Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு :

சின்னஞ் சிறுகிளியே, கண்ணம்மா!                                                                                              செல்வக் களஞ்சியமே!                                                                                                                  என்னை கலிதீர்த்தே –  உலகில்                                                                                                   ஏற்றம் புரிய வந்தாய்!

                                   ( பாரதி )

கார்த்திக்கிடம் சக்தி பேசி வந்துவிட்டாலும் அதன் பிரதிபலிப்பை எதிலும் காட்டவில்லை சாதாரணமாக தான் இருந்தாள்.

திருமணத்தில் இருந்து மகள் திரும்பி வந்த பிறகு அவள் முகத்தில் ஏதாவது வருத்தம் கோபம் தெரிகிறதா என்று தெய்வானை தேட அவள் எப்பொழுதும் போல தான் இருந்தாள்.

சக்தி தான் மண்டபத்தில் இருந்து நேரே காலேஜிற்கே சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தானே  திரும்பியிருந்தாள்.

காலேஜில் யாரும் அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் பார்த்துகொண்டான் செல்வம். சிறிது நேர தனிமையில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாள் சக்தி.

மனதில் அப்படி ஒரு நிம்மதி…… கார்த்திக் தன்னை மணக்க கேட்டான்…….. தான் மறுத்து விட்டோம்…. என்பது உலகையே வென்று விட்ட திருப்தி……

ஒருவாரான மன நிம்மதியில் இருந்தாள். தன்னை அவன் நிராகரித்தது போய் தான் அவனை நிராகரித்து விட்டோம் என்பது அப்படி ஒரு திருப்தியை அவளுக்கு கொடுத்திருந்தது.  

அவளின் தாயினால் சக்தியை சிறிதும் இனம் காண முடியவில்லை.  திருமணத்திற்கு போய் வந்ததில் இருந்து தெய்வானைக்கு மனதிற்குள் ஏக்கமாக இருந்தது. எப்போது தன் மகளுக்கு இப்படி சீரும் சிறப்புமாய் திருமணம் செய்து பார்ப்பது என்று.

வீரமணி வந்தவுடன் தெளிவாக பேசி சீக்கிரம் பொருத்தமாய் மாப்பிள்ளை பார்க்க சொல்ல வேண்டும்….. மகளுக்கு வயதும் ஏறுகிறது என்று அந்த தாய் மனம் கவலை கொள்ள ஆரம்பித்தது.

இந்த முறை வீரமணி வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஆக தவித்துப் போனார் தெய்வானை. எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது போல ஒரு உந்துதல். என்னவோ சரியில்லாதது போல மனம் அடித்துக் கொண்டது.

சக்தியை கவனித்துக் கொண்டே தன் இருந்தார். சிரித்த முகத்துடன் தான் வளைய வந்தாள்…….. உற்சாகமாகவும் இருந்தாள்……. ஆனால் பழைய விளையாட்டுத்தனம் இல்லை… ஒரு பதவிசு வந்திருந்தது நடத்தையில்….

தானே எல்லாவற்றையும் முடிவெடுத்து செய்வது ஒரு கம்பீரத்தை கொடுத்தது.

இந்தப் புதிய தோற்றம் எல்லோரையும் அவளை மிகவும் மரியாதையாக பார்க்க வைக்கும். அது அன்னைக்கு பிடித்திருந்தாலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருக்கும் சக்தி இல்லையே. விளையாட்டுத்தனம் தானே அவள் இயல்பு.

நொடிக்கொரு தரம் அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் அவளின் பேச்சு மிஸ்ஸிங்.

தெய்வானை வீரமணிக்காக காத்திருந்தார்.

இங்கே சக்தியும் வீரமணிக்காக காத்திருந்தாள். அவள் கட்டிக்கொண்டிருந்த ஹாஸ்பிடல் வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

பெயருக்கு அதன் திறப்பு விழாவை நடத்தி…. பின் டாக்டர்சை வேலைக்கு சேர்த்து….. பின் தேவையான வசதிகளை செய்யலாம்……. பின் அது செயல் பட ஆரம்பித்த பின்……. அதற்கு நோயாளிகளின் வருகை அதிகரித்த பின் தான் அவள் மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க அப்ளை செய்ய முடியும்.

இப்படி பல பின்களை வைத்திருந்ததால் சற்று டென்ஷனாக இருந்தாள்.    

