Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு :

கனவு கண்டதிலே – ஒரு நாள்                                                                                                                                கண்ணுக்கு தோன்றாமல்,                                                                                                                இனம் விளங்கவில்லை – எவனோ                                                                                                                என்னகந் தொட்டு விட்டான். 

( பாரதி )

அவனுக்கு நேர் மாறான மனநிலையில் இருந்தாள் சக்தி. அன்று ஏர்போர்ட் டில் அவனை சந்தித்து வந்த பிறகு மிகவும் சுய இரக்கத்தில் இருந்தாள். கார்த்திக்கை பார்த்ததும் தடுமாறும் தன் மனதை அவளே வெறுத்தாள்.

தான் அவனை பார்த்ததும் ஏர் போர்ட்டில் உட்காராமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது என்றுப் புரிந்தது.

அதுவும் காபியை வேறு அவன் முகத்தில் எல்லோர் முன்னிலையிலும் கொட்டி எவ்வளவு அவமானம் அவனுக்கு…….. அதைவிட அவன் தன்னை திருப்பி திட்டியிருந்தாலோ அல்லது கோபம் மீற அடித்து இருந்தாலோ அது தனக்கு எவ்வளவு கேவலம்…….. 

அப்படி என்ன அவன் தான் வேண்டும் என்று உனக்கு…… உனக்கு அவன் வேண்டாம் என்று மறுபடியும் உருப் போட ஆரம்பித்தாள்.  

கடவுளிடம் இடைவிடாத பிரார்த்தனை அவன் எனக்கு வேண்டாம் என்பதாக…    

ஒன்றரை மாதமாக கார்த்திக் சக்தி வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைக்க…. அவன் வேண்டாம் என்று சக்தி வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள்.

வாசுகி பிரபுவை அழைத்துக்கொண்டு நேரில் வந்து வீரமணியை அழைத்து இருந்தார். வீரமணியோ தெய்வானையோ எதையும் முகத்தில் காட்டவில்லை. அவர்களை நன்கு உபசரித்து அனுப்பினர்.

“அந்த பொண்ணு திருடிட்டான்னு அவ்வளவு கேவலமா கார்த்திக்கை பேசிச்சு… இவங்க இவ்வளவு நல்லா உபசரிக்கறாங்க”, என்பதே பிரபுவின் எண்ணமாக இருந்தது.

இந்தப் பக்கம் சிவாவின் தந்தையும் தாயும் வந்து வீரமணியை அழைத்து சென்றனர்.

இன்னொரு பக்கம் சிவா சக்தியை காலேஜ் போய் தனியாகப் பார்த்து அழைத்தான்.

சக்திக்கு அவனைப் பார்த்ததும் தான் அவன் ஒருத்தன் இருக்கிறான் என்பதே ஞாபகம் வந்தது. நடுவில் நடந்த பிரச்சனைகளில் அவளுக்கு சிவாவின் ஞாபகமே இல்லை.

“சாரி சக்தி! கொஞ்சம் பிசியா இருந்தேன்! அதான் இத்தனை நாளா போன் கூட பண்ணலை”, என்றான்… அவன் கூப்பிடாதக் காரணம் சக்தியின் மீது அவனுக்கு இருந்தக் கோபம்……. சுமித்ரா கார்த்திக்கை பற்றி அவளும் தன்னிடம் சொல்லாமல் விட்டு விட்டாளே என்ற கோபம்….

கார்த்திக் சக்தியிடையே நடந்தது எதுவும் அவனுக்கு தெரியாது அல்லவா.

“இட்ஸ் ஓகே சிவா….”, என்றாள் சம்ப்ரதாயமாக.

“எனக்கு கல்யாணம் சக்தி!”,

“கங்க்ராட்ஸ்”, என்றாள் சந்தோஷமாக……. “பொண்ணு யாரு”,

“இது என்ன கேள்வி! என் காதலி தான்….! நான் உங்ககிட்ட போட்டோவுல காட்டுன அதே காதலி, நீங்க தான் உங்க பாடிகார்ட்கிட்ட நடத்தச் சொல்லி சொல்லியிருந்தீங்களே”, என்றான்.

