Advertisement

அத்தியாயம் பத்தொன்பது :

சோலைமல ரொளியோ – உனது                                                                                                                     சுந்தர புன்னகைதான் ?                                                                                              நீலக்கடலைளையே – உனது                                                                                                                              நெஞ்சி லலைகலடி!                                                                                                                                               கோலக்குயி லோசை – உனது                                                                                                                     குரலி னிமையடீ!                                                                                                                                                              வாலைக் குமரியடீ – கண்ணம்மா!                                                                                                                        மருவக் காதல்கொண்டேன்.                                                                                                                

                                    ( பாரதி )

காட்சி பதினான்கு :

வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திக் சென்றது கிருஷ்ணகிரி. கையில் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் வைத்திருந்தான். நான்கைந்து செட் உடைகள், அவனை சாதாரண தோற்றத்தில் காட்டக்கூடிய உடைகளை வைத்திருந்தான். பணம் எப்படியும் சாப்பாட்டிற்கு ஒரு இரண்டு மாதத்திற்கு வரும் என்று தெரியும்.

அதன் பிறகு ???

அன்றாட ஜீவணத்தை பார்ப்பது அவன் நோக்கம் அல்லவே.

என்ன செய்வது என்று தெரியவில்லை. எந்த வகையில் அவன் சம்பாதித்து குவாரியை வாங்குவது. பணம் எப்படி சம்பாதிப்பது என்பது ஒரு புறம். அதை விடவும் அப்படி சம்பாதித்தாலும் வீரமணி அந்த உரிமத்தை தருவாரா என்பது ஒரு புறம்.  

அவனிடம் இருந்தது தைரியம் மட்டுமே! என்னால் முடியும் என்ற தைரியம்!

முதலில் வீரமணியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை நெருங்க முடிவு செய்தான். 

வீரமணியின் குவாரி ஊரை விட்டு தள்ளி இருந்தது. அங்கே போய் திடீரென்று எப்படி வேலை கேட்பது என்று தெரியவில்லை.

எப்படியோ அவரின் வீட்டை கண்டுபிடித்து இரண்டு மூன்று நாட்கள் அவரின் வீட்டுக்கருகில் போய் அடிக்கடி என்ன நடக்கிறது யார் யார் வீட்டில் இருக்கிறார் என்பது போல வேவு பார்த்தான்.

யாரையும் பார்க்க முடியவில்லை. ஏன் வீரமணியை கூட பார்க்க முடியவில்லை. 

அவரின் வீட்டின் வேலைக்காரன் சற்று பக்கத்தில் இருக்கும் மளிகை கடைக்கு அடிக்கடி சாமன் வாங்க வருவதை பார்த்தான். இவ்வளவு பெரிய வீட்டில் எப்படி இப்படி சில்லரையாக சாமான் வாங்குகிறார்கள் என்று அவன் யோசிக்க…. அவனுக்கு புரிந்தது…… அவன் சாமான் வாங்கும் சாக்கில் தம் அடிக்க வருகிறான் என்று.

வேண்டுமென்றே ஒரு நூறு ரூபாயை கீழே போட்டு, “அண்ணா உங்க நூறு ரூபாய் கீழ விழுந்திருக்கு!”, என்று கார்த்திக் அவன் வேலையாளிடம் எடுத்து கொடுக்க..

“என்னோடதா…. இல்லையே! என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே!”, என்றான் அந்த வேலையாள்.

“பரவாயில்லை வெச்சிகோங்க”, என்று அந்த வேலையாளிடம் பேச ஆரம்பித்தான். சிறிது நேரத்திலேயே வேலையாள் சற்று வெகுளி என்பதை புரிந்து கொண்டவன், அவனை ஸ்நேகிதமாக்க பேச தொடங்கினான்.

அவனும் இவனுடன் ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு செல்ல……. இப்படியே ஒரு மூன்று நாள்  அவனுடன் அவ்வப்போது எதிர்பாராமல் அங்கே பக்கத்தில் வேலை செய்பவனை போல பேசி நன்கு ஸ்நேகிதமாக்கி கொண்டான் கார்த்திக்.

