Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு :

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்                                                  மாண்பார்ந் திருக்கும், வகுத்துரைக்க வொண்ணாதே 

                                             ( பாரதி )

காலேஜ் உள் வந்து அவளின் கேபினில் உள்ளே நுழைந்தாள் சக்தி. அவள் சேரினில்  அமரவும் உள்ளே செல்வம் வரவும் சரியாக இருந்தது.

அவனை பார்த்தவள், “இவன் எங்கே இங்கே”, என்ற யோசனையுடன்…….. “நீங்க என்ன பண்றீங்க இங்க?”, என்றாள்.

“நான் தான் மேடம் இங்க அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர்”, என்றான்.

“என்ன, எப்போலேர்ந்து? எனக்கு தெரியாம யார் உங்களை அப்பாயின்ட் பண்ணினது”, என்றாள் படபடவென்று. அவள் கார்த்திக்கின் விபத்திற்கு பிறகு காலேஜ் வரவேயில்லை. அதனால் அவளுக்கு தெரியவில்லை.   

சற்று  திணறியவன், “சார் தான் மேடம்!”, என்று சொன்னான்.

“எந்த சார்?”,

“பிரின்சிபால் சார்!”,

“எப்படி வாசுகி கிரானைட்ஸ்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்த உன் வீட்டுக்கு தேடி வந்து அப்பாயின்ட்மென்ட் குடுத்தாரா?”, என்றாள் நக்கலாக.

“இல்லை! அது வந்து கார்த்திக் சார் என்னை அங்க வேலைய விட்டு எடுத்துட்டாங்க! இது உங்களோடது, உங்களுக்கு என்னை தெரியும்ங்கறதால இங்க வந்து வேலை கேட்டேன்…… நீங்க அப்போ இங்க இல்லை…..”,

“உங்களுக்கு என்னை நல்லா தெரியும் உங்க கன்செர்ன்ல தான் வேலை பார்த்தேன்னு சொன்னேன். இங்க அந்த போஸ்ட் காலியா இருந்தது, என் படிப்பு இதுக்கு மேட்ச் ஆச்சு, இன்டர்வியூ பண்ணினாங்க, அப்புறம் தான் வேலை குடுத்தாங்க”, என்றான்.

“உன்னை கார்த்திக் வேலையை விட்டு அனுப்பிட்டான்…… இதை நான் நம்பனும்….. இங்க போஸ்ட் காலியா இருந்தது இதையும் நான் நம்பனும்………”,

“சொல்லு! உன் பாஸ் கிட்ட சொல்லு! சக்தி இப்போதைக்கு அவன் கிட்ட மட்டும் தான் ஏமாறுவா…….. வேற யார்கிட்டயும் ஏமாறுற ஐடியா இல்லைன்னு சொல்லு!”, என்றாள் இன்னும் நக்கலாக……..

செல்வத்துக்கு வேர்த்து ஊற்றியது.

“நீ இங்க இருந்தா என்ன நடக்குதுன்னு அவனுக்கு உடனுக்கு உடனே தெரியும். அதனால அவன் இங்க இருக்குற அட்மினிஸ்ட்ரேட்டரை அனுப்பிட்டு, உனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கச் சொல்லி பிரின்சிபால் கிட்ட சொல்லியிருப்பான்”,

நடந்ததை அப்படியே சொல்லும் சக்தியை ஆச்சர்யமாக பார்த்தான் செல்வம்.

“வேலை காலி…… பேக் டு பெவிலியன்”, என்று அவன் நினைக்க…..

“சொல்லு! இப்போ எதுக்கு உள்ள வந்த!”, என்றாள். மரியாதை எல்லாம் காற்றில் பறக்க விட்டிருந்தாள்.

“அது உங்ககிட்ட ரிப்போர்ட் பண்ண! அப்புறம்……”, என்று அவன் ஒரு வேலையை பற்றிய விவரமும் கேட்டான்.

“இப்படி செய்ங்க”, என்று அவனுக்கு சொல்லிவிட்டு வேறு விவரங்களை கேட்டாள்.

அவன் புதிது என்பதால் அவனால் சொல்ல முடியவில்லை……. அவன் முழிக்க……

“தோ பார்! நீ யார் சொல்லி வந்தியோ எனக்கு தெரியாது! இங்க இருக்கனும்னா வேலையை ஒழுங்கா பார்க்கனும்! அப்போ தான் இங்க இருக்க முடியும்!”, என்றாள் அதிகாரமாக.

