Advertisement

அத்தியாயம் இரண்டு :

சக்தியின் அருகில் வந்த சிவா அவளைப் பார்த்து, “போகலாமா”, என்று கேட்டான்.

சக்திக்கு கார்த்திக்கின் முறைப்பே வேண்டிய செய்தியை சொல்ல…….. “நீங்க முன்ன போங்க சிவா, நாங்க வர்றோம்”, என்றாள்.  

“ஏன்? உங்களுக்காக  தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன், வாங்க போகலாம்!”, என்றான்.

“இல்லை, ஒரு கால் வரும். அட்டென்ட் பண்ணிட்டு வர்றோம். நீங்க போங்க! இது கொஞ்சம் கான்ஃபிடன்ஷியல்”, என்று கார்த்திக் இடை புகுந்து பதிலளித்தான்.

அவனை மீறி சக்தி வரமாட்டாள் என்று சிவாவிற்கு தெரியும். அதனால் வேறு வழியில்லாமல் சிவா மீட்டிங் ஹால் உள்ளே சென்றான்.

“எதுக்கு  நீங்க வர்றீங்கன்னு அவன் கிட்ட சொன்னீங்க?”,

“நம்ம தனியா இருக்கோமே, அவரும் தானே இங்க மீட்டிங் வருவார்ன்னு நினைச்சு தான் அவர்கிட்ட சொன்னேன்”.

சிவகுமாரும் அவர்களை போல அந்த பக்கம் ஒரு கிரானைட் குவாரி எடுத்து நடத்தும் ஓனரின் மகன். இவர்கள் அளவிற்கு இல்லை என்றாலும் அவர்களும் ஓரளவு வசதியானவர்கள் தான்.

இப்படி பிசினெஸ் மீட்டிங், அங்கே.. இங்கே… என்று பார்த்ததில் தற்போது சக்திக்கு சிவா நல்ல பழக்கம். சிவாவும் பழக இனிமையானவன். நல்ல மனிதன். அதனால் எப்போதும் சக்தி அவனிடம் நன்றாக பழகுவாள்.

இப்போது அவனும் மீட்டிங் வந்திருப்பானே என்று ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாள் தானும் வருவதாக. அவன் வெளியே நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை. 

சக்தி, “இப்போ அதனால என்ன?”, என்று பதில் கேள்வி கேட்க……..

“என்னவா? அவன் பாட்டுக்கு வெளிய நின்னு வாங்க போகலாம்….. உங்களுக்கு தான் வெயிட் பண்றேன்னு சொல்றான்…….”, என்றான் கடுப்பாக.

“ஏன் போனா என்ன?”, என்றாள் சக்தி மறுபடியும்.

“போனா என்னவா? அவனோட ஜோடி போட்டுட்டு போவீங்களா…… நமக்கு மரியாதை இல்லை……. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க…….”, என்று கார்த்திக் கோபமாக கேட்க……..

அவன் ஜோடி, அது, இது என்று சொன்னதும் எரிச்சலான சக்தி……… “நீயேன் கார்த்திக் எக்ஸ்ட்ரீம்க்கு திங்க் பண்ற! அவங்க ஜஸ்ட் என் ஃபிரன்ட்…….. உன்கூட கூட தான் போறேன்! ஜோடி போடறேன்னா சொல்வாங்க!”, என்றாள்.

இதை கேட்ட கார்த்திக்கிற்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது, “என்ன பேசறீங்க நீங்க மேம்! நானும் அவனும் ஒண்ணா! நான் உங்க கிட்ட வேலை பார்க்கிறேன்! உங்ககூட மட்டுமில்லை, உங்க அப்பாகூட கூட நான் தான் வருவேன்”,

“அதுவுமில்லாம நான் இன்னைக்கு ஒண்ணும் உங்கிட்ட வேலைக்கு வரலை! பதினேழு வயசுல உங்க அப்பாகிட்ட வேலைக்கு வந்தேன்! இங்க என்னை தெரியாதவங்க யாரும் கிடையாது…. என்னை இந்த மாதிரி விஷயத்துல தப்பா பேச ஆளே கிடையாது……”,

கார்த்திக்கை கோபப்படுத்திவிட்டோம் என்று புரிந்த சக்தி…… “ஷ்! கோபப்படாதா, நான் அந்த மீனிங்க்ள சொல்லலை”, என்று தணிந்தாள்.