பெரிய வீட்டு பையனை போல இருக்கும் கார்த்திக் தன்னை மதித்து பேசுவது அந்த வேலையாளுக்கு அவ்வளவு பிடித்து இருந்தது.

அதுவும் கார்த்திக்கின் ஆங்கிலம் கலந்த தமிழ் அவனை ஒரு பெரிய பணக்கார வீட்டு பிள்ளையாகவே காட்டும்.

இதற்குள் ஓரளவு அந்த வேலையாள் மூலமாக வீட்டினரை பற்றி ஓரளவு விஷயங்கள் தெரிந்து கொண்டிருந்தான் கார்த்திக்.

வீட்டில் வீரமணி, அவரின் மனைவி, ஒரு மகள் என்பது புரிந்தது. மகள் பத்தாவது பரீட்ச்சை எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பது புரிந்தது. தற்போது யாரும் வீட்டில் இல்லை நான்கு நாட்கள் மைசூர் டூர் சென்று இருப்பது தெரிந்தது.

எப்படியாவது அவர்கள் வீட்டில் ஒரு வேலை வாங்கி உள்ளே நுழைந்து விட வேண்டும் என்ற யோசனையோடே அவனின் அன்றைய இரவு கழிந்தது. ஒரு ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தான். 

காலை டீ குடிக்க அவன் விடுதியை விட்டு நடந்து வந்துகொண்டிருந்த போது….. ஒரு சிறுபெண் அவளுடைய ஸ்கூட்டியில் அவனை கடந்து சென்றாள். அவள் வெகுதூரத்தில் இருந்து அவன் பார்வை வட்டத்தில் தான் எதிரில் வண்டி ஒட்டி கொண்டு வந்தாள். ஆனால் ஏதோ யோசனையில் இருந்ததால் கார்த்திக் அவளை கவனிக்கவில்லை.  

அவனை கடக்கும் சமயம் தான் பார்த்தான். அந்த முகம் அவனை கவர்ந்தது. ஆனால் நிமிடத்தில் அவனை கடந்து விட்டாள். இன்னும் சற்று முன்பாக அவளைப் பார்த்திருந்தால் நன்றாக பார்த்திருக்கலாமோ என்று கார்த்திக்கிற்கு தோன்றியது.   

பொதுவாகக் கூட கார்த்திக் இது வரை எந்தப் பெண்ணையும் திரும்பிப் பார்த்தது இல்லை. அவனுடைய வயதுக்கு உண்டான எந்த செய்கைகளும்…….. பெண்களின் மீதான சிறு ஆர்வம் கூட அவனிடம் இருந்தது இல்லை.

முதன் முதலாக ஒரு இளம்பெண்ணின் முகம் அவனை கவர்ந்தது.     

அவனையறியாமல் திரும்பித் திரும்பி பார்த்தான். அவள் சென்று விட்டாள். டீ குடித்து திரும்பி வரும்போது இப்போது எதிரில் நீளமாக இருந்த ரோட்டைப் பார்த்துக் கொண்டே வந்தான்.

 ஒரு வேலை திரும்ப வருவாளோ என்ற ஒரு சிறு நப்பாசை. பார்வை ரோடை அளக்க அவனை ஏமாற்றாமல் அந்த இளம்பெண் வந்தாள். இப்போது நன்றாக பார்த்தான். இளம்பெண் என்றும் சொல்ல முடியாது சிறுமி என்றும் சொல்ல முடியாது… கண்டிப்பாக ஸ்கூல் படிக்கும் பெண் தான்.

அவன் விடாமல் அவளைப் பார்த்துகொண்டே நடக்க……… சற்று தூரத்தில் இருந்து அவள் வருவதை பார்த்துக்கொண்டே வந்தான்.

அவள் மிகவும் மெதுவாக தான் ஸ்கூட்டி ஒட்டிக் கொண்டு வந்தாள். அதற்குள் கிளை சாலையில் இருந்து ஒரு சிறுவன் சைக்கிளில் வேகமாக வந்தான். ஸ்கூட்டியில் வந்தவள் அவனுடன் மோதினாள். மோதலை தவிர்த்திருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் தவறு அந்த சிறுவன் மீது வேகமாக குறுக்காக வந்துவிட்டான்.

