Advertisement

அத்தியாயம் பதினொன்று :

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்                                                                                                 ஏழைமை யுண்டோடா? – மனமே!                                                                                 பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்                                                                                                                 புத்தி மயக்கமுண்டோ? 

               ( பாரதி )

கிருஷ்ணகிரியின் மையப்பகுதியில் அந்த பெரிய பங்களாவின் முன் காரை நிறுத்தினான் மாரி. கார்த்திக் காரை விட்டு இறங்கினான்.

மனம் கனத்து இருந்தது. அந்த வீட்டை விட்டு அவன் வெளியேறிய தருணம் அவனுள் படமாய் ஓடியது.

மறக்க நினைக்காத தருணங்கள், அவை தானே அவனை இந்த ஓட்டம் ஓடவைத்தது.

“நீ இங்கயே இரு மாரி”, என்றுசொல்லி அவன் கேட்டின் முன் செல்லவும்…..

காவலாளி வந்து, “யாரு நீங்க? உங்களுக்கு யாரை பார்க்கனும்”, என்றான்.

யாரை என்று சொல்லுவான்…… அவன் குடும்பம் அங்கே தானே இருக்கிறது. நானும் இந்த வீட்டில் ஒரு ஆள் என்றா சொல்லுவான்.

“தாத்தாவைப் பார்க்கனும்”, என்றான்.

“இருங்க கேட்கறேன்”, என்று அவன் அமரும் பகுதியில் இருந்த இன்டர்காமை எடுத்தவன்….. வீட்டிற்கு உள்ளே கனெக்ட் செய்து…. “உங்களை யாருன்னு சொல்றது சார்”, என்றான்.

“கார்த்திகேயன்……. சந்திரசேகரோட பையன்னு சொல்லுங்க”, என்றான்.

போன் எடுத்தது வாசுகி….. “அம்மா, நம்ம பெரியய்யாவை பார்க்க கார்த்திகேயன்னு ஒருத்தர் வந்திருக்கார்மா…… உள்ள அனுப்பட்டுமாம்மா”, என்றான்.

“கார்த்திகேயன்”, என்றதும் நெஞ்சம் படபடக்க……. “யார்ன்னு சொன்னாங்க”, என்று வாசுகி கேட்டார்.

“சந்திரசேகர்ன்னு ஒருத்தரோட பையனாம்மா”, என்று அவன் சொல்லவும்…..

கார்த்திக்………. என் கார்த்திக் வந்துவிட்டானா? திரும்ப என்னிடம் வந்துவிட்டானா?  

போனை வைத்தவர் விரைந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டின் வாயிலுக்கும் கேட்டிற்கும் கொஞ்சம் தூரம் போக வேண்டும்.

அங்கேயிருந்து பார்த்தால் யார் என்று தெரியவில்லை. கார்த்திக் இன்னும் கேட்டிற்கு வெளியே தான் நின்றிருந்தான்.

“உள்ளே அனுப்பு”, என்பது போல சைகை செய்தார்.  

“உள்ள போங்க சார்”, என்றான் காவலாளி……

கார்த்திக் உள்ளே வந்தான். அவன் உள்ளே வர வர வாசுகிக்கு நெஞ்சம் விம்மியது. அவரின் மகன்……. அவரின் மகன் என்று கூட யாரிடமும் சொல்ல முடியாதபடி அவரை வார்த்தையால் கட்டியிருந்தான். அவரின் மகன் எத்தனை வருடங்களுக்கு பிறகு அவர் இருக்கும் வீட்டிற்கு வருகிறான்.  

அவன் நடந்து வந்து அவரை நெருங்கும் வரை அவனை கண்களில் நிரப்பினார்.

அவனின் கம்பீரமான தோற்றத்தை அவன் நெருங்கும் வரை பார்த்து ரசித்தார். அப்படியே அவனின் அப்பாவை போல என்று அவரால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. 

அவனருகில் வந்ததும், “உங்கப்பாவோட பையன் தானா நீ! என் பையன் இல்லையா!”, என்றார் குரல் தழு தழுக்க.

“அம்மா!”, என்றவன்…….. “நான் உன் பையன் தான்மா! அது தாத்தாக்காக சொன்னேன்”, என்றான் அவரை தோளோடு அணைத்து.    

