Advertisement

                                            கணபதியே அருள்வாய்

வீழ்வேனென்று நினைத்தாயோ

 

அத்தியாயம் ஒன்று :

யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்                                                                                                       எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்

“இது மகாகவி சுப்ரமண்ய பாரதி சொன்னது. இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பெண்கள் மிகவும் தைரியமாக இருக்கணும் மனதளவில். அந்த தைரியம் மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும். அதே தைரியம் இவளுக்கு இது தேவையா என்று மற்றவர்களின் வாயில் இருந்து ஒரு சொல் வர ஏதுவாக இருக்கக் கூடாது…….”,

“பெண்களுக்கு மட்டுமில்லை இது ஆண்களுக்கும் பொருந்தும். இன்றைய வேகமான உலகில் நம் மன தைரியம் என்பது மிகவும் முக்கியம். அதுவே நமக்கு தீமைகளை எதிர்த்து போராட மிகுந்த உத்வேகம் கொடுக்கும்…….”,  என்று சக்தி பேச ஆரம்பித்தாள்.

அவளின் பேச்சில் கட்டுண்ட கல்லூரி மாணவ மாணவிகள் அவளின்  பேச்சை    ரசித்தனரா இல்லை அவளை  ரசித்தனரா அவர்களுக்கே வெளிச்சம்.

ஒரு கருநீல சில்க் காட்டன் புடவையில் பாந்தமாய் ஜொலித்தாள். தோள் வரை வெட்டப்பட்ட கூந்தல் அவளை விட மென்மையாக இருந்தது. அதை ஒரு பின்னிலோ இல்லை ஹேர் பேண்டிலோ கட்டாமல் ப்ரீயாக விட்டிருந்தாள். பேசும்போது அவள் அந்த கூந்தலை ஸ்டைலாக முகம் மறைக்காமல் தள்ளி விட்டு விட்டுக்கொண்டே பேசியது அவளை இன்னும் அழகாக காட்டியது.   

கிட்டத்தட்ட அரைமணி நேர பேச்சு…… எந்த சலசலப்பும் இல்லாமல் மாணவ மாணவிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

மிகைப்படுத்தி சொல்ல விழையவில்லை என்றாலும் சக்தியின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது உண்மை. மிகவும் நன்றாக கல்லூரி மாணவர்களை கவரும் வகையில் இருந்தது. 

அவள் சக்தி….. சக்தி பிரியதர்ஷினி இந்த கல்லூரியின் தாளாளராக பொறுப்பேற்க இருக்கிறாள். இந்த விஷயம் அவளுக்கே இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரியும். அப்போது தான் அவளின் தந்தை சொன்னார்.

அவருக்கும் அதற்கு ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரியும்…… அப்போது தான் கார்த்திக்கேயன் அவரிடமும் சொல்லியிருந்தான்.

கார்த்திக்கேயன் அவளின் தந்தையின் பீஏ என்றும் சொல்லலாம், அவளின் பீஏ என்றும் சொல்லலாம்….. அவர்களின் வாசுகி குழுமத்தின் மானேஜிங் டைரக்டர் என்றும் சொல்லலாம், ஏன் அவர்கள் குழுமத்தின் சொல் செயல் என்றும் கூறலாம்.

இப்படி பல சொல்லலாம்களை தாங்கியிருந்த கார்த்திக் இன்றி அவர்கள் குழுமத்தில் அணுவும் அசையாது.

இப்போது சக்தி பேசிக்கொண்டிருக்க ஒரு ஓரமாக நின்று அதை கவனித்து கொண்டிருந்தான். ஆறடி உயரம், சற்று ஆஜானுபாகுவான தோற்றம். மாநிறத்திற்கும் கறுப்பிற்கும் இடைப்பட்ட நிறம்…. முக வசீகரம் பார்த்தவர்களை திரும்ப பார்க்க வைக்கும்…… ஆனால் சிரித்தால் நன்றாக இருப்பான் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் சிரித்தே இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  

எப்போதும் யோசனையில் இருக்கும் இறுக்கமான முகம். ஆனால் எல்லோரும் எளிதாக அணுகும்படி தான் இருப்பான். ஸ்நேகபாவத்தை அவனிடத்தில் அவ்வளவு எளிதில் யாரும் பார்க்க முடியாது என்றாலும், கருணை பாவத்தை எப்பொழுதும் பார்க்கலாம். யாரும் உதவி என்று வந்தால் அது நியாயமானதாக மனதிற்கு பட்டால் உடனே செய்வான்.    

