Advertisement

அத்தியாயம் பதினாறு :

சாத்திரங்கள் பல தேடினேன் – அங்கு                                                                                                    சங்கையில் லாதன சங்கையாம் – பழங்                                                                                                                        கோத்தி ரங்கள்சொல்லு மூடர்தம் – பொய்மைக்                                                                                                    கூடையி லுண்மை கிடைக்குமோ ?

                           ( பாரதி ) 

காட்சி ஆறு :

பத்தாவது அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு கார்த்திக் ஊருக்கு வந்திருந்தான். பத்தாவது என்பதால் இரண்டு நாட்களே விடுமுறை. நாளை அவன் ஊட்டி திரும்ப வேண்டும். இருந்தாலும் தந்தையை பார்க்க வேண்டி அவன் அங்கே வந்திருந்தான்.  

“அம்மா”, என்றழைத்தவன், “அப்பாவை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சும்மா”, என்றான் கார்த்திக்.

“நானும்தான் கார்த்திக்”, என்றவர்…….. “என்னவோ மனசே சரியில்லை கார்த்திக், நீ அப்பாவை பார்த்துட்டு வர்றியா”, என்றார்.

“நேத்து கூட போனேனேம்மா, ஆனா ரூம் பூட்டி தான் இருந்தது”,

“எப்படியாவது பார்த்துட்டு வாடா, எனக்கு என்னன்னு சொல்ல தெரியலை! பயமா இருக்கு! ரொம்ப குடிக்கிறாராம், நம்ம டிரைவர் சொல்றார்”, என்றார் கவலையாக.

கார்த்திக்கிற்கு கோபம் வந்தது……. “அவரை தனியா விட்டுட்டீங்க தானே! இப்போ என்ன? கவலையா இருக்கு அது இதுன்னு ஏன் சொல்றீங்க?”, என்று அம்மாவிடம் கோபப்பட்டான்…….

டீன் ஏஜ் வயதில் இருக்கும் கார்த்திக்கிற்கு பயம் என்ற ஒன்று இப்போதெல்லாம் பழக்கமில்லாத விஷயமாக ஆகியிருந்தது.

மனதில் ஏற்கனவே ஏதாவது செய்திருக்க வேண்டுமோ, அவரை தனியாக விட்டிருக்க கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த வாசுகிக்கு கார்த்திக் இப்படி சொன்னதும் அழுகை பொத்துக்கொண்டு வர தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

“நான் என்ன பண்ணுவேன் கார்த்திக்! எங்கேயாவது வீட்ல அவர் இருந்திருந்தா கூட அவர் கூட போய் இருந்திருப்பேன். பசங்க தங்கற மேன்ஷன்ல ரூம் எடுத்து தங்கியிருக்கறவர் கூட நான் எப்படி போக முடியும்……. போக முடியும்ன்றது கூட அப்புறம், என்னால அவரை அங்க போய் பார்க்கக் கூட முடியாது….”,

“நீயே என்னை இப்படி பேசினா எப்படி கார்த்திக்”, என்று தேம்ப கார்த்திக்கிற்கு மனதுக்கு கஷ்டமாக போய்விட்டது.

“நான் தாத்தா கிட்ட கூட பேசிட்டேன் கார்த்திக், அவரை இங்கே கூட்டிட்டு வர்றேன்னு அவரும் சரின்னு சொல்லிட்டார்….. ஆறு மாசமா இப்போ உங்கப்பாவை கூப்பிடறேன் வர மாட்டேங்கறார்”, என்று தேம்பலோடு பேச…

கார்த்திக்கிற்கு மனதிற்குள் உருகியது. அவர் இதை தாத்தாவிடம் எவ்வளவு கெஞ்சி கேட்டிருப்பார் என்று அவனால் அனுமானிக்க முடிந்தது. 

“சாரி மா”, என்றவன்…….. “நான் இன்னைக்கு அவரை எப்படியாவது பார்க்கிறேன்”, என்றான்.

இரவு பத்து மணிவரை ரூமின் வாசலில் அமர்ந்திருந்தான். அவர் வரவே இல்லை. டிரைவர் வேறு அவனோடு கூடவே இருக்க…. அவருக்கு வீட்டுக்கு போக வேண்டும் என்பதை உணர்ந்து எழுந்து நடந்தான்.

