Advertisement

அத்தியாயம் பதினான்கு :

தூண்டிற் புழுவினைபோல் – வெளியே                                                                                சுடர் விளக்கினைப்போல்,                                                                                                               நீண்ட பொழுதாக – எனது                                                                                                                         நெஞ்சந் துடித்தடீ .                                                                                                                                    கூண்டுக் கிளியினைப்போல் – தனிமை                                                                                                                    கொண்டு மிகவுநொந்தேன்                                                                                                        வேண்டும் பொருளையெல்லாம் – மனது                                                                                              வெறுத்து விட்டதடீ.

                           ( பாரதி )

செல்வம் அவளைப் பார்த்து பதறிக்கொண்டிருக்க……. கார்த்திக் காரில் வேகமாக வந்துகொண்டிருக்க……. அசையாமல் நின்றிருந்தாள் சக்தி.

“என்ன சொன்னான் அவன்?”, என்றாள்.

“சரின்னு சொல்லிட்டாங்க மேடம்! கையை ரத்தம் வராம கட்டுங்க மேடம்!”, என்று  செல்வம் கெஞ்சலாக சொல்ல…….

“ஒண்ணும் ஆகாது கொஞ்சம் ரத்தம் தான் போகும்……”, என்றபடி அவள் அமர்ந்தாள்.

சமையல் வேலை செய்யும் முனியம்மா, ஒரு ஈரத்துணியை விரைவாக கொண்டு வந்தார்….   சக்தி மறுக்காமல் கையை நீட்டினாள்.

அவள் கிழித்துகொண்ட இடம் மணிக்கட்டிற்கும் முழங்கைக்கும் நடுவில் இருந்த இடம். அந்த இடத்தில துணியை சுற்றினார்.

கையை தூக்கியும் பிடித்தாள்……   சுற்றிலும் வேலையாட்கள் நிற்பதை பார்த்தவள், “ஒண்ணுமில்லை போங்க! நான் பார்த்துக்கறேன்!”, என்றாள்.

அவளிடம் பேசும் தைரியம் அங்கே யாருக்கும் இல்லை. செல்வம் சொல்வதை அவள் கேட்பதாய் இல்லை. கருப்பண்ணன் தான் பேசினார்……. “ஹாஸ்பிடல் போகலாம்மா”, என்று சொன்னார்.

“போகலாம்! அப்பா வந்துடட்டும்!”, என்று சக்தி சொல்ல…..

“அப்பாவும் அம்மாவும் காரியத்துக்கு போயிருக்காங்க! அவங்க எடுத்ததுக்கு அப்புறம் தான் வருவாங்க…… உங்க பெரியப்பா வீட்டோட சம்மந்தி…….. நாம சத்தமில்லாம போயிடலாம்…..”,

“போகலைன்னா அப்பா ஏன் போன் பண்ணலைன்னு கேட்பாங்க….. இப்போ போன் பண்ணினா அவங்க பதறிடுவாங்க, அங்க விஷயம் தெரியறதுக்கு வாய்ப்பிருக்கு….. கேள்விப்பட்டா என்னவோ ஏதோன்னு எல்லோரும் நினைப்பாங்க, நாம போகலாம்”,  என்று பொறுமையாக விளக்கம் சொன்னார்.

சக்தி போகலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் போதே கார்த்திக்கின் கார் உள்ளே நுழைந்திருந்தது.

அவன் காரை விட்டு இறங்கவும், அவனுக்கு மிகுந்த அதிர்ச்சி….. அவன் இருந்த ரூம் இல்லாதிருந்தது மட்டும்மல்ல…….. அங்கே நாய்கள் கட்டி வைக்கபட்டிருந்தது இன்னும் அதிர்ச்சி.

“என்ன ஒரு அவமானம்? நானும் நாயும் இவர்களுக்கு ஒன்றா…. இதற்கு அவர்களால் முடியாவிட்டாலும் என்னை ஆள் வைத்தாவது அடித்திருக்கலாம். எதை வைத்து அவமானப்படுத்தியிருந்தாலும் எனக்கு பிரச்சனையில்லை. அசிங்கமாக திட்டியிருந்தால் கூட கேட்டுக்கொண்டிருப்பேன். நாய் எனக்குப் பிடிக்காத ஒன்று. யாருக்கு இது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் சக்திக்கு நன்றாக தெரியும். ஏன் இப்படி செய்தாள்”.