வீரமணி வந்ததும் முதல் வேலையாக அதன் திறப்பு விழாவிற்கு நாளை குறித்தாள்.

அது இன்னும் ஒரு வாரத்தில் என்றிருந்தது.

அந்த வேலையில் தந்தையும் மகளும் மும்முரமாய் இருந்ததால் தெய்வானையால் திருமணத்தைப் பற்றி பேச்செடுக்க முடியவில்லை.

அழைப்பிதழ் அச்சடிக்க…. யார் யாரை அழைக்க……. என்று வேலை ஆரம்பிக்கலாம் என்றால், மீண்டும் ஒரு நாள் பயணமாக வீரமணி டெல்லி சென்றார். அவர் ஹாஸ்பிடலை கட்சியின் தலைமை கொண்டு திறந்து வைக்க விரும்பினார்.

அதனால் நாள் தோதுபடுமா என்று கேட்க விரும்பி நேரில் சென்றார். அவர் எப்போது நாள் கொடுப்பார் என்பதாக சற்று டென்ஷனாக இருந்தாள் சக்தி.

எதற்கு இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு கஷ்டம் என்பதாக இருந்தது தெய்வானைக்கு…. கணவன் சம்பாதிக்க வீடு குடும்பம் மக்கள் என்று வாழ்ந்தவர் தெய்வானை….. அதுவும் கார்த்திக் வந்த பிறகு அவரின் கணவருக்கு கூட அதிக வேலைகள் இல்லை.

இப்படியிருக்க தன் மகள் ஓயாமல் கட்டிட வேலைகள் முடிந்து விட்டதா என்று பார்ப்பதும்……. யார் யாரை வேலைக்கு சேர்க்கலாம்…….. யாரை பொறுப்பில் போடலாம் என்று குழம்புவதுமாக இருக்க…… தன் மகளை பார்க்க அவருக்கு கவலையாக இருந்தது.

ஓயாமல் வேலை இருந்தது சக்திக்கு… காலேஜிலும் அவளை பார்ப்பதற்க்கு ஆட்கள் காத்திருக்க வீட்டிற்கு வந்த பிறகும் வேலைகள் அதிகம் இருந்தன.

செல்வம் அவளின் நிழல் போல இருந்தான். அவள் உறங்க செல்லும் வரை அவள் வீட்டில் தான் இருப்பான். காலையிலும் எட்டு மணிக்கு வந்துவிடுவான். அவனாக செய்வான் என்றாலும்………

கார்த்திக் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று செல்வத்திடம் கேட்காவிட்டாலும்……… சக்திக்கு இப்போது வேலைகள் அதிகம் என்று புரிந்து அவளின் நிழலாய் இருக்க சொல்லியிருந்தான்.

வீரமணி கட்சி தலைமையிடம் பேசி அவரின் சம்மதத்தை வாங்கி அந்த நாளிலேயே திறப்பு விழா வைத்துக் கொள்ளலாம் போல கூற…..

அழைப்பிதழ் அடித்து அழைக்கும் வேலை ஆரம்பமானது. செல்வத்திற்கு வேலை முதுகு நிமிர்த்தியது. அவனால் முடியவில்லை. சொல்லும் வேலையை செய்து பழக்கப்பட்டவன் அவன்… அவனாக யோசித்து செய்யும் போது தப்பாக போய் விடுமோ என்று பயமாக இருந்தது.

சக்தி வேறு இந்த வேலையை செஞ்சிடுங்க அந்த வேலையை செஞ்சிடுங்க என்று சொன்னாள். எப்படி செய்வது என்று குழம்பி போனான்.

அன்று, “அழைப்பிதழ் யார் யாருக்கு குடுக்கனும்னு லிஸ்ட் போட்டுடுங்க, அப்பா காலையில வந்ததுமே வேற யாரை சேர்கனும்னு கேட்டுக்கலாம், நாளைக்கு காலையில கூப்பிட ஆரம்பிக்கனும். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு…. எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது……… நான் ரெஸ்ட் எடுக்கறேன்”, என்று சொல்லி செல்ல போக…….. 

யாரை லிஸ்ட் போடுவது என்று தெரியாமல் விழித்தவன்…….. “மேடம், நீங்க சொல்லிட்டு போங்க! நான் லிஸ்ட் ரெடி பண்ணிடறேன்!”, என்றான்.

