Advertisement

அத்தியாயம் பதினைந்து :

சென்றதினி மீளாது, மூட ரேநீர்                                                                                                                                                  எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து                                                                                                                                                                 கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து                                                          குமையாதீர்!                                                                                                                                                 

                          ( பாரதி )

காட்சி ஒன்று :

“கார்த்திக்”, என்ற அப்பாவின் குரலை கேட்டதும் ஓடி வந்து அவர் மீது தாவி ஏறினான் ஊட்டி கான்வென்டில் ஆறாவது படிக்கும் கார்த்திக்.

“அப்பா”, என்று அவரை கழுத்தோடு அணைத்துக்கொண்டான். நல்ல உயரம் இருந்தான் கார்த்திக் இருந்தாலும் சிறுபையன் போல அப்பாவின் கழுத்தைப் பிடித்து தொங்கினான்.

“அம்மா எங்கே அப்பா…..”, என்ற  அவனின் ஆர்வமான விசாரிப்பிற்கு…….

“வரலை கார்த்திக்! வைஷு பாப்பாக்கு உடம்பு சரியில்லை. அதான் அப்பா மட்டும் வந்தேன்”, என்றார்.

“போங்கப்பா! நீங்க வந்தா அம்மா வரமாட்டேங்கறாங்க, அம்மா வந்தா நீங்க வரமாட்டேங்கறீங்க”, என்று சலித்தான்.

“நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா சேர்ந்து வர்றோம்”, என்றார்.

பிறகு மீட்டிங் அட்டென்ட் செய்து பையனின் ஆக்டிவிடீஸ் பற்றி கேட்க……   கார்த்திக்கை பாரபட்சம் இல்லாமல் அத்தனை பேரும் புகழ்ந்தனர்.

தந்தையாகிய சந்திரசேகருக்கு அதைவிட என்ன வேண்டும். ஒரு பதினோரு வயது சிறுவன் எல்லோர் மனதிலும் இருந்தான் என்பது தான் நிஜம். எல்லோரையும் கவரும் தன்மை கார்த்திக்கிடம் இருந்தது. அவனை சுற்றி பெரிய நண்பர் கூட்டம் இருந்தது.

அவருடைய விலையுயர்ந்த காரில் ஒரு ரவுண்ட் கூட்டி போக……… “அப்பா, மை ஃபிரண்ட்ஸ் டூ”, என்றான் கார்த்திக்….

“சுயூர் கார்த்திக்”, என்று அவனின் அப்பா சொல்ல……. தன் நண்பர்களோடு சென்று…. அவருடன் ஊரை சுற்றி…… ஹோட்டல் போய் என்று நன்றாக என்ஜாய் செய்தான்.

அவனை திரும்ப ஸ்கூல் ஹாஸ்டலில் இறக்கி விடும்போது….. “அப்பா மறுபடியும் எப்போ வருவேன்னு சொல்ல முடியாது கார்த்திக்……. நாம இப்போ மூணு பெரிய பட்ஜெட் படம் பெரிய ஹீரோக்களை வெச்சி பண்றோம். அதனால அப்பா பிஸி, டைம் கிடைக்கும் போது அப்பா வருவேன். அதுவரைக்கும் அம்மாவை வந்து பார்க்க சொல்றேன் கார்த்திக்”, என்றார்.

“சரிப்பா”, என்றவன்………. “ஆனா போன்ல நீங்க என் கூட அடிக்கடி பேசனும்”, என்று சொல்லி, அதற்கான வாக்குறுதியை வாங்கிக்கொண்டு……… “ஐ வில் மிஸ் யூ பா”, என்று ஒரு அழுகை அழுத பின்னே தான் விட்டான்.

“மை கார்த்திக் இஸ் பிரேவ் பாய். அவன் எதுக்கும் அழமாட்டான். அப்பா பேரை அவன் தானே காப்பாத்தனும். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு அழுவாங்களா……. அப்பாவோட மனசெல்லாம் எப்பவும் கார்த்திக் கூட தான் இருக்கும்”, என்று அவனை ரொம்ப சமாதானம் செய்த பிறகே தெளிந்தான்.    

