Advertisement

அத்தியாயம் இருபது :

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை                                                                            அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் ;                                                                                                  வெந்து தணிந்தது காடு ; தழல்                                                                                                               வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ ?

                                           தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்……

                                                                                         ( பாரதி )

நிறைவுக் காட்சி :

கார்த்திக் வீரமணியின் வீட்டிற்கு அது வீரமணியின் வீடு என்று தெரியும் முன்பே வந்துவிட்டான். வந்தது சக்திக்காக……… சக்திக்காக மட்டுமே.

வந்த பின் தான் சக்தி வீரமணியின் பெண் என தெரிய…….. அவன் கனவுகளை கானல்நீராக அவனே மாற்றினான்.

என்ன செய்வது என்று சத்தியமாக புரியவில்லை.

முதலில் இங்கே நிலைப்போம் பிறகு யோசிக்கலாம் என்று நினைத்தவன்…… வீரமணி சொல்லும் வேலையை செய்யத் துவங்கினான்.

சக்தியிடம் ஒரு பொய்யை ஆரம்பித்து விட்டதால் அதையே பிடித்துக்கொண்டு பத்தாவது தான் அவனது படிப்பு என்று சொன்னான். ஆனால் பெரிய கான்வென்ட் படிப்பாக இருந்ததால் மொழி அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.

வீரமணிக்கு ஆங்கிலமும் சற்று தடுமாற்றம், ஹிந்தி கேட்கவே வேண்டாம் தெரியாது. இது இரண்டு கார்த்திக்கிற்கு தண்ணீர் பட்ட பாடாக இருக்க….. அவன் நடை உடை பாவனை எல்லாவற்றிலும் ஒரு அழுத்தம், பெரிய மனித தோரணை தானாக இருந்தது கார்த்திக்கினுள்.

மற்றவர்களிடம் பேசி வேலை வாங்குவதில் கெட்டிக்காரனாக இருந்தான் கார்த்திக்.

அந்த வயதிற்குரிய அசட்டுதனங்கள் எதுவும் இல்லாமல்  மிகவும் பொறுப்பாக இருக்கும் அவனை வீரமணிக்கு இன்னும் பிடித்துப் போயிற்று. முதலில் அவன் வீரமணியுடன் வேலையை ஆரம்பித்தது மொழி பெயர்ப்பாளராக மட்டுமே.

ஆர்டர் வரும் போது சற்று அவருக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும் மொழியை அவனிடம் கொடுத்து விடுவார். அவரை நிழல் போல தொடர்ந்தான்.

வீரமணியும் கார்த்திக் மேல் கேஸ் ஆகாமல் பார்த்துக்கொண்டார். கேஸ் ஆகியிருந்தாலும் சக்திக்காக அதை எந்த முகசுணக்கமும் இல்லாமல் கார்த்திக் அதை எதிர்கொண்டு இருப்பான் என்பது வேறு.

சக்தியை முடிந்த மட்டும் தவிர்த்தான். இவன் சக்தியுடன் ஆர்வமாக பேசியிருந்தால் கூட சக்தி ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் பேசியிருப்பாள். இவன் தள்ளி தள்ளி போகவும் நெருங்கி வந்தாள்.

சற்றும் எந்த கலப்படமோ தடுமாற்றமோ இல்லாத ஆர்வமான பேச்சுக்கள். கார்த்திக்கிற்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல தோன்றிய பேச்சுக்கள். ஆனாலும் பின்வாங்கினான். 

காதல் என்ற உணர்வை கார்த்திக் மறைக்க முடிவெடுத்து இருந்தாலும்….. இப்படி பேசும் சிறு பெண்ணிடம் காதல் பார்வையை ரகசியமாக பார்ப்பது கூட தவறாகவே பட்டது.   

முதலில் சக்தியிடம் கார்த்திக்கிற்கு அந்த ஒதுக்கம் தான் வந்தது. நம்பி பழகும் பெண்ணிடம் வேறு எந்த பார்வையும் பார்க்க கூடாது, அது போன்ற எண்ணத்தையும் விதைக்கக் கூடாது என்பதாக…

கார்த்திக்கின் இயல்பு அதுவாகவே இருந்தது…… ஒரு நொடி கூட சொத்தை அடையும் வழியாக சக்தியை அவன் நினைக்கவில்லை. சக்தியை அதற்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணமும் வரவேயில்லை.  