முகம் கோபத்தில் ஜொலித்தது.

உள்ளே வாவென்று சொல்ல வேண்டும் என்று அவன் யாரையும் எதிர்பார்க்கவில்லை. அவனை தடுக்கும் தைரியமும் யாருக்கும் இல்லை…… அவன் வீட்டிற்குள் நுழைந்தான். 

அங்கே ஹாலில் சக்தி அமர்ந்திருக்க, அவளை சுற்றி செல்வம், கருப்பண்ணன், முனியம்மா மூவரும் நின்றிருந்தனர்.

செல்வம் தான் முதலில் கார்த்திக்கை பார்த்து, “பாஸ்”, என்றான்.

சக்திக்கு அவன் இங்கே வருவான் என்று மனம் ஒருபுறம் சொன்னாலும்…. அவன் செய்த காரியம் அவனை இங்கே வீட்டிற்கு வராமல் தடுக்கும் என்று நினைத்திருந்தாள். அப்படியெல்லாம் கார்த்திக்கிற்கு ஒன்றுமில்லை போல…… அவன் வந்தான்.

அவன் முகம் அவ்வளவு இறுக்கமாக இருந்தது. கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான். அவளுக்கு என்னவோ ஏதோவென்று பதட்டமாக ஓடி வந்தவன்…….. நாய்களைப் பார்த்ததும் முற்றிலும் மாறியிருந்தான். கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. பதட்டம் நிதானமாக மாறியிருந்தது.

சக்தி கையில் கட்டு போடப்பட்டிருப்பதையும்……. அவள் கையை தூக்கி பிடித்திருப்பதையும் பார்த்தான். அவன் பார்க்க பார்க்க கையை சுற்றியிருந்த வெள்ளை துணி செந்நிறமாக மாறிக்கொண்டிருந்தது…… ரத்தம் நிற்கவில்லை என்று புரிந்தது.

நேராக அங்கே சென்றவன், கருப்பண்ணனிடம், “எங்கே அய்யாவும் அம்மாவும்”, என்றான்.

“ஒரு காரியம் போயிருக்காங்க”, என்றார் அவர்.

“எழுந்திருங்க ஹாஸ்பிடல் போகலாம்”, என்றான் சக்தியை பார்த்து…

“இல்லை நான் வரலை…..”, என்றாள் சக்தி.

ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது சுற்றி இருந்த துணியை பார்த்தாலே தெரிந்தது. அவளின் நிலை பார்த்து கோபம் மட்டுப்பட, “ப்ளீஸ், அடம் பிடிக்காதீங்க வாங்க!”, என்றான்.

சக்தி அவன் பதறுவான் என்று நினைத்ததற்கு மாறாக அவன் நிதானமாக இருந்தது…. கையின் வலியை விட அதிக வேதனையை கொடுத்தது. இவ்வளவு நேரமாக இருந்த தைரியமெல்லாம் குறைந்து சோர்வை கொடுத்தது.

“எனக்கொன்றேன்றால் இவனுக்கு ஒன்றுமேயில்லையா? என் கணிப்பு பொய்யா?”, கண்களில் நீர் நிறைந்தது. மற்றவர்கள் முன் அழுதுவிடுவோமோ என்ற கழிவிரக்கதால் எழுந்து உள்ளேப் போனாள்.

அவள் ஹாலை தாண்டியதுமே…… அவள் பின்னே போன கார்த்திக்…… “ஹாஸ்பிடல் போகலாம்னு சொன்னேன்”, என்றான்.

எல்லோருக்கும் அவர்கள் இருக்கும் இடம் கண்ணுக்கு தெரிந்தது, ஆனால் பேசுவது கேட்கவில்லை.   

அமைதியாக நின்றிருந்தாள்….

“கையை தூக்கிப் பிடிங்க”, என்று அவன் சொல்ல………. கேட்காமல் கையை கீழேயே விட்டிருக்க ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது… டென்ஷனானவன் அவனே கையை தூக்கி பிடித்தான். இதுவரை அவன் சக்தியை எதற்காகவும் தொட்டதில்லை என்பது தான் உண்மை.

