Advertisement

அத்தியாயம் ஏழு :

அக்ஷரா வெகு நேரம் கழித்து உறங்கினாலும் பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாய் இருந்தாள். மகளின் அனத்தல் குரல் எழுப்ப, எழுந்து அவளை தொட்டுப் பார்த்தால் உடல் அனலாய் கொதிக்க, இமைகளும் தடித்து இருக்க, என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமாய் இருந்தது. அப்போதைய அவளின் மனதின் அலைபுருதல் மனதை மிகவும் பலவீனமாக்கி இருந்தது. 

அக்ஷரா தான் உறங்கும் முன்பே லேசாக காய்ச்சல் இருந்ததினால் பாராசிடமால் ஒரு பாதி மாத்திரை ஷ்ரத்தாவை ஒரு வழியாக எழுப்பி கொடுத்து உறங்க வைத்து இருந்தாள். ஆனாலும் காய்ச்சல் இப்போது மிக அதிகமாக இருக்க..

வேகமாக மொபைலை எடுத்து தனது அப்பாவிற்கு அழைத்தால். வெகு சில மாதங்களுக்கு பிறகான அழைப்பு.

நேரம் அப்போது விடியற் காலை நான்கு மணி, நான்கைந்து ரிங்கிற்கு பிறகு அழைப்பு எடுக்கப்பட்டு “என்ன அக்ஷி இந்த நேரத்துல” என்று கவலையோடு ஒலித்தது அம்மா துர்காவின் குரல்.

“பேபிக்கு காய்ச்சல் ரொம்ப அடிக்குதும்மா”

“டேப்லெட் கொடுத்தியா”

“எஸ் மா கொடுத்தேன், குறையலை, அதிகம் தான் ஆகுது, குடுத்து த்ரீ ஹவர்ஸ் தான் ஆகுது”

“எப்போ இருந்து ஃபீவர்?”

“நைட் இருந்து தான் மா”

“ஒன்னும் பயமில்லை, இன்னொரு டோஸ் குடு, அப்பா நைட் தூங்கும் போது ரொம்ப லேட்.. ட்வெல்வ்க்கு மேல தான் தூங்கினார், இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்ததும் அங்க வர்றோம், பயம் வேண்டாம்”     

நிறைய பார்த்து பார்த்து அவருக்கு பழகி இருக்கும், ஒன்றுமில்லை என்று புரியும், ஆனால் அக்ஷரா, அவள் அந்த ஃபீல்டில் இல்லையே,

அதிகாலை ஐந்தரை மணிக்கு அம்மா துர்க்காவும், அப்பா ஷங்கரும் வந்தனர். ஆனால் வீடு பூட்டி இருக்கவும்.. வேகமாக சென்று வாட்ச்மேனிடம் கேட்க..

“நாலரை மணி இருக்கும், பாப்பாக்கு ரொம்ப காய்ச்சல்னு தூக்கிட்டு போனாங்க, நான் கூட வர்றேன்னு சொன்னேன், இல்லை தேவையில்லைன்னு சொல்லிப் போனாங்க” என,

“என்ன?” என்று பதறி விட்டனர் பெற்றோர்கள். அவ்வளவு சீரியஸ் என்று நினைக்கவில்லை. அங்கே இருந்தே அக்ஷராவின் தொலைபேசிக்கு அழைக்க.. அது சுவிச் ஆஃப் என வந்தது.

உடனே அபிமன்யுவிற்கு அழைத்தனர், அக்ஷரா எதுவும் போன் செய்தாளா என,

அவன் இல்லை என பதறி அவனும் அங்கே வர.. அவன் வரும் வரையிலும் அங்கேயே அப்படியே நின்றிருந்தனர், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 

அபிமன்யு வந்ததும் தான் சற்று தெளிந்தனர். மூவரும் எங்கே அவள் என்று தெரியாமல், எங்கே போயிருப்பாள் என்று அனுமானிக்க முடியாமல் விழித்தனர்.

