Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று :

நின்னையே ரதியென்று                                                                                                  நினைக்கிறேனடி கண்ணம்மா                                                                                             தன்னையே சகியென்று                                                                                                                       சரண மெய்தினேன்

                                     ( பாரதி )

சுமித்ரா சிவாவிடம் பேசிய பிறகு தான் வீட்டில் சொல்ல வேண்டும் இருந்தவள் வீட்டிற்கு வந்ததும்…. நேரே பிரபுவின் ரூமிற்கு போனாள்……. தாத்தாவின் முன்னிலையில் பேச முடியாது…….

பிரபிவின் ரூமிற்கு சென்றவள்… அங்கே இருந்து கொண்டே, “அத்தை”, என்று வாசுகியை அழைத்தாள்……… வாசுகி வரவும்…….. “உங்க கிட்ட பேசணும் அத்தை!”, என்றாள்.

“என்ன சுமி”,

“வைஷு எங்கே அத்தை?”,

“நீ அவகிட்ட சண்டை போட்டியா அழுதுட்டு தூங்கிட்டா”,

“அழுதாளா, நான் என்ன சண்டை போட்டேன்! ஜஸ்ட் வெளியே போறேன், நீ வராதேன்னு சொன்னேன்”,

“அது அவளால தாங்க முடியலை! நீ எதுக்குமே இதுவரைக்கும் அவகிட்ட கோபப்பட்டது கிடையாது இல்லையா, அது தான். காலையில பிரபுவோட சண்டை போல….. என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறா! இப்போ உன்னோட அதுதான் ஒரே அழுகை தூங்கிட்டா….”,  

அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே புயல் போல கார்த்திக்  உள்ளே நுழைந்தான்.

அவன் ரூமினுள் நுழைந்ததும் ஒரு அமைதி…….

“அம்மா! நீங்க எனக்கு ஒரு காபி போட்டு தர்றீங்களா”, என்றான்.

அவர் எழுந்து போக…….    

அவனுக்கு சுமித்ரா சிவாவை சந்தித்தது தெரியாத மாதிரி பிரபுவிடம்…….. “பிரபு, எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் சிவான்னு…… அவங்களுக்கும் குவாரி பிசினஸ் தான்….. சுமித்ராவை பொண்ணு கேட்கறாங்க…. வர சொல்லட்டுமா”, என்றான்.

பிரபுவிற்கு ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை…. காலையில் சக்தி கார்த்திக்கிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்தே இருவருக்குள்ளும் பிரச்சனையிருந்தாலும் அதையும் மீறி ஏதோ ஒரு இணைப்பு இருந்ததாகவே தோன்றியது.

எப்படி சுமித்ராவை இவனுக்கு திருமணம் செய்து வைப்பது என்று பிரபு யோசித்து கொண்டு இருந்தபோதே இப்படி கார்த்திக் சொல்லவும்…… பிரபு சுமித்ராவை பார்த்தான்.

அவனுக்கு கவலையெல்லாம் சுமித்ரா கார்த்திக்கை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி விடக் கூடாதே என்பது தான். சிறுவயதில் இருந்தே அப்படித் தான் பேசி வந்திருக்கிறார்கள்……

சுமித்ரா ஒத்துக்கொள்வாளா என்பது போல பிரபு பார்க்க…… “அண்ணா! நான் தான்……”, என்று சுமித்ரா ஆரம்பிக்கும் போதே……. அவள் தான் சிவாவை வர சொன்னாள் என்று சொல்ல வருகிறாள் என்று புரிந்த கார்த்திக்……

அவளிடம் கண்களாலேயே பேசாதே என்பது போல சொல்ல…..

சிவாவை பார்த்தது கார்த்திக்கிற்கு தெரியும் என்று அவளுக்கு தெரியுமா என்ன…..? இவன் எதை சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான் என்று குழம்பினாள்.