“இதில் கார்த்திக் எங்கே?”, என்று மனதிற்குள் ஓடினாலும் வெளியே காட்டாமல்….. “காட்டுங்க!”, என்றாள் இன்னும் உறுதி செய்ய…..

அவன் காட்ட பார்த்தால் சுமித்ரா தான்…… மனதில் ஒரு குரூர திருப்தி எழுவதை சக்தியால் தடுக்க முடியவில்லை. 

எப்படி? எப்படி? இது நடத்தது!

சிவாவிற்கு சக்தியிடம் மறைக்க எதுவுமில்லை….. கார்த்திக் அவனுக்கு போன்  செய்தது…… சுமித்ரா அவனைப் பார்த்து அவள் பெண் கேட்கச் சொன்னது……. பின்னர் தான் கார்த்திக்கிடம் பேசியது…….. கார்த்திக் பிரபுவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து தந்தையுடன் பேசியது……. என்று எல்லாம் கதையாக சொன்னான்.

அதில் சக்திக்கு புரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான்…… சுமித்ராவாக சிவாவிடம் வந்து பேசியிருக்கிறாள். அவள் தொடங்கி வைத்ததை கார்த்திக் முடித்து வைத்திருக்கிறான் அவ்வளவே…..

அப்போதும் அவனாக எதுவும் ஆரம்பிக்கவில்லை. இது சக்தியின் மனதில் ஆழப்பதிந்தது.      

இதற்கிடையில் திருமணத்திற்கு சீர் செய்வதில் பிரபு தெளிவாக இருந்தான். என் தங்கை நான் தான் செய்ய வேண்டும் என்று விட்டான். கார்த்திக்கை எதுவும் செய்ய விடவில்லை.

“நான் போய் சிவாவோட அப்பாகிட்ட சம்மந்தம் பேசியிருக்கேன்…….. கண்டிப்பா எதுவும் கம்மியா செய்ய முடியாது……. செய்யவும் கூடாது”, என்று கார்த்திக் சொல்ல…..

“நீ என்ன செய்யலாம்னு நினைச்சிருந்த சொல்லு, அதை நானே செய்யறேன்!”, என்றான் பிரபு.

“எப்படி செய்வ?”,

“நான் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கலைன்னாலும் எங்கப்பா அம்மா சொத்து வெச்சிட்டு போயிருக்காங்க கார்த்திக்! அம்மாவோட நகை இருக்கு! இங்க தாத்தா நகை செஞ்சு வெச்சிருக்கார்! எங்க அம்மா வகை பாட்டியோட நகை இருக்கு! இதுவே நிறைய வரும்”,

“அது மட்டும் போதாது…… மேல செய்யனும்”,

“செய்யலாம்! இப்போவே செய்யனும்ங்கது கிடையாது! கல்யாணம் முடிஞ்சவுடனே நம்ம வீட்டோட அவ பந்தம் முடிஞ்சிடுமா என்ன? கொஞ்ச கொஞ்சமா செய்யலாம்!”, என்றான் பிடிவாதமாக….

பிரபுவால், “கார்த்திக் எங்க வீட்ல இருந்து திருடிட்டு வந்துட்டான்”, என்றான் சக்தியின் வார்த்தைகளை மறக்க முடியவில்லை.

அப்படி ஒரு பணத்தில் அவனுக்கு எதுவும் வேண்டாம் என்பதாக அவன் எண்ணம். அது கார்த்திக்கின் உழைப்பு என்று அவன் ஒத்துக்கொள்ள தயாரில்லை….. அதே சமயம் அதை வெளியிலும் சொல்ல முடியவில்லை.     

என்னவோ பிரபுவின் மனதில் இருக்கிறது என்று கார்த்திக்கிற்கு புரிந்தாலும் அப்போதைக்கு தள்ளி வைத்தான். அவன் தான் எந்தப் பிரச்சனையும் எதிர் கொள்ள தயாரில்லையே அவன் எண்ணம் முழுவதும் சக்தி தானே இருந்தாள். 