வரதாராஜன் காலை எழுந்து வெளியே வந்தவர், இவர்கள் நிற்பதை பார்த்து, என்ன விஷயம் என அருகில் வந்தவர் விவரம் கேட்க, சொன்னார்கள்.

சரியாக உறக்கம் இல்லாமல், நிகிலும் எழுந்தவன், வாயில் கதவு திறந்து இருக்கவும் வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே எல்லோரும் நிற்க, என்ன விஷயம் என்று அவனும் அருகில் வந்தான். 

வரதராஜன் சொல்லவும், எதுவும் அக்ஷராவைப் பற்றி பேசக் கூடாது என்று நினைத்தாலும், “நேத்து தானே அபிமன்யு அவ்வளவு ப்ராப்ளம் ஆச்சு. கேர் ஃபுல்லா இருக்க வேண்டாமா.. நான் நேத்தே பார்த்துட்டு டெம்பரேச்சர் மைல்ட்டா இருக்கு, பேபி வாமிட் பண்ணிட்டே இருக்கா, டீஹைட்ரேட் ஆக சேன்ஸ் இருக்குன்னு அவ கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்”

“பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல் எல்லாம் செக் பண்ணுங்க” என்றான் கூடவே.

“என்ன? என்ன ப்ராப்ளம் ஆச்சு?” என்றார் துர்கா.. அவருக்கு அதுவரை தெரியவில்லை.

“இப்போ அதை விடுங்க, முதல்ல அவங்க எங்க பார்ப்போம்” என்றார் வரதராஜன்.

“நாலு மணிக்கு போன் பண்ணினா, கொஞ்ச நேரத்துல வந்துடறோம் சொன்னேன். நைட் இருந்து தான் ஃபீவர் ஒன்னும் ஆகாது சொன்னேன்” என்று துர்கா சொல்ல

“வாட், போன் பண்ணினாலா? அப்போவும் நீங்க லேட்டா வர்றிங்களா, வி ஆர் டாக்டர்ஸ், நமக்குத் தெரியும், ஆனா அவ ஒரு பேரன்ட். நீங்க அவளை அப்படித்தானே பார்க்கணும்” என்று சொன்னவன். தான் பேசுவது அதிகப்படி என தோன்றியதோ அவனே பேச்சை நிறுத்திக் கொண்டான்.

ஆனால் தனியாக நான்கரை மணிக்கு குழந்தையைத் தூக்கிக் கொண்டு போயிருக்கின்றாள் என்றால் என்ன சொல்ல.. அவளின் மன நிலை எப்படி இருந்திருக்கும்..    

இங்கே இருக்கும் வரை போகலாம் என்றாலும் துரத்துகின்றால், இங்கே ஒன்றுக்கு நான்கு டாக்டர்கள் இருக்கின்றோம், எங்கேயோ குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடியிருகின்றாள் என்பது அவ்வளவு வருத்தத்தைக் கொடுக்க ஏதும் செய்ய இயலாதவனாக நின்றான்.

அவ்வளவு கஷ்டத்திலும் என்னை அழைக்கவில்லை.. மனதில் ஒரு கோபமும் கனன்றது. 

“என் மகன் நிகில்” என்று அப்போதுதான் வரதராஜன் அவனை அறிமுகப்படுத்தினார் அக்ஷ்ராவின் பெற்றோர்களிடம்..

“அக்காக்கு யு எஸ் ல ஃபிரண்டாம்” என்றும் அபிமன்யு எடுத்துக் கொடுக்க, துர்கா அவனை தீவிரமாக பார்வையால் ஆராய்ந்தார். அப்போது மட்டுமல்ல அவன் வெளியே வந்தது முதலே அவனைத் தான் ஆராய்ந்து கொண்டிருந்தார்.  பின்னே தன மகளை அவள் இவள் என்று பேசுகின்றான் என்பதை மனதில் குறித்துக் கொண்டார்.