இரண்டு வருடங்கள் நிமிடங்களாக ஓட…… சக்தி பிளஸ் டூ படிப்பை முடித்து காலேஜ் போகும் நேரம்……… அவள் சென்னை காலேஜில் சேர சற்று நிம்மதியாக பெருமூச்சு விட்டான்.

இனி எதற்கும் சக்தி தன்னை தேடமாட்டாள் என்று. ஆம், இந்த இரண்டு வருடங்களிலேயே எதற்கும் சக்திக்கு கார்த்திக் வேண்டும். சின்ன சின்ன விஷயம் என்றாலும் அவள் கார்த்திக்கை கூப்பிடுவாள்.

இந்த இரண்டு வருடங்களாக கார்த்திக்கிற்கு தன் மனதோடு போராடவே நேரம் சரியாக இருந்தது. அங்கே சுற்றி இங்கே சுற்றி என்று எங்கே சுற்றினாலும் அவனின் எண்ணம் முழுவதும் சக்தியே.

விடலை பருவம், செய்ய வேண்டாம்….. நினைக்க வேண்டாம்….. என்று மனம் நினைக்க மனம் அவளிலேயே நின்றது.

ஒரு வழியாக அவள் படிப்பிற்கென்று விலகிப் போகவும் தான் அவன் மேலே என்ன செய்வது என்று யோசித்தான்.     

இந்த இரண்டு வருடங்களிலேயே வீரமணியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி இருந்தான். குவாரி வேலைகளும் சற்றுப் பிடிப்பட்டு இருந்தன.

அதன் பிறகு என்ன செய்வது என்று யோசித்தான். முதலில் தொழில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் பிறகு யோசிக்கலாம் என்று தள்ளிப் போட்டான்.   

இப்போது தான் அவனின் அம்மாவுடன் தொலைபேசியில் பேச ஆரம்பித்து இருந்தான்.

ஒரு மாதிரி வீரமணியும் தெய்வானையையும் பார்க்கும் போது கார்த்திக்கிற்கு பொறாமையாக இருக்கும்.

இப்படி ஒரு வாழ்கையை தன் அம்மாவும் அப்பாவும் வாழவில்லையே என்று. யார் மேல் தவறென்று சொல்லமுடியவில்லை. சில சமயம் அம்மாவின் மேல் கோபம் வந்தது. சில சமயம் தாத்தாவின் மேல் கோபம் வந்தது. சில சமயம் அப்பாவின் மேல் கோபம் வந்தது.   

தொழிலில் தோல்வி என்பது அவ்வளவு பெரிய விஷயமா என்ன? தன் அம்மாவை இப்படி ஒரு நிலையில் வைத்து விட்டாரே என்று.

சக்திக்கும்…. குடும்ப ஞாபகத்திற்கும் இடையில் தடுமாறினான்.

அதுவும் சில வருடங்களுக்கு பிறகு அவனின் அம்மாவை பார்க்கும் போது அவரின் தோற்றத்திலேயே முற்றிலுமாக வீழ்ந்து விட்டான்.

தலையெல்லாம் நரைத்து, கண்களில் ஜீவனில்லாமல்………. சுமித்ராவையும் வைஷ்ணவியையும் அவர் அழைத்துக்கொண்டு ஒரு மாதிரியான நிராதரவான தோற்றத்துடன் அவனைக் காண வந்த போது நொறுங்கித் தான் போனான்.

என்னவோ அவன் கண்ணில் பட்ட அவனின் அம்மாவின் வயதிற்குரிய பெண்களோடு அவனின் அம்மாவை அவன் மனம் ஒப்பிட்டது.

எல்லோரும் சந்தோஷமாக இருப்பது போலத் தான் தோன்றியது. என்றுமே அப்படி எந்த வகையிலும் அவன் அம்மா சந்தோஷமாக இருந்ததுப் போல தோன்றவில்லை. 

எல்லோருக்கும் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள தெரிவதில்லை.. இருக்கும் வாழ்க்கையை சில சமயம் தொலைத்தும் நிற்பர்.

அம்மா அவனை மனதளவில் அசைத்தார்.   

பிரபு அப்போது மருத்துவம் இரெண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்தான்.

“வீட்டுக்கு வந்துடு கார்த்திக்! நமக்கு எதுவும் வேண்டாம்! உங்கப்பா தான் என் பேச்சை கேட்கவேயில்லை……. நீயும் என் பேச்சை கேட்க மாட்டியா?”, என்று அவர் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழவும்…….. அவர் அழுவதைப் பார்த்து சுமித்ராவும் வைஷ்ணவியும் அழுதனர்.