“இல்லை செல்வம், எனக்கு ரொம்ப தலைவலி…… என்னால முடியாது! நீங்களே பண்ணிடுங்க!”, என்று சொல்லி சென்று விட்டாள்.

தெய்வானை சண்டைக்கு வந்தார்……….. “மணி பார்த்தியா? நைட் பதினொன்னு…… அவ தலை வலிக்குதுன்னு சொல்றா……… நீ செய்ய மாட்டியா? பாவம் புள்ள ஓயாம உழைக்குது……… நீ எதுக்கு அப்புறம் சம்பளம் வாங்கற”, என்றார்.

செல்வத்துக்கு மனதுக்குள் கோபம் தான், “என் வீட்டி வேலையா இது….. இந்தம்மாவுக்கு என்னை திட்றதே பொழப்பா போச்சு! இருங்க என்ன பண்றேன்னு பாருங்க!”, என்று மனதிற்குள்  கறுவிக் கொண்டவன்……. வேகமாக சென்று நின்ற இடம் கார்த்திக்கின் வீடு.

அங்கிருந்து போன் அடித்தான், “பாஸ்! நான் வாசல்ல நிக்கறேன்!”, என்று.

என்னவோ ஏதோவென்று பதறி விரைந்து கார்த்திக் வந்தான்.

“என்னடா”, என்றவனின் கேள்விக்கு…….

“கண்டேன் சீதையை”, என்பது மாதிரி……… “பிரச்சனையில்லை மேடம்க்கு”, என்று முதலில் சொன்னான்……..

கார்த்திக்கின் முகம் தெளியவும்……

“என்னால முடியலை பாஸ்! என்னால அங்க வேலை பார்க்க முடியலை!”, என்று புலம்ப ஆரம்பித்தான்.

“ஏண்டா?”,

“சொல்ற வேலை எவ்வளவு கஷ்டமானதுன்னாலும்….. இப்படி செய்ன்னு சொன்னா செய்வேன்………. என்னை யோசிச்சு செய்னா, நான் எதை செய்வேன்”, என்றான் பரிதாபமாக.

“உள்ள வாடா இம்சை…….. அறிவுகெட்டவனே…….”, என்று இன்னும் கெட்ட வார்த்தையால் அவனை திட்டிய கார்த்திக்…. “என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்…”,

“வா”, என்று அவனை வீட்டிற்குள் அழைத்து போனான்.

“இப்போ சொல்லு!”, என்று கார்த்திக் சொல்ல…….

“பசிக்குது”, என்றான்.

கார்த்திக்கிற்கு டென்சன் ஏறி விட்டது……

“ஏண்டா என்னடா உன் பிரச்சனை, என்கிட்ட மாத்து வாங்கி நாளாகிடுச்சு போல”, 

“வேலை முடிச்சிட்டு சாப்பிடலாம்னு இருந்தேன்……. சக்தி மேடம் இருந்திருந்தா சாப்பிடாம அனுப்ப மாட்டங்க…. அவங்க தலைவலினு படுக்கப் போனாங்க…… அவங்க அம்மா என்னை திட்டுனாங்களா……… கோவத்துல சாப்பிடாம வந்துட்டேன்! மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டது! சாப்டா தான் என்னால பேசவே முடியும்!”, என்றான் சோர்வாக.

சமையலறையில் போய் கார்த்திக் பார்க்க அங்கே ஒன்றுமில்லை….. மீதமிருந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது.

“வாடா, ஹோட்டலுக்கு போகலாம்”,

“மணி பன்னிரண்டு….. இப்போ யார் தொறந்து வெச்சிருப்பா”,

“டேய்! இங்க ஒண்ணும் இல்லைடா! தண்ணி ஊத்தின சாப்பாடு தான் இருக்கு”,

“அதை கொஞ்சம் தயிரோட குடுங்க பாஸ்……. அதுவே போதும்”, என்றான்.

அந்த சாதத்தை… தயிரை… ஊறுகாயை… என்று கார்த்திக் கொடுத்து அங்கே அமர…..

“நான் சாப்பிட்டுட்டு வர்றேன் பாஸ்! நீங்க போங்க!”, என்று அவனை அனுப்ப முற்பட.