ஒரு சாயம்போன ஜீன்ஸ் பேன்ட்டும், கார்கோ ஷர்ட்டும் போட்டு முரட்டுத்தனமான தோற்றத்தில் இருந்தான். சக்தி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தான்.     

சக்தி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்……..  “நாங்கள் இந்த கல்லூரியின் பொறுப்பை இன்றிலிருந்து ஏற்கிறோம். முதலில் மாணவர்களாகிய உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இந்த மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. உங்களுக்கு இங்கே குறை எதுவாகினும் நீங்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்……”, என்று சொல்லி அவள் பேச்சை முடிக்க அங்கே பலத்த கரகோஷம்.

பின்னே இவ்வளவு அழகான மென்மையான தாளாளர். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நட்பு ஏற்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் பெர்சனாலிட்டி சக்தி. இருபத்தி ஐந்து வயதானவள் என்று சொல்ல முடியாதபடி கல்லூரியில்  இரெண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியின் தோற்றத்தில் இருந்தாள்.

அதனால் தான் அவள் சுடிதாரில் கிளம்பிய போது…… “இப்படி போனா சின்ன பொண்ணா தெரிவீங்க மேம், சேரியை கட்டிட்டு வாங்க…….”, என்று கார்த்திக் சொல்ல, இவள் மறுக்க, அவன் சொல்ல, இவள் மறுக்க, முடிவில் கார்த்திக் விடாமல் வற்புறுத்த…… பிறகு வேறுவழியில்லாமல் கட்டிக்கொண்டு வந்தாள். 

அவள் பேசி முடித்ததும் பழைய நிர்வாகத்தினர் மற்றும் அந்த பொறியியல் கல்லூரியின் முதல்வர்  பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த கார்த்திக்….  உடனேயே, “போகலாம் மேம்”, என்றான்.

“ரொம்ப அருமையா பேசினீங்க மேடம்”, என்று புகழாரம் சூட்டிய அவர்கள்……… இன்னும் சக்தியிடம் பேச விருப்பப்பட ……..

“மேம்க்கு வேற ப்ரோக்ராம் இருக்கு, மே பீ நாளைக்கு பார்க்கலாம்”, என்று கார்த்திக் சொல்லிவிட……… அவனை அதிகம் மறுத்து பேசி பழக்கபட்டிராத சக்தி எல்லோரையும் நோக்கி பொதுவாக கை கூப்பி விடை பெற்றாள்.

பின்பு அவள் கல்லூரி பில்டிங்கின் வெளியே வர…….. கார்த்திக், காரின் கதவை திறந்து விட்டவன், அவள் ஏறியதும் கார் கதவை மூடி அவன் முன்னே ஏற……. கருப்பண்ணன் வண்டியை எடுத்தார். அவர்களின் காரை இன்னும் இரண்டு கார்கள் பின் தொடர்ந்தன.

கருப்பண்ணன் தான் சக்தியின் கார் ஓட்டுனர். அவரின் அருகில் இருந்த கார்த்திக் அவனின் கண்களில் இருந்த கறுப்புக் கண்ணாடியை கழட்டினான். ஆமாம், அவனை கண்ணாடி இல்லாமல் வெளியே பார்க்கவே முடியாது.

“பெரிய எம் ஜி ஆர் இவன், இவன் கண்ணாடியை கழட்டவே மாட்டான்”, என்று நினைத்தாள் சக்தி.

அதை பலமுறை கார்த்திக்கிடம் சொல்லி கூட விட்டாள்….. “ஏன் நீ எப்பவும் இந்த கண்ணாடியை போட்டுட்டே இருக்க……?”,

“உங்க முன்னாடி நான் போடறதில்லையே மேம்”,

“ஆனா மத்த எல்லா இடத்திலையும் போடறையே….. ஏன்”,

இதற்கு பதில் சொல்ல மாட்டான்.     

பல சமையங்களில் கிண்டல் கூட செய்வாள் சக்தி…… “ஒரு தொப்பி மட்டும் போட்டா நீ கருப்பு எம் ஜி ஆர் தான் போ”, என்று.