“எப்பவும் எல்லா விஷயத்தையும் நான் தனியாவே பார்த்துக்கறேன். உங்கப்பா தான் எதுக்கும் வரலை…… நீயும் என்னை விட்டுடாத கார்த்திக்! வீட்டுக்கு வந்துடு!”, கண்களில் நீர் நிறைய அழைக்கவும்….. அவன் உருகிப் போனான்.

“அம்மா! நான் உங்க பேச்சை தான் கேட்பேன்! நான் உங்க பையன்! நீங்க சொல்றதை தான் கேட்பேன்! சீக்கிரம் உங்ககிட்ட வந்துடுவேன்! ப்ளீஸ் மா அழாதீங்க!”, என்று அவரை தேற்ற தான் முடிந்தது.  

கார்த்திக்கின் மனதிற்குள் எப்பொழுதும் போராட்டம்…….. தன் தந்தையின் முடிவு……. அம்மாவின் நிலைமை…. எல்லாமாக சேர்ந்து அவனுக்கு சக்தியின் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

அதன் பின் அவனுக்கு சக்தி மீது இருந்தது அக்கறையே. வருடங்கள் ஓட ஆரம்பிக்க வாசுகி குழுமமும் கார்த்திக்கின் வசமாக ஆரம்பித்தது.

ஒரு முறை பேச்சு வாக்கில் வீரமணி சந்திரசேகர் இந்த சொத்தை அவருக்கு கொடுத்தது பற்றியெல்லாம் சொன்னார். தந்தை சொன்னதும் அவர் சொன்னதும் ஒன்றே.

அப்போதும் அவனுக்கு தான் சந்திரசேகரின் மகன் என்று சொல்ல வரவில்லை. அப்போதைய நிலையில் வாசுகி குழுமம் லாபம் ஈட்டும் ஒரு தொழில்.

அதைக் கொடுங்கள் என்று கார்த்திக்கினால் கேட்க முடியாது. ஏனென்றால் அதை வாங்கும் அளவுக்கு பணம் கிடையாது.   

அதனால் கார்த்திக் இப்போது நியாய அநியாயங்களை விட்டு பணத்தை பெருக்குவதில் ஈடுபட ஆரம்பித்தான். குவாரி ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாக ஆக்கிக் கொண்டான்.

எந்த விதிமுறைகளையும் பின் பற்றவில்லை. அரசாங்கம் ஒதுக்கிய இடங்களை மட்டுமன்றி அவன் கண்களில் பட்ட இடங்களை எல்லாம் அவன் வசமாக்கினான். யாரும் அவனிடம் நெருங்கக் கூட முடியவில்லை.

நெருப்பாக சுட்டான். வெப்பம் யாரையும் நெருங்க விடவில்லை. 

ஏன் வீரமணி கூட அவனை வேடிக்கைத் தான் பார்த்தார். வேண்டாம் என்று சொல்லும் துணிவு அவருக்கும் இல்லை.      

அவன் ஒரு பக்கம் பணம் பெருக்குவதில் இருக்க…… சுமித்ராவின் மனதில் அவள் வளர வளர கார்த்திக் தன்னை திருமணம் செய்வதற்காக தான் வீட்டை விட்டுப் போனான் என்ற எண்ணம் வேரூன்ற ஆரம்பித்தது.

தாய் தந்தையை இழந்த பிறகு வாசுகியே எல்லாமுமாக ஆகிப்போனார் சுமித்ராவிற்கும் பிரபுவிற்கும்……. சுமித்ராவின் ஒவ்வொரு செய்கையும் கார்த்திக் வருவான் என்பது போலவே இருக்கும்.

அவள் மறைத்து எதுவும் செய்ய மாட்டாள், அவளின் பேச்சில் எப்போதும் கார்த்திக் இருப்பான்.

பிரபு தன் எம் பி பி எஸ் முடித்து மேல் படிப்பிற்காக வெளிநாடு போக….. போகும் முன்னே கார்த்திக்கை வந்து பார்த்தவன்……. அப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் சுமித்ராவின் மனதை தெளிவாக கார்த்திக்கிடம் சொன்னான்…….

வைஷ்ணவியும் சுமித்ராவும் கார்த்திக்கின் கண் பார்வையில் இருக்க வேண்டி பொருட்டே அவர்கள் இருவரையும் கிருஷ்ணகிரி காலேஜில் சேர்த்திருப்பதாக சொல்லி அங்கே விட்டுச் சென்றான்.

அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து சக்தி யு ஜி, பி ஜி என்று எல்லா படிப்பையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பி வர…..

