Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

அடுத்த நாள் திருமணம் இனிதே முடிந்தது. அக்ஷரா மேடையிலேயே ஒரு ஓரமாக சேர் போட்டு கீழிருந்து பார்த்தால் கண்ணில் படாதவாறு அமர்ந்திருந்தாள்.

துர்காவும் நிர்மலாவின் அம்மாவும் அவளை எங்கேயும் நகர விடவில்லை. இப்படியே உட்காரு கால்ல வெயிட் போடாத என்று உட்கார வைத்திருந்தனர்.   

திருமணம் மிக அழகாக, ஒரு மகிழ்வான நிகழ்வாக, நடந்து முடிந்திருந்தது. வாழ்க்கையில் நிறைய மிஸ் செய்து விட்டோமோ, இப்படி நாம் மகிழ்வாக இருந்திருக்கின்றோமா, நிகிலை என் துணைவன் என்று காட்டக் கூட முடியாது.

நான் இப்படித் தான் சொல்லும் தைரியம் இருந்தாலும், ஷ்ரத்தாவைக் கொண்டு அவளால் எப்போதும் நிகிலுடனான திருமணம் அற்ற உறவை யாரிடமும் எப்போதும் சொல்ல முடியாது. தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் நெவர் மைன்ட் என சொல்ல முடிபவளால் ஷ்ரத்தாவைப் பற்றி ஒரு வார்த்தை யார் சொன்னாலும் தாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

அதையும் விட தன்னைப் போல ஒரு நடத்தை தன் பெண்ணிடம் இருப்பதை அவளே விரும்ப மாட்டாள் என்பதும் ஒரு உண்மை.

எல்லாம் யோசித்தபடி சோக பதுமையாய் அமர்ந்திருந்தவள் இன்னும் அழகாக தெரிந்தாள் அன்று, பட்டுடுத்தி இருந்தால், அணிமணிகளும் சற்று அதிகம் தான். துர்கா தான் வற்புறுத்தி அணிவித்திருந்தார். “இதெல்லாம் நான் அவ்வளவு ஆசையா வாங்கினேன், இன்னைக்கு ஒரு நாள் போட்டுக்கோ” என கெஞ்ச, அவருக்காக போட்டிருந்தாள்.

அவளதன் போலவே ஒரு பட்டுப் பாவடையில் ஷ்ரத்தா சுற்றிக் கொண்டு இருந்தாள். யாருடன் நிகிலுடன்.

அக்ஷரா வந்தவுடனே அருகில் வந்த நிகில் “கால் ரொம்ப வலிக்குதா?” என

“கொஞ்சம்…. தாங்கிக்குவேன்!” என சொல்ல,

“ஓகே! டேக் கேர்!” என,

“சும்மா, டேக் கேர், டேக் கேர்ம்பான். இல்லை ஐ கேர் ஃபார் யு ம்பான். இதை தவிர இவனுக்கு ஒன்னும் தெரியாது” என்ற லுக் விட, எதற்கு இப்படிப் பார்க்கின்றாள் என்று புரியாத போதும்…  

நிகில் சென்று விட “போடா! இதுக்கு எதுக்கு இவன் வந்து கேட்கணும். நான் இவனை கேட்க சொன்னேனா” என்ற எண்ணம் தான். கூடவே “வேற என்ன நீ எதிர்பார்க்கிற அக்ஷரா” என்று மனம் கேள்வி எழுப்ப,

“நான் என்னவோ இவனை ஏமாத்திட்ட மாதிரியே லுக் விடறான்” என்று நிகில் மேல் ஒரு கோபமும் எழுந்தது. 

முயன்று திருமணத்தில் மனதை திருப்பியிருந்தாள். இப்போது திருமணமும் முடிந்து விட, வேடிக்கை பார்த்து இருந்தவளுக்கு பசிக்க, யாரிடம் சொல்லலாம் என்று அவள் பார்க்க எல்லோரும் உபசரிப்பில் இருந்ததால் யாரையும் அழைக்க மனமற்று அமர்ந்திருந்தாள்.

நிகில் அவளை மணடபத்தின் உள்ளே வரும் போதே பார்த்து விட்டான். விசிலடிக்கத் தான் தோன்றியது. அவ்வளவு அழகாக இருந்தாள். “எப்படி இப்படி இருக்கா” என்பதையும் விட, “எப்போ பார்த்தாலும் நீ அவளை பார்த்து ஃபிளாட் ஆகுவியா. என்ன பண்ணற நீ?” என்று அவனை அவனே திட்டிக் கொண்டான்.