ஒரு நிமிடம் சுமித்ரா தடுமாற….. “நீ எதுவும் சொல்ல வேண்டியது இல்லை சுமித்ரா…. சிவாவை வர சொல்லட்டுமா… வேண்டாமா…. அதை மட்டும் சொல்லு”, என்றான் கார்த்திக்.

“வர சொல்லுங்க”, என்றாள் சுமித்ரா.

“உனக்கு அவரை முன்னாடியே தெரியுமா சுமி”,

“தெரியும்”, சொன்னது கார்த்திக்.

பிரபு, “எப்படி”, என்பது போல பார்க்க….

“சிவாக்கு சுமித்ராவை ரொம்ப பிடிக்கும். காலேஜ் வரும் போதும் போகும் போதும் பார்த்திருப்பான் போல….. ஒரு தடவை விருப்பத்தை சுமித்ரா கிட்ட சொல்ல வந்த வந்தபோது…. என்  தங்கச்சி தான் ஒருத்தி இருக்காளே, சின்ன வயசுல ஏதோ வாய் வார்த்தைக்காக பேசற அத்தை பையன் மாமன் மகள் கல்யாணம்ன்றதை அவன் கிட்ட சொல்ல அவன் விலகிட்டான்”,

“ஏன்னு தெரியலை இப்போ திடீர்ன்னு பொண்ணு கேட்டு வரட்டுமான்னு கேட்கிறான்….. மறுக்கற அளவுக்கு எந்த குறையும் அவன்கிட்ட கிடையாது…… வர சொல்லட்டுமா”,

“அப்போ இவ்வளவு நாளா உங்க கல்யாணம் பேசினது”, என்று பிரபு இழுக்க….

இதற்கு எந்த பதிலும் கார்த்திக் சொல்லவில்லை……

“அண்ணா! எனக்கு கார்த்திக் மாமா வேண்டாம்”, என்றாள் தெளிவாக சுமித்ரா எந்த தயக்கமும் பயமும் இல்லாமல்…

அவள் அந்த வார்த்தைகளை சொல்லும்போது சரியாக வாசுகி வர…….. அவர் கையில் இருந்த காஃபி கப் நழுவியது.

தரை முழுவதும் காஃபி சிதற அவர் மனமும் சிதறியது….. சட்டென்று சுதாரித்தவன் பிரபு தான், “அத்தை…… என்ன இது”, என்றபடி அவர் அருகில் வர……. அவர் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.

“இவளை திருமணம் செய்வேன் என்று தானே கார்த்திக் வீட்டை விட்டுப் போனான். இப்போது இவள் திருமணம் வேண்டாம் என்கிறாளே! மறுபடியும் வீட்டை விட்டு போய் விடுவானோ”, என்ற பயம் தான் முதலில் அவருக்கு வந்தது.

“அம்மா!”, என்றபடி அருகில் வந்தான் கார்த்திக்…….

“நீ வீட்டை விட்டு போயிடுவியா”, என்றார்.

அதற்கு, “இல்லை”, என்ற பதிலை கார்த்திக் சொல்லாமல்……. “போனாலும் உன்னை கூட்டிட்டு தான் போவேன் சரியா”, என்றான்.

“ஏன் சுமி? ஏன் இந்த முடிவு?”, என்று சுமித்ராவை சமாதானப்படுத்த வாசுகி விரைந்து வர…..

கார்த்திக் ஒரே வார்த்தையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தான், “அவளோட இந்த முடிவுக்கு நான் தான்மா காரணம்…. அதனால அவளை கல்யாணத்துக்காக கன்வின்ஸ் பண்ணாதீங்க…. நீங்க அவ கிட்ட பேசி மனம் மாறி அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும்………. என்னை கல்யாணம் பண்ணினா அவ சந்தோஷமா இருக்க மாட்டா”,

“உங்க பொண்ணா இவ்வளவு நாள் வளர்த்து…..”, என்று அவன் சொல்லும் போதே….

“நான் அவங்க பொண்ணு தான்……..”, என்று இடை புகுந்தாள் சுமித்ரா.