“அவர் எங்கே குடிப்பார்ன்னு உங்களுக்கு தெரியுமா”, என்றான் கார்த்திக்.

“தெரியும்”, என்பது போல அவர் தலையாட்ட….. “அங்கே போகலாம்!”, என்றான்.

“அங்க எல்லாம் நீங்க வேண்டாம் தம்பி”, என்று அந்த டிரைவர் சொல்ல……

“அவரை பார்க்காம என்னால போக முடியாது”, என்று பிடிவாதமாக அங்கே அழைத்து செல்லும்படி சொன்னான்.

அங்கே செல்லும் வழியிலேயே ஒரு இடத்தில் நான்கைந்து ஆட்கள் நின்று அங்கே சாக்கடை தேங்கியிருந்த இடத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ தோன்ற…. “நிறுத்துங்க”, என்று சொன்ன கார்த்திக், அங்கே போய்……. “என்ன அண்ணா”, என்று அங்கே இருந்த ஒருவரை கேட்டான்.

“யாரோ நடந்து வந்தாங்கப்பா….. நாய் துரத்திச்சு, வேகமா வந்தவர் இதுல தவறி விழுந்துட்டார்…… மயக்கமாய்ட்டார் போல….. கூப்டா அசைவேயில்லை”.

ஒருக்கழித்த நிலையில் கிடந்த அந்த மனிதனை பார்த்தான். முகம் தெரியவில்லை. ஆனால் அவன் தந்தையை போல இல்லை.

அவன் திரும்பி நடக்க, அதற்குள் வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்த டிரைவர் எட்டி பாத்துவிட்டு, “தம்பி, நம்ம அய்யா போல தான் இருக்கு”, என்றார்.

“இல்லை! இவர் ஒல்லியா இருக்கார்! இவரை பார்த்தா அப்பா மாதிரியில்லை!”,  என்று சொல்லி கார்த்திக் நடக்க…….

“இல்லை தம்பி!  இப்போ அப்பா உடம்பு இளைச்சு தான் இருக்கார். இந்த உடுப்புல நான் அய்யாவை பார்த்திருக்கேன்! இது அவர் தான்!”, என்று டிரைவர் உறுதியாக சொன்னார்.

சாக்கடையில் தள்ளி விழுந்திருந்தார். இரண்டு மூன்று அடிகள் எடுத்து சாக்கடையில் வைத்த பிறகே அவரை நெருங்கி யார் என்று பார்க்க முடியும். அவனின் அப்பாவாக இருக்கும் என்ற வார்த்தையை கேட்ட பிறகு கார்த்திக் சற்றும் யோசிக்கவில்லை, அந்த சாக்கடையில் இறங்கினான்.

காட்சி ஏழு :

அந்த கெட்ட வாடையில் மயக்கமே வரும் போல இருந்தது கார்த்திக்கிற்கு. ஆனால் அவனின் அப்பாவாக இருக்குமோ என்ற விஷயம் அவனை அதையும் மீறி செயல்பட வைத்தது. 

அவரை அந்த இடத்தில் இழுக்க முடியாமல் தூக்கிப் பார்க்க……. அது அவனின் அப்பா தான்.

அவன் உறைந்தது ஒரு நொடியே…….. அப்படியேத் தூக்கி அவரை தோள் மேல் போட்டு ரோடில் கொண்டு வந்து போட்டான்.

பதினைந்து வயது சிறுவன் அவரைத் தூக்கி கொண்டு வந்து போட பார்த்தவர்கள் பார்த்தபடி நின்றனர். உடல் வலிமையை விட அங்கே மன வலிமையே அதிகமாக இருந்தது.

அழுகை வரும் போல இருந்தது.  டிரைவரிடம், “யார்கிட்டயாவது தண்ணி வாங்குங்க”, என்றான்.

“யாரும் குடுக்க மாட்டாங்க தம்பி!”, என்று அவர் சொல்ல……

“போங்க, அங்க ஒரு டீக்கடை இருக்கு, பணம் குடுத்து வாங்குங்க!”, என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை அப்படியே எடுத்து அவரிடம் கொடுத்து அவரை விரட்டினான்.

 அதன் பிறகு அவர் குடம் குடமாக தண்ணி கொண்டு வர ஊற்றிகொண்டே இருந்தான். அவனின் தந்தையிடம் அசைவு தெரிந்தது.

