Advertisement

அத்தியாயம் பதினேழு :

மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல்                                                                                                                  அழித்திட லெல்லாம் நின்செய லன் றுகாண்;                                                                        தோற்றே னெனநீ உரைத்திடும் பொழுதிலே                                                                       வென்றாய்:                                                                                                                                                                   

( பாரதி )   

காட்சி ஒன்பது :

மூன்று மாதங்களுக்கு பிறகு பரீட்ச்சை முடித்து கார்த்திக் வந்த போது…….. விஷயம் கை மீற ஆரம்பித்து இருந்த்தது.

கார்த்திக் வந்தவுடனே பார்க்க சென்றது அவனின் தந்தையை…… அவர் படுத்திருந்தார்.

அவன் அருகில் போகவும் அவர் உடனே தூர விலகினார்.

அவர் அதிவேகமாக விலகியதை பார்த்து, “என்னப்பா”, என்றான்.

“ஏன்”, மலங்க மலங்க விழித்தார். அவர் நகர வேண்டும் என்று நகரவில்லை. அனிச்சை செயலாய் நடந்தது அது.

“அது எனக்கு உடம்பு சரியில்லை”, என்றார் சோர்வாய்.  

“என்ன பண்ணுதுப்பா”,

“தொண்டை வலி எதையும் சாப்பிட முடியலை”,

“ஏன் ஒரு மாதிரி அழுக்கா இருக்கீங்க…….”, அவன் இந்த கேள்வியை கேட்ட போதே ஒரு கெட்ட வாடையை ரூம் முழுவதுமே உணர்ந்தான்.

“அது இன்னும் குளிக்கலை”, என்றார் பேசும்போதே அவரின் வாயில் இருந்து லேசாக ஜொள்ளு ஒழுகியது.

அவருக்கு தண்ணீரை பார்த்தாலே பயமாக இருந்தது ஏன் என்று தெரியவில்லை.                                                                 

 “முதல்ல போய் குளிங்க”, என்றவன்……. “டாக்டர் கிட்ட போகலாம்ப்பா”, என்றான்.

“நாளைக்கு போகலாம், இன்னைக்கு எனக்கு எங்கயும் வர பிடிக்கலை. எனக்கு தொண்டை வலிக்கு மாத்திரை வாங்கி குடு”, என்றார், அவர் பேசுவதே ஏதோ சிறு பையன் பேசுவது போல இருந்தது. ஒரு பெரியவர் பேசுவது போல இல்லை.   

“போங்க! போய் குளிங்க!”,

“அப்புறம்”, என்றவர் மறுபடியும் சுருண்டு படுத்துக்கொண்டார். இன்னமும் நலிந்து தெரிந்தார்.

அவன் பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடல் அட்டாச்டு மெடிக்கல் ஷாப்பில் போய் தொண்டை வலிக்கு மருந்து கேட்டான்.

“அண்ணா, என்ன மருந்து கொடுக்கட்டும்”, என்று கடைப்பையன் உள்ளே ஒரு குரல் கொடுக்க……

வெள்ளை சட்டை வெள்ளை பேன்ட் போட்டு கொண்டிருந்த ஒருத்தன் வந்து மருந்தை சொன்னான்.

அவன் சொன்ன ஹோதாவை பார்த்ததும், “அவர் டாக்டரா?”, என்றான் கார்த்திக்.

“இல்லை!”, என்ற கடைப்பையன்……… “இங்க கம்பௌன்டறு, ஆனா பயங்கர எக்ஸ்பீரியன்ஸ், நல்லா பார்ப்பாரு!”, என்றான்.

“வீட்டுக்கு வந்து பார்ப்பாரா”, என்றான் கார்த்திக்.

“வருவாரு! ஆனா அதுக்கு எக்ஸ்ட்ரா பீசு ஆவும்”, என்று அவன் சொல்ல…..

நாளையும் தந்தைக்கு இப்படி இருந்தால் இவரை அழைத்து போயாவது காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.  