“அப்போ நீங்க என்னை வேலையை விட்டு அனுப்பலையா?”, என்று கேட்டே விட்டான்.

“உன்னை அனுப்பினா இன்னும் யாரையாவது புதுசா ஒருத்தனை பிடிப்பான். எவனாவது நான் என்ன பண்றேன்னு பார்த்துட்டு இருந்தான்னா எனக்கு டென்சன் ஆகும். அவனை கண்டுபிடிச்சு அவனை அனுப்பினா அடுத்தவனை அனுப்புவான்…..”,

“அவன் தான் என் உயிரை எடுக்கறதுன்னு முடிவு பண்ணி இருக்கானே….. யாராவது நம்ம என்ன வேலையை செய்யறோம்னு பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி எப்படி நான் நிம்மதியா இருப்பேன்”, என்று அவளையும் மீறி கத்தினாள்.

“எவன் எந்த பார்வையில் என்னை பார்க்கறான்னு பார்த்துட்டே இருக்க முடியுமா”, என்றாள் குரலில் அவ்வளவு வலி………

டக்கென்று எமொஷனை கட்டுக்குள் கொண்டுவந்தவள்…….. 

“அது எதுக்கு? தெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேயே மேல்! போ! போய் வேலையை பாரு…….!”,

“மேடம்!”, என்று தயங்கி தயங்கி நின்ற செல்வம்….. “நீங்க என்னை நம்பலாம் மேடம்!”, என்றான்.

ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்தாள். அவளின் பார்வை வீச்சை தாங்காமல் செல்வம் பார்வையை தழைக்க……..

“அப்படியா உன் செல்லை குடு!”, என்றாள்.

“எதுக்கு?”, என்று அவன் தடுமாற…..

“நீ அவன் கிட்ட எத்தனை தடவை பேசியிருக்கேன்னு பார்க்கிறேன்”, என்றாள்.

செல்வம் இன்னும் தடுமாறினான்….

கையை நீட்டினாள். அவன் அப்படியே நிற்க…..

“ம்! குடு!”, என்று அதட்டினாள்.  

வேர்த்து விறுவிறுக்க அதை எடுத்து நீட்டினான்.

இதுவரை கார்த்திக்கின் நம்பரில் இருந்து இரண்டு கால்கள் வந்திருந்தன.. எல்லாம் மதியம் ஒரு மணியளவில்…..

“வேலையை விட்டு அனுப்பிட்டான்னு சொன்ன…….. எதுக்கு போன் பண்ணினான்”, என்றாள் கூர்மையாக.

“கிரானைட் ஸ்டாக் டீடெயில் கேட்க”, என்று செல்வம் சொன்னான். சொல்லும்போதே இன்னும் வேர்த்து ஊற்றியது. 

சக்தி அதை நம்பினது போல தெரியவில்லை.

அவள் மெசேஜ் போய் இன்பாக்ஸ் பார்க்க……. “மேம் இன் காலேஜ்!”, என்று கார்த்திக் நம்பருக்கு ஒரு மெசேஜ் போயிருந்தது. அதை வாய்விட்டு படித்தாள். செல்வம் பிடிப்பட்ட உணர்வுடன் நின்றான்.

அதை அவள் பார்த்துக்கொண்டிருந்த போதே கார்த்திக்கிடம் இருந்து போன்…….

ஆத்திரம் தலைக்கேற போனை எடுத்து சுவரில் வீசினாள், அது பார்ட் பார்டாக ஓடியது.

ஸ்தம்பித்து நின்ற செல்வம், பிறகு அமைதியாக அதையெல்லாம் பொறுக்கினான்.   

பொறுக்கி எடுத்தபின்னும், “சாரி!”, சொல்லிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.

“கிளம்பு நீ முதல்ல! கீழ வீசுன மாதிரி எதையாவது எடுத்து உன்மேல வீசிட போறேன்! நீ முதல்ல கிளம்பு!”, என்றாள்.

செல்வம் அசையவேயில்லை, “சாரி!”, சொல்லிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான். “ப்ளீஸ் மேடம்! இந்த மாதிரி இனி நடக்கவே நடக்காது! நிச்சயம் நான் உங்களுக்கு உண்மையா தான் இருப்பேன்! நம்புங்க மேடம்!”, என்றான்.

“முதல்ல நீ போ!”, என்று வெறுப்போடு சொன்னவள்……..  