“ஏண்டா, நான் இங்க இருந்தா என்ன?”,

“என்னவா? சாப்பிடறது பழைய சாதம்……. அதையும் என்னை சாப்பிட விடாம மேடம் பத்தி கேள்வியா கேட்பீங்க…… எனக்கு தெரியாதா…. போங்க!”, என்று அவனை அனுப்பினான்.

உண்மையில் கார்த்திக் அதற்காக தான் அமர்ந்தான்.

சக்தியிடம் மண்டபத்தில் பேசி வந்ததில் இருந்து மனதே சரியில்லை கார்த்திக்கிற்கு……. எப்போதும் யாரிடமும் தன் உணர்வுகளை பகிர்ந்து பழகப்பட்டிராதவன்……. இப்போது புதிதாக என்ன செய்வான்……….. மனதை எப்போதும் ஒரு துக்க பந்து அடைத்தது.

பிரபு வேறு அவனிடம் சுமித்ராவிற்கும் சிவாவிற்கும் எஸ்டேட் வாங்கி கொடுத்தது தொடர்பாக சண்டை போட்டான்.

பிரபுவிற்கும்  சீக்கிரம் செட்டில் செய்து விட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான் கார்த்திக். இப்படி பிரச்சனைகளில் உழன்று கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் கார்த்திக்கின் முன் வந்து நின்றான் செல்வம்.

“உட்காருடா, இப்போ சொல்லு, என்ன விஷயம்”,

“ஹாஸ்பிடல் திறப்பு விழா இன்னும் ஒரு வாரத்துல…. காலையில தான் ஐயா டெல்லில கட்சி தலைமை கிட்ட பேசி டேட் வாங்கினார். உடனே இங்க தகவல் சொல்லவும்….. நான் அழைப்பிழ் அடிக்கிற வேலையை பார்க்க போயிட்டேன்…. மேடம் அங்க சைட்ல இருந்தாங்க……”,

“இப்போ எட்டு மணிக்கு அழைப்பிதழ கையில வாங்கிட்டு வீட்டுக்கு போனேன். வேலையை பத்தியே மேடம் ரெண்டு மணி நேரம் பேசறாங்க….. பேசறாங்க சரி…. ஆனா எந்த முடிவுக்கும் வரமாடேங்கறாங்க….. ஏன்னா பேசறது ஹாஸ்பிடல் பத்தி…. எனக்கும் தெரியாது! அவங்களுக்கும் தெரியாது!”,

“ஹாஸ்பிடல் கட்டுறதை அதுக்குன்னு ஸ்பெஷலா இருக்குற ஆளுங்க கிட்ட விட்டோம்…… அவனுங்க நீட்டா பண்ணி குடுத்துட்டாங்க……. ஆனா அதுக்கு அப்புறம் என்ன பண்றது?”,

“ஃபர்ஸ்ட்  கட்டடத்தை திறப்போம்! அப்புறம் எல்லாம் பண்ணலாம்ன்னு சொல்றாங்க….. கட்டிடத்தை திறக்கறதா பெருசு! ஹாஸ்பிடலை திறக்க வேண்டாமா…. அதுக்குன்னு டாக்டர்ஸ்…… மத்த லேப் ஃபேசிலிடீஸ்……. என்ன என்ன டீபார்ட்மென்ட்ஸ்……. எத்தனை பொருட்கள் வாங்கனும்…… யோசிக்கும் போதே தலையை சுத்துது………”,

“ஒரு கிளினிக்கே எவ்வளவு வேலை பார்க்கனும்.. இது 500 பெட்டட் ஹாஸ்பிடல்…. எவ்வளவு பெரிய வேலை……. நம்ம கிட்ட பணம் இருந்தாலும் வேலை நல்லபடியா சரியா நடக்க வேண்டாமா”,  

“ஏதாவது தப்பாச்சுன்னா நீங்க என்னை கொன்னுட மாட்டீங்க”,

“இல்லையில்லை…… நீயே சாகற மாதிரி பண்ணிடுவேன்”, என்றான்.

“பாஸ்”, என்றான் பரிதாபமாக……..