விளையாட்டுப்போல கை கொடுத்து உதவியது கூட கிடையாது. ஒரு முறை திருமணத்திற்கு போன போது அவள் கொலுசு புடவையில் மாட்டிக்கொள்ள அதை எடுத்து விட்டிருக்கிறான். அப்போதும் மிகவும் ஜாக்கிரதையாக புடவை கொலுசு இவற்றில் தான் கை பட்டது.    

“விடு”, என்று சொல்லி அவனிடமிருந்து உடனே கையை விலக்கியவள்…… அவளே தூக்கிப் பிடித்தாள்.

“ப்ளீஸ்! போகலாம் வாங்க!”, என்று சற்று கெஞ்சலான  குரலிலேயே கேட்டான். அவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சிறு விம்மல் அவளையும் மீறி வெளிப்பட்டது.

“இப்போ வரலைன்னா தூக்கிட்டுப் போவேன்”, என்று சற்று அதட்டலாக சொல்லவும், வலி வேறு அதிகமாகவும் கிளம்பினாள்.

கருப்பண்ணன் காரை எடுக்க….. சக்தி பின்னால் அமர……… கார்த்திக் முன்னால் அமர்ந்தான்.     

செல்வம் அங்கேயே இருந்தான்.

எல்லோரும் அவர்கள் கிளம்பும் வரை வாசலிலேயே தான் இருந்தனர்.

கார்த்திக் ஹாஸ்பிடலில் சக்தியுடனே தான் இருந்தான். அவளை விட்டு நகரவில்லை. டாக்டர் கார்த்திக்கிடம், “நான் ஸ்டிச் போடனும்! வெளில இருங்க சார்!”, என்று சொன்னார்.  

அப்போது கூட போகவில்லை… “நான் இங்கேயே இருக்கேன்!”, என்றுவிட்டான்.

அவளை உட்கார வைத்து, கையில் மரத்துப் போக ஸ்ப்ரே அடித்து…. தையல் போட ஆரம்பிக்க……. சக்தி விடாமல் அவர்கள் தையல் போடுவதை பார்த்து இருந்தாள்.

சதையை பிடித்து இழுத்து தையல் போடுவது கார்த்திக்கிற்கே ஒரு மாதிரி இருந்தது. இரண்டு இடத்தில் வேறு தையல் போட வேண்டும். அதுவும் பக்கத்தில் பக்கத்தில் இருப்பதால் நடுவில் இருக்கும் தோல் இருபுறமும் இழுபடும்.

தானாக இழுத்துக்கொண்ட வேதனை. சக்தியை பார்த்து அவனையறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேறியது.

அங்கே மும்முரமாக டாக்டர் தையல் போட்டுகொண்டிருப்பதால்….. பேசி திசைதிருப்ப விரும்பாமல்……. சக்தியின் முகத்தில் கைவைத்து, அவள் அந்த தையல் போடுவதை பார்க்காத வண்ணம் முகத்தை வேறு புறம் திருப்பி விட்டான்.

அவன் கை எடுத்தவுடன் திரும்பவும் சக்தி அதன் புறம் முகத்தை திருப்ப…… இப்போது முகத்தை திருப்பி பிடித்தவன், கையை எடுக்கவேயில்லை. சக்தி திரும்ப முயன்றாலும் திரும்ப முடியாதபடி இறுக்கமாக பிடித்து கொண்டான்.

சற்று நேரம் முயன்று பார்த்த சக்தியும் விட்டுவிட்டாள்.

டாக்டர் முடித்து நிமிர்ந்த போது தான் அவன் முகத்தை விட்டான். அவன் முகத்தை பிடித்திருந்த இடம் கன்றி சிவந்திருந்தது.

காரில் திரும்ப வரும்போது நடுவழியில் ஒரு ஓரமாக காரை நிறுத்த சொன்னவன்…… “கருப்பண்ணா கொஞ்சம் வெளிய நில்லுங்க!”, என்றான்.

கருப்பண்ணன் சக்தியை பார்க்க……. அவள், “சரி”, என்பது போல தலையசைக்க… அவர் இறங்கியதுமே, “ஏன் இப்படி பண்றீங்க? எதுக்கு இவ்வளவு வலியை தேடிக்கறீங்க”, என்று சற்று அதட்டலாக கேட்டான்.