“நான் முதல்லயே சொன்னது தான்! உன்னை வேலையை விட்டு அனுப்பமாட்டேன்! ஏன்னா நீ போனா இன்னொருத்தனை அவன் நிச்சயமா வைப்பான்”, என்றாள். அதை சொல்லும்போது அவளின் குரலில் அவ்வளவு வேதனை.

அது செல்வத்தின் மனதை பிசைந்தது.

“போ!”, என்று மறுபடியும் குரலுயர்த்தி சொல்ல…….

“ப்ளீஸ் மேடம்! என்னை நம்புங்க! இனிமே செய்ய மாட்டேன்!”, என்றான் மன்றாடிய குரலுடன்.

“இனிமே நான் யாரையாவது நம்புவேனா……. அதுகெல்லாம் வாய்ப்பேயில்லை….. அந்த நம்பிக்கை துரோகி அவ்வளவு பெரிய பாடத்தை எனக்கு கத்துக் கொடுத்துட்டு போயிருக்கான்”, என்றாள் இன்னும் வெறுப்புடன். 

அவன் என்ன செய்வது, என்ன சொல்வது என்று அறியாதவனாக வெளியில் வந்தான்.

அதன் பிறகும் வெகு நேரம் இருந்தாள் சக்தி… யாராவது ஏதாவது கோரிக்கையை எடுத்து அவளைப் பார்க்க போய் வந்து கொண்டே இருந்தனர். மறந்தும் செல்வத்தை எந்த வேலைக்கும் அழைக்கவில்லை.

அவள் வீட்டிற்கு கிளம்பும் போது மாலை மணி ஆறு. அவள் வெளியே வந்து காரில் ஏறப்போகும்போது செல்வம் அவளை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். கருப்பண்ணன் சக்திக்கு கார் கதவை திறந்து விட……..

அது கார்த்திக்கின் செய்கையை அவளுக்கு ஞாபகப்படுத்தியது. மலுக்கென்று கண்களில் கண்ணீர் உதித்தது. கடகடவென்று கன்னத்தில் இறங்கியது. யாரும் கவனிக்கும் முன் வேகமாக துடைத்தாள். செல்வம் பார்த்துக்கொண்டே தான் இருந்தான். 

“கருப்பண்ணா”, என்று தொண்டையை சரி செய்து அழைத்தவள்……. “இனிமே இந்த தப்பை மறந்தும் செய்துடாதீங்க! அப்புறம் எனக்கு எப்பவுமே நீங்க கார் ஓட்ட மாட்டீங்க!”, என்றாள் கடுமையான குரலில்.   

“சரிம்மா”, என்றார் நலிந்த குரலில் கருப்பண்ணன்.

பார்த்திருந்த செல்வத்திற்கு இதயம் கனத்து போனது.     

கார்த்திக் செல்வத்தை தொடர்பு கொள்ள முயன்று முயன்று முடியாமல் என்னவோ ஏதோ வென்று ஒரு சஞ்சலத்தோடு இருந்தான்.

கார்த்திக்கை அவனின் அம்மா, இனி வீட்டில் தான் தங்க வேண்டும், வேறு எங்கும் தங்கக் கூடாது என்று விட்டார்.

மீறி அவன் எங்கு தங்கினாலும் தாங்கள் எல்லோரும் அவனுடன் வந்துவிடுவோம் என்று கூற….. கார்த்திக்கிற்கு அங்கே தங்குவதை தவிர வேறு வழியில்லை.  ஏனென்றால் அவனின் தாத்தாவை இந்த வயதில் தனியாக விட்டு விட்டு போகமுடியாது. தாத்தா அவனுடன் வரமாட்டார்.

இங்கே இந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருக்க……. அவன் மனம் முழுவதும் வீரமணியின் வீட்டில் என்ன நடந்துகொண்டிருக்கும் என்பதே.

செல்வம். “மேம் இன் காலேஜ்”, என்று ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தான். அதன் பிறகு கார்த்திக் அவனை அழைத்த போது….  இரண்டு ரிங் தான் சென்றது, அதன் பிறகு சுவிட்ச் ஆப் என்று வந்தது.

சரி சக்தி ஏதாவது கூட இருந்திருப்பாள்….. அதனால் சுவிட்ச் ஆப் செய்திருப்பான் என்று அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டு, அதன் பிறகு உடனே அழைக்காமல் மாலை ஆறுமணிக்கு தான் அழைத்தான்.

அப்போதும் போன் சுவிட்ச் ஆப் என்று தான் வந்தது.

அதற்குள் வெகு காலத்திற்கு பிறகு நேரடியாக பார்க்கும் அண்ணனிடம் பேச வைஷ்ணவிக்கு நிறைய விஷயங்கள் இருந்தது. லொட லொட வென்று பேசினாள்.