அபிமன்யு வேறு, “நீங்க என் கிட்ட பேபிக்கு காய்ச்சல்ன்னு சொல்லியிருக்கலாம். நான் வாசல்ல தான் உட்கார்ந்து இருந்தேன். நீங்க சொன்னீங்கன்னு தான் போனேன்” என்று சொல்ல,

“அது அக்ஷரா சொல்லிவிட்டா நான் உன்கிட்ட சொன்னேன். நான் எதுக்கு ஃபீவர்ன்னு உன்கிட்ட சொல்லணும். பேபியோட அம்மாக்கிட்ட சொல்லிட்டேன், நீங்க பார்த்து இருக்கணும்.. அவளே அப்செட்ன்னு தெரியுது ஏன் தனியா விட்டீங்க” என்றவன்.. திரும்ப பேச்சை நிறுத்தி அமைதியானான், இது தனக்கு தேவையில்லாதது என்று நினைத்து.   

“என்ன இவன் இப்படி பேசுகின்றான்?” என அக்ஷராவின் பெற்றோர்கள் பார்த்தனர். 

“சாரி” என்று வரதராஜன் மன்னிப்பு கேட்டார் நிகிலின் சார்பாக, “என் பையன் இப்படித்தான் ஓவர் ரியாக்ட் பண்ணுவான், டோன்ட் மைன்ட்” என்றார் நிகிலை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே..

நிகில் அவரின் பேச்சைக் கண்டு கொள்ளவே இல்லை, “நீங்கள் சாரி கேட்டால், நான் என்ன செய்ய முடியும்” என்ற பாவனையோடு நின்றான்.

இதற்கும் அபிமன்யு பொறுமையாகத் தான் கேட்டான்..    “சாரி” என்றார் அபிமன்யுவைப் பார்த்து மீண்டும் வரதாராஜன்.  

“இட்ஸ் ஓகே மாமா, அக்காகாகத் தானே, நான் மைன்ட் பண்ணலை, ஆனா நாங்க தனியா விடலை, அக்கா வரலை, எங்களையும் வர விடலை” என்றான் நிகிலைப் பார்த்துக் கொண்டே.

“இவ்வளவு உங்க அக்காவைப் பத்தி இவனுக்குத் தெரியும் போது இதுவும் தெரியாம இருக்குமா. விடு அபி! முதல்ல பேபியைத் தேடுவோம்” என்று வரதராஜன் சமாதானம் செய்ய,

அதற்குள் துர்காவிற்கு தொலைபேசி அழைப்பு, “மேடம் இங்க ஒரு பொண்ணுக்கு திடீர்ன்னு வலி எடுத்திருக்கு” என

“ட்யுடி டாக்டர் இல்லை”

“இருக்காங்க! அவங்க தான் உங்ககிட்ட இன்பார்ம் பண்ணச் சொன்னாங்க! கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்டா ஃபீல் பண்றாங்க” என நர்ஸ் சொல்ல.. “ஓகே நான் இப்போ வர்றேன்” என்று ஃபோனை வைத்தார்.

“நாங்க தேடறோம், நீ போ!” என்று ஷங்கர் சொன்னவர், “நாளைக்கு உன் பொண்ணு இதைத்தான் கேட்பா.. ஒரு பேஷன்ட்க்கு எமர்ஜென்சின்னா போவீங்க, நான் கூப்பிடப்போ வரலைன்னு.. ப்ச்!” என்று சலித்தார், “என்னை எழுப்பி இருக்கலாம் தானே!”

“நேத்து மட்டும் கிட்ட தட்ட ஹண்ட்ரட் ஓ பி பார்த்தீங்க, நாலு மணிக்கு கூப்பிட்டா… அஞ்சரைக்கு இங்க இருக்கோம்!” 

“ப்ச்!” என்று மீண்டும் சலித்தவர், “என்கிட்டே, உங்க ஃபோன்க்கு கூப்பிட்டா, எதுக்கு அம்மா எடுத்தாங்க, நீங்க வேணும்னே எடுக்கலைன்னு சொல்லுவா.. என்ன துர்கா இப்படி பண்ணிட்ட” என்றார் கவலையாக.   