மாத்திரையை வாங்கி கொடுத்த கார்த்திக்…. வாட்ச் மேனிடம் சொல்லி அவருக்கு உடம்பு சரியில்லை…… “சாப்பாடு வாங்கி கொடுத்துடுங்க”, என்று சொல்லி சென்றான்.

ஏற்கனவே இந்த ஒரு பத்து நாட்களாகவே சந்திர சேகர் எங்கும் வெளியில் செல்லவில்லை. சாப்பாடில் இருந்து சரக்கு வரைக்கும் வாட்ச்மேன் தான் வாங்கி கொடுத்தார். 

 

 

காட்சி பத்து :

வீட்டிற்கு வந்ததும் அப்பாவை பற்றி அம்மாவிடம் பேசலாம் என்றால் அவர்கள் உறவுக்குள் அப்போது ஒரு திருமணம், அதற்காக சில உறவினர்கள் வீட்டில் தங்கியிருக்க அவனால் பேச முடியவில்லை.

“என்ன வாசுகி, உன் வீட்டுக்காரர் இந்த கல்யாணதுக்காவது வருவாரா?”, என்று உறவு பெண்மணி அவளிடம் கேட்க….

“அவரு ஒரு சினிமா தயாரிக்கறது விஷயமா ஊருக்கு போயிருக்காங்க சித்தி!”, என்று கூறி வாசுகி சமாளித்துக் கொண்டிருந்தாள்.

“அது தான் ஏற்கனவே நஷ்டமாகிடுச்சுல்ல, அப்புறமும் ஏன் அதையே செய்யணும்”,

“அவருக்கு அதை விட்டா வேற எதுவும் தெரியாது சித்தி!”, என்று ஏதோ தன் கணவர் தன் கூடவே இருப்பது போலவும், இப்போது வேலை விஷயமாய் வெளியூர் சென்றிருப்பது போலவும் ஒரு தோற்றத்தை வாசுகி கொடுத்துக் கொண்டிருக்க……

அதை உடைக்க விரும்பாது…. அமைதியாக இருந்துவிட்டான்.

அடுத்த நாள்  அவனின் தந்தையை அவன் பார்க்கப் போனபோது இன்னும் மோசமாக இருந்தார். ரூமினுள் நுழைந்தாலே கெட்ட வாடை பயங்கரமாக அடித்தது…. எங்கேயிருந்து வருகிறது….. அவர் மேலா….. ரூமினுள்ளா……. அவனுக்கு தெரியவில்லை.

எங்கேயிருந்து ஆரம்பிப்பது…….. எங்கே சுத்தம் செய்வது தெரியவில்லை. “வாங்கப்பா குளிக்கலாம்”, என்றால் இடத்தை விட்டு அசைவேனா என்றார்.

அவரை ஒரு சேர் போட்டு வெளியே அமரவைத்து ஒரு ஆளை கூப்பிட்டு ரூமை சுத்தம் செய்தான்.

சுத்தம் செய்த ஆள் எப்போதும் அந்த லாட்ஜில் சுத்தம் செய்பவன் தான், “அவருக்கு மூளை சரியில்லைன்னு நினைக்கிறேன், எதுக்கும் டாக்டர் கிட்ட காமிங்க, எனக்கு கொஞ்ச நாளா அவரை பார்க்கும் போது அப்படி தான் தெரியுது. ஒரு சமயம் நல்லா பேசறார் ஒரு சமயம் உளர்றார்”, என்று சொல்லி போனான்.

அவன் மேல் கோபத்தை காட்ட முடியாது….. அதட்டி உருட்டி மிரட்டி அவரை குளிக்க வைத்தவன்….. அவரின் தோளில் புரையோடிப்போயிருந்த ஒரு காயத்தை பார்த்தான்.

சீல் வடிந்து கொண்டிருந்தது…..   துர்நாற்றம் அவனால் தாங்க முடியவில்லை…… இது வலிக்குமே எப்படி இவர் பொறுக்கறார் என்பதாகவும் இருந்தது. ஒரு வழியாக குளிக்க வைத்தான்.  