“உனக்கு அவ மேல கோபம், ரைட்!” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு, “வலி எப்படி இருக்கிறது” என்று மட்டும் கேட்டு விட்டு வந்து விட்டான்.

பின்னே இரவு வரையிலும் இருந்த கோபம், அவளை பார்த்தவுடன் திரும்ப எங்கே போனது என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனாலும் பார்க்கும் போதெல்லாம் மனம் மயங்குவது அவனுக்கே பிடிக்கவில்லை. எட்டு வருடத்திற்கு முன்பு முதல் முறை அவளைப் பார்த்த போது என்ன உணர்ந்தானோ அது திரும்பியது போல உணர்ந்தான். அப்போதாவது அவள் இளமையாக இருந்தாள். இப்போது அது குறைந்து இருக்கின்றது. அப்போதும் தான் ஏன் இவளிடம் இவ்வளவு ஈர்க்கப் படுகின்றோம். 

ஒரு வேளை தான் எல்லா பெண்களிடமும், இப்படி பட்ட பாவனையில் தான் இருக்கின்றோமோ என்று ஒரு சுய அலசலில் வேறு ஈடுபட்டான். இருந்த எல்லா பெண்களின் மீதும் பார்வையை வேறு ஓட்டினான். பலரும் அழகாக இருந்தனர். ஆனாலும் யாரும் அவனை அக்ஷரா அளவு ஈர்க்கவில்லை.   

மூவரின் பார்வை, இவர்கள் இருவரையும் சுற்றி தான். அவர்கள் சந்தோஷ், நிர்மலா, அபிமன்யு. அவர்களின் உறவை கண்டு கொள்ள தீவிரமாகப் பார்த்து இருக்க, இருவருமே அதிக நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை.

பசி தாங்காமல் ஷங்கரை கை காட்டி அழைத்தவள், “பசிக்குதுப்பா” என சொல்ல,

கைதாங்களாக அழைத்து அவர் நடக்க, அதை பார்த்த பிறகு அபிமன்யு உதவிக்கு வந்தான். “இவ்வளவு நேரமா என் பக்கத்துலயே வரலை, இப்போ எதுக்குடா வர்ற நீ போ!” என கோபப் பட, முகமும் வலியில் சுருங்கியது.

அபிமன்யுவை கை பிடிக்க விடவில்லை..  “நேத்து காயம் ஆன போது கூட வலிக்கலை. ஆனா அதை கிளீன் பண்றேன், சுச்சர் பண்ணறேன்னு இவ்வளவு வலி வர வெச்சிட்டீங்க நீயும் அம்மாவும். என்னை தொடாத விடு  விடு” என,

“வாயை மூடுங்க” என்றவன், அக்ஷராவை இரு கைகளாலும் தூக்கிக் கொள்ள,

அபிமன்யு அதட்டிப் பேசுவதா? அதுவும் அக்ஷராவை என ஷங்கர் வியந்து பார்த்தார். அபிமன்யு அதட்டியதில் அக்ஷ்ராவே அசந்து இருந்த நேரத்தில் தான் அபிமன்யு அவளை தூக்கி இருந்தான். பின் சுதாரித்து “விடு, விடு” என,

“பேசாம இருங்க! உங்களுக்கு போட்டிருக்குற பேண்டேஜ்ல ரத்தம் தெரியுது. வெயிட் கொடுக்க வேண்டாம்!” என,

“ரத்தமா?” என்றவள், “அதுதான் வலிக்குது போல” என்று அமைதியானாள். சிறிது தூரம் இருந்த டைனிங் ஹால் வரை தூக்கி செல்ல, எல்லோரும் பார்த்தனர். அங்கே இருந்த நிகில், இவன் அக்ஷ்ராவை தூக்கி வருவதைப் பார்த்ததும் “என்ன?” என விரைந்து வர,

“கால் வலிக்குது சொன்னா! அதுதான்!” என்றான் அபிமன்யு, அதற்குள் “அம்மா பேண்டேஜ்ல ரத்தம்” என ஷ்ரத்தா சொல்ல, பார்த்தவன் இப்போது அபிமன்யுவை முறைத்தான்.