இதற்கு மட்டும் கருப்பண்ணன் இடையில் புகுவார், “என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க……… எம் ஜி ஆர் என்னா அழகு! என்னா கலரு! அழகன்மா அவரு!”,

“ஏன் கருப்பண்ணா, கார்த்திக் எம் ஜி ஆர் பக்கத்துல நிக்க முடியலைன்னாலும், ஒரு ஒரு கிலோமீட்டர் தள்ளியாவது நிற்பான் இல்லை…..”, என்பாள் சிரிப்புடனே.

அது தான் சக்தி, மிகவும் சந்தோஷமான கலகலப்பான பெண். அவள் இருக்கும் இடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தம் கேட்கும்.

ஆனால் கார்த்திக் முகத்தில் எந்த ரீயாக்க்ஷனும் இருக்காது. “செம அழுத்தம் கார்த்திக் நீ!”, என்பாள்.

அதற்கும் எந்த ரியாக்க்ஷனும் இருக்காது. அப்போதும் விடாமல் சீண்டுவாள் சக்தி……… “ஏன் கார்த்திக்? யாராவது பொண்ணு உன்கிட்ட கண்ணாடி போட்டா நீ நல்லா இருக்கேன்னு சொன்னாளா என்ன?”, என்று கேட்பாள்.

அதற்கும் நோ பதில்…. “செவுடன் காதுல ஊதுன சங்கு தான் போ!”, என்பாள்.

அதற்கும் நோ ரெஸ்பான்ஸ், சலித்து அவளாக நிறுத்திக் கொள்வாள்.        

அவர்களின் காரை பின் தொடரும் இரண்டு கார்களையும் பார்த்த சக்தி…… “இவன் வேற ஒருத்தன், எங்க போனாலும் கூட ரெண்டு காருங்க…… எதை சொன்னாலும் இந்த கார்த்திக் கேட்க மாட்டான், சரியான அடியாள் லுக்!”, என்று மனதிற்குள் சலித்தாள். அப்படி சட்டென்று கல்லூரியில் இருந்து வந்ததும் சக்திக்கு பிடிக்கவில்லை.  

“எப்படி கார்த்திக் நான் பேசினேன்”,

“மோசமில்லை”, என்றான் கார்த்திக்.

“அதானே இவனாவது நல்லா இருக்குன்னு சொல்றதாவது, பெரிய மேதாவி இவன்…”,  என்று மனதினில் அவனை திட்டிக்கொண்டே……

“ஏன் கார்த்திக் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே……..”,

“அவங்க யாரு எப்படின்னு இன்னும் நமக்கு சரியா தெரியாது. உங்களை பேச விட்டா நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே இருப்பீங்க. முதல்ல அவங்க நீங்க பழக சரியானவங்களான்னு பார்க்கிறேன்……… அப்புறம் பேசலாம்”, என்றான்.

“எனக்கு ஆளுங்க எப்படி என்னன்னு தெரியற அளவுக்கு கூட மூளையில்லையா?”, என்று கேட்க சக்திக்கு வாய் வரை  வார்த்தை வந்தன……. இருந்தாலும் கேட்கவில்லை. ஏனென்றால் கேட்டாலும் பதில் வராது. அவன் பேசி முடித்து விட்டால் மறுபடியும் பேச மாட்டான்.

சில சமயம் அவன் நடப்பதை பார்த்தால் சக்திக்கே சந்தேகம் வரும், நாங்கள் முதலாளியா அவன் முதலாளியா என்று.

ஆனால் தந்தை சக்தியின் சொல் கேட்க மாட்டார். அவன் சொல் தான் கேட்பார். ஏனென்றால் கார்த்திக்கின் உழைப்பு அப்படி. அவன் எது சொன்னாலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இருக்கும், எது செய்தாலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இருக்கும். அவன் வந்த பிறகு அவர்களின்  நிறுவனம் அவ்வளவு வளர்ச்சி கண்டிருக்கிறது.