 “நீ வர்றதுக்காக எத்தனை வருஷம் காத்திருக்கிறது! என் ஞாபகமே உனக்கு இல்லையா…… கல்யாணத்துல பார்த்ததுக்கு அப்புறம் கூட நீ என்கிட்ட பேசவேயில்லை”,

“மறந்தாதானே அம்மா ஞாபகம் வர்றதுக்கு”, என்றான்.

“ஆமா! இந்த டையலாக் வேறையா?”, என்று சந்தோஷமாக புன்னகைத்தார்.

“காலைல சாப்பிட்டியா? இல்லையா? சோர்ந்து தெரியற!”, என்றார்.

அதுதானே அம்மா, முதலில் பிள்ளைகளின் வயிற்றை தானே கவனிப்பார். “அதெல்லாம் வேணும்ங்கற அளவுக்கு சாப்பிட்டு இருக்கேன்”, என்றான்.

நிஜத்தில் அவன் சாப்பிடவில்லை…….. அவன் சொன்னது அவன் சக்தியிடமும், வீரமணியிடமும், தெய்வானையிடமும் வாங்கிய பேச்சுக்கள்.  

“எனக்கென்னவோ நீ சாப்பிட்ட மாதிரியே தோணலை?”, என்று சொல்லி……

சமையல் செய்யும் அம்மாவை, “டீ கொண்டு வாங்க!”, என்று பணித்தவர்…. காலையில் வைஷ்ணவிக்கும் சுமித்ராவிற்கும் காலேஜ் கொண்டு செல்வதற்காக செய்திருந்த தேங்காய் சாதத்தை போட்டு கொடுத்தார்.

மறுக்காமல் வாங்கி உண்டான், பின்பு டீயை குடித்தான்….. அதன் பிறகே நிமிர்ந்தான்.

“பொய் தானே சொன்ன, சாப்பிட்டேன்னு?”, என்று அவன் அம்மா கேட்க… ஒரு சின்ன புன்னகை மட்டுமே பதில்.

“ஏன்? வீரமணி அண்ணா வீட்ல சாப்பிடலையா நீ”, என்றார்.

“இனிமே நான் அவர் வீட்ல சாப்பிட முடியாதும்மா”,

“ஏன்?”,

“நான் யார்ன்னு அவர் கிட்ட சொல்லிட்டேன்”,

“என்ன? என்று அதிர்ந்தவர்…….. அப்போ  வாசுகி குழுமத்தை……”, என்று அவர் இழுக்க…..

“தாத்தா பேர்ல மாத்திட்டேன்!”, என்றான்.

என்ன நடந்திருக்கும் என்று வாசுகியால் யூகிக்க முடிந்தது. “என்ன சொன்னார் வீரமணி அண்ணா”,

“என் முகத்துலயே முழிக்காத போன்னு விரட்டிடாங்க”,

“திரும்ப குடு அப்படின்னு எதுவும் சொல்லலையா?”,

“இல்லை”, 

“நான் தான் வேண்டாம்! விட்டுடலாம்! நமக்கிருக்கிறது போதும்னு சொன்னேனே!”,

“இது என் அப்பாக்காக நான் செய்ய வேண்டியதும்மா! எங்கே உங்கப்பா? அவர்கிட்ட முதல்ல இதை நான் சொல்லணும்!”, என்றான்.

“இன்னைக்கு சஷ்டி! அதான் பக்கத்துல இருக்குற முருகன் கோயிலுக்கு உச்சி கால பூஜைக்கு போயிருக்கார்! இப்போ வந்திடுவார்!”, என்றார்.

“அம்மா நான் இப்போ வாசுகி குழுமம் அவரோடதுன்னு சொல்லிடுவேன். அவரோடதுதான்! ஆனாலும் நான் தான் பார்த்துக்குவேன்! என்னால அதை விட்டு விலக முடியாது. அதுல வர்ற லாபம் அவருக்கும் போகும். கம்பனியும் அவரோடதுதான். ஆனா அங்கே நான் தான் இருப்பேன்…… என்னை மீறி எதுவும் நடக்காது!”,

“இது எப்படி அவரோட பேருக்கு மாறினதுன்ற விவரம் அவருக்கு தெரியனும்னு அவசியமில்லை! நீங்க சொல்றதையும் நான் விரும்பலை!”, என்றான்.

