சக்தியும் தெய்வானையும் அவருடன் பேசிக்கொண்டு இருந்தவர்கள்……. செல்வம் வரவும், “லிஸ்ட் ரெடியா”, என்று கேட்ட சக்தி…… அதை பார்வையிட்டுகொண்டே…… “அப்பா! இதுல யார் யாரை சேர்க்கனும்”, என்றாள்.

அவரிடம் லிஸ்டை நீட்டும் போது தான் கவனித்தாள், அது கார்த்திக்கின் கையெழுத்து என்பதை……

“லிஸ்ட் யார் எழுதினா செல்வம்”, என்றாள் அதட்டலாக…….

சில நொடிகள் தடுமாறிய செல்வம் உண்மையை சொன்னான், “பாஸ் தான் எழுதினாங்க”,

அடுத்த நிமிடம், “மேடம்”, என்று செல்வம் பதற பதற அந்த லிஸ்டை கிழித்து போட்டாள்.  வீரமணியும் தெய்வானையும் பார்வையாளர்கள் ஆனார்கள்.

“அவன் எப்படி இந்த லிஸ்டை எழுதினான். நீ என்ன பண்ணின?”, என்று கேள்வியை செல்வத்தை நோக்கி அடுக்க போக…..

“அவன் வெளில தான் நிக்கறான் சக்திம்மா”, என்றார் வீரமணி.

“என்னப்பா சொல்றீங்க”, என்றார் அதிர்ச்சியாக சக்தி. 

“அவன் தான் என்னை ஏர்போர்ட்ல இருந்து கூட்டிட்டு வந்தான்”,

“என்ன அவன் உங்களை கூட்டிட்டு வந்தானா?”, என்று தெய்வானை கேட்க…..

“என்னப்பா? என்ன சொல்றீங்க? மறுபடியும் எதுக்கு அவனை நம்ம விஷயத்துல தலையிட விடறீங்க”, என்றாள் சக்தி.

செல்வத்தை, “நான் கூப்பிடறேன் நீ கொஞ்சம் வெளில இரு”, என்று வெளியே அனுப்பினார்.

சக்தியையும் தெய்வானையையும் பார்த்தவர், “உங்ககூட தான் நான் இருப்பேன்னு வந்து நிக்கறான்….. நான் என்ன செய்யட்டும்”, என்றார்.

“இது என்னப்பா கதையா இருக்கு, அவன் சொன்னா நீங்க விட்டுடுவீங்களா…… முதல்லயே நீங்க அவனை ஒண்ணும் செய்யாம விட்டுடீங்க! அதான் தைரியமா மறுபடியும் வந்து நிக்கறான்!”,

“என்ன சக்திம்மா அவனை செஞ்சிருக்க முடியும்னு நீ நினைக்கிற!”,

இதற்கு சக்தியிடம் பதிலில்லை…..

“நம்மளை ஏமாத்திட்டான்னு ஒரு கம்ப்ளைண்டாவது கொடுத்திருக்கலாம் தானே”, என்றார் தெய்வானை.

“குடுத்து? குடுத்து என்ன ஆகும்? ஒண்ணு அவன் ஈஸியா வெளிய வந்துடுவான்.. இல்லை நம்ம பிரஷர் குடுத்து ப்ரோசீட் பண்ணினம்னா என்ன ஏமாத்தினான்ற கேள்வி வரும். எந்த சொத்தை?…….. வாசுகி குழுமத்தை….. அது பெரிய பிரச்சனை… ஏன்னா அதுல வந்த வருமானம் அப்படி….”,

“நாமளே பிரச்சனையை இழுத்து விட்டுக்க முடியாது…… ஏன்னா இப்போ நம்ம கிட்ட இருக்கிற சொத்தெல்லாம் அது மூலமா வந்தது தான். ரொம்ப சிக்கலாகிடும்”.

“அதுக்காக அவனை மறுபடியும் வீட்டுக்குள்ள சேர்க்க போறீங்களா”, என்றார் தெய்வானை.

“இல்லை! வீட்டுக்குள்ள வரமாட்டான்…… நான் சொல்லிட்டேன் சக்திக்கும் தெய்வாக்கும் பிடிக்காதுன்னு”,

“அப்போ உங்களுக்கு பிடிக்குமா, நீங்க அவன்கிட்ட நல்லவங்க ஆகிடுவீங்க, எனக்கும் இவளுக்கும் மட்டும் பிடிக்காதுன்னு சொல்வீங்களா”, என்றார் தெய்வானை…… 

வீரமணி விழித்தார். இந்த அம்மா என்ன பேசுகிறார் என்பது போல அவரை முறைத்த சக்தி, “அப்படி அவன் நம்மளோட இருக்க வேண்டிய அவசியமென்ன”, என்றாள் வீரமணியை பார்த்து.