அவன் ஹாஸ்டல் ரூம் வந்ததும் அவனின் நண்பர்கள் எல்லாம், “ஹேய், கார்த்திக்! உங்க அப்பாவை இங்க ஷூட்டிங் வைக்க சொல்லுடா, உங்கப்பாவே ஹீரோ மாதிரி இருக்கார்டா அவர் நடிக்கலியா?”,

“ம்! எங்கப்பாக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. என்னை தான் ஹீரோவா பெரியவனானதும் நடிக்க வைக்க போறார்”, என்றவன், பெருமையாக “அதுகென்னடா நான் சொன்னா எங்கப்பா உடனே செய்வார்”, என்றான்.             

காட்சி இரண்டு :

“நம்ம ஒரு பாட்டு ஷூட்டிங்கை ஊட்டில வைக்கலாம்”, என்று சந்திரசேகர் டைரக்டரிடம் சொல்ல….

“சார்! படம் இன்னும் பாக்கி இருந்தாலும்……. ஹீரோ ஹீரோயின் சீன்ஸ், பாட்டு எல்லாம் முடிஞ்சது”,

“என் பையன் அவன் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ்க்கு எல்லாம் காட்ட ஆசைபடரான்யா, புதுசா எதையாவது ஒண்ணு ரெண்டு சீனாவது அங்க எடு!”,

“சார்! ஹீரோ ஹீரோயின் கால்ஷீட்  முடிஞ்சிடுச்சு! மறுபடியும் ஷூடிங்க்னா எக்ஸ்ட்ரா பேமென்ட் கேட்பாங்க!”,

“பரவாயில்லை குடுத்துடலாம்! என் பையன் ஆசைப்படறான்! அதை நிறைவேத்தலைன்னா அப்புறம் நான் என்ன அப்பா”,

“சரிங்க சார் பண்ணிடுவோம்”,

“சந்தோஷமா கார்த்திக்”,

“சூப்பர் பா! சூப்பர்! சூப்பர்! மொதல்லயே எல்லோரும் எனக்கு ஃபிரண்ட் தான்பா! இப்போ இன்னும் ஃபிரண்ட் ஆகிட்டாங்க! என் சீனியர்ஸ் கூட எனக்கு ஃபிரண்ட் ஆகிட்டாங்க!”, என்று குதித்தான் கார்த்திக்.

“எவ்வளவு நஷ்டமானால் என்ன? என் மகனின் சந்தோஷத்திற்காக எதையும் செய்வேன்”.

காட்சி மூன்று :

“அம்மா! அப்பா ஏன் மா என்னை ஸ்கூலுக்கு பார்க்க வரலை! நான் போன தடவை வீட்டுக்கு வந்தபோதும் வீட்ல இல்லை”, என்றான் எட்டாவது படிக்கும் கார்த்திக்.

என்ன சொல்வாள் வாசுகி, “நாம் படமெடுத்து மிகுந்த நஷ்டமாகிவிட்டது. உன் அப்பா அவரிடமிருந்த எல்லா சொத்தையும் இழந்துவிட்டார். மேலும் கடன் தொல்லையால் யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் உன்னை பார்க்க வரவில்லை” என்றா சொல்ல முடியும்.

என்ன ஆகுமோ தங்களின் வாழ்க்கை இனி என்று வேதனையில் கண்மூடி திறந்தாள் வாசுகி…. இவர்களுக்கு எல்லா செலவையும் இப்போதே ஒரு ஆறு மாதமாக அவளின் தந்தை பத்ரிநாத் தான் செய்கிறார்.  

“வருவார் கார்த்திக்! வருவார்! நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வருவார்”, என்று அவனை தேற்ற முற்பட……  

“போம்மா இப்படி தான் நிறைய நாளா சொல்றீங்க! நோ! ஐ டோன்ட் டிரஸ்ட் யூ!”, என்றான்.

வாசுகியும் மிகுந்த துயரத்திலும், மன அழுத்தத்திலும் இருந்ததால் உண்மை நிலவரத்தை சொல்லாவிட்டாலும் அதற்கு மேல் கார்த்திக்கிடம் சப்பை கட்டு கட்டவில்லை….. “நல்லா படிக்கணும், நெக்ஸ்ட் டைமும் நீதான் ஃபர்ஸ்ட் வரணும்”, என்றார்.

ஆம்! கார்த்திக் மிகவும் பிரில்லியண்ட் ஸ்டுடண்ட்.