திருமண நாளும் வந்தது…. திருமணத்தை சிவா வீட்டினர் ஏதோ வேண்டுதல் என்று கோவிலில் வைத்திருக்க……… மிக நெருங்கிய சொந்தம் மட்டுமே அதில் கலந்து கொண்டு அதன் பிறகு மிக பிரமாண்டம்மாய் ரிசெப்ஷன் வைத்திருந்தனர்.

பிரபு சொல்வது மாதிரி கார்த்திக்கினால் விலகியிருக்க முடியவில்லை…. பிரபுவிடம் கலந்து ஆலோசிக்காமல் நேரடியாக மாப்பிள்ளையின் அப்பாவிடம் பேசி அவர் செய்வதாக இருந்த திருமண செலவு முழுவதையும் கார்த்திக் ஏற்று இருந்தான்.    

சொல்லப் போனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்த செலவும் இல்லை…. அவர்கள் பெண்ணுக்கு செய்யும் சீர்வைகைகளே செலவு.  

அது மட்டுமல்லாமல் திருமணத்தில் சிவாவிற்கு கிஃப்ட்டாக கொடுப்பது மாதிரி பல கோடி மதிப்புள்ள கேரளாவில் இருக்கும் ரப்பர் தோட்டம் ஒன்றை அவன் பெயரிலும் சுமித்ரா பெயரிலும் ரெஜிஸ்டர் செய்திருந்தான். அதையும் பிரபுவிடம் கார்த்திக் தெரிவிக்கவில்லை.  

ரிசெப்ஷன் மிகவும் கிராண்டாக நடந்து கொண்டிருந்தது. பத்ரிநாத்திற்கு மிகவும் திருப்தி…. பிரபுவும் கார்த்திக்கும் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட செல்வமும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். மூன்று நாட்கள் முன்பே பாஸ் வீட்டு திருமணம் என்று சொல்லியே விடுமுறை கேட்டிருந்தான், சக்தியும் கொடுத்திருந்தாள்.

பெண்ணும் மாப்பிள்ளையும் எல்லோர் கண்களையும் கவர்ந்தனர். ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் அனைவருமே பாரபட்சம் இல்லாமல் சொன்னார்.

நடக்காது என்ற நினைத்த ஒன்று நடந்து விட்ட திருப்தியில் இருந்தான் சிவா. இன்னுமும் அவ்வப்போது தன்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டான்.

அவனின் ஆர்வமான பார்வைகளில் ஆசையான பேச்சுக்களில் சுமித்ராவும் தன் திருமணத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தாள். சிவாவின் உற்சாகம் அவளையும் உற்சாகத்துடன் எல்லாவற்றையும் செய்ய வைத்தது.

வைஷ்ணவி சொல்லவே வேண்டாம் மணப்பெண் கூட கம்மியாக நகை அணிந்திருந்தாள்…… இவள் நகைக்கடை ஊர்வலம் தான்.

“எதுக்குடி இவ்வளவு நகை”, என்று பிரபு கூட முகம் சுளித்தான்.

“எல்லாம் பெருசு பெருசா இருக்கு! வேற யார் கல்யாணத்திலையும் போட முடியாது! வாங்கினதுக்கு ஒரு தடவையாவது போடனும் தானே!”, என்று பிரபுவிடம் விளக்கம் சொன்னாள்.

“உன் கல்யாணத்துல போட வேண்டியது தானே!”, என்று பிரபு சொல்ல…..

“உங்களுக்கு லேட் ஆகும்னு தான்”, என்றாள்.

இப்போது பிரபு புரியாமல் பார்க்கவும்……

“கழற்றதுக்கு லேட் ஆகாது”, என்று ரகசியமாக மெதுவாக அவனிடம் கிசுகிசுக்க………

பிரபுவின் கை தானாக அவனின் வாயை அடப்பாவி என்ற வார்த்தையுடன் மூடியது.

“ஏன் நீங்க தான் பேசுவீங்களா? நாங்க பேச மாட்டோமா?”, என்று கண்ணடித்தாள்.