“என்ன பெரிய பொடலங்கா மீனிங்! அவன் பாட்டுக்கு ஏஞ்சல்ன்னு கூப்பிட்டிட்டு வர்றான்! யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க?”,

“அவர் தப்பான ஆள் கிடையாது! அவர் ஜஸ்ட் என் ஃபிரன்ட்”,

“அவன் சரி தப்புன்னு நான் சொல்ல வரலை! அவன் நல்லவனாவே இருக்கட்டும்! இப்படி சத்தமா ஏஞ்சல்ன்னு கூப்பிட்டிட்டு வர்றானே…… நீங்க இன்னும் கல்யாணமாகாத பொண்ணு, யாராவது கேட்டா உங்களை பத்தி  என்ன நினைப்பாங்க?”,

“நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு இவன் இப்படி லூசு மாதிரி உங்க புருஷன் முன்னாடி ஏஞ்சல்ன்னு கூப்பிட்டு வெச்சா….. உங்க கல்யாண வாழ்க்கை என்ன ஆகும்?”,

“அப்படி என் மேல நம்பிக்கை இல்லாதவன் எனக்கு புருஷனா வரவேண்டாம்”, என்றாள் பட்டென்று.

“சும்மா சொல்ல வர்றதை புரிஞ்சிக்காம பேசக்கூடாது, இது நம்பிக்கையோட பேச்சு கிடையாது, உரிமையோட பேச்சு!”, என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வேறு ஒரு தொழில் அதிபர் வர……

“என்ன கார்த்திக் இங்க நிக்கறீங்க? உன் முதலாளி வரலை”,

“இல்லைங்க சார், அவர் துபாய் போயிருக்கார். மேடம் தான் மீட்டிங் அட்டென்ட் பண்றாங்க”, என்றான்.

“அடடே வாம்மா வா, போகலாம்!”, என்றார்.

“போங்க!”, என்று அவளைக் கூட்டிக்கொண்டு அவனும் நடந்தான்.

“உன் முதலாளி குடுத்து வெச்சவன்பா! உன்னை மாதிரி ஒரு ஆள் கூட இருக்கவும் தைரியமா தொழிலை விட்டுட்டு வருஷத்துல ஆறு மாசம் தொழிலை பார்க்கிறேன்னு டூர் போயிடறான்”, என்று அவர் பெருமூச்சு விட………. அதற்குள் அவருடன் யாரோ பேச இவர்கள் முன் சென்றனர்.

“இவரோட மட்டும் நான் போகலாமா”, என்றாள் சக்தி.

“போகலாம், எனக்கு தெரியும்! நீங்க யாரோட போகலாம் போகக்கூடாதுன்னு”, என்றான்.

மேலும் வார்த்தை வளர்க்காமல் சக்தி முன்னே நடக்க…… சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.             

அங்கே சென்றவள் எங்கே அமர்வது என்பது போல பார்வையை சுழற்ற, “அங்கே போய் சிவா பக்கத்துல உட்க்காருங்க”, என்றான்.

“இப்போ ஜோடி சேர்க்க மாட்டங்களா?”,

“மாட்டாங்க உள்ள வரும்போது அது எல்லார் கண்ணையும் உறுத்தும்னு தான் சொன்னேன். அதுவுமில்லாம நானும் கூட இருக்கேன் வாங்க!”, என்று அழைத்து போனவன் அவளை சிவாவின் அருகில் அமரவைத்து அதே வரிசையில் அவளுக்கு சமமாய் அமராமல் பின்புறம் அமர்ந்தான்.