“கார்த்திக்! உங்கப்பாவோட போன்!”, என்ற குரல் கேட்டதும் படிகளில் வேகமாக ஓடி இறங்க……… தடுமாறி விழுந்து படியிலேயே உருண்டான் கார்த்திக். முட்டியில் அடிப்பட்டு சற்று காயமானது.

அதை பொருட்படுத்தாமல் வேகமாக போன் இருந்த இடத்திற்குப் போனவன்…… “அப்பா!”, என்று ஆர்வமாக கூப்பிட்டான், மூச்சு வாங்கியது.

“ஓடி வந்தியா கார்த்திக், மூச்சு வாங்குது!”, என்று அவனின் தந்தை கேட்க…… அதிலெல்லாம் அவனின் கவனம் இல்லை. எப்போதும் கம்பீரமாக கேட்கும் அவனின் தந்தையின் குரல் இப்போது அந்த மாதிரி இல்லாதது போல அவனுக்கு தோன்றியது.

“ஏன்பா ஒரு மாதிரியா இருக்கு உங்க வாய்ஸ்”,

“அது லேசா கோல்ட் கார்த்திக்”,

“என்னையும் ரொம்ப நாளா பார்க்க வரவேயில்லையே, ஏதாவது ப்ராப்ளமாப்பா, நம்ம ஃபில்ம் கூட சரியா போகலைன்னு அம்மா சொன்னாங்க”,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கார்த்திக்! அப்பா பார்த்துக்குவேன்! நீ இருக்கும் போது எனக்கென்னடா கவலை? என் பையன் இருக்கான்டா எனக்கு! எத்தனை ப்ராப்ளம் வந்தாலும் அப்பா சமாளிப்பேன்”,

அதன் பிறகு நீண்ட நேரம் அவனின் அப்பாவிடம் சொல்ல கார்த்திக்கிற்கு நிறைய கதைகள் இருந்தன.

காட்சி நான்கு :

“நாம ஏம்மா தாத்தா வீட்லயே இருக்கோம்! நாம ஏன் நம்ம வீட்டுக்கு போகலை! இந்த தாத்தா ஏன் உன்னையும் அப்பாவையும் திட்டிட்டே இருக்காங்க!”, என்றான் எட்டாவது முடிந்து லீவிற்கு வந்திருந்த கார்த்திக்.

“நமக்கு வீடில்லை கார்த்திக்!”,

“ஏன்மா? நம்ம அப்பாவோட போயிடலாம்”,

“நாம அந்த வீடு சேல் பண்ணிட்டோம் கார்த்திக்! அப்பா இப்போ ஒரு ரூம் எடுத்து தான் தங்கியிருக்காங்க! நாம அங்க போக முடியாது!”,

“அந்த வீடு சேல் பண்ணினா என்ன? நாம வேற வீட்டுக்கு போகலாம்”,

“முடியாது கார்த்திக்! அதுக்கு நம்மகிட்ட பணம் வேணும்! நம்மகிட்ட இல்லை!”,

“நேத்து கூட உங்க பீரோல நிறைய பணம் பார்த்தேனேம்மா”,

“அது நம்மளது இல்லை கார்த்திக்!  தாத்தாவோடது!”,

“தாத்தா! உங்ககிட்ட தான் நிறைய பணம் இருக்கே! எங்கப்பாவோட நாங்க இருக்குற மாதிரி வீடு பார்த்து குடுங்க!”, என்று கார்த்திக் பத்ரிநாத்திடம் போய் நின்றான்.  

“வாடா வா! நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாம் உங்களுக்கே குடுத்துட்டா, என் பையனுக்கு நான் என்னடா குடுப்பேன். உங்கப்பன் என் சொத்தை அழிக்கறதுகுன்னே பொறந்திருக்காண்டா”,

“எங்கப்பாவை பத்தி தப்பா பேசாதீங்க தாத்தா!”, என்று கார்த்திக் அவரை முறைக்க.

“தப்பு பண்ணினது உங்கப்பா கார்த்திக்! நீ என்னை என்னவோ வில்லன் மாதிரி பார்க்குற!”, என்றவர்……… “வாசுகி!!!!!!”, என்று ஒரு சத்தம் போட…….