வாசுகியும் தன் தந்தையுடன் கிருஷ்ணகிரிக்கே குடி பெயர்ந்தார்.

கார்த்திக்கின் மனதின் போராட்டங்கள் அதிகமாகின. அவனுக்கு சக்தி மேல் காதல் வேண்டாம் என்று அவனே உருப் போட்டுக் கொண்டான். சக்தியும் அந்த எண்ணத்தோடு அவனுடன் பழகவில்லை. ஆனாலும் சக்தி தன்னை எதற்கும் தேடுவாள் என்று உணர்ந்திருந்தான்.

இப்போது சொத்தை எப்படி வீரமணியிடம் இருந்து வாங்குவது. எல்லாம் அந்த தொழிலில் வந்த பணம் தான். எல்லாம் அவன் உழைப்பு தான்.

“உங்ககிட்ட தான் பணம் இருக்கே வெச்சிகோங்க…. நான் சந்திரசேகரோட பையன் எங்கப்பா குடுத்ததை திருப்பி குடுங்க”, என்று அவனால் கேட்க முடியவில்லை.

கேட்டால் அவர் குடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். அவன் சந்திரசேகரின் மகன் என்பதற்காக மட்டும் அல்ல…… அவன் கார்த்திக் என்பதற்காக கூட அவர் கொடுத்திருக்கலாம்.

அப்படி ஒரு பிரியம் அவன் மீது வீரமணிக்கு…… அவருக்கு மட்டுமல்ல தெய்வானைக்கும். எந்த அளவிற்கு என்றால், யார் எவன் என்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல் அனாதை என்ற போர்வையில் இருக்கும் போது கூட அவனுக்கு சக்தியை திருமணம் செய்து கொடுக்கலாமா என்று நினைத்தவர்.

அப்படி அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் கார்த்திக் இருந்தான்.

அவனால் நல்லத்தனமாக பேசி அவர்களிடம் சுமுகமாக விடைப் பெற முடியவில்லை.

காரணம் சக்தி……… சக்தி அவனை அந்த அளவிற்கு தேடினாள்….. ஏதோ.. எப்போதோ… எதற்கோ… கார்த்திக் சொன்ன பொய்யான அவன் அவளை விட சிறியவன் என்ற ஒன்றே சக்தியை வேறு யோசிக்க விடாமல் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

எப்போதும் ஒரு பயம் கார்த்திக்கிற்கு, எங்கே சக்தி தன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லி விடுவாளோ என்று.

சுமித்ராவைதான்  திருமணம் செய்து கொள்வேன் என்று தாத்தாவிடம் சொல்லி விட்டு வந்தது ஒரு புறம் இருந்தாலும், சுமித்ராவின் ஆசையை நிறை வேற்றுவதும் அவனின் கடமையாகவேப் பட்டது கார்த்திக்கிற்கு.

அந்த ஆசை சுமித்ராவிற்கு வரக் காரணம் அவன். அது மட்டுமல்ல அவனின் தந்தையின் இறப்புக்கு வந்த போது தான் அவளின் அம்மாவும் அப்பாவும் இறந்தனர்.

அது மட்டுமல்லாமல் அப்போது அந்தக் கால கட்டங்களில் சக்தியின் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்ததே இல்லை.

சுற்றிலும் தளைகள்…… எங்கே போனாலும் கார்த்திக்கிற்கு இறுக்கிப் பிடித்தன. எங்கே திரும்பினாலும் அவனின் அம்மாவை பார்க்க வேண்டியதே அவனின் முதன்மையான கடமையாகப் பட…… அவர் நிச்சயம் சுமித்ராவை தான் தனக்கு திருமணம் செய்து வைக்க இஷ்டபடுவார் என்பது புரிய….

வீரமணியிடம் பேசிப் பாப்போம் என்ற விஷயத்தையே விட்டான். ஏமாற்றி ஒரு துரோகத்தை செய்து……. அவர்களின் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக வெளியே வர முடிவெடுத்தான்.

எப்படியிருந்தாலும் என் தந்தை கொடுத்தது, என் தாத்தாவின் சொத்து, கொடுத்து விடுங்கள் என்று யாரிடமும் கெஞ்சுவது என்பது அவனால் உயிர் போனாலும் முடியாத ஒன்று.

எனக்கு தேவை…… நான் எடுத்துக்கொண்டேன் என்பதாக அவனின் செய்கை இருந்தது.

முடிவெடுத்து விட்டான்……. செயல்படுத்தி விட்டான்…..