“இல்லை! நான் சொல்லலை!”, என்று  அவர் சொல்லும்போதே உள்ளே நுழைந்தார் பத்ரிநாத்.

“யாரும்மா வந்திருக்கா! நம்ம கேட்க்கு முன்னாடி கார் நிக்குது!”, என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

உள்ளே நுழைந்ததும் கார்த்திக் அங்கே இருப்பதை பார்த்தார். அவனும் அவரை பார்த்ததும் எழுந்து நின்றான்.

அவருக்கு கார்த்திக்கை தெரியவில்லை……. வீட்டை விட்டு போய் ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கு அடையாளம் தெரியவில்லை . அவன் இந்த வீட்டை விட்டு போகும்போது இருந்த தோற்றத்திற்கும் இப்போதைக்கும் கொஞ்சமும் சமந்தமில்லை.

அப்போதும் உயரம் தான் என்றாலும், அந்த வயதுக்குறிய லட்சனங்களோடு சின்ன பையனாக தெரிந்தவன்….. இப்போது தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சிகளாலும், வயதின் பரிமாணத்தினாலும், உடம்பை ஏற்றி ஒரு முழுமையான ஆண்மகனாக மாறியிருந்தான்.

அப்போது தான் மீசை முளைக்க ஆரம்பித்த வயது….. இப்போது பெரிய தொங்கு மீசை வைத்து முகமே மாறியிருந்தது.     

“யாரும்மா இது?”, என்றார்.

“நம்ம கார்த்திக் பா!”, என்றார்.

“என்ன கார்த்திக்கா”, என்றார் ஆச்சர்யமாக…….

அவர் அவனை எதிர்பார்க்கவில்லை. அவரிடம் சண்டை போட்டு தான் கார்த்திக் வீட்டை விட்டுப் போனான்.

முதலில் அவன் என்ன செய்கிறான் எங்கே இருக்கிறான் என்ற விவரமே வாசுகிக்கு தெரியாது. அவ்வப்போது போன் செய்து தன் நலத்தை மட்டும் தெரிவிப்பான்.

அவருக்கு அவன் எங்கேயிருக்கிறான் என்று சொன்ன போது இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருந்தன.  

அவரின் கையை விட்டு அவன் போயிருந்தான் என்பது தான் உண்மை.  

அவனின் முடிவுகளை அவன் தான் எடுத்தான்.

அங்கே ஏன்? ஏன்? என்று கேட்டபோது பதிலே சொல்லவில்லை. யாரிடமும் அவன் யார் எங்கேயிருக்கிறான் என்று சொல்லக்கூடாது என்று ஆணையும் வைத்துவிட்டான்.  

என்ன செய்ய போகிறான்…… ஏது செய்ய போகிறான் என்பதே பெரிய விஷயமாக அவரின் மனதை அரித்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர் செய்யக் கூடியது எதுவும் இல்லாமல் போய்விட்டது.

அவனை எப்போதாவது கண்ணால் பார்பதே அவருக்கு பெரிய விஷயமாக இருந்தது. வாசுகி அவனிடம் ஏதாவது யோசனைகளை கூறும் ஒரு உரிமையை அவன் அவருக்கு குடுக்கவேயில்லை.

வீட்டை விட்டு போனதில் இருந்து அவரிடம் தள்ளியே இருந்தான். அவனாக பேசினால் பேசுவான், அவனாக பார்க்க வாருங்கள் என்று அனுமதி கொடுப்பான்.  எங்கேயாவது வெளியே வைத்து அவனை பார்த்து வருவார்.

எல்லாம் அவன் செயலாகவே இருந்தது.   

இப்போது சில மாதங்களுக்கு முன் தான் அவன் செய்ய போகும் வேலைகளை சொன்னான்.

இது தப்பு! வேண்டாம்! என்று வாசுகி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை…… அதற்காகவே இத்தனை நாட்கள் ஈரோட்டில் இருந்தவர், பெண்கள் இங்கே கல்லூரி சேர்ந்த போது கூட வராதவர்……. இங்கே உடனே வீட்டை மாற்றிக்கொண்டு வந்தார்.  