“நீ எனக்கு குடுத்த வலியை விட இது அதிகமில்லை”,

“ப்ச்! அதை பேசி பிரயோஜனமில்லை…. என்கிட்ட அந்த வழியை தவிர வேற இல்லை….. என்னை நான் நியாயப்படுத்தலை…… ஜஸ்ட் சொல்றேன்! அவ்வளவுதான்!”,

“என்ன சொல்ற நீ? என்ன சொல்ற நீ? சொத்துக்காக தான் வந்தேன்னா அதை மட்டுமே பார்த்து இருக்கணும்! என்னை அவ்வளவு அக்கறையாக கவனிச்சி இருக்கக் கூடாது!”, என்றாள்.

“நீங்க எங்கப்பாவோட ஃபிரண்டோட பொண்ணு. அவர் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. அவர் பொண்ணா யாராயிருந்தாலும் இப்படி தான் பார்த்திருப்பேன்”,

“அப்போ நான் உனக்கு யாருமேயில்லை….. உங்கப்பாவோட ஃபிரண்டோட பொண்ணுன்னு தான் என்னை பார்த்த……. ஆமா எப்படி பார்த்துகிட்ட? அக்கா மாதிரியா? இல்லை தங்கச்சி மாதிரியா?”,

“ஏன்? எப்பவாவது நான் உங்ககிட்ட ஏதாவது வகையில் தப்பா நடந்துகிட்டு இருக்கேனா”, என்று அவன் கோபமாக கேட்டான்.

பிறகு அவனே, “தேவையில்லாததை பேசவேண்டாம்”, என்று முடித்து விட்டான்.

“எனக்கு இது தான் தேவை! என்ன நினைச்சு என்கிட்ட வயசை கம்மியா சொன்ன! நான் என்ன பண்ணிடுவேன்னு அப்படி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த!”, என்று அவள் கோபத்தோடு கூடிய வருத்தமாக கேட்டாள். அவளையும் மீறி குரல் தழுதழுத்தது.

“அதையேன்  நீங்க அப்படி எடுக்கறீங்க……. உங்களுக்காக சொல்லலை! எனக்காகதான் சொன்னேன் நினைக்கலாம் இல்லையா!”, என்றான்.   

“உனக்கு பேசவா கார்த்திக் கத்துக்கொடுக்கணும்! பேசியே எங்களை மயக்கி வெச்சியிருந்தியே!”,

கார்த்திக் அதை பற்றி மேலே பேசவில்லை…….

“அதென்ன புதுசா நாய்?”, என்று அவன் கேட்கும்போதே அவன் முகம் இறுகியது.

“எனக்கு பிடிக்கும்! அதனால!”, என்று அவள் சொல்லும்போதே இடைமறித்தான்…..

“பிடிக்கக் கூடாது”, என்று.

“எனக்கு பிடிக்கும்!”,

“பிடிக்கக் கூடாது!”, என்று ஆக்ரோஷமாக கத்தியவன்……..

“அது நாளைக்கு உங்க வீட்ல இருக்கக் கூடாது… மீறி இருந்தது…. மூணு நாய்ங்களை கொன்ன புண்ணியம் உங்களை தான் சேரும்”, என்றான். சொல்லும்போது அவன் குரலில் இருந்த வெறி சொன்னதை செய்வேன் என்று நிச்சயம் சொன்னது.

“என்ன உளர்ற?”, என்றாள்.

“உளறலை! நான் வந்த போது உங்க வீட்ல இருந்த நாய் கொஞ்ச மாசத்துல எப்படி செத்தது…… அதுக்கப்புறமும் வந்த நாய் ஒண்ணு கூட ஏன் தங்கல, எல்லாமே ஏன் செத்தது………”, என்று கேள்வி கேட்டான்.

அவன் கேட்டதிலேயே தெரிந்தது…… அது என்னால் தான் என்று…….

மிகுந்த அதிர்ச்சி சக்திக்கு, “என்ன?”, என்று ஒரு வார்த்தை கேட்டவள் அப்படியே கல்லாய் சமைந்து விட்டாள்…….

பிறகு இருவருக்குள்ளும் பேச்சே இல்லை.