உடனே முன் தினம் பார்த்த அந்த கம்பௌன்டரை கூட்டிக்கொண்டு வந்து காட்டினான். அந்த புண்ணையும் காட்டினான். சிறிது நேரம் சந்திரசேகரின் நடவடிக்கைகளை பார்த்த அவர்….. அவனை தனியாக அழைத்து, தம்பி”, என்று வெகுவாக தயங்கியவர்……

“எதுனாலும் சொல்லுங்க சார், என்ன செலவானாலும் ட்ரீட்மென்ட்  பார்த்துக்கலாம்”, என்று அவன் சொல்ல, அவனை பரிதாபமாக பார்த்தார்.

“அவருக்கு மெண்டல் டிப்ரெஷனா, யாராவது சைக்கியாடிரிஸ்ட் கிட்ட காட்டணுமா?”, என்று கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்தார்.

பிறகு சொல்லி தானே ஆகவேண்டும் என்ற ரீதியில்……

“அவருக்கு நாய் கடிச்சிருக்கணும், ஊசி போடாம விட்டிருக்கணும், அவருக்கு ரேபிஸ் தாக்கியிருக்குன்னு நினைக்கிறேன்”, என்றார்.

“என்ன பண்ணனும்”, என்று மனம் பதைத்து கார்த்திக் கேட்க……

“ஒண்ணும் பண்ண முடியாது”, என்றார்.    

“ஒண்ணும் பண்ண முடியாதுன்னா?”, என்று அவன் கேட்ட பொழுது அவனின் நெஞ்சம் துடிக்கும் ஓசை அவனுக்கு கேட்டது.  

“ஒண்ணும் பண்ண முடியாது தம்பி! ரொம்ப நிலைமை மோசமாகும் போது சில பேருக்கு கோமா மாதிரி வரும்னு சொல்வாங்க, சில பேர் அப்படியே இறந்து போவாங்க! நாய் மாதிரியான செய்கைகள் அதிகமா இருக்கும்…. சொல்லப் போனா சில சமயம் அந்த மாதிரி செய்கைகள் அதிகமாகி கடிக்கக் கூட செய்வாங்க”, என்றார்.

“எதுக்கும் நீ அவரை கவெர்மென்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போ!”, என்றார்.

அவரின் கையைப் பிடித்து கொண்டவன், “அண்ணா! எனக்கு எதுவும் தெரியாது! நீங்க ஹெல்ப் பண்ணுங்களேன்! எவ்வளவு பணம்னாலும் நான் தர்றேன், ப்ளீஸ்!”, என்றான் கெஞ்சுதலாக. அவனின் கண்கள் கலங்கி இருந்தன.

சிறுவன் என்றும் சொல்ல முடியாமல், இளைஞன் என்றும் சொல்ல முடியாத வயதில் இருந்த அவனை பார்க்க அந்த மனிதருக்கும் பாவமாக இருந்தது.

“வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா, உங்கம்மா எங்க?”, என்றார்.

“ம்கூம், அம்மா தாங்க மாட்டாங்க! நான் சொல்ல மாட்டேன்”, என்றான்.

“தம்பி இது பெரிய விஷயம்! அப்படியே விடமுடியாது! பெரியவங்க கிட்ட சொல்றது தான் பரவாயில்லை!”,

“இல்லை வேண்டாம்! எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்! நல்லா இருந்தவங்க! இந்த மாதிரின்னு வெளில தெரிஞ்சா அசிங்கம், வேண்டாம்!”,

“யாருப்பா உங்கப்பா, என்ன பேரு என்னவா இருந்தாரு”, என்றவரிடமும் விவரம் சொல்ல மறுத்துவிட்டான்.

காட்சி பதினொன்று :

பிறகு அவரின் உதவியுடன் அவரை அரசாங்க மருத்துவமனைக்கு அதற்கென்று இருக்கும் பிரிவிற்கு கூட்டிச்சென்று காட்டினான்.