இன்னும் என்னவோ அந்த சாக்கடையின் அழுக்குகளை எல்லாம் தந்தையிடமிருந்து சுத்தம் செய்வது போல ஊற்றிகொண்டே இருக்க…….

“போதும் தம்பி, இன்னும் ரூம்க்கு போய் பார்த்துக்கலாம்”, என்றார் டிரைவர். பிறகு அவன் அணிந்திருந்த சட்டையை தூக்கி தூர போட்டவன்….. பனியனுடனே நின்றான்.

அந்த நேரத்திற்கு அவரின் டூ வீலரில் தான் அவரை அமர்த்தி சென்றாக வேண்டும். “நீங்க ஓட்டுங்க, நான் இவரை பின்னாடி உட்கார வெச்சி பிடிச்சிக்கிறேன்”, என்றவன்….

“உங்களுக்கு ஒண்ணும் அருவருப்பா இல்லையே”, என்றான் குரல் கமற…

எப்படி இருப்பவன் கார்த்திக்…….. உடை சற்றும் கலையாமல், நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு…… ஊட்டி கான்வென்ட்டில் படிக்கும் சிறுவன்…….. நிமிஷமும் யோசிக்காமல் சாக்கடையில் இறங்கி அவனின் தந்தையை அப்படியே தூக்கி தோளில் போடுகிறான். அவருக்கே கண்களில் நீர் வந்தது 

“என்ன தம்பி இப்படி சொல்லிடீங்க”, என்றவர்…..   உடனே அமர்ந்து வண்டியை எடுத்தார். இப்போது அவர் மேல் தண்ணியை ஊற்றி சுத்தம் செய்துவிட்டதால் ஒன்றிரண்டு பேர் உதவி செய்ய அவரை பைக்கில் அமர்த்தி பிடித்துகொண்டான்.

“ம்! யாரு? யாரு?”, என்று சந்திரசேகர் முனக….

“அப்பா நான் தான்!”, என்ற கார்த்திக்கின் குரலுக்கு……

“வந்துட்டியா”, என்று சொல்லி கண்மூடி கொண்டார். அவர் மிகுந்த போதையில் இருக்கிறார் என்று புரிந்தது.

ரூமிற்கு வந்து அவனே அவரை குளிக்க வைத்து, உடை மாற்றி படுக்க வைத்தான். போதையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் அவரை குளிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஒற்றை ஆளாய் செய்தான்.   

“நான் காலையில வர்றேன்னு அம்மாகிட்ட சொல்லிடுங்க”, என்று டிரைவரிடம் சொல்லி விட்டவன்……. தந்தையோடே தங்கிக்கொண்டான்.  அந்த ரூமும் அங்கே இருந்த நெடியும் கார்த்திக்கினால் அவனையும் மீறி கூட கண்ணயர முடியவில்லை.

ஒரு பொட்டு தூக்கமின்றி மேலே சுத்தும் ஃபேனின் சத்தத்தை கேட்டுக் கொண்டு….. உடல் மெலிந்து நலிந்து தெரிந்த தந்தையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

காட்சி எட்டு :

காலையில் தான் சந்திர சேகர் விழித்தார். “கார்த்திக்”, என்றவர்…….

“நீ எப்போ வந்த”, என்று கேட்டார்.

அவர் கேட்ட விதத்திலேயே அவருக்கு இரவு நடந்தது ஒன்றும் தெரியவில்லை என்று தெரிந்தது.

கார்த்திக் அவனாக ஒன்றும் சொல்லாமல், “என்ன நடந்ததுப்பா”, என்று அவரிடமே கேட்டான்.

“ஒரு நாய் துரத்திச்சு…… ஓடினேன்…… அப்புறம்……..”, என்று யோசித்தவர், “விழுந்துட்டேன்”, என்றார். அவருக்கு இரவு இருந்த போதை மயக்கத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

கார்த்திக்கும் அவர் சாக்கடையில் விழுந்து கிடந்தார் என்று சொல்லவில்லை.

“ரோட்ல விழுந்து கிடந்தீங்க…… தூக்கிட்டு வந்தேன்….. விட்டுட்டுப் போக மனசில்லை”, என்று மட்டும் சொன்னவன்….

“ஏன்பா சுயநினைவு இல்லாத அளவுக்கு குடிக்கறீங்க…….”, என்றான் வருத்தமாக.