சுமித்ரா அவளைப் போல பேசவில்லை என்றாலும் தள்ளி எல்லாம் நிற்கவில்லை, சகஜமாக அவர்கள் இருக்கும் இடத்தில் தான் இருந்தாள்.

அவன் வீடு வந்துவிட்டான் என்பது அவர்கள் எல்லோருக்கும் உற்சாகத்தை கொடுத்தது.

பத்ரிநாத் வேறு கார்த்திக் எப்படி வாசுகி குழுமத்தை தக்க வைத்துக்கொண்டான் என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டுகொண்டிருந்தார்.

அதற்கெல்லாம் பதிலளிக்க கார்த்திக்கிற்கு நேரமில்லை….. அவனின் வாசஸ்தலம் இடம் மாறியதை பலருக்கு சொல்ல வேண்டி இருந்தது. அவர்கள் எல்லாம் அடிக்கடி தொழில் விஷயமாக நேரம் காலம் பார்க்காமல் அவனை தேடுபவர்கள்…..

சிலருக்கு அவனை பார்க்க வேண்டி இருக்க….. விவரம் தெரிந்த உடனே இங்கே வந்தனர். இத்தனை காலம் அமைதியாக இருந்த பத்ரிநாத்தின் வீடு பரபரப்பானது.

வருபவர்கள் அவனிடம் காட்டும் பவ்யம் பத்ரிநாத்தை வியக்க வைத்தது. அவரின் சொந்த ஊர் இது என்பதால் அவருக்கு இங்கே அனேகம் பேர் பழக்கம்.

இங்கே திரும்ப வந்த பிறகும் அவ்வளவாக யாருடனும் பேசாமல் பழகாமல் இருந்தார் பத்ரிநாத்.

அன்று மெதுவாக அவர்களுக்கு எல்லாம் தொலை பேசி வாயிலாக அழைத்தவர் வாசுகி குழுமம் மீண்டும் தங்களுடையதாகிவிட்டதை பெருமை பேசியவர், அப்படியே கார்த்திக்கை பற்றியும் பேச……

அங்கே நிறைய பேருக்கு கார்த்திக்கை பற்றி தெரிந்திருந்தது. எல்லோரும் அவன் இத்தனை காலம் வீரமணியுடன் தான் இருந்தான் என்று சொன்னர். அதே சமயம்  எல்லோரும் வீரமணியை பற்றி நல்ல விதமாக தான் பேசினர். ஆனால் கார்த்திக்கை பற்றி பேசவே தயங்கினர்.

கார்த்திக் சமூகத்தில் எலோருக்கும் தெரிந்த ஒரு இடத்தில் இருந்தான். அவனைப் பற்றி பேசவே எல்லோரும் பயந்தனர் என்று பத்ரிநாத்தால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிந்தது.

இரவு வரை வேலைகள் சரியாக இருந்தாலும் கார்த்திக்கிற்கு ஏன் செல்வம் போன் எடுக்கவில்லை……. திரும்ப ஏன் அழைக்கவில்லை…….. இப்படி செய்ய மாட்டானே….. தான் செய்து முடி என்று வாக்கியத்தை முடிக்கும்முன்னே வேலையை முடிக்க நினைப்பானே…… என்னவாயிற்று மனதிற்குள் ஒரு புறம் ஓடிக்கொண்டே இருந்தது.

சாப்பிட்டு உறங்கப் போகுமுன், “அம்மா நான் வெளியே போயிட்டு வர்றேன்!”, என்று கிளம்பினான்.

“எங்க கார்த்திக் இந்த நேரத்துல?”, என்று வாசுகி கேட்க……

“கிரானைட் லோடு ஒண்ணு அனுப்பனும்! அதுக்கு நான் இருக்கனும்!”, என்று சொல்லி சமாளித்து கிளம்பினான்.

செல்வத்தின் வீட்டிற்கு வந்தான்……. வீதியே உறங்கியிருக்க……. செல்வம் மட்டும் அவனின் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தான்.

ஆம்! செல்வம் கார்த்திக்கை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்! அவனுக்கு தெரியும் கார்த்திக் கட்டாயம் தன்னைப் பார்க்க வருவான் என்று.

நான்கு நாட்களுக்கு முன் செல்வத்தை அழைத்த கார்த்திக், “நீ காலேஜ் போயிடு! நான் அவங்க வீட்டை விட்டுப் போகப்போறேன்…… வாசுகி குழுமம் இனி எங்களோடது!”, என்று சொல்ல…..