“ம்! உங்க பொண்ணு வாழ்க்கையை சந்தோஷம் இல்லாம நீங்களே செஞ்சிடாதீங்க, என்னை பார்க்காதீங்கம்மா…. அவளைப் பாருங்க”, என்றான்.

சுமித்ரா அவர் அருகில் வந்து அமர்ந்து அவர் தோள் சாய்ந்து கொண்டாள்.

“ப்ளீஸ், அத்தை! இந்த கல்யாணத்துனால யாருமே சந்தோஷமா இருக்க முடியாது! எனக்கும் சந்தோஷமில்லை! கார்த்திக் மாமாக்கும் சந்தோஷமில்லை! இதை பார்த்து பிரபுண்ணா சும்மா இருப்பாங்களா! அதை வைஷ்ணவி மேல காட்டுவாங்க! அவங்க வாழ்க்கையும் பிரச்சனையாகும்! இதைப் பார்த்து நீங்க நிம்மதியா இருப்பீங்களா? நீங்க இருக்கறதே  எங்களுக்காக தானே!”, எனவும்….

வாசுகிக்கு அழுகை அதிகமாகியது……

“அம்மா! இது அழற நேரமில்லை! சந்தோஷமா வேலைகளை செய்ய வேண்டிய நேரம்! சாயந்தரம் என் நண்பர் ஒருத்தர் சுமித்ராவை பொண்ணு பார்க்க வர்றார்”,

“பெரிய குடும்பம்…… பெரிய ஆளுங்க……. வசதி வாய்ப்பும் அதிகம் தான்….. இதையெல்லாம் விட பையன் ரொம்ப நல்லவன்…. சுமித்ராவை ரொம்ப நல்லா வச்சிருப்பான்…… நம்பி குடுக்கலாம்”,

“வைஷ்ணவியோட வாழ்க்கை………”, என்று வாசுகி கேட்க…..

“அதுக்கென்னத்தை உங்களுக்கு அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்! என் பொண்டாட்டி அவ தான்! அவ மட்டும் தான்! அவ இல்லைன்னா யாருமே இல்லை! உங்க பொண்ணே என்னை வேண்டாம்ன்னு சொன்னாலும் நான் அவளை விடறதா இல்லை!”, என்றான் பிரபு.

“சுளீர்…..” என்று கார்த்திக்கின் கழுத்தில் வலி……… எல்லோருக்கும் இருக்கும் உறுதி ஏன் தனக்கு இல்லாமல் போனது! சக்தியோடான எனது வாழ்க்கையை நான் யோசிக்கக் கூட இல்லையே…!

எதற்காக ஓடுகிறேன் என்று தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

என்ன ஓடினாலும் நான் இளைப்பாறும் இடம் அவள் தானே…..!     

அப்போது அதை நினைக்க அவனுக்கு நேரமில்லை……. “தாத்தா கிட்ட நீங்க தான் பேசனும் அம்மா!”, என்றான்.

“இவ்வளவு சீக்கிரம் எப்படி கார்த்திக் ஒத்துக்குவாங்க”, என்று வாசுகி கேட்டதிலேயே அவருக்கு சம்மதம் என்று தெரிந்து விட்டது.

“சொல்லுங்கம்மா! நான் மாப்பிள்ளையில்லை வேற மாப்பிள்ளைன்னு தெரிஞ்சாலே பாதி சம்மதம் குடுத்துடுவார்….. மீதி நீங்க தான் பேசனும்…. உங்க வாழ்க்கை மாதிரி இல்லாம அவ நல்லா இருக்கட்டும்னு சொல்லுங்க உடனே சம்மதிச்ச்சிடுவார்”,

“தினம் தினம் உங்களை பார்த்து அவர் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார்”, என்றான்.

“முயற்சி பண்றேன்!”, என்று சொல்லி தளர்வாக அவர் எழுந்து சென்றார்.