சந்திர சேகர் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை

“தொழில்ல நஷ்டம் வர்றது சகஜம் தான். அதுக்காக ஒரு மனுஷன் இப்படியாப்பா ஆகிடுவாங்க….. மொதல்ல நீங்க அம்மாவை விட்டுட்டு தனியா இருக்கறதே தப்பு. அம்மாவோட இருந்திருந்தா இப்படி ஆகியிருக்க மாட்டீங்க”,

தனக்கு புத்தி சொல்லும் தகப்பன் சாமியை கண்ணிமைக்காமல் பார்த்தார் சந்திரசேகர்.

“ஓகே பா! இனிமே நடந்ததை பேச வேண்டாம். என்னோட டென்த் எக்ஸாம் இன்னும் த்ரீ மந்த்ஸ்ல முடிஞ்சிடும்…… அதுக்கப்புறம் நான் இங்கயே வந்துடறேன்…… நீங்க இனிமே எங்க கூட தான் இருக்கீங்க… உங்களால உங்க ப்ரெஸ்டீஜை விட்டுட்டு வேலைக்கு போகமுடியாதுன்னா ஐ வில் மேனேஜ்…….. ஐ வில் டூ சம்திங்………”,

“இவ்வளவு நாள் சின்ன பையன், நத்திங் வாஸ் இன் மை ஹாண்ட்.  பட் ஸ்டில் ஐ கான்ட் சிட் லைக் தட். வில் டூ சம்திங்… ஆனா நான் என்ன சொன்னாலும் நீங்க கேட்கணும்”, என்றான்.

அவனின் தந்தை சந்தோஷமாக தலையாட்ட….. அவருக்கு வாழ்கையின் மீது இன்னும் நம்பிக்கை கொடுத்து நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கிளம்பினான்.

“அப்பா கீழ விழுந்ததுல காயமா இருக்கு, எதுக்கும் ஒரு டீ டீ போட்டுக்குங்க அப்பா!”, என்று சொல்லி சென்றான்.

அவர் அடிக்கடி இப்படி போதை மயக்கத்தில் கீழே விழுவதும் காயம் ஆவதும் சகஜம் என்பதால் அவர் அதை ஒரு பொருட்டாய் ஏற்கவில்லை.

அவனுக்கு தெரியாதது…….. ஏன் அவருக்கும் தெரியாதது…….. இரவு ஒரு நாயை மிதித்ததால் தான் நாய் அவரை துரத்தியது….. அது மட்டுமல்ல அது அவரை கடித்தும் விட்டது என்று. அது கடிக்கவும் அவர் சாக்கடையில் தவறி விழவும் சரியாக இருக்க……. அது யாருக்கும் தெரியவில்லை. அந்த நாயும் திரும்ப சென்று விட்டது.  

சாக்கடையில் விழுந்திருந்தால் வந்த காயமாக அவரை குளிக்க வைத்த கார்த்திக்கின் கண்களுக்கு பட…… ஏதோ காயம் என்பதாக சந்திர சேகரால் கவனிக்க படாமல் விடப்பட்டது அந்த காயம்.   

நினைவலைகள் கார்த்திக்கிடம் இருந்து விடை பெற மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தான். இன்று வீரமணியை காலையில் பார்ப்பதாக சொல்லியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

உடனே குளித்துக் கிளம்பினான்.

அவன் அங்கே சென்ற போது மணி ஒன்பது. அவனின் பார்வை முதலில் நாய்கள் கட்டி வைத்திருந்த இடத்தில் தான் சென்றது. அங்கே அந்த நாய்கள் இல்லை. அதன் பிறகே சற்று தெளிவான மனநிலையோடு உள்ளே சென்றான். 

வீரமணி இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல தான் இருந்தது. அவர் ஹாலில் அமர்ந்திருக்க இவன் போனவுடன் தெய்வானையும் சக்தியும் வந்தனர்.

யாரும் அமர சொல்ல வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை, அவனே அமர்ந்து கொண்டான். சக்தியின் முகத்தை பார்ப்பதை முடிந்த வரை தவிர்த்தான்.       

அவனையே பார்த்திருந்த சக்திக்கு அவன் தன்னை தவிர்ப்பது நன்கு புரிந்தது. நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி…. கண்களில் அதைவிட ஒரு வலி. தன் மகளின் மீது கவனத்தை வைத்திருந்த தெய்வானைக்கு நன்கு புரிந்தது.