ஸ்கூட்டி மோதியது தான் போதும் அந்த பையன் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்டு சற்று தள்ளி விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்கவேயில்லை.

இவளும் வண்டியோடு விழுந்தவள், சட்டென்று எழுந்து நின்று கொண்டாள்.

அப்போது சாலையில் ஆள் அரவம் கம்மியாக இருந்ததால் ஒன்றிரண்டு பேரே பார்த்தனர்.

வேகமாக அவர்கள் அருகில் செல்ல கார்த்திக்கும் வேகமாக அந்த இடத்தை அடைந்தான். தடுமாறி எழுந்து அவள் நின்றுக் கொண்டிருந்தாள்…..

விழுந்த அந்த சிறுவனையே பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த சிறுவன் எழவேயில்லை. எல்லோர் கவனமும் சிறுவன் மேலேயே இருந்தது.

அவளின் பயந்த முகத்தை பார்த்த கார்த்திக் வண்டியை தூக்கி நிறுத்தி பிடித்துக் கொண்டவன்…… “you just get out of this place immediately before others see you”, என்றான்.

கான்வென்ட் படிப்பு, ஆங்கிலம் அழைப்பில்லாமல் அவனுடைய வாயில் நுழைந்து கொள்ளும். அவள் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றாள்.

அதற்குள் ஆட்களின் பார்வை இவர்களின் புறம் திரும்ப, “சீக்கிரம் போ!”, என்றான். வண்டி கார்த்திக் கையில் இருந்ததால் அவர்களின் பார்வை கார்த்திக் புறம் திரும்பியது. 

அவள் தயங்க, “போ”, என்று கத்தினான். கூட்டம் கூடினால் மாட்டிக்கொள்வாள். விழுந்த சிறுவன் இன்னும் எழுந்துக்கொள்ளவில்லை. அவனின் தலையில் வேறு அடிப்பட்டு ரத்தம் வந்தது.

அந்த பெண் பயந்துக்கொண்டே உடனே அந்த இடத்தை விட்டு விரைவாக சென்று விட்டாள்.

அவன் அந்த ஏரியா பையன் போல யாரோ தகவல் கொடுக்க திபு திபு வென்று பத்து பதினைந்து பேர் வந்தனர்.

கார்த்திக் இடித்தானா இல்லையா என்றுக் கூட தெரியாது. இவன் வண்டியை பிடித்துக்கொண்டிருக்கவும் அந்த சிறு பெண் வேறு வேகமாக செல்லவும்……. ஏதோ பெண்ணுடன் வண்டியில் வந்தவன் இடித்து விட்டதாக தோற்றம் கொடுத்தது.

“ஏண்டா, பொண்ணு கூட வந்தா உனக்கெல்லாம் கண்ணு தெரியாதா?”, என்று சொல்லி  வண்டியை பிடித்துக்கொண்டு நின்ற அவனை உடனே அடிக்க ஆரம்பித்தனர்.

விழுந்த அதிர்ச்சியில் அந்த சிறுவன் மயக்கமாகியிருக்க…… ரத்தம் வேறு வர….. அவனை ஹாஸ்பிடல் கொண்டு செல்லக் கூட முயலாமல் இவனை அடிக்க ஆரம்பித்தனர்.

பின்னர் ஒரு சிலர் சிறுவனை தூக்கி ஹாஸ்பிடல் செல்ல….. கூடிய கும்பலில் இருந்த சிலர் என்ன ஏதென்று தெரியாத போதிலும் கூட சேர்ந்து அடிக்க….. கார்த்திக்கின் “வேண்டாம், விட்டுடுங்க!”, என்ற கத்தல் அங்கே யாருக்கும் கேட்கவில்லை.

அப்போதும் வேண்டாம் என்று தான் கத்தினான். அந்தப் பொண்ணு தான் இடித்தது என்ற வார்த்தையை சொல்லவில்லை. 

அவனின் நேரமோ என்னவோ சராமரியாக அடி வாங்கினான். அவனுடைய வாழ்வின் மோசமான தருணம் அது. வந்தவன் போனவன் என்று அவனவன் அடிக்க சிறிது நேரத்தில் கார்த்திக் மயக்கமாகி விட்டான். ஆங்காங்கே ரத்த காயங்கள்.