வாசுகி குழுமத்தின் முதன்மை தொழில் கிரானைட் ஏற்றுமதி தான். அதன் நிர்வாகியும் சக்தியின் தந்தையும் ஆன வீரமணி கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரு கிரானைட் குவாரியை அரசாங்கத்திடம் இருந்து லீசிற்கு எடுத்து பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

அது அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என்றாலும் கொள்ளை லாபத்தை அவர் கனவிலும் நினைக்காத லாபத்தை கொடுத்தது கார்த்திக் அவரிடம் வந்த பிறகு தான். அவனுக்கு பணத்தை அதீதமாக பெருக்கும் வழி கைவந்த கலையாக இருந்தது.

அதன் புதிய பரிமாணம் தான் அவன் வீரமணியிடம் சொல்லி விற்பனைக்கு இருந்த இந்த பொறியியல் கல்லூரியை வாங்கியது.

இன்றைய காலகட்டத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் அதுவும் சுலபமாக பார்ப்பது கல்வி துறையில் மட்டுமே.

“இப்போ எதுக்கு கார்த்திக் நாம இந்த எஜுகேஷன் பீல்ட்ல இறங்கி இருக்கோம். நம்ம கிரானைட் பிசினஸ்சே போதாதா……”, என்றாள் சக்தி.

“நாம சாப்பிடறது மட்டும் தான் போதும்னு நினைக்கனும் மேம்!”, என்றான் சுள்ளென்று.

சக்திக்கு முகம் விழுந்துவிட்டது. அவனை முறைத்துப் பார்க்க…….

திரும்பி அவளை பார்த்தவன், “பின்ன என்ன மேம்? எவ்வளவு கஷ்டப்பட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ணி இந்த காலேஜ் டீல் நான் முடிச்சிருக்கேன். நீங்க ஒரே வார்த்தையில தேவையான்னு சொல்றீங்க!”,

“எனக்கெப்படி தெரியும் நீ இவ்வளவு கஷ்டப்பட்டு முடிச்சேன்னு”,

“தெரியணும்! தெரிஞ்சிக்கணும்! இந்த உலகத்துல ஈஸியா கிடைக்கறது எதுவுமே இல்லை…… எல்லாத்துக்கும் கஷ்டப்படுனும்! அப்படி கஷ்டமில்லாம கிடைச்சதுன்னா அதுக்கு பின்னாடி ஒரு விலை இருக்கும்”, என்றான்.

“விசுவாசி தத்துவத்தை ஆரம்பிச்சிட்டான்”, என்று வாய்க்குள் முனகினாள்.     

வீரமணி இப்போது ஊரில் இல்லை கிரானைட் ஏற்றுமதி விஷயமாக துபாய் போயிருந்தார். கூட அவரின் மனைவி தெய்வானையும் போயிருந்தார். அவர் வர இன்னும் பத்து நாட்கள் ஆகும். அதுவுமில்லாமல் கார்த்திக் அவரிடம் சொல்லியிருந்தான், “சக்தி மேடம் தான் கரஸ்பாண்டன்ட் ஆகணும்”, என்று. அதனால் தான் சக்தி தனியாக வந்து பொறுப்பேற்றாள்.

இப்போது அவர்கள் சென்று கொண்டிருந்தது கிரானைட் உற்பத்தியாளர்கள் சங்க மீட்டிங்கிற்கு…… சக்திக்கு அங்கே போகவே இஷ்டமில்லை. ஆனால் சொன்னால் அவளின் அப்பா கேட்க மாட்டார்.

“நீ போகணும் சக்தி! எனக்கு பின்னாடி இதை எல்லாம் கட்டி ஆளப்போறது நீதான்! நீ எல்லாத்தையும் கத்துக்கணும்! உனக்கு கல்யாணம் பண்ணி எவனோ ஒருத்தன் மாப்பிள்ளைன்னு வந்து இந்த சொத்தை ஆளுரதுல எனக்கு விருப்பமில்லை. மாப்பிள்ளை வந்தா அவன் சொத்தை அவன் கவனிக்கட்டும். நம்ம தொழிலை நீதான் பார்க்கணும்”, என்பார்.

“அப்பா ப்ளீஸ் பா! அங்க எல்லாம் ஜென்ட்ஸா இருப்பாங்க! எனக்கு தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கும்”.