என்னவோ ஏதோவென்று ஓடி வந்தார் வாசுகி, “என்னப்பா”,

“உன் பையன் என்னை பார்த்து எப்படி முறைக்கிறான் பாரு, அவங்கப்பனோட லட்சனதுக்கு?”,

சந்திரசேகரை தன் தந்தை பேசும் வருத்தம் இருந்தாலும், “என்ன கார்த்திக்”, என்றாள்.

“அப்பாவை தப்பா பேசறார், பேச வேண்டாம்னு சொல்லுங்க”,

“அப்பா நீங்க என்னப்பா சின்ன பையன்கிட்ட போய்”,

“என்ன சின்ன பையன்? அவனுக்கு எல்லாம் விவரம் தெரியற வயசுதான்! அவங்கப்பன் பண்ணின காரியத்தை சொல்லு, அப்புறம் விஷயம் தெரியாம அவங்கப்பனை ஹீரோவா நினைச்சு இவனும் அவனை மாதிரி உருப்படாம போயிட போறான்”.  

“நான் அப்புறம் சொல்லிக்கறேன்பா”,

“வேண்டாம்! இப்போவே என் கண்முன்னாடியே சொல்லு! என்னவோ அவங்கப்பாவை பத்தி பேசினா உன் பையனுக்கு அவ்வளவு ரோஷம் வருது”,

வாசுகி கண்ணில் நீர் முட்ட நிற்க……

“சொல்லுங்கம்மா”, என்றான் கார்த்திக்.  

“தாத்தாவோட கம்பனியை, அப்பாகிட்டையும் அம்மாகிட்டையும் பார்த்துக்க சொல்லி குடுந்திருந்தார் கார்த்திக்! அப்பா அதை யாருக்கும் தெரியாம அதை அவரோட ஃபிரண்ட்க்கு வித்துட்டார்!”, என்றார் வாசுகி குரல் கமற,

“என் உழைப்புடா அது! அதை அடுத்தவங்களுக்கு கொடுக்க உங்கப்பாக்கு என்ன உரிமை இருக்கு”,

“அப்பா எதுக்கு வித்தாங்கன்னு தெரியாது! நான் அப்பாகிட்ட சொல்லி அதை உங்களுக்கு திரும்ப வாங்கி கொடுக்கறேன்”, என்றான் ரோஷமாக் கார்த்திக்.

“உங்கப்பன் கிழிப்பான்! என் சொத்துடா அது! எனக்கு அதை எப்படி வாங்கனும்னு தெரியும்! கேஸ் போட்டிருக்கேன், கண்டிப்பா என் பக்கம் தான் தீர்ப்பாகும்”,

“அப்படியே தீர்ப்பாகலைன்னாலும், நான் உங்களுக்கு வாங்கி கொடுப்பேன்”, என்று சிறுவனான அவன் சொல்ல….

“அப்பா போய் மகன் வந்திருக்கியா! உங்கம்மாவுக்காக பார்க்கிறேன்! இல்லைனா உங்கப்பாக்காக இவ்வளவு பேசற உன்னை உங்கப்பாவோட அனுப்பிடுவேன்! கஷ்டப்பட்டா தான் இந்த தாத்தாவோட அருமை உனக்கு தெரியும்”, என்று அவர் சொல்லி அந்த இடத்தை விட்டு போக…….

“அம்மா! நாம இங்க இருக்க வேண்டாம்! அப்பாவோட போயிடுவோம்!”, என்று மீண்டும் அடம் பிடித்தான் கார்த்திக்.

“அந்த சொத்து திரும்ப கைக்கு வரும் வரைக்கும் உன் புருஷனை நீ பார்க்க கூடாது, பார்த்தேன்னா அப்படியே போயிடு……. யார் சொத்தை, யாரு… யாருக்கு எழுதி கொடுக்கிறது. எவ்வளவு சொத்து இதுவரைக்கும் குடுத்தேன். அத்தனையும் தொலைச்சது இல்லாம….. இப்போ இந்த சொத்தையும் சேர்த்து தொலைச்சிருக்கான்”,

“கேஸ் ஜெயிச்சு சொத்து வந்ததுக்கு அப்புறம் தான் நீ அவனோட பேசணும், அப்போ தான் அவனுக்கு வருத்தம் தெரியும். பொண்டாட்டியும் பிள்ளைங்களும் எப்பவும் போல பேசினா இருந்தா அவனுக்கு வருத்தமே தெரியாது”, என்ற தந்தையின் கூற்றை வாசுகி எப்படி  கார்த்திக்கிடம் கூறுவாள்.