அவர்களும் அதையே உறுதி செய்யவும்…. இடிந்துப் போனான், என்ன செய்வது என்று தெரியவில்லை.

எப்படியும் இறந்து போவார்……. செய்யக்கூடியது எல்லாம் அப்போதைக்கு என்ன தொந்தரவோ அதற்கு மருந்து அவ்வளவே என்றனர்.

அவனின் அப்பாவுக்கு இது தெரிந்த மாதிரியும் இருந்தது தெரியாத மாதிரியும் இருந்தது. கார்த்திக் திரும்ப திரும்ப அவனின் அப்பாவைப் பார்க்க…….. அவர் விழி முழுவதுமே நிராசை. 

அவனின் அம்மாவிடம் வெளியூரில் இருக்கும் நண்பனின் வீட்டிற்கு தங்கப் போகிறேன் என்று சொல்லி வந்து தந்தையுடன் தங்கினான். அந்த கம்பௌன்டர் வேறு, “அப்பா ஜொள்லெல்லாம் ஒழுக்குறார் தம்பி, எனக்கு இது எந்த அளவுக்கு பரவும்னு தெரியாது, ஜாக்ரதையா இரு”, என்றார்.

ஒரு நாள் இரவு கூட அவனால் அவருடன் தாங்க முடியவில்லை. ஏதேதோ சத்தங்கள் செய்தார்.

அடுத்த நாள் அவரை குளிக்க வைக்க பார்க்கும் போது, உடல் சில்லிட்டு நின்றுவிட்டான்.

அவனுடைய பற்கள் நறநற வென்று கடிபட்டது.

வாயை இருக்கமாக மூடி வந்து அமர்ந்து கொண்டான்.

அவன் கண்டது, அவருக்கு இருந்த புண்ணில்…….. புழுக்கள்…….. மூன்று நான்கு புழுக்கள் நெளிந்துக் கொண்டிருந்தன.

அவர் எந்நேரமும் போதையிலும் இருப்பதாலோ என்னவோ அவர்க்கு வலி தெரியவில்லையா இல்லை அந்த இடம் மரத்து விட்டதா……????

என்ன செய்வது என்று தெரியவில்லை….. அழுகை அவனை மீறிக்கொண்டு வர தேம்பி தேம்பி அழுதான்.

நேற்று டாக்டர் சொன்ன வார்த்தைகள் வேறு காதில் ஒலித்தது…… “என்ன மாதிரி வேணா ஆகலாம்……. சில சமயம் நாய் மாதிரியே செய்வாங்க….. கடிப்பாங்க ஊளையிடுவாங்க……”, ஏதேதோ சொன்னார்.

தன் தந்தை எல்லோர் முன்னிலையிலும் அவ்வளவு கேவலப்பட்டு இறப்பதா? எப்படியும் இறப்பு உறுதி! ஆனால் என்ன மாதிரி? எவ்வளவு நாட்கள்?……. தெரியாது.

அதுவும் அவரின் உடம்பில் புழுவைப் பார்த்ததில் இருந்து…. அவனால் முடியவில்லை. 

அவன் உடல் முழுவதுமே ஏதோ ஊர்வது போலவே இருந்தது.

அதிகம் யோசிக்கவில்லை….. முடிவெடுத்தான்…….

வீட்டிற்கு சென்றான். வீடு முழுவதும் உறவு ஜனம் இருக்க அவனுக்கு வசதியாயிற்று.  வீட்டில் தாத்தாவிடம் இருந்த பணத்தில் அவருக்கு தெரியாமல் ஒரு லட்ச ரூபாய் திருடிக்கொண்டு வந்து அந்த கம்பௌண்டரிடம் கொடுத்தான்.

ஒரே ஒரு ஊசி………..

அதுவும் அந்த கம்பௌன்டர், “ஊசி மட்டும் தான் கொடுப்பேன், என்னால போட முடியாது”, என்று விட்டார்.

“யாருக்கும் தெரிய வராது”, என்று அவன் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்துவிட்டார்.