“என்ன ஆச்சு? உங்க பாடிகார்ட் ரொம்ப கோபமா இருக்காங்க போல!”, என்றான் சிவா.

அவன் பேசியது என்னவோ மெதுவாக தான், ஆனால் நம் கார்த்திக்கிற்கு பாம்பு காது நன்றாக கேட்டது.

“இப்போதான் சமாளிச்சிட்டு வந்திருக்கேன், விடுங்க!”,

“ஏன் என்ன கோபம்?”,

“நீங்க ஏஞ்சல்ன்னு கூப்பிட்டது ரொம்ப கோபம்!”,

“சாரி! அது தானா வந்துடுச்சு, நிஜமாவே நீ ஏஞ்சல் மாதிரி இருக்கீங்கல்ல, அதான்!”, என்றான். 

இப்போது சக்தி முகத்தில் சற்று அதிருப்தியை காட்ட……. “ஹேய், ஐ அம் ரியல்லி சாரி! இட்ஸ் வாஸ் ஜஸ்ட் எ  காம்ப்ளிமென்ட் ! நத்திங் மோர் தேன் தட்!”, என்றான்.

“பதிலுக்கு நானும் ஒரு காம்ப்ளிமென்ட் குடுப்பேன் பரவாயில்லையா!”, என்றாள் சக்தி.

“ஒஹ்! யூ ஆர் மோஸ்ட் வெல்கம்!”, என்று சிவா சொல்ல…….

“நீங்க என்னை ஏஞ்சல்ன்னு கூப்பிட்டா…… நான் உங்களை அண்ணான்னு கூப்பிடுவேன்!”, என்றாள்.

இப்போது சிவாவின் முகத்தில் நல்ல புன்னகை ஒன்று விரிந்தது. எதற்கும் சிரிக்காத கார்த்திக்கின் முகம் கூட சக்தி பிரச்சனை வாராமல் பிரச்சனையை தீர்க்கும் முறையை பார்த்து முகம் இளக்கம் காட்டியது.

“வேண்டாம்! வேண்டாம்!”, என்று சிநேகமாக சொன்ன சிவா…….

“இவ்வளவு அழகான பொண்ணு, என்னை அண்ணான்னு சொல்றதா!”, என்று போலியாக அதிர்ச்சி காட்டியவன்……..

“யாரது ஏஞ்செல் இங்க? இங்க யாருமே ஏஞ்செல் இல்லையே!”, என்றான் சுற்றும் முற்றும் விளையாட்டு போல பார்த்து….

“ம்! அது!”, என்றாள் சக்தி…….

இன்னும் மீட்டிங் தொடங்காததால் அங்காங்கே சல சல வென்று பேசிக்கொண்டு இருந்தனர்.

“இரு, உனக்கு ஒண்ணு காட்டறேன்!”, என்ற சிவா அவனின் மொபைலின் போட்டோ கேலரியை திறந்தான்.

அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டினான். “பார்த்துக்கோங்க சக்தி! இவ தான் என் காதலி!”, என்றான்.

ஆவலாக அதை வாங்கிய சக்தி…….. “அது என்ன காதலி? நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு சொல்லுங்க!”, என்றாள்.

“இன்னும் கல்யாண பேச்சை ஆரம்பிக்கவே இல்லையே! இப்போதைக்கு அவ என் காதலி மட்டும் தான்!”,

“அவகிட்டயாவது பிடிச்சிருக்குன்னு சொன்னீங்களா இல்லையா?”, என்றாள்.

“இன்னும் இல்லை”, என்றான் பாவம் போல….

“அப்போ எதுக்கு போட்டோ வெச்சிருக்கீங்க!”, என்று அவனிடம் சண்டைக்கு போனாள் சக்தி.