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது சக்தி…… நீ ஆளப் பிறந்தவமா தைரியமா இருக்கணும்! அதுவுமில்லாம நான் என்ன தனியாவா உன்னை போகச் சொல்றேன்! கூட கார்த்திக் இருக்கான், அவன் உன்கூட இருக்கும் போது உனக்கென்ன பயம். எல்லாம் அவன் பார்த்துக்குவான், அதை விடு! எப்படி பேசின நீ?”,

“அதை நான் எப்படி சொல்ல முடியும்! உங்க விசுவாசி இருக்கான் சொல்லுவான்…..”,

“சொல்லு சக்தி! நான் சீரியஸா கேட்கறேன்! தைரியமா கூட்டத்துல பேசணும் நீ….. நான் உனக்கு வரப் போற எலெக்ஷன்ல எம் பீ சீட்டு கேட்கலாம்னு இருக்கேன்மா”, என்றார்.

“அப்பா!”, என்று அதிர்ந்தாள் சக்தி….. அவளின் தந்தை விளையாட்டுக்காக எதுவும் பேச மாட்டார் என்று தெரியும். ஆனால் இது சக்தி எதிர்ப்பாராதது.

அவளின், “அப்பா!!!!!”, என்று அதிர்ந்த அழைப்பில் திரும்பி பார்த்தான் கார்த்திக்………….

திரும்ப அவளின் அப்பாவிடம் அவள் பேசாமல் போனை கார்த்கிடம் கொடுக்க, “சொல்லுங்க ஐயா”, என்றான் கார்த்திக்……

“என்ன கார்த்திக்? எப்படி பேசினா என் பொண்ணு?”, என்றார்.

“மேடம் ரொம்ப நல்லா பேசினாங்க!”, என்றான் உண்மையாக கார்த்திக்…

“அதுதானே எனக்கு வேணும்”, என்று சிரித்தவர்…… “எப்படி வர்ற எலெக்ஷன்ல சீட் கேட்டுறலாமா”, என்றார்.

இது கார்த்திக்கிற்கும் புது செய்தியே……… திரும்பி சக்தியின் முகத்தை பார்க்க அவளின் முகத்தில் திருப்தியின்மையும் கோபமும் நன்றாக தெரிந்தது.

“உங்க விருப்பம் ஐயா!”, என்றான் தொலைபேசியில்….

அவர் கேட்பதற்கு தான் இந்த பதில் சொல்கிறார் என்று புரிந்த சக்தி அவனை, “நல்லா ஜால்ரா அடிக்கற நீ!”, என்பது போல முறைத்துப் பார்த்தாள்.

சிறிது நேரம் தொழில் விவரங்களை வீரமணியிடம் சொல்லி கார்த்திக் போனை வைக்க……. “கருப்பண்ணா வண்டியை ஓரம் கட்டுங்க”, என்றாள் சக்தி.

அப்போதும் கருபண்ணன் வண்டியை ஓரம் கட்டாது கார்த்திக்கைப் பார்க்க……. அவனின் சிறு தலையைசைவில் வண்டியை ஓரம் கட்டினார்.

அது சக்தியின் கண்களுக்கு தப்பவில்லை. “நீங்க கொஞ்ச நேரம் வெளிய இருங்க!”, என்றாள் கருப்பண்ணனை பார்த்து……

“அப்படியே இறங்குங்க! இவனை பார்த்து பெர்மிஷன் கேட்டீங்க……….”, என்று சக்தி வார்த்தைகளை கடித்து துப்ப, அவள் மிகுந்த கோபமாக இருக்கிறாள் என்று கார்த்திக்கிற்கும் புரிந்தது, கருப்பண்ணனிற்கும்  புரிந்தது.

ஜாக்கிரதையாக கார்த்திக்கின் முகம் பார்க்காமல் இறங்கினார்.

அவர் இறங்கியதும் அவனை பார்த்தவள், “எங்கப்பா சொன்னதைக் கேட்டியா நீ!”, என்றாள்.

“கேட்டேன்!”, என்பது போல அவன் தலையாட்ட……

“உனக்கு இது முன்னமே தெரியுமா?”,

“தெரியாது!”, என்றான் ஒற்றைவார்ததையில்……

“எங்கப்பா யோசிக்காமையோ உன் கிட்ட கேட்க்காமையோ எந்த முடிவும் எடுக்க மாட்டார், எனக்கு தெரியும்!”,

“இல்லை! எனக்கு நிஜமாவே தெரியாது. அவர் எலெக்ஷன்ல நிக்கணும்னு அவருக்கு ஒரு ஆசையிருக்குன்னு எனக்கு தெரியும். உங்களை நிறுத்த முடிவெடுப்பார்ன்னு எனக்கு தெரியாது”, என்றான் தன்னிலை விளக்கமாக.