உண்மையில் அக்ஷராவிற்கு அவ்வளவு கோபம், “ஒரு எமர்ஜன்சி என்றால் இந்த அம்மா எப்படி ஓடுவார். நான் அழைத்தால் வரவில்லை, ஊரில் என்ன டாக்டர்களா இல்லை” என்ற கோபம் தான்.

காய்ச்சல் அதிகமாகி அனத்தல் அதிகமாக, பயந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு விரைந்தாள். பக்கத்தில் ஒரு டாக்டரின் வீட்டுடன் இருந்த சின்ன ஹாஸ்பிடல் இருக்க, அங்கே சென்று அந்த நேரத்தில் நர்சிடம் சொல்ல,

அவரும் செக் செய்து விட்டு, காய்ச்சல் மிக அதிகமாகி குழந்தையின் கண்கள் சொருக ஆரம்பித்து இருக்க, அவசரமாக டாக்டரை தொடர்ப்பு கொள்ள, அவரும் வந்து விட.. குழந்தையை அட்மிட் செய்து மேனேஜ் செய்ய ஆரம்பித்தார்.

துர்காவை ஒரு ஆட்டோ வைத்து அனுப்பி விட்டு, ஷங்கரும் அபிமன்யுவும் ஆளுக்கு ஒரு புறமாக அந்த ஏரியாவில் பார்க்க ஆரம்பித்தனர். “பா, அக்ஷராவைப் பார்த்துட்டீங்கன்னா ஒரு மெசேஜ் எனக்கு பாஸ் பண்ணுங்க” என்று சொல்லி நிகில் சென்று விட.. அதுவே சொல்லாமல் சொன்னது, நீங்களும் உடன் செல்லுங்கள் என்பதாக.

வரதராஜன் “நான் உங்களோட வர்றேன்” என்று சங்கருடன் இணைந்து கொள்ள, அங்கேயே இருக்கின்றாலா இல்லை ஆட்டோ ஏதாவது பிடித்து வேறு ஹாஸ்பிடல் போய் விட்டாளா எதுவும் தெரியவில்லை.   

மனம் வேறு அந்த நேரத்தில் குழந்தையை தூக்கி கொண்டு போயிருக்கின்றால், குழந்தைக்கு எதுவும் இருக்கக் கூடாது என்று பதைத்தது.

அபிமன்யு “அப்பா, இங்க ஒரு ஹாஸ்பிடல்ல ஷ்ரத்தா பேர் இருக்குப்பா. நான் உள்ளே போறேன்” என்று அப்பாவிற்கு அடையாளம் சொல்லி உள்ளே சென்றான்.

அங்கே குழந்தைக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருக்க, அவளைப் பார்த்தவாறு சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் அக்ஷரா..

வேகமாக குழந்தையின் அருகில் அபிமன்யு போக, அவனை பார்த்தும் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

குழந்தையை தொட்டுப் பார்த்தவன், “என்ன இவ்வளவு டெம்பரேச்சர்?” என்றவன், “நம்ம ஹாஸ்பிடல் போகலாம் அக்கா!” என்றான்.

“நம்ம ஹாஸ்பிடலா? உங்க ஹாஸ்பிடல் சொல்லு!” என்றாள், குரலில் கோபமில்லை.. ஒரு அமைதியான குரல்,

அவளின் அப்பா சென்னையில் மிகப் பிரபலமான குழந்தைகள் நல மருத்துவர், “அக்ஷி நம்ம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்” என, “வேண்டாம்!” என்றால் ஸ்திரமாக.  

“சொன்னா கேளு! பேபிக்கு ரொம்ப காய்ச்சல்!” திரும்ப பதிலே பேசவில்லை.. அபிமன்யு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருந்தான்.

அதற்குள் அவளின் அப்பாவும் வரதராஜனும் வந்து விட.. அவரைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள். 