சிவா அயர்ந்து பார்க்க…….. “அந்த பொண்ணு உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு முன்னாடியே போட்டோ வெச்சிருக்கிறது ரொம்ப தப்பு! டெலிட் பண்ணுங்க!”, என்றாள் சீரியஸாக.

“இதை அவ காலேஜ் போகும் போது ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தேன் சக்தி!”, என்றான்.

“அப்போ தெரியாம எடுத்திருக்கீங்க”, என்றவள்…….

“முதல்ல அதை டெலிட் பண்ணுங்க”, என்றாள் இன்னும் சீரியஸாக.

சிவா மனமேயில்லாமல் பார்க்கவும்………. “எனக்கு இந்த காதல், அது, இது, இதுலயெல்லாம் நம்பிக்கை இல்லை”, என்றவள்……..

“இருந்தாலும் உங்களுக்காக சொல்றேன், அப்படி நீங்க இந்த பொண்ணை அவ்வளவு இஷ்டமா காதலிச்சீங்கன்னா அவ முகமே உங்க மனசுல இருக்குமே! போட்டோ எதுக்கு? நிச்சயம் உங்க காதல் கை கூடனும்ங்கறது என்னோட விருப்பம்! ஒரு வேளை நூத்துல ஒரு பங்கா இது நிறைவேறாம போனிச்சின்னா, அந்த பொண்ணுக்கு எவ்வளவு சங்கடம்”,

“உன்னை தவிர யாருக்கும் தெரியாது சக்தி!”, என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான் சிவா.

“தெரியும் தெரியலைன்றது வேற. சீக்கிரம் சொல்லி சம்மதம் வாங்கி போட்டோ வெச்சிகோங்க, இப்போ டெலிட் பண்ணுங்க!”, என்றாள்.

அதுதான் சக்தி……… அவள் மனதிற்கு சரியில்லையென்று தோன்றினாள் அதை சரி செய்வதற்காக விடாமல் போராடுவாள்.

இவர்களின் பேச்சை எல்லாம் அமைதியாக கேட்டுகொண்டிருந்த கார்த்திக்….. சக்தியின் புறம் கையை நீட்ட அவள் சிவாவின் மொபைலை கொடுத்தாள். கார்த்திக் அந்த போட்டோ வை பார்த்தான். ஆனால் அவன் என்ன நினைக்கிறான் என்று முகத்தை பார்த்து ஒன்றும் தெரியவில்லை. அவன் தான் கறுப்பு  கண்ணாடி கண்களில் போட்டு இருக்கிறானே…..

கார்த்திக் சக்தியிடம் அந்த மொபைலை திரும்ப நீட்டியவன்……. “உங்க ஃபிரன்ட இதை டெலிட் பண்ண சொல்லுங்க”, என்றான்.

மறைமுகமாக சக்தியின் நண்பனாக சிவாவை ஏற்றுக்கொண்டான் என்ற செய்தி அதில் ஒளிந்து இருந்தது.

சிவா அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை, சக்தி சொல்வது அவனுக்கும் சரியென்றே பட்டதால் அவன் சோகமாக அதை டெலிட் செய்தான்.

புன்னகைத்த சக்தி…….. “டோன்ட் வொர்ரி! பொண்ணுக்கு மட்டும் உங்களை பிடிச்சிருக்கட்டும், என்ன தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சிடலாம்”.

“நான் என்ன செய்வேன்னு நினைக்காதீங்க…… உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் கார்த்திக் செய்வான். இட்ஸ் மை வொர்ட்ஸ். எங்க கார்த்திக்னால முடியாதது எதுவுமே இல்லை”, என்றாள் ஒரு நல்ல தோழியாக.

“மேம்!”, என்று கார்த்திக் அதட்ட……

“நீ செய்யற கார்த்திக்”, என்றாள்.

சிவா முன்னிலையில் எதுவும் பேச விரும்பாமல்….. கார்த்திக் அவளை பயங்கரமாக முறைத்தான்…… ஆனால் கறுப்பு கண்ணாடி போட்டிருந்ததால் சக்திக்கோ சிவாவிற்கோ அது தெரியவில்லை.