அவனின் தோளில் தட்டிய கார்த்திக், “விட்றா…. விட்றா…. மேல சொல்லு….”,

“யாரையாவது டாக்டர்ஸ் இன்சார்ஜ் போடலாம்னா……. யாரை சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாங்க……. எல்லாம் ஃபாஸ்டா நடக்கனும்னு சொல்றாங்க…. ஆனா யோசிச்சிட்டே இருக்காங்க…….. எதுவும் முடிவு எடுக்க மாட்டேங்கறாங்க…..”,

“ஐயா கிட்ட சொன்னா மேடம் சொல்ற மாதிரி செய்ன்னு சொல்றாங்க….. மேடம் யாரையும் நம்ப மாட்டேங்கறாங்க……. எவ்வளவு பணத்தை இதுல கொட்டி  வெச்சிருகோம்……. இன்னும் கொட்டனும் கவலையா இருக்கு பாஸ்…..”,

“இதுல நேர்மையா அட்மிஷன் பண்ணனுமா……. அதை விட நேர்மையா இருந்தா நம்ம பெர்மிஷன் எப்படி வாங்குவோம்…… மெடிக்கல் காலேஜ் அப்ரூவல் வாங்கறதுக்குள்ள எத்தனை பேரை கவனிக்கனும்…….. எவ்வளவு செலவாகும்”,  என்றான் கவலையாக….

“இன்னும் நிறைய வேலை இருக்கு பாஸ்…..”, என்றான் மிகவும் கவலையாக……       

“என்ன பண்ணலாம்”, என்று கார்த்திக் அவனை யோசனை கேட்க…….

“தெரியலை பாஸ்”, என்றான்.

அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே போன் வர…….. யாரென்று பார்த்தால் சக்தி….

மணி ஒன்றை தொட்டுக்கொண்டு இருந்தது….

இவள் எதற்கு இந்த நேரத்தில் இவனுக்கு போன் பண்ணுகிறாள் என்று சற்று எரிச்சலாக எண்ணிய கார்த்திக்…. “போனை ஸ்பீக்கர்ல போட்டு பேசுடா”, என்றான்.

செல்வம் ஸ்பீக்கரில் போடவும்…….

எடுத்தவுடனேயே சக்தி, “லிஸ்ட் ரெடியா செல்வம்”, என்றாள்…

“காலையில தானே மேடம் கேட்டீங்க…… இப்போ தான் ரெடி பண்றேன்”, என்றான்.

“ஓஹ்! இப்போ மணி என்ன?”,

“ஒண்ணு”,

“ப்ச்! சாரி! மாத்திரை சாப்பிட்டிட்டு தூங்கினேன்…… இப்போ முழிப்பு வந்துச்சா டைம் பார்க்காம கூப்பிட்டுடேன்…… காலையில் பார்க்கலாம்…. லேட் பண்ணிடாத! சீக்கிரம் வந்துடு!”, என்று சொல்லி போனை வைத்தாள்.

உடனே மறுபடியும் அடித்தது….. செல்வம் எடுக்கவும்……. “லிஸ்ட் மறக்காம கொண்டு வந்துடு! சொதப்புன தொலைச்சிடுவேன்!”, என்று சொல்லி போனை வைத்தாள்.

கார்த்திக்கிற்கு இப்படி அவள் வேலையை தூக்கி தலையில் போட்டுக்கொண்டு உளப்புவது கவலையாக இருந்தது… தூக்கத்தில் கூட அதே நினைவாக இருக்கிறாள்.

“நிஜமாவே எங்கயாவது தொலைஞ்சு போனா பரவாயில்லைன்னு இருக்கு பாஸ்! ஏதாவது வேலை குடுத்துட்டே இருக்காங்க! என்னால முடியலை! ஏதாவது தப்பாயிடுமோன்ற டென்சன்லயே என்ன்னலா சரியா வேலை செய்ய முடியலை…. இப்போவே பாருங்க மணி ஒண்ணு! நான் எப்போ லிஸ்ட் பண்ணி, எப்போ தூங்கி எப்படி சீக்கிரம் போவேன்”,

“இதுல காலையில எட்டு மணிக்கு ஐயாவை கூப்பிட ஏர்போர்ட் போகனும்னு பெரியம்மா சொல்லி அனுப்பினாங்க……. கருப்பண்ணன் ஏதோ அவசர வேலையா ஊருக்கு போயிருக்கார்…….. என்னால முடியலை பாஸ்”, என்றான்

“என்னடா சும்மா முடியலை, முடியலைன்னு, ஆயிரத்தெட்டு தடவை அதையே சொல்லிட்டு இருக்க….. எல்லாம் உன்னால முடியும்”, என்று அவனை சத்தம் போட்டான் கார்த்திக்.   