அதற்கு மேல் தூக்கியிருக்க முடியாமல், ஒரு சேரில் அக்ஷராவை அமர வைத்தான் அபிமன்யு. “நேத்து இருந்து சொல்லிட்டே இருக்கேன் தானே, உடனே கேர் பண்ணியிருக்கணும், நீங்க லேட் பண்ணிட்டீங்க” என்று நிகில் அபிமன்யுவை குற்றம் சாட்ட,

அபிமன்யு ஏதோ தப்பு செய்தவன் போல நிற்க.. “நிகில்” என்று அதட்டிய அக்ஷரா, “அவனை எதுக்கு திட்டுற நீ. அவன் என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்குவான்.. சும்மா லேட் பண்ணிட்டேன்னு ப்ளேம் பண்ணாத.. இவ்வளவு சொல்றவன் நீ கேர் பண்ண வேண்டியது தானே!” என பதிலுக்கு அக்ஷரா சுள்ளென்று விழ,

“எனக்கு ஒன்னுமில்லை. நான் பார்ப்பேன், நீயும் எங்கப்பாவும் தான், இது இந்தியா! கீப் டிஸ்டன்ஸ்ன்னு எதோ ட்ராபிக் ரூல்ஸ் மாதிரி சொல்லிட்டே இருக்கீங்க. நான் என்ன பண்ணட்டும்” என்று முறைத்து நின்றான். “அப்போவும் சொல்றேன், மேல நீ ஏறாதேன்னு. பெரிய ஹிரோயிக் ஆக்டிவிடி மாதிரி, உன்னை யார் மேலே ஏற சொன்னா, கீழ விழுந்தா ஸ்பைனல் கார்ட் இஞ்சுரி தான், இடியட்!” என்று நேற்றைக்கும் சேர்த்து வைத்து திட்டினான்.

“அதுதான் நீ ஸ்பைன் சர்ஜன் இருக்கியே!” என சொல்ல,

“இடியட்” என்று திரும்பவும் திடியவன், கோபத்தில் வேறு வார்த்தைகள் வராமல் நின்றான்.

“அச்சச்சோ! இதுக்கு நம்மளே திட்டு வாங்கியிருக்கலாம் போல இருக்கே!” என்று அபிமன்யு நினைத்தாலும் நிகிலை பார்த்து நிற்க, நிகிலின் கோபத்தை பார்த்து ஷ்ரத்தாவும் என்னவோ ஏதோவென்று பார்க்க,

அதிக கோபத்தில் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

  “நல்லா இருக்கார், ஹேண்ட்சமா இருக்கார், உன்னை அவ்வளவு நல்லா பார்த்துகறார் நல்ல பிராக்டிஸ்ன்னு அவர் அப்பா பெருமை சொல்றார், அப்புறம் ஏன்கா உனக்கு பிடிக்கலை. நீ ஏன் அவரை விட்டு வந்தே?” என அபிமன்யு கேட்டே விட,

அக்ஷரா அதிர்ந்து அவனை பார்த்தாள். இருதயம் துடிப்பது நின்றே விட்டது போன்ற உணர்வு,

“எஸ்! சம்திங் டெல்ஸ் மீ இவர் தானே உன்னோட ஹஸ்பன்ட்” என,

நின்ற இருதயம் அப்போது தான் இயங்க ஆரம்பித்து மூச்சும் வெளியே வந்தது. “ஓ! கணவன்! என்று தான் நினைக்கின்றார்களா?” என ஆசுவாசமானாள். யார் கேட்டாலும் சொல்லுவேன் என்று மனதிற்குள் இருந்த இறுமாப்பு, தெரியும் என்ற நிலை வரும் போது தெரிந்து விட்டால் என பதறுவது அவளே எதிர்பாராதது.

“ஏன் வந்துட்டே?” என,

“இல்லை, அவன் இல்லை!” என்று மறுக்கவெல்லாம் முடியவில்லை.

“அப்போ சரியா தோணினதெல்லாம் இப்போ தப்பா தோணுது! அப்போ தப்பா தோணினதெல்லாம் இப்போ சரியா தோணுது” என்றவளை, புரியாமல் பார்த்தான்.

“ஆம்! இப்போது சில மாதங்களாகவே அவளுக்குள் அப்படி சில எண்ண மாற்றங்கள். மெது மெதுவே நடந்து கொண்டிருந்தது.

பின்பு “இது யார்கிட்டயும் சொல்லாத, நிகில் இஷ்டப்பட மாட்டான்!” என,

“அப்படி ஒன்னும் தெரியலையேக்கா, நான் அவர்கிட்டயே கேட்டுட்டேன்!” என,

“என்ன?” என்று மீண்டும் அதிர்ந்தாள். பின்பு “என்ன சொன்னான்?” என்று அதிர்வு குறையாமல் கேட்க,

“இல்லைன்னு எல்லாம் சொல்லலை , அது அக்ஷரா பெர்சனல் அவதான் சொல்லணும் சொன்னார்!” என்று சொல்ல,

“ஓஹ்! நான் என்ன செய்ய வேண்டும்” என்று குழம்பிப் போனாள். “இப்போதும் தாங்கள் சந்தித்தது சந்தர்ப்ப வசத்தால். அவன் என்னை ஒன்றும் தேடி வரவில்லை. சந்தித்த போது நன்றாக பேசுகின்றான், இயற்கையாக இருக்கும் நல்ல குணம் ஷ்ரத்தா தன் குழந்தை என்று தெரிந்ததும் அவளிடம் நன்றாக நடக்கின்றான்”.