அப்போது தான் அவனை விட்டனர்.

அவன் மயக்கமாகி விட்டான் என்று தெரிந்ததுமே ஆளாளுக்கு பறந்துவிட….. கார்த்திக் அடிபட்டு ரோடில் அனாதையாக கிடந்தான். 

காட்சி பதினைந்து :

அவன் போ என்று சொல்லிய சிறு பெண் வீட்டிற்கு சென்று தந்தையிடம் விஷயத்தை கூற……. அவர் உடனே கிளம்பி வந்தார்.

அவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது கார்த்திக் ரோட்டில் நினைவிழந்த நிலையில் உடைகள் கிழிபட்டு அனாதையாக கிடந்தான்.

“அப்பா! இந்த அண்ணா தான் என்கிட்ட இருந்து வண்டியை வாங்கிகிட்டு, என்னை போன்னு சொன்னாங்க”, என்றாள்.

நடந்ததை உடனே புரிந்துக் கொண்டார் அந்த பெண்ணின் தந்தை. அவன் இடித்து விட்டதாக நினைத்து எல்லோரும் அந்த பையனை போட்டு அடித்திருக்கிறார்கள் என்று. உடனே அவனை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்.

கார்த்திக் இரண்டு நாட்கள் கண் திறப்பதும் மூடுவதுமாக இருந்தான். தெளிவில்லாமல் இருந்தான். அவனால் அவன் பெயரை மட்டுமே சொல்ல முடிந்தது. அந்த அடிப்பட்ட சிறுவனும் சீரியஸாக இருந்தான்.

அவனை ஹாஸ்பிடல் பொறுப்பில் விட்டு அந்த பெண்ணின் தந்தை அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டார்.

அந்த சிறு பெண் அவளின் தந்தையை விட்டு அகலவில்லை. ஒரு வித பயத்தோடே இருந்தாள், “அப்பா, ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகாதில்லை”, என்று அடிக்கடி தந்தையை கேட்டுக்கொண்டாள்.

அவள் இடித்ததாக யாருக்கும் தெரியவில்லை. கார்த்திக் இடித்ததாக நினைத்து அவன் மேல் கம்ப்ளைன்ட் வேறு கொடுத்தனர்.  

அவன் மேல் எப் ஐ ஆர் பதிவு செய்ய முயன்று கொண்டிருந்தனர். அப்படியாகாமல் பார்க்க அந்த சிறு பெண்ணின் தந்தை முயன்று கொண்டிருந்தார். அவர் என்ன சமரசம் பேசியும் எதிர் தரப்பினர் ஒத்துக்கொள்ளவில்லை.

சீரியசாக இருக்கும் சிறுவன் நன்றாக ஆனபின் தான் பிரச்சனை ஓயும் என்று புரிந்த அவர் அந்த சிறுவனின் நலத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு அமைதியானார்.

இந்த பெண் ஆண்பிள்ளையாக இருந்தால் கார்த்திக்கை இந்த பிரச்சனையில் இருந்து விடுவித்து அந்த பெண்ணின் தந்தை ஏதாவது செய்திருப்பார். ஆனால் பெண்ணாக போய்விட்டதால் ஒன்றும் செய்ய இயலாமல் கார்த்திக் மேல் இருந்த குற்றத்தை அப்படியே அதன் படியே விட்டார். 

கார்த்திக்கிற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு நன்றாக நினைவு வர……   கண்களை திறந்து சுற்றத்தை பார்த்தான். உடம்பு முழுவதும் அப்படி ஒரு வலி. தனக்கு என்ன நேர்ந்தது என்று ஆராய முற்பட்டான்.

அவன் ஹாஸ்பிடல் ரூமில் படுத்துக்கொண்டிருந்தான்.

யார் இருக்கிறார் என்று பார்த்தால் யாருக்காக அடி வாங்கினானோ அந்த பெண் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க வலி குறைவது போல இருந்தது. அவளுக்காக அந்த அடியை வாங்கியது கொஞ்சமும் பெரிதாக தெரியவில்லை.

அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான். இது கார்த்திக்கின் இயல்பும் அல்ல…. வயதும் அல்ல. அவளுமே பருவ வயதில் இருக்கும் மங்கை. மிஞ்சிப் போனால் பதினைந்து பதினாறு வயதே இருக்கும். ஆனால் நினைவுகள் அவளையே வட்டமிட்டன.