சிவா சக்தியிடம், “சொன்னதுக்கு தேங்க்ஸ் சக்தி! அதுக்கு அவசியமிருக்காதுன்னு நினைக்கிறேன்! இருந்தா கட்டாயம் உதவி கேட்கிறேன்”, என்றான்.  

அதற்குள் மீட்டிங் ஆரம்பிக்க போக……. “உங்க முதாலாளி வரலையா!”, என்று கார்த்திக்கிடம் வந்து கேட்டனர்.

“அவர் வரலை!”, என்று அவன் சொன்னதும்………

“அப்போ நம்ம பொண்ணை மேடையில உட்கார வைக்கலாமா”, என்று அவர்கள் கேட்க…..

சக்தியை ஒரு பார்வை பார்த்தான் கார்த்திக்………. அதில் வேண்டாம் என்ற செய்தி இருக்கவும்……… “இல்லை, வேண்டாம்!”, என்று வந்தவரிடம் சொன்னான்.

“நீங்க வர்றீங்களா!”, என்று அவர் கேட்க………

“இல்லை வேண்டாம்!”, என்றான். எல்லோரும் பெரிய ஆட்கள் தான் என்றாலும் கார்த்திக்கிடம் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. வீரமணியை பார்த்து கூட அவர்களுக்கு அந்த பயமில்லை என்பது தான் உண்மை.

அதன் பிறகே அவர்கள் மீட்டிங்கை ஆரம்பித்தனர்.  

ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது மீட்டிங். அதில் கடைசியாக பேச வந்தவர், “கிரானைட் வெட்டி எடுப்பதில் அரசாங்கத்தின் விதிமுறைகளை சொன்னவர்….. முடிந்த வரையில் நாம் அதை பின்பற்ற வேண்டும்….. அதை மீறி செயல்படுவது என்பது சரியானதல்ல……”,

“இங்கே பலரும் அந்த விதிமுறைகளை மீறி செயல் பட்டுக்கொண்டிருந்தாலும்……. மிக மிக அதிகமாக மீறி……. தொழில் செய்கிற அனைவருக்கும் ஓரிருவர் தொல்லை கொடுக்கின்றனர். நாம் அதை வன்மையாக கண்டிக்க வேண்டும், இப்படி செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டும்…….”,

“மீறி செய்தால் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கடுமையாக பேசினார்.

சக்தி யாரை இவர் இப்படி கடுமையாக தாக்கி பேசுகிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டி சிவாவிடம், “அவர் யாரை பத்தி சொல்லிட்டு இருக்கார்?”, என்று கேட்டாள்.

சிவா அதற்கு பதில் சொல்லும் முன்னே கார்த்திக், “அவரை கேட்டா? அவருக்கு என்ன தெரியும்”, என்றான்.

“அதில் நீ எதுவும் சொல்லாதே”, என்ற மறைமுக எச்சரிக்கை இருந்தது. கார்த்திக் அப்படி எதுவும் குறிப்பு கொடுத்து இருக்காவிட்டாலும் சிவா எதுவும் சொல்லியிருக்க மாட்டான்…….. ஏனென்றால் அங்கே மீட்டிங்கில் விதிகளை மிக அதிகம் மீறுகிறார்கள் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருந்தது சக்தியினுடைய வாசுகி குழுமத்தை பற்றி தான்.

“எனக்கு தெரியலை”, என்றான் சிவா.

சக்தி கார்த்திக்கை திரும்பி பார்த்தவள், அவனை நோக்கி தலையசைக்க…….. “என்ன?”, என்பது போல கார்த்திக் அவளருகில் தலையை குனிய………

“உன் காதெல்லாம் இங்கயே வெச்சிருப்பியா! உன் வேலையைப் பார்!”, என்று வார்த்தைகளை அவனுக்கு மட்டும் கேட்குமாறு கடித்து துப்பினாள்.