செல்வம் அமைதியாக இருக்கவும்…… “இப்போ என்ன லிஸ்ட் தானே வேணும், நான் எழுதறேன் குடு…..”,

“உங்களுக்கு தெரியுமா?”,

“டேய்! மொக்க பீஸ் மாதிரியே பேசாதடா! நான் அய்யாவை விட்டு வந்து கொஞ்ச மாசம் தான் ஆகுது……… என்னை விட அவங்க வீட்டை பத்தி தெரிஞ்சவங்க யாரு?”,

“சாரி பாஸ்! என் டென்சன் எனக்கு! நீங்க ரெடி பண்ணுங்க! நான் இப்படியே ஒரு ஓரமா தூங்கறேன்!”, என்று அப்படியே கீழே தூங்கினான்.

“டேய்! சோபால படுடா!”,

“அதெல்லாம் வேண்டாம்!”, என்று கையை தலைக்கு கொடுத்து வெற்று தரையில் தூங்கினான்.

கார்த்திக் தான் கட்டாயப்படுத்தி ஒரு போர்வையும் தலைகாணியும் கொடுத்தான்.

பின்னர் லிஸ்ட் ரெடி செய்த கார்த்திக்…. அந்த இரவு நேரத்தில் பிரபுவை எழுப்பி பேசினான். 

காலையில் செல்வத்தை ஐந்து மணிக்கு உலுக்கி எழுப்பினான் கார்த்திக்……

பதறி எழுந்த செல்வம்……. “அய்யாவுக்கு கார் கொண்டு போகனும்….. லிஸ்ட் எங்க? ஐயா வீட்டுக்கு போய் குடுத்துட்டு…… கார் எடுத்துட்டு போகனும்”, என்று பதறினான்.

அவன் பதறிக்கொண்டு இருக்கும்போதே…. தெய்வானை செல்வத்திற்கு போன் செய்து, “ஐயாவை கூப்பிட கிளம்பிட்டியா இல்லையா! இன்னும் கார் எடுக்க வரலை!”, என்றார்.

“இதோ வர்றேன் மா!”, என்று ஏகத்துக்கும் செல்வம் பதற…….. கார்த்திக்கிற்கு அவனை பார்த்தால் பாவமாக இருந்தது. 

வேலை செய்பவர்களின் நிலை இது தான்…. 

“டேய்! ஃப்ரீயா விட்றா!”, என்று அவனை அதட்டிய கார்த்திக்….. அவனே காரை எடுத்து, “ஏறுடா போகலாம்”, என்றான்.

“பாஸ்! நீங்களா!”, என்றான் பயந்தவனாக செல்வம்…. “மேடம் என்னை தொலைச்சிடுவாங்க பாஸ்…….”,

“நான் இருக்கேன் வாடா! எனக்கு ஐயாவை பார்க்கனும்! வீட்டுக்கு போக முடியாது!  இங்க பார்த்துக்கறேன்!”, என்று சமாதானப்படுத்தி, கிளப்பி சென்றான். 

தலையிட வேண்டாம்….. சக்தி செய்வதை செய்யட்டும் என்று தான் நினைத்தான். இதுவரை அவள் செய்ததை குறை சொல்ல முடியாது. ஹாஸ்பிடலின் கட்டுமான பணிகள் எல்லாம் மிகவும் நன்றாக வந்திருந்தது.

ஆனால் இப்படியா இரவிலும் அதையும் இதையும் நினைப்பாள்……

அவளை அப்படி கஷ்டப்பட விட்டு நான் இங்கே தூங்குவதா….???….. அதுவும் இரவில் வேலையென்றாலும் செல்வத்தை என்றாலும் அவள் அப்படி தூக்கத்தில் விழிக்கும் வேளையில்  அழைத்தது கார்த்திக்கிற்கு பிடிக்கவேயில்லை.

சக்தி அவனை பக்கத்தில் கூட விட மாட்டாள் என்று தெரியும், அதனால் வீரமணியை பார்க்க கிளம்பினான்.  

அவள் போ என்று சொன்னால் போய்விடுவானா கார்த்திக்……

சொல் பேச்சு கேட்பவன் கார்த்திக் இல்லை தான்…..

ஆனால் இங்கே சொல்லவே மறுப்பவளிடம் என்ன செய்வான். 

 

Advertisement