மெளனமாக அங்கிருந்து நகர்ந்தார்.

காட்சி ஐந்து :

கார்த்திக்கும் அவன் தந்தையை காண அந்த லீவில் எவ்வளவோ முயன்றான். அவன் போகும்போதெல்லாம் அவரின் ரூம் பூட்டியே இருக்கும்.

நாளை ஸ்கூல் போகவேண்டும் என்ற நிலையில் இன்று எவ்வளவு நேரமானாலும் அப்பாவை பார்த்து விடுவது என்று அந்த ரூமின் வாசலிலேயே அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு தெரியாதது, அவன் கூட போகும் தாத்தாவின் வீட்டு டிரைவர், இவன் போவதற்கு முன்கூட்டியே சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்து விடுவார். அவரும் இப்படி ஒரு தோற்ற  நிலையில் மகனை எதிர்கொள்ள தயங்கி எங்காவது சென்றுவிடுவார். அந்த டிரைவர் மூலமாக தான் வாசுகி சந்திரசேகருக்கு செலவிற்கு பணம் கொடுத்து விடுவார்.

ஆம் அவருடையை அன்றாட ஜீவனத்திற்கே மனைவி கொடுக்கும் பணம் தான் அவருக்கு. மனதளவில் மிகவும் நொந்து இருந்ததால் மகனைப் பார்க்கவே தயங்கினார்.

அன்று அவன் பிடிவாதமாக இருக்க வேறுவழியில்லாமல் அவர் திரும்ப வந்தார். “அப்பா!”, என்று அவரை பார்த்ததுமே கட்டிக்கொண்ட கார்த்திக் உணர்ந்தது ஒரு கெட்ட வாசம் தந்தையிடமிருந்து.

“என்னப்பா ஸ்மெல்”,

“காலையில இருந்து பைப்ல தண்ணி வரலை! இன்னும் குளிக்கலை அதான்!”, என்று சமாளித்தார்.

ஆனால் அந்த கெட்ட வாசம் அவர் மது அருந்தியிருந்ததால் வந்துக்கொண்டிருந்தது. முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறை அவரிடம் இருந்த பழக்கம் இப்போது தினமும் என்ற அளவில் இருந்தது.

“அப்பா! ஏன்ப்பா என்னை பார்க்கவே வரலை! தாத்தா தினமும் திட்டுறார்! நாம வேற வீடு பார்த்து போயிடலாம்பா!”, என்றான் சிறுவனான கார்த்திக்.

“தாத்தா பேசினா கோவப்படாத கார்த்திக்! அப்பா பெரிய தப்பு பண்ணியிருக்கேன். அதான் அப்படி பேசுறார்”.

“நீங்க ஏம்பா அப்படி பண்ணுனீங்க”, என்றான் வருத்தமாக.

“நான் கஷ்டத்துல இருந்தப்போ அவன் சொத்து முழுசையும் என் ஃபிரண்ட் வீரமணி வித்துக் குடுத்தான் கார்த்திக்! அவனை நான் ஏமாத்த முடியாது, அவனை ஏமாத்தினா அவன் ஒண்ணுமில்லாம போயிடுவான், அப்பாவால அதை செய்யவே முடியாது”,

“இப்போ என்னப்பா நாம அதை திரும்ப வாங்கிகுடுத்துடுவோம்”, என்று கார்த்திக் சொல்ல…….

“அப்பாவால இனிமே அது முடியுமான்னு தெரியலை, கார்த்திக் ஒரு வேலை அப்பாவால முடியலைன்னாலும் நீ பெரியவனானதும், அதை செய் கார்த்திக்! அது உங்க மாமாக்கு சேர வேண்டிய சொத்து, நீ வீரமணி அங்கள் கிட்ட பணம் குடுத்தா கட்டாயம் அதைக் குடுத்துடுவான். ரொம்ப நல்லவன் அவன்”,

“என்னோட கஷ்டத்துல கூட நின்னது அவன் மட்டும்தான். இப்பவும் என் நிலைமை தெரிஞ்சா உதவி பண்ண வருவான். நான் விரும்பலை. எனக்கு இது வரைக்கும் பண்ணின உதவிக்கே கோர்ட்டு கேசுன்னு அலைஞ்சிட்டு இருக்கான்”, என்றார் உருக்கமாக.