அவன் வீட்டை விட்டு எதற்கு வந்தான். என்ன சொல்லி வந்தான் எல்லாம் மறந்தது. ஒரு மாயை அவனை சூழ்ந்தது. 

அது கொடுத்த மயக்கத்தில் அவளையே விழி சிமிட்டாது பார்த்துக்கொண்டிருந்தான்.

தீடீரென்று கதவு திறக்கப்பட ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்தார். போலிசை பார்த்தும் கண்களை மூடிக்கொண்டான்.

அந்த போலீஸ்காரர் இவனைப் பார்க்க இவன் இன்னும் மயக்கத்தில் இருப்பது மாதிரி தான் இருந்தது.

அவர் அந்த பெண்ணிடம், “பேர் என்னம்மா?”, என்றார் அவள் பேரை சொல்லவும் பிறந்த தேதி என்று கேட்டார்.

அவள் சொல்லவும்……. எல்லாம் கார்த்திக் கேட்டுகொண்டிருந்தான்.

இவனோட முழு பேரும், “சக்தியா?”, என்று அவர் கேட்க…….

“அச்சோ! அது என் நேம் சர்”, என்றாள்.

“உன் பேரை கேட்கலைம்மா, இவன் பேரு?”,

“கார்த்திக்……”,

மற்ற விவரங்களை கேட்க……..

“தெரியாது”, என்று அவள் சொல்லிகொண்டிருக்கும் போதே அவளின் அப்பா வந்தவர் அந்த கான்ஸ்டபிளை வெளியே கூட்டிச் சென்றார்.

இப்போது கார்த்திக் கண்களை திறக்க அந்த பெண் இவனைப் பார்த்தவள் அருகில் வந்தாள்.  

“சாரி! என்னால நீங்க அடி வாங்கிட்டீங்க அண்ணா!”, என்றாள்.

வாங்கின அடியை விட அண்ணா என்ற வார்த்தை கார்த்திக்கிற்கு அதிக வலியை கொடுத்தது.

“இட்ஸ் ஓகே”, என்றவன்…….. “உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே! அந்த பையன் எப்படி இருக்கான்?”, என்றான்.

“அவனுக்கும் இப்போ பரவாயில்லை போல அண்ணா!”, என்றாள்.

மறுபடியும் அண்ணாவா என்று நொந்த கார்த்திக்……….

“அண்ணான்னு கூப்பிடாத”, என்றான்.

“ஏன்? பெரியவங்களை அண்ணான்னு தானே கூப்பிடனும் அண்ணா!”, என்று மீண்டும் இரண்டு அண்ணா போட்டாள்…..

சட்டென்று இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை கார்த்திக்கிற்கு. ஜெட் வேகத்தில் மனம் யோசிக்க……. அவளின் பெரியவங்க என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு……. “இல்லை! நான் உன்னை விட சின்னவன்!”, என்றான்.

அவள் நம்பாமல் பார்க்க……. இப்போது தானே அவளின் பிறந்த தேதியை கேட்டிருந்தான், அதை கொண்டு ஒரு பத்து நாட்கள் கம்மியாக சொன்னான்.

அதிகம் குறைத்து சொல்லவில்லை. ஒரே மாதிரி சமவயதாக காட்ட விரும்பினான். அண்ணா என்ற வார்த்தையையும் தவிர்க்க விரும்பினான்.   

“பார்த்தா பெரியவங்க மாதிரி தெரியறீங்க அண்ணா!”, என்று அவள் மறுபடியும் சொல்ல…

நொந்தே விட்டான் கார்த்திக். அவளின் அண்ணா என்ற அழைப்பில் வாங்கின அடியெல்லாம் வீண் போலவே தோன்ற…… “அண்ணா சொல்லாதீங்க! நான் உங்களை விட சின்னவன் தான்!”, என்று மரியாதை பன்மைக்கு தாவினான்.

“என்ன படிச்சிருக்கீங்க?”, என்று அவள் துருவ….

“நீங்க”, என்று அவன் பதிலுக்கு கேட்டான்.