 இதில் வீரமணியின் தவறு என்பது எதுவுமில்லை. ஆனால் பாதிக்கப்படப்போவது அவர் தான் என்று தெரியும்.

ஒன்றும் செய்ய முடியாதவராகவே இருந்தார் வாசுகி. அதனால் தான் அன்று திருமணத்தில் வீரமணியை பார்த்த போது தானாக சென்று அவரிடம் பேசினார்.

இந்த விவரங்கள் எதுவும் அவனின் தாத்தாவிற்கு தெரியாது. அவரை பொருத்தவரை கார்த்திக் அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு அவரை எதிர்த்து பேசி வீட்டை விட்டு போய்விட்டான். 

எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என்று அவருக்கு தெரியாவிட்டாலும், எங்கோ நன்றாக இருக்கிறான் என்று தெரியும். ஏனென்றால் அவரின் மகள் அவனை தேடும் முயற்சியும் எடுக்கவில்லை…….. அவனை காணோம் என்று புலம்பவுமில்லை.

இப்போது அவனை நன்றாக பார்த்தார் பத்ரிநாத். இது கார்த்திக் என்று தெரிந்து பார்க்கும்போது அவரால் கண்டு கொள்ள முடிந்தது.

கார்த்திக் பேசட்டும் என்று அவர் காத்திருக்க…….. அவர் பேசட்டும் என்று கார்த்திக் காத்திருந்தான்.

ஒரு முழு நிமிடம் அமைதியாக கழிந்தது.

வாசுகி, “நீ பேசு”, என்று கார்த்திக்கை பார்த்தும் சொல்லவில்லை…….. “அப்பா, பேசுங்கப்பா!”, என்று பத்ரிநாத்தை பார்த்தும் சொல்லவில்லை.

அவர்கள் பேசினாலும் எனக்கொன்றுமில்லை, பேசாவிட்டாலும் எனக்கொன்றுமில்லை என்பது போல அவரும் அமைதியாகவே நின்றார்.

அவர்களின் சண்டைகளை அறிந்தவர் அவர், மனதளவில் நொந்து போயிருந்தார். அதனால் இருவருக்கும் இடையில் வர முற்படவில்லை.  

இருவரும் பேச நினைத்து…… “எப்படி இருக்கீங்க”, என்று கார்த்திக்கும்…… “எப்படிப்பா இருக்க”, என்று பத்ரிநாத்தும் ஒரு சேர கேட்டனர்.

அங்கே ஒரு லகுத்தன்மை உருவாகியது.

பத்ரிநாத் உட்கார…… எதிரில் இருந்த சோபாவில் கார்த்திக்கும் அமர்ந்தான்.

“என்ன உன் சபதத்துல ஜெயிக்க முடியாம……. உங்கம்மாவையும் பார்க்காம இருக்க முடியாம வந்துட்டியா?”, என்றார். முதுமை அவரின் குணத்தை எந்த வகையிலும் மாற்றவில்லை என்று கார்த்திகிற்கு நன்கு புரிந்தது. 

“வந்துட்டேன் தான்! ஆனா சொன்ன சொல்லுல நிக்காம எப்படி நான் வருவேன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?”, என்றான்.

“உங்கப்பா கூட தான் இப்படி பல விஷயம் நான் செய்வேன், செய்வேன்னு பேசினார். ஆனா அவரால எதுவும் செய்ய முடியலையே”, என்றார்.

உருவான லகுத்தன்மை நொடியில் மறைந்தது.

கார்த்திக்கின் முகம் இறுகியது.

பத்ரிநாத் இதை பேசவேண்டும் என்ற எண்ணத்தோடு பேசவில்லை. ஆனால் அவரால் கார்த்திக்கிடம் பேசும்போது அவனின் தந்தையை பற்றி பேசாமல் இருக்க முடியாது.

எவ்வளவு செல்லமாய் வளர்த்தார் பெண்ணை……. எவ்வளவு ஆடம்பரமாய் ஊரே மெச்சும்படி திருமணம் செய்து வைத்தார்.

ஒரு பத்து ஆண்டுகள் சந்திரசேகரோடு குடும்பம் நடத்தி இருப்பாள். அதுவும் பாதி நாட்கள் அம்மா வீட்டில் தான் கழியும். சினிமா தயாரிப்பாளர் என்பதால் சென்னையில் தான் சந்திரசேகரின் வாசம் அதிகம்.