வீடு வந்த போது வீரமணியும் தெய்வானையும் வந்து சக்திக்காக வாசலிலேயே காத்திருந்தனர். செல்வம் அவரிடம் விவரத்தை சொல்லியிருந்தான்.

சக்தி இறங்கியதும் இருவரும் அவளையேப் பார்த்தனர்…….. அவர்களால் விரைந்து கூட வரமுடியவில்லை. அவளின் செய்கையால் ஒய்ந்துப்போயிருந்தனர்.

“சாரிப்பா”, என்று வீரமணியின் அருகில் போனாள்…… தெய்வானை, “என்ன சக்தி இப்படி பண்ணிட்ட”, என்று கண்கலங்க கேட்டார்.

“சும்மா மா ஒண்ணுமில்லை”, என்று சிரிக்க முயன்றாள்.

“பட்டதெல்லாம் போதாதுன்னு நீயேன் சக்திம்மா புதுசா இழுத்துவிடற!”, என்று வருத்தமான குரலில் கேட்டார் வீரமணி.

அவரருகில் வந்தான் கார்த்திக். அவனைப் பார்த்தும் வீரமணி முகத்தை திருப்ப…… அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத கார்த்திக், “அய்யா! நான் உங்க கிட்ட பேசணும்! நீங்க இப்போ இவங்களை கவனிங்க! நான் காலைல வர்றேன்!”, என்று அவரின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.                                    

வீரமணியும் தெய்வானையும் கார்த்திக் சென்ற பிறகு மாறி மாறி வருத்தப்பட…… அவர்களை சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது சக்திக்கு. பேசாமல் வேறு ஏதாவது ஸ்டன்ட் செய்திருக்கலாமோ என்று யோசிக்கும் அளவிற்கு வந்துவிட்டாள்.

ஒரு வழியாக தூங்கப் போனாள். அவள் சென்ற ஐந்து நிமிடத்திலேயே தெய்வானை அவளின் ரூமிற்கு வந்துவிட்டார், “ஏன் சக்தி இப்படி பண்ணின?”, என்ற கேள்வியோடு.

“சும்மா அம்மா, அவனை பயப்படுத்தறதுக்காக செய்தேன்”,

“உன்னை வருத்திக்கிட்டு அவனை பயப்படுத்தனும்னு என்ன அவசியம் சக்தி”,

“அவன் வேற எதுக்கும் பயப்பட மாட்டானேம்மா”,  என்று சொன்னவளின் முகத்தை அப்போதுதான் நன்றாக பார்த்த தெய்வானை……

“இது என்ன கன்னத்துல இப்படி சிவந்து இருக்கு”, என்று கேட்டார்.

“என்ன சிவந்திருக்கு”, என்று பதிலுக்கு கேட்ட சக்தி…….. கண்ணாடியில் பார்க்க தாடையின் மேல் பகுதியில் சிவந்திருந்தது. அப்போதுதான் கார்த்திக் அசையாமல் பிடித்தது  ஞாபகத்திற்கு வர……..

“அம்மா தையல் போடும்போது கார்த்திக் முகத்தை அசைய விடாம பிடிச்சிருந்தான்”, என்றாள் சிறு முகக்குன்றலுடன்.

சிறிது யோசனையோடு அவளை பார்த்தவர்….. “சக்திம்மா நான் ஒண்ணு சொன்னா கேட்பியாடா”, என்றார்.

“சொல்லுங்கம்மா”,

“கார்த்திக் நம்மளை விட்டுப் போயிட்டான். அவனை பிடிச்சு வெக்க ட்ரை பண்ணாத! விட்டுடு! அவனை கோவப்படுதறதுக்காகவோ வருத்தப்படுத்தறதுக்காகவோ உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத சக்திம்மா”, என்றார்.

“சாரிம்மா இனிமே இப்படி பண்ண மாட்டேன்”, என்றாள் கமறிய குரலில்.  

“சக்தி, அவனுக்காக உன்னை நீ கஷ்டப்படுத்திக்குவியா…. யார் சக்தி அவன் உனக்கு? எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம்டா! உன்னை விட்டா எங்களுக்கு வேற யார் இருக்கா….. காயப்படுத்திக்கறதுக்கு முன்ன எங்களை நீ ஒரு நொடி கூட நினைக்கலையா…”,  

அவளின் அம்மாவின் வார்த்தையின் உடைந்தவள்……. அவரின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள். உடல் அழுகையில் குலுங்கியது.