அவள், “டென்த் எக்ஸாம் எழுதியிருக்கேன்”, என்று சொல்ல…..

“மீ, டூ”  என்று இவனும் முடித்தான்.

அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பி, “உங்க பேரு”, என்று கேட்டான்……

“சக்தி, சக்தி பிரியதர்ஷினி”, என்றாள்.

“சக்தி” என்று அவனின் வாய் மிகவும் பிரியத்துடன் அந்த பெயரை கூட வேகமாக சொன்னால் அவளுக்கு வலிக்குமோ என்பது போல மெதுவாக உச்சரித்தது.  அதற்குள் அவளின் தந்தை வந்துவிட்டார்.                             

“யாருப்பா நீ?”, என்று அவர் கேட்க……… கார்த்திக் அவனின் பெயரை மட்டும் சொல்லி அனாதை, அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன் என்று சொன்னான்.

அவன் மேல் பதியப்போகும் கேசை சொன்னவர்…… “முடிஞ்சவரைக்கும் உன் மேல கேஸ் ஆகாம பார்த்துக்கறேன், என் பொண்ணு பேர் இதுல வர வேண்டாம். சின்ன பொண்ணு லைசென்ஸ் எதுவும் கிடையாது. இப்போ தான் டென்த் எழுதியிருக்கா”, என்றார்.

அவரின் வார்தைக்ககா என்று இல்லாவிட்டாலும் சக்திக்காக அவளின் பெயரை கண்டிப்பாக இழுக்கும் எண்ணம் கார்த்திக்கிற்கு கிடையாது. அதற்கா இவ்வளவு அடி வாங்கி……… அதற்காக கொஞ்சமும் வருத்தப்படாமல்………. வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவன் போல படுத்து கிடக்கிறான்.

ஒரு சில நொடிகளே பார்த்த அவளின் முகம் அவனை ஈர்க்க…….. மீண்டும் அவளை தேட…… அவள் இடித்ததை உணர்த்து அடுத்த நொடி ஓடி….. அவள் யார் எவர் என்று தெரியாத போதே வண்டியை வாங்கி…… அவளை அனுப்பி……. அவளுக்காக அடி வாங்கி….. ஹாஸ்பிடலில் படுத்து கொண்டிருந்தான்.

அவளின் அண்ணா என்ற விழிப்பில் மனம் பதைத்து பொய் சொல்லி அவளின் அண்ணா என்ற அழைப்பை நிறுத்தி இருந்தான்.

அவனாவது சக்தியின் பேரை இழுப்பதாவது…… நெவெர்.

“இல்லை, சொல்ல மாட்டேன்!”, என்றான்.

அந்த பெண்ணின் அப்பாவுக்கு அவனை பிடித்து விட்டது. அவன் ஹாஸ்பிடலில் ஒரு வாரம் இருந்தான். ஒரு வாரமும் சக்தி தினமும் வந்தாள். கூட அவளின் அம்மாவும் கூட சில சமயம் வந்தார்.

கார்த்திக் தன் அப்பாவிற்கு ஒரு முடிவை கொடுத்த பிறகு இந்த இரண்டு வருடமாக கார்த்திக் சிரித்தது கூடக் கிடையாது என்பது தான் உண்மை. எப்போதும் ஒரு இறுக்கமான மனநிலையிலேயே இருப்பான்.

இந்த ஒரு வாரமாக சக்தியுடன் பழகும் போது அவனின் மன இறுக்கம் தளர்ந்து இருந்தது. உடல் வலி இருந்த போதும்…. மன வலி இருந்த போதும்…. . முகம் ஒரு புன்னகையை பூசி இருந்தது.

கண்களில் சற்று வாலிப வயதின் கனவுகள் கூட எட்டிப் பார்த்தது.

அவன் எதற்கு வீட்டை விட்டு வந்தான், என்ன சொல்லி வந்தான் எதுவும் அவனின் ஞாபகத்தில் இல்லை. சொத்தை அடைய என்ன செய்யலாம் என்ற அவனின் எண்ண ஓட்டத்தை கூட ஒத்தி வைத்தான்.