இதில் எடுக்கும் படங்களில் எல்லாம் வெளிநாட்டு காட்சிகளோ, பாடல்களோ வேறு இருக்கும். அதனால் வெளிநாட்டு பயணம் வேறு அதிகம். அவர் தன் மனைவியை உடன் வரும்படி கூப்பிட செய்வார் தான்……. ஆனால் இரு பிள்ளை செல்வங்களையும்  விட்டு வாசுகி செல்ல மாட்டார்.

வைஷ்ணவி சிறு குழந்தையாக இருக்கும் போது சற்று ஊட்டச்சத்து குறைந்த குழந்தை. அதனால் எப்போதும் ஏதாவது உடல் தொந்தரவுகள் அவளுக்கு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவளை அழைத்துக்கொண்டும் போக முடியாது.

பெண் அடிக்கடி தனியாக இருக்கிறாளே என்று அவரின் குடும்ப தொழிலான வாசுகி குழுமத்தை வாசுகி பார்த்துக்கொள்ளும்படி செய்தார் பத்ரிநாத். ஏனென்றால் அவரின் மகனும், மருமகளும் டாக்டர்கள். இருவரும் மலேசியாவில் இருந்தனர்.

அவர்கள் இங்கே வந்தாலும் இந்த தொழிலை பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது.

வாசுகியை தொழிலை பார்க்க சொன்ன போது, “நான் மட்டுமாப்பா அவருக்கும் பவர் குடுங்க!”, என்று சந்திரசேகரின் பெயரில் பவரை மாற்றியது வாசுகிதான்.     

மூன்று பெரிய படங்களை, பெரிய ஹீரோக்களை  வைத்து சந்திரசேகர் தயாரித்த போது…… அகல கால் வைக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னார் பத்ரிநாத்.

ஆனால் அவரின் மருமகன் கேட்கவேயில்லை. எடுத்து ஒன்றுமில்லாமல் போய்விட்டான். இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தான். அதுமட்டுமின்றி இன்னும் கடன் இருக்க…… அதை தீர்க்க வாசுகி குழுமத்தையும் அவனின் நண்பனான வீரமணிக்கு எழுதி கொடுத்து விட்டான்.

உதவி செய், உதவி செய் என்றால்……. செய்தால்…….. விட்டதை பிடிக்கிறேன் என்று திரும்ப படம் எடுக்க கிளம்புவான்.

நான்கு பேரப்பிள்ளைகள் அவருக்கு. மக்களுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டார்.

அவர்களின் பெற்றோர்கள் என்ன சேர்த்து வைப்பார்கள் என்று தெரியாது. பேரப்பிள்ளைகளுக்கும் சொத்து குடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் சந்திரசேகரை நம்பி அவர் பணம் கொடுக்கவில்லை. 

அவன் எழுதிக்கொடுத்த அவர்களின் குடும்ப சொத்தை மீட்க கோர்டில் கேஸ் போட்டார். அதில் வாசுகிக்கும் சந்திரசேகருக்கும்  பிரச்சனையானது.     

பிரச்சனை பெரிதாகி வாசுகி முப்பத்தி மூன்று வயதில் கணவனை பிரிந்து…… முப்பத்தாறு வயதில் அவனை இழந்தே விட்டாள். அந்த துக்கம் போதாது என்று அந்த காரியத்திற்கு வந்த மகனையும் மருமகளையும் விமான விபத்தில் பத்ரிநாத் பறிகொடுத்தார்.

அடிமேல் அடி….. நான்கு பிள்ளைகள் மட்டுமில்லை என்றால் வாசுகியும், பத்ரிநாத்தும் உடைந்தே போயிருப்பர். பிள்ளைகளுக்காக தேற்றிக் கொண்டனர். 

அவரின் மகனாவது, கணவன் மனைவி என இருவரும் போய்விட்டனர். இங்கே முப்பதியிரண்டு வயதில் இருந்து தன் மகள் தனியாக அல்லவா இருக்கிறாள்.

எப்போது தன் பெண்ணிற்கு நிம்மதி இருந்திருக்கிறது. அந்த கவலையில் எப்போதும் கார்த்திக்கின் தந்தையை பற்றி அவனிடம் திட்டி பேசிக்கொண்டே இருப்பார்.