செல்வத்திற்கு அதிர்ச்சி…… அவனுக்கு விளக்கம் குடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் செல்வத்தை கார்த்திக் ஒரு நல்ல இடத்தில் வைத்திருந்ததால் விளக்கம் சொன்னான். 

“அது எங்கம்மாவோட அப்பாவோடதுதான் செல்வம்! எங்கப்பா கிட்ட பார்த்துக்க சொல்லி கொடுத்திருந்தாங்க…… அதை அவர் வீரமணி அய்யாக்கு எங்க தாத்தாக்கு தெரியாம வித்துட்டார். அதை திரும்ப வாங்கிக்கொடுக்க தான் இங்கே வந்தேன்!”, என்றான்.

செல்வத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த வீட்டில் உள்ளவர்களை கார்த்திக் எப்படி பார்த்துக்கொள்வான்……… அவர்கள் அவனை எப்படி பார்த்துக்கொள்வார்கள் என்று அவனுக்கு தெரியும்.

அதுவும் கார்த்திக் சக்தியின் உறவு என்ன மாதிரியான உறவு என்று பலமுறை வியந்து இருக்கிறான். கார்த்திக் சக்தியை எப்போதும் அவ்வளவு அக்கறை எடுத்து பார்த்துக்கொள்வான், சக்தி கார்த்திக் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வாள்.

இருவருமே மற்றவர் மேல் மிகுந்த அக்கறையும் அன்பும் வைத்திருப்பவர்கள் என்று செல்வத்திற்கு நன்றாக தெரியும்.

செல்வத்தின் மனம் இந்த உறவு இதற்கு மேல் ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்குமா என்று எதிர்பார்த்திருக்க…… ?????  

இப்படி இருப்பவர்களை எப்படி கார்த்திக் ஏமாற்றுகிறான் என்பதே செல்வத்திற்கு புரியாத புதிராக இருந்தது. 

கார்த்திக்கிற்கு சக்தி மேல் என்ன மாதிரியான அக்கறை என்று செல்வத்திற்கு தெரிய வேண்டி இருந்தது. அதனால் தான் சிம்மை எடுத்து வேறு போனில் போடாமல்…….. இவனாகவும் கார்த்திக்கை தொடர்பு கொள்ளாமல் இருந்தான்.  கார்த்திக் இங்கே அவனை தேடி வருவான் என்பது அவனுக்கு நிச்சயம்.           

“என்னடா இங்க உட்கார்ந்திருக்க”, என்று கார்த்திக் கேட்க……

“நீங்க வருவீங்கன்னு உங்களுக்காக தான் பார்த்துகிட்டு இருந்தேன்!”, என்றான்.

“நான் வருவேன்னு எப்படி தெரியும்?”,

“நான் போன் எடுக்கலை! சக்தி மேடம் பத்தி உங்களுக்கு தெரிஞ்சே ஆகனும்! அப்புறம் நீங்க வருவீங்கன்னு தெரியாதா?”, என்றான் விறைப்பாக செல்வம்.  

இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்று புரியாமல்…… “ஏண்டா போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது”, என்றான் அதட்டலாக……

“போன் உடைஞ்சா அப்படிதான் வரும்!”,

“என்ன? உடைஞ்சிடுச்சா! சின்ன பையனாடா நீ……… இப்படி பொறுப்பில்லாம போனை உடைச்சிருக்க!”,

“நான் உடைக்கலை, சக்தி மேடம் உடைச்சிட்டாங்க!”,

“அவங்க ஏண்டா உன் போனை உடைச்சாங்க”,

“நீங்க போன் பண்ணுனீங்க! அவங்க உடைச்சிடாங்க!”,

“டேய்! என்று கோபமாக கத்தியவன்……… “பிட்டு பிட்டா சொன்ன! உதை வாங்குவ! என்ன நடந்ததுன்னு ஒழுங்கா சொல்லு!”, என்று அடிப்பது போல வந்தான்.

கோபம் வந்தால் கார்த்திக் அடிக்கக் கூட தயங்க மாட்டான் என்று செல்வத்திற்கு தெரியும்…… அதனால் தள்ளி நின்று பேசினான்.

“மாட்டிக்கிட்டேன்! என்னை அங்க பார்த்தவுடனே நீங்க தான் அனுப்பியிருக்கீங்கன்னு உடனே முடிவு பண்ணிடாங்க!”,

கார்த்திக் கோபமாக முறைக்கவும்…..  