தலை நிமிர்ந்து உட்கார்ந்தவன், பதில் எதுவும் சொல்லாமல் அசால்டாக தோளை  மட்டும் குலுக்கினான்.

அதன் பிறகும் அந்த மைக்கை பிடித்தவர் முறைகேடாக கிரானைட் வெட்டுவதை பற்றியே பேசிக்கொண்டிருக்க….

அவனுக்கு கோபம் வந்துவிட்டதோ என்று அங்கங்கே ஓரிருவர் கார்த்திக்கை வேறு திரும்ப பார்த்தனர். அவனின் கறுப்புக்கண்ணாடி வெளி உலகத்துக்கு எதையும் காட்டவில்லை.

ஒரு வழியாக மீட்டிங் முடிய………. அங்கேயே பஃபே முறையில் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…….

சக்தி, “நாம வீட்டுக்கே போயிடலாமே!”, என்றாள் கார்த்திக்கை பார்த்து……

“இல்லை சாப்பிட்டிட்டு போகலாம்”, என்றான் அவனுக்கு ஒரு வேலை இருந்ததால்.

சக்தி தயங்க…… “அதான் உங்க ஃபிரன்ட் உங்களுக்கு கம்பெனி குடுப்பாறே”, என்றான் சமாதானமாக…..

“கூட உள்ள வந்தா தப்பு……. சேர்ந்து சாப்பிட்டா தப்பு இல்லையா”, என்றாள்.

“உள்ள என்டர் ஆகும்போது எல்லோரும் பார்ப்பாங்க! இப்பவும் பார்ப்பாங்க! அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு!”, என்றான்.

“என்னவோ போ! என்னை டார்ச்சர் பண்ற நீ!”, என்றாள்.

“சாப்பிடுங்க மேம்!”, என்றவன்……… அவளை ஓரமாக நிற்க வைத்து அவளுக்கு வேண்டியதை அவனே வாங்கி வந்து கொடுத்தான்.

சிவாவிற்கு சக்தியின் அருகில் போவதா வேண்டாமா என்று குழப்பம். உண்மையில் அவனுக்கு கார்த்திக்கை பார்த்து சற்று பயம் அதனால் தயங்கினான்.

அதிசயமாக அவனருகில் வந்த கார்த்திக், “எங்க மேம்மோட கொஞ்ச நேரம் இருங்களேன். ஒரு அஞ்சு நிமிஷம், நான் வந்துடறேன், முடிஞ்சா அவங்களை அங்கேயே நிறுத்தி வெச்சிகோங்க………. நகர விடாதீங்க”, என்றான்.

சிவா, “சரி”, என்று சக்தியிடம் போய் நின்று பேச்சு கொடுத்து கொண்டே சாப்பிட……

அந்த மைக்கை பிடித்து பேசியவர் முன் போய் நின்றான்.     

“உங்க கையை பிடிச்சு நாங்க நிறுத்தினோமா”, என்றான்.

அவர் புரியாமல் பார்க்க……. “அதிகமா கிரானைட் வெட்டி எடுக்க விடாம உங்க  கையை பிடிச்சு நாங்க நிறுத்தினோமா…….. எங்களுக்கு பிரச்சனை வந்தா நாங்க பார்த்துக்கறோம், நீங்க ஏன் அதை மைக் பிடிச்சு பேசறீங்க”,

அவன் கேட்ட விதத்தில் பேசியவருக்கு உள்ளுக்குள் பயம் பரவியது. இருந்தாலும் வெளிக்காட்டாமல் நின்றார். சிலர் அவர்கள் அருகில் வந்து பேச்சை கவனித்தனர்.   

“உங்களுக்கு  திறமையிருந்தா நீங்களும் எடுத்துக்கோங்க! அதைவிட்டுட்டு கட்டுப்பாடு போடனும் வெங்காயத்தை போடனும்னு பேசினீங்க……..”, என்று அவன் அடிக்குரலில் சீறினான்.