வாசுகி தன் அப்பாவிடம் சொல்ல….. கார்த்திக் இதில் முன்னால் வராமல் பிரபுவிடம் சொல்லி மாப்பிள்ளை வீட்டார் விவரம் சொல்ல வைக்க……

அவர்கள் இனம் இல்லாவிட்டாலும் அவர்கள் பெரிய ஆட்களே என்று தெரிந்த பத்ரிநாத் உடனே சம்மதம் சொன்னார்.

யோசித்து! யோசித்து!……… விசாரித்து! விசாரித்து!…….. தேடி! தேடி!…… சீரும் சிறப்புமாய் திருமணம் செய்து வைத்து……. முப்பது வயதில் இருந்து கணவனை பிரிந்து வாழும் தன் மகளை கண் முன் கண்டவர் அல்லவா……. “மாப்பிள்ளை பையன் இஷ்டப்பட்டு பொண்ணு கேட்டு வரவான்னு கேட்கறாங்க”, என்று சொன்னதும் பத்ரிநாத் உடனே சம்மதம் தெரிவித்தார்.    

சிவாவிற்கு தகவல் பறக்க…. “நான் அப்பா கிட்ட பேசிட்டேன்….  கொஞ்சம் தயங்கறார்”, என்ற வார்த்தையை கேட்டதும்……

பிரபுவை அழைத்துக்கொண்டு கார்த்திக் மாப்பிள்ளையின் தந்தையையே போய் பார்த்தான். 

கார்த்திக் அவருக்கு நன்கு அறிமுகம் என்றாலும் கார்த்திக் வீரமணியை விட்டு தனியாக பிரிந்து வந்தது…. தொழில் முறையில் சற்று சலசலப்பு தான்.

தப்பாக யாரும் எதுவும் பேசவில்லை என்றாலும் இத்தனை லாபம் கொடுக்கும் தொழிலை கார்த்திக்கிற்கு அவர் ஏன் விட வேண்டும் என்ற கேள்வி சிவாவின் தந்தையினுள் இருக்க……. ஏதாவது பிரச்சனையிருக்குமோ என்று அவர் அந்த வீட்டில் சம்மந்தம் செய்யத் தயங்கினார்.  

“எனக்கு திருப்தி தான் கார்த்திக்! இருந்தாலும் வீட்ல கலந்து பேசிட்டு தகவல் இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன்!”, என்றார்.

சிவாவை பார்த்ததும் பிரபுவிற்கு வெகு திருப்தி!  இருந்தாலும் அவனுக்கு  ஒன்றும் புரியவில்லை! “அவங்க தானே வந்தாங்கன்னு சொன்ன கார்த்திக்! இப்போ தகவல் சொல்றேன்னு சொல்றாங்க…!”,

“நிச்சயமா மாப்பிள்ளை சிவா தான் வந்தான்! உனக்கு சந்தேகம் வேண்டாம்!”, என்று பிரபுவை சமாதானப்படுத்தினான்.

கார்திக்கிற்கும் என்ன அவர் யோசிக்கிறார் என்று புரியவில்லை. எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று கவலையாக இருந்தது. சுமித்ராவே சொன்ன பிறகு என்ன வானாலும் சிவா விட மாட்டான் என்பதில் எந்த சந்தேகமும் கார்த்திக்கிற்கு கிடையாது. 

இருந்தாலும் எல்லோர் சம்மதமும் கிடைத்து திருமணத்தை நன்றாக செய்ய வேண்டும் அல்லவா…….

கார்த்திக்கிற்கு தெரியாதது சிவாவின் தந்தை வீரமணியுடன் பேசியது. அவர்கள் வீட்டில் சம்மந்தம் வைத்து கொள்ளலாமா என்று கேட்டது……

வீரமணி பெண்ணை அவர்களுக்கு பிடித்திருந்தால் தாராளமாக சம்மந்தம் வைத்து கொள்ளலாம் என்று சொன்னது….. பேச்சு கார்த்திக்கை பற்றியே சிவாவின் அப்பா வீரமணியிடம் சுத்த விட……

“எங்க வீட்ல எங்க பையன் மாதிரி இருந்தவன்! அவங்கப்பா என்னோட உயிர் நண்பன்! தாராளமா சம்மந்தம் பண்ணலாம்! அதுவுமில்லாம கார்த்திக் பத்தி நீங்க அதிகம் பார்க்க வேண்டியதேயில்லை.. அவங்கம்மாவோட அண்ணன் பொண்ணை கட்டுறீங்க… பொண்ணு தானே உங்க வீட்டுக்கு வருது!”, என்று முடித்து விட்டார்.    