“நீ என்ன பண்ணுவியோ? ஏது பண்ணுவியோ? எனக்கு தெரியாது! நான் எந்த எலக்ஷன்லையும் நிக்க மாட்டேன்”, என்றாள்.

கார்த்திக் அவளை மௌனமாக பார்க்க….. “ஒரு பேச்சுக்கு சொல்றேன்னு நினைக்காத! கண்டிப்பா நான் நிக்க மாட்டேன்! நான் சொன்னா அப்பா கேட்க மாட்டார்! நீ எப்படியாவது இதை நிறுத்தற!”, என்றாள் கட்டளையிடுவது போல.

கார்த்திக் அதற்கும் மெளனமாக இருக்க…… “மீறி நடந்தது, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”, என்றாள் மிரட்டலாக……

பொதுவாக சக்திக்கு அதிகம் கோபம் வராது. அதுவும் சக்தி இப்படியெல்லாம் கார்த்திக்கை எதிர்த்து பேசமாட்டாள். எப்பொழுதாவது அபூர்வமாக தான் தன் கோபத்தை காட்டுவாள், பேசவும் செய்வாள்…. பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாள். 

அவள் மிகவும் டென்சனில் இருக்கிறாள் என்று புரிந்த கார்த்திக்…….. “எலெக்ஷன்ல நிக்கறது அவ்வளவு ஈஸியில்லை. முதல்ல கட்சில சீட் குடுக்க வேண்டாமா? அரசியல்ல பழம் தின்னு கொட்ட போட்டவன் நிறைய பேர் இருக்கான். உங்களுக்கு முதல்ல சீட் கிடைக்காது! அதுவுமில்லாம எலெக்ஷன் வர்றதுக்கு இன்னும் ஒன்னரை வருஷம் இருக்கு…. இப்போ எதுக்கு டென்சன், அப்போ பார்த்துக்கலாம்”, என்றான்.

அவனின் சொல் கேட்ட பின் தான் சிறிது சமாதனமானவள், “நம்பலாமா?”, என்றாள்.

“முயற்சி செய்யறேன்! அதுக்கு மேல வாக்குறுதி கொடுக்க முடியாது”,  

“சரி! வண்டியை எடு!”,

கருபண்ணனை கார்த்திக் அழைக்க போக…… “நீ எடு!”, என்றாள்.

“ஏன்?”,

“நான் சொல்றதை கேட்காம சும்மா சும்மா உன்னையே பார்த்துட்டு இருக்காங்க! இன்னைக்கு நடந்து வீடு வந்து சேரட்டும்! வண்டியை எடு!”, என்றாள்.

“பாவம் அவர். ஊருக்குள்ள போக இன்னும் அஞ்சு கிலோமீட்டர் இருக்கு……. நடுவழி…… பஸ் நிறுத்துவானோ மாட்டானோ?”,

“அவ்வளவு கவலையா இருந்தா…… நீயும் அவர்கூட இறங்கி நடந்து வா! நான் போயிக்கறேன்!”,

“விளையாடாதீங்க மேம்! நாம இப்போ மீட்டிங் போகணும்!”,

“அப்போ பேசாம வண்டியை எடு!”,

கார்த்திக் இயலாமையில் அவளைப் பார்க்கவும்………   

“ஏன் நீ வண்டி ஓட்டினா உனக்கு கௌரவ குறைச்சலோ”, என்று சக்தி கேட்க….. பத்தி பேசாமல் மறுபுறம் வந்து அமர்ந்து காரை எடுக்க போனவன், சட்டென்று திரும்பி முடிக்கு ஒரு ரப்பர் பேண்ட் போடுங்க என்றான்.

அவள் முறைக்கவும்……. கோவப்படாதீங்க என்று பொறுமையாகவே சொன்னான். இடம் பொருள் ஏவல்ன்னு ஒண்ணு இருக்கு…….. நீங்க இதுவே ஒரு பெரிய சிட்டி ல இருந்து அங்க ஒரு மீட்டிங் போனீங்கன்னா பொடவை கட்டுங்க பொட்டு வைங்க தலையை கட்டுங்கன்னு சொல்ல மாட்டேன்.