“கண்டிப்பா நான் பண்றது சட்டத்தை மீறி தான், ஆனா பூமி தாய்க்கு பாதிப்பு வராத வகையில தான்……”

“அதென்ன ஓரிருவர்ன்னு மறைமுகமா பேசினீங்க… நல்ல தைரியமா சொல்லுங்க….. வாசுகி குழுமம்னு கூட சொல்லாதீங்க, கார்த்திகேயன்னு எம் பேர இனிமே சொல்லுங்க…….. எவன் என்னத்தை புடுங்கரான்னு நான் பார்க்கிறேன்!”, என்றான்.

“விடு தம்பி! விடப்பா!”, என்று ஓரிருவர் அவனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

“ஏம்பா அவங்களோட உனக்கு பிரச்சனை……. அவன் அநியாயம்  செஞ்சா அவன் அதனோட விளைவுகளை பார்த்துக்குறான்…… அவனை புடிச்சா அவன் ஜெயிலுக்கு போறான், கோர்ட்டு கேசுன்னு அலையறான்……..உனக்கென்ன……..”,

“உனக்கு அவன் மாதிரி சம்பாதிக்க முடியலைன்னு பொறாமையா….. அவன் மாதிரி ரிஸ்க் எடு நீயும் சம்பாரி….. ஆனா அவனுக்கு தப்பிக்கற அளவுக்கு திறமையிருக்குப்பா நீ மாட்டிக்காத”, என்றனர் அந்த மைக் ஆசாமியிடம்.

“ஏன்? உங்களுக்கெல்லாம் அவனை பார்த்து பயமா”, என்று மைக் ஆசாமி எகிற…..

“பயமோ? என்னவோ? அவன் இருக்கறதுனால எல்லா அரசாங்க அதிகாரியையும் அரசியல்வாதியையும் அவன் பார்த்துக்கறான்…… அவனால நம்மளும் அதுல குளிர் காயறோம்பா……. விட்டுட்டு போவியா……. என்னவோ உன் நேரம் நல்லா இருகறதனால அவன் பேசறதோட நிறுத்திகிட்டான்”, என்றனர்.

“எதுக்கு அநியாயமா கிரானைட் வெட்டி எடுக்கனும், அப்புறம் அரசியல்வாதியையும் அரசாங்க அதிகாரிகளையும் சமாளிக்கனும்”, என்று மைக் ஆசாமி கேட்க…….

“நாம நியாயமா தொழில் செஞ்சாலும் இவங்களை எல்லாம் கவனிச்சுதான் ஆகனும். அப்போ மட்டும் இவங்க நமக்கு தொல்லை குடுக்க மாட்டாங்கன்னு யார் சொன்னா?”, என்று அவர் கேட்க………

அதில் இருந்த உண்மை புரிந்தவராக அந்த மைக் ஆசாமி அமைதியானார்.

கார்த்திக் பேச்சோடு நிறுத்திய ரகசியம் அவனுக்கு மட்டுமே தெரியும். அது சக்தி கூட இருப்பதினால். சக்திக்கு இதெல்லாம் தெரிவதில் கார்த்திக்கிற்கு விருப்பமில்லை. அவள் நீதி, நேர்மை, நியாயம் என்று அதையும் இதையும் பேச மட்டும் செய்யமாட்டாள்… அதனை சரிபடுத்தும் வரை ஓயவும் மாட்டாள் அவனுக்கு தெரியும்.

மற்றவர்களிடம் எப்படியோ இவனை உண்டு இல்லை என்றாக்கி விடுவாள்.

இந்த மைக் ஆசாமியிடம் அப்புறம் தனியாக கூட பேசியிருக்கலாம்…….. ஆனால் அவன் எல்லோர் முன்னிலையிலும் பேசியதால் எல்லோர் முன்னிலையிலும் பதில் குடுக்க வேண்டியே இந்த மிரட்டல். அப்போது தான் மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும் என்று அவனுக்கு தெரியும்.