“அவனை இந்த பந்தத்தில் இழுத்து விடுவது, என்னுடைய சுயநலாமாகும்! அதை எப்படி என்னால் செய்ய முடியும். அதையும் விட ஷ்ரத்தாவை எப்படி நான் எதிர்கொள்வேன்” கலங்கி போனாள், இருந்த பசி எல்லாம் எங்கோ ஓடி விட்டது.

“அவர் நல்லவரா தான் தெரியறார் அக்கா!” என,

“அப்போ நான் கெட்ட பொண்ணு சொல்றியா?” என,

“அச்சோ! அப்படி இல்லை! நீ அவரை மிஸ்அண்டர்ஸ்டேன்ட் பண்ணியிருக்கலாம்னு சொன்னேன்!” என்று பதறினான்.

“அபி என்னை வீட்ல விடறியா?”  

“ஏன்க்கா?” என்று பதறியவனிடம்,

“எனக்கு வீட்டுக்குப் போகணும்!” என,

“நான் உன்னை தப்பு சொல்லலை, யாருக்கும் தெரியாது! யாரையும் நீ பார்க்க பயம் வேண்டாம்!” என அவசர விளக்கம் கொடுக்க.  

“பயமில்லை, ஆனா இஷ்டமில்லை! ப்ளீஸ், என்னை வீட்ல விடு!” என்றாள் கண்கள் கலங்க.

“ஓகே, ஓகே” என்றவனிடம், “இந்த வழியா கூட்டிட்டுப் போ!” என முன் வழியை காட்டாமல் வேறு வழியைக் காட்ட,

அன்று ஸ்ரத்தாவை தனியாக விட்ட போது தான் முதல் முறை அக்ஷரா இவ்வளவு கலங்கி பார்த்திருக்கிறான், இப்போது மீண்டும் பார்க்கவும் சொன்னதை செய்தவன், காரை கிளப்பவும்,

“ஷ்ரத்தா!” என அக்ஷரா கேட்க,  

“நிகில் கூட இருப்பா, இல்லை அம்மா கூட தான் இருப்பா, அதுவும் நேத்து நிர்மலா பசங்க அந்த ரூம்ல மாட்டின பிறகு நிகில் எப்பவும் ஷ்ரத்தா மேல ஒரு கண் வெச்சிருக்கார்” என,

கிளம்பிவிட்டாள். அவளை விட்டு வந்த போது, இவனை தேடி ஷ்ரத்தா ஓடி வந்து “மம்மா எங்கே?” என,

“வீட்டுக்குப் போயிட்டாங்க!” என,

“ஏன்? ஏன் போனாங்க? நானும் போறேன்!”  

“பேபி! இங்க இன்னும் நிறைய ஃபங்க்ஷன் இருக்கு. அம்மா சார்புல நீ தான் அட்டன்ட் பண்ணனும்” என்று சமாதானம் சொல்ல, அரை மனதாக இருந்தாள். சிறிது நேரத்திலேயே அக்ஷரா இல்லாததை நிகிலும் கண்டு கொண்டான், அவன் கேட்கும் முன்னேயே “அக்கா என்னவோ அப்செட். வீட்ல விட சொன்னா விட்டுட்டேன்!”

ஷ்ரத்தா சிணுங்கவும் “கம் பேபி!” என்று அவளை கூட வைத்துக் கொண்டான். பிறகு சடங்குகள் சம்ப்ரதாயங்கள் என்று நேரம் ஓட, நிகில் எங்கு இருந்தாலும் ஷ்ரத்தா அவனோடே. ஷ்ரத்தா வேறு எங்கும் நகராமல் தன் அருகில் இருக்குமாறு நிகில் தான் பார்த்துக் கொண்டான்.