வீரமணி தான் உண்மையான பெரிய மனிதர் என்பதை மீண்டும் நிருபித்தார். மனைவி மகளிடம் கூட இதை சொல்லவில்லை.  

வைஷ்ணவி எழும்போதே மணி நான்கு…. அன்றே நல்ல நாள் என்பதால் பெண் பார்க்க ஆறுமணிக்கு வருவதாக ஏற்பாடு….. சிவாவின் பெற்றோரும் சம்மதம் கொடுத்து இருந்தனர். 

எழுந்து வந்தவளுக்கு வீடு ஏதோ பரபரப்பாக இருப்பது போல தோன்ற….. சுமித்ராவிடம் வந்தாள், “என்ன சுமி? வீட்டை இத்தனை பேர் சுத்தம் பண்றாங்க!”, என்றபடி……..

அவள் பதில் சொல்லும் முன்பே, “அவளை பொண்ணு பார்க்க வர்றாங்க”, என்று வாசுகி பதில் சொல்ல……

“என்ன”, என்றாள் புரியாமல். வாசுகி ஏதோ வேலையாய் செல்ல…..    

“அவளை பொண்ணு பார்க்க வர்றாங்க”, என்று பிரபுவும் சொன்னான்.

“யாரு? யாரு வர்றா?”, என்று வைஷ்ணவி கேட்க……

“சிவா”, என்றாள் சுமித்ரா …

“யாரு? டெய்லி நீ போகும் போதும் வரும் போதும் ஒருத்தன் நிப்பானே அவனா!”, என்றாள் வைஷ்ணவி.

“மரியாதையா பேசு வைஷ்ணவி”, என்றாள் சுமித்ரா உடனே…..

ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை வைஷ்ணவிக்கு, “எப்படி? எப்படி? இத்தனை நாளா கார்த்திக் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க போறதா நினைச்சி இருந்துட்டு உடனே எப்படி? எப்படி? மாறின!”, என்றாள் வைஷ்ணவி.

சுமித்ராவின் முகம் ஏதோ தப்பு செய்து விட்டவள் போல கூம்பி விட்டது.

“நீ அவளை குழப்பாத?”, என்று பிரபு சண்டைக்கு வந்தான்.

“என்ன குழப்பறேன்?”,

“அதெல்லாம் சின்ன வயசுல பேசினது அதையே பிடிச்சிட்டு தொங்காத”,

“சின்ன வயசுல எங்க பேசினது? இப்போவும் அதைத் தானே பேசினோம்! காலையிலயும் அதைத் தானே பேசினோம்”,  

“காலையில பேசினியே என்ன ஆச்சு? ஒரு பொண்ணு உங்கண்ணா முகத்துல காபிய கொட்டுவா! ஒண்ணுமே நடக்காத மாதிரி உங்கண்ணா அதை வாங்கிட்டு நிப்பாங்க! என்னை அவங்களை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றியா?”,

“ஏன் பண்ணிகிட்டா என்ன? இத்தனை நாளா பேசினது தானே……. அது அந்த பொண்ணு மரியாதையில்லாம நடந்துக்குது! அதுக்கு எங்கண்ணா என்னப் பண்ணுவான்?”,

“அந்த பொண்ணு மரியாதையில்லாம நடந்துகிட்டப்போ உங்கண்ணன் சும்மாத் தானே இருந்தாங்க………. நீ பண்ணிக்குவியா? நீ பண்ணிக்குவியா? பிரபுண்ணாக்கு இப்படி யார் மேலயாவது அஃபெக்ஷன் இருக்குன்னு தெரிஞ்சா நீ பண்ணிக்குவியா?”.