“அம்மா! தாயே! ஆளை விடும்மா! ஆளை விடு! என் தங்கச்சி கல்யாணம், நான் நிதானமா நல்ல பையனா இருக்கனும்”, என்று இடத்தை விட்டு நகர்ந்தான்.             

வீரமணி தன் மனைவியுடன் வந்திருந்தார். இரு வீட்டாரும் தனித்தனியாக அழைத்திருக்க அதுவுமில்லாமல் சிவா வேறு அழைத்திருக்க…. வந்திருந்தார். ஆனால் சக்தியை கூட காணோம்.

அவர் வந்தவுடன் கார்த்திக்கின் கால்கள் வேறு திசை செல்லவில்லை. எப்போதும் போல அவர் பின்னால் சென்று நின்று கொண்டான். “வாங்கய்யா, வாங்கம்மா”, என்ற அவனின் அழைப்புக்கு ஒரு தலையசைப்பு மட்டுமே வீரமணியிடம் அவர் வேறு எதுவும் பேசவில்லை.

அவனும் அதையெல்லாம் கண்டுக் கொள்ளவில்லை….. அவர் பின் சென்று நின்றுக் கொண்டான்.   

கார்த்திக்கிற்கு சக்தி ஏன் வரவில்லை என்று தவிப்பாய் இருக்க……. செல்வத்தை கண்களால் அழைத்து, “மேம்! ஏன் வரலைன்னு கேளு!”, என்றான் மெதுவான குரலில்..

“ஐயா! மேடம் வரலைங்களா!”, என்றான்.

“எங்க கூடத் தான் கிளம்பினா…… காலேஜ்ல ஏதோ அவசர வேலைன்னு போயிட்டா இப்போ வந்துடுவா……”, என்றார்.

“காலேஜ்ல அவசர வேலை”, என்றதும்…….. என்ன என்று தெரிந்துக் கொள்ள செல்வம் போன் பேசப் போனான்.

கார்த்திக்கிற்கு வேண்டிய விவரம் கிடைத்தது. எப்போது வருவாள் என்று வழி மேல் விழி வைக்க ஆரம்பித்தான்.   

அவள் வரும்பாடாகக் காணோம்….

வீரமணி தெய்வானையுடன் மேடை ஏறி….. மணமக்களை வாழ்த்தப் போனார்.   அவர்களை வாழ்த்தி பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வெள்ளியில் கனமான வேலைப்பாடு அமைந்த குத்து விளக்கை பரிசளித்து திரும்ப…….

“ஐயா! ஒரு நிமிஷம்!”, என்று என்று சொன்ன கார்த்திக்…… ஒரு பத்திரங்கள் அடங்கிய பைலை போன்ற பையை அவரிடம் நீட்டி……..

“இது பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நான் வாங்கியது! நீங்க உங்க கையாள குடுத்தா சந்தோஷப்படுவேன்!”, என்று நின்றான்.

எல்லோரும் பார்க்க தர்ம சங்கடமான நிலை வீரமணிக்கு……… யாருக்கும் கார்திக்கிற்கும் அவருக்கும் பிரச்சனை என்று தெரியாது. அதுவும் மாப்பிள்ளையின் அப்பா போன் செய்த போதும் அவர் சொல்லவில்லை.

அதனால் மெளனமாக அவர் வாங்கவும்………. கேரளாவில் இருக்கும் ஒரு ஊரின் பெயரை சொன்னவன் அங்கே இருக்கும் ரப்பர் தோட்டம் என்றான்.

அதை மனைவியுடன் சேர்ந்து வீரமணி கொடுக்க…… விவரம் அறிந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு முகம் கொள்ளா சந்தோஷம்….

சிவா தான் எதற்கு இவ்வளவு பெரிய சொத்து என்று நினைத்தவன், “என்ன கார்த்திக் இது”, என்று தயங்க…    

“வாங்குங்க சிவா! இது என்னோட சின்னப் பரிசு தான்!”, என்றான். சிவா தன் தந்தையின் முகம் பார்த்தான், அவர் உன் விருப்பம் என்பது போல நிற்க…..