இங்க நீங்க இப்படி ஸ்டைலா போனா எல்லோரும் ஆர்வமா பார்ப்பாங்க எனக்கு தான் வீணா டென்சன் ஆகும் அப்புறம் எவனாவது ஏதாவது கமென்ட் அடிச்சான்னு வெச்சிகோங்க கட்டாயம் என்கிட்ட அடிவாங்குவான் பரவாயில்லைனா இப்படியே வாங்க என்றான்  

திரும்ப அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவன் சொன்னதை செய்தாள்.  அதன் பிறகே வண்டியை எடுத்தான்.   

அபூர்வமாக வரும் அவளின் கோபம் தெரிந்த கருப்பண்ணனும் வீட்டைப் பார்த்து நடையை எட்டிப் போட்டார்.      

அவருக்கும் தெரியும் சக்திக்கு அவ்வளவாக கோபம் வராது……… வந்தால் கடவுளான  அந்த சக்தியம்மனை கூட மலையிறக்கி விடலாம், இவளை முடியாது.                         

அவ்வளவு விரைவாக கார்த்திக் காரை எடுத்தும் சக்தியின் கவனத்தை கவராமல் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை கீழே போட்டான் கருப்பண்ணன் எடுத்துக்  கொள்வதற்காக…..

இவர்கள் கார் நின்றவுடன் நின்ற இரண்டு கார்களும் இவர்கள் மறுபடியும் செல்லவும் இவர்களை பின் தொடர்ந்தன. கார்த்திக்கின் கண்ணசைவு இல்லாமல் அந்த காரில் இருப்பவர்கள் எப்போதும் கீழிறங்க மாட்டார்கள்.    

ஒரு புன்சிரிப்போடு வந்து அந்த பணத்தை எடுத்தார் கருப்பண்ணன், “நம்ம தம்பி! நம்ம தம்பி தான்!”, என்று நினைத்தபடியே.   

மீட்டிங் நடக்கும் இடம் வந்ததும் காரை நிறுத்திய கார்த்திக், அவன் இறங்கி வந்து சக்தியின் புறம் இருந்த காரின் கதவை திறந்து விட அவள் இறங்கினாள். எப்போதும் அந்த வேலையை கார்த்திக் சலிக்காமல் செய்வான். அவன் கூட இருக்கும் போது அவள் இறங்குவதற்கும் ஏறுவதற்கும்  அவன் தான் கார் கதவை திறந்து விடுவான். வீரமணி கூட அவராக தான் இறங்குவார் ஏறுவார். அவருக்கு கூட அந்த வேலையை கார்த்திக் செய்ய மாட்டான்.    

அவள் இறங்கியதும் பின்னே வந்த காரை பார்த்தான். அவன் பார்க்கவும் அதில் இருந்தவன் அவசரமாக இறங்க, அவனிடம் காரின் சாவியை தூக்கி போட்டான். அவன் இவர்களின் காரை பார்க் செய்ய கிளம்ப…… இவன் சக்தியை முன்னே விட்டு சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தான்.

அங்கே மீட்டிங் நடக்கும் ஹாலை நோக்கி போனவள், அங்கே இருந்த சிவாவை பார்த்து, “ஹாய்”, என்று ஆர்ப்பாட்டமாக கையை அசைக்க போனவள், கூட கார்த்திக் வரவும், “ஹாய்”, என்று உதட்டை மட்டும் அசைத்தாள். சிவாவும் இவளுக்காக தான் காத்திருந்தான்.

சிவாவை பார்த்த கார்த்திக், “அவனுக்கு எப்படி நீங்க வர்றது தெரியும், வெளில வெயிட் பண்றான். நீங்க போன் பண்ணுணீங்களா”, என்று கார்த்திக் கேட்க…….

“நான் போன் பண்ணலை, மேசேஜ் தான் பண்ணினேன்”, என்று அவளாகவே நடந்ததை உளறினாள்.

அதற்குள், “ஹாய் ஏஞ்சல். ஏன் லேட்”, என்றபடியே வந்தான் சிவா. சக்தியை  முறைத்துப் பார்த்தான் கார்த்திக்.      

Advertisement