வேறுவழியில்லாமல் அந்த செய்கையை அவன் கையில் எடுத்தான். அவனே தான் அதை அவனின் தந்தைக்கு போட்டான்.

நிறைய அவரை குடிக்க வைத்து, அவரை உணர்வற்று விழ வைத்து……..

கைகள் நடுங்க……

ஒரே குத்து அவரின் தொடையில்……… 

அடங்கிவிட்டார் அவன் தந்தை.

ஆம், வரப்போகும் இறப்பை இவனாக அவருக்கு வரவழைத்து கொடுத்துவிட்டான்.

அவனுடைய தந்தைக்கு நிம்மதியாக இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடுதலை கொடுத்தது.  

அவனுக்கு தெரியவில்லை……. அவன் கொலைகாரனா என்று?

ஆனால் அவன் செய்தது கொலையே.    

கருணையில் கொடுக்கப்படும் இறப்பை கூட கருணை கொலை என்று தானே சொல்கின்றனர்.

கார்த்க்கிடம் பேசிவிட்டு உள்ளே வந்த தெய்வானையின் நிராசையான முகத்தை பார்த்ததுமே சக்திக்கு புரிந்து விட்டது கார்த்திக் அவளை நிராகரித்துவிட்டான் என்பது.

புரிந்த விஷயம் மனதை எப்போதும் இனி கொல்லப்போகும் விஷயம் என்றாலும், இனி எதற்காகவும் வாழ்க்கையின் ஓட்டத்தை நிறுத்த அவள் தயாராக இல்லை.

தெய்வானை என்ன பேசினார்……. அதற்கு கார்த்திக் என்ன சொன்னான், எதையும் அவள் கேட்கவில்லை. அவ்வளவு எதிர்பார்ப்போடு இருந்த அவளின் பேசும் விழிகள் இப்போது அதன் மொழியை தொலைத்து இருந்தது.    

“அம்மா நான் காலேஜ் போறேன்”, என்று எழுந்தாள்.

“கைல கட்டு இருக்கே சக்தி, வலிக்கும்…. ஒரு ரெண்டு மூணு நாள் வேண்டாம்”, என்றார்.

“இல்லைமா! என்னால சும்மா இங்க உட்கார்ந்து இருக்க முடியாது!”, என்றவள் ஐந்தே நிமிடத்தில் கிளம்பி விட்டாள்.

தடுக்க நினைத்த வீரமணியிடம், “அவ போகட்டும்”, என்ற சொன்ன தெய்வானை.. “இங்க இருந்தா கண்டதையும் நினைச்சு மனசை குழப்பிட்டு இருப்பா! போகட்டும்!”, என்று விட்டார்.

வீரமணிக்கு சக்தியின் ஆசையோ….. தெய்வானை கார்த்திக்கிடம் பேசியதோ எதுவுமே தெரியாது.

காலேஜ் சென்றதும் செல்வத்தை அழைத்த சக்தி, “நம்ம காலேஜ் பக்கத்துல இருக்குற இடமெல்லாம் யாருதுன்னு  விசாரிக்கனும், உங்களால முடியுமா”, என்றாள்.

“நிச்சயமா மேடம்”,

“எத்தனை நாள் ஆகும்”,

“இப்போ காலையில மணி பண்ணிரண்டு! நைட்குள்ள சொல்ல ட்ரை பண்றேன்!”, என்றான்.  

“புரோக்கர்ஸ் யாரும் நடுவுல வேண்டாம்! முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கு தெரியாம பார்த்துகோங்க!”, என்றாள்.

“கண்டிப்பா மேடம்”,

செடியில் இருக்கும் பூ வேண்டும் என்றால் செடியையே வேரோடு பிடிங்கி வரும் ஆசாமி செல்வம். சக்தி ஒரு வேலையை கொடுத்தால் அதை செய்யாமல் விடுவானா?. இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டான்.    