சுமித்ராவை பார்த்தான்….. அவளும் உங்கள் விருப்பம் என்பது போல தான் இருந்தாள்… அவளின் பிரபு அண்ணாவிற்கு இது பிடிக்காது என்று தெரிந்ததால் அவள் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

பின்பு வீரமணி தயங்கும் அவர்களை கண்டு, “வாங்குங்க தம்பி….. வாங்கிக்கங்க”, என்றார்.  ஆனாலும் தயங்கித் தயங்கி தான் சிவா வாங்கினான். மற்ற பரிசுகள் என்றால் திருப்பி செய்து சமம் செய்து விட முடியும். இவ்வளவு பெரிய சொத்து தன்னால் திருப்பி செய்ய முடியாது என்ற தயக்கம் அவனுக்கு. 

பிரபு நடப்பவைகளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவனாலும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை…….. சபையில் கொடுப்பதை மறுக்க முடியாது….. அதுவுமில்லாமல் இது மாப்பிள்ளை வீட்டினருக்கு கொடுப்பது தான் மறுக்க முடியாது.

“இந்த கார்த்திக்…….!!!!!”, என்று பல்லை கடிப்பதை தவிர பிரபுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சொல் பேச்சு கேட்பவன் அல்ல கார்த்திக் என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை….    

வீரமணி மேடையை விட்டு இறங்கவும் சக்தி வரவும் சரியாக இருந்தது. சக்தி உள்ளே நுழைவதை மிகவும் ஆசையுடன் தழுவின கார்த்திக்கின் கண்கள்…. அவனின் கண்களில் கண்ணாடியும் இல்லை.   

ரோஜா நிற பட்டு அவளை பாந்தமாய் தழுவி இருந்தது. திருமணத்திற்கு வருவதால் தோற்றத்தில் சற்று அதிக அக்கறை எடுத்திருக்க…. அவளை மிகவும் அழகாக காட்டியது அது.     

பிரபு நேரே சென்று, “வாங்க! வாங்க!”, என்று வரவேற்க……. வைஷ்ணவி ஒரு நிமிடம் தயங்கியவள், “வாங்க”, என்று கூடச் சென்று வரவேற்றாள்.

சக்தி அப்போது, அந்த நேரம் வீரமணியின் பெண் என்பதை நிரூபித்தாள். இருவரையும் பார்த்து ஒரு சிநேகமான புன்னகை.   

பின்பு அப்பாவுடன் சென்று அமர்ந்துக் கொண்டாள்…. கண்கள் கார்த்திக்கை கவனித்தது.  

அவன் கண்கள் தன்னை ஒரு புதிய பார்வையில் பார்ப்பதை உணர்ந்தாள். கார்த்திக்கை பார்த்தாலும் தான் அமைதியாக இருக்க வேண்டும், தன்னைக் கொண்டு போக விடக் கூடாது என்ற அவளின் முடிவு ஆட்டம் காணத் துவங்கியது.

அவனின் பார்வை ஒரு கோபத்தைக் கொடுத்தது. இத்தனை நாட்கள் இல்லாமல் எதற்கு இந்தப் பார்வை என்று கோபம் கொள்ள வைத்தது. 

“வாங்க”, என்ற அவனின் வார்த்தைக்கு அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

சிவா மேடையில் இருந்து சக்தியை வருமாறு அழைக்க, “வரவில்லை”, என்று சொல்லி அம்மா அப்பாவுடனே அமர்ந்திருந்தாள்.

“நீங்க வரலைன்னா நான் கீழ இறங்கி வருவேன்”, என்ற சிவாவின் சைய்கையை பார்த்து வேறு வழியில்லாமல் மேலே ஏறினாள்.

“சுமி, இவங்க சக்தி என்னோட ரொம்ப முக்கியமான பிரின்ட்…”, என்று அறிமுகப்படுத்தி வைத்தான். சுமித்ராவிற்கு ஆச்ச்சர்யம் சக்தி இவனுக்கு தோழியா என்று.