இதில் அவளை பார்த்துக்கொள்ள வேண்டிய மகன் அவனின் தந்தையை பற்றி பேசியதும் கோபம் கொண்டு வீட்டை விட்டு போய்விட்டான்.

இப்போது அவனை பார்க்கவும் அது தானாக வந்துவிட்டது.        

அவரின் பேச்சு கேட்டு, “தாத்தா”, என்று சற்று குரலுயர்த்தியவன்…… “நான் சொன்னதை செஞ்சிட்டு தான் வந்திருக்கேன்!”, என்றான்.

பத்ரிநாத் புரியாமல் பார்க்கவும்……. “எங்கப்பா தொலைச்ச வாசுகி குழுமத்தை உங்ககிட்டயே கொண்டு வந்து சேர்த்துட்டேன்”,  என்றான்.

பத்ரிநாத் நம்பாமல் பார்க்கவும்……

“நிஜமா தான் தாத்தா!”, என்றவன்.

மாரியை அழைத்து…….. “நான் ஒரு பேக் வெச்சிருப்பேன் கார்ல! அதை எடுத்துட்டு வா!”, என்று சொன்னான்.

அவன் எடுத்து வந்து வாசலில் நிற்கவும்……. “வா மாரி!”, என்று கார்த்திக் சொல்ல, உள்ளே வந்து அவனிடம் அந்த பையை நீட்டினான்.

அவன் நீட்டும் போது அவனின் உடல் மொழியை பார்த்த  வாசுகியும், பத்ரிநாத்தும் வியந்து பார்த்தனர்.

அவ்வளவு பணிவு…….

கார்த்திக் பத்ரிநாத்திடம் நீட்டினான்.

வாசுகி அவரின் கண்ணாடியை கொண்டு வந்து கொடுக்க…… அவர் அதை அரைமணி நேரம் படித்தார். அதை படிக்க ஆரம்பிக்கும் போதே அவரின் வக்கீலையும் வர சொல்லிவிட்டார்.

அவரின் வக்கீல் அந்த அரைமணிநேரதிற்குள்ளாகவே வந்துவிட்டார். வந்தவர் கார்த்திக்கை பத்ரிநாத்துடன் பார்த்ததும், பெரிதாக ஒரு வணக்கத்தை வைத்தார்.

 வந்ததென்னவோ பத்ரினாத்தை பார்க்க தான்….. ஆனால் கார்த்திக்குடன் பேச ஆர்வம் காட்டினார்.

“சார்……. இங்க”, என்று கார்த்திக்கை பார்த்து கேட்க…….

“எங்க தாத்தா வீடு இது!”, என்று கார்த்திக் சொன்னான். 

வக்கீல் புரியாமல் பார்க்க…… “இவர் எங்கம்மாவோட அப்பா! இவங்க எங்கம்மா!”, என்றான்.

அவர்களின் உறவு முறையை வக்கீல் ஆச்சர்யமாக பார்த்தார், “அப்படியா அம்மாவோ தாத்தாவோ சொன்னதே இல்லையேங்க சார்!”, என்றார் பவ்யமாக.

பத்ரிநாத்தும் உட்கார்ந்திருந்தார், கார்த்திக்கும் உட்கார்ந்திருந்தான்……….. “உட்காருங்க!”, என்று கார்த்திக் சொல்லும்வரையிலும் வக்கீல் உட்காரவில்லை.

அது பத்ரிநாத்தின் கவனத்தில் நன்கு பதிந்தது. கார்த்திக் சமுதாயத்தில் வளர்ந்து விட்டான் என்று புரிந்தது.

வக்கீலிடம் பத்ரிநாத் அந்த பத்திரத்தை கொடுத்து, “இதோட சாராம்சத்தை சொல்லுங்க”, என்று கேட்கவும்……

பொறுமையாக அதை படித்து பார்த்த வக்கீல்……..    “வாசுகி குழுமம் இனிமே உங்களோடதுன்னு இது சொல்லுது சார்!”, என்றார் அதிர்ச்சியாக.

அதில் நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் அவருக்கும் தெரியும். ஆனால் ஏன்????? இந்த மாற்றம். வீரமணி எப்படி கொடுத்தார். தேவை என்ன?  