“கண்டிப்பா அப்பா! நான் அதை வாங்கிகொடுப்பேன்!”, என்றான் கார்த்திக்.  

“நாளைக்கு ஊட்டி ஸ்கூலுக்கு ரகளை பண்ணாம போகணும், நல்லா படிக்கணும்….. அப்பா எப்பவும் உன் நினைப்பா தான் இருப்பேன். நீ அடுத்த லீவ்க்கு வரும்போது பார்க்கலாம்”, என்று அவனை கொஞ்சி அனுப்பி வைத்தார்.

அவர் அவனை தெளிவாக கடைசியாகப் பார்த்தது அப்போது தான், அதற்கு பிறகு….. நடந்தவைகளை நினைக்கவே பிடிக்கவில்லை…..

அந்த சில நாட்கள் அவனுடைய வாழ்க்கையின் கறுப்பு பக்கங்கள்.

நினைவலைகள் விடைபெற கார்த்திக் கண்களை திறந்தான்……மனம் கனத்திருந்தது.

நேரம் அதிகாலை மணி மூன்று என்றது….. அப்படியே குவாரிக்கு கிளம்பி விட்டான்.  அங்கே இருட்டில் அந்த பாறைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தான். திரும்ப அவன் காலையில் வீடு வந்த போது மணி எட்டு…… வைஷ்ணவியும் சுமித்ராவும் காலேஜ் கிளம்பிக்கொண்டு இருந்தனர்.

“அம்மா பசிக்குது!”, என்று அப்படியே நேராக டைனிங் டேபிள் முன் வந்து அமர்ந்தான். கோபம் மனதில் இருந்தாலும் பசி என்று மகன் வந்து நிற்கும் போது என்ன செய்வார் வாசுகி, அவனை அமர சொல்லி பரிமாற…..

வைஷ்ணவி இப்போதும் சண்டை போட போனாள்……. சுமித்ரா மறுபடியும் அவளை அடக்கினாள், “சாப்பிடும் போது பேசாத”, என்று.

வைஷ்ணவி அவன் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தவள், “நீ ஏன் அம்மா கிட்ட அப்படி பேசின! யாரோ ஒருத்திக்காக அம்மா கிட்ட சண்டை போடுவியா நீ!”, என்று சண்டைக்கு போனாள். அவளுக்கு என்ன விஷயம்? என்ன நடந்தது என்றே தெரியாது இருந்தாலும் சக்தியை இழுத்தாள்.

அவளின் சண்டை கார்த்திக்கிற்கு ஒரு பொருட்டல்ல……. ஆனால் யாரை சொல்லுகிறாள் என்று புரியாமல், “யாரை சொல்ற நீ?”, என்று கார்த்திக் கேட்க….

“அதான் உன் மேடம், அவ போன்ல பேசினதும் தானே அப்படி நீ ஓடின! வந்ததுக்கு அப்புறம் அம்மாவையும் பேசின!”, என்று வைஷ்ணவி நீட்டி முழங்க…..

சட்டென்று கோபம் பொங்கியது கார்த்திக்கிற்கு, “this is your limit vaishu”, என்று கோபமாக கர்ஜித்தான்.

அவளும் கார்த்திக்கின் தங்கை தானே! அவனுக்கு சற்றும் குறையாமல் பதில் கொடுத்தாள், “என் அண்ணாகிட்ட பேச எனக்கு என்ன லிமிட்”, என்றாள் வைஷ்ணவி.

“உன் அண்ணாகிட்ட அவனைப் பத்தி பேச உனக்கு லிமிட் கிடையாது! ஆனா அடுத்தவங்களை பேச உனக்கு உரிமை கிடையாது… அதுவும் சக்தியை பத்தி நீ பேசவேக் கூடாது! நம்ம அப்பாக்கு அவங்க அப்பா எவ்வளவு உதவி பண்ணியிருக்கார் தெரியுமா?”,