“காதல்ன்னா வார்த்தையில சொல்லனும்னு அவசியம் இல்லை! அது பார்த்தாலே தெரியும்! எனக்கென்னவோ அது அவங்களுக்குள்ள இருக்குற மாதிரி தான் தெரியுது!”,

“அப்படி ஒருத்தர் எனக்கு வேண்டாம்”, என்றாள் தெளிவாக சுமித்ரா.      

“கண்டிப்பா! நீ சொல்ற மாதிரி பிரபு அத்தான் இருந்தார்னா நான் பண்ணிக்க மாட்டேன்! ஆனா வேற யாரையும் பண்ணிக்க மாட்டேன்”,

“நீ சிவா மாதிரி யாரையும் பார்த்திருக்க மாட்ட!”, என்றாள் சுமித்ரா பட்டென்று.

“இவ்வளவு நாளா இல்லாம….. என்ன நீ இப்படி பேசற….. எனக்கு புரியவேயில்லை”,

“என் ஃபீலிங்க்ஸ் என்னோட!………. அதை நான் யார்கிட்டயும் ஷேர் பண்ண முடியாது! நான் இவ்வளவு உன்கிட்ட பேசினதே நீ உனக்காக கூட எதையும் பார்க்க மாட்ட………. எனக்காகத்தான் அதிகம் பார்ப்ப! அதனால தான்! ப்ளீஸ் வைஷு இதை இதோட விட்டுடு!”, என்றாள்….

பிரபு வந்து அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.   

“நமக்குன்னு சில ரொம்ப பெர்சனல் ஃபீலிங்க்ஸ் இருக்கும், அதை யார்கிட்டயும் ஷேர் பண்ண முடியாது…… என்னை புரிஞ்சிக்க முடிஞ்சா புரிஞ்சிக்கோ….”, என்றாள் அண்ணன் தோள் சாய்ந்தவாரே.

வைஷ்ணவிக்கு இதில் மிகுந்த கோபம், வருத்தம், எல்லாம் இருந்தாலும்……. இது  சுமித்ராவின் வாழ்க்கையில் வரும் சந்தோஷமான தருணங்கள். தான் இதில் முகத்தை தூக்கி வைத்திருந்தால் அது அவளை பாதிக்கும் என்பதால்……..

“நான் என்ன ட்ரெஸ் போடட்டும் புடவையா, சுடிதாரா”, என்றாள்.

சுமித்ராவின் முகம் மலர்ந்தது…… “நான் போய் உனக்கு செலக்ட் பண்றேன்”, என்று சந்தோஷமாக சென்றாள்.  

“ஏதோ ஒன்னை போட்டா சரி”, என்று பிரபு வைஷ்ணவிக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான்.

“ஏன் உங்களுக்கு என்ன?”, என்று வைஷ்ணவி சண்டைக்கு வர…..

“நீ போடாம இருந்து பார்த்தாத் தான் எது போட்டா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்……. அதான்!”, என்று பிரபு சொல்ல……

முதலில் வைஷ்ணவிக்கு புரியவில்லை……. புரிந்த பிறகு, “அடிங்க”, அவனை அடிக்க வர……. அவன் கார்த்திக்கை தேடி அவன் இருக்கும் இடம் சென்று நின்றான்.

வைஷ்ணவி ஒன்றும் செய்ய இயலாதவளாக அவனை முறைத்து விட்டு போனாள்.   

பெண் பார்க்கும் வைபவம் மிகவும் சிம்பிளாக நடந்தது. இரு வீட்டு ஆட்கள் மட்டுமே… பெண்ணைப் பார்த்தும் சிவா வீட்டினருக்கு மிகவும் திருப்தி……

சுமித்ராவின் அழகு….. அவளுடைய தோற்றத்தில் தெரிந்த அடக்கம்…. பேச்சில் தெரிந்த மென்மை அவர்கள் வீட்டினரை கவர்ந்தது. அண்ணனும் வெளிநாடு சென்று படித்து வந்திருக்கும் டாக்டர்……. சுமித்ராவின் அம்மா வழி குடும்ப பாரம்பர்யமும் மிகவும் திருப்தியே.    