பத்ரிநாத்திடம் கேட்டிருப்பார்……. ஆனால் கார்த்திக் முன்னிலையில் கேட்கும் தைரியமில்லை, கார்திக்கிடமும் கேட்கும் தைரியம் இல்லை.

அவர் விடைபெற்று எழுந்து வெளியே வர…..  அவருடன் வந்த கார்த்திக் அவரிடம் விவரம் சொன்னான்.

“இவரோடதுதான் முன்னால அது, அதுனால தான் வாசுகி குழுமம்ன்னு எங்கம்மாவோட பேர்ல இருக்கு!”,  என்று தாத்தாவை காட்டினவன்……

“கொஞ்சம் பணம் செட்டில்மென்ட்க்காக கை மாறிச்சு. இப்போ மறுபடியும் ஐயா இவர் பேருக்கே மாத்திட்டார்!”, என்று மிகவும் மரியாதையாக வீரமணியை பற்றி சொன்னான்.

“அப்போ ஐயா பேர்ல இருந்தது! இப்போ இவர் பேர்ல இருக்கு! அது மட்டும்தான் வித்தியாசம். ஆனா எப்பவும்…… நேத்தும்…… இன்னைக்கும்….. என்னைக்கும் கார்த்திக்கோடதுதான் அது”, என்றான்.

அவனுக்கு தெரியும், அவரின் கிளையன்ட்களின் ரகசியத்தை அவர் எப்படி காப்பாரோ தெரியாது! ஆனால் வெளியே போன அடுத்த நிமிஷம் இந்த விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்! விஷயம் எல்லோருக்கும் பரவி விடும் என்று.

அவனுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது, அவன் என்னதான் அவர்களுக்கு துரோகம் செய்திருந்தாலும், அதை அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்று, யாராவது கேட்டால்……. “நாங்க அவங்களுக்கு திரும்ப கொடுத்துட்டோம்!”, என்று தான் சொல்வார்கள் என்று.

அவன் நினைத்தது உண்மையானது…… வக்கீல் வெளியே போய் இரண்டு நிமிடத்துக்குள் எல்லாம் போன் செய்து ஒருவரிடம் வாசுகி குழுமம் கை மாறி விட்டது என்று கூற……   

வியாபார உலகத்திற்குள் காட்டுத்தீயாக பரவ ஆரம்பித்தது. கிரானைட் உரிமையாளர்கள் இதை பற்றியே பேசினர். அப்போதும் என்ன விஷயம் என்று கார்த்திக்கிடம் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

ஆனால் வீரமணிக்கு போன் அடித்தனர். வீரமணி எந்த போனையும் எடுக்கவில்லை.

சக்தி பார்த்துகொண்டே தான் இருந்தாள்……. விடாமல் போன் கால்கள்.

“அப்பா! எடுத்து பேசுங்கப்பா!”,  

“என்னமா? என்ன பேசுவேன்?”,  

“நீங்க எடுத்து பேசினாலே, என்னவோ ஏதோன்னு தான் எல்லோரும் பேசுவாங்க! இதுல நீங்க எடுத்து பேசாம வேற இருந்தா இன்னும் பேசுவாங்கப்பா……. நம்ம ஏமாந்தது நமக்குள்ளேயே இருக்கட்டும், எடுத்து பேசுங்க!”, என்றாள்.

“என்னம்மா? என்னம்மா பேச சொல்ற?”, என்று அவர் கேட்க…….

“சொல்லுங்கப்பா! சொல்லுங்க! அது அவங்களோடதுதான்….. ரொம்ப வருஷம் நம்மகிட்ட இருந்தது……… திரும்ப கொடுத்துட்டோம்னு சொல்லுங்க!”.

“நம்புவாங்களாம்மா”,

“நம்புனா நமக்கென்ன? நம்பலைன்னா நமக்கென்ன?, அது உங்க பேர்ல இருந்தாலும் ஒண்ணுமில்லை…….. அது அவனோட தாத்தா பேர்ல இருந்தாலும் ஒண்ணுமில்லை…… அது அப்பவும்…….., இப்பவும்…….., எப்பவும்………. கார்த்திக்கோடதுதான்பா”, என்று அச்சு பிசகாமல் அவனின் வார்த்தைகள் அப்படியே சக்தியிடம் இருந்தும் வந்தன.