காரண காரியங்கள் எல்லாம் பின்னுக்கு சென்றன. எதையும் யாரிடமும் சொல்லவில்லை….. எதையும் நியாயப்படுத்த  முயற்சிக்கவில்லை.   

ஆனால் சக்தியை அவன் வாழ்க்கையில் இருந்து அவனால் விலக்கி வைக்க முடியவில்லை. சக்தி வேண்டும் போலவும் இருந்தது……. அவளிடம் சென்று விடு மன்னித்து விடுவாள் என்றும் மனம் சொன்னது…..

ஆனால் அம்மாவையோ சுமித்ராவையோ அவனுக்கு மீற விருப்பமில்லை.

சக்தியிடம் இருந்து தள்ளி வந்துவிட்டாலும் அவள் மேல் இருந்த அவனின் கவனம் திரும்பவில்லை.

அதுவும், “அந்த வயதிலேயே நீ ஏன் வயதை குறைத்து கூறினாய்”, என்று அவள் மனமொடிந்து கேட்ட போது கூட அவனால் அதை விளக்க முடியவில்லை…..

என்ன சொல்லுவான், “நான் உன்னை அப்போதே விரும்பினேன்! நீ அண்ணா என்று கூப்பிட்டது பொறுக்காமல் சட்டென்று யோசிக்காமல் சொல்லிவிட்டேன்”, என்றா சொல்ல முடியும்.  

அது இன்னும் பெரிய துரோகம் ஆயிற்றே. ஒரு பொய்யை சொல்லி இத்தனை வருஷம் அதை நிஜம் போலவே நம்ப வைத்து……

கார்த்திக் சொத்தை ஏமாற்றினான் என்பது வேறு………. பெண்ணை ஏமாற்றினான் என்பது வேறு.

இப்போதும் கார்த்திக் ஏமாற்றினான் தான்……… அது நம்பிக்கை துரோகமாக தான் பார்க்கப்பட்டது.

காதலித்து ஏமாற்றியது போல தோன்றுவதில் அவனுக்கு விருப்பமில்லை.

மறைத்தே விட்டான். சக்தியின் மீதான அவன் காதலை மறைத்தே விட்டான்.

இத்தனை வருடங்களில் மேம் என்ற வார்த்தையை தவிர்த்து சக்தியின் பெயரை கூட அவன் வாய் உச்சரித்தது இல்லை.

ஆனால் சக்தியின் பார்வை மாறுபடும் என்று அவனுக்கு புரியவில்லை. ஏன் வயதை குறைத்துக் கூறினான்? என்ன நடந்துவிடும் என்றுக் கூறினான்? என்பதாக அவள் எண்ணம்.

சமவயதாக இருந்தால் அண்ணா என்ற பேச்சையும் தவிர்த்து விடலாம். சமவயதினர் காதலிப்பதும் திருமணம் செய்வதும் சகஜமே…… ஒரே கிளாசில் படிப்பவர்கள் காதலிப்பது இல்லையா……… அதைக் கொண்டே ஒரு பத்து நாள் மட்டும் குறைத்து கூறினான்.

அவன் ஒன்று நினைக்க அது வேறொன்றாக ஆகிப்போனது மட்டுமல்லாமல்…… அது வருடக்கணக்காக நீடித்து வாழ்க்கையில் ஒரு முக்கிய காரணமாகவும் ஆகி…..  சக்தியை மனதளவில் உடைத்து விட்டது.    

எதுவாகினும் சக்தி கார்த்திக்கிற்கு முக்கியம். அதில் எப்போதும் எந்த மாற்றமும் அவனுக்கு கிடையாது.     

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இருந்தான்.    

போராட்டம்…… போராட்டம்……..

எல்லாவற்றையும் தூக்கி தூர வைத்து விட்டு தந்தையின் பேரை தூக்கி நிறுத்த சினிமா உலகை நோக்கி தன் பயணத்தை திருப்பினான்.    

அவன் சினிமா உலகை  தன்னை திரும்பி பார்க்க வைக்க……..

சக்தி எதிலும் கவனத்தை திருப்பாமல் கல்லூரி அதன் முன்னேற்றம் என்று ஓட…..

இருவரும் கிட்ட தட்ட ஒரு ஆறுமாதம் சந்திக்கும் சந்தர்ப்பமோ சூழ்நிலையோ வரவே இல்லை. இதற்கிடையில் பிரபு படிப்பை முடித்து ஊருக்கு வரவும் வாசுகி கார்த்திக்- சுமித்ரா, பிரபு- வைஷ்ணவியின்  திருமண பேச்சை  எடுத்தார்.

Advertisement