கார்த்திக் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “ஐயா, மேம் சுவிஸ் அக்கௌன்ட்ல இருக்குற பணத்தை இங்க அவங்க கைக்கு கிடைக்கற மாதிரி செய்ய சொல்றாங்க”,

“ஏன்னு கேட்டா, அந்த கணக்குல வராத பணத்தை கணக்குல வர வைக்கப் போறேன்னு சொல்றாங்க”, என்று அவன் பேசி முடிக்கும் முன்னரே…….

“ஏன்னு நீயேன் கேட்கற”, என்று அலட்சியமாகவே எதிர் கேள்வி கேட்டார் வீரமணி.

“கேட்காம வேற என்ன பண்ணுவாங்க?  பெரிய ப்ரச்சனையாகிடுங்க ஐயா! இது விளையாட்டில்லை!”,

“உன்னை எங்க வாழ்க்கையில விளையாட விட்டுடோம்ங்ற ஒரே காரணத்துக்காக நாங்க விளையாட்டு தனமாவே இருப்போம்னு நீ எப்படி நினைக்கிற கார்த்திக்”, என்றார்.

“பொண்ணு போய் அப்பன் வந்திருக்கான்டா”, என்று  மனதிற்குள் திட்டியவன் வெளியில் முகம் மாறாமல் காத்தான்.  

“ப்ளீஸ்! இது நாம நம்ம மனஸ்தாபங்களை காட்டுற இடமில்லை, சின்ன பிரச்சனை கூட பெருசாகிடும்”,

“எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கறோம்! அவ கேட்கறதை நீ செஞ்சி குடு!”, என்றார் கறாராக.

“என்ன ஐயா? அவங்க தான் புரியாம பேசறாங்கன்னா நீங்களுமா! ஏற்கனவே உங்களை ஏமாத்திட்டு போயிட்டேன்றது தான் நிஜம்”, என்று பயமில்லாமல் சொன்னவன்………. “இப்போ ஜெயிலுக்கும் அனுப்பிடட்டா”, என்றான்.

அங்கே ஓர் அமைதி நிலவியது

“சொல்றதை புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்களே, அவங்க பணத்தை அக்கௌன்ட்ல கொண்டு வரப்போறேன்னு சொல்றாங்க…….. ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா, சட்டுனு கணக்குல கொண்டு வர்றதுக்கு……… கிட்ட தட்ட சில நூறு கோடி பணம்! உங்ககிட்ட இருக்கிற சொத்து மதிப்பு இல்லாமா இந்த பணம்……… எப்படி வந்ததுன்னு கேள்வி வந்தா?”,

“குவாரியை தான் நோன்டுவாங்க……. இப்போ தான் என் கைக்கு மாறியிருக்கு. முன்னையும் நான்தான் பார்த்துகிட்டேன்னாலும் உங்க பேர்ல தானே இருந்தது, நீங்க தான் மாட்டுவீங்க, அதுக்கு என்னால விட முடியாது”, என்றான் கறாராக.  

“என்ன பண்ணப் போறீங்கன்னு தெரியாம பணத்தை இங்க கொண்டு வர முடியாது”, என்றான் உறுதியாக.  

“என்னன்னு பேசிட்டு சொல்லுங்க…….. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நான் அடுத்த நிமிஷம் உங்க முன்னாடி இருப்பேன்”, என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டான்.   

அவன் வாசல் நெருங்கும் போது அவனின் பின்னே தெய்வானை வருவதை பார்த்தவன் நின்று, “என்னங்கம்மா”, என்றான்.

அவனிடம் பேசுவதற்கு ஏனோ மனதேயில்லை தெய்வானைக்கு, என்ன இல்லை என் பெண்ணிடம்? இவனிடம் நான் ஏன் பேச வேண்டும்? என்ற யோசனை இருந்தாலும் தன் பெண்ணின் பார்வை இன்னும் ஆர்வமாய் தன்னை துளைப்பதை பார்த்தவர்….

பேச ஆரம்பித்தார்….. “கார்த்திக்! நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்கிறோம்! ஆனா அது நீ என் பொண்ணோட வாழ்க்கையில வருவேன்னு இருந்தாத் தான்!”, என்றார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தவன் அதிர்ந்து நின்றான். அவன் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் முகமே காட்டிக்கொடுத்தது. எவ்வளவு பெரிய துரோகத்தை செய்திருக்கிறோம் மறுபடியும் இப்படி கேட்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சக்தி என்பது நன்கு புரிந்தது.