ஒரு புன்னகை….. அது மட்டுமே பதிலாய் வந்தது சக்தியிடம். சுமித்ராவும் எந்த தயக்கமும் இல்லாமல் இப்போது சக்தியைப் பார்த்து புன்னகைத்தாள்.

அந்த புன்னகை சில நொடிகள் கூட நீடிக்க வில்லை. “நான் இவங்க கிட்ட தான் என் காதலை முதல் முதலா சொன்னேன்”, என்றான் சக்தியை காட்டி சுமித்ராவிடம்.

கேட்ட சுமித்ராவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி, பயம். சக்திக்கு எங்கேப் போய் முட்டிக் கொள்வது என்றே தெரியவில்லை, “லூசு, சொதப்புது”, என்று மனதிற்குள் சிவாவை திட்டியவள்….. என்னவோ சுமித்ராவின் பயத்தைப் போக்க வேண்டும் போலத் தோன்ற….

“பேச்சிலர்ஸ் பார்ட்டில அடிச்சது இன்னும் இறங்கலையா”, என்றாள்.

“நான் பார்ட்டி குடுத்து ரெண்டு நாள் ஆச்சே உங்களுக்கு எப்படி தெரியும்…..”,

“அது தான் நான் ஸ்டாப் என்ஜாய்மென்டா எவன் வேணா உங்க பேரை சொல்லி குடிக்கலாம்னு சொல்லி கிருஷ்ணகிரியையே கலக்குணீங்களே”, 

“உங்களுக்கு எப்படித் தெரியும் இதெல்லாம்”, என்று கேட்க…….

“கிளி ஜோசியக்காரன் சொன்னான்”, என்றாள்.

“சக்தி உண்மையைச் சொல்லனும்……”, 

“உங்க ஃபிரன்ட் பண்ற அலம்பல் தாங்கலைன்னு செல்வம் சொன்னான்” என்றவள்…… “அதை விடுங்க தெளிவா சொல்லுங்க”,

“எதை”,

“நீங்க ஏதோ காதல்னு சொன்னீங்களே அந்த ஸ்டேட்மெண்ட்டை…..”,

“ஆமா! நான் இவளைக் காதலிக்கறதை முதல் முதலா உங்ககிட்டத் தானே சொன்னேன்”, என்று சிவா சொல்ல சுமித்ராவின் முகம் மலர்ந்தது.

“நான் வேற இவ போட்டோவை என் மொபைல்ல வெச்சு, அந்த பொண்ணுகிட்ட லவ் சொல்லி அது சம்மதிக்காம ஏன் வெச்சிருக்கீங்கன்னு நீங்க சண்டை போட்டு டெலிட் பண்ண வெச்சீங்களே”, என்று சிவா குறைப் பட……

சுமித்ராவின் முகத்தில் புன்னகை பெரிதாக விரிந்தது.

“கொஞ்ச நேரத்துல உன்னை டென்சன் பண்ணிட்டாங்க இல்லை, என்  சார்பா ஒரு அடி, அடி”, என்று சக்தி சுமித்ராவிடம் சொல்ல……

சுமித்ரா யோசிக்காமல் அவன் தோளில் தட்டினாள்.

“யார் சொன்னாலும் ரூம்ல தனியா தான் அடிக்கனும் செல்லம், இப்படி பப்ளிக்ல அடிக்கக் கூடாது! உன் மாமன் ஒரு ஹீரோ இமேஜ் மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன்”,  என்று சீரியஸாக சிவா சுமித்ராவை பார்த்துக் கோரிக்கை வைக்க….

“என்னது ஹீரோ வா? யாரது? எங்க?”, என்ற சக்தி சுற்றும் முற்றும்….. மேலே கீழே.. சிவாவின் பின்னால் என்று எட்டிப் பார்த்து………. பின் சுமித்ராவின் பின்னும் எட்டி பார்த்து “யாரோ ஹீரோவாமே சுமித்ரா நீ பார்த்தியா”, என்றாள். 