காலேஜ் சுற்றி பத்து கிலோமீட்டர் வரை இருக்கும் இடங்களின் விவரம் அவன் கையில்…… நிலம் யாருடையது, எவ்வளவு விலை அது போகும்…… எவ்வளவு விலை என்றால் கொடுப்பார்கள்….. யார் யார் கொடுக்க மாட்டார்கள்…….. என்ற அத்தனை விவரமும் அவன் கையில்.

சக்திக்கு அவன் கொண்டு வந்த விவரங்களை பார்த்து ஆச்சர்யம், “நான் யாருதுன்னு கேட்க தானே சொன்னேன்”,

“எதுக்கு மேடம் கேட்க சொல்வீங்க……. வாங்க தானே! அதான் ஃபுல்லா விசாரிச்சிட்டேன்”, என்றான் பணிவாக…….. கார்த்திக்கிடம் இருந்து இருக்கிறான் என்றால் சும்மாவா என்ற நினைவு சக்திக்கு எழுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. 

“அப்பா!”, என்று வீரமணியை அழைத்து உடன் வைத்துக்கொண்டவள்… அம்மாவையும் கூட வைத்துகொண்டாள்.

“நான் காலேஜ் பெருசு படுத்தலாம்னு இருக்கேன்பா”, என்றாள். வீரமணி மேலே சொல்லு என்பது போல பார்க்கவும்……

“நம்ம கிட்ட இன்ஜினியரிங் காலேஜ் மட்டும் தான் இருக்கு… இப்போ இந்த வருஷத்திற்கு மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கொண்டு வர சொல்லியிருக்கேன். இப்போ இந்த அகாடெமிக் இயர் முடியப் போகுது. இன்னும் த்ரீ மந்த்ஸ்ல நெக்ஸ்ட் அகாடெமிக் இயர் ஆரம்பிக்கப் போகுது…. அப்போ நாம அட்மிசன் போடறோம்!”,

“அதுக்கு முன்னாடி நாம இந்த பக்கத்துல இருக்குற இடத்தை வாங்கி பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்கனும். ஒரு சிக்ஸ் டு எய்ட் மந்த்ஸ்ல முதல்ல ஒரு பெரிய ஃப்ரீ ஹாஸ்பிடல் கட்டி ரன் ஆக ஆரம்பிக்கணும். அப்போ தான் நாம அதுக்கப்புறம் மெடிக்கல் காலேஜ்க்கு பெர்மிஷன் வாங்க முடியும்”, என்றாள்.

“வேற சில காலேஜசும் ஆரம்பிக்கனும். உடனே எதுவும் முடியாதுப்பா, இது சில வருஷங்கள் ஆகும். நாம நிறைய இன்வெஸ்ட் பண்ணனும். ரிடர்ன்ஸ் இதுல பெரிய அளவுல கொண்டு வர முடியும்னாலும்……. எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லை…….”,

“பெஸ்ட் எஜூகேஷன், அட் லோ காஸ்ட் அண்ட் நோ கேபிடேஷன், ஒன்லி மார்க்ஸ் ஓரியன்டெட்! ஒன்லி பீஸ்! நாம செய்யலாமாப்பா”, என்றாள்.

அவர் பதில் சொல்லும் முன்னேயே, “ஆனா இப்போவே சொல்றேன், கைல இருக்குற பணம் பூராவும் இதுல போடற மாதிரி வரும். போட்டதுக்கு நாம எடுக்கப் போறது நான் போகப் போற வழில ரொம்ப கம்மியா தான் இருக்கும்! பரவாயில்லையா?”, என்றாள்.

“சரியாப் பண்ணுவேன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு! தப்பாப் போனாலும் ஒண்ணும் பண்ண முடியாது! நஷ்டமாகிடும்!”, என்றாள்.

“என்ன நஷ்டம் வந்தாலும் நாம ஒண்ணுமில்லாம போயிடப் போறது இல்லை, சரியா போகும் நீ செய்மா”, என்றனர் அவளின் அம்மாவும் அப்பாவும் முழு மனதோடு.

செல்வம் அவள் பேசப் பேச வாயைப் பிளந்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.    

Advertisement