“நான் இல்லைன்னு சொன்னேன்! அப்படியான்னு சொல்லி போனை செக் பண்ணாங்க! மெசேஜ் பார்த்தாங்க! அப்போ பார்த்து நீங்க போன் பண்ணுனீங்க…. போன் தூள் தூள் ஆகிடுச்சு…..”,

“ஏண்டா ஒரு நாள் கழிச்சுக் கூட மாட்ட மாட்டியா! உடனே மாட்டுவியா……. என்னை பிடிக்காம கார்த்திக் சார் வெளிய அனுப்பிட்டார்! இங்க வேலை காலி இருந்தது வந்தேன்னு சொல்ல வேண்டியது தானேடா!”,

“சொல்ல மாட்டீங்க!”, என்று நொடித்தவன்……. “அதெல்லாம் தெளிவா இருக்காங்க!”,

“என்னடா தெளிவா இருக்காங்க”,

“உங்க கிட்ட மட்டும் தான் ஏமாறுவாங்கலாம்! வேற யார் கிட்டயும் ஏமாறுற ஐடியா இல்லைன்னு சொல்லிட்டாங்க!”, என்றான் சக்தி சொல்லியதை போல நக்கலாக…..

அந்த வார்த்தைகளில் சக்தியின் மனதின் காயம் புரிந்தது கார்த்திக்கிற்கு…….  யோசனையில் ஆழந்த கார்த்திக், “வேலையை விட்டு அனுப்பிடாங்களா?”,

“இல்லை! தெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேயே மேல்! நீயே இருன்னு சொல்லிட்டாங்க……”,

கார்த்திக் புரியாமல் பார்க்க………  

“என்னை அனுப்பினா வேற யாரையாவது நீங்க அவங்களை கண்காணிக்க வைபீங்கன்னு உறுதியா நம்புறாங்க……”, என்றான்.

கார்த்திக் சக்தியின் இந்த பரிமாணத்தை எதிர்பார்க்கவில்லை. காலையில் தானே அவளை விட்டு வந்தோம், ஒரு நாளைக்குள் சக்தி எவ்வளவு என்னைப்பற்றி தப்பாக யோசித்து இருக்கிறாள். மனம் முழுவதும் ஒரு இனம் புரியாத வலி பரவியது.  

கார்த்திக் யோசனையில் இருக்க……. அதை சொல்லும்போது, “அவங்க குரல்ல அவ்வளவு வேதனை……. அவ்வளவு வலி பாஸ்……..”, என்றான் செல்வம்.

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு!”, என்று சொன்னவன்……… “என்னால முடியாது பாஸ்!”, என்றான்.

கார்த்திக் அவனை பார்க்க….. “நிஜமா என்னால இது முடியாது பாஸ்! என்னை உங்க கூட கூப்ட்டுகோங்க…… இல்லை அவங்க கூட விட்டுடுங்க……”,

“அவங்க என்ன பண்றாங்கன்னு அங்க நடக்கறதை எல்லாம் என்னால சொல்ல முடியாது, என் மனசாட்சியே என்னை குத்தி கிழிச்சிடும்!”, என்றான்.

“என்னால இன்னைக்கு அவங்க முகத்தைப் பார்க்கவே முடியலை……”,  

“டேய் அது மேம் நல்லதுக்கு தாண்டா! அவங்களுக்கு ஒரு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் அவங்கப் பாடு அவங்க கணவர் பாடு! அதுவரைக்கும் அவங்க எப்படியோ போறாங்கன்னு என்னால விட முடியாது”,

“என்ன பாஸ் கதையா இருக்கு இது! ஏன் அவங்க அப்பா பார்த்துக்க மாட்டாறா….. அவரோட செல்லப் பொண்ணு அவங்க”  

“வீரமணி அய்யா பார்த்துக்குவார் தான்! ஆனாலும் நான் பார்த்தா தாண்டா எனக்கு நிம்மதி!”, என்றான்.

சக்தியின் வார்த்தைகள் இன்னும் கார்த்திக்கின் காதுக்குள் ஒலித்தன, “நீ என்னை உனக்கு அடிக்ட் பண்ணிட்ட கார்த்திக்…. நீ இல்லாம நான் என்ன செய்வேன்! கீழ இருந்து விழுந்தா அடிபடாதுன்னு மேல இருந்து தள்ளிவிட்டுடியா”, என்ற வார்த்தைகள், அவன் காலையில் கேட்டதில் இருந்து சம்மட்டியாய் அவன் மண்டையில் ஒரு புறம் அடித்துக்கொண்டே இருந்தது.