அவர் அவளை விடுத்து குழந்தையிடம் விரைந்தவர், அவர் செக் செய்து பின்னர் குழந்தையிடம் இருந்த ட்ரிப்சை எடுத்து தூக்கி ஷ்ரத்தாவை தோளில் போட்டுக் கொண்டவர்,

“நான் நம்ம ஹாஸ்பிடல் போறேன் அபிமன்யு, நீ இங்க இருக்குற டாக்டர்க்கு தேங்க் பண்ணிட்டு, இங்க என்னவோ பார்த்துட்டு வா. போகலாம் அக்ஷரா” என்று அவளைப் பார்த்தும் சொல்ல, அக்ஷரா முகத்தை திருப்பவே இல்லை.

“நீயே பார்த்துக்கோடா!” என்று அபிமன்யுவிடம் சொல்லி விட்டு செல்லத் துவங்கியவர்.. “நீங்க வர்றிங்களா” என்று வரதராஜனை பார்த்துக் கேட்க,

“நீங்க டிரைவ் பண்ணுவீங்க தானே, நான் பேபியை தூக்கிக்கறேன்” என்று ஷ்ரத்தாவைக் கையில் வாங்க, அவர்கள் கிளம்பிவிட்டனர்.

அபிமன்யு சென்று டாக்டரிடம் பேசி வந்த போது, அக்ஷரா அங்கே இல்லை.. ரோடில் நடந்து சென்று கொண்டிருப்பது தெரிய..

“அக்கா, ப்ளீஸ் வா! நம்ம ஹாஸ்பிடல் போகலாம்” என்று கெஞ்சிக் கொண்டே அபிமன்யு பின் சென்றான்.

அப்போதுதான் நிகிலிற்கு அழைத்த வரதராஜன், ஷ்ரத்தாவை அவர்களின் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள், தானும் செல்கிறேன், அக்ஷரா அவர்களுடன் வரவில்லை என்ற கூடுதல் தகவலையும் சொல்ல, அவன் அபார்ட்மெண்டின் கீழே இறங்கினான். 

அந்த நேரம் அக்ஷரா அபார்ட்மென்ட் சென்று தன் வெஸ்பாவை எடுக்க, அபிமன்யு வேகமாக அவளின் கையினில் இருந்த வண்டியை வாங்கி “நான் ஓட்டுறேன் நீ பின்னால உட்கார்!” என,

“சாவியை குடு அபி!” என்று அதற்கு தான் வாயை திறந்தாள் அக்ஷரா.

இதைப் பார்த்த நிகில் அவர்களின் அருகில் வந்தவன், “குடுத்துடு! நான் அக்ஷரா கூட ஹாஸ்பிடல் வர்றேன்” என்று சொல்ல,

நிகிலை முறைத்தவள் சாவியை அபிமன்யுவிடம் இருந்து பிடுங்கி, “இவன் வர்றதானா நீ இவனைக் கூட்டிட்டு வா!” என்று சொல்ல,     

அவள் சொன்ன வேகத்திற்கு அக்ஷராவின் கையினில் இருந்த சாவியை பிடிங்கிய நிகில், “அப்போ நீயும் எங்க கூட வா!” என்றான் அழுத்தமான குரலில்.

“சொன்னா கேளு நிகில், என்னை டென்ஷன் பண்ணாத!”

“பேசாம வா! உன்னோட பேபி ஹாஸ்பிடல்ல இருக்கா, உன்னை தேடுவா ஞாபகம் இருக்கா! என்னை எழுப்பி இருக்கலாம். என்ன உனக்கு அப்படி. இப்போ யாரு கஷ்டப்படறா உன் பேபி தானே! என்ன ஒரு ஸ்டுப்பிடிட்டி!” என்றவன்,

“நீ கார் எடு அபிமன்யு” என்று அவனிடம் சொல்ல…. அவன் வேகமாக கார் எடுக்க, “கெட் இன் அக்ஷி” என்று இன்னும் அழுத்தமான தீவிரமான குரலில் சொல்ல..

அதை மீற முடியாமல் அக்ஷரா ஏற.. நிகிலும் ஏற, பின்பு கார் வேகமெடுத்தது.    

      

 

Advertisement