அவன் ஞாபகத்தில் இருந்ததெல்லாம் சக்தி. அந்த வயதிற்குறிய இனிய நினைவுகள். பேசினான்……… பேச விட்டுக் கேட்டான். சக்தியின் பேச்சில் எந்த கல்மிஷமோ அசட்டுத்தனங்களோ இல்லவே இல்லை. அது கார்த்திக்கை சக்தியின் புறம் ஈர்த்தது.  இவ்வளவு பேசியும் அவளின் தந்தையை பற்றிய விவரங்கள் பெயர் போன்றவற்றை கேட்கவில்லை.       

அவரின் விவரங்கள் எல்லாம் கேட்க வேண்டும் என்று கார்த்திக்கிற்கும் தோன்றவில்லை. சக்தியும் சொல்லவில்லை.

காட்சி பதினாறு :

அவன் நாளை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்ற சூழலில்…… “எங்கப்பா போகப்போற”, என்று அவளின் தந்தை கேட்டார்.

“வேலை தேடனும்ங்க”, என்றான்.

“படிக்கிறியா நான் ஹெல்ப் பண்றேன்!”, என்றார்.

என்ன படிச்சிருக்க என்று கேட்டு விட்டால் சக்தியின் முன் அவனின் பொய் தெரிந்து விடும் என்பதால் அவசரமாக, “இல்லை வேலைக்குப் போறேன்”, என்றான்.

“என்கிட்டயே வேலைக்கு சேர்ந்துடேன், நானே குடுக்கறேன்!”, என்றார்.

அவனால் சரியென்று உடனே சொல்லமுடியவில்லை. சக்தியோடு பழக இது நல்ல வாய்ப்பு என்று புரிந்தாலும் அவனுக்கு வாசுகி குழுமத்தை அடைய வேண்டுமே…

சமாளிப்பதற்காக, “நான் இருந்த ஆர்ஃபநேஜ்ல சொல்லணும்!”, என்றான்.

அவர், “எங்கே இருக்கு அது”, என்று கேட்க அவனால் தயங்காமல் பதில் சொல்ல முடிந்தது. ஏனென்றால் அவன் முன்பு ஊட்டியில் படித்த கான்வென்டில் அடிக்கடி ஒரு ஆர்ஃபநேஜிர்க்கு அழைத்து செல்வர். அதன் பெயரை சொல்ல முடிந்தது, அவன் படித்த பள்ளியின் பெயரையும் சொல்ல முடிந்தது. அந்த மிசனரியில் இருந்து சில பையன்கள் அவனின் பள்ளியில் படித்தனர். அதை வைத்து சொல்லிவிட்டான். 

ஏனென்றால் அவனின் ஆங்கிலம் அவனை பெரிய இடத்து பையனாக தான் உருவகப் படுத்தும். 

“சரி”, என்று சொல்லி சக்தியும் அவளின் அப்பாவும் கிளம்பினர்.

வீட்டிற்கு வந்ததுமே சக்தியின் அப்பா அப்படி ஒரு ஆர்ஃபநேஜ் இருக்கிறதா என்று விசாரித்து அறிந்தார். ஆனால் கார்த்திக் அங்கே இருந்தானா என்பது போல கேட்கவில்லை……. கேட்கத் தோன்றவில்லை.

என்ன சொல்லியும் நிறைய பணம் தருவதாக சொல்லியும் அந்த அடிபட்ட சிறுவன் பிழைத்துக் கொண்ட போதும் கார்த்திக் மீது எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு விட்டது. அவர்கள் நிறைய பணம் எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்தது. சற்று விட்டு தான் சமாதானம்  பேச வேண்டும் என்று நினைத்து அந்த பெண்ணின் தந்தையும் விட்டுவிட்டார்.

தான் கேட்டுக் கொண்டதற்காக தான் கார்த்திக் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்பது போல சக்தியின் அப்பாவுக்கு தோன்ற…. அது சக்திக்காக என்பது அவருக்கு புரியவில்லை.

அடுத்த நாள், “என்ன முடிவு பண்ணியிருக்கப்பா, என்கிட்ட வேலைக்கு வர்றியா?”, என்பது போல சக்தியின் அப்பா கேட்டார்……

இப்போதைக்கு வேலைக்குப் போகலாம்……. பிறகு வாசுகி குழுமதுக்குள் எப்படியாவது நுழையலாம் என்பது போல கார்த்திக் யோசித்து வைத்திருந்தான். அவனுக்கு சக்தியை விட மனதில்லை. 