“அதுக்கு நன்றியோட இருக்க வேண்டிய நான்….. நன்றின்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாம பண்ணிட்டு வந்திருக்கேன். அதுக்கு அவங்க என்னை எதுவுமே பண்ணலை! எதுவும் கேட்கலை…….! ஏன் அவரால என்னை எதுவும் செய்ய முடியாதுன்னு நினைச்சியா… முடியும்…… ஆனா நான் மறுபடியும் போராட வேண்டிய அவசியம் இல்லாம என்னை அப்படியே விட்டுட்டார். ஏன் நான் அவரோட சந்துருவோட பையன்ற ஒரே காரணத்துக்காக”,   

“அதுக்காக அவங்க பொண்ணை நீ பார்த்து பார்த்து பார்துக்கனும்னு ஏதாவது இருக்கா”, என்றாள்

வாசுகியோ சுமித்ராவோ இதில் தலையிடுவர், வைஷ்ணவி பேசுவதை நிறுத்துவர் என்று பார்த்தால் இருவரும் வேடிக்கை பார்த்தனர்.

அது இன்னும் கோபத்தை கிளப்பியது கார்த்திக்கிற்கு……

“உனக்கு என்ன பிரச்சனை இதுல! நானும் ரெண்டு மூணு தடவை பார்த்துட்டேன்! சக்தியை பார்க்கும் போது எல்லாம் நீ கோவமா பார்க்குற! அலட்சியபடுத்தற மாதிரி பேசுற! சொல்லப் போனா நான் பண்ணின காரியத்துக்கு அவங்க தான் அப்படி நம்மளை பார்க்கணும்!”,

“அது நம்மளோடது நம்ம வாங்குனோம்”,

“அப்படி தான் சப்பை கட்டு கட்டி நான் செஞ்ச காரியத்தை நான் நியாப்படுத்தறேன். ஆனா என்ன காரணம் இருந்தாலும் தப்பு தப்புத்தான். நான் செஞ்சது ஏமாத்து வேலை, நம்பிக்கை துரோகம். இனி ஒரு தரம் நீ சக்தியைப் பத்தி பேசக்கூடாது”,

“எனக்கும் சக்திக்கும் பிரச்சனை தான். அது சரியாகற வாய்ப்பை நான் அவங்களுக்கு கொடுக்கவே போறதில்லைன்றது தான் உண்மை. அதுக்காக அவங்க எனக்கு முக்கியமில்லைன்னு ஆகிட மாட்டாங்க. அவங்க எனக்கு ரொம்ப முக்கியமானவங்க அவங்களைப் பத்தி இனிமே பேசாத”,

“என்னை விட முக்கியமா அண்ணா”,

“அவங்க அவங்க இடம் அவங்க அவங்களுக்கு இருக்கு”,

“மீறி பேசினா என்ன பண்ணுவ?”,

“அண்ணான்னு ஒருத்தன் வேணும்னா பேசாத……. வேண்டாம்னா பேசு!”, என்றான் ஒரே வார்த்தையாக. 

இந்த வார்த்தைகளை யாரும் எதிர்பார்க்க்கவுமில்லை, யாரும் விரும்பவுமில்லை.

“கார்த்திக்!”, என்று வாசுகி அதட்ட ……

“நான் அவங்க எனக்கு முக்கியம்னு சொல்றேன்! நான் அப்படிதான் பேசுவேன்னு இவ சொல்றா……. அப்போ நான் இவளுக்கு முக்கியமில்லையா……… நான் இவளுக்கு முக்கியமில்லாத போது இவ எப்படிம்மா எனக்கு முக்கியமாவா”, என்று கார்த்திக் எதிர் கேள்வி கேட்க……..

அதற்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை. 

“நம்புனவங்களை ஏமாத்தறது எவ்வளவு பாவம் தெரியுமா. நான் அதை செஞ்சிருக்கேன். எனக்கு நிம்மதி எப்பவாவது கிடைகுமான்னு கூட தெரியாது….. இதுல நீங்க வேற என் நிம்மதியை இன்னும் கெடுக்காதீங்க…….”,

“இது விஷயமா இனிமே யாரும் என்கிட்ட பேசாதீங்க. சக்தியை பத்தியோ அவங்க குடும்பத்தை பத்தியோ யாரும் பேசறதை நான் விரும்பலை”, என்று முடிவாக சொல்லி அந்த இடத்தை விட்டு போய்விட்டான்.

“சக்தியோடு எனக்கு சண்டை இருந்தாலுமே அவள் எனக்கு முக்கியம்”, என்ற வார்த்தை சுமித்ராவின் காதுகளில் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.  

Advertisement