“பொறுமையா பேசுங்கப்பா! அதுதான் உண்மைங்கற மாதிரி பேசுங்க!”, என்றாள்.

“நாம முடங்ககூடாது பா! நம்ம வாழ்க்கை எந்த தடங்களும் இல்லாம தெளிவா போகணும்…… போனா போகுதுன்னு சொல்லிடீங்க இல்லை! ஆக வேண்டியதை பாருங்க……..”,

“சொத்து போனா போகுது! அவன் போயிட்டானேம்மா……..”,

சக்தியின் உள்மனது சொன்னது…….. என்னதான் அவன் சொத்தை தாத்தாவின் பேருக்கு மாற்றி இந்த வீட்டை விட்டு போனாலும்…….. அவர்களை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகமாட்டான். அவர்களின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு தெரிய வரும் என்று தோன்றியது.  

ஆனாலும் தந்தையை சமாதானப்படுத்துவதற்காக, “என்னப்பா நீங்க? அவன் போனா போறான்பா….., அவனை நம்பி நாம இல்லைன்னு காட்டுவோம்”,  

“முடியலையேம்மா! உன் பேச்சை கூட கேக்க மாட்டேனேம்மா…. அவன் பேச்சை தானேம்மா கேட்பேன்”.

“விடுங்கப்பா! நான் இருக்கேன்பா உங்களுக்கு!”, என்றவள்….  “மணி மதியம் ரெண்டு தானே ஆகுது! நான் காலேஜ் கிளம்பறேன்பா!”, என்றாள்.

“அம்மா! அப்பாவை கவனிங்க……. ரெண்டு பெரும் முதல்ல சாப்பிடுங்க………   நாளைல இருந்து அப்பாவும் என்னோட வருவாங்க”, என்று சொல்லி கிளம்பினாள்.

இருபத்தி ஐந்து வயதானாலும்…… இதுவரை சின்ன பெண்ணாக…… செல்ல பெண்ணாக அந்த வீட்டில் வளைய வந்த சக்தி, தானாகவே பொறுப்பை எடுத்து பெரிய பெண் ஆக்கி கொண்டாள்.

மனதில் எவ்வளவு போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும் சக்தி அதை வெளியில் காட்டவில்லை.

அவளின் உள்ளுணர்வு சொல்லியது……. வாழ்க்கையோடோ…… மனதோடோ…….. அவளின் போராட்டங்கள் குறைவு தான்……. அவளின் போராட்டமெல்லாம் கார்த்திக்கோடு….. இன்னும் அவர்களின் வாழ்க்கையின் முடிவுகளை எடுக்கும் தவறை அவன் தொடர்ந்து செய்வான் என்று தெரியும்.

அவர்களை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் அவன் விலக மாட்டான். அவன் அவர்களை ஏமாற்றி இருந்தாலும், அவனின் அவர்கள் மீதான அக்கறை பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியும்.

அவனை இனி தங்கள் வாழ்க்கையில் வர விடக்கூடாது. சரியோ? தவறோ? எங்கள் வாழ்க்கை நாங்கள் தான் வாழ்வோம் என்று முடிவெடுத்தாள்.  

ஜெயிக்க வேண்டும்…….. கார்த்திக்கை ஜெயிக்க வேண்டும்……

“கருப்பண்ணா! காரை எடுங்க!”, என்று அவள் சொல்லவும் கார் காலேஜ் நோக்கி சென்றது. அவள் சொல்ல சொன்ன பதிலையே வீரமணி அவருக்கு அழைத்தவர்களுக்கு தன்மையாகவே சொன்னார். அதுவே நிஜம் போல காட்ட முயன்றார்.

கார்த்திக்கை சார்ந்து இருந்தவரை சக்தி சுயமாக சிந்தித்ததே இல்லை. இப்போது தான் சுயமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

அவளின் கணிப்பு பொய்யாகவில்லை. சக்தி காலேஜ் போய் சேர்ந்த அடுத்த நிமிடம் கார்த்திக்கிற்கு தகவல் பறந்தது, “மேம் இன் காலேஜ்”, என்று….

Advertisement