“அப்படி சொல்லுங்க! உங்களால மேடமை பார்க்காம இருக்க முடியாதுன்னு சொல்லுங்க!”, என்றவன்……

“ஆனா என்னால முடியாது பாஸ்! அவங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்க! என்னை நிமிஷத்துல கண்டுபிடிச்சிட்டாங்க……. நீங்க என்ன செய்வீங்கன்னும் கெஸ் பண்றாங்க!”, என்றான் பிடிவாதமாக.

இவ்வளவெல்லாம் செல்வம் கார்த்திக்கிடம் பேசியதே இல்லை……. கார்த்திக்கிற்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது.   

“அப்போ நான் சொல்றதை கேட்க மாட்டே”,

“மாட்டேன்!”, என்று இன்னும் பிடிவாதமாக செல்வம் சொல்ல……. 

கார்த்திக் செல்வத்தின் முகத்திலேயே விட்டான் ஒரு குத்து… உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

செல்வம் வாயை பிடித்து கொண்டான்……

“கேட்க மாட்டியாடா நீ!”, என்று கார்த்திக் கர்ஜிக்க…..

அந்த நிலையிலும், “கேட்க மாட்டேன்”, என்றான் உறுதியாக செல்வம்…… கூடவே “என்னால மேடமை கஷ்டப்படுத்த முடியாது பாஸ்!”, என்றான்.

அதற்கு இன்னும் ஆத்திரப்பட்ட கார்த்திக் “உனக்கென்னடா அக்கறை”, என்று ஒரு உதை விட உருண்டு போய் விழுந்தான்.

 ஆங்காங்கே சிராய்ப்புகள் காயங்கள்…. செல்வம் அடிபட்டான்……… இருந்தாலும் சிரமப்பட்டு எழுந்து நின்றான்.

செல்வம் சிறிதும் கோபப்படவில்லை…….. “ப்ளீஸ்! நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கோங்க பாஸ்! அவங்க கஷ்டப்பட்டா நீங்க எவ்வளவு வேதனைப்படுவீங்கன்னு எனக்கு தெரியும், நீங்க எனக்கு முக்கியம் பாஸ்”, என்றான்.

“ஒண்ணு உங்க கூட இருக்கேன், இல்லை அவங்க கூட இருக்கேன்! அங்க நடக்கறதை இங்க என்னால கட்டாயம் சொல்ல முடியாது”,

“தொழில்ல நீங்க என்ன சொன்னாலும் செய்வேன் பாஸ்! அது சரியோ தப்போ உங்க கூட நிற்பேன்! ஆனா இந்த விஷயத்துல முடியாது”,

“அவங்களை விட்டுடுங்க”, என்றான்.

இந்த வார்த்தைகளை சொன்னவுடன், சப்பென்று கன்னத்தில் அரை வாங்கினான். தன்னுடைய இயலாமையை எல்லாம் கார்த்திக் செல்வத்திடம் காட்டிக்கொண்டு இருந்தான்.

செல்வம் அப்போதும் அடங்கவில்லை….

“விட்டுடுங்கன்னு சொன்னா உங்களுக்கு ஏன் கோபம் வருது! நீங்க என்ன அவங்களை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?”, என்றான்.

அவன் சட்டையைப் பிடித்த கார்த்திக், “டேய் அதிகமா பேசாத! என்கிட்ட உதை வாங்கியே ஒழிஞ்சிடுவ”, என்று கார்த்திக் கர்ஜிக்க……..

சற்றும் அசராத செல்வம், “அப்புறம் எதுக்கு அவங்க எங்க போறாங்க? எங்க வர்றாங்க? என்ன செய்யப் போறாங்கன்னு பார்க்க போறீங்க?…. சொல்லுங்க!”, என்றான் விடாமல்.  

“அது இவ்வளவு நாளா நான் கூட இருந்தேன்! அவங்க ஏதாவது பிரச்சினையில மாட்டிகிட்டா!”, என்றான்.

“நீங்க நினைக்கற அளவுக்கு அவங்க ஒண்ணும் விவரம் தெரியாதவங்க கிடையாது. நீங்க இப்படி அவங்க பின்னாடி ஏதோ ஒரு வகையில் இருக்கீங்கன்னு தெரிஞ்சா…. அவங்க உங்களை ஏதாவது ஒரு வகையில நினைப்பாங்க, அப்புறம் எப்படி அவங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பாங்க”, என்று கேள்வி எழுப்பினான்.