“நான் கூப்பிடலை மா அவன் வர்றான்”,

“உங்க மறுப்பு இதுல அதிகமா இருக்குற மாதிரி தெரியலையே”, என்று சரியாக கணித்தாள் சக்தி…

“அதிகமா மறுப்பு இல்லைன்னா காரணம் அவன் சொன்ன பேச்சை கேட்கமாட்டான். நம்மளை விட அவனை அதிகம் தெரிஞ்சவங்க யாரு? செய்யனும்னு நினைச்சா செஞ்சே தீருவான்…. நான் உங்க கூட தான் இருப்பேன்ங்றான்…… சம்மதம்னா ஓகே இல்லைன்னா இது ஒரு தகவல்ங்கறான்”,

“அவ்வளவு பேசறானா அவன்”, என்று சக்தி கோபமாக எழுந்தாள்…

“உட்காரும்மா”, என்று அவளின் கையை பிடித்து உட்காரா வைத்த வீரமணி….. “பொறுமையா நான் சொல்றதை கேளு! நாம அவனை வரசொல்லலை அவனா வந்திருக்கான்…… இருக்கட்டும்”,

“இவ்வளவு சொத்தும் கவர்மென்ட் சொன்ன ரூல்ஸ் ஃபால்லோ பண்ணி வந்தது இல்லை……… அதை மீறி வந்தது. கார்த்திக் இருக்கான் அவன் பாத்துக்குவான்ற தைரியத்துல தான் நான் எதையும் கண்டுக்கலை. சொல்ல போனா எனக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கற அளவுக்கு தைரியம் கிடையாது”,

“இப்போ அவன் நம்ம கூட இல்லை…. ஏதாவது பிரச்சனை வந்தா யார் பார்ப்பா……… எனக்கு இதையெல்லாம் பார்க்குற அளவுக்கு திறமை கிடையாது…..”,

“நான் பார்க்கிறேன் பா”,

“நீ பார்ப்ப நான் இல்லைன்னு சொல்லலை….. ஆனா எனக்கு அதுல இஷ்டமில்லை….. தானா பிரச்சனை வந்தா பரவாயில்லை பார்க்கலாம்…. நானா   உன்னை பிரச்சினையில இழுத்து விட முடியாது”,

“அப்போ அவன் மாட்டிக்கட்டும்ன்றீங்களா”,

“அவன் மாட்ட மாட்டான் மா! அவன் மாட்டவே மாட்டான்! எனக்கு தெரியும்”,

“போங்கப்பா! எனக்கு ஒண்ணும் புரியலை”,

“அவன் இருந்துட்டு போறான் விடும்மா! ஆனா வீட்டுக்குள்ள வரமாட்டான்!”,

“என் வேலைகள்ள அவன் தலையிட கூடாது!”, என்று சக்தி சொல்ல ஆரம்பிக்கும்போதே……

“அவன் தான் இன்விடேஷன் கொடுப்பனாம்!”,

“அப்பா! என்னப்பா இது? அவன் இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது! மறுபடியும் அவனை இங்க நுழைக்காதீங்க”,

“அவன்லாம் புலி வாலை பிடிச்ச கதைதான்மா”,

“என்னப்பா விட்டா அவனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு பேசறீங்க”, என்றாள் எரிச்சலாக…..

“அவனை ஒன்னுமே பண்ண முடியாதா! நம்ம கிட்ட வேலைக்கு இருந்தவன் பா!”,

“இருந்தான்மா! நான் இல்லைன்னு சொல்லலை! அவன் நான் பார்த்து வளர்ந்த பையன்…….. என்கிட்ட வளர்ந்த பையன் தான்மா……. ஆனா நான் வளர்த்து விட்ட பையன் இல்லை……. தானா தான் வளர்ந்தான்……. என்னையும் சேர்த்து அவன் தான் வளர்த்து விட்டான்”,

“நான் போய் கூப்பிடலை! அவன் வர்றான் இருக்கட்டும்!”,

“எதுக்கு இருக்கனும், இன்னும் நம்மளை ஏமாத்தவா”, என்றாள் விடாமல்.

“மா, அவன் நினைச்சிருந்தா எல்லாத்தையும் சுருட்டி இருக்க முடியும்… அவன் செய்யலைமா…….. நமக்கு சொத்துல எந்த குறையும் வைக்கலை…….. அதையெல்லாம் நாம ஒத்துக்கனும்”,

“என்னவோ போங்க! என் வேலைல அவன் தலையிட கூடாது!”,

“அதிகம் தலையிடாம நான் பார்த்துக்கறேன்”,

“அவன் இன்விடேஷன் குடுக்க கூடாது…….. நான் அவன் கையில அதை குடுக்க மாட்டேன்.. நீங்க சரி வர மாட்டீங்க…….. நான் அவன்கிட்ட பேசிக்கறேன்”, என்று சொல்லி விடு விடு என்று வெளியே வந்தாள்.