“சரிங்க சார்”, என்றான்.

“வா”, என்று அவனை டிஸ்சார்ஜ் செய்து அவனை வீட்டுக்கு அழைத்துப் போனார்.

கார் நிற்கவும் வீட்டைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

“சர்! உங்க நேம்? உங்க கம்பனி நேம்?”,  என்று அவன் கேட்க…..

“என் பேரு வீரமணி! என் கம்பனி பேரு வாசுகி குழுமம்!”, என்று அவர் சொல்ல…….

இந்த ஒரு வாரமாக கார்த்திக் சக்தியை வைத்து தன்னைச் சுற்றி பின்னிக்கொண்டிருந்த மாய வலை அறுந்தது.  

அதற்குள் கார் நிற்கும் அரவம் கேட்டு உள்ளே இருந்து வந்த சக்தி, “வா! வா! கார்த்திக்”, என்றாள். வந்தவள் கையில் ஒரு கறுப்புக் கண்ணாடியை சுற்றிக்கொண்டே வந்தாள்.

அவனின் முகம் ஒருமாதிரி இருக்கவும்…… எப்போதும் தன்னைப் பார்த்தால் காணப்படும் உற்சாகம் அவனிடத்தில் இல்லாமல் இருக்கவும், “என்ன கார்த்திக்?”, என்றாள்.

என்ன சொல்வது என்று தெரியாமல், “வலிக்குது”, என்றான்.

கண்களில் அவ்வளவு வலி…… அடிப்பட்ட தினத்தன்று கூட கார்த்திக்கின் கண்கள் இவ்வளவு வலியை பிரதிபலித்ததாக சக்தி தோன்றவில்லை. இந்த ஒரு வார பேச்சு சக்திக்கு கார்த்திக்கின் மேல் ஒரு தோழமையை வளர்த்து இருக்க, “எங்கே?”, என்று பதறினாள். 

“எங்கே?”, என்ற அவளின் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.  அவள் அவன் முகத்தில் அதற்கான பதிலை தேடி அவனின் கண்களை பார்க்கவும்……

அவனால் சக்தியின் கண்களை பார்க்க முடியவில்லை. அந்த கண்கள் காதலில்லாமல் அவளை பார்க்குமா…..தெரியவில்லை.

அவள் புறம் கையை நீட்டினான்.

“என்ன?”, என்பது போல பார்த்த சக்தியிடம்…… “கண்ணாடி!”, என்றுக் கேட்டான்.

என்னவென்று புரியாத போதும் சக்தி அதை அவன் கையில் கொடுக்க……

அதை கண்களில் மாட்டினான்.   

“எதுக்கு கண்ணாடி?”, என்று அவள் கேட்க ஒரு பெரிய புன்னகை…….. அதுவே அவன் திருவாயில் மலர்ந்த பெரிய புன்னகை. 

அதன் பிறகு கார்த்திக் அந்த கண்ணாடியை கண்களில் இருந்து கழற்றுவதே இல்லை. புன்னகைப்பதும் இல்லை. சக்தி இருக்கும் போது சில சமயம் அவளின் கேள்விகளுக்கு பயந்து போடாமல் இருப்பான். ஆனால் மற்றவர்கள் முன் கண்டிப்பாக போட்டு கொள்வான்.

அவனின் கண்கள் சக்தியின் மேல் காதலை பிரதிபலிக்காது என்று அவனால் நிச்சயமாக சொல்ல முடியாது.

கறுப்புக் கண்ணாடி அவனின் சக்தியின் மேலான காதலை யாருக்கும் அடையாளம் கட்டாமல் மறைத்தது.

அதை மறக்க வைக்கவும் முடிவெடுத்தான்.

அவனுக்கு முதன்மையான தேவை வாசுகி குழுமமே! அவன் அவன் அப்பாவின் பெயரை நிலை நாட்ட வேண்டும்!

சக்தியிடம் சொன்ன பொய் அப்படியே தொடர அவன் காதலை மறைத்து மறக்க பழக ஆரம்பித்தான்.     

Advertisement