துர்கா வந்து “உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா! என் கூட இருக்கட்டும்!” என,

“அவ என்னை டிஸ்டர்ப் பண்ணலை. நான் தான் பண்ணறேன்!” என்று முறுவலித்தவன், “இருக்கட்டும்! நானே உங்க கிட்ட விடறேன்!” என பின்னரே சென்றார். மதிய உணவு நேரம் வர ஷ்ரத்தாவை அழைத்துக் கொண்டு உணவு உண்ணப் போக,

காவ்யா நிகிலிடம் “மாப்பிள்ளையும் பொண்ணும் சாப்பிடும் போது கம்பனி கொடு நிகில்” என, “மாம்! பேபிக்கு பசிக்கும்! நீங்களே கம்பனி குடுங்க!” என்று சொல்ல,

அவனை முறைத்தவர், “ஸ்மிரிதியோட சாப்பிடறையா பேபி” என ஷ்ரத்தாவிடம் கேட்க,

“ஓகே, பாட்டி!” என்று ஸ்மிரிதியிடம் போக, “குழந்தை கூட பேச்சைக் கேட்குது. நீ…” என்று பல்லைக் கடித்தவரிடம்,

“இப்போ எதுக்கு அவளை அனுப்பினீங்க. அவளுக்குப் பசிக்கும்!” என,

நேற்றிலிருந்து பெண்ணின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஒன்றும் தெரியவில்லை. இப்போது மகன் இப்படி பேசவும், எதற்கு இவ்வளவு அக்கறை என்ற யோசனைகள் ஓட நிகிலை பார்த்தார். 

“நேத்து இருந்து நான் சாப்பிட்டேனான்னு கூட நீ கேட்கலை” என காவ்யா சொல்ல.  

“என்னை கூட தான் நீங்க கேட்கலை, உங்க பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க!” என,

“நானாவது என் பொண்ணு பின்னாடி சுத்தறேன். நீ யார் பின்னாடி சுத்தற?” என காவ்யா கிண்டல் செய்ய,

அந்த கேள்வி ஏதோ ஒரு வகையில் அவனை பாதிக்க “நானும் என் பொண்ணு பின்னாடி தான்மா சுத்தறேன்” என்றான்.

“ஆங்!” என்று வாய் திறந்தவர், வாய் மூடவே இல்லை.

பதறி கணவரின் காதை யாரும் அறியாமல் கடிக்க, “உனக்கு இன்னைக்கு தான் ஷாக் அடிச்சதா. எனக்கு நேத்தே அடிச்சிடுச்சு!” என்று அவர் அசால்டாக சொல்ல,

“என்னங்க இது?” என்றார் பரிதாபமாக.

“என்னங்க நம்ம பண்ண முடியும்!” என்று காவ்யாவைப் போலவே சொன்னவர்,

“ஒரு பேச்சும் கேட்க மாட்டான். நம்ம ஒன்னும் பண்ண முடியாது. வேடிக்கை பார்ப்போம்” என்றவர்கள் ஒரு புதிய சொந்தத்துடன் ஷ்ரத்தாவைப் பார்த்தனர்.

“ஆனா கல்யாணம் இவன் பண்ணியிருப்பான். எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வேளை அந்தப் பொண்ணை ஏமாத்தி இருப்பானோ” என்று காவ்யா கலக்கமாய் சொல்ல,

“ஷ், என்கிட்டே கூட இதை நீ பேசக் கூடாது, என்ன நடக்குதோ பார்ப்போம் அவ்வளவு தான்!” என்றார்.

ஏமாறும் பெண்ணாக அவரால் அக்ஸ்ராவை நினைக்க முடியவில்லை. அதே சமயம் தப்பாகவும் நினைக்க முடியவில்லை, இந்த ஒரு மாதமாக அக்ஷராவை பார்த்தார் என்பதனையும் விட, அவர்க்கு ஆட்களை ஓரளவு கண்டு கொள்ளவும் தெரியும்.

தப்பாக அக்ஷராவிடம் அவருக்கு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் கவலையாக இருந்தது. பார்த்த நாளில் இருந்து இவன் தான் அக்கறை காட்டுகின்றான் அந்தப் பெண் எதுவும் காட்டவில்லையே என்று தோன்றியது.

    இப்படியாக அக்ஷரா வீட்டினருக்கு அக்ஷ்ராவின் மீது தப்போ என தோன்ற, நிகிலின் வீட்டினருக்கு நிகில் மீது தப்போ எனத் தோன்ற,

எதுவாகினும் தங்களின் பிள்ளைகளின் மீது தான் தப்பை தேடினர். பொதுவாக அனேகம் பேர் செய்வது போல, அடுத்தவரிடம் தப்பை தேடவில்லை.

இப்படிப்பட்ட பெற்றோருக்கு தான், இப்படிப்பட்ட பிள்ளைகள்!!!               

 

Advertisement