கூட போக போன தெய்வானையை நிறுத்தினார் வீரமணி…. “சண்டை போட்டா போட்டுக்கட்டும் விட்டுடு….. ரெண்டு பேருமே யார் பேச்சையும் கேட்காதவங்க”,  

“ஏய்! என்ன இது புது டிராமா”, என்று கேட்டபடி சக்தி கார்த்திக்கின் அருகில் வர செல்வம் அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

கார்த்திக் சக்தியை எதிர்பார்த்துதான் இருந்தான்……. “என்ன டிராமா?”, என்றான் சீரியஸாக கார்த்திக்கும்.

“ம்! நான் உங்க கூட இருப்பேன்ங்கறது….. நான் இன்விடேஷன் குடுப்பேங்க்றது”,

“ஜஸ்ட் எ ஹெல்ப்”,

“நான் ஒன்னும் உங்கிட்ட கேட்கலையே”,

“ஆனா நான் செய்வேன்”,

“நான் உன்கிட்ட இன்விடேஷன் குடுக்க மாட்டேன்”,

“பரவாயில்லை! நான் புதுசா அடிச்சு குடுத்துக்கறேன்…”,

“என்ன கொழுப்பா?”,

“பின்ன பத்து வருஷம் உங்க வீட்ல சாப்பிட்டு இருக்கேன்ல……… கொழுப்பு இருக்காதா”, என்றான் அலட்சியமாக.

“ப்ச்! பிரச்சனை பண்ணாத கார்த்திக்!”, என்று இறங்கி வந்தாள் சக்தி….. “நல்லவிதமாவே சொல்றேன்! எனக்கு நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம்”,

“நானும் நல்லவிதமாவே சொல்றேன், செய்யலை, நீங்க செய்யற வேலையை செய்யலை……… வேற தான் செய்யறேன்”,  

எரிச்சலான சக்தி, “ஏன்? ஏன் இப்படி பண்ற? இன்னும் எங்ககிட்ட என்ன இருக்கு நீ புடுங்கறதுக்கு”, என்று ஏறக்குறைய கத்தினாள்..

“சொத்தை தானே புடிங்கியிருக்கேன், இன்னும் நீங்கயிருக்கீங்களே”, என்றான் கூலாக.

“அது நான் செத்தா கூட முடியாது”,

“செத்து தான் பாருங்களேன், உங்களுக்கு முன்னாடி உங்களை வரவேற்க நான் அங்க இருப்பேன்”, என்றான் தீவிரமான குரலில்.

அவன் வார்த்தைகளை கேட்ட சக்தி அசையாமல் நிற்க….

செல்வத்தை பார்த்து குரல் கொடுத்தான், “டேய்! இன்விடேஷன் வாங்கிட்டு வாடா! டைம் ஆகுது……. சும்மா வெட்டியா பேசினதையே திரும்ப திரும்ப பேசிகிட்டு”,

சக்தி பார்க்க பார்க்க….. செல்வம் இன்விடேஷனை தூக்கி கொண்டு வர…..

“கார்ல வை”, என்றவன்…… “போ! உங்க மேடமை போய் மத்த வேலையை பார்க்க சொல்லு! நீ அவங்க கூட இரு……. முக்கியமான ஆளுங்களுக்கு நான் குடுத்துடறேன்! மீதி இருக்குறவங்களுக்கு நீ தான் குடுக்கனும்!”, என்று சொன்னவன் சக்தியை பார்த்து…….

“இதோட நம்ம வாய் சண்டையை நிறுத்திக்கனும். சும்மா பேசிட்டே இருக்க கூடாது. நானா எதையும் செய்ய மாட்டேன்…… நீங்க செய்ய நினைக்கறதை தான் செய்வேன்! எந்த வகையிலும் உங்களுக்கு தொந்தரவு குடுக்க மாட்டேன்! நீங்க உங்க வேலையை பாருங்க! நான் என் வேலையை பார்க்கிறேன்”,

“என்னை உங்களால போக வைக்கவே முடியாது…… வீணா முயற்சி பண்றதை விட்டுட்டு ஆகற வேலையை பாருங்க”, என்று சொல்லி அவன் கிளம்பினான். 

சக்தி கார்த்திக்கை ஒன்றும் செய்ய முடியாமல் பார்வையாலேயே செல்வத்தை எரித்தாள்.

 

Advertisement