“அம்மா! ஐ மிஸ் கார்த்திக் மா!”, என்று தேம்பி தேம்பி அழுதாள்.

“அவன் கூட இருந்தவரைக்கும் ஒண்ணும் தெரியலை! அவன் போன பிறகு எனக்கு நானே எவ்வளவு சமாதனப்படுதினாலும், மனசு அவன் தான் வேணும்னு கேட்குது. அவன் நம்மளை ஏமாத்திட்டு போயிட்டான்னு அறிவுக்கு தெரியறது, மனசுக்கு தெரியலைம்மா”, என்று அழுகையில் கரைந்தாள்.

அவளின் அழுகை தெய்வானையை கலங்கடித்தது. அவருக்கும் அழுகை வரும் போல இருந்தது. ஒற்றை பெண்ணை பெற்று, சீரும் சிறப்புமாய் வளர்த்தது, இதை பார்க்கவா?

“நான் அவன் கிட்ட பேசட்டுமாடா?”,

அவசரமாக தலைநிமிர்ந்து, “என்ன பேசமுடியும் மா”, என்றாள். அப்போதும் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை.  

“என்ன பேசட்டும்?”, என்று அவளிடமே திருப்பி கேட்டார்.

“எனக்கு தெரியலைம்மா”, என்று இன்னும் அழுதாள்.

“இப்படி அழாத சக்தி!”, என்று அவளை கடிந்தவர்….

“இப்படி நீ அழறதுக்கா உன்னை நாங்க அவ்வளவு செல்லமா வளர்த்தோம். நான் கார்த்திக் கிட்ட பேசறேன்”,

“என்ன பேசுவீங்க?”, என்று கண்களில் எதிர்ப்பார்ப்போடு அவரின் செல்ல மகள் பேச அவர் உருகி போனார்.

“ஏதோ பேசறேன்! ஆனா பதில் நமக்கு சாதகமா இல்லைன்னா…… அவனை நீ விட்டுடனும்! சம்மதமா?”, என்றார்.

“சரி”, என்று தலையாடியவள்……… “ஆனா, நான் உன்னை பேச சொன்ன மாதிரியோ, நீ எனக்கு தெரிஞ்சு பேசற மாதிரியோ, அவனுக்கு தெரியவே கூடாதும்மா”, என்றாள் சக்தி. 

“தெரியவராது!”, என்று அவளுக்கு உறுதி கொடுத்தவர்…… தன்னுடைய மடியிலேயே அவளை தூங்க வைத்துக்கொண்டார்.

“நான் அப்பாகிட்ட சொல்ல மாட்டேன்! நீயும் அப்பாகிட்ட சொல்லாத! அவர் இதை விரும்ப மாட்டார்”, என்று சக்தியிடம் சொன்னார்.

தெய்வானைக்கு தோன்றியது அவருக்கு சாதகமான பதில் கார்த்திக்கிடம் இருந்து வராது என்று…… இருந்தாலும் நூற்றில் ஒரு பங்காக வந்துவிட்டால்……. தன்னுடைய பெண்ணிற்காக இந்த முயற்சியை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

தானும் அவனோடு திருமணத்தைப் பற்றி பேசி அவளின் மனதை கலைத்து விட்டோமோ என்று மருகினார்.

அங்கே கார்த்திக்கிற்காக, வாசுகி, சுமித்ரா, வைஷ்ணவி என்று மூவருமே காத்திருந்தனர்.

கார்த்திக் அவர்கள் மூவரையும் எதிர்பார்க்கவில்லை. மனதளவில் சோர்ந்து இருந்தான். ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருக்க….. எப்படியும் கை வலி அதிகமாக இருக்கும் அந்த நிலையிலும் சக்தி தைரியமாக தான் அங்கே அமர்ந்திருந்தாள்.

இவனை பார்த்தும் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்ததையும், அவளின் தைரியம் குறைந்ததையும் நன்கு உணர்ந்தான். அழுகையை மறைக்க தான் அவள் உள்ளே எழுந்து போனாள் என்று தெரியாதிருக்க அவன் சக்தியை அறியாதவனள்ளவே!