“ங்கே”, என்று சிவா விழிக்க……

“உங்க மானத்தை நாங்க தான் வாங்கணும், நீங்களே வாங்கிக்கக் கூடாது”, என்று சக்தி சொல்ல…

சுமித்ரா வாய் விட்டுச் சிரித்தாள். சுமித்ரா அப்படியெல்லாம் எல்லோரும் பார்க்க சத்தமாக சிரிப்பவள் அல்ல……. அவள் வீட்டினர் அவளை அதிசயமாகப் பார்த்தனர்.

எல்லோர் பார்வையும் அவர்கள் மேல்…….

“தெய்வமே விட்டுடுங்க, தெரியாம சொல்லிட்டேன்! நான் தானே இங்க இன்னைக்கு ஹீரோ!”, என்றான் பாவம் போல சிவா…..

“என்ன சுமித்ரா, ஹீரோன்னு ஒத்துக்கலாமா”, என்றாள்.

சுமித்ராவிற்கு சிரிப்பு பொங்கியது. சக்தியின் பேச்சுக்கள் அவ்வளவு பிடித்தது அவளுக்கு.

“என்னப் பண்ணட்டும்”, என்று சக்தியிடம் அவள் திருப்பி கேட்க…..

தங்கை திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாலும் அவள் மனதில் ஏதாவது இருக்குமா என்று அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த பிரபுவிற்கும் சுமித்ராவின் இந்த மலர்ந்த சிரிப்பு…. வெட்கத்தை பூசிக்கொண்டிருக்கும் முகம் மிகுந்த திருப்தியை கொடுத்தது.

 ஒரு ரெட் ரோஸ் கையில் எடுத்த சிவா……… சுமித்ராவின் முன் மண்டியிட்டு அதை நீட்டி…….. “சொல்லிடேன்”, என்றான்.

“இவர் தான் என் ஹீரோ”, என்று சுமித்ரா சொல்ல….    

“அது”, என்று சக்தி புன்னகைத்து கைத் தட்ட……

சுற்றி நின்ற பொடுசுகளும் கைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.

முன்பெல்லாம் சக்தி இருக்கும் இடம் இப்படி தான் கலகலப்பாக இருக்கும். இப்போது இயல்பை விட்டு மாறிக் கொண்டிருந்தவள் இன்று சற்று வெளியே வந்திருந்தாள்.

அவளையே கவனித்து இருந்தனர் வைஷ்ணவியும் பிரபுவும். கார்த்திக் என்னப் பேசுகிறார்கள் என்று கேட்காத போதும் சக்தியின் முகபாவனைகளை கண்களால் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.  

“சக்தி போதுங்க”, என்று சிவா சொல்லவும் நிறுத்திய சக்தி……. “உங்க மொபைலை குடுங்க”, என்று அவனின் மொபைலை வாங்கி….

“சுமித்ரா அவங்க கையைப் பிடிங்க, அவங்க தோள் சாஞ்சிக்கோங்க”, என்று சுமித்ராவிடம் சொல்ல…… சுமித்ரா தயங்கினாள்….

“ப்ளீஸ்! பார்க்கும் போதெல்லாம் உங்க போட்டோவை நான் டெலிட் பண்ண வெச்சிட்டேன்னு சொல்றாங்க! ஒரே ஒரு போஸ்!”, என்று கேட்டு…….  சுமித்ராவை அவன் கை பிடித்து தோள் சாய வைத்து….. அதை சிவாவின் மொபைலில்  எடுத்து “போதுமா”, என்று அவனிடம் கேட்டாள்.

“இப்போதைக்கு இது போதும், எங்க குழந்தையோட எங்களை முதல் போட்டோவும் நீங்க தான் எடுக்கனும்”, என்று சிவா சொல்ல, சுமித்ராவின் முகம் வெட்கத்தை பூசியது.

அதையும் மொபைலில் அடக்கிய சக்தி…. சுமித்ராவின் வெட்கத்தை திருப்தியாக பார்த்தபடி…… இன்னும் நிறைய பேர் வெயிட் பண்ணுவதைப் பார்த்து……… அவர்களை வாழ்த்தி கீழே இறங்கினாள்.

 

 

Advertisement