பிறகு சக்தியிருக்கும் இடம் நோக்கி வந்தவன்…. அவள் சாப்பிடும் வரை காத்திருக்க போக…….

“நீ சாப்பிடலை?”, என்றாள் சக்தி.

“இல்லை! பசியில்லை!”, என்றான்.

“போ! கொஞ்சமாவவது சாப்பிடு!”, என்று சற்று அதட்டலாக சக்தி சொல்லவும்……

அவன் சாப்பாட்டை  வாங்கப் போக…….

சிவா சக்தியை பார்த்து, “எனக்கு உங்க பாடி கார்ட் பார்த்தா பயம், நீங்க என்னடான்னா அவரை மிரட்றீங்க…… யப்பா! அதுவும் அவர் வேற அந்த கூலிங் க்ளாஸ் போட்டுக்கறாங்க, நம்மளை பார்க்கறாங்களா? வேற யாரையாவது பார்க்கறாங்களா? நல்லா பார்க்கறாங்களா? முறைச்சு பார்க்கறாங்களா? ஒண்ணும் தெரிய மாட்டேங்குது!”, என்றான்.

“சில விஷயத்துக்கு தான் அமைதியா இருப்பான்! சில விஷயம் எல்லாம் சொல்லவே வேண்டாம், அவன் திட்டுற திட்டுல நான் பதில் பேசவே மாட்டேன்”, என்றாள்.

“எல்லாரும் அவருக்கு பயப்படறாங்க…… நீங்க அசால்டா வா போன்னு கூப்பிடறீங்க……. உங்ககிட்ட வேலை செய்யற டிரைவரை கூட வாங்க போங்கன்னு கூப்பிடறீங்க! அப்புறம் இவரை மட்டும் ஏன்?”, என்று சிவா கேட்க……

“அவன் என்னை விட சின்னவன்”, என்றாள் சக்தி…..

விழித்த சிவா…… “என்ன சின்னவங்களா? பார்த்தா அப்படி தெரியலையே!”,

“பார்க்க தான் அப்படி பெரிய ஆள் மாதிரி இருக்கான், என் வயசு தான்….. என்னைவிட பத்து நாள் சின்னவன்”, என்று அவள் சொல்ல……

“யப்பா! பத்து நாளுக்கு தான் இந்த பில்ட் அப்பா!”,

“பத்து நாளோ…….. பத்து நிமிஷமோ……. சின்னவன் சின்னவன் தானே!”, என்று அவள் சொல்ல…….

“ஆமாம்! ஆமாம்!”, என்று சிரிப்போடு தலையாட்டினான்.

வீட்டிற்கு திரும்பி போகும் போது கார்த்திக்கிடம் நன்றாக வாங்கி கட்டினாள் சக்தி. “உங்களை யாரு இப்படி எல்லாம் கார்த்திக் பார்த்துக்குவான்……. இட்ஸ் மை வொர்ட்ஸ்ன்னு சொல்ல சொன்னா?”,

“எல்லா விஷயத்தை நம்மளால பார்க்க முடியாது! நம்மை மீறியும் விஷயங்கள் இருக்கும்! நானெல்லாம் எதையும் பார்க்க மாட்டேன்!”, என்றான்.

“என் வார்த்தைக்காக நீ இதைக்கூட செய்ய மாட்டியா?”, என்று சக்தி கேட்க…

“செய்ய மாட்டேன்! முதல்ல இந்த மாதிரி எமோஷனல் ப்ளாக்மெயில் செய்யறதை நிறுத்துங்க!”, என்றான்.

சக்தி அதன் பிறகு எதுவும் பேசவில்லை, ஜன்னலை பார்த்து முகத்தை திருப்பியவள் தான்………

வீடு வந்த பிறகும் அவனிடம் பேசாமல் இறங்கி உள்ளே சென்றாள்.

Advertisement