வரும் வரையிலும் அவள் எந்த விஷயத்திற்காக கையறுத்துக் கொண்டாளோ, அதை பற்றி பேசவேயில்லை. கார்த்திக்கை பார்த்ததும் அவளின் மனம் வேறெதுவும் சிந்திக்கவில்லை என்பதும் அவனுக்கு நன்கு புரிந்தது.

இப்படி சக்தியை பற்றியே அவன் யோசித்துக்கொண்டிருந்த போது.. இவர்கள் மூவரும் அவனை எதிர்ப்பார்த்திருக்கவும் சற்று எரிச்சலாக வந்தது கார்த்திக்கிற்கு.

“ஏன் ரெண்டு பேரும் இங்க உட்கார்ந்திருக்கீங்க, நாளைக்கு காலேஜ் இல்லையா?”, என்றான் வைஷ்ணவியையும் சுமித்ராவையும் பார்த்து. அவன் கேட்ட த்வனியே உள்ளே போ என்பதாக தான் இருந்தது.

அவன் அப்படி கேட்கவும் இரண்டு பேருக்குமே வார்த்தை வரவில்லை….. வாசுகி தான், “நீ ரொம்ப அவசரமா போனியா! என்னவோ ஏதோன்னு பயந்துட்டோம்!”, என்றார்.

“நான் என்ன சின்ன பையனாம்மா…… பயப்படறதுக்கு?, ஒரு அவசரமான வேலை போனேன்”,

“என்ன அவசரமான வேலை”,

“தெரிஞ்சே ஆகனுமா”,

“ஏன் தெரியக் கூடாத விஷயமா”,

“தெரிய வேண்டிய அவசியமில்லைன்னு நினைக்கிறேன்”,

“எப்போ இருந்து கார்த்திக் என்கிட்ட இப்படி எடுத்தெரிஞ்சு பேச ஆரம்பிச்ச”, என்றார். சொல்லும்போதே அவரின் கண்களில் நீர் நிறைந்தது.

“அம்மா! ஏன் இப்படி என்னை எல்லோரும் எமோஷனல் ப்ளாக்மெயில் பண்றீங்க?  இப்படி ஏன் எல்லோரும் அழுது அழுதே என்னை சாவடிக்கறீங்க”, என்று கத்தினான்.

கத்தியவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட….. வாசுகி மெளனமாக அவரின் அறைக்கு போனார்.

“யாரோடு என்னைச் சேர்த்து பேசுகிறான், என்ன இவனின் உயிரை எடுக்கிறேன்”, அவரின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.  

அம்மா அழுதுக்கொண்டு போவது பிடிக்காமல் வைஷ்ணவி கார்த்திக்கிடம் சண்டை போட……. “அண்ணா!”, என்று ஆரம்பிக்க…….

கார்த்திக்கின் முகத்தை பார்த்த சுமித்ரா அவளிடம், “அப்புறம் பேசலாம்!”, என்று இழுத்து போனாள்.     

கார்த்திக்கிற்கு சக்தியின் வீட்டில் அவனிருந்த இடத்தில் நாய்களை கட்டி வைத்திருந்தது சொல்லொணா வேதனையையும் மன அழுத்ததையும்  கொடுத்தது.

சக்தி ஒரு புறம்……… அம்மா ஒரு புறம்……… அவனின் நினைவுகள் ஒருபுறம்….. அவன் செய்த செய்கைகள் ஒருபுறம்……. எல்லாமுமாக சேர்ந்து  அவனை கொல்லாமல் கொன்றது…….

“அப்பா!”, என்று அவனின் வாய் முணுமுணுக்க….. தலை சோபாவில் சாய…… கண்களை மூடிக்கொண்டான்…….. கண்களில் நீர் வழிந்தது.

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு                                                                                           நினைவினை கடந்துவிடு                                                                                                                                              நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு                                                                                                         நிஜங்களை துறந்துவிடு                                                                                                                    

என்மேல் யாரும் கல் எறிந்தால்                                                                                                           சிரிக்கவும் பழகிக்கொண்டேன்                                                                                       உள்ளத்தை மறைத்தேன்                                                                                                                     உயிர்வலி பொறுத்தேன் என்                                                                                                         சுயத்தை எதுவோ                                                                                                                      சுட்டதடி வந்தேன்

   

 

Advertisement