பத்ரிநாத்தும் பெயர் சொல்லும் படி வாழ்பவரே…… என்ன அவர்கள் இனம் இல்லை என்ற குறை இருந்தாலும்……. அவர்கள் இனத்தில் தேடினாலும் சிவாவிற்கு இப்படி ஒரு பெண்ணோ சம்மந்தமோ கிடைப்பது கஷ்டம். அதுவுமில்லாமல் சிவாவிற்கு இதில் மிகவும் இஷ்டம் என்பதால் எல்லாம் நல்ல படியாக நடந்தது.

திருமணமும் வெகு சீக்கிரமாக வைப்பது என்றே முடிவு செய்யப்பட்டு முகூர்த்த தேதியைக் குறிக்க…….. அது இன்னும் ஒன்றரை மாதத்தில் இருந்தது.

வேலைகள் மளமளவென்று நடந்தது……

இந்த ஒன்றரை மாதமும் கார்த்திக்கின் ஞாபகம் முழுக்க சக்தியே….. அவள் வேண்டாம் என்று நினைத்த நினைவுகள் எல்லாம் காற்றோடு கலந்தன.

சுமித்ரா தன்னை வேண்டாம் என்று சொன்னதால் சக்தி பின் போன மாதிரி இருக்க வேண்டாம் என்று ஞாபகபடுத்தி ஞாபகப்படுத்தி அமைதி காத்தான்

அவனால் தொழிலும் முழு கவனத்தோடு இருக்க முடியவில்லை. கிரானைட்ஸ் அவன் ராஜ்ஜியம் அது தானாக நடந்தது……. ஆனால் சினிமா அவன் கண்ட்ரோலில் இல்லை. 

அவனின் தந்தையின் கனவு……. அவன் லட்சியம்….. அவனால் அதிகம் அதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை, ஏனெனில் அவன் சிந்தையில் இருந்தது சக்தி மட்டுமே. 

இத்தனை வருடங்கள், சக்தியை முதன் முதலில் பார்த்த போது தோன்றிய ஒரு வார நினைவுகள் வராமல் இருந்த அவனின் மனதில் இப்போது சக்தியை தவிர வேறு ஞாபகங்களே இல்லை.

சக்தியை மாயை என்று நினைத்த மனம் அந்த மாயையை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தது, என்பதை விட அதை விட்டு வெளியே வர விரும்பவேயில்லை.   

இத்தனை நாட்கள் இருந்த கடமையின் கட்டுக்கள் அவனை வேறு எதுவும் யோசிக்க விடாமல் செய்திருந்ததுப் போல…… இப்போது அது இல்லை என்றான பிறகு அவன் மனதை அவனால் அடக்கவே முடியவில்லை.

எடுத்த முடிவுகள் எல்லாம் செயல் படுத்த முடியாமல் இருந்தான் என்பதைவிட என்ன முடிவுகள் எடுத்தான் என்பது அவன் ஞாபகத்திலேயே இல்லை என்பது தான் உண்மை.   

மீண்டும் அவன் எண்ணம் முழுதும் எங்கும் சக்தி! எதிலும் சக்தி…….!

சக்தி எனும் மாயப் பிசாசு அவனை ஆட்டிப் படைத்தது. இத்தனை வருடங்கள் அவனுள் இருந்த கட்டுப்பாடு எங்கே காணமல் போனது என்று அவனுக்கே தெரியவில்லை.

சக்தி! சக்தி! சக்தி!……… “கடவுளே எனக்கு அவளைக் கொடுத்து விடு”, என்று ஓயாமல் வேண்டுதலை கடவுள் முன் வைக்க ஆரம்பித்தான் கார்த்திக்.   

ஆனால் சக்தி ?????

 

 

Advertisement