அவன் மெளனமாக நின்றான். அவனின் மௌனமே அவனுக்கு இஷ்டமில்லை என்பதாக தெய்வானைக்கு தோன்ற….     

“அப்படி இல்லாத பட்சத்துல இதை இப்படியே விட்டுடு கார்த்திக்! நீ விலகிடு! அவ கண்ல பட்டுட்டே இருக்காத!  சொத்து போனா பிரச்சனையில்லை! ஆனா எங்க பொண்ணு எங்களுக்கு வேணும்! அவ சந்தோஷம் எங்களுக்கு வேணும்!”,

“உன்னை பயமுறுத்தறதுக்காக கையை வெட்டிட்டு நிக்கறா பாரு”, என்ன செய்ய போகிறாய் நீ…… என் பெண்ணின் வாழ்க்கையில் வருவாயா? மாட்டாயா? என்பது போல அவர் நிற்க……..

“அவங்க கண்ல படாம இருக்க பார்க்கிறேன்”, என்றான்.

தெய்வானையின் முகம் கடினமாகியது….. “அப்போ சரி! பணத்தை இங்கே கொண்டு வந்து எங்ககிட்ட சேர்த்துடு! என்னவோ நாங்க பார்த்துக்கறோம்!”, என்றார்.

“அம்மா ப்ரச்சனையாயிட போகுது”, என்று அவன் ஆரம்பிக்கும் போதே…..

“இப்போ நீ எங்களுக்கு குடுத்திருக்குற பிரச்சனையை விட அதிகம் இல்லை. நாங்க சக்தியை எப்படி பழைய மாதிரி கொண்டு வரபோறோம்னு தெரியலை. ஆனா என்ன ஆனாலும் நீ அவ கண்ல பட்டிடாத”, என்றார்.

“அம்மா!”, என்று அவன் மறுபடியும் பேச வர……

“முடிவா சொல்றேன்! வாழ்வோ…… சாவோ…… நாங்க பார்த்துக்கறோம் கார்த்திக்! நீ எங்க வாழ்கையை விட்டு விலகிக்கோ……”, என்று சொல்லி அவர் திரும்பி நடந்தார்.

அந்த வார்த்தைகள் அவனை மிகவும் காயப்படுத்தின…..

கேட்டை நெருங்கியவன், “எங்க இங்க இருந்தது”, என்று வாயில் காவலாளியிடம் அங்கிருந்த நாய்களை பற்றி கேட்டான். நிறைய நாட்களாக அந்த வீட்டில் இருப்பவன் தான்.

“காலையிலயே சின்னம்மா அதை எங்கயோ அனுப்பிட்டாங்க”, என்றான்.

“என் போன் நம்பர் இருக்கு தானே!”, 

“இருக்குங்க சார்”,

“இந்த வீட்டுக்குள்ள நாய்ன்னு ஒண்ணு வந்தா அடுத்த நிமிஷம் எனக்கு தெரியனும், தெரியலைன்னு வெச்சிக்கோ! அடுத்த நிமிஷம் நீ காலிடா!”, என்று மிரட்டலாக சொன்னான்.  மீண்டும் தன் மேல் இருக்கும் கோபத்தில் அவர்கள் நாயை வரவழைத்துகொள்வார்களோ என்று பயம்.

“சொல்லிடறேன் சார்!”, என்று அவன் சொல்லவும் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். தெய்வானை உள்ளே சென்று விட்டார் என்பதை உறுதி படுத்திக்கொண்டு அவன் கையில் ஒரு ஐநூறு ருபாய் கட்டை திணித்தான்.

“ஒழுங்கா தகவல் சொல்லனும், மறந்துட்டேன் அது இதுன்னு சொல்லாம இருந்த….. இந்த மாதிரி பணத்தை எவன்கிட்டயவது கொடுத்தேன்னு வெச்சிக்கோ அடுத்த நிமிஷம் உன்னை போட்டுடுவாங்க”, காவலாளி இவனை மிரட்சியோடு பார்க்கவும்…….  

“என்ன சொல்லனும்”,

“நாய் வந்தா”, என்று காவலாளி சொல்ல…………… “ம்!”, என்றபடி கிளம்பினான்.

Advertisement