மண்டை வலித்தது கார்த்திக்கிற்கு.   

“எனக்கு தெரியும் அவங்க உங்களுக்கு ரொம்ப முக்கியம்னு. நான் இருக்கேன் அவங்க கூட…….. நான் பார்த்துக்கறேன். எந்த பிரச்சனையும் வராது. என்னால பார்த்துக்க முடியாதுன்னு தோணினாலோ…….. ஏதாவது பிரச்சனைன்னாலோ….. அடுத்த நிமிஷம் உங்களுக்கு தகவல் கொடுக்கறேன்”,

“இப்போதைக்கு அவங்களை ஃப்ரீயா விடுங்க! உங்களுக்காக தான் பாஸ் இதை சொல்றேன்! உங்களைப் பத்தி பேசும்போது அவ்வளவு கோபம்…. அவ்வளவு வெறுப்பு…. அவங்க முகத்துல. நீங்க இப்படி செஞ்சீங்கன்னா இன்னும் அதிகமாகும் பாஸ்”, என்றான்.

கார்த்திக் யோசிக்கவும்……..

“நீங்க தான் ஃபிலிம் லைன் இப்போ போகப் போறீங்க தானே, அதை பாருங்க! சக்தி மேடமை நான் பார்த்துக்கறேன்”, என்றான்.

செல்வம் மீண்டும் மீண்டும் நான் பார்த்துக்கறேன் எனவும் கார்த்திக் அவனை சந்தேகமாக பார்க்க…….

“ஏன் பாஸ் இந்த லுக்கு? அஞ்சு பொண்ணுங்களோட பொறந்தவன் நான். மூணு பேருக்கு உங்க தயவுல கல்யாணம் பண்ணி வெச்சு சீரும் சிறப்புமா இருக்காங்க. இன்னும் ரெண்டு பேருக்கும் நீங்க தான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணனும்…….”,

“எனக்கு எந்த பொண்ணை பார்த்தாலும் தங்கச்சி ஃபீல் தான் வரும், டோன்ட் வொர்ரி!”, என்றான் லகுவாக.

கார்த்திக் அவனை மேலும் கீழும் அளவெடுக்க…….

“என்ன பாஸ்?”,

“மேம் டேஸ்ட் இவ்வளவு மட்டம் இல்லைடா”, என்றான்.

“ஏன் பாஸ்? உடம்புல தான் அடி வாங்கினேன்னா! நெஞ்சுலையும் அடிக்கறீங்க!”, என்று வராத கண்ணீரை துடைக்கப் போக…….. கைகள் அடிப்பட்ட உதட்டில் பட்டு அவனையும் மீறி, “ஷ்……. ஆ……”, என்று வலியில் முனக வைக்க…..

“சாரிடா!”, என்றான் கார்த்திக்.  

“விடுங்க பாஸ்!  இதெல்லாம் ஒண்ணுமில்லை”, என்றவன்……..

“அவங்களை விட்டுடுங்க! நான் பார்த்துக்கறேன்! சின்ன பிரச்சனைனாலும் சமாளிக்க முடியாதுன்னு தோணினா உடனே சொல்றேன்”, என்று மறுபடியும் மறுபடியும் சொல்லி……… வெகுவாக கார்த்திக்கை சமாதானபடுத்தி அனுப்பினான்.

கார்த்திக் குழப்பிக்கொண்டே சென்றான்……. “சக்தியை விடுவதா? என்னால் முடியுமா?”, என்று.     

கார்த்திக்கின் உண்மையான விசுவாசி செல்வம்…….

சக்தியை கார்த்திக் கவனிக்கும் விதம் பார்த்து, அக்கறை பார்த்து சக்தியையும் செல்வம் மிக உயரத்தில் வைத்திருந்தான்.          

இன்னுமே கார்த்திக் சக்தியின் உறவு என்ன மாதிரியானது என்று செல்வத்தினால் வரையறுக்க முடியவில்லை என்றாலும்……….

கார்த்திக்கை அவனின் நடவடிக்கைகளை பார்த்த செல்வத்திற்கு உறுதியாயிற்று, கார்த்திகினால் எப்போதும் சக்தியை விட முடியாது என்று.

ஆனால் சக்தி? இதை அவர்கள் விரும்பவே மாட்டார்கள் என்று தான் தோன்றியது. 

காலம் வைத்திருக்கும் கோலம் மனிதனால் கணிக்க முடியாது என்பதே உண்மை.

 

              

 

      

